Friday, March 23, 2012

காதல் செய்வீர்!

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
     கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர்; உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகமலிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரனம் பொய்யாம்” என்கின்றான் பாரதி.
காதல் இல்லாமல் ஆணோ பெண்ணோ இருக்கமுடியுமா? காதல் என்பது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா? கண்டவுடன் வருவது காதல் என்றால் அது நிலைத்திருக்குமா? இல்லை வெறும் காமமா?. என்னைப் பொறுத்தவரையில் யாரும் காதலில்லாமல் இருக்கமுடியாது. அதுதான் நாம் வாழ்வின் மேல், வையத்தின் மேல் பிடிப்பு வைத்துக் கொள்ள உதவுகின்றது. முற்றும் துறந்த முனிவர்களும் பரம் பொருளின் மேல் வைத்திருப்பதும் காதலே!  

எங்கள் வட ஆற்காடு மாவட்ட பிராமணர்களுக்கிடையே சொந்தத்தில் திருமணம் செய்வது வழக்கமாயிருந்தது. சொத்து வெளியே போகக் கூடாது என்பது ஒரு பெரிய காரணமாகத் தோணவில்லை. ஏனெனில் அவ்வளவு பெருந்தனக்காரார்கள் யாருமில்லை. நாட்டுக் கோட்டையில் நடப்பது போல் தத்துக் கொடுப்பவர்களும் மிக அரிது. குழந்தை பிறந்தவுடனேயே இவள் அவனுக்குத்தான் என்று பேச்சு வந்துவிடும். அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் வடஆற்காடு மாவட்டத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி அவ்வளவு அழகாக இருக்கமாட்டார்கள். பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் சம்புரவரையர் குலமங்கைகளைப் பற்றிக் குறிப்பிடுவது போல் இவர்கள் “கருநிறத்தழகிகள். (வட ஆற்காடு மாவட்டத்தின் சிறப்பாகக் கூறப்படும் ஏழு விஷயங்களில் temple without god, river with out water, mountain without a tree, GIRLS WITHOUT BEAUTY என்பதும் ஒன்று.) என் மனைவி “ஆண்கள் மட்டும் அப்படியே மன்மதன்னு நினைப்பு என்பாள். என்னைப் பொருத்த வரை இருபாலருமே அழகு குறைவுதான். சிகப்பு என்பது ரொம்பவே அரிது. சொந்தத்தில் இல்லையென்றால் அந்த வட்டத்துக்குள்ளேயே தான் பார்ப்பார்கள்.

என் நெருங்கிய நண்பன் நீலகண்டன்.  இவனும் என்னைப் போலவே வட ஆற்காடு மாவட்டம். அவன் பேசிப் பார்த்தா தெரிஞ்சுடும், எல்லா நார்த் ஆற்காட்டு பிராமினும் ஏதோ ஒரு வகையில் சொந்தமாய்டுவா.”. 

ஒரு சமயம் எங்களுக்குத் தீபாவளி பண்டிகையில்லை. தாத்தாவின் முதல் மனைவி இறந்துவிட்டார். நீலகண்டனுக்கும் அந்த வருடம் பண்டிகையில்லை.. நாங்கள் இருவரும் பண்டிகை கொண்டாடும் பாஸ்கரின் வீட்டிற்குச் சென்றோம். இரவு பேசிக் கொண்டிருந்தோம்.
நீலகண்டன் ஏன் பண்டிகையில்லை?
 “தாத்தாவோட முதல் மனைவி இரண்டு நாளுக்கு முன்னாடி செத்துப் போயிட்டா.
எங்கே?
 ”தி நகரில். அத்தை வீட்டில் குடித்தனம் இருந்தார்
உங்க தாத்தா குடுமி வைத்திருப்பாரா?
இது என்னடா அசட்டுக் கேள்வி? அந்தக் காலத்தில் யார்தான் வச்சிக்கலை? அதனால்தான் தாத்தாவின் முதல் பொண்டாட்டி விவாகரத்து வாங்கிக் கொண்டார்.”
அவள் வேறு யாருமில்லை. என் ஒண்ணு விட்ட அத்தை. அந்தக் காலத்திலேயே சென்னையில் கான்வெண்டில் படித்தவள். பாட்டியினுடைய செல்லத்தினால் இப்படி கெட்டுப் போய்ட்டா. உன் தி நகர் அத்தையை ரொம்பவே புகழ்ந்து பேசுவா. நான் அப்பவே சொல்லலே வாய வெச்ச இடம் எல்லாம் சொந்தம்னு’.

என் அப்பா தன் சொந்த அத்தையின் பேத்தியையே மணந்தார். என் அடுத்த இரு சித்தப்பாவினரும் தன் அக்கா மகள்களையேத் திருமணம் செய்து கொண்டனர். கடைசி சித்தப்பாவுக்கு மட்டும் சொந்தத்திலில்லை. ஆனால் அதே மாவட்டம். அவர் ஒரே நாளில் பத்துப் பெண்களைப் பார்த்தார் என்ற விஷயம் எனக்கு இந்த வருடம் அக்டோபர் மாதம்தான் தெரியவந்தது. காரணம் வட ஆற்காடு மாவட்டதைச் சேர்ந்த, என் மனைவியின் சொந்தகாரர்களில் ஒருவர் அந்தப் பத்துப் பேரில் ஒருவர்.


என் பெரிய மாமாவின் மகள் ஒரு ஆங்கிலோ இந்தியனைக் காதலிப்பதைக் கேட்ட இரண்டே மாதத்தில், ஆஸ்பத்திரியில் மாரடைப்பில் என் மடியினில் உயிரை விட்டார் அவர் இறந்ததில் நான் நல்ல நண்பனை இழந்தேன்.  சிஏ பாஸ் பண்ணியதையும் என் வளர்ச்சியையும் பார்க்காமலேயே போய்விட்டார். ஒரு அல்ப விஷயத்துக்காக உயிரை விட்டு விட்டாரோ என்று கூட தோன்றும். மகள் இரண்டே வருடங்களில்  மாமியின் ஆசியுடன் வேளாங்கன்னி மாதா கோவிலில் கிருத்துவராக மாறி திருமணம் செய்து கொண்டாள். அதற்கு அடுத்த வருடமே பெரிய மாமி, அவர் அம்மா மற்றும் தம்பி, மாமாவின் ஒரே மகன் இவர்கள் அனைவருமே கிருத்துவர்கள் ஆக மதம் மாறினார்கள். மாமா உயிருடன் இருந்திருந்தால் மகளின் திருமணம் மட்டுமே நடந்திருக்கும் அவள் காதலில் உறுதியுடன் இருந்திருந்தால்.  கொல்லை புறம் தெரியாமல் கட்டிய மாமாவின் வீடு கைமாறிப் போனது போல், அவர்கள் யாருடனும் தொடர்பேயில்லாமல் போனது.

