Thursday, February 21, 2013

செவிவழிக்கதைகள்



 நான் கடலூரில் படித்து கொண்டிருக்கும் போது இருக்கும் போது என் தம்பியை டபுள்ஸ் அடித்துக் கொண்டு தினமும் பள்ளிக்கு செல்வேன். அவன் குழந்தையிலிருந்தே நல்ல குண்டு. அவனுக்கு சிறு வயதில் பின்னாடி சைக்கிளில் உட்கார்ந்து ஒரு தடவை கால் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு தோல் வழண்டுவிட்டது. அதிலிருந்து பின்னாடி உட்காருவதற்கு பயம். எப்போதும் ஹான்டில் பாரில் தான் உட்காருவான். எனக்கு கிடைத்த பழைய ஹெர்குலிஸ் சைக்கிளும் எவ்வளவுதான் தாங்கும். ஒரு நாள் போய் கொண்டிருக்கும் போது ஹான்டில் பார் உடைந்து விட்டது. நான் உடனே சைக்கிளிலிருந்து குதித்து விட்டேன். சுவற்றில் மோதி என் தம்பிக்கு நல்ல அடி. அவன் ஹாண்டில் பார் உடைந்ததை கவனிக்காமல் நான் திடிரென்று குதித்து வேண்டுமென்றே அவனை அடி பட வேண்டும் விட்டு விட்டதாகவும், சுவற்றில் மோதியதால் தான் ஹாண்டில் பார் உடைந்து விட்டதாகவும் இன்று வரை கூறிக் கொண்டிருக்கின்றான். என்ன? அடி யாருக்கு பட்டதோ அவனிடம் தானே பரிவு எழும்! எனக்கு சின்ன கீறல் கூட கிடையாது. இந்தக் கதையை மறக்காமல் எங்கள் குடும்பத்தில் எல்லா குழந்தைகளுக்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றான். என் அக்காவின் பேரன்களும் இதில் அடக்கம்.  

சீஏ படிக்கும் போது எங்கள் நிறுவனத்தின் ஒரு பார்டனர் அந்தராமன். இவர் கம்பெனி ஆடிட்களை கவனித்து வந்தார். அப்போது டாய்லெட் ஆபீஸிற்கு வெளியே இருக்கும். ஆபிஸ் முன்புறமும், சீனியர் பார்டனரின் வீடு பின் புறமும் இருந்தது. அப்பொழுது சனிக்கிழமைகளில் ஆபிஸ் அரை நாள். . சீனியர் பார்டனரின் வீட்டில் அனைவரும் எங்கோ வெளியூர் சென்றிருந்தனர். இவர் வீட்டிற்கு போவதற்கு முன் டாய்லெட் சென்றார். யாரோ ஒரு பிடிக்காத அப்ரெண்டிஸ் மாணவன் டாய்லெட்டின் வெளிப்புறம் தாழ்பாளைப் போட்டு விட்டு சென்று விட்டான். மூன்று மணி நேரம் போராடி, யாரும் வராமல் கடைசியில் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார். இது நாங்கள் சீஏ சேருவதற்கு 10 வருடங்களுக்கு முன்னால் நடந்தது. ஆயினும் சீனியர்கள் தெரிந்து கொண்டு, ஜூனியர்களுக்கு தொடர்ந்து தெரிவித்த வந்த காரணத்தால், இந்த கதை முதல் வருடம் சேரும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

வக்கீல் மட்டும் சீஏ ஆபிஸ்களில் சுவரின் இருபுறமும் கண்ணாடி ஷோகேசுக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நல்ல லெதர் பைண்ட் செய்யப்பட்ட சட்ட மற்றும் கோர்ட் கேஸ் டைஜெஸ்ட்கள் நம்மை அறிவில்லாத ஜடங்களாக ஆக்கி, நம்மை மிரள வைக்கும். ஆனாலும் இவர்கள் அதில் ஒரு சதவிகிதத்தைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. நம்மை பயமுறுத்தி அவர்கள் மெத்தப் படித்தவர்கள் என்று நாம் எண்ணுவதற்காகவே இவையெல்லாம் இருக்கும்,

நான் சீஏ படிக்கும்.போது அனந்தராமன் மீட்டிங் ரூமில் இருந்தார். அவருக்கு உதவியாக ஆர்டிகள்ஷிப் செய்யும் அணில் குமார் ரெட்டி இருந்தான். இவர் அவனிடம் “இராமையா” என்றார். இவன் வெளியே வந்து எட்டிப் பார்த்த ஐந்து நிமிடம் கழித்து உள்ளே சென்று “ அப்டி எவுறு லேது சார் இக்கட” என்றான்.

ராமையா என்பவர் கம்பெனி லாவில் அத்தாரிட்டி. அவர் எழுதிய உரை மற்றும் மேற்கோள் காட்டப்படும் கேஸ் லாக்கள் அனைத்து ஆடிட்டர்கள், வக்கில்கள் மற்றும் கம்பெனி செக்ரடரிகளாலும் அடிக்கடி ரெப்பரென்ஸுக்காக பார்க்கப்படும் புத்தகங்களில் ஒன்று. அனந்தராமன் கேட்டது ராமையா எழுதிய புத்தகத்தை. இவன் உள்ளே சென்று இந்த மாதிரி சொன்னவுடன் சிரிப்பை அடக்க முடையாமல் அனந்தராமன் வெளியே வந்து எல்லோரிடம் சொல்லி சொல்லி சிரித்தார். அணில் குமார் ரெட்டியின் திருமணத்திற்கு என்ன பரிசளிப்பது என்ற கேள்வி எழுந்த  போது ஒருமித்த சாய்ஸ் ராமையா எழுதிய புத்தகம்தான். 10 வருடம் கழித்து அந்த கம்பெனியிலிருந்து வெளிவந்தவர்களும் இவ்விரண்டு சம்பவங்களும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருப்பதைப் பார்த்திருக்கின்றேன்.

ஓஷோ ரஜ்னீஷ், வெளியுலகை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்ததை செய்தவர். அதே போல் எதைப் பற்றியும் கவலைப் படாமல், பலரையும் எதிர்மறையாக விமர்சித்தவர். முதலில் அவர் அதுவரையிலான கட்டப்பட்ட எல்லா பிம்பங்களையும் உடைத்தவர். ஒஷோவைப் போன்றவர்கள் ஒரு கூட்டமாகவே பழந்தமிழகத்தில் இருந்திருக்கின்றனர். எந்த விதமாதான அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல்  அவர்களை மன்னனும் பாதுகாக்கின்றான் என்பது ஆச்சரியத்தியளிக்கின்றது.

சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரியிறுத்த காதையில்
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து
என்கின்ற வரி இதைத்தான் நமக்கு உணர்த்துகின்து. வரி – என்பது இங்கு காமத்தைக் குறிக்கும். அதைக் கற்றுக் கொள்வதற்காக தம்முடைய வேத நூல் மார்கத்திலிருந்து முறை தவறிய அந்தணர்கள் வாழ்ந்த ஊரையடைந்தனர் என்றால் அரசன் பாதுகாக்காமல் இவர்கள் இவ்வாறிருந்திருக்க முடியுமா?. இவர்கள் இப்படி என்றால் இன்னொரு அந்தணர் ஒரு பறையர் குல மகளைத் திருமணம் செய்து கொண்டதற்காக  தன்னைத் தானே ஜாதிபிரஷ்டம் செய்து கொண்டார்.

