Saturday, December 17, 2011

கனவுச் சமுதாயம்

கிராமங்களை சார்ந்த தன்னிறைவான பொருளாதாரத்தை மேற்கொண்டு, வளர்ச்சி என்பது கீழிருந்து மேலாக போகவேண்டும் என்ற காந்தியடிகளின் கனவு, ஐந்தாண்டு திட்டங்ளினால் மண்ணாகிப் போனது. மேலிருந்து கீழே வரும் எந்த திட்டமுமே முழுமையாகப் பலனளிக்காது. யாருக்காக திட்டம் தீட்டப்படுகின்றதோ அவனுடைய பங்களிப்பு துளியும் அதில் இல்லை. இவர்ளுக்காவது அவனுடையத் தேவைகள் தெரியுமா எனறால், அதுவும் பூஜ்ஜியம். இப்படித்தான்  நம் பாரம்பரியமான இயற்கை விவசாய முறைகளை முற்றிலும் புறக்கணித்து, பண்ணாட்டு உர நிறுவனங்களுக்கு ஏஜெண்டுகளாக மாறின இந்திய வேளாண் பல்கலைக்கழகங்கள்என்கின்றார் வேளான் பல்கலையில் பட்டம் பெற்று, இயற்கை வேளாண்மையை பரப்புகின்ற முயற்ச்சியில் இருக்கும் திரு. நம்மாழ்வார். நம் பூமி எல்லா சக்தியையும், சத்தையும் இழந்து விஷமாகிப் போனது.
மத்திய அரசு, நூறு நாள் ஊரக வேலை வாய்ப்பு’  திட்டத்தின் கீழ் தினம் ரூ 120.00, எந்த கண்காணிப்புமின்றி வழங்கியது. விளைவு விவசாய வேலைக்கு ஆள் இல்லை. மந்திரியின் மகன் பொறியியல் கல்லூரி கட்ட வேண்டும் என்றால் 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தரும் கண்மாயை மூடினாலும் தவறில்லை; கண்டு கொள்ளவும் மாட்டோம், கேட்கவும் மாட்டோம் என கன்மூடித்தன்மாக அட்சியாளர்களின் அடிவருடும் அரசு இயந்திரம்.

சென்ற முறை பதவிக்கு வருவதற்காக அள்ளி விட்ட சலுகைகள். இலவச கலர் டி வி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் மாதம் 20 கிலோ அரிசி,. மாடு கொடுத்தவன் கயிறு கொடுக்க மாட்டானா என்பது போல் கூடவே கேபிள் இணைப்பும் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. ஏனெனில் அது குடும்ப வியாபாரம்.
இன்றைய தேதியில், தமிழன் எதையுமே உழைத்து வாங்க வேண்டிய நிலையில் இல்லை.  வருடத்தில் 100 நாட்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு (வேலை செய்யாமல் வரும பணம்); அரிசி கிலோ ஒரு ரூபாய் போய் மாதம் 30 கிலோ இலவசம்; ஆடு மாடு இலவசம்; மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பேன் இலவசம்; +1 +2 ,மாணவர்களுக்கு சைக்கிள், மடிக் கணினி இலவசம்.