என் அத்தைகளின் மகன்கள் பெரும்பாலானோர் காதல் திருமணம்தான். அவர்களுக்கு மச்சத்திலே உடம்பு என்றே தான் நினைத்துக் கொள்வேன். 

நான்கு சகோதரர்களுக்கும் அம்மா அப்பா பார்த்த பெண்தான். நான் சீஏ ஆர்டிகிள்ஷிப் பண்ணிய நிறுவனத்தில் எனக்கு ரொம்ப ரொம்ப சீனியர் முரளி (T S முரளிதரன்) . அப்போது நான் என் நெருங்கிய நண்பன் ”ஜெ.வீ (ஜெ. வெங்கடேஷ்) பிராக்டிஸ் தொடங்கி இரு வருடங்களான சமயம். எங்கள் அலுவலகம் கோபாலபுரத்தில். உட்லான்ட்ஸ் டிரைவின்னில் காபி குடித்துக் கொண்டேயிருக்கும் போது முரளி வந்தான். ஏன்டா கல்யாணத்துக்கு இடம் பாக்கறாளா?என்றவுடன் என்னுடைய பார்ட்னர் நல்ல இடம் இருந்தா சொல்லு. இவா நார்த் ஆர்காட்எனறான். நானும் நார்த் ஆர்காடு தான். எங்க சொந்தத்திலே ஒரு பெண் இருக்கா. அவளும் சி ஏ தான் படிக்கிறா. இண்டர் பாஸ் பண்ணிட்டா. இந்த மே மாசம் பைனல் எழுதணும். அவா அப்பா அம்மவை இந்த சனிக்கிழமை வந்து பாக்க சொல்றேன். அட்ரஸ் குடு என்றான். நானும் AI 62 அண்ணாநகர் டெலிபோன் நம்பர் எல்லாம் குடுத்தேன். நானும் எங்க குடும்பத்தில் இதைப் பற்றிக் கூறினேன். அந்த சனிக்கிழமை வழக்கம் போல் நான் வேளச்சேரியிலிருக்கும் நண்பன் பாஸகர் வீட்டிற்கு சென்று விட்டேன். அந்த சனிக்கிழமை யாரும் வரவில்லை.

என் ரெண்டாவது அண்ணன் “எந்த பயத்தினாலோ ஜாதகம் குடுக்கறதுக்கு  வரலை. இந்த அழகு சுந்தரத்தை எங்கேயாவது பாத்து தொலைச்சுட்டாளா? திங்கள் கிழமை வழக்கம் போல் உடலான்ஸ். ஜெ.வீ “வந்தா ளாடா? “வரலை. கரெக்டாக முரளி வந்தான். ஏண்டா அவா வந்தாளா? வரலையே இல்லையே கட்டாயம் போறேன்னுதானே எங்கிட்ட சொன்னா. இன்னிக்கி போய் பேசிட்டு உனக்கு நாளைக்கு பண்றேன்” அடுத்த நாள் வர சனிக்கிழமை அவா கட்டாயம் வருவா”  என்றான்.

வந்த உடன் அவர்கள் கேட்ட கேள்வி ஜாதகம் பார்ப்பீங்களா”. அம்மா கல்யாணத்துக்கு கட்டாயம் பார்ப்போம்” .  ஜாதகம் மாற்றி, ஜாதகம் இரு வீட்டாருக்குமே பொருந்தி, மே மாதம் பரீட்சை முடிந்து 15ஆம்  தேதி, திங்கட் கிழமை மாலைப் பெண் பார்த்தேன். வீட்டிற்குப் போய்  பிறகு போன் பண்ணுகின்றேன் என அப்பா அவர்களிடம் தெரிவித்தார். அன்று ஒரு இரவு அவகாசம் குடுப்பதாகவும் காலையில் என் முடிவை சொல்ல வேண்டும் என்றார்.

காலையில் சரி என்று சொன்னேன். என பெரியண்ணாவின் மகன் என்னை ஏமாத்திட்டியே சித்தப்பா. நம்ம ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்காம இப்படியே இருக்காலம்னு தானே பேசி வைச்சிந்தோம். அப்பா அவர்கள் வீட்டிற்குப் போன் செய்து எங்களுக்குப் பிடித்திருக்கின்றது. நீங்கள் உங்க பெண்ணைக் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் என்றார். அவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் மாங்காடு போய் அப்போதுதான் வீடு திரும்பியிருந்ததாகவும், இந்த மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது சந்தோஷம் என்றும் அவர்களுக்குப் பூரண சம்மதம் என்றும் மேற் கொண்டு “Termsபேசுவதற்காக அன்று சாயந்திரம் வீட்டுப் பெரியவர்களுடன் at) வருவதாகக் கூறினர். பெரியவர்கள் என் மனைவியின் பெரிய தாத்தாவும் பெரிய பாட்டியும். அப்பா பேசிய ஒரே ஒரு Term நிறைய மனுஷா எங்களுக்கு. நல்லா கவனிச்சு, நல்லா சாப்பாடு போடணும்; அவ்வளவுதான்.

எனக்கும், எனக்கு மூத்தவனுக்கும் வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே துணையாக அமைந்தனர். ல்யாணம் நிச்சயமாயிருக்கு என்று சொன்னவுடனேயே நீலகண்டன் எந்த ஊர்? எந்த கிராமம்? எங்கயிருக்கா?நானும் அவா சென்னைதான். அப்பாவோட சொந்த ஊர் கீழானூர். பெரியவா இருக்கிறது திருவண்ணாமலை. நல்ல குடும்பம்னு அப்பா பீல் பண்றா. ஆதுவுமில்லாம அவா அப்பா அம்மா சைடிலே சம்பூர்ண சாஸ்த்திரியார் உறவாம். உனக்கு தெரியுமா இவாளை? என்றேன்.  உடனேயே அவா நடிகர் ஜெய்சங்கர் வீட்டு மனைவிக்கு நெருங்கிய உறவு என்று ஜம்பமடிப்பா பார் என்றான்.
அப்போது அடிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் விஜய் டீவியில் “நம்ம வீட்டுக் கல்யாணம்நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் திருமண நிகழ்ச்சி காண்பிக்கும் போது, தான் சிறுமியாக் கல்யாணத்துக்குச் சென்றதையும் தன் பெரிய பாட்டியின் போட்டோவைக் காண்பித்து ரொம்பவே பெருமிதப்பட்டாள்.