விக்ரமாதித்தனுக்கு இராமாயணத்தில்  மிக முக்கியமான வரி எது என்ற சந்தேகத்தை வரருசி எனும் அரசவை புலவரும் அந்தணருமான வரருசியிடம் வினவினான். வரருசிக்கு தெரியவில்லை. ராஜா 41 நாட்கள் கெடு விதிக்கிறார். அதற்குள் பதில் சொல்லாவிட்டால் வரருசி உயிரை இழக்க நேரிடும். அறிஞர்களைக் கேட்டும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நாற்பாதவது நாள் இரவில் ஒரு ஆலமரத்தின் அடியில் கவலையுடன் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது, இரண்டு ஆவிகள் காலமேனி பறவைகளின் உருவில் அம்மரத்தின் மீது வந்து அமர்ந்து பேசத் தொடங்கின. அவை ராமாயணத்தைப் பற்றிப் பேசி, அதில் மிக முக்கியமான வரியாக, ராமனுடன் காட்டுக்குப் புறப்படும் லக்ஷ்மணனுக்கு சுமத்திரை கூறும் அறிவுரையாக வரும் “ராமனை உன் தந்தையாக நினைத்துக் கொள். ஜனகன் மகள் சீதையை நானாக நினைத்துக் கொள். காட்டை அயோத்தியாக நினைத்துக் கொள். பயணம் சுகமாகிவிடும்” என்ற ஸ்லோகத்தைக் கூறி அதில் “ ஜனகன் மகள் சீதையை (நானாக) தாயாக நினை” (மாம் விதி ஜனகாத்மஜம்) என்னும் வரி மிக முக்கியமானது என்று கூறின. கூடவே வரருசி இப்பொழுது பிறந்திருக்கிற ஒரு பறையர்குலப் பெண்ணை மணக்க வேண்டும் என்பதும் விதி என்றும் பேசிக்கொண்டன.

அடுத்த நாள் விக்ரமாதித்தனிடம் ராமயணத்தின் முக்கிய வரிகளை கூறி உயிரைக் காப்பாற்றி கொண்ட வரருசி, தனக்கு முன்கூட்டியே தெரிந்த விதியை மாற்ற எண்ணி, நேற்று பிறந்த பறையர் குலப் பெண்ணால் அரசனுக்கு ஆபத்து என்று கூறினான். அரசன் ஆணைப்படி வீரர்கள் பிறந்த பெண் குழந்தைகளைக் கொன்றனர். ஆயினும் ஒரு குழு அரசனது ஆணைப்படி கொல்லாமல் ஒரு பெண் குழந்தையை தெப்பத்தில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். பல வருடங்கள் கழிந்த பிறகு, வரருசி பிராயாணத்தில் ஒரு அந்தணர் வீட்டில் உணவு உண்ண சம்மதிக்கிறார். அவர் விதித்த நுட்பமான சங்கேத மொழியில் அமைந்த விதிகளை புரிந்து கொண்டு சமையல் அறையிலிருந்து பதிலளிக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண் பராத புழை (நிளா) ஆற்றின் கரையில் உள்ள கொடுமுண்டா கிராமத்தின்  நரிப்பட்டாமனியைச் சேர்ந்த பிராமண குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்ட பறைக்குலத்தில் பிறந்த அதே பெண்தான். வரருசி தன்னைத் தானே ஜாதிப்ரஷ்டம் செய்து கொண்டு அடர்ந்த காடுகளின் வழியிலே யாத்திரையைத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை மனைவி பிரசவிக்கும் போதும் “குழந்தைக்கு வாய் இருக்கிறதா?” என்று கேட்கிறார். மனைவி இருக்கிறது என்று சொன்னவுடன் “வாயைக் குடுத்த இறைவன் இதற்கு உணவையும் கொடுப்பான். குழந்தையை இங்கேயே விட்டுவிடு” என்று சொல்லி விடுகிறார். மனைவி பன்னிரண்டாவது குழந்தை பிறந்தவுடன் வாய் இல்லை என்று சொல்லிவிடுகிறாள்; சரி குழந்தையை எடுத்து கொள் என்கின்றார். பாலூட்ட எண்ணி குழந்தையை பார்த்தபோது குழந்தைக்கு உண்மையிலேயே வாயில்லை. தன் தவறால் குழந்தைக்கு நேர்ந்ததை என்ணி வருந்தினாள். வரருசி அந்தக் குழந்தையை அந்த குன்றின் மேலேயே தெய்வமாகப் பிரதிஷ்டை செய்கிறார். அது குன்றில் இருக்கும் வாயில்லா தெய்வம்( வாயில்லா குந்நில் அப்பன்) என்று அழைக்கப்படுகின்றது. அந்த கோவில் கடம்பாழிபுரம் என்னும் ஊரில் இன்றும் உள்ளது.

வரருசிக்கும் பரையர்குல பெண்ணுக்கும் பிறந்த பதினொரு குழந்தைகளும் பின்னாளில் வளர்ந்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கின்றனர். இவர்கள் பல்வேறு ஜாதியினரால் வளர்க்கப்பட்டனர். பிராமணர், பறையர், வண்ணார், இளையது, உயர்குல நாயர், வைஸ்யன், படை நாயர், வள்ளுவர் குலம், இஸ்லாமியர், பாணார் என்று இவர்களால் வளர்க்கப்பட்டனர் என்று கதை கூறப்படுகின்றது.

இராமயணக் கதையில் மிக முக்கியமான வரி என்று அதுவும் சம்ஸ்கிருதத்தில் கூறப்பட்டிருப்பதும் சரியா? வால்மீகியில் அந்த மாதிரி
இருந்ததா?

வசிட்டன் மண்டபத்தையடைந்து அரசர்களிடம் ”கைகேயி தசரனிடம் வாங்கிய கொடிய இரண்டு வரங்களினால் ராமன் காட்டிற்கு போகின்றான்,  பரதன் ஆளப்போகின்றான்.என்றான். இச்செய்தி அஃறிணை விலங்குகளும் அழுததாம் என்றால் நகரமாந்தர்கள் நிலையை சொல்ல முடியுமா?

ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத  கால் வயப் போர்
மாவும் அழுத; - அம் மன்னவனை மானவே.  

ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால் அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார்.

தள்ளூறு வேறு இல்லை; தன் மகற்குப் பார் கொள்வான்,
எள்ளூறு தீக் கருமம் நேர்ந்தாள் இவள்என்னா,
கள் ஊறு செவ் வாய்க் கணிகையரும், ‘கைகேசி,
உள் ஊறு காதல் இலள்போல்என்று, உள் அழிந்தார்.

அந்நகரக் கணிகையர் தம்மைப்போலவே கைகேயியும் தயரதனாகிய
நாயகன்பால் அன்பின்றி மண்ணாசையாகிய பொருட்பற்றினால் இத்தீய
செயலைச் செய்திருக்கிறாள் என்றனர் – கணவன் இறப்பைப் பொருட்
படுத்தாது தன் மகனுக்கு அரசு பெறுவதில் குறியாய் இருத்தலின்
அன்பினால் முயங்காது பொருளாசையால் முயங்கும் கணிகையார் நிலை
கைகேயிமாட்டு உள்ளதாம்.

பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம்
முற்று உடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி,
உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்.
புற்று உடைய காடு எல்லாம் நாடாகிப் போம்என்பார்.

பெற்றுடைய மண்’, ‘பிறந்துடைய மண்என்பது அழகிய வாசகம்.
மக்கள் சென்று உறையக்காடு நாடாகும் என்பதால், இராமனின்றிக் கைகேயி
பெற்றுடைய மண்ணை ஆளும் பொழுது மக்கள் இல்லாத நாடு காடாகிவிடும்
என்றாராம். இராமன் சென்ற காடும் நாடாம், கைகேயி ஆளும் நாடும்
காடாகும். ஆதலின் இராமனுக்குக் கைகேயி அளித்த காட்டை நாம்
அவளுக்கு அவள் இருக்கிற நகரத்திலேயே உண்டாக்கிவிடுவோம் என்பதும் நகரமாந்தர் குறிப்பாகக் கொண்டு நயம் காணலாம்.

என்னே, நிருபன் இயற்கை இருந்தவா!
தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை
முன்ன கொடுத்து, முறை திறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்?’ என்பார்.

