Thursday, May 30, 2013

பாட்டி



என் அம்மாவின் பாட்டி இருங்கூர்(செய்யாறு – ஆரணி) சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் அதில் வசித்து வந்தார். கணக்கு வைத்துக் கொண்டு,  வருடத்திற்கு ஒரு முறை கிராமத்திலிருந்து அறுப்பு முடிந்த சித்தூரிலிருந்த தன் தம்பி (சித்தூர் தாத்தா) வேலூரிலிருந்த பேத்தி (என் அம்மா) பேரன் (என் மாமா, இவர் வெட்டர்னரி ப்ரொபஸர், மதராஸ் பட்டிணத்தில்  கீழ்பாக் கார்டன் காலனியில் அரசு ஊழியர்களுக்கான விடுதியில், சிறு வீட்டில் வசித்து வந்தார்)  மற்றும் பட்டிணத்தில் வசித்த தன் மகள் (அம்மாவின் அத்தை) “மண்ணம்மா”, (ரொம்ப நாட்களாக குழந்தையில்லாமல் பிறந்த பெண் ஆனதால் இந்த பெயர்) இவர்கள் வீட்டிற்கு வருவார்கள்.

கூண் விழுந்து வளைந்த உடம்பு, கையில் ஒரு மூங்கில் கோல் நடப்பதற்கு உதவியாக, எல்லாக் குழந்தைகளையும் “பையா இல்லை ”குட்டி” என்றுதான் அழைப்பார். எங்கள் வீட்டிற்கு வரும்போது ஊரிலிருந்து தானே செய்த “பொல்லங்கா உருண்டை”, கமர்கட், தேன்குழல், உளுந்து மற்றும் காரசாரமான அரிசி அப்பளம், வெண்டைக்காய், சுண்டைக்காய் வற்றல் கசுமாங்காய் ஊறுகாய் எல்லம் எடுத்துக் கொண்டு கிராமத்தில் இவருக்கு உதவியாய் இருக்கும் “புல்லாண்டி” என்பவருடன் வருவார். அவர் இரு நாள் இருந்து விட்டு அடுத்த் நாள் கிராமத்துக்கு போய் விடுவார். மூன்று வாரம் கழித்து வருவார். பாட்டி அவருடன் ஊருக்கு கிளம்பி அடுத்த ஊருக்கு போய்விடுவார்.

அப்பாவிற்கு தன் அத்தையின் பேரில் மரியாதை ஜாஸ்தி. அவரை கார் வைத்து அல்லது ஜீப்பில் கோவிலுக்கு அழைத்து கொண்டு போவார். ஊருக்கு போகும் போது பாட்டியிடம் நூறு ரூபாய் கொடுத்தால், பாட்டி ”எனக்கு எதுக்குடா பணம். நீ ஊருக்கு வா. நல்லா சமைச்சுப் போடறேன்” என்று சொல்லிவிட்டு பணத்தைத் திருப்பி குடுத்துவிடுவார். பாட்டி செருப்பு அணிய மாட்டார். வேலூருக்கு வந்தால் ஒரு நாள் அவல்காரத் தெருவிலிருக்கும் அம்மாவின் பெரியம்மா வீட்டிற்கு போவது வழக்கம். காலை ஆறறை மணிக்கு எல்லாம் எழுந்து பாட்டியுடன் போய் ”காந்தா பெரியம்மா” வீட்டில் விட்டு விட்டு ராமகிருஷ்ணாபுரத்திலிருக்கும் அம்மாவின் மாமா பெண் வசந்தா வீட்டிற்கு போய் அப்பு குட்டியுடன்(சிவக்குமார்) விளையாட போய் விடுவேன். ”என்னடா இந்த பக்கம்” என்று வசந்தா கேட்பாள்.  ”இருங்கூர் பாட்டி வந்திருக்கா. அவல்காரத் தெருவுலே பெரியம்மா வீட்டிலேவுட்டுட்டு சாயந்திரமா கூட்டிண்டு போனோம்” என்று நான் பதில் சொன்னால் வசந்தா ”கிழவிக்கு தலை போற வேலை ஒன்னும் இல்லை அத்தையைப்(என் பாட்டியை) பத்தி என்னாவாது குறை சொல்லனும்” என்று சொல்வாள்

அவர்கள் தெருவோரத்தில் மரத்தடியில் ஒரு ஒட்டை பஸ் நின்று கொண்டிருக்கும். மதியம் வசந்தா வீட்டில் சாப்பிட்டு வீட்டு சாயந்திரம் சாயந்திரம் வெய்யில் தாழ்ந்தவுடன் பாட்டியை அழைது கொண்டு மெதுவாக நடந்து வீடு போய் சேருவேன்.

