Friday, August 16, 2013

நாயகன்





”நாயகன்” திரைப்படம் தமிழ் சினிமாவுலகின் ஒரு மைல் கல்; தமிழ் சினிமாவின் சாதனைகளின் சாத்தியப்புள்ளி. மற்றவர்களையும் கனவு காண வைத்த ஒரு மாபெரும் தயாரிப்பு. இவ்வருடம் 25 வருடங்களை கடந்த பிறகும் மக்களின் நினைவில் நிலைத்து இருக்கும் ஒரு திரைப்படம். கமல் ”இந்துவில்” அந்நினைவுகளை எழுதினார். அதில் அத் தயாரிப்பாளர்களை மட்டமாக சித்தரித்தது முற்றிலும் தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒன்று. இதே சமயத்தில் மணிரத்தினம் ஒரு நேர்முகத்தில் தான் இயக்கிய படத்திலேயே மோசமான படம் என்று கோவைத்தம்பி தயாரித்த “ இதயக்கோவில்” எனும் படத்தைக் குறிப்பிட்டதும், தேவையற்ற சர்சையை உருவாக்கியது.


மரியோ பூசோ GOD Father எனும் நாவலின் ஆசிரியர். அது அமெரிக்காவில் வாழும் சிசிலியின் மாபியா தலைவனைப் பற்றியது, 
(தலைவா என்று பேசவே பயமாகவிருக்கின்றது) உலக அளவில் மிகுந்த வரவேற்பு பெற்ற நாவல். அதைத் திரைப்படமாக்கும் போது மரியோ பூசோ நாயகனாக மர்லன் பிராண்டோ இல்லையென்றால் திரைப்படம் தயாரிக்க போவதில்லை என்பதில் குறியாகவிருந்தார். பிராண்டோ, மற்றும் அல்பசினோ(உலக அளவில் புகழ் பெற்றது) நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம்.

”நாயகன்” படத்தின் கதை இந்த திரைப்படத்தை அடிநாதமாகக் கொண்டது. அதன் பல காட்சிகளையும் அப்படியே எடுத்துக் கொண்டது. (மனைவியின் கொலைக்கு பழிவங்குவதில் மூன்று கொலைகள், நிழல்கள் ரவியின் இறப்பு முதலியன, தந்தையின் நடவடிக்கை பிடிக்காத பெண், (அதில் மகன் இதில் மகள்)). ஆனாலும், டைம்ஸ் பத்திரிகையாலேயே உலக சினிமாக்களின் முதல் நூறு படத்தின் வரிசையில் உள்ளது. அதுவும் ஹிந்தியை போன்ற சந்தையோ, வணிகமோ நடக்கத தமிழைப் போன்ற ஒரு பிராந்திய மொழியில் வெளியான படம். இது அந்த வரிசையில் இருப்பதே மிகவும் பெருமிதத்திற்கு உரியது.

பலவருடங்களுக்கு பிறகு ராம் கோபால் வர்மா என்பவர் Godfather இன் தாக்கத்தில் சர்கார் என்று படம் இயக்கினார். ஹிந்தி திரையுலகின் முடிசூடா மன்னனான அமிதாப் பச்சனும் அவரது மகன் அபிஷேக் பச்சனும் அப்பா மகனாக நடித்திருந்தனர். ஹிந்திபடம், உலக்களாவிய சந்தை, மிகப் பெரிய நட்சந்திரங்களினால் கிடைக்கக் கூடிய Mass Opening, தொழில்நுட்ப விரிவு இவையனைத்தும் இருந்தும் படம் படு தோல்வியடைந்தது.