முன்பே பள்ளிக்கூட சீருடை இலவசம்; பள்ளியில் தினமும் முட்டையுடன் கூடிய சத்துவு இலவசம்(சிறிய வயதில் அது உடம்பிற்கு நல்லதா  என்பது பற்றி ஆராயச்சி உண்டா? இல்லை.!) தமிழினத் தலைவருக்குத் தோன்றியது, எம் ஜி ஆர் செயத்தைவிட தான் அதிகம் செய்யவேண்டுமென்று.. பின் விளைவுகளைப் பற்றி அவருக்கென்ன, “முட்டை தந்த நாயகன் என்று கமல், ரஜினி ஒரு பக்கம்; வாலி,வைரமுத்து மற்றொரு பக்கம் என பாராட்டு விழா நடந்தால் போதும்.  கட்டாயம் மானாட மயிலாட நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கு எது சிறந்த வழி என்று யோசிக்காமல் வெறும் இலவசங்களா வழி? இன்றைக்கு வருமானத்தில் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் செலவிடும் குடிமகன்கள், அரசியல் கட்சிகள் இவர்களிடமிருந்து கொள்ளையடித்த அணுவிலும் சிறிதா ஒரு பங்கை, ஒட்டுக்காகக் காசாக வீசி, அரசாங்கத்தை கடன் வாங்க வைத்து அதில் இலவசங்களை வாரி வழங்கி, என்றும் இவர்கள் வறுமையில் வாடச் செய்வதை நினைத்தாலே மாற்றம் வந்துவிடும்.    
ஔவையார் இளமையில் வறுமை கொடியது என்றார். அன்றைய நிலையில் வறுமையுடைய மக்கள்   தங்கள் பிள்ளைகளைக்கூட விற்கத்  தயாராய் இருந்தார்கள் என்பதைப் பெரிய புராணத்திலிருந்து   அறிகிறோம்.  7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதியார்-பின்னர்   சிறுதொண்டர்   என்று   புகழ்பெற்ற பெருமகனார்-தம்முடைய மகனை அரிவதற்கு முன்னர் மனைவியிடம் பேசுவதைச்  சேக்கிழார் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். மைந்தர்தமை நினைவு நிரம்ப நிதிகொடுத்தால் தருவாருளரே என்று சொல்கிறார். ஆகவே, நிரம்பப் பொருள் கொடுத்தால் தங்கள் பிள்ளைகளை விற்கத் தயாராய் இருந்தார்கள் என்று அறிகிறோம்.
இதற்கு முன்னர், வடநாட்டில்  வழங்கும்  சுநச்சேபன் கதை இதை நன்கு  வலியுறுத்துகிறது. நரபலி இடுவதற்காக ஒரு பிள்ளை வேண்டும் என்று அரசன் பெரும்பணத்தைக்  கொடுத்துப் பிள்ளை  வாங்கப் புறப்படுகிறான்.  மூன்று  பிள்ளைகளையுடைய  இரிசிகன் தன் முதல் பிள்ளையையும், அவன்  துணைவி தன் கடைசிப்பிள்ளையையும்  தாங்கள் வைத்துகொண்டு இடையில் நின்ற சுநச்சேபனை பொருளுக்கு விற்று விட்டார்கள் என்று அறிகிறோம்.
கம்பனோ மன்னாரட்சி நன்கு வளர்ந்து செம்மைப் பட்ட காலத்தில் தோன்றியவன்.  நிலப்பிரபுத்துவத்தின் உச்சியில் செயல்படும் ஒரு மைய அரசு. அந்த அரசின் அதிகாரம் அரசனின் கையில்.கம்பனுடைய   காலம்    அதாவது   ஒன்பதாம்   நூற்றாண்டில் சமுதாயம் உடையவர்கள்,  இல்லாதவர்கள்என்ற பெரும் பிரிவைக்  கொண்டிருந்தது என்பதில் ஐயப்பாடேயில்லை. சங்க காலம் தொடங்கி பன்னிரண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டு முடியத் தமிழகத்தில் லகின் பல்வேறு பகுதிகளில் இருப்பது போன்றே இவ்வேறுபாடு இருந்திருக்கிறது. உடையவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள். இல்லாதவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள் இல்லாதவர்களிலே புலவர்களாக, அறிஞர்களாக இருந்தவர்கள் இந்த உடையவர்களை அண்டி வாழ்ந்திருக்கிறார்கள். உடையவர்களும் எதோ அந்தப் பெருஞ்சொத்துக்கும் தாங்கள் உரிமைக்காரர்கள் என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
பெரும் சொத்துடையவர்கள்  அந்தச் சொத்துக்குத் தாங்கள்  உரிமையாளர்கள் என்று நினைக்காமல், அதைப் பாதுகாத்துப் பங்கிட வேண்டிய கட்டுப்பாடு உடையவர்கள் என்ற தர்மகர்த்தா  முறையில்தான்  பழந்தமிழ்ச் செல்வர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று  தெரிகிறது.
கம்பனுடைய  காலத்திலும்  அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

கம்பனுடைய வரலாறு நமக்குத் தெரியவில்லை. ஆனால், அதே நேரத்தில் தன் காலில் நிற்க முடியாதவனாய், அதாது அவனுடைய குடும்பம் அவனைத் தனிப்பட்ட முறையில் வாழ வைக்க வாய்ப்பு இல்லாததாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சடையப்ப   வள்ளல் என்ற பெரியதொரு பெருமகனை அண்டித்  தன் வாழ்நாளைச் செலவிட்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
சடையப்பரைப் பொறுத்தமட்டில் கம்பனை  மகனாகவே ஏற்றுக்கொண்டு அற்புதமாக வளர்த்தான் என்பதில் ஐயப்பாடு இல்லை. அந்த நன்றிப் பெருக்கைக் கடைசிவரை கம்பன் மறக்கவும் இல்லை.