நகர மாந்தர் அவல மனநிலையினும் இராமன்பால் கொண்ட அன்பின் மனநிலையினும் எழுந்ததாயினும் இஃது ஓர் அரிய வாதம். வரம் கொடுத்து மறுத்தால் சத்தியம் தவறுமாயின், அவையில் சொல்லிய வார்த்தையை அந்தப்புரத்தில் மாற்றினால் அச்சத்தியம் தவறாதோ என்பது மக்கள் வாதம். மேம்போக்காகத் தயரதனை மெய் பிறழ்ந்தவனே என்று காட்டும் இவ்வாதம்; ஆயினும் கூர்ந்து நோக்குவார் உண்மை உணர்வார். கைகேயிக்கு வரம் அளிக்கப் பெற்றது மிகவும் முன்பாகும்; அரசவையில் இராமனுக்கு அரசு உரிமை அளிக்கப்பெறுதற்கு மிக நெடுங்காலம் முன்னரே கைகேயிக்கு அளித்த வரம்தான் இப்பொழுது மீண்டும் எடுத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. வரம் எதுஎன்ற விளக்கம் இப்பொழுது வந்ததே அன்றி, வரம் முன்பே  உள்ளது. ஆதலின் அஃது எதுவாயினும் அதனை அளிப்பதுதான் தசரதனது, வாய்மையாம். முதற்சொல்லிய சொல்லிற் பிறழாமையே வாய்மை காத்தல் ஆதலின், அதனைக் காத்தற்குப் பின்னர்க் கூறிய அவையிடை நிகழ்ந்த உரையை மாற்றுதல் வாய்மை தவறுதலாகாதாம் என்பதால் வாய்மை காக்கவே வரம் கொடுக்கிறான் தசரதன் - அவையினில் கூறிய சொல் தவறாமைப் பொருட்டுத் தன் உயிரை இழக்கிறான்; இதனால் பின்னால் வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்என்று (4018) வாலியால் தயரதன் போற்றப்பட்டதாகக் கம்பர்அமைத்தார் எனலாம்.

இலக்குவனும் நகர மாந்தர்கள் அறிந்த போது தான் இவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டான். உடனே கோபம் தலைக்கேற போர்கோம் பூண்டு கையில் பூட்டிய வில்லுடன் நாற்சந்தியிலியே திரிந்தான்.

சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
நங்கைக்கு அறிவின் திறம்! நன்று, இது! நன்று, இது!என்னா,
கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான்.

பொருத்தம் அற்ற செயல் செய்தாள் கைகேயி என்பதை இவ்வாறு
கூறினான். சிறுகுட்டனை -குட்டனுக்குநன்று இதுஇகழ்ச்சிக்குறிப்பு – கங்கை வரை உள்ள நாடு  கோசலம் ஆதலின் இலக்குவன் கங்கைக்கிறைவன்எனப்பட்டான் இனி சரயு நதிக்குஇராமகங்கைஎனும் பெயருண்மையின் அதுபற்றிக் கங்கைக்கிறைவன்” எனப்ப்ட்டான்.

விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்
எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,
மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,
பெண் நாட்டம் ஒட்டேன். இனிப் பேர் உலகத்துள்என்னா.
இலக்குவன் யார் கூட்டாக வந்தாலும் கைகேயின் எண்ணம் நிறைவேற விடமாட்டேன் என்று நாணின் ஓசை வேறு எழுப்ப்பிக் கொண்டிருந்தான். சுமத்திரையின் மாளிகையில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த இராமன் காதில் நாணின் ஓசை விழ, இலக்குவனிடம் வந்தான்.

மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற,
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த தடக் கையானை,
என் அத்த! என், நீ, இமையோரை முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது?’ என்றான்..

இவ்வாறு எல்லாம் நிகழத் தேவர்களே மூல காரணம். அவர்களை வெறுக்கா நீ இப்பொழுது வில் ஏந்த என்ன காரணம்என்று வினவியதாகக் கொள்க. இறையேனும் முனிந்திலாதாய்என்ற பாடம் இவ்விடத்தில் சிறப்புடையது. சிறிதளவேனும் எப்பொழுதும் கோபம் வராத சாந்தமூர்த்தியாக விளங்கும் நீ இன்று சினம் மூண்டு வில் ஏந்தக் காரணம் என்ன என்று கேட்டதாக உரைக்கப் பொருள் சிறத்தல் காண்க.

மெய்யைச் சிதைவித்து, நின்மேல் முறை நீத்த நெஞ்சம்
மையின் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதி, தடை செய்குநர் தேவரேனும்,
துய்யைச் சுடு வெங் கனலின் சுடுவான் துணிந்தேன்.

நின் மேல் முறை’ - ‘உன் மேல் உள்ள மகன் என்கின்ற அன்பு முறைமையை என்றும் பொருள் உரைக்கலாம் - இது காறும் கைகேயியின் அன்பு மகன் என இராமன் வளர்ந்ததை அவனும் அறிவான். ஆதலின் இமையோரை முனிந்திலாதாய் இன்று முனிவானேன் என்ற இராமன் வினாவிற்கு; தடை செய்குநர் தேவரேனும்என்பது இலக்குவன் உரைத்த பதில் எனக்கொள்ளின்; ‘இமையோரைஎன்னும் பாடம் வன்மை பெற இதுவும் ஒரு சான்றாகும்.

நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,
புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ -
என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, “இல்லைஎன்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?’ என்றான்.
இராமனை வனம் அனுப்பித் தயரதன் உயிர் வாழ்வதாக நினைத்தவன்
ஆதலின் நானும்அவ்வாறானவன் அல்லன் என்று இங்ஙனம் கூறினான்
இலக்குவன்.

இராமன் இலக்குவனிடம்
பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசுஎன்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி கொள்கஎனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ? -
மின் குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்!
ஆராயாமல் அரசு ஆள ஒப்புக்கொண்டது என் தவறுதானே அன்றி,
அளி்த்தவன்மேல் தவறு இல்லை என்றான் இராமன். அரசு பலர்
ஆசைப்படக் கூடிய ஒன்று. இதனாற் பின்னர்ப் பல தீமைகள் விளையும்
என்று நான் கருதாமல் ஒப்புக்கொண்டமையால் என்னைத் தான் தண்டிக்க
வேண்டுமே அன்றி, எந்தையைக் குறைகூறல் சரியன்று என்று
சமத்காரமாகக் கூறித் தம்பியை அடக்கினான் இராமன் என்க.

நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்.
ஊழ்வினை செலுத்தத் தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரே அன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர் வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல் வினைவலியால் பெற்றோர் அன்பின்மை உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவே என்றானாம். மூவரையும் தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்என்றான் இராமன்.

உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டிஎன்றான்.
விதிக்கும் ஒரு விதி செய்வேன் என்கின்றான் இளையவன். இராமனோ எல்லாம் விதிப்பயன். இதில் யாரை குறை சொல்லி என்ன பயன் என்கின்றான்.  ராஜ்ஜியம் இல்லை என்ற போதும் எந்த சலனமுமில்லாமல் ஏற்றுக் கொள்ள முடிகின்றது ஏனெனில் இது அவன் தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் இலக்குவனுக்கு இது பொது பிரச்சனை. அதனால் கோபம் மூண்டு சண்டைக்குத் தயாராகிவிடுகின்றான்.

நதியின் பிழையா இல்லை மணல் அள்ளும் கொல்லைகாரர்களின் சதியா என்று தெரியவில்லை தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆறுகளிலும் கூடிய விரைவில் நறும்புனல் கட்டாயமிருக்காது. கேரளா மற்றும் கர்நாடகாவில் எல்லா ஆற்றிலும் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டிருக்க, தமிழகத்தில் மட்டும் மணல் கொள்ளையை அரசே நடத்திக் கொண்டிருக்கின்றது. எப்படி சாயப்பட்டரையின் கழிவுகளும் தொழிற்சாலைகளின் கழிவுகளும் சாக்கடைகளும் நேரிடையாக ஆற்றில் விடப்படலாம்? பண்டருட்டியிலிடுந்து சிதம்பரம் போகும் வழியில் ஆற்றில் எடுத்த மணலை குவியல் குவியலாக எகிப்து பிரமீடுகள் போல அடுக்கி வைத்திருப்பார்கள். பார்த்தாலே எவ்வளவு சீக்கிரம் இந்த ஆற்றில் தண்ணிர் ஓடுவது நின்று போகும் என்று பகீரென்று இருக்கும். ஆற்று படுகை முழுவதும் 15 அடி 20 அடி வரையிலான பள்ளங்கள்.  ஆற்று படுகை நாசாவின் செவ்வாய்கிரக போட்டோ போலவே செம்மண்ணின் நிறத்தில் பெரும் பள்ளங்களுடன் இருக்கின்றது.

ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு முறை ஆடிட்டிற்கு சென்றபோது உணவு சாப்பிடுவதற்காக  இரவு 8.30 மணிக்கு உட்காரும் போது சங்கு ஊதியது. எதற்காக சங்கு ஊதுகிறார்கள் என்று கேட்டதற்கு பள்ளிப்பாளையத்தில் இருக்கும் ஷேஷசாயி பேப்பர் மில்லில் கழிவுகளை பாவாணி ஆற்றில் விடும் நேரம் இது என்றார்கள்.  10 நிமிடத்திற்கெல்லாம் காற்றில், நம்மீதே யாரோ மலம் பெய்ததைப் போன்ற வாசம் பரவி சுவாசிக்க முடியாமல் செய்தது. 12 கீமீ தள்ளி இருக்கும் ஊரிலேயே இவ்வளவு வீச்சம் என்றால், ஆற்றின் நீரில் என்ன என்ன விளைவுகளை அது ஏற்படுத்தும்? ஏன் எந்த பொது பிரச்சினைக்காக உள்ளுர்வாசிகள் போரிட முன் வருவதில்லை.? எல்லாவற்றிகும் நாம் சுப்ரீம் கோர்ட்டை நாடவேண்டிய அவசியம் என்ன? “சிறுதுளி” எனும் அமைப்பால் நீரின்றியிருந்த நொய்யல் ஆறு நறும் புனல் பெற முடியும் என்றால் கூவத்தில் பச்சையப்ப முதலியார் குளித்தது போன்ற காலமும் வாராதா? வரும்? விதியை மாற்ற.மம் வேண்டும்,

”நீ வேதம் அறிந்தவன்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று நீ அறியவில்லையா?” என்ற இராமனின் கேள்விக்கு நீதான் எனக்கு தாய் தந்தையர். தசரதனோ இல்லை கைகேயியோ இல்லை என்று கூறி தன் பிடிவாதத்திலேயேயிருக்க
நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஊற்றம்?’ என்றான் -
தேன்சொல் கடந்தான், வடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான்.

என்னைத் தந்தையும் தாயும் என்று நீ கருதுவது உண்மையாயின் என் சொல்லை மீறுவது உனக்கும் தகாதுஎன்று கூறுவதாகக் கருத்துக் கொள்ளல் வேண்டும்.

இலக்குவன் சீற்றம் தனிந்து இராமனுடன் சுமத்திரையின் மாளிகையடைந்தான்.
மகனிருவரையும் கண்ட சுமத்திரை தன் துன்பம் தீருவதற்கு வழியில்லாமல் சோர்ந்தாள். அவளை இராமன் தேற்றும் விதமாக ”தந்தையை சத்தியம் தவறியவனா செய்ய முடியாத நிலையில் உள்ளேன். சிறுது நேரம் காட்டை சுற்றிப் பார்த்துவிட்டு சீக்கிரம் திரும்பிவிடுவேன் என்று 14 வருடங்களை சிறிது நேரம் என்று கூறினான்.

தாய், ஆற்றுகிலாள்தனை, ஆற்றுகின்றார்கள் தம்பால்,
தீ ஆற்றுகிலார், தனிச் சிந்தையினின் செற்ற
நோய் ஆற்றுகில்லார் உயிர் போல நுடங்கு இடையார்
மாயாப் பழியாள் தர, வற்கலை ஏந்தி வந்தார்.
ஏவர் மகளிர் ஆயினும் அவரும் இராமன் பிரிவுத் துயரத்தால் துடிக்கின்றனர். அவர்கள்கையில் மரவுரி கொடுத்து அனுப்பினாள்  கைகேயி என்பதாம். முன்பும்கைகேசியும் கொடியகூனியும் அல்லாமல் கொடியார் பிறர் உளரோஎன்ற (1704.) படியால் இவ்விருவர் தவிரமற்றவர்  அனைவரும் துயரால் துடிக்கின்றவர்களே என்பது போந்தது.மாயாப் பழியாள்கைகேயி பின்பும் பரதன்மாயா வன்பழி தந்தீ்ர்’ (2177.) என்பது காண்க.. இலக்குவன் அவ்வுடைகளை வாங்கி ”இராஜியத்தை சூழ்ச்சியால் அபகரித்த கைகேயி கொடுத்து அனுப்பிய மரவுரியை இராமனும் அணிவான்.. கையில் வில்லிருந்தும் ஒன்றும் செய்ய முடியாதவானக நான் இருந்து என்ன பயன்,. என் தாய் என்னையும் இவனுடன் போ என்று சொன்னாலாவது மனம் கொஞ்சம் அமைதியடையும்” என்று மனதில் எண்ணி தாயாரின் காலில் ஆடைகளை வைத்து வணங்கினான்.

சுமத்திரை ஆகாதது அன்றால் உனக்கு - அவ் மனம் இவ் அயோத்தி; மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை - என்றே ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்என்றாள்.   
இராமன் இருக்கும் இடம் அயோத்திஎன்னும் உலக வழக்கையே சுமித்திரை மகனுக்குக் கூறினாள். இராமனையும் சீதையையும் தந்தை தாயாகவும், வனத்தை அயோத்தியாகவும் கருதி இங்குள்ளது போலவே வனத்தில் இரு என்றாளாம்.
இரான் இன்னும் சீதையைப் பார்க்கவேயில்லை. சீதைக்கு விஷம் இன்னும் தெரியவே தெரியாது. ஆயினும் சுமத்திரைக்கு கட்டாயம் தெரிந்தி.ருக்கின்றது சீதை இராமன் இல்லாமல் அயோத்தியில் வசிக்க மாட்டாள் என்பது. அதே போல் இலக்குவனும் இராமன் இல்லாமல் இருக்க மாட்டான் என்பதையறிந்தே அவள் இலக்குவனைப் போக சொல்லுகின்றாள்.

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடிஎன்றனள், வார் விழி சோர நின்றாள்.
சுமித்திரை தன் மகனுக்குத் தந்த இவ்வறிவுரை நினைக்க நினைக்கப் பெருமிதம் தருவதாகும். இராமனுக்கு ஏதேனும் ஆபத்து வரின் அதனைத் தடுக்க உன் உயிரை விடவும்  தயங்காதே என்றாள், ‘முன்னம் முடிஎன்ற சொல்லால். இந் நெடுங் சிலைவலானுக்கு ஏவல் செய அடியன்யானேஎன்று (3778.) அனுமனிடம் இலக்குவன் பின்னர் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதும் காண்க.

இராமன் தன்னைப் போலவே மரவுறி அணியும் இலக்குவனிடம் தாயும் தந்தையும் எனைபிரிந்து துயருறும் வேளையில் நீ இங்கு இருந்தது அவர்கள் துயரை தீர்ப்பாய் என்றவுடன் இலக்குவன் நான் உனக்கு செய்த பிழைதான் என்ன இராமனிடம் கூறி
நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்.
நாள் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர்எனின் உளம்? அருளுவாய்!என்றான்
தண்ணீர் உள்ள வரை மீனும் நீலமும் இருக்கும். அதுபோல, இராமன் ள்ளதுணையும் இலக்குவனும் சீதையும் உளர் என்பதாம். மீன் நீர் உள்ள அளவும் இருந்து நீர்வற்றி இல்லாமற் போனால் இறந்துபட்டொழியும். அது இலக்குவனுக்கு உவமை. நீலம் நீர் உள்ள துணையும் வாழும் நீர்வற்றி இல்லாமற் போனால் காய்ந்து கிழங்காகக் கிடக்கும்; மீண்டும் நீர்வந்துழி முளைவிட்டுத் தளிர்த்து மேல் வந்து பூக்கும். அது சீதைக்கு உவமை. பின்னர்ச் சிலகாலம் இராமனைப் பிரித்து அசோக வனத்தில் இருந்து
வற்றிக் கிடந்து மீண்டும்இராமனைக் கண்டு கூடித் தளிர்த்தாள். ஆதலின்,
சிறிதளவு கூடத் தன்னால் பிரிந்து வாழ இயலாது என்பான் இலக்குவன்.
தன்னை மீனாகச் சொல்லிக்கொண்டான் என்பது நயம். பூமி இருந்தால்
எல்லாப் பொருளும் இருக்கும். அது போல இராமன் இருந்தால்
அனைவரும் வாழ்வர். அருளுவாய்என்று இராமனையே பதில் கூறும்படி வைத்த இலக்குவனது சாதுரியம் ஈண்டு நுகரத்தக்கது. இராமனும் இலக்குவனை வர சம்மதித்தான்.