நாயகன் இன்றும் நினைவில் நிற்க காரணம் மூலத்தை அப்படியே பிரதி எடுக்கமால், அப்போது பம்பாயில் வசித்து வந்த தமிழ் தாதாவான வரதராஜ முதலியாரின் வாழக்கையை சித்தரிப்பது போலும். தாரவியில் வாழ்ந்த தமிழ் மக்களின் கதையுமாகவும் அதை மாற்றியதுதான். (இன்றும் வர்தா பாயின் அன்று செய்த அடாவடிகளினால் மும்பை புறநகரில் தவிக்கும் கட்டுமான கம்பெனிகள் பலவுள்ளன). கமல், இளையராஜா, மணிரத்தினம் மற்றும் பிசி ஸ்ரீராம் இவர்களின் பலமான கூட்டணியும் பெரிய பக்கபலம். காட்சியமைப்பில் அவர்கள் செலுத்திய கவனமும், பழங்காலத்தில் நடைபெறுவதால் பழம் பாடகியான ஜிக்கியையே ஒரு பாடலுக்கு பாடவைத்ததும் அவர்களின் மாறுபட்ட சிந்தனைக்கு சான்று. அந்த படத்திற்கு பிறகு மணியும் கமலும் இணையவேயில்லை. படத்தின் தயாரிப்பாளரான முக்தா பிலிம்ஸ் வணிக லாபத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் மேலே வைத்து படம் வெளியீட்டு உரிமையை மணியின் அண்ணன் ஜீ. வெங்கடேஸ்வரனுக்கு விற்று விட்டனர். ஜீவீயும் ஒரு ஆடிட்டர்தான்.

நம் நாயகனான கம்பன் எவ்வளவு மாறுதல்களை செய்திருக்கின்றான் என்று அயோத்தியா காண்டத்தில் மட்டும், இதுவரை பார்த்த படலங்களில் இருந்து காட்சிகளை பார்த்தோம். இனி வரும் படலங்களில் அந்த அந்த இடத்திலேயே பார்ப்பது என்றும் எண்ணியிருந்தோம், ஆயினும் ஒரு முக்கியக் காட்சி விடுபட்டுப் போய்விட்டது.

இராமன் வனம் புகும் படலம் சற்றே விரிவாகப் பார்க்க வேண்டியது  வால்மீகியில் எப்படி கூறப்பட்டிருக்கின்றது என்பதை முதலில் பார்ப்போம்.

கைகேயிற்கு வரம் கொடுத்துவிட்டு தசரதன் அனலில் விழுந்த எறும்பாக துடித்து கைகேயியிடம் “நான் உன்னை மனைவியாகக் கொள்ள மாட்டேன். உன் மகனையும் துறந்தேன். உன் மகன் எனக்கு நீர்க்கடன் செய்யக்கூடாது. எப்படி நான் வசிட்டன் மற்றும் வந்திருக்கும் மற்றவர்கள் முகத்தில் விழிப்பேன்?” என்று புலம்புகின்றான். சுமந்திரன் வசிட்டரின் ஆணைப்படி, கைகேயியின் அரண்மனைக்குச் சென்று தசரதனை வாழத்தி வணங்கி பட்டாபிஷேக மண்டபத்திற்கு வரும்படியழைக்க, இராமனை எண்ணி வேதனையடைந்த தசரதன் ”உன் வாழத்தொலி என் உயிர்நிலைகளைச் சென்று  தாக்குகின்றது” என்றான். சுமந்திரனுக்கு ஒன்றும் புரியாமல் சற்று நகர்ந்து நின்றான். கைகேயி சுமந்திரனைப் பார்த்து ”இராமனுக்கு பட்டாபிஷேகம் சந்தோஷத்தால் அரசன் இரவு முழுவதும் உறங்கவில்லை. நீ போய் இராமனை அழைத்துவா.இதில் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை
(na kaaryaa = do not form; vichaara Naa = hesitation; atra = in the matter.
"Oh, Sumantra! Hence, quickly go and bring the glorious prince Rama. Blessedness to you! Do not have any hesitation in this matter. ")
என்றவுடன் சுமந்திரன் ”மங்களகரமான காரியம்தானே நடைபெறப் போகின்றது என்ற சந்தோஷத்தில் இராமனை அழைத்து வர உடனே அகன்றான்.