கம்பனுடைய அடிமனத்தில் அது உறுத்திதானிருக்கும். அதனால்தான் இந்த எண்ணம் தோன்றி இருத்தல் வேண்டும். தன்னுடைய காலில் நிற்கமுடியாமல் தன்னுடைய குடும்பத்தார்ன்னைத் தனிப்பட்ட முறையில், சுதந்திரமாக வாழவைக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தானே சடையப்பனைப் போன்ற வள்ளலை அண்டியிருக்க வேண்டியிருக்கிறதுஎன்ற மன நெருடல் ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? உடையார், இல்லார் என்ற  இரண்டு  பெரும்  பிரிவாகச்முதாயம் மைந்திருந்ததுதான் காரணம்.
இந்த நினைவு ஆழமாகப் பதியப் பதியப் பெரும் கவிஞனாகிய அவன், இந்த உடையார் இல்லார் என்கிற வேறுபாட்டோடு கூடிய  சமுதாயத்தில் வாழும்போதே, தெல்லாம்  இல்லாத ஒரு சமுதாயம் இருந்தால்  ப்படி இருக்கும் என்ற கற்பனையில் திளைத்திருக்க வேண்டும். கம்பநாடன் இவற்றுக்கு  ஒரு  முடிவு கட்டவேண்டுமென்று  நினைத்தான் போலும். அப்படி அவன் கனவு  கண்டதனுடைய விளைவுதான் நாட்டுப் படலத்தில் அவன் அமைத்திருக்கின்ற சமுதாயம்.  

அது மட்டுமன்று. இப்படி ஒரு கற்பனை நாட்டைப் பாடுவதன் மூலம் பின்னே வளர்ந்து வருகின்ற சோழப் பேரரசு சமுதாயத்தை அமைக்கும்போது உடையார்-இல்லார் வேறுபாட்டை மிகுதிப்படுத்தாததாய் இருக்க வேண்டும் என்று அவன் கருதியிருத்தல் கூடும்.
இந்தப்  பெருங்காப்பியம்  ஒரு கலங்கரை விளக்கமாக நின்று சமுதாயம் எப்படி  அமைய வேண்டுமென்று மக்களுக்கு  எடுத்துச்  சொல்கின்ற  ஆசானாகவும்  அமைந்திருக்கிறது.
காப்பியத்தினுடைய பல்வேறு  பணிகளில் அறிவுறுத்தல், பயிற்றுவித்தல் முதலான கடமைகளும்  இருக்கின்ற காரணத்தினால்,  தன்னுடைய காப்பியத்தில் தொடக்கத்திலேயே இதனைச் சொல்வதன் மூலம் சோழப்  பேரரசில் எப்படிச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதைக் கவிஞன் கற்பனை மூலம் கண்டான் என்று  நினைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை.
15, 16ஆம்  நூற்றாண்டில்   வாழ்ந்த   தாமஸ்  மூர்   (1477-1535) உட்டோப்பியா’ (UTOPIA) என்ற பெயரில் ஒரு கற்பனை நாட்டைப் படைக்கிறார். உட்டோபியாவில் ஒரு நகர அமைப்பு,. அந்நகரில் வாழ்கின்ற உழவர், தொழிலாளர்  முதலியோர் வாழ்க்கை முறை, நீதி பரிபாலனம், ஒருவருக்கொருவர் நட்புக் கொண்டு வாழுமியல்பு, பிறரிடம் அம்மக்கள் கொள்ளும் உறவுமுறை போல்வனவற்றைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். இவர் (தாமஸ் மூர்) எந்த அளவு கம்பனைப் பின்பற்றிச் செல்லுகிறார் என்பது கற்று மகிழ வேண்டிய பகுதி.
வண்மை யில்லையோர் வறுமை யின்மையால்
திண்மை யில்லைநேர் செறுநற ரின்மையால்
உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்
ஒன்மை யில்லை கேள்வி யோங்கலால்.
 கொள் வாரிலாமை கொடுப்பார்களுமில்லை மாதோஎன்பது போல் கோசல நாட்டில் ஈகையின் பெருமைத் தெரியாது காரணம் வறுமையில்லை. வீரத்தின் பெருமைத் தெரியாது ஏனெனில் பகைவர்களேயில்லை. அதே போல உண்மை என்று யாருக்கும் தனியாகத் தெரியாது பொய்யுரையிலாமயால் என்கின்றான். அடுத்து
கூற்ற மில்லையொர் குற்றமி லாமையால்
சீற்ற மில்லை தம் சிந்தையிர் செம்மையால்
ஆற்ற நல்லற மல்ல திலாமையால்
ஏற்ற மன்றி யிழித்தக் வில்லையே.
சட்டங்களோ தண்டனை களோ சிறைச்சாலைகளோயில்லை, குற்றங்கள் இல்லாமையால்;   யாரும் கோவப்படுவதில்லை: அவர்கள் எண்ணங்கள் செம்மையாக இருப்பதால்; நல்ல அறச் செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால் மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை. கூற்ரம் என்பதை யமனுக்கு என்ச் சொல்லி அங்கு அல்ப ஆயுசில் யாரும் இறப்பது இல்லை யாரும் தவறு செய்யாத காரணத்தால் என்ப் பொருளுரப்ப்தும் உண்டு.  
இதையெல்லாம் விஞ்சி
கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்வி முற்ற
வல்லரு மில்லை யவைவல்லரல் லர்ருமில்லை
எல்லாரு மெல்லாப் பெருஞ்செல்வமு மெய்த லாலே
இல்லாரு மில்லை யுடையார்களு மில்லை மாதோ.