வசிட்டன் அச்சமயம் அங்கு வந்து “ அரசன் உன்னைப் பார்த்து கட்டளையை சொல்லவில்லை. நீ காட்டிற்கு போக வேண்டிய அவசியமில்லை” என்று கூற இராமன்என் தந்தை இரண்டு வரங்கள் கொடுத்தார். என்னை ஏவியது தாய், சகல சாத்திரங்களும் அறிந்தவர் நீங்கள், இதை எப்படி சொல்லலாம் என்று கூறி சீதையைப் பார்த்து விடை பெறுவதற்கு போனான். 

கம்ப ராமாயணத்தில் மட்டுமே இராமன் சுமத்திரை வீட்டிற்கு தனியாவும் பிறகு இலக்குவனுடனும் போய் விடை பெற்றுக் கொண்டு போனதாகவும் உள்ளது. வால்மீகீயில் இது இல்லை என்கின்றார் வை மு கோ. வரருசி வால்மீகியின் இராமயத்தை கட்டாம் மேற்கோள் காட்ட முடியாது. வரருசியின் கதை படிப்பதற்கு சுவையான கதை மட்டுமே. அதன் நோக்கம் இராமயத்தையும் மீறி எல்லோருக்கும் ஒரே முலம் தான் ஜாதி தான் என்பதை நிலைநிறுத்துவது. ஜாதி வித்தியாசம் பார்ப்பது தவறு என்று சொல்தற்காக மட்டுமே உருவாகியிருக்க வேண்டும்.


Monday, February 4, 2013

வரங்கள்



எங்கள் வீட்டில் பெரிய அண்ணன் மட்டும் திருச்சி நேஷனல் ஸ்கூல் மற்றும் வேலூர் ஊரிஸ் ஸ்கூலிலும் ஆங்கில மீடியத்தில் படித்தான். மற்றவர்கள் எல்லோரும் தமிழ் மீடியம்தான். வேலூரிலிருந்து அப்பாவிற்கு திருவண்ணாமலை மாற்றல் ஆகியது. அப்போது அண்ணா 10 வது படித்துக் கொண்டிருந்தான். திருவண்ணாமலையில் டேனீஷ் மிஷன் ஸ்கூலில் 9 வது வரையில் தான் ஆங்கில மீடியம் இருந்தது. இவனுக்கு தமிழ் மீடியத்தில் படித்து பரிட்சை எழுத முடியாது என்பதால், சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் காலணியிலிருந்து என் பெரிய மாமாவின் வீட்டில் தங்கி, புரசைவாக்கம் MCTM ஸ்கூலில் 10 மற்றும் 11 வது படித்து விட்டு அரும்பாக்கத்திலிருக்கும் DG வைஷ்வா கல்லூரியில் பீயூஸி படித்தான். இவன் ஸ்கூலிலிருந்தே தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று தவறாமல் முதல் பரிசு வாங்குவான். எப்போதுமே புத்தங்கங்கள்தான் பரிசு பொருட்கள். பாரதியாரின் கவிதைகள் மூன்று புத்தகங்கள் வீட்டில் இருந்தது. பாரதியின் அறிமுகம் எனக்கு அப்போது தான் ஆரம்பமாகியது.


திருவண்ணாமலையில் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் போது காலாண்டுப் பரிட்சைக்கு முன் அப்பாவிடம் “ இங்கிலீஷ் மீடியத்துலே படிக்கப் போறேன். தமிழ் மீடியத்துலே படிச்சா பீயூஸிலே பயங்கர பிராப்ம் வருதாம்” என்றேன். “உன்னால் முடியுமா”? பெயில் ஆக மாட்டியே?” இது அப்பாவின் கவலை. இப்போது போலில்லாமல் அன்று எல்லா வகுப்புகளுக்கும் ஆண்டுத் தேர்வு உண்டு, பெயிலும் உண்டு. நான் ”கவலையே பட வேணாம். நான் கட்டாயம் பாஸ் பண்ணுவேன்” என்றேன். இரண்டு நாள் கழித்து அப்பா “போய் ஐசக்கைப் பாரு. நான் அவர் கிட்டே பேசிட்டேன்.” ஐசக் என்பது பள்ளியின் தலைமையாசிரியர். பொதுவாக அவரைப் பார்ப்பது கடினம். பிரேயரின் போதுதான் அவரைப் பார்க்க முடியும். 10 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு சயின்ஸ் எடுப்பார் என்று கேள்வி. நான் போய் வெளியே உட்கார்ந்திருக்கும் பியூனிடம் சொல்லி கால் மணி கழித்து அவரைப் பார்த்தேன். அவரிடம் நான் விஷயத்தை சொன்னதும் “உங்க அப்பா சொன்னாப்லே. இந்தா சீட்டு. இதை கொண்டு போய் 8C லே வாத்தியார் கிட்டக் கொண்டு போய் கொடு. அப்புறமா நாளைக்கு 8 ரூ வாங்கி வந்து ஆபீஸ்ல குடு” என்றார். எல்லாவற்றிற்க்கும் தலையாட்டிவிட்டு 8 C வகுப்பிற்கு சென்றேன், அப்போது கிளெமெண்ட் என்பவர் சயின்ஸ் வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். மூன்றாவது பெஞ்சில் உட்காரச் சொன்னார். எனக்கு ஒருபுறம் தாஸ் இன்னொரு புறம் நடேச சாஸ்திரி வீட்டு பையன் ரவிசங்கர். அதே வகுப்பில் தான் ரமேஷ் பாபுவும், ரைஸ்மில் ரெட்டியார் பையன் அருணாச்சலமும் படித்தார்கள். ரமேஷ் பாபுவுடன் இன்றைக்கும் தொடர்பிருக்கின்றது.  தாஸை நாங்கள் அண்ணா நகரில் இருக்கும் போது பார்த்தேன். எஸ் எஸ் எல் சீயுடன் படிப்பை நிறுத்திய அவன் பல்லவனில் கண்டக்டராக இருந்தான். நான் பயணிக்கும் 27 C  ரூட்டிலேயே வேறு இருந்தான். ஒரே ஒரு முறை லேடிஸ் ஸ்பெஷல் பஸ்ஸிலும் கூட என்னை  ஏற்றி கொண்டுச் சென்றிருக்கின்றான். அண்ணா நகரை விட்டபின் தொடர்பெல்லாம் போய்விட்டது.