கம்பனில் மூழகி முத்தெடுத்த ஹரிகிருஷ்ணன் அவர்கள்  இவ்விடத்தில்  சுமந்திரன்“மன்னவன் சொன்னாலொழிய நான் போக மாட்டேன்” என்றவுடன் தசரதனே “ இராமனை அழைத்து வா” என்கின்றான் என்று அதே சர்கம் அதே சுலோகத்திற்கு பொருள் கூறுகின்றார். ”அச்ருதவா ராஜவசனம் கதம் கச்சாமி பாமினி” 14 சர்கம் சு 64. . அரசவையில் பெரிய பதவியில் இருந்தாலும் உத்தரவை அரசன் வாய்மொழி மூலமாகத் தெரிந்து கொண்டுதான் செயல் படுத்த வேண்டும் என்பதில் சுமந்திரன் தெளிவாக இருந்தான் என்றும் இது எடுத்துக் காட்டுவதாக அவர் கூறுகின்றார். To me, it appears that even in Dsaratha’s case there were too many power centres comparable to the present day Tamil Nadu politics

இதே சுலோகம்
स मन्यमान: कल्याणं हृदयेन ननन्द च।।2.14.64।।
निर्जगाम च सम्प्रीत्या त्वरितो राजशासनात्।

सः he, हृदयेन with heart, कल्याणम् auspicious event, मन्यमानः thinking, ननन्द च felt happy, राजशासनात् with king's order, त्वरितः swiftly, सम्प्रीत्याः rejoiced, निर्जगाम च went away.

Thinking that an auspicious event will take place, he felt happy and rejoiced and according to king's order, went away swiftly
திருப்பதி ராஷ்ட்டிரிய ஸன்ஸ்கிருதி வித்தியாப் பீடம் பதிப்பில், இவ்வாறு உள்ளது.
 
இராமன் வந்தவுடன் தசரதன் “இராமா” என்பதை தவிர வேறுஎதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்தவுடன் கைகேயியிடம் “ நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? ஏன் என் தந்தை என்னுடன் பேசவில்லை. அதை மன்னிக்கும் படி தாங்கள் சொல்ல வேண்டும். பரத சத்ருக்னர்கள் நலமா? அவர்களை பற்றி ஏதேனும் அசுபமான தகவல் வந்ததால் தந்தை இப்படியிருக்கின்றாரா? என்று பலபடி கேட்டுவிட்டு கடைசியில்
कच्चित् ते परुषम् किंचित् अभिमानात् पिता मम |
उक्तः भवत्या कोपेन यत्र अस्य लुलितम् मनः || २-१८-१७
17. mama pitaa kachchituktaH = i hope my father has been spoken; kinchit = any words; yena = by which; lulitam = (they) disturbed; asya = his; manaH = conscience; te abhimaanaat = by your pride; bhavityaa roshheNa = by your angry; parushham = which was harsh.
"I hope you have not spoken anything which hurt my father's conscience with your pride and anger."

இராமன் “ உங்கள் அகந்தையாலும் கோபத்தாலும் ஏதேனும் பேசி, தந்தையின் மனதை புண்படுத்தி விட்டீர்களா” என்று கைகேயிடம் வினவினான்.