பாட்டி பகல் பொழுது மட்டும்தான் சாப்பிடுவாள். அது கூட மந்தார இலையில்தான் சாப்பிடுவார். இரவில் பலகாரம்தான். மதியம் படுத்து தூங்குவதும் கட்டை மனையில்தான். அப்பா ஒருதரம் நல்லத் தேக்கு மரத்தில் நைஸாக பாலிஷ் செய்யப்பட்ட மனையை செய்து கொடுத்தார். பாட்டிக்கு தனக்கு ஒரு வீட்டையேக் கட்டி கொடுத்தது போல் சந்தோஷம்.

பாட்டி எப்போதும் காவியில் ஒத்தை வஸ்திரம் மட்டும் தான் அதுவும் அதை தலையில் போர்த்தியவாறுதான் உடுத்துவாள். மதியம் தூங்கும் போது சில வேளைகளில் தலையைச் சுற்றியிருக்கும் துணி நழுவி விட குச்சிகுச்சியாக தலைமுடி முளைத்திருப்பதை பார்த்தால் பலாப் பழத்தின் மேல் இருக்கும் முட்களை ஞாபகப்படுத்தும். ரொம்ப வயதான பின் கூண் விழ்ந்து தலை மயிரும் அப்படி ஆயிடும் போல் இருக்கு என்று நான் நினைத்துக் கொள்வேன். எங்கள் வீடுகளில் வீட்டிற்கு என்று சலூன் ஆட்கள் வருவதில்லை. சித்தூரில் கட்டயாம் தாத்தா நாள் பார்த்து சொல்ல “ராமுடு” வருவார். அவர்தான் தாத்தாவின் ஆஸதான் சலூன்காரர். இவர் நாதஸ்வர வித்வானும் கூட. எங்கள் பூனூல் கல்யாணத்தின் போது இவர்தான் நாதஸ்வரம். சம்மர் லீவிற்கு வந்த அனைத்து பையன்களுக்கும் கின்னம் கவுத்த மாதிரி ஒட்ட வெட்டிவிடுவார். குளிப்பதற்கு முன் தாத்தாவிடம் காண்பித்து அவர் சரி என்றால் தான் குளிக்கப் போக முடியும் இல்லை என்றால் மறுபடியும் ராமுடு விடம் போய் நிற்க வேண்டும்.

வேலூரில் நாங்கள் இருந்த சமயம் ஒரு சலூன்காரர் வீட்டிற்கு காலையில் வந்தார். பாட்டியின் முடி மழிக்கப்படுவதை அப்போது பார்த்தேன். மொட்டையடிப்பது என்பது மிக சகஜமாக நான் திருப்பதி திருத்தனி கோவிலில்களிள் பார்த்திருக்கின்றேன். பெண்களும் கூட அதிகளவில் மொட்டை போட்டுக் கொள்வதையும் பார்த்திருக்கின்றேன் என்றாலும் எங்கள் வீடுகளில் யாரும் செய்து நான் கேள்விக்கூட பட்டதில்லை. அதன் காரண காரியம் தெரியாமல் “பாட்டி மொட்டைப் போட்டுக்கிறா” என்று கத்திக்  கொண்டே வீட்ட்டிற்குள் ஓடினேன். அப்பா கையை பிடித்து “இந்த மாதிரியெல்லாம் கத்திண்டு திரியாத. இது எல்லாம் விதவைங்களுக்கு அப்ப நடந்த கொடுமை. இப்பவே பாதி ஒழிஞ்சிடுத்து. அடுத்த ஜென்ரேஷன்லே மொத்தமா ஒழிஞ்சுடும்” என்றார். எனக்கு ரொம்ப காலம் கழிந்த பிறகுதான் விதவைளின் மேல் நடத்தப்பட்ட கொடூமையும் கொடூரமும் புரிந்தது.

இந்த பாட்டி கடைசி காலத்தில் சைதாபேட்டையிலிருந்த மண்ணம்மா அத்தையின் வீட்டில் தான் வசித்து வந்தார். அவர் உடல் நிலை ரொம்ப மோசமாகி கடைசி மூச்சு போவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது கங்கா ஜலத்திற்கு பதில் கசுமாங்கா ஊறுகாயை சிறிது நீரில் தேய்த்து வாயில்விட்ட உடன் தான் அவர் உயிர் பிரிந்த்து. இவருடைய உண்மையான பெயரே கூட (அனந்த லக்ஷ்மி) என் அப்பா இறந்து போன சடங்குகள் பன்னும் போது தான் எனக்குத் தெரிந்தது.          