சங்க இலக்கியத்தை நோக்கினால் தமிழ் சமூகத்தில் காதல், அதனால் வரும் களவியல் பிறகு இல்வாழ்க்கை மற்றும் கற்பியல் என்றே கூறுகின்றன. கற்பியல் என்பது திருமண வாழ்க்கையில் எப்படி ஒருவருக்கு ஒருவர் வாழவேண்டும் என்பதைக் குறித்ததே.

வால்மீகி இராமாயணத்தில் இராமன் வந்தான் வில்லொடித்தான் அதனால் திருமணம் என்று தான் கூறப்பட்டது. அதில் வில் ஒடிப்பவனுக்கு சீதையை மணமுடித்து வைப்பதாக ஜனகன் அறிவித்தப்படி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகின்றது.

கம்பன் இங்கு மூல காப்பியத்திலிருந்து விலகி இராமன் ஊருக்குள் நுழையும் போதே அவனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் வசப்பட்டு மாறன்  மலர்கனைகள் தாக்க என தன் தமிழ் மரபிற்கு ஏற்றவாறு அற்புதமான சித்திரத்தை வரைந்து காட்டுகின்றான். இது முழுக்க முழுக்க கம்பனின் கற்பனை என்போரும் உளர். வான்மீகத்தையே முதனூலாகக் கொண்டாரேனும், வடமொழியிலும் தமிழ்மொழியிலும் அமைந்த இராமாயணங்களின் கதைகளையும் தழுவிக் கொண்டாரென்றாலே ஏற்புடைத்து. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் “ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன், வேள்வி போற்றிய இராமனவனோடு, மிதிலை மூதூரெய்திய ஞான்றை, மதியுடம்பட்ட மாக்கட் சீதை என்று சுட்டியொருவர் பெயர்கொண்ட கைகிளைக்கு நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியச் செய்யுள் கம்பர் காலத்துக்கு முந்தியதென்பதும், இதில் இராம்பிரானுக்கும் பிராட்டிக்கும் நிகழ்ந்த உள்ளப் புணர்ச்சியாகிய மதியுடம்பாடு கூறப்பட்டிருத்தலும் காண்க என்கின்றார் வை மு கோ.  எப்படியிருந்தாலும் மிக அற்புதமான கவிதைகளின் சுவை நமக்கு.  

 பல இனிய காட்சிகள் கண்டும் கேட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர் சீதையைப் பார்த்தவுடன் மூவரும் நிற்கின்றனர். மூவர் மட்டும் நிற்கவில்லை கவியும் நிற்கின்றான் சீதையின் அழகை வர்ணிப்பதற்காக.

பொன்னின் சோதி. போதினின்    நாற்றம். பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை.    செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின்    மாடே. களி பேடோடு
அன்னம் ஆடும் முன்துறை    கண்டு. அங்கு. அயல் நின்றார்.

சீதை வடிவு: பொன்னின் சோதி. பூவின் நறுமணம்.  தேனின் தீஞ்சுவை. செஞ்சொல் கவியின்பம் ஆகியவை ஒரு வடிவம் எடுத்தாற்போலச் சீதை விளங்குகிறாள். ஐம்பொறிகளால் பெறப்படும் இன்பங்களில் ஒளி. நாற்றம். சுவை. ஓசை என்ற    நான்கைக்    கூறி    ஊற்றின்பத்தை    உபலட்சணத்தால்
உணரவைத்தார். கவி என்பது வளம்பெற்ற சொற்களைத் தனது உயிர்நிலையாகக் கொண்டது. தலால் செஞ்சொற்கவிஎனப்பட்டது. பொலிவே போல்என்பதைக் கவியின்பம்என்பதனோடு சேர்க்க வேண்டும். மத்திம தீபமாக பொன்னிலே ஒளி பொலிதல் போலவும், மலரில் நறுமணம் பொலிதல் போலவும், தேனிலே இன்சுவை பொலிதல் போலவும், கவிஞர் பாவில் செவ்விய ஓசையின்பம் பொலிதல் போலவும் (ஒளி முதலியவற்றோடு விளங்குபவளாகி) கன்னி மாடத்தின்  மேல்  அன்னப்பேடு பன்ற தோழியரோடு பெண் அரச அன்னம் போன்ற சீதை விளையாடும் முற்றத்தைக் கண்டு  அருகில் நின்றார்கள். தென்  -  தேன்  என்பதன் குறுக்கல் விகாரம்.

 உமையாள் ஒக்கும் மங்கையர்`    உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர்.    காட்சிக் கரை காணார்.
இமையா நாட்டம் பெற்றிலம்    என்றார்; ‘இரு கண்ணால்
அமையாதுஎன்றார் அந்தர    வானத்தவர் எல்லாம்.
 
மண்ணவர், விண்ணவர் சீதையைப் பார்த்தவர்கள் அவளது மேனியழகிற்கு எல்லை காண முடியாது வருந்தினார்கள். அவர்களிலே நிலவுலகத்தவர் தேவர்களைப் போலத் தமக்கு இமையா நாட்டம் இல்லையே என்று வருந்தினர். ஆனால் அவ் வானத்தவரோ தமக்கு
இமையா நாட்டம் இருந்தும் அவை இரண்டாக அமைந்தமையால் சீதையின் அழகை முற்றும் ஒருங்கே பார்க்க அவை போதா என்று குறைபட்டனர்.
பெருந் தேன் இன் சொல் பெண் இவள்     ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தரும் தான்என்றால். நான்முகன்    இன்னும் தரலாமே?-அருந்தா அந்தத் தேவர்    இரந்தால். அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது. என் இனி    நல்கும் மணிஆழி?
 