‘நிழலினருமை வெயிலில் அடிப்பட்டர்க்கே தெரியும் என்றபடி கல்வி, பொருள் என்ற இவை இல்லாதவரிருந்தால், அந்த கல்வி, செல்வம் என்றவற்றைப் பெற்றவர்களின் அருமை தெரியும். இந்நகரிலோ ஒவ்வொருவரும் கல்வி செல்வங்களைப் பெற்று உயர்ந்திருந்த்தால் “இவர் முற்றக்கற்ற கல்வியாளர், இவர் செல்வந்தர் “ என்று உயர்த்தி ஒருவரை சொல்ல முடியாதென்கின்றான்.

இவ்விடத்திலும் முதலிடம் கல்விக்கேயன்றி செல்வத்திற்கு இல்லை. செல்வத்தை ‘பொருந்த செல்வம் (ஈகையுர்வுடன் இருப்பரிடத்தில் உள்ள நேர் வழியில் வந்த செல்வம்) என்று பிறிதொரு இடத்தில் கூறுவதையும் நினைத்திட வேண்டும்.
கொடுப்பவர், இரப்பவர், கற்றவர். கல்லாதவர்,கூற்றம், குற்றம் சீற்றமில்லா சமச்சீர் சமுதாயமுள்ள கோசல நாட்டின் வயல்கள், கிராங்கள் இதைத் தாண்டி அயோத்தியா எனும் பெரும் நகருக்குள் புகுவதற்காக கோட்டை வாசலையடைகின்றோம். 
                                                                      தொடரும்

Friday, December 9, 2011

நிறை வளம்

ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால் இன்றியமையாதவை மூன்று. முதலாவது அமைதி. அடுத்தது அமைதியின் விளைவாக வரும் கல்வி. அதன்பின் கல்வியின் விளைவால் வரும் ஒழுக்கம். தீபகற்பமான தென்னிந்தியாவில், கடந்த ஆயிரம் வருடங்களில் பெரும்பாலும் அமைதியாகத்தான் இருந்திருக்கின்றது. சுதந்திரத்தின் போது ஏற்பட்ட பிரிவினையின் போதும் சரி, சுதந்திரம் அடைந்து மூன்று போர்களில் இந்தியா ஈடுபட்டபோதும் கூட,  தென்னிந்தியாவில் நேரடி பாதிப்பு மிகவும் குறைவே. (அதனால்தான் இங்கிருப்பவர்களில் நன்றாகப் படித்த்வர்கள் கூட “ காஷ்மீரை இந்தியா ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றது. அதை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும்தாங்கள் செக்யூலர் என நிருபிக்க வேண்டி, தத்து பித்து என்று கூறிக்கொண்டு திரிகின்றனர்.)


கல்வி வளம் பெருகி அறிவு வளர்ந்துஅறியாமை அகலவேண்டும். அப்போதுதான் மக்கள், தாங்கள் அரசியல்வாதிகளால் அவர்களது தேவைகளுக்காக ஜாதி வாரியாக, மத ரீதியாக, மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்படுவதை உணரமுடியும்.

தாய் மொழியில் சிறார்கள் கற்பதை சுமையாக கருதாமல் சுவையாக கருதும்  வகையிலான கட்டணமில்லாத ஆரம்பக் கல்வியும், மாணவர்களின்/பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கேற்ப உயர்கல்வி தரமானதாகவும் சீரானதாகவும்  இருக்க வேண்டும். வேறு மொழிகளைக் கற்பதில் தவறில்லை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உட்பட. தமிழகத்தில் “தமிழ் தெரியாது என்பது பெருமைக்குரிய விஷயமாக மாறிவிட்டிருப்பது வேதனையான விஷயம். சிற்றூர்களில் கூட மக்கள் நர்ஸரி பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் “ டாடி மம்மி ஆன்டிஎன்று அழைப்பதையே விரும்புகின்றனர். வளர்ந்த பிறகும் இவர்களால் ஆங்கிலமும் சரியாகப் பேச முடியவில்லை என்பது எந்த டீ வீ  நிகழ்ச்சியினைப் பார்த்தாலும் புரியும். கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சிப் பள்ளிகள் வெறும் வசதியற்றவனுக்கு மட்டுமே. மந்திரியின் மகனுக்கோ அல்லது அதிகாரிகளின் மகளுக்கோ அல்ல (சேர்த்த பத்தாவது நாளில் மாற்றம் வந்தால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது,). தமிழ் தமிழ் என்று கத்தி பதவிக்கு வந்த தி மு கவின் அடுத்த வாரிசாக சுட்டிக் காட்டப்படும்(அழகிரி விட்டால்!!!) ஸ்டாலின் மருமகள் நடத்துவது சிபிஎஸ்இ பள்ளி. தமிழுக்கு அங்கு இடமில்லை. தமிழத்தில் மட்டும் தான் ஒருவன் உயர்கல்வி வரையில் தமிழைப் படிக்காமலேயே கல்வி பெற முடியும். காசிருப்பவனுக்குத்தான் தரமான கல்வி. இன்று கல்வி,அறிவில்லாத, முட்டாள்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி சீரழிந்து விட்டது. நன்றாக கவனிக்கவும, படிக்காத மேதை காமராசரால் பள்ளிக்கு வருவதற்காகத் தொலை நோக்குடன் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டத்தின் பலனை அனுபவித்த இந்த தமிழகத்தில், இன்று ஆங்கில மோகம் கொண்டு அலைந்து, நர்ஸரி பள்ளியில் தன் மழலையைச் சேர்க்கமுடியவில்லை என்று தாய் தீ குளித்து இறந்ததையும் பார்க்கின்றோம்.