ஜெயா பாட்டி தாத்தா இறந்த பிறகு இந்த மாதிரி கொடுமைகளுக்கெல்லாம் ஆளாகவில்லை. அவர் தன் மகனுடன் அவருடைய சின்ன வீட்டில் வசித்து வந்தார். அது மட்டுமின்றி இவருக்கு தாத்தாவின் பென்ஷனில் பாதி உண்டு. அந்த காலத்தில் அது மிகவும் குறைவான தொகைதான் என்றாலும் ஒரளவுக்கு  அவர்களுக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்தது. ரங்கா மாமா படித்து முடித்து வேலைக்கு போக ஆரம்பத்தவுடன் அவருக்கு சமைத்துப் போடுவதற்காக அவருடன் வந்தார். ரங்கா மாமா என அக்ககாவையே திருமனம் செய்து கொண்டார். என அப்பாவின் ஆசைப்படி பாட்டி எல்லா நிகழ்ச்சிகளிலும் மேடையிலேயே இருந்தார்.

பல ஆண்டுகள் எங்களுடனே இருந்தார். தாத்தாவின் தவசத்திற்காக மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை மதறாஸில் இருந்த மாமா வீட்டிற்கு போய் வருவார். என் அண்ணா ராகவன் அண்ணாநகரில் இருந்த போது, எங்களுடன் பதினைந்து நாளிருந்தார். அண்ணாநகரிலிருந்த கிருஷ்ணா மாமா வீட்டிற்கு போக வேண்டும். மதியம் இரண்டு மணிக்கு. வாசற் கதவு வரைக்கும் 20 அடி நடக்க வேண்டும். இவரும் செருப்பு அணியும் வழக்கமில்லாதவர். கால் பாவம் பொரிந்தே போய்விட்டது.  இவர் காலையில் உடம்பு சரியில்லை என்று சொன்னவர் மதியம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார்.

என் சித்தூர் பாட்டி 10 வருடத்திற்கும் மேலாக பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருந்தார். எப்போதும் ஒன்பது கஜம் கட்டிக் கொண்டிருக்கும் பாட்டி கடைசியில் ஆறு முழம் சேலை கட்டுவதற்கு கூட வீட்டில் வேலை செய்யும் ”யாசோதாவின்” தயவு தேவைப் பட்டபோது என் அம்மாவிடம் ”அந்த காலத்திலே தெரியாம எல்லாரையும் மடி விழுப்பு தீட்டுன்னு சொல்லி பாடா படுத்தியிருக்கேன் நீங்கள்ளாம் அந்தாமாதிரி உங்க பசங்களையே மாட்டுபொன்னையோ கஷ்டபடுத்ததீங்க. எல்லாமே வியர்த்தம்” என்று சொனார். எங்கள் வீடுகளில் அதுவே வேதவாக்காகியது. எப்பவும் ஸ்லோகமும் பூஜையும் செய்து கொண்டிருப்பவர், கடைசி 45 நாட்கள் கோமா, வந்து உடம்பில் எறும்பு புற்று வைத்து மிகவும் கஷ்டப்பட்டு, சுமங்களியாய் உயிரை விட்டார்.
 
சங்க காலத்தில் எப்போது இனக்குழுக்கள் முறை ஒழிந்து நிலம் சார்ந்த வேளாண் சமூகம் உருவானாதோ, அப்போதே சமூகம் தாய் ழியிலிருந்து விலகி தந்தைவழி சமூகமாக மாறியது. பெண்னிற்கு கல்வியறிவு இருந்தாலும் அவளுடைய உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்களுக்கு தங்கள் துனையை தேடி கொள்ளக் கூடிய சுதந்திரம் இருந்தாலும் திருமனமாகிவிட்டால் அவர்கள் சந்ததியினரை பெற்று வளர்ப்பவர்களகாவும் கற்பு நெறி, கற்பு என்பதற்கு முதலிருந்த பொருளை மாற்றி, பதிவிரதை ஒழுக்கம் காப்பவளாக மாற்றப்பட்டது. விதவைகள் மருமணம் புரிவது என்பதே குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் எதுவுமே ஆணுக்கு இல்லை. அவன் பரத்தையிடம் சென்று வந்தாலும் அவனை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு இருப்பதே கற்பிற்கு அடையாளமாக கருதபட்டது. (சிலப்பதிகாரம் கூட இதை குறை சொல்லவில்லை). மனைவியை இழந்த ஆடவன் மறுமணம் புரிதல் என்பதற்கான குறிப்புகள் உள்ளன.