கம்பனின் இராமனிடத்தில் காண முடியாத பண்பு. அதுவும் அவன் தாயினும் மேலாக நேசித்த கைகேயியிடத்தில். ஆனால் வால்மீகியே கைகேயியின் பாத்திரத்தை மற்றவர்களை மதிக்காமல் இருப்பதுடன், கர்வமானவளாகவும் திமிரானாவளாகவும், கௌசல்யையிடமோ, சுமத்திரையிடமோ நல்ல உறவு இலாதவளாகவும் தான் படைத்திருக்கின்றார். இராமன் கானகம் சென்று தசரதன் இறந்தவுடன், தூதுவர் பரதனை அழைக்க கேகேய நாட்டிற்கு போன போது பரதன் “ கோசலை நலமா. சுமத்திரை நலமா என்றெல்லாம் விசாரித்து விட்டு ”எப்போதும் தன்னை மட்டும் நேசிப்பவளும், மூர்க்கமான குணம் படைத்தவளும் (ஸதா சண்டி), தன்னைத் தானே புத்திசாலி என்று வியந்து கொள்பவளுமாகிய என் தாய் கைகேயி நலமா” என்றான்.   வால்மீகி கைகேயின் பாத்திரத்தை இவ்வாறுதான் படைக்கின்றான்.  வால்மீகியில் கைகேயியிடத்தில் இராம்னுடைய அன்பு அவள் குணாதிசயத்தையும் தாண்டிய ஒன்று. அவன் கைகேயியின் குறைகளை முழுக்கவும், நன்றாகவும் அறிந்தவன். கம்பனின் கைகேயியோ மிகச் சிறந்த பண்பினள்.அவள் தூமொழி மடமான், தூக்கதித்லும் அருள் பொங்கும் கண்களையுடையவள். அவள் கூனியால் மனம்மாறி தீராப் பழி சுமந்தவள்   

தசரதன் பேசாமல் இருப்பதைப் பார்த்த கைகேயி “தன் வாயால் மன்னவன் கூறமாட்டான். எனக்கு முன்பு இரண்டு வரம் கொடுத்தான். சாதாரணவர்களைப் போல் இப்போது அதை நினைத்து புலம்புகின்றான். உனக்கு நான் சொல்லலாமென்றால் இதோ கூறுகின்றேன்” என்றவுடன் இராமன் ”தாயே, மன்னவன் கட்டளை என்றால் உயிரை விடவும் தயாரகவிருக்கின்றேன். நான் கட்டாயாம் நிறைவேற்றுவேன். எனக்கு இரண்டுவிதமாக பேசத் தெரியாது” என்றவுடன் கைகேயி “பரதன் நாடாள வேண்டும் நீ போய் இரண்டு ஏழு ஆண்டுகள் (ஸப்த ஸப்த வர்ஷானி) காடுகளில் தங்கி தவம் புரிய வேண்டும்” என்றாள்.  

வால்மீகியில் இராமன் வனம் புகும் முன் தசரதனிடம் பல விவாதங்கள் நடத்த வேண்டியிருந்தது. தசரதனேக் கூட ”என்டைய சத்தியம் என்னைதான் கட்டுப்படுத்தும் உன்னையல்ல. என்னோடு போர்த் தொடுத்து, என்னை சிறைபிடித்து, நீ மகுடம் சூட்டிக்கொள்”    என்கின்றான். என்னோடு போர்த் தொடுத்து என்னை சிறைபிடி என்றால் என்ன அர்த்தம்.? ”நான் போரிட மாட்டேன். மகிழ்ச்சியாக சிறைக்குச் செல்வேன். நீயும் காட்டிற்குப் போகவேண்டாம்.” என்கின்றான் தசரதன். ”பித்ரு வாக்கிய பரிபாலனம்” இராமயணம் காட்டும் பாதையில் ஒன்று என்றால், இதுவும் பிதாவின் வாக்கியம்தான், கட்டளைதான் ,வழிகாட்டுதல்தான். ஆனாலும் இதை இராமன் பின்பற்றவில்லையே. இது ஒரு வாதத்திற்கு மட்டுமே. இராமன் காட்டும் பித்ரு வாக்கிய பரிபாலனம் என்பது முற்றிலும் வேறானது.

இதையே கம்பன் மிக அழகாகா மாற்றுகின்றான். வரம் கொடுத்த தசரதன் மயங்கிவிட்டான் என்கின்றான்
கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி,
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள். சுமந்திரனை கைகேயி “மகனைகொர்க” என்றவுடன் எந்தவித சந்தேகமுமில்லாமல் சுமந்திரன் அழைத்து வருகின்றான்.