இந்தியாவிலேயே முன்பு கர்நாடகா மாநிலத்தில் மட்டும் தான் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன.  தமிழகத்தில் அரசின் பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான். ஐஐடி மற்றும் ஆர் இ சி மத்திய அரசின் கீழ் இயங்கியது. இருந்த ஒரே ஒரு தனியார் பல்கலை கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மட்டும் தான். அப்போதும் தனியார் அறக்கட்டளைகள் மூலம் பொறியியல் கல்லூரிகளை நடத்தினாலும் அவையனைத்தும் அரசு பலைகலையின் கீழ், வழிகாட்டுதளில் நடந்தது. அறக்கட்டளை உருப்பினர்களுக்கு சில் சலுகைகள் இருந்தன..ஆனாலும் நன்கொடை மற்றும் கட்டன்க் கொள்ளைக்கு வாய்பளிக்கப் ப்டவில்லி.  எனது பெரிய அண்ணனுக்கு 70 களில் விண்ணப்பித்த போது, தேசிய உதவி சம்பளம் வழங்கப்பட்ட நிலையிலும், அரசு பொறியியல் கல்லூரியில் அவன் கேட்ட ரசாயனத்துறை அளிக்கப்படவில்லை. காரணம் ஜாதி. நேர்முகத் தேர்வில் அவனிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி “நீ ஐயரா இல்லை ஐய்யங்காரா’.  பெயரில் வந்த குழப்பம். அப்பா பேர் ஸ்ரீனிவாசன். இவன் பெயர் ராகவன்.


பெரியண்ணன், அண்ணாமலை பல்கலையில் முதல் வருடம் படிக்கும் போதுதான், நிர்வாகம் அன்றைய முதலமைச்சரான கருணாநிதிக்கு, டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தது.  அப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. படித்து ஆராய்ச்சி செய்து வாங்க முடியாத பட்டத்தை, போலிஸ் படையின் உதவியுடன், உதயகுமார் என்ற மாணவனைக் கொன்று பெற்றார் திரு. கருணாநிதி. அதைவிடக் கொடுமை இறந்த அந்த மாணவனின் தந்தையை வைத்தே, அந்த உடல் தன்னுடைய மகனுடையது அல்ல என்று சொல்ல வைத்தது.                                                                                                                                                                                                     


இதற்கெல்லாம் மேலாக மதுவின் வாசனையறியா தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்து அதில் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கித் தொலையச் செய்தது. தனிநபரின் குடி அளவில் கேரளாவை மிஞ்சி இன்று தமிழகம் நம்பர் ஒன். தீபாவளியன்று மதுக் கடைகளில் 300 கோடிக்கு மேல் ஒரே நாளில் விற்பனை. இதுவா சாதனை? இதையெல்லாம் மீறி தமிழகம் முன்னேறியிருக்கின்றது என்றால் அந்த ஆண்டவன் தான் காரணம்(மு.க, ஜெஜெ அல்ல)
இன்று தமிழகத்தில் 242 பொறியியல் கல்லூரிகள், 43 க்கும் மேல் மருத்துவக் கல்லூரிகள் பாதிக்கு மேல்  எந்தக் கட்டுமான வசதிகளும் இல்லாதவை,. எல்லா கட்சிகளை சார்ந்த  மந்திரிகளுக்கும். சில சாமியார்களுக்கும் கல்லூரிகள். திருவண்ணாமலையில் நான் பள்ளியில் படிக்கும்போது தான், ரமணாஸ்ரமம் தாண்டி அப்பாவின் மேற்பார்வையில் உருவானது அரசு கலைக் கல்லூரி. இன்றோ அதைத் தவிர்த்து 5 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 5  பொறியியல் கல்லூரிகள். இதில் நடத்தப்ப்டும் மோசடிகள். போதாதற்கு, வங்கிகளின் கட்டாய கல்விக் கடன். . அப்போதுதான் இந்தக் கல்லூரிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க முடியும். மாணவர்களும் வேலைக்குப் போன பின்பும், கடனைக் கட்டுவதில்லை. காரணம் ஏதாவது காட்டிக் கடன் தொகையை ரத்து செய்துவிடுவார்இந்த திட்டத்தைக் கொண்டு வந்த ப சிதமபரம் என்ற நம்பிக்கை.