அமுதத்தைவிட ஒரு சிறந்த பொருளைக் கடலால் தரமுடியாதது போல், தான் படைத்துப் பழகிய மாந்தரைப் போன்ற மாதரையன்றி, இவளைப் போல் சிறந்த மங்கையை பிரம்மனும் படைக்க இயலாது. இதனால் சீதாப்பிராட்டி பிரமனால் படைக்கத் தக்கவளல்லள்: க்ஷீரசமுத்திரராசனிடத்தினின்றும் தோன்றத் தக்கவளுமல்லள்; அயோநிஜை என்பது குறிப்பிக்கப்பட்டது. நான்முகன் என்பதை பண்புத்தொகையாகக் கருதாமல், வினைத்தொகையாகக் கொண்டு, (தன்னை வந்தடைந்து வேண்டுவரது வேண்டுகோளை முடிக்கும் வல்லமையின்மையினாலுண்டான அவமானத்தால்) நால்- தொங்குதலடைந்த முகன் – முகத்தையுடையவன் என்று தொணிப்) பொருளுரைப்பர். “அருந்தா அந்த தேவர் இரந்தால்என்பது மத்திம தீபமாக முன் வாக்கியத்தோடும், பின்வாக்கியத்தோடும் இயையும்.  
பொன் சேர் மென் கால் கிண்கிணி.    ஆரம். புனை ஆரம்.
கொன் சேர் அல்குல் மேகலை.    தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில்    காண. சத கோடி
மின் சேவிக்க மின் அரசு    என்னும்படி. நின்றாள்.
 
பெண்களும் விரும்பும் சீதையின் அழகு என்பது கொடியன்னார் தன்சேர் கோலத்து இன்னெழில் காண’  என்னும் அடியால் பெறப்படுகிறது. சத கோடி மின் சேவிக்க மின் அரசு என்ன நளினமான கற்பனை.   
கொல்லும் வேலும் கூற்றமும்    என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும்என்ன    மதர்க்கும் விழி கொண்டாள்;சொல்லும் தன்மைத்து அன்று அது;    குன்றும். கவரும். திண்
கல்லும். புல்லும். கண்டு உருக.    பெண் கனி நின்றாள்.
தாம் இருந்தவிடத்திலிருந்தபடியே காமநோயை உண்டாக்கி ஆடவரை வருத்துதலால், பிறரிருக்குமிடத்துச் சென்று வருத்தும் தன்மையுள்ள வேலும் கூற்றமும் பிராட்டி கண்ணுக்கு உவமையாகா. வெல்லும் வெல்லும் - அடுக்கு. துணிவுப் பொருள் தருவது. ஜடப்பொருளும் கூட சீதையின் அழகைக் கண்டு உருகும் என்றால், இம்மூவரும் அங்கு நின்றதில் வியப்பில்லை.
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.
 
முற்றும் துறந்த முனிவனே அவளுடைய அழகைப் பார்த்து நின்றான்னெனில் இளையவர் இவர்கள் பார்ப்பதில் தவறொன்றுமில்லை. இவர்கள்தான் மேலேயே பார்த்துக் கொண்டு வருபவர்கள் அதனால் தான் அண்ணலும் நோக்கினான் என முதலில் இராமன் பார்ப்பதைக் கூறினார். யாரோ நம்மை உற்றுப் பார்க்கும் போது உள்ளுணர்வு தூண்ட நாமும் அவரைப் பார்ப்பதும் இயல்பே. அதானால்தான் அடுத்தது அவளும் நோக்கினாள். அண்ணலும்- உம் உயர்வு   

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
   
இராமன், சீதை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகினர். ஓர் ஆவிற்கு இரு கோடுபோல  ஒத்த   காதல் கொண்டவராயினர். தாக்கணங்கு: பார்க்கின்ற  ஆடவர்க்கு வேட்கையை  விளைவித்து அதனால் அவர்களைத் தாங்கும் தேவதை.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.
வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.
இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.
சீதை,. இராமன்: இருவரும் தம் கண் பார்வையால் காதல் கொண்டு ஒருவரது மனத்தில் மற்றொருவர் குடிகொண்டனர். இங்கே இராமனுக்குச் சீதையும் சீதைக்கு இராமனும் உயிராவார்கள் என்பது குறிப்பு. விற்படையும் வாட்படையும்.தலைமகனாகிய இராமனுக்கு விற்படை. ஆதலால் தலைவியான சீதைக்கு வாள்படை கூறியது நயம். இரு தலையிலும் வேறுபாடு தோன்றாதவாறு கூறிவருவதனால், தம்பதிகளது ஒப்புமை பெறப்படும்.
தானும் தன்னுடைத் திண்பால் நெஞ்சினைத் திரிதல் ஒன்றின்றி என்னுழை நிறீஇ’ (பெருங்கதை 3:8:96-97)  
நாட்டம்  இரண்டும் அறிவுடம்   படுத்தற்குக் கூட்டி யுரைக்கும்
குறிப்புரையாகும்’ (தொல். பொருள். 66)       
 மருங்கு இலா நங்கையும். வசை இல் ஐயனும்.   
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்-
கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால். பேசல் வேண்டுமோ?  இடையில்லாத (நுண்ணிய இடையைக்
கொண்ட) சீதையும்;  குற்றம் இல்லாத இராமனும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மிக்க காதலால்);   ஒன்றுபட்ட  இரண்டு  உடல்களுக்கு;  ஓர் உயிர் என்று சொல்லுமாறு ஆனார்கள்;  மிகப்  பெரிய  பாற்கடலில்  ஆதிசேடனாகிய  பாம்புப் படுக்கையிலே;  (ஒருவரோடு ஒருவர் கலந்திருந்த) கூட்டம் நீங்கி;  (தனித்தனியே)  பிரிந்து சென்றவர்கள்;  மீண்டும் (ஓர்  இடத்தில்) சேர்ந்தால் (அவர்களுக்குள்  உண்டாகும்  காதலைச்) சொல்லவும் வேண்டுமோ?  ‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள். என்ன பயனும் இல’ - குறள்:. இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்த அளவில் இரு உடல்களுக்கு ஓர் உயிர் அமைந்ததுபோல மனம் ஒன்றுபட்டார்கள் என்றார்கள். காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே  மணி கலந்தாங்கு’  (திருக்கோவை) அவ்விருவர் ஆன்மாவும் ஒன்றே  என்று
காட்டுகிறார். கரிய கடல் நீலமணி நிறத்தவனான திருமாலின் திருமேனிச் சாயையால் அப்பாற்கடலின் நிறம் மாறியது என்பது குறிப்பு. நயம்: சீதை மருங்கு இலா நங்கை; இராமன்வசை இல் ஐயன்.    
அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்.
பைந்தொடி. ஓவியப் பாவை போன்றனள்;சிந்தையும். நிறையும். மெய்ந் நலனும். பின் செல.
மைந்தனும். முனியொடு மறையப் போயினான்.                                        
(செல்லும்  இராமனைத் தொடர்ந்து போன) முடிவில்லாத (கண்  இமையாது  பார்த்துக்
கொண்டேயிருப்பதால்) பார்வை உடைய அவளது இமைகள்; பொருந்தாதலால்;  பொன்
தொடி அணிந்த சீதையானவள்  சித்திரப் பதுமை போல (அசைவற்று) நின்றாள்வளது  மனத்தின் நினைப்பும் உறுதியும்;  உடல் அழகும்;  (தன்பின்னே) தொடரும்படி  இராமனும் விசுவாமித்திர முனிவனோடு; கண் பார்வை மறையுமாறு சென்றான்.
இராமன் முனிவர் பின்னே செல்லும்போது சீதையின் பார்வை அந்த இராமனையே தொடர்ந்து செல்ல அச்சீதையே கண் இமைத்தால் அழகனைக் காண்பது நின்றுவிடுமே எனக் கருதிக் கண்கொட்டாது நின்றாள். அப்படி நின்றநிலை ஓவியப்
பாவை போன்றது என்றார்.
சீதையின் மனம் அவன்பின்னே சென்றதால் பெண்மைக் குணத்தை அவளால் அடக்க இயலவில்லை; ஆதலால் தன் மனக் காதலை வெளிப்படுத்தினாள். இத்தகைய காம விகாரத்தால் அவளது உடலழகும் குறைவுற்றது .    
கம்பனின் இராமாயணத்தை கம்ப சித்திரம் என்றும் கம்ப நாடகம் என்று பலவாறாக கூறுகின்றனர். எனக்கு பலவிடங்களில் அவர் ஒரு சிறந்த தேர்ந்த திரைக்கதையாளராக/ இயக்குநராக, ஏன் உண்மையான சகலகலா வல்லவனாகத் தோற்றமளிக்கின்றார். அது போல தோற்றமளிக்கும் பலவிடங்களில் இதுவும் ஒன்று. அதுவும் லாஜிக்கிலிருந்து சிறிதும் விலகாத திரைக் கதையாளராக.