கற்பில் கூட முதனிலை, இடைநிலை கடைநிலை என்று மூன்றாக பிரித்து வைத்திருந்தார்கள். கனவன் இறந்த சேதி கேட்டவுடனேயே இறப்பது முதனிலை கற்பாகவும், அவனின் ஈமச்சடங்கு நடக்கும் போது அவளும் நெருப்பில் விழ்ந்து உயிரை விடுவது என்பது இடை நிலை கற்பாகவும், கைம்பெண்ணாக் கடுமையாக  விரதமிருந்து வாழ்வது கடைநிலை கற்பாகாவும் கருதப்பட்டது.  கைம்பெண் நோண்பும் எளித்தானதல்ல. அழகிய கூந்தலை மழித்துக் கொள்ள வேண்டும். அதுவரை எது மங்கல அணியாக பார்க்கப்பட்டதோ தாலிமுதல் வளையல் வரை, கழற்றிவிட வேண்டும், பொட்டை அழித்தொழிக்க வேண்டும், நெய் சேர்க்காமல் பசலைக் கீரையை உப்பில்லாமல் வெறும் புளி சேர்த்து சாப்பிடவேண்டும்,

பூதபாண்டியனின் மனைவி

பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்க எனச் சொல்லாது, ஒழிக என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்எட் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுகதில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் நீயும் ஒரற்றே; - புறம் (246)

இப்பாடலின் இரண்டாம் வரிக்கு பொருள் எழுதியவர்கள் கணவனோடு உடன்கட்டை ஏற செல்க என்று சொல்லாமல் அந்த எண்ணத்தை விட்டு ஒழிக  என்று சொல்லும் பல்சான்றீரே என்றுதான் எழுதுகின்றார்காள். பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரே என்று எதற்கு இவர்களை சொல்ல வேண்டும்.? என் பார்வையில் அவ் வரியில்  செல்க எனச் சொல்லாது ஒழிக என விலக்கும் என்ற ஒரு வரியில் விதவைகள்  மங்கல வார்த்தைகளைக் கூட கேட்கமுடியாமையையும்  அவளைப்  பார்ப்பதையும் தவிர்க்கும் சமூகத்தின்  கொடுமையும் கூறுவதாகவே தெரிகின்றது. அதனால்தான் இருப்பதைவிட இறப்பதே மேல் எனும் முடிவுக்கு வருகின்றாள்.   

உடன்கட்டை ஏறுதல் என்பது உயர்குடி மக்களிடமட்டுமல்லாமல் கீழ்த்தட்டு மக்களிடமும் பரவியிருந்தது என்பதை தென் பாண்டி  நாட்டில் கர்னபரம்பரையாக வரும் ”முத்துப் பாட்டன் தொம்மாக்க பொம்மக்கா” அவர்களின் கதை விளக்குகின்றது.

சத்தியவான் முத்துபாட்டன் அவன் சகோதரர்களுடன் ஒத்து போக முடியாமல் ஒரு சிற்றசனிடம் போய் சேவகம் செய்கின்றான். சகோதரர்கள் பல வருடம் கழித்து இவனைத் தேடிக் கொண்டு வர இவனும் ஊருக்கு திரும்பி வர ஒத்துக் கொண்டான். வழியில் ஒரு இடத்தில் நீர்குடிக்க்ப போகும்  போது நாடுபுறப்பாடல் ஒன்று காதில் விழ திரும்பியவன்  அழகிய இரண்டு கன்னிகைகள்  தந்தைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போகும் போது நீர் அருந்த வந்ததைப் பார்த்தான். உடனே காதல் வசப்பட்ட அவன் அவர்களிடம் தன் காதலைக்  கூற அவர்காளோ
சாம்பசிவநாதர் போலிருக்கின்றீர் சாமி
சக்கிலிச்சி நாங்கள் தொட பொறுக்குமோ பூமி என்று கூ றி வீட்டு காட்டு வழியாக ஒட்டிவிட்டனர். முத்துப்பாட்டன் மயங்கி விழ்ந்தான். தன்மகள்களை வழிமறித்தவனை கொல்ல வேண்டும் என்று வருகின்ற தந்தை அவன் காதல் உண்மை என்று புரிந்து கொன்டு நீ எங்களைப் போலவே 30 நாட்கள் சக்கிலிகுடியில் இருந்து வாழ்ந்தால் உனக்கு மனம் முடித்து வைக்கின்றேன் என்கின்றான். இவனும் ஊருக்கு போய் தன் சகோதரர்களிடம் கூற அவர்கள் தந்தை பார்த்து வைத்திருக்கும் உயர்ஜாதி பெண்ணைத்தான் மணக்கவேண்டும் கீழ்சாதி பெண்ணை மறக்க வேணும் என்கின்றனர். மறுத்த இவனை ஒரு குகைக்குள் தள்ளி  வெளிப்புறமும் மூடிவீட்டு இறந்து போகட்டும் என்று விட்டுவிடுகின்றனர். ஆனாலும் எப்படியோ இவன் தப்பி வந்து சக்கிலியர்களோடு மாடு மேய்ப்பது, செத்த மாட்டை அறுத்து, செருப்பு தைத்து அவற்றை சந்தையில் விற்று முப்பது நாள் கழிந்து சகோதரிகள் இருவரையும் மணப்பந்தலில் திருமனம் முடித்தான்.