அன்று மாபெரும் தலவரான காந்தி இந்த தேசத்து ம்க்க்ளையுமே தன் மாதிரி மாற்றியவர். அதனால்தானே, விநோபா பாபா, லால் பஹதூர் ஸாஸ்த்ரி, ஜெயபிரகாஷ் நாரயானன், ராஜாஜி, காமராஜர், பிரகாசம் என்று நீண்டகொன்டேப் போகக்கூடிய தேசத்தலைவர்கள் தோன்றினார்கள். காந்தியைப் பார்க்ர்காதவர்கள் எல்லாம் தங்கள் பஞ்சாயத்து, முனிசிபல் தலைவர்களிடத்தில் காந்ந்தியைக் க்ண்டனர்.


இன்றோ காந்தியின் காங்கிரஸ், சோனியாவின்  தலைமையில். மோசடி பண்ணுவதையே கலையாகக் கொண்ட இந்த அரசியல்வாதிகள் தங்களைப் போலவே மக்களையும் மாற்றுகின்றனர். அதனாலேதான் கருணாநிதி தன்னைப் போலவே உருவாக்கி வைத்த வாரிசுகளின், பரிசு தமிழகத்த்திற்கு ‘திருமங்களம் பார்முலா”.

ஒரு காலத்தில் அமைதி பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் இன்று ஜாதிக்கு ஒரு கட்சி, ஜாதியில்லா மதங்களிலும் கூட தங்கள் முன்னோர்களின் ஜாதி வைத்துக் கூட்டணிகள், போராட்டங்கள், துப்பாக்கி சூடுகள். மக்களின் உணர்ச்சியைத் தூண்டிப் பேசி, தீக்குளிக்க வைப்பவர்கள், தன் சொந்த மகனோ, மகளோ தீக்குளிக்க அனுமதிப்பார்களா? மாட்டார்கள். எந்த போராட்டத்திலும் நஷ்டப்படுவது நாம் தான். அரசு பஸ்கள் தீ வைக்கப்பட்டால் அதற்குறிய காசை எந்தக் கட்சி போராட்டத்தை அறிவித்ததோ அந்தக் கட்சியிடமிருந்த்து வாங்கவேண்டும். பாதிக்கப்படுவது நாம் தான் என்ற நினைப்பையும் மறந்து காலை டாஸ்மாக் எப்போது திறக்கும் என்று தூங்காமல் காத்திருக்கின்றான் தமிழன்.

எல்லாவற்றிர்க்கிடையேயும் அமைதியாக உறங்குவதன் வழியாக கம்பன் கோசல தேசத்தில் நிலவிய அமைதியை


 நீரிடை உறங்கும் சங்கம்;  நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை.


பிறர் இடையூரின்றி நிம்மதியாக யாவும் தூங்குகின்றன. கவலையின்றி, அச்சமின்றி, நிலை மாற்றமின்றித்    தூங்குகின்றன. மலர் மாலை அணிந்தோர்  நடமாடிக் கொண்டிருந்தாலும் அம் மாலைகளிலே வண்டுகள் உறங்குகின்றனவாம்; பலர்   நீராடும் நீர்த் துறைகளிலே முத்துச் சிப்பிகள்  உறங்குகின்றன - இவையெல்லாம்    எவ்வகை இடையீடும் இல்லாமல் பெறுகின்ற   நிம்மதியையும் அச்சமின்மையையும்   குறித்தன. திரு வீற்றிருந்த தீது தீர் நியமம் என்று நக்கீரர் வருணித்த மாமதுரைக் கடைவீதி இங்கு நினைவில் எழும்.
தரமான கல்வி, ஆணுக்கும் பெண்ணுக்கும், சீராகக் கிடைத்தால் அங்கு செல்வம் இருப்பது பகிர்வதற்கே என்ற சிந்தை எழும் என்கிறான் கம்பன்.

பெருந் தடங் கண் பிறை நுதலார்க்கு
எலாம்பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும், அன்றி, விளைவன யாவையே?