எனக்கு வீடியோ எடுப்பதில் மிக்க ஆர்வமுண்டு. அழகான கேமராகோணம் முதல் ஷாட் வரை,  லைட்டிங், எடிட்டிங்  இசைக்கும் சேர்த்துக் குறிப்பெழுதிய முழுமையான ஒரு ஸ்கிரிப்டைப் படிப்பது போலத்தான் தோன்றுகின்றது.

(அந்திமாலை அவர்கள் நகருள் நுழையும் சமயம்) லாங் ஷாட்.(மிதிலை கோட்டைக் கொடிகள் தூரத்தில்) இம்மூவர். கடைவீதி, தெருவில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒவ்வொரு காட்சியுமே ஒன்றின் மேல் ஒன்று மோதும் வகையில்(ஃபேட் இன்/ஃபேட் அவுட்). சாளரங்கள் தோறும. தோன்றிய சந்திர உதயம் போல் பெண்கள் தோன்றுவது (மாடம் தோறும் விளக்கொளி எரிய ஆரம்பிக்கின்றது)  மகளிர் மேல் மட்டும் விழும் விளக்கின் ஒளி..  கிரேன் ஷாட் ... மேலே.. சீதையின் மாளிகை உட்புறத்திலிருந்து அழகாக நடந்து வருவது ... மேலே சாளரம். பிறகு... நடந்து வரும் மூவர்...அவ்விடம் நிற்பது ... க்ரேன் ஷாட் சீதையின் டைட் க்ளோசப்.. டிராலி ஷாட் மொத்த அழகையும் பார்ப்பதற்கு.. மறுபடியும்  இராமன் முகம் மட்டும்...  காதல் கண்களில் பொங்கிவர சீதையைப் பார்ப்பது,.. சீதையும் உள்ளுணர்வு தூண்ட இராமனைப்  பார்ப்பது மாறி மாறி இருவரும்.... பின்னணியில் 100 வயலின்களின் இனிமையான, சுகமான வசந்த ருதுவின் வருகையைக் குறிப்பதற்கான இராகத்தில் அமைந்த இசை ...மூவரும் போகின்றார்கள்.. சீதை அவர்களையே பார்த்து கொண்டிருக்க.. சூரியன் மறைவதை நோக்கி.. ஒரு புள்ளியாய் தேய்ந்து போகிறார்கள்...2விநாடி டார்க்னெஸ்   இப்படி என் கற்பனை குதிரை தறிகெட்டு ஓடுகின்றது. (நன்றி M. ஸ்ரீதரனுக்கு. இதையெல்லாமும் சொல்லிக் கொடுத்ததற்கு. எம் ஸ்ரீதரன் என்ற பெருமையும் உண்டு.)


Friday, March 16, 2012

மாற்றல்

அப்பாவின் நண்பர்கள் சிலர், குழந்தைகள் படிப்பிற்காக,  குடும்பத்தை மெட்ராஸில் விட்டு விட்டு, அவர்கள் மட்டும் ஊர் ஊராகச் சென்றனர். தனியாக வசிப்பு சமையல்.  அப்பாவிடம் கேட்டால் “ எனக்கு வர சம்பளத்திலே என்னால இரண்டு குடும்பத்தை பராமரிக்க முடியாது. அதுவுமில்லாம பொண்டாட்டி, பசங்களைவிட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டேன்எனத் தெளிவாகக் கூறுவார். அம்மாவைக் கேட்டாலோ அப்பாவிற்கு ஒரு காபி போட்டுக்கத் துப்பு இருக்கா? இவரை எப்படி தனியா விட்டுட்டு இருப்பது. போயும் போயும் மெட்ராஸ்லே ? என் அத்தைகள் இருவர் சென்னையில் இருந்தனர். பெரிய மாமாவும் சென்னையில் கீழ்பாக்கம் கார்டன் காலனியில்தான் இருந்தார். அம்மாவிற்குச் சென்னை என்பது காஸ்ட்லியான இடம் தனக்குக் கட்டுபடியாகாது என்ற அபிப்ராயம்.