அன்றிரவு திம்மக்கா மடியில் தலையும் பொம்மக்கா மடியில் காலையும் வைத்து முத்துபாட்டன் படுத்திருக்க அவர்கள் தாம்பூலம் மடித்து குடுத்தனர். அப்போது கதவு த்ட்டப்படும் ஓசை கேட்கவே வெளியே பார்த்தவுடன் மந்தையை பார்த்துக் கொள்ளும் சிறுவன் இரத்த காயங்களுடன் இருப்பதையும் கள்ளர்கள் மாடுகளை களவாடி கொண்டு செல்வதையும் கேள்விப்பட்டான். மனைவியர் இருவரும் தடுத்தும் கேட்காமல் கள்வர்களை துரத்தி சென்றவன், அவர்களில் பத்து பேரை கொண்று விட, ஒருவன் தப்பித்துவிடுகின்றான். இவன் திரும்பி வரும்போது தப்பி ஒட்டியன் இவன் முதுகில் கத்தியால் குத்த அவனையும் வாளால் மாய்த்து விட்டு முத்துப்பாட்டனும் உயிரழந்தான்.  முத்துபாட்டன் நாய் மட்டும் திரும்பி வந்ததை பார்த்த திம்மககாவும் பொம்மக்காவுன் ஒடைகரையில் பினமாகி விழ்ந்திருக்கும் முத்துப்ப்ட்டனை பார்த்து வேதனை பொங்க
முகத்தோடே முகம் வைத்து முத்தமிட்டுக் கொண்டழுதார்,
நாலு கழியலையே நாதா நீர் கூடலையே, .......
தாலி கொண்டு வந்த தட்டானும் போகலையே,
கொட்டி பறையனுக்குக் கொத்துக் கொடுக்கலையே,
கோண மணவறையில் குந்த வைத்த தோஷமுண்டு
வட்ட மணவறையில் வந்திருந்த தோஷமுண்டு,
பொருந்தி இருந்தோமா, பிள்ளைகளைப் பெற்றோமா
பனியாரம் சுட்ட சட்டி, பாதி மணம் போகலையே,
பந்தல் பிரிக்கலையே, வந்த சனம் போகலையே,
எம் கணவா எம் கணவா இந்த விதி வருவானேன்.  என்று புலம்பி அழுதனர். பாட்டன் உடலை இலைகளைக் கொண்டு மூடிவிட்டு, சிங்கம்பட்டி மன்னனிடம் வந்து
கள்வரோடு யுத்தம் செய்து எம் கணவரும் மாண்டுபோனார்.
வள்ளலின் பாதம் சேர வரம் தரவேணும்.
என்று சொல்ல மன்னனோ, இதற்கு ஏன் நீங்கள் தீக்குளிக்க வேண்டும்? என்று கேட்டுவிட்டுத் தன் அரண்மனையில் கவலையில்லாமல் தம் மனைவிமாரோடு வாழ அழைத்தான்.
மங்கிலியப் பெண்கள் எம்மை நகைப்பாரே!
வாலைப்பகடை நம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்?
சங்கடத்தைப் பார்ப்பதற்கோ, சண்டாளி போய்வாரோம்.
என்று சொல்லித் திரும்பினார்கள். மன்னன் மனமிளகி அவர்களை அழைத்து, உடன்கட்டையேற அனுமதித்தான். சந்தனக்கட்டை அடுக்கி பூப்பந்தல் போட்டுக் கொடுத்தான். பாட்டன் உடல் தகனமாக, அவன் இருமனைவியரும் தீக்குளித்து உயிர் விட்டார்கள். வானத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்து வாழ்த்தினார்கள் என்று கதை முடிகிறது.
திருச்செந்தூர் சுற்றுக் கிராமங்களில் இன்றும் பொம்மக்கா, திம்மக்கா இருவருக்கும் கோயில் எடுத்து வழிபாடு நடக்கிறது. இதிலிருந்து தமிழகத்தில் சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களிடம் கூட உடன் கட்டை ஏறும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது தெரிகின்றது. இவர்களுக்கு கோவில் எழுப்பி சொரிமுத்து அய்யணார் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றனர். 