ஒன்பதாவது காலாண்டு பரிட்சைக்குப் பிறகு அப்பாவிற்குக் கடலூர் மாற்றலாகியது. கடலூரில் St ஜோஸப் பள்ளியில் சேர்ந்தேன். என் தம்பியும் அதே ஸ்கூல். முதலில் வீடு மஞ்சகுப்பத்திலேயே இருந்ததால், மதியம் வீட்டிற்குப் போவோம் சாப்பிடுவதற்கு. ஒரு வருடம் கழித்து புதுப்பாளையம் மசூதி தெருவிற்கு மாற்றிக் கொண்டுச் சென்ற பிறகு மதியம் ”தாயி” இருவருக்குமாக சாப்பாடு காரியரில் எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பாள். ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு மரத்தை சுற்றி விளையாட ஆரம்பித்து விடுவோம். எனக்கு வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு செல்வதற்கு என் அண்ணன் வைத்திருந்த பழைய ஹெர்குலிஸ் சைக்கிள் கிடைத்தது. என் தம்பியையையும் வைத்து கொண்டு டபிள்ஸ் அடித்துக் கொண்டு போகவேண்டும். அவன் நல்ல குண்டன் வேறு. இது எல்லாம் ஒரு ஆறு மாதம் நீடித்தது. பத்தாவது வகுப்பில் அரையாண்டுத் தேர்வில் பொது கணிதம் மற்றும் அல்ஜீப்ராவில் பெயில் மார்க் எடுத்தவுடன் எனக்கு அப்பா டியூஷன் வைத்துக் கொள் என்றார்.  எங்கள் பள்ளியிலேயே கணித ஆசிரியர். ஜோசப் தன்மையாக நிதானமாக சொல்லித் தருவார். அவரிடமே காலை மாலை இரு வேளைகளிலும் டியூஷன். காலை 5 மணிக்கு ஆரம்பமாகும். 7.30 மனிக்கு முடியும். அதற்கு நான் காலை 4.30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சாயங்காலம், பள்ளியிலிருந்து நேராகவே அவர் வீட்டுக்கு சென்றுவிடுவேன். தினமும் 40 பைசாவிற்கு அவர் வீட்டருகே இருந்த சந்திரா ஒட்டலில் ஒரு ஸ்பெஷல் சாதா தோசை, நிறைய சாம்பார், சட்னி சாப்பிட்டு விட்டு டியூஷன் போவேன். அந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்தவர் சீதாராமய்யர். இவர் உதவி தலைமையாசிரியரும் கூட. இவர் என் மாமாக்களுக்கும் ஆசிரியராக இருந்திருக்கின்றார்.

பீயூசி சென்னையில் ஏம் ஜெயினில் படித்த போது மதிப்பெண்ணிற்காக சம்ஸ்கிருதம் எடுத்தேன். என் மண்டையில் ஏறாத விஷயமாகவே அது இருந்தது. “ராமஹ ராமௌ ராமான்னு” என்று ஒருமை, இருமை மற்றும் பன்மையைக் குறிக்கும் இலக்கணக் குறிப்பு என் தலைக்குள்  போகவேயில்லை. நள தமயந்தி மற்றும் காளிதாசரின் ரகுவம்சம் காண்டோ 4 பாட புத்தகங்கள். ஒரே ஒரு அதிர்ஷ்டம். ஆங்கிலத்தில் பதில் எழுதலாம். நளன் தமயந்தி ராம் என்பது போன்றவற்றை மட்டும் சமஸ்கிருதத்தில் எழுதி தப்பித்தேன். கணக்கு எடுத்தவர் பாலு. இவர் VP ஆகவும் இருந்தார். கெமிஸ்ட்ரி எடுத்தவர் டாக்டர். ரங்கசாமி. இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர். காரில் தான் காலேஜிற்கு வருவார்.

ஏனோ அவருக்கு என் பேரில் ஒரு இனம் தெரியாத வெறுப்பு. அவருடைய வகுப்பு எப்பொதும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது பீரியட் ஆக இருக்கும் அதுவும் வீட்டிலிருந்து ஒழுகும் தயிர் சாதத்தைக் கொண்டு போய் சாப்பிட்ட பிறகு, தன்னையறியாமல் சாமியாடும் போது வேண்டும் என்று என்னை மட்டும் கேள்விகேட்டு பதில் சொல்லாவிட்டால் வெளியேற்றிவிடுவார். அப்போது எனக்கு ஆங்கிலமும் அவ்வளவாக பேச வராது. ஆனால் டிசம்பர் மாதம் நடந்த மாடல் தேர்வில் கல்லூரியிலே நான் தான் முதலாவதாக வந்தேன் ஆங்கிலத்திலும், கெமிஸ்டிரியிலும்.  

 
பிஸ்ஸி விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில். ரயில்வே காலனியை கடந்து போகவேண்டும் இல்லை பாண்டி ரோடிலிருந்து போகவேண்டும். நாங்கள் இருந்த ரங்கநாதன் தெரிவிலிருந்து குறைந்தது மூன்று மைல் தூரம். கொஞ்சம் விட்டா கோலியனூரே வந்துவிடும். கெமிஸ்டிரி ப்ரொபஸர்கள் , ஜணாதனன், ராமநாதன் மற்றும் கண்ணையா. கண்ணையா இவர் திருநெல்வேலியை சார்ந்தவர். இவருடைய தம்பி செல்லதுரை என் வகுப்பில் படித்தான். அவன் அடிக்கடி சொல்லும் வார்த்தை  ”எலே! நிக்கி!” நிக்கி என்பதே அவன் பட்டப் பெயராயிற்று. பிஸிக்ஸ் ப்ரொபஸர் பழனிச்சாமி மற்றும் கல்யாணி. கல்யாணிதான் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பனைத் தேடி காட்டிற்குள் தூது சென்றவர். கணித ஆசிரியர்கள் தேவராஜன் மற்றும் குருமணி. குருமணி எங்கள் சித்தி குடியிருந்த வீட்டிலேயே ஒரு போர்ஷனில் குடியிருந்தார்.  சில வருடங்கள் கழித்து ராமநாதன், கண்ணையா மற்றும் பழனிச்சாமி எல்லோருமே சென்னை ஏசி டெக்கில் பிஎச்டி படித்தனர். என்னுடைய ஒன்னு விட்ட சித்தப்பா அங்கு கணிதப் பேராசியர். அவர் இவர்களிடம் பிரசாத்தை தெரியுமா என்றால், அனைவருமே நல்ல சர்டிபிகேட் கொடுத்தார்கள்.

இதே கல்லூரியில் தான் தெய்வசிகாமணி எனும் “ பொன்முடியும்” ப்ரோபஸராக, சைக்கிளில் வந்து செல்பவராக இருந்தார். தி மு க அமைச்சரவையில் மினிஸ்டராகவும் பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கும் கல்லூரிகளுக்கும் அதிபதியாகவும் இன்று இருக்கின்றார். கல்யாணி திண்டிவனத்தில் இருந்து சேவை செய்து கொண்டிருக்கின்றார். ராமநாதனின் மருமகனை இங்கு சந்தித்தேன். அவன் மூலம் அவர் ப்ரெஸிடன்ஸி கல்லூரியில் முதல்வராகி ஓய்வு பெற்றதை அறிந்தேன்.

தமிழ் ப்ரொபஸர் சிதம்பரம் செட்டியார். இவர் விழுப்புரம் நகராட்சி மேல்நிலை பள்ளிக்கு அருகில் வசித்து வந்தார். அவர் வீட்டுக்கு மிக அருகில் என் சித்தியின் வீடு, கீழ் அனுமார் கோவில் தெருவில் இருந்தது. இவர் அற்புதமாக பாடம் நடத்துவார், பாட திட்டத்தில் இல்லாதவற்றையும் சேர்த்தே சொல்லிக் கொடுப்பர். கம்பனிடம் அதீத ஈடுபாடு. அப்போது பாட திட்டத்தில் இருந்தது அனுமன் தூது மட்டும் தான். ஆனாலும் விலாவாரியாக மூன்று மாதம் முக்கியமான கம்பன் கவிதைகள் ஆராய்ந்து பாடத்தை நடத்துவார். லீவு நாட்களில் சித்தி வீட்டிற்கு செல்லும் போது அவருடைய வீட்டிற்கு போய் பாரதியையும் சிலம்பையும் சிறிது கற்றதுண்டு. ஆயினும் அதன் பெருமையோ அருமையோ அன்று புரியவில்லை.
21 வருடம் வரை தமிழ் படித்தும் ஒரே ஒரு தமிழ் வாத்தியாரின் பெயரை மட்டுமே என்னால் நினைவு கூறமுடிகின்றது. சின்ன வயதிலேயே மொழி இலக்கணம் நன்றாக புரியும்படி சொல்லிக் கொடுக்காத வாத்தியார்கள் அவர்கள் கடனே என்று சொல்லிக் கொடுத்தார்கள். நானும் கடனே என்றே கற்றுக் கொண்டேன். இருவருக்குமே இருக்கும் இந்த அலட்சியத்திற்கு முக்கியமான காரணமாக எனக்குப் படுவது தமிழ் மார்க்குகள் மேற்படிப்புக்கோ அல்லது பட்டப்படிப்பிலோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதில் பாஸ் மார்க் வங்கினால் போதும். அதுவும் 35 மார்க்குதான்.
 