பெரிய மன்னி, என் மனைவி இவர்கள் பிறந்தது முதல் ஒரே ஊரிலே, ஒரே வீட்டிலே, எல் கே ஜி யிலிருந்து பள்ளிப் படிப்பு முடியும் வரையில் ஒரே ஸ்கூலிலேயே படித்தவர்கள். ஒரே தெருவில் இருந்தவர்களுடன்  ஒரே பேட்ச்சில் கல்லூரியில் சேர்ந்து முடித்தவர்கள். இதைக் குறித்து ரொம்பவே சுய தம்பட்டம் அடிப்பவர்களும் கூட. “அது எப்படிதான் வீடு மாறுவீங்களோ? அதே தலையணை, போர்வை இல்லாமல் எப்படி தூங்குவது? என்று கேள்விகள் வேறு.

நான் ஒண்ணாவதிலிருந்து எஸ் எஸ் ல் சி வரையில் இருந்தது ஆறு ஊர்களில். புது ஊரில் போய் செட்டில் ஆகி, பிள்ளை பிடிப்பவன் போல் நண்பர்களைப் பிடிப்பதற்கே குறைந்தது ஆறேழு மாசமாகும். அவர்களை என் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடிக்க வேண்டும். இது எல்லாமே நடந்து விட்டால், உடனேயே மாற்றல் வந்துவிடும். மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் அடுத்த ஊரில் மீண்டும் பிள்ளைபிடிக்கும் முயற்சி ஆரம்பம். எனக்கு ஒரேயொரு அதிர்ஷ்டம். ஒன்பாதவது காலாண்டுக்குப் பிறகு எஸ் எஸ் எல் சி  பரிட்சை எழுதுகின்ற வரைக்கும் ஒரே ஊர், கடலூர். அப்பாவிற்கு மெட்ராசிலிருந்து மண்டபம் (பனிஷ்மெண்ட் ஏரியா. சமீபத்திய உதாரணம். ஜாபர் சேட்) மாற்றலாகிய போதும், பிரோமோஷன் கொடுத்துவிட்டு ரிவர்ஷன் வந்து விடுமுறையிலிருந்த போதும், அண்ணன்கள் இருவரும் பல மாதங்கள் ஸ்கூல் போகமலேயே இருந்திருக்கின்றனர் சித்தூர் தாத்தாவின் வீட்டில்.

சித்தூரிலிருந்து 100 மைல் சுற்று வட்டாரத்திற்குள், அப்பா எங்கும் எதைப் பற்றியும் எங்கள் படிப்பையும் சேர்த்து, கவலைப் படாமல் கிளம்பிவிடுவார். பொதுப் பணித் துறையில் நேர்மைக்குக் கிடைத்தப் பரிசு மாற்றல்தான். பல வருடங்களுக்குப் பிறகு எம்ஜிஆர் ஆட்சியின் போது அவருடைய வெள்ள நிவாரணம் மற்றும் வரட்சிக்காலப் பணிகளுக்காக அப்பாவிற்குத் தங்க மெடல் கிடைத்தது. அப்போது அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் “இதை வச்சு என்னையா கிழிக்கப் போற? பொழைக்கத் தெரியாது ஆளூய்யா நீ. கொஞசம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தேன்னா மெட்றாஸ் அண்ணநகர்லே நாலுவீடு வாங்கியிருக்கலாம்”   

கடலூரில் நான் படித்த செயிண்ட் ஜோசப் ஸ்கூலில் ஹாஸ்டல் வசதி உண்டு. ஹாஸ்டலில் இருப்பவர்கள் எல்லாம் சுதந்திரமாக இருப்பவர்களாகவும் தங்கள் காரியத்தைத் தாங்களே செய்து கொள்வதில் வல்லவராகவும் இருப்பதாக எனக்குள் நம்பிக்கொண்டிருந்தேன். பெரிய அண்ணன், சிதம்பரத்தில் ஹாஸ்டலில் தங்கித்தான் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தான். கல்லூரி படிப்பு ஹாஸ்டலில் தான் என தீர்மானித்தும் வைத்திருந்தேன்.

மார்க்‌ஷீட் வாங்குவதற்காக பஸ்ஸில் திருத்தணியிலிருந்து திருவண்ணாமலை வழியாக கடலூர் பயணித்தேன். நண்பன் ரங்கநாதனின் வீட்டில் தங்கினேன். அவன் அப்பா ஹைவேஸ் இஞ்சினியர். அப்போதுதான் அவர்கள் கடலூரில் வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் செய்திருந்தனர். அன்றிரவு ரமேஷ் தியேட்டரில் ராஜ ராஜ சோழன்படம் பார்த்துவிட்டு, இரவு டீக்கடையில் டீ குடித்துவிட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதைப் பற்றிய கனவுடன் வீடு திரும்பினோம்.

சென்னைக்கு அண்ணனுடன் போகும் போது தி நகரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு போவதற்குள் 9 ஆம் நம்பர் பஸ்ஸிலிருந்து ஸ்டர்லிங் ரோடைக் காண்பித்து, இந்த ரோடு கடைசியில் தான் லயோலா காலேஜ். விவேகானந்தா காலேஜ் மயிலாப்பூர்ல இருக்கு. நாளை இரண்டிற்கும் அப்ளை பண்ணணும். அவன் அஹமதாபாத்தில் உள்ள ஐ ஐ ம் மில் படிப்பதற்கான நேர்முகத் தேர்விற்காகவும் வந்திருந்தான். அத்தை வீடு போய் சேர்ந்தவுடன் சித்தப்பா “நான் ஏற்கெனவே ஏ எம் ஜெயின்லே பர்ஸ்ட் குரூப் சொல்லி ரிசர்வ் செய்து விட்டேன்நான் லயோலா என சொல்லும் போதே “லயோலா காலேஜ் நம்ம குடும்பத்துக்கு ஆகிவராத காலேஜ் என்றார்.  ஏன் ஆகிவராது என்றதற்கு சித்தூர் தாத்தாதான் சொன்னா நீ வேண்ணா சித்தூர் தாத்தாவைக் கேட்டுக் கொள்’.  இனி இந்த பிறப்பில் லயோலாவும் இல்லை, இன்னொரு சித்தப்பா படித்த விவேகானந்தாவும் இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்தேன். சரி ஹாஸ்டலிலாவது இருக்கலாம் என்ற நினைப்பிலிருக்கும் போது அடுத்த நாள் சித்தப்பா சீனண்ணா கிட்டே பேசிட்டேன் இந்த வீட்டில்தான் தங்க போற.  ஹாஸ்டல் வேற தண்ட செலவு என் சுதந்திரக் கனவு முழுமையாகத் தகர்ந்தது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும். வேறு வழியேயில்லை என்பதினால் அமைதி காத்தேன். 