இராமன் வருகின்றான்.
ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத்
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி,
நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்என்னா,
தாய் என நினைவான் முன்னே கூற்று எனத் தமியள் வந்தாள்.

இப்படி பலவான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் “அண்ணலும் அயர்ந்து தேறாத் தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி” என்று மகா ஈரெட்டாக  ஒரு வாக்கியத்தைக் கம்பன் போடுகின்றான். ”அயர்ந்து தேறா” என்பதனை இராமன் மேலும் ஏற்றலாம், தசரதன் மேலும் ஏற்றலாம்.  இராமன் பேரில் ஏற்றும் போது ” பலவிடங்களில் தசரதனை தேடி அயர்ந்து அவனை காணாமல் “ தேறா” அவன் கைகேயின் அரண்மனையிலிருக்க கூடும் என்று தெளிந்து, “துருவினன் வருதல் நோக்கி” என்று பொருளுரைக்கலாம். ”தேறா” என்ற சொல் தெளிவடைந்தான் என்ற பொருளும் தரும். இதையே தசரதன் மேல் ஏற்றும் போது “ அண்ணலும், அயர்ந்து தேறாத் தூயவன் இருந்த சூழல் துருவினான்” என்று இராமன், அயர்ச்சியடைந்து இன்னமும் மயக்கம் தெளியாத தசரதன் இருந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்தான் என்று பொருளுரைக்கலாம்.

இராமன் முன் வரும் கைகேயி
‘ “ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் - இரண்டு ஆண்டின் வாஎன்று, இயம்பினன் அரசன்என்றாள்.

மன்னவன் சொல்லியது இது என்று அரசாணையாகக் கூறுகின்றாள்.

இராமன் மன்னவன் சொல்லியது என்றவுடன் “சரி தந்தை எங்கிருக்கின்றார்.. எப்படியிருக்கின்றார்? நான் அவரைப் பார்த்து விடைப் பெற்றுக் கொண்டு கானகம் போகின்றேன்” என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும், இந்த “ அப்பா செல்லம்” இராமன். ஆனால் இவன் கூறுவது “


மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப் பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.

”இது அரசன் பணித்த பணியாக இல்லாவிட்டால் என்ன? நீங்கள் என் தாயார் அல்லவா? உங்களுடைய வார்த்தையை நான் மறுப்பேனா? நாட்டை அரசாள்வதான செல்வத்தை பரதன் பெற்றால் என்ன? அது நான் பெற்றது போலத்தான் கருதத்தக்கது. இதோ இப்பணியை சிரமேற்கொள்கின்றேன். இதோ, இன்றே இப்பொழுதே கானகத்துக்குப் போகின்றேன். விடையும் கொண்டேன் “ என்கின்றான்.

இந்த பாட்டில் இரண்டுவிடங்களில் நிறுத்தக் குறிகளை சற்று மாற்றிப் போட்டால் அல்லது படிக்கும்[போது சிறிது இடைவெளி விட்டு படித்தால் சொல்ல வந்த பொருள் வேறு ஒரு தொனியில் வேறு ஒரு பொருளையும் தரும்.

மன்னவன் பணி அன்று.  ஆகின் நும்பணி, மறுப்பெனோ? என்றால் “
அம்மா இது அரசன் கட்டளையன்று (என்று நான் நன்கறிவேன்). எனவே (ஆகின்) இது உன்னுடைய ஆணை (என்பதனையும் நான் நன்கறிவேன்) என்றொரு தொனிப்பொருள் வருகின்றதல்லவா? அடுத்த அடிக்கும் இதே போல் நிறுத்த குறிகளை சற்று மாற்றினால்
”என்பின், அவன் பெற்ற செல்வம், அடியேனன் பெற்றது அன்றோ” அம்மா இதோ நான் அரசாட்சியை விட்டு நீங்கப் போகின்றேனே, இப்படி நீங்கும் எனக்கு பின்னால் அவன் (பரதன்) பெறப் போகின்ற செல்வம் எதுவென்றால், இதோ இப்போது நான் பெற்றிருக்கின்ற இந்த மரவுரியும் சாடாமுடியும்தானே” என்ற முற்றிலும் வேறான பொருளும் வரும்.