எனக்கு பாரதியின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.  எளிமையான தமிழில் மிக ஆழமான கருத்துக்களையும் பாண்டித்யம் அறியா எனை போன்றோரும் கவிதா இன்பம் அறிய முடியும் என்று நிருபித்த அமரவார்த்தைகளின் கரூவூலம் அவன். அதுவும் அவன் கண்ணன் பாடல்களில் மனதை இழக்காமலிருக்க முடியாது. அதே போல் பாஞ்சாலி சபதமும் குயில் பாட்டும். எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது மயக்க அனுபவத்தைத் தருகின்ற மகுடியின் நாதம் அது.

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை என்பது போல் இங்கு குறைவான தமிழர்களேயிருப்பதால் என்னை போன்றோருக்கும் பாரதிவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு முறை இலக்கிய வட்டக் கூட்டதில் பாரதி விழா நடைபெற்றபோது அவன் இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களை விட குறைவானவர்கள் தான் வந்திருந்தனர். திரு. குருநாதன் மிக அருமையாக “தோழர் பாரதி” எனும் தலைப்பில் அன்று உரையாற்றினார்.

இலக்கியவட்டக் கூட்டதில் கவிதை எனும் தலைப்பிலேயே ஒரு முறை கூட்டம் நடைபெற்றது. அதில் அவரவர்கள் தாங்கள் இரசித்து, படித்து மகிழ்ந்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில் ராமநாதன் புதுக் கவிதையைப் பற்றி உரையாற்றினார். அதில் 70களில் ஆனந்தவிகடனில் வெளிவந்து முதல் பரிசையும் வென்ற அரங்கநாதனின் கவிதை “நள்ளிரவில் வாங்கினோம் சுதந்திரம்; இன்னும் விடியவேயில்லை” எனும் கவிதையை அவருடன் படித்த இன்னொரு மாணவனை ரொம்ப பாதித்தாகவும் அவனும் பதிலுக்கு “பட்ட பகலில் வாங்கியிருந்தால் மட்டும் என்ன சாதித்திருப்போம்? என்று எழுதி அதுவும் பரிசு பெற்றது என்று கூறி அப்துல் ரகுமான், மீரா மற்றும் விக்ரமாதித்யன் முதலியவர்களின் சில கவிதைகளையும் அறிமுகப் படித்தினார்.

பிறகு ரகுமானின் பால்வீதி எனும் கவிதைத் தொகுப்பை படித்தேன் எனக்கு பிடித்த சில கவிதைகளில் ”ஐந்தாண்டுக்கு கொருமுறை” என்ற தலைப்பின் கீழ்
வாக்கு மூலம்
 புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
      போலி நளன்களின் கூட்டம்
மையில் மாலையுடன்
      குருட்டு தமயந்தி.
நளன் தமயந்தி கதை நாம் கேள்விப்பட்டது தான். தமயந்தியை மணப்பதற்காக தேவர்கள் அனைவருமே நளன் போன்ற உருவத்திலேயே வந்தனர். ஆனால் இமையா வரம் உடையவர்களாதாலால் தமயந்தி சுலபமாக அவனைக் கண்டுபிடித்து மாலையிட்டாள்.

இதையே இன்றைய தேர்தல் களத்திற்கு ஒப்பிடும்போது அந்த தமயந்தி குருடாகவும் இருக்கின்றாள் என்பதை வாக்காளர்களுக்கும், போலி நளன்களாக வேட்பாளர்களும்,இருந்தால் என்பதை மிக அழகாகக் கூறும் கவிதையிது. மரபின் தொன்மத்தின் மேலேயிருந்து கவிதை எழும் போது அது அத்துணை வீர்யாமாகிவிடுகின்றது. பெர்னாட் ஷா சொன்னது போல் “நான் ஷேக்ஸ்பியரை விடப் பெரியவன்; ஏனெனில் நான் அவன் தோள்கள் மீது நின்று கொண்டு இவ்வுலகை பார்க்கின்றேன்” மரபின் வழியில் வந்த புதுக்கவிதைகளும் அவ்வாறே விளங்குகின்றன.

அதே தொகுப்பில் அப்துல் ரகுமான்
வரங்களே 
சாபங்களாகும் என்றால்
இங்கே தவங்கள்
எதற்காக?
இது இத்தொகுதியில் தேர்தலையும் ஓட்டு போடும் வரம் உள்ளதையும் அந்த வரங்கள் பிறகு சாபங்களாக மாறுவதையும் அதனால் தேர்தல் தேவைதானா? என்று கவி எழுப்பும் கேள்வி என்றாலும் இராமயண பின்புலத்துடன் பார்க்கும்போது மிக அற்புதமான கவிதையாக விரிகின்றது என்று நண்பர் இராமநாதன் ஒரு முறை பேசினார்.

தசரதன் இரண்டு வரங்கள் என்றோ கைகேயிற்குக் கொடுத்தது. அவன் தவமியற்றப் போகவேண்டும் ஆகவே இராமன் ராஜ்ஜிய பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இராமனிடம் வேண்டி பட்டாபிஷேகம் நடைபெறும் நாளில் கைகேயி அவ்வரத்தின் மூலம் பரதன் நாடாள வேண்டும், இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றாள். இவனுக்கு இராமனைத் தவிர வேறு நினைப்பு இல்லை. மூர்ச்சையாகிவிடுகின்றான். கைகேயியே ராமனிடம் கூற அவன் தன் தாயாரான கௌசல்யையிடம் சொல்லிக் கொண்டு விடைபெறும் வேளையில் இதை எப்படியும் தடுத்து நிறுத்துவேன் என்று அவள் கைகேயியின் மாளிகையை சென்று பார்க்கின்றாள். வசிட்டனும் வந்து அறிவுரை கூறியும் கைகேயியின் மனம் மாறவில்லை. தசரதன் அவளை நான் மனைவி என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்; பரதனும் என் ஈமச்சடங்குகளை செய்யக் கூடாது என்று கூறினான், தன் மகன் இராமன் காட்டுக்குப் போவது உறுதி என்றும் தான் இறப்பதும் உறுதி என்றும் உணர்கின்றான். அப்போது அவனுக்குத் தன் சிறுவயதில் சரவணகுமாரனின் கண்ணிழந்த இரு பெற்றோர்கள் இட்ட சாபம் நினைவுக்கு வருகின்றது. கொடுத்த வரங்கள் இவ்விடத்தில் சாபங்களாகி சாபங்களை நினைவூட்டுகின்றன.

பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளதுஎன்று,
அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான்.

இராமனோ காடு செல்லாமல் இருக்கமாட்டான். நான் உயிரை இழப்பதும் உறுதி. என்னுடைய இளைய வயதில் முனிவனிட்ட சாபம் ஒன்று இருக்கின்றது. அதை நீ கேள்” என்று கௌசல்யையிடம் தசரதன் கூறினான். 
  
வெய்ய கானத்திடையே, வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று, கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன்.

”வேட்டையின் மேல் அதிக விருப்பமுள்ள நான் சிங்கம் மற்றும் யானைகளும் வரும் ஒரு அடர்ந்த காட்டில் நதியின் கரையில் அன்று மறைந்திருந்தேன்” என்றான் தசரதன் மேலும்



ஒரு மா முனிவன் மனையோடு, ஒளி ஒன்றிலவாய் நயனம்
திரு மா மகனே துணையாய், தவமே புரி போழ்தினின்வாய்,
அரு மா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள.

”ஒப்பற்ற சிறந்த முனிவன் தன் மனைவியோடு கண்கள் பார்வையிழந்தவனாக தன் அழகிய சிறந்த  மகனே துணையாய் தவம் செய்து கொண்டிருக்கின்ற வேளையில், தாய் தந்தையருக்கு தண்ணிர் எடுத்துவர ஆற்றின் அருகில் சிறு வாயுள்ள குவளையில் நீரை முகர அது எழுப்பிய சப்தத்தை, நான் யானை நீர் அருந்துவதாக நினைத்து அம்பு விட்டேன். அது அப்பிள்ளையின் மீது பாய்ந்தது. அவன் அலறல் கேட்டவுடந்தான் என் தவறை உணர்ந்தேன்”.   