நான் சித்தப்பாவின் வீட்டில் தங்கி மீனம்பாக்கம் ஏம் ஜெயினில் படித்தேன்.  தாம்பரத்தில் வசித்து வந்த இன்னொரு அத்தையின் இரண்டு மகன்களும் அப்போது அதே கல்லூரியில் படித்தனர். அவர்கள் எல்லாம் காண் டீ னில் சாப்பிடுவார்கள். எனக்கு(வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போன தயிர் சாதம்தான். புத்தகம் மற்றும் நோட்டுகளுக்கு கட்டாயம் பிரவுன் பேப்பர் அட்டைப் போட்டு லேபிளில் பேர் எழுதி வைக்க வேண்டும் என்பது என் சித்தப்பாவின் கட்டளைகளில் ஒன்று. தயிர் சாதம் எவ்வளவுதான் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி எடுத்து சென்றாலும் ஒழுகி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பிரவுன் பேப்பர் கத்திரிக் கோல் சகிதம் ஞாயிற்று கிழமை பொழுதுகள் கழிந்தன.



சித்தப்பா வசித்தது பெரிய அத்தையின் வீட்டு மாடியில். அத்தையின் வீடு பெரிய பங்களா. ஐந்து கிரவுண்டில வீடு. அவுட் ஹவுஸ், இரண்டு கார் கராஜ் என, வாணி மஹாலுக்கு எதிர்ப்புறம், குப்புசாமி ஸ்ட்ரீட்டில் 7ம் நம்பர் வீடு. அத்திம்பேரை நான் பார்த்த ஞாபகமேயில்லை. அத்தைக்கு மொத்தம் 10 பசங்கள். இரு பெண்கள் மற்றவர் எல்லாம் ஆண்கள். நிறைய மாமரம் இருக்கும். எல்லாம் ஊறுகாய் போடத்தான் ஆகும். பெங்களூரா மரம் ஒன்று கூட இல்லை. அந்த காலத்திலேயே அத்திம்பேர் டாக்டர். பாண்டி பஜாரில் கிளினிக்கல் லாப் வைத்திருந்தவர். பத்துக் குழந்தைகள் பிறந்தவுடன் அகாலமரணம். அதற்கப்புறம் விட்டை எல்லாம் ரீ மாடல் பண்ணி அத்தைக்கு வாடகை வருமானம் வரும்படி செய்தார் தாத்தா. அத்தைவீட்டு காரஜில் யாராவது சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள் குடியிருப்பார்கள். ஸ்ரீகாந்த், நான் போன போது கீதா. அத்தைவீட்டிற்கு நாலு வீடு தள்ளி டிகே பட்டம்மாள் வீடு. நாடக நடிகர் ஏ ஆர் எஸ்ஸும் அதே தெருவில் வசித்தனர். எதிர் புறம் இருக்கும்  கமலாம்பாள் தெருவில் நடிகர் பாலையா வீடு.   

எவ்வளவு யோசித்தாலும் எனக்கு மாற்றல் இல்லாமல் ஒரே ஊரில், ஒரே வீட்டில்  வசிப்பது சீக்கிரமே சலிப்படைய வைக்கும் என்றே தோன்றுகின்றது. புதுப் புது ஊரில் புதிய மனிதர்கள், புதிய கடைத்தெருக்கள், புதிய கோவில்கள், புதிய நண்பர்கள், ஏன் பேசுகின்ற மொழியேக் கூட புதிதாக இருக்கும். புதிய மனிதர்களைப் பார்த்து, பழகி பேசுவதற்கும் இந்த மாற்றல்கள் என்னைத் தயார் படுத்தின. எல்லோரிடமும் தயங்காமல், சங்கோஜமில்லாமல் பழகுவதற்கும் அதுவே காரணம்.  புதியவை எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வெகு விசேஷமாக உள்ளவை மட்டுமே நம் சிந்தையையும் மனதையும் கட்டி நிறுத்தி விடுகின்றன.




முனிவனுடன் வரும் இராமலக்‌ஷ்மணர்கள் மிதிலை நகரையடையும் முன் கொடிகளைப் பார்க்கின்றனர். தூராத்தே ஆடி அசையும் அக்கொடிகள் இராமனை உன்னை விட்டுப் பிரிந்த மஹாலக்‌ஷ்மி இங்குதான் உள்ளாள். சீக்கிரம் ஓடி வருவாயாக என்று அழைப்பது போலிருந்தது என்று கம்பன் தன் குறிப்பைக் கொடிகளின் மேலேற்றி
மை அறு மலரின் நீங்கி.    யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்என்று.    செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்    கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ஒல்லை வாஎன்று    அழைப்பது போன்றது அம்மா!
மை- குற்றம்
ஒல்லை வா – விரைந்து வா.
தாமரைமலருக்குக் குற்றம் – மலர்ந்து பின் குவிதலும் வாட்டமடைதலும்.. மலரினீங்கி வந்து செய்யவள் இருந்தாள் “ மிதிலாநகரம் திருமகளுக்கு செந்தாமரையினும் சிறந்த வாசஸ்தலமாகும் என்பதை உணர்த்தினார். அத்தகைய தகுதி நல்வினையினாலன்றி கூடாதாதலின் “ யான் செய் மாதவத்தின் வந்துஎனக் கூறினார். மேலும் கொடிகள் அசைவதை ஸ்ரீராமபிரான் வரம்பில் பேரழிகியான சீதாபிராட்டியை மணமுடிப்பதற்கு வருகின்றான் என்று வானுலகிலுள்ள தேவலோகப் பெண்கள் நாட்டியமாடுவது போலிருந்தன எனறும்  கூறுகின்றார் கவி.