பெருந் தட கண்- மிகப்பெரிய கண்களையுடைய; பிறை நுதலார்க்கு எலாம்- பிறைச்சந்திரன் போன்ற நெற்றியைக் கொண்ட மகளிர்கட்கெல்லாம்-
குறிப்பறிந்து விருந்தினரை உபசரித்தல், ஈகை என்ற இச்செயல்கட்கு இன்றியமையாதன  கல்வியும் செல்வமும், அந்நாட்டு மகளிர்க்கு நிரம்பியிருந்ததால் என்னும் கவிக் கூற்றின் மூலம் கம்பன் காலத்தில் பெண்கல்வி பரவியிருந்ததென்பது தெரியவருகிறது.
கண்ணும் நுதலும் பெண்டிர்தம் அழகைச் சுட்டின;  ஈதலும் விருந்தோம்பலும்  செயலைச் சுட்டின.  பூத்தல்  என்பது  முன்னைய அரும்பு  நிலையையும்  பின்னைய கனிவு நிலையையும்    உட்கொண்டு நிறைநிலை சுட்டிற்று. செல்வத்துப் பயனே ஈதல் என்பதை உணர்ந்தவரிடம் சேர்ந்ததால் பொருந்து செல்வம் என்றார். ஐயா திரு. "நெல்லைக் கண்ணன்" அவர்கள் “பூத்தால் தான் காய்க்கும்; காய்த்தால் தான் கனியும்;  கனிந்தால் தான் உதவும்என்று அழகாக குறிப்பிடுகின்றார். பொருந்து செல்வம் என்பது நேர் வழியில் வந்த செல்வம்.

இன்று போல் பலரும் பல இடங்களில் வசிக்காமல் ஒரே கிராமத்தில் வசித்த காலம் முன்பு இங்கிருந்தது. கிராமத்தில் இருப்பவர் அனைவருமே பங்காளிகாளாக இருந்தனர். கம்பனுடைய காலத்திலும் அப்படித்தான் போலும்!வயலில் விளைந்ததை முறையாகப் பகிர்ந்து விருந்துடன் உண்ண அவர்கள் எடுத்துச் செல்வதை


எறி தரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகளும் போற்றிக் கொள்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்கம் விருந்து உண மனையின்ன உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார்.

உழவர்கள் நெற்கதிர்களை அறுத்து கடாக்களைக் கொண்டு துவைத்து நெல்மணிகளாக் குவித்துக் களப்பிச்சை முதலியவற்றையீந்திட்டு, தமக்குறிய பங்கை வண்டிகளில் மிகுதியாக ஏற்றியதனால் பூமகள், பாரத்தின் சுமை தாங்காமல் நெளிய, தனது மனையில் விருந்துண்ண சேர்த்தனர்.



கல்வியும், அமைதியும்  ஒழுக்கத்தோடு கைக் கோர்த்தால் விளைவதை



கலம் சுரக்கும். நிதியம்; கணக்கு இலா.
நிலம் சுரக்கும். நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும். ஒழுக்கம்-குடிக்கு எலாம்.

கப்பல்கள்    வளம் கொடுத்ததைக் கொண்டு கோசல நாட்டுக் கடல் வாணிபத்தை   உணரலாம்; ஏற்றுமதி   இறக்குமதி  உண்டென்பதால் உள்நாட்டு வணிகம் சொல்லாமலே பெறப்பட்டது. எல்லாச் செழிப்புக்கும் அடிப்படை வளம்     வேளாண்மையே;   அதனால் கணக்கிலா  வளம் சுரக்கும் நிலம் என்றார். நிறை வளம்- வினைத் தொகை என வெற்று இலக்கணக் குறிப்பாக மட்டும் கொள்ளாமல். வினைத் தொகை முக்காலத்துக்கும் ஆகும்  என்பதை  உணர்க. எனவே. எக்காலத்திலும்  கோசலத்தின்    நிலவளம்  நிறைவளம் என உணர்த்துகிறார். கவிஞர். நீர் வழியாலும் நில வழியாலும்   மட்டுமன்றிக் குடைந்துள்ள  சுரங்க வழியாலும் மணிச் செல்வம் வாய்க்கப்    பெற்றது கோசலம்.  இவ்வாறு  பல  வகையாலும் செல்வச் செழிப்பு  மிக்க நாடு. கோசலம்.  ஆனால்.  இவ்  வளங்களெல்லாம் வாழ்க்கைக்குத்   துணை என்ற   அளவே  மதிப்புடையன;  உயிர்  வாழ்வு  உயர்    வாழ்வாய் விழுப்பம்  பெறுவது  ஒழுக்கத்தால்தான்.  ஒழுக்கம் விழுப்பம்   தரும். கோசல  நாட்டுக்  குலம்  என்றாலே  ஒழுக்கத்தின் மறுபெயர்   என்று
உணர வைக்கிறார் கம்பர்.