நீர் முகக்கும்ஓசை கேட்டு ஓசையின்மூலம் அம்பைவிடும்சப்த வேதி
என்னும் முறையில், யானை நீர்குடிப்பதாகக் கருதி அம்பை எய்தான்
ஆதலின் அறியேன்என்றான். இருமுதுகுரவர்க்கும் கடமைஆற்றும்
சிறப்பு நோக்கி, ‘திரு மா’, ‘அரு மாஎன்று அம்மகனைச் சிறப்பித்தார்.
மகனேகாரம் பிரிநிலை. வேறு துணையில்லை என்றவாறாம்.

இப்போது என் பெரிய அத்தை 88 வயதிற்கு மேலானவள், பாவம் ஒரு முதிர்ந்தோர் இல்லதில் இருக்கின்றாள். நான் யாரையும் குறை சொல்லவில்லை. நகர வாழ்கையில் இட நெருக்கடியிருக்குமிடத்தும் இன்றைய யதார்த்தம் இதுதான். இப்போது சென்னைக்கு அருகில் வயதானவர்களுக்கு என்றே பெரும் குடில்கள் கட்டப்படுகின்றன. அதேபோல் நான் இன்று சென்னையில் பெரும்பாலும் பார்ப்பது வயதானவர்கள் தனியாக தாங்கள் வாங்கிய வீட்டையும் சொத்தையும் அல்லது மகன் அல்லது மகள் வெளிநாட்டிலிருந்து வாங்கிய சொத்துக்களையும் பூதம் போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் IAS( Indian Aya Service) முடித்தவர்கள். ஓய்வுபெற்ற பின் அமெரிக்காவில் இருக்கும் மகன் அல்லது மகள்களுக்கு இரு குழந்தைகளின் பிரசவத்திற்கும் குழந்தைகள் டேகேர் சென்டரில் சேரும் வரையிலும் ஆயா சர்விஸ் செய்து முடித்து ஓய்ந்து போனவர்கள். இவர்களுக்கு அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் எந்த தட்பவெப்பநிலை என்பது முதற்கொண்டு அத்துப்படி. ஆனாலும் பேசுவதற்கு துணையுமில்லாமல் கண்களில் ஒரு வித நிரந்தரமாகிவிட்ட சோகத்துடன் நாட்களை கஷ்டப்பட்டு கடத்துகின்றனர். உண்மையில் பெரிவர்களையும் நெருங்கிய சொந்தங்களையும் வயதான காலத்தில் பார்த்து கொள்கின்றவர்கள் அனைவரும் என்னை பொறுத்த வரையில் தெய்வத்திற்கு சமானம்.
 
 இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகம் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்; -
இரு குன்று அனைய புயத்தாய்! - இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!என்றே.

முனிகுமரன் இரு கண்களும் இல்லாத தாய் தந்தையர் நீர் அருந்துவதற்காக வந்தேன். உணராமல் நீ விட்ட பாணத்தினால் நான் மரிப்பது நிச்சயம்,. வருந்தாதே. இது ஊழ்வினையின் பயன்” எனக் கூறி இறந்தான்.
.
தசரதன் இறந்த முனிக்குமரனையும் தண்ணிரை எடுத்துக் கொண்டு முனிவரை அணுகிய போது அவர்கள்

மைந்தன் வரவே நோக்கும், வள மாதவன் பால், மகனோடு
அம் தண் புனல் கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவாய்
வந்து இங்கு அணுகாய்; என்னோ வந்தது? என்றே, நொந்தேம்;
சந்தம் கமழும் தோளாய், தழுவிக் கொள வா" எனவே

மைந்தனே வந்துவிட்டன் என்று நினைத்து ஏன் இவ்வளவு நேரமாகிவிட்டது வருவதற்கு. வந்து எங்களைத் தழுவிக் கொள்” எனக்கூறியதைக் கேட்ட தசரதன்

வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘ நீ யார்?’ என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே  

”நான் வேழம் என்று நினைத்து விட்ட அம்பு உங்கள் மகன் மீது பாய்ந்துவிட அவன் அலறலால் என் தவறை உணர்ந்த நான் அவன் முன் சென்று வினவ அவன் எல்லாவற்றையும் எடுத்துக் கூறி உங்களை வணங்கி வானோர் எதிர்வந்து அழைத்துச் செல்ல உயிர்விட்டான்” என்றான்.

தாய்தந்தையர் இருவரும்
வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்றுஎன்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!என்றார்;
போழ்ந்தாய் நெஞ்சைஎன்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.

மைந்தன் இறந்தவுடன் மிகவும் வேதனைப்படு ”நீ போய் நாங்கள் எப்படியிருப்போம். நாங்களும் உடன் வருகின்றோம்” என்று வருந்தினர். தசரதன் நானே உங்களுக்கு மகனாக உங்கள் எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றுவேன் “ என்றான்

வயதான பெற்றோர்கள் உயிருடன் இருக்கையில் சிறு வயதில் பிள்ளைகள் இறப்பது என்பது அப்பெரியவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனையாகும். அதுமட்டுமின்றி நோய் வாய்ப்படாமல் ஒரு விபத்திலோ இன்னொருவன் வீபரிதத்திலோ அந்த மரணம் விளைந்தால் அது இன்னும் கொடுமை. சீஏ படிக்கும் போது கிண்டியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பர்களில் ஒருவன் சாக்கடையில் வீழ்ந்து விட்ட பந்தை பொறுக்கச் சென்ற இன்னொரு நண்பன் தத்தளிப்பதைப் பார்த்து இவன் இறங்கி அந்த பைனைக் காப்பாற்றினான். ஆனால் இவன் இறந்து போனான். இவன் காரியங்களுக்குக் கூட காப்பாற்றப்பட்ட பையனோ அவன் குடும்பத்தினரோ வரவில்லை. இறந்தவனின் பெற்றோர் அப்போது பட்டத் துயரத்தை அப்படியே இந்த வரிகளில் என்னால் பார்க்க முடிகின்றது.

அவர்கள் தசரனை நோக்கி
தாவாது ஒளிரும் குடையாய்! தவறு இங்கு இது; நின் சரணம்,
காவாய்என்றாய்; அதனால், கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடர் உற்றனை நீ
போவாய், அகல் வான்என்னா, பொன் நாட்டிடை போயினரால்.
தவறு என்று உணர்ந்து சரணமும் அடைந்த காரணத்தினால் கடுமையான சாபம் கருதாமல் எப்படி நாங்கள் மகனை இழந்து வருத்தப்பட்டு இறப்பது போல் நீயும் உன் மகவை பிரிந்து இறப்பாய்” என்று கூறி தங்கள் பையனிருக்குமிடம் சென்றனர். தசரதன் அவர்களுக்கு நீர்க்கடன் செய்தான். இதைத் தான் பால காண்டத்தில் கம்பன்

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.    

சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், “இன் சொல்
மைந்தன் உளன்என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்;
அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும்,
எம்தம் உயிர் வீகுதலும், இறையும் தவறாஎன்றான்.

மகன் இன்றி இருந்த தயரதனுக்கு முனிவன் சாபம் மகன் உண்டு
என்பதை உணர்த்திற்று என்பதால் அப்போதைக்கு அது
மகிழ்ச்சியானதாகவே ஆயிற்று என்றானாம் - மகன் பிறப்பது முனிவன்
சாபத்தால் உண்மையாகி நிறைவேறியமையின் மகன்பிரிவதும், தன்னுயிர்
போவதும்கூட அச்சாபப்படி நிறைவேறுவது உறுதி என்றான்

நாம் கூட இன்றைக்கும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நமக்கு அளிக்கப்பட்ட வரமாகிய வாக்குச்சீட்டை பயன்படுத்துகின்றோம் நல்ல ஆட்சி வரும் என்று தசரதன் தனக்கு மகன் உண்டு என்று நம்பியதைப் போல. ஆனால் இன்று வரையிலும் அந்த நம்பிக்கை நிறைவேறவேயில்லை. ஒவ்வொரு தடவையும் நம்முடைய சாபங்கள் அதிகமாகவே ஆகின்றதே தவிர குறையவேயில்லை.