இந்த கதையைப் படிக்கும் போது எனக்கு பா ராமதாஸ் நினைவுக்கு வந்தது. அவரும் தன் வன்னிய இன மக்களை தாழ்ந்த ஜாதியில் திருமணம் செய்வதை தடுக்கவும் தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டுவதற்காக ஜாதி கலவரங்களைத் தூண்டியும் மற்ற மேல்தட்டு ஜாதிக்காரர்களை ஒன்றாக சேர்த்துக் கொண்டு ஒரு பாதுகாப்பு படை அமைப்பதிலும்  அவருடைய சுய ஜாதி வெறியைக் காட்டினாலும் அது அவரின் அரசியல் வெறித்தவிர வேறு ஒன்றுமில்லை.
விஜய் டீவியின் :நீயா? நானா? நிகழ்ச்சியில் ஒருவன் தன் மகள் தன் பேச்சைக் கேட்காமல் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டால் கொன்று ஆற்றில் வீடுவேன். என்கின்றான். இன்னொருவனோ அதே மகனாக இருந்தால் அவனை தள்ளிவைத்து விட்டு தன் சொத்தில் ஒரு நயாபைசாக் கூடத் தராமல் துரத்திவிடுவேன்” என்கின்றான். இன்னொரு நிகழ்ச்சியிலோ தனக்கு கிடைக்காத காதலி யாருக்குமேக் கிடைக்க கூடாது. அவளை கொன்று விடுவேன்” என்று தெரிவிக்கின்றான். ஏன் விநோதினிகளும் வித்யாக்களும் உருவாகமாட்டார்கள்?
  


வந்த முனிவன், ‘வரம் கொடுத்து மகனை நீத்த வன்கண்மை
எந்தை தீர்ந்தான்என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான்,
உந்து கடலில் பெருங் கலம் ஒன்று உடைய நிற்கத் தனி நாய்கன்
நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப்போல், நலிவுற்றான்.
வரம் கொடுத்து தன் மகனை காட்டுக்கு அனுப்பிய கொடுமையைத் தாள முடியாமல் தசரதன் இறந்தான் என வருத்தபடும் வசிட்டன் கப்பல் தலைவனை இழந்து உடைந்து நிற்கும் கப்பலில் மாலுமியை போல் செய்வதறியாமல் திகைத்து நின்றான்.

செய்யக் கடவ செயற்கு உரிய சிறுவர், ஈண்டையார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது இகவாஎன்ன, இயல்பு எண்ணா,
மையற் கொடியாள் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று, என்னத்
தையற் கடல்நின்று எடுத்து, அவனைத் தயிலக் கடலின்தலை உய்த்தான்.
பரதன் உரிமைக்கு ஆகான் என்று வசிட்டனிடமே தசரதன் மறுத்திருப்பதும், அது வசிட்டனுக்குத் தெரிந்துண்மையும், பின்னர்ப் பரதன் வந்து கடன் செய்ய முனைந்தபோது அரசன் நின்னையும் துறந்து போயினான்என்று பரதனை (2231) வசிட்டனே தடுப்பதுண்மையும் இருக்க, இங்கே வசிட்டனே மையல் கொடியாள் மகன் ஈண்டு வந்தால் முடிந்தும்என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும் என்ற ஒரு சிலர்க்கு ஐயம் எழுவது உண்மையே. தற்போது பரதனே கோசல நாட்டுக்கு அதிபதி ஆதலின், சக்கரவர்த்தி வராமல் அரசாங்க சம்பந்தமான எதுவும் வேறு யாரும் செய்ய இயலாது என்பதும். அடுத்துச் செயற்குரிமை படைத்தவன் சத்ருக்கனன் ஆயினும் பரதன் வராமல் சத்துருக்கனன் வரமாட்டான் என்பதும் கருதியே வசிட்டன் அவ்வாறு கூறினான் என்பது உய்த்துணரப்படுதலின் ஐயத்துக்கு இடமில்லை என அறிக