சுரக்கும்  என்ற  சொல்  நுட்பம்  காண்க.  இடையறாது  தருவதே சுரத்தல்

இப்படிப் பட்ட வளநாட்டில் எதுதான் விளையாது? அவர்களின் செல்வ செழிப்பிற்கு ஈடாக எதைதான் சொல்ல முடியும். ஆயினும் கமபன் மிக் அழகாக விளைச்சளை

கதிர் படு வயலின் உள்ள. கடி கமழ்   புனலின் உள்ள.
முதிர் பயன் மரத்தின் உள்ள.   முதிரைகள் புறவின் உள்ள.
படுபதி கொடியின் உள்ள.   படி வளர் குழியின் உள்ள.-
மதுவளம் மலரில் கொள்ளும்    வண்டு என- மள்ளர். கொள்வார்.

கதிர்களில் விளையும் வயல்களில் உள்ள நெல்  முதலியவைகளையும்; மணம் வீசு
நீரில்   உள்ள  தாமரை  மலர்  முதலியவைகளையும்; முதிர்ந்த பயன் தரத்தக்க மரங்களில்  உள்ள காய். கனி   முதலியவைகளையும்  முதிரைகள்  புறவின்   உள்ள-  முல்லை நிலத்து விளையும்  பருப்பு  முதலியவைகளையும்;  நிலத்தில்  பதிக்கப்பட்டுள்ள  கொடிகளில்   விளையும் மலர். கனி  முதலியவைகளையும்;  நிலத்தில் உண்டான   குழிகளில்   விளையும்   கிழங்கு   முதலியவைகளையும்; தேனாகிய வளத்தைப் பல மலர்களிலிருந்து   சேகரிக்கும்   வண்டுகள்  போல;   உழவர்கள்    பலவகை    விளைச்சல்    வளத்தைக் கொள்வார்கள்.

கவி அவரகள் செல்வத்தையும் அதனால் விளையும் செழிப்பையும்

பகலினொடு இகலுவ. படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ. நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ. சுதை புரை நுரை;
கார் முகலினொடு இகலுவ. கடி மண முரசம் என்கின்றார்.

அந்நகர மாதர் அணியும் அணிகலன்களில்  பதித்துள்ள இரத்தினங்கள் சூரியன் ஒளியை விட மிக்கு விளங்குவன. அவர் தம் முலைகள் செவ்விளநீர்களை விட வடிவத்தால் திரட்சியால்   சிறந்து விளங்குவன. அவர்கள் அணியும் நூலாடைகள் பால் நுரையை விட மெல்லியனவாக நொய்யனவாக விளங்குவன. மணமுரசு ஒலியோ மழை மேகத்தின் குமுறு குரலினும் மிக்கு    விளங்குவது. மாறுபடல்- போட்டியிட்டும் தோல்வி காணுதல். நளி-பெருமை. செறிவு.
அன்று சிறு குழந்தைகளை சாப்பிடலேனா நாலு கண்ணன் வந்துவிடுவான். பூதம் வந்துவிடும் என பயமுறுத்தி சாதம் ஊட்டுவர். பிறகாலத்தில் வரும் விளைவைப் பரற்றி சிறிதும் யோசியாமல், இன்று டிவிடியில் படம் போட்டு, டீவி எதிரில் சாப்பபாடு. மிக்க செலவ செழிப்புடன் இருந்த மக்கள் சிறு குழந்தைகளுக்கு பால் சோறு ஊட்டுவதை கவித்துவமாக

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை. பங்கயம்
வாய் நிலா உறக் குவிவ மானுமே கூறுமிடமிது.

ஐம்படைத் தாலி அணி செய்யும் மார்பிலே, சொள்ளு நீர் வழியும் தம் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பால் கலந்த சோறு ஊட்டுகிறார்கள். அப்போது குவிந்திருக்கும் அவர்களின்   செந்நிறக் கைகள் நிலா வந்தததும் குவியும் தாமாரை என்கின்றார்.

காத்தற் கடவுளான திருமாலின், சங்கம், சக்கரம், தண்டு, வில் வாள் என்னும் பஞ்சாயுதங்களின் வடிவமாகப் பொன் கொண்டு அமைப்பது. இதனின், பிள்ளைகளுக்கு திருஷ்டி நேராமலிருத்தல் பொருட்டு ஐந்தாவது மாதத்தில் அணிவித்தல் மரபு. இது தாலி என்றும், தாலியைம்படையென்றும், ஐம்படை என்றும் வழங்கும். இருபாற் குழந்தைக்கும் பொருந்தும்.. பாலன்னத்தை ஊட்டும் கை குவிதல் இயல்பு. அதை இங்ஙன் வருணித்தார். 

மக்கள் பல்வேறு செல்வங்களைப் பெற்றிருந்தாலும் கவியின், கனவுச் சமுதாயத்தைப் பார்ப்போம்.
                                                                                                                                          தொடரும்