இப்படி பொருளுரைத்தால் “ இராமன் பேருக்கும் புகழுக்கும் களங்கம் வருமே” என்று சிந்தித்தால் பழுத்த பக்திமானும் சிறந்த இலக்கியவாதியுமான 64 வது நாயன்மாரான சுவாமிகள் தி.ரு முருக கிருபானந்த வாரியார் அவர்கள் எழுதிய ”கம்பனின் கவிநயம்” என்ற நூலில் இதே கருத்தைக் கொண்டிருக்கின்றார். அவருடைய வார்த்தையில்” மன்னவன் பணியென்றாகில் நும்பணி மறுப்பெனோ? “ இந்த வரிக்குள் இன்னொரு பொருள் மறைந்திருக்கின்றது. அம்மா, அறுபதினாயிரம் ஆண்டுகள் மகவின்றி மாதவம் செய்தும். புத்திர காமேஷ்டி யாகம் செய்து எனை மகவாகப் பெற்று, மடிமேலும், மார்பிலும், தோள்மேலும் எடுத்து வளர்த்து, என்னை ”பொன்னே! மணியே! என்று அன்பாக செல்லப் பேரிட்டு வளர்த்த தந்தை, பதினான்காண்டுகள் மரவுரியோடும், சடாமுடியேடும்,. அரக்கர்களும், விலங்குகளும் அரவினங்களும் வாழும் கானகத்துக்குச் செல்லுமாறு கூறுவாறா? ஆகவே இது தந்தையின் கட்டளையன்று தாங்களாகவே புனைந்து கூறுகின்றீர். ஆயினும் நான் மறுக்கமாட்டேன்.

சரி அதுதான் போகட்டும். அரசை பெற்றுக் கொள்ளப் போவது யார்? அன்னியன் பெறவில்லையே? என் உடன் பிறந்த பரதன் பெற்ற செலவம் நான் பெற்றதுதானே. ”என்பின், அவன் பெற்ற செல்வம் என்று பிரித்து பொருள் காண்க” என்கின்றார்.

சொல்லப் போனால் அப்படி பிரித்து படிக்கும் போது இன்னொரு மிகவுயர்ந்த பொருளும் தோன்றும். “ அம்மா! நீங்கள் பரதனை நன்றாக அறியவில்லை. அவன் இப்படிப்பட்ட ஆட்சியை ஒரு போதும் விரும்பமாட்டான் என்பதனை நான் நன்று அறிவேன். அவனுடைய இதயம் உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். ஆயினும் நான் நன்கறிவேன். நீங்கள் வேண்டுமானால் பார்த்துக் கொண்டேயிருங்கள். அவன் அரசை ஏற்கின்றானா? அல்லது என்னை போலவே மரவுரியும் சாடாமுடியும் ஏற்கின்றானா? என்று மிகமிக மறைமுகமாக பரதனின் குணச்சித்திரத்தை இராமன் தீட்டுமிடமாகவும் அமையும்.

அப்படியானல் பரதன் இத்தகையவன் என்பதை இராமன் அறிவானா? என்ற கேள்வியெழுமல்லவா?  அதற்கும் இராமன் பின்னொரு சமயம் விடையளிக்கின்றான். பின்னால் கானகத்துக்கு இராமனைத் தேடிக் கொண்டு பரதன் வரும் சமயம் இலக்குவன் ”உரஞ்சுடு வடிக்கனை ஒன்றில் வென்று முப்புரஞ்சுடும் ஒருவனில் பொலிவேன்” பரதனுடை மார்பை பிளக்கும் ஒரு அம்பை எறிந்து அந்த ஒரே காரணத்தினால் திரிபுரம் எரித்த சிவனைப் போல நான் பொலிந்து தோன்றுவேன் என்று இலக்குவன் சொல்லும் போது இராமன்

பெருமகன் என்வயின் பிறந்த காதலின்
வருமனெ நினைகையும் மன்னை என்வயின்
தருமென நினைகையும் தவிர, தானையால்
பொருமென நினைகையும் புலமை பாலதோ!