தேவிமாரை, ‘இவற்கு உரிமை செய்யும் நாளில், செந் தீயின்
ஆவி நீத்திர்என நீக்கி, அரிவைமார்கள் இருவரையும்
தா இல் கோயில்தலை இருத்தி, ‘தண் தார்ப் பரதற் கொண்டு அணைகஎன்று
ஏவினான், மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்து, அவரை,
தசரதனின் அறுபதினாயிரம் மனிவியரை நீங்கள் மன்னனுக்கு ஈமச்சடங்கு நடக்கும் நாளில் உடன்கட்டை ஏறுங்கள் என்று சொல்லிவிட்டு சுமத்திரையையும் கௌசள்யையும் அவரவர் மாளிகைக்கு அனுப்பி விட்டு பரதனை அழைத்து வர அரசமுத்திரையுடன் ஒலை கொடுத்து, நடந்தது எதுவும் சொல்லாமல் அழைத்துவர அனுப்பினான்.

நகரமாந்தர்களோ
வருந்தா வண்ணம் வருந்தினார் - மறந்தார் தம்மை - வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார்; அருள் இருக்கும்
பெருந் தாமரைக் கண் கரு முகிலைப் பெயர்ந்தார், காணார்; பேதுற்றார்;
பொருந்தா நயனம் பொருந்தி, நமைப் பொன்றச் சூழ்ந்தஎனப் புரண்டார்.
துக்கத்தால் இதுவரை மூடாத கண்கள் இராமனுடன் இருக்கிறோம்.
இராமனுடனேயே காட்டிலும்இருக்கப் போகிறோம்என்னும் களிப்பினால்
உறங்கிவிட்டுனர். அதுவே நமக்கு விபத்தாயிற்றுஎன்று வருந்தினர்
நகரமாந்தர். அருள் குடியிருக்கும் கண்களை உடையான் அவன் என்று
இவ்விடத்தில்கூறியது நகரமாந்தரை உறங்கச் செய்ததும் அவன் செய்த
அருளே என்பதை உணர்த்தி நயம் செய்கிறது.அவதார நோக்கத்துக்கு
இடையூறு ஆக நகரமாந்தர் தன்னுடன் வராமைப்பொருட்டும், பின்னர்த்
தன்னைய பரத குணாநுபவங்களை நகர மாந்தர் அனுபவித்தற்கும் ஆக
அவர்களை உறங்கச் செய்ததுஅருளாலே என அறிக.

எட்டுத் திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர்க் கடலுள்;
விட்டு நீத்தான் நமை என்பார்; ‘வெய்ய, ஐயன் வினைஎன்பார்;
ஒட்டிப் படர்ந்த தண்டகம், இவ் உலகத்து உளது அன்றோ? உணர்வைச்
சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ  தொடர்ந்தும் தேரின் சுவடுஎன்பார்
நகர மக்கள் விழித்தெழிந்து என்ன செய்வது என்று அறியாமல் இராமன் நம்மை விட்டு போயிவிட்டான் என்று தெரிந்து மிகவும் வருந்தினர். தேரின் சுவடை பார்த்தபடி நடக்க தொடங்கியவர்கள் சுவடு அயோத்தியா நகரை நோக்கிச் செல்வதைப் பார்ரத்தவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துக் கொண்டு திரும்பலானார்கள்

புக்கார், ‘அரசன் பொன்னுலகம் போனான்என்னும் பொருள் கேட்டார்;
உக்கார், நெஞ்சம்; உயிர் உகுத்தார்; உற்றது எம்மால் உரைப்ப அரிதால்;
தக்கான் போனான் வனம்என்னும் தகையும் உணர்ந்தார்; - மிகை ஆவி
அக் காலத்தே அகலுமோ, அவதி என்று ஒன்று உளதானால்?
திரும்பி வந்தவர்கள் ராமனும் நகரம் திரும்பி வரவில்லை மன்னவன் தசரதனும் இறந்து போனான் எனும் துயரச் செய்தியறிந்ததவர்கள்
அரசன் இறந்து போன செய்தி கேட்டு உகுந்தஉயிர் போக மிகுதி உயிர்
இராமன் வனம் போனதறிந்தும் போகாமைக்குக் காரணம் அது நீங்கும்கால
எல்லை என்ற ஒன்று விதியால் வகுக்கப்பட்டிருப்பதனால் தான் என்று
கூறினார்.

பரதன் திரும்பி வந்தவுடன் தசரதனுக்கு ஈமச்சடங்கு நடைபெருகின்றது. அதில்

இழையும் ஆரமும் இடையும் மின்னிட,
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள்தாம்
தழை இல் முண்டகம் தழுவு கானிடை
முழையில் மஞ்ஞைபோல், எரியில் மூழ்கினார்.
ஒல்கித் தளரும்சிறந்த மலர் பூத்த கொம்பினை ஒத்தவர்களாகிய தேவியர்கள்
பொன் வடமும், முத்துவடமும், இடுப்பும் மாறிமாறி மின்னொளி செய்ய-
தழையற்ற (செந்)தாமரை மலர்களே நிரம்பியுள்ளகாட்டினிடத்து மலையிடத்து வாழும் மயில் கூட்டம்மூழ்குவதுபோல;நெருப்பில் மூழ்கி விண்ணுலகு சென்றனர்.
செந்தாரைக் காட்டினுள் மயில்கல் புகுவதுபோல் நெருப்பிடையே
தேவி மார்மூழ்கினர்என்பதாம்

அங்கி நீரினும் குளிர, அம்புயத்
திங்கள் வாள் முகம் திரு விளங்குற,
சங்கை தீர்ந்து, தம் கணவர் பின் செலும்
நங்கைமார்புகும் உலகம் நண்ணினார்.
தாமரையும்  சந்திரனும் போலும் ஒளிபடைத்த திருமுகம் மேலும் திருமகளின் மலர்ச்சி
பொருந்தியதாக (தம் கணவன் மேனியைத் தழுவியதாகியபாவனையால் தாம் தழுவிய) நெருப்பு நீரைக்காட்டிலும்குளிர்ந்து தோன்ற மனத்துயர் நீங்கி   தம்கணவருடன் இறந்து பின்செல்லும் கற்புடை மகளிர் எய்தும் நல்லுலகத்தை வர்களும்
அடைந்தார்கள்.
அங்கி குளிர்தல் கற்புடை இவர்களுக்கே; அன்றி நெருப்பின் சுடுதல்
தன்மைமாறியதன்று.
திரு நெல்லை கண்ணனிடம் உடன் கட்டை ஏறுதல் பற்றி கம்பன் குறிப்பிட்டுருப்பதைப் பற்றி கேட்டேன். எனக்கு தமிழ் நாட்டில் அது அவ்வளவாக ராஜஸ்தான் மற்றும் வங்காளத்தில் இருந்தது போல் பரவலாகவும் அடித்தளத்து மக்களிடம் புழங்கும் விஷயமாக தெரியாததால், கம்பன் இதைப் பற்றிக் குறிப்பிட்டது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் உண்டாக்கியது. அதற்கு அவர் ”கம்பன் பாடல்களில் மட்டும் என்று இல்லை தமிழர் பண்பாடுகளிலும் இடைச் செருகள் ஏராளம் என்றார். நான் அவரிடம் ஏன் கோவை கம்பன் கழகப் பதிப்பும் இதை மிகைப் பாடலாக கருதவில்லை? என்றதற்கு அவர் தவறு செய்பவர்கள் எங்கும் இருப்பார்கள்” என்று கூறினார்.  உடன் கடை ஏறுவது என்ற நிகழ்ச்சியே  வான்மீகீ ராமாயணத்தில் இல்லை.  

வான்மீகீயில் தயரதன் இழப்பு என்பது கௌசள்யையின் மாளிகையில் தான் நடக்கின்றது. கம்பனோ அதுவும் கைகேயின் அரன்மனையிலேயே நடக்கின்றதாகத் தான் காட்டுகின்றான். இராமன் தயரதனிடம் நேருக்கு நேர் நின்று பேசி தயரதன் பெரும் செல்வங்களையும் சேவகர்களையும் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்ல கைகேயி ”எல்லாவற்றையும் இராமனுக்கு கொடுத்து விட்டாள் என் பையன் பரதனுக்கு ஆளுவதற்கு என்ன இருக்கும்?”  என்று கேட்டு தடுத்ததாகவும் தான் ஆதிகாவியம் கூறுகின்றது.

                                                                                                                                                                                                  தொடரும்