”பரதன் எவ்வளவு பெரிய மனதையுடயவன். பெருமகன் அல்லவா அவன். அவன் என் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப் பட்டது என்பதை லக்‌ஷ்மணாநீ அறிய மாட்டாயா?என் மீது கொண்டிருக்கும் அன்பிற்காகத்தான் அவன் என்னைப் பார்க்க வருகின்றான். நாட்டை என் வசம் ஒப்படைக்கும் நோக்கம் ஒன்றையே வைத்திருக்கின்றான் என்றல்லவா நாம் அவன் குறித்து உணரவேன்டும். அதைவிடுத்து நம் மீது போர்த் தொடுப்பதற்கு படை எடுத்து வருகின்றான் என்று நினைப்பது அறிவாளிக்கு அழகாகுமா?றிந்தவன் அப்படி நினைக்கலாகுமா?”  என்று கேட்குமிடத்தில் பரதனைப் பற்றி கைகேயியைவிடவும் ஏன் கௌசல்யைவிடவும், இராமன் மிகச் சரியாக எடை போட்டிருந்தான் என்றே உறுதியிட்டுக் கூறமுடியும். இந்த காரணத்தினாலேயே என்பின், அவன் பெற்ற செல்வம் என்று பிரித்து பொருளுரைப்பது என்பது மிகவும் ஏற்புடையதே என்பது விளங்கும்.

ஆயினும் முதலடிக்கு நாம் கண்ட பொருளுக்கு கவியுனுடைய சாட்சியமிருக்கின்றதா என்று பார்ப்போம்.

எல்லோரிடமும் போய் “மன்னவன் ஆணைப் படி நான் காட்டிற்கு சென்று 14 வருடத்தை நொடிப் பொழுதாகக் கழித்து, திரும்பிவருவேன் என்று “ விடைப் பெற்றுக் கொண்டு போன இராமன் “ தசரதனை பார்த்து விடைப் பெற்றுக் கொள்ளாமலேயேச் சென்றுவிட்டான்.

வசிட்டன் கைகேயிடம் “ காட்டுக்குப் போ என்று மன்னவன் சொல்லுமுன் நீ எப்படி சொல்லலாம்? அவனோ காட்டிற்கு போகாமல் இருக்க மாட்டான்” என்று சொல்லும் போதுதான் தசரதனுக்கு இராமன் வனம் போகின்றான் என்பது தெரிகின்றது. அப்போதுதான்” இவளை மனைவியாக கொள்ளேன். இவள் மகனும் என் நீர்க்கடனுக்கு உதவான்” என்கின்றான் தசரதன். வாலிமீகியிலோ இதோ பேச்சு பேசப்பட்டது கைகேயியிற்கு வரம் கொடுத்த சமயத்தில். ஆனால் கம்பன் அதை இங்கே வசிட்டனின் எதிரில் பேசுவது போல் மாற்றிவிட்டான். வால்மீகியில் பரதன் தான் நீர்கடன் செய்கின்றான். காரணம் கைகேயியைத் தவிர வேறு யாருக்கும் தசரதன் சொன்னது தெரியாது. ஆனால் மிகச் சிறந்த நாடககர்த்தாவான கம்பன் அதை இவ்விடத்தில் போட்டு, பிறகு பரதன் நீர்கடன் செய்ய எழுந்திருக்கும் போது வசிட்டன்” நீ செய்யக் கூடாது. உன்னை மகனாக கொள்ளவில்லை உன் தந்தை” என்று பரதனின் அவலத்தை பன் மடங்கு உணரச்செய்வான்.

வசிட்டன் தயரதனிடத்தில் “ நான் போய் பேசி இராமனின் மனதை மாற்றுகின்றேன் என்று கூறிவிட்டு இராமனிடம் “உன்னை காட்டிற்குப் போ என்று சொன்னவள் உன் சிறியதாய். உன் தந்தை சொல்லவில்லை. நீ போனால் உன் தந்தை சோகத்தில் உயிரைவிடுவான், அது மட்டுமின்றி உன் தாயாரின் விஷப்பேச்சினால் அறிவிழந்து ( a state of Lunacy or Idoicy will make a contract null and void) வரம் தருவேன் என்றானேத் தவிர தந்துவிடவில்லை”  என்று கூறும் போது கட்டாயம் இராமன் புன்னகைத்திருப்பான். (கவி இதை குறித்து எதுவும் சொல்லவில்லை).

இதற்கு இராமன்”

ஏன்றனன் எந்தை இவ்வரங்கள்; ஏவினாஅல்
ஈன்றவள்’ யானது சென்னி ஏந்தினேன்
சான்றென நின்றநீ தடுத்திதியோ
தேன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்

நல்லறத்தை நிலைநாட்டுவதற்காக வந்த இராமன் வசிட்டரைப் பார்த்து வரங்கள் (this word needed here?) ”வரம் கொடுப்பேன் என்றுதான் சொன்னான். இன்னும் கொடுக்கவில்லை” என்று என்னிடம் வாதாடுவதில் பயனில்லை. கொடுப்பதாக ஒப்புக் கொண்டவன் என் தந்தை. காட்டிற்கு போ என்று ஏவியவளோ என் தாய். இதை நான் என் தலையாய கடமையாக ஏந்தினேன். சாட்சியாக நின்ற நீ என்னைத் தடுத்தல் முறையோ” என்றான் இராமன்.

இராமனுக்கு நன்றாகத் தெரிருந்திருக்கின்றது. தாய் கைகேயியின் ஆணைதான் அது, மன்னவன் ஆணையில்லை என்று. ஆயினும் வெளி உலகத்திற்கு அவன் காட்ட விரும்பியது “ மன்னவன் பணியென்றே”  ஆயினும் பலவிடங்களில் கம்பனில் மறுபடி மறுபடி ”சிற்றன்னை ஏவ, சிற்றன்னை சொல்லுக்காக” இராமன் நாடுதுறந்து கானகம் வந்தான் என்றே இருக்கின்றது. இராமனே தாயின் ஆணையால் நாங்கள் கானகம் புகுந்தோம் என்று சூர்ப்பனகையிடம் சொல்கின்றான். பெரும்பாலனவிடங்களில் லக்‌ஷ்மணன் தான் இராமனின் சார்பாக காட்டிற்குவந்த கதையையும் அவர்கள் வரலாற்றையும் கூறுபவன்.     

இவ்வளவு தெளிவாகக் கூறும் இராமனுக்கா கைகேயி “ இது மன்னவன் ஆணை” என்று சொல்லும் போது புரிந்திருக்காது? தசரதன் நிலையும் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால் அவனைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கேட்காமல், அவனிடம் விடைப் பெறாமலும் கம்பனின் இராமன் வனம் புகுந்தான்.

கம்பன் தன் சாமர்த்தியதால் அழகாக மூலத்தில் உள்ள விஷயங்கள் இடமாற்றி தசரதன் ஆவி நீற்பதன் அவலத்தையும் பரதனுக்கு அதனால் ஏற்பட்ட அவலத்தையும் மிக மிக உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல முடிந்தது.

 (ஹரிகிருஷ்ணன்) இது முழுக்கவே அன்னாரின் கருத்துக்களே. அவர்களுக்கு நன்றி)

                                                                                                                                  தொடரும்