அப்போதுதான் கருணாநிதி மாணவர்களுக்காக மாதம் 15 ரூ பஸ் பாஸ் ஆரம்பித்த
நேரம். கீழ் வீட்டில் குரு நானக் கல்லூரியில் மற்றும் நியூ காலேஜில் படிக்கும் அத்தை மகன்கள் ஏற்கெனவே வாங்கி விட்டனர். அவர்களிடம் கேட்ட போது நீ அமெரிக்கன் லைப்ரரி போணும்னு சொல்லு. அப்பதான் குமார் மாமா ஒத்துப்பா. எனக்குச்  சித்தப்பா. அவர்களுக்கு மாமா. நான் போய் பஸ் பாஸ் வாங்கணும்னு கேட்ட போது “வாணி மஹால்லேந்து மாம்பலம் ஸ்டேஷனுக்கு பத்து பைசா. ஒரு நாளைக்கு இருபது பைசா. ஒருவாரத்துக்கு ஒரு ரூபா. மாசத்துக்கு நாலு ரூபாதான். சனி ஞாயிறு ரெண்டு நாளும் நீ ஜெமினிக்கு போய்ட்டு வந்தாக் கூட மாசத்துக்கு ஐந்து ரூபாய்க்கு மேல் செலவு இல்ல. பதினைந்து ரூபா ரொம்ப வேஸ்ட் என்றார். நான் ஒருவன்தான் அப்போது பஸ் பாஸ் இல்லதவனாயிருந்தவன்.

கடலூர் நண்பன் ரங்கநாதன், திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் ஸ்கூலில் படித்த நண்பர்கள் ரமேஷ் பாபு, அருணாச்சலமும் லயோலா கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தனர். அவள் ஒரு தொடர் கதை அப்போது ரிலீஸ் ஆகியிருந்தது. நான் நண்பர்களுடன் போகலாம் என்று முடிவு செய்துவிட்டு சித்தியிடம் நான் சினிமா போகப் போகிறேன் அவள் ஒரு தொடர்கதை என்றேன். சித்தப்பாவிடம் பர்மிஷன் வாங்கிண்டு  வேணா போய்ட்டு வா என்றார். அவர்கள் வீட்டில் வசிப்பதற்கு முன்பு வரை அவளை(ரை )ப் பேர் சொல்லித்தான் அழைத்து வந்தேன். சித்தப்பா அப்படி அழைப்பது தப்பு என்று சொல்லவும், கஷ்டப்பட்டு சித்தி என்றழைக்க ஆரம்பித்தேன். நான் எதிர் பார்க்காத காரணத்தால் நான் அந்த சினிமா பார்க்கமுடியாமல் போனது. சித்தப்பாவிடம் சினிமா போவதைப் பற்றி சொன்னதும் எந்தப் படம் என்றார். சொன்னேன். அது அடல்ட்ஸ் ஒன்லியாச்சே. அதெல்லாம் நீ பார்க்கக்கூடாது என்றார். நான் எட்டாவது படிக்கும் போதே அப்பாவுடன் ஆராதனா படம் பார்திருக்கிறேன் என்றதையும் மீறி எனக்குத் தடா. 

முதலில் வரவேற்பது போலிருந்த சென்னை என்னை போ போ என்று சொல்வது போலிருந்தது. அடுத்த வருடமே பட்டப்படிப்பிற்காக விழுப்புரத்திற்கு அப்பாவிடம் திரும்பினேன்.

இவர்கள் நகரினுள் நுழைந்து காணும் பல காட்சிகளை விவரிக்கின்றார்.
மிதிலை நகரின் மதில்கள் பொன்னாலானது. அதன் அழகை வர்ணிக்க கவி சீதையின் அழகையே அதற்குக் காரணமாக்கி
ஆதரித்து. அமுதில் கோல் தோய்த்து.    ‘அவயமம் அமைக்கும் தன்மை
யாது?’ எனத் திகைக்கும் அல்லால்.    மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே.   திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும்    பொன் மதில். மிதிலை புக்கார்.
உலகத்தார் யாவரது அழகையும் வரையறுத்து உணர்ந்தும், ஆண் பெண் மக்களின் மனதை, தன் வடிவத்திலிருந்தே ஐங்கனைக்(what is this word?) கொண்டு மூவுலகையும் தன் வசப் படுத்தும் மன்மதன், வரம்பில் பேரழகியான சீதையின் வடிவத்தைத் தானே சித்திரம் அமைக்க வண்ணப் பொருள் அமிழ்தமேயென்று தீர்மானித்து அமிர்தத்தில் எழுதுகோலை தோய்த்தெடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினாலும் அவளது அழகை எவ்வகை எழுதுவது எனத் திகைப்பானேயல்லாது அச்சீதையின் அவயங்களுளொன்றைக் கூட சரிவர எழுத முடியாது என அவளது கட்டழகை வர்ணித்தார். ஜனகன் வேள்விக்காக உழுத பொழுது கலப்பை உழுபடைச்சாலில் அகப்பட்டவளாதலால், சீதையென்ற திரு நாமம். ஸீதா- உழுபடைச் சால். மதிலை தாண்டி அவர்கள் மிதிலை நகரினுள் புகுந்தனர்.

அவர்கள் வில் கலை நுதலினாரும்.    மைந் தரும். வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட    நெடுந் தெருஅதனில் போனார்.  கிடந்த- கீழே விழுந்து கிடக்கின்ற பெரும் குவியலான ஆபரணங்களை விரும்பியெடுக்கும் வறியர் வேறு ஒருவர் இல்லாமையால் – கிடந்த எனும் இச்சொல்லின் மூலம் அங்குள்ளார்களின் செல்வ மிகுதியைச் சுட்டிக் காட்டுகின்றார்.

மாட நெடும் தெருவிலிருந்து யானைகளும் குதிரைகளும் மிகுதியாக நடமாடுவதால் கருநிற நதி உண்டாகிய வீதியிலும், கலவியில் வீசியெறியப்பெற்ற மாலைகளின் குவியல்கள் மலையாக இருக்கும் மணி நெடுந் தெருவிலும் சென்றார்கள்.

நெய் திரள் நரம்பின் தந்த    மழலையின் இயன்ற பாடல்.
தைவரு மகர வீணை    தண்ணுமை தழுவித் தூங்க.
கை வழி நயனம் செல்    கண் வழி மனமும் செல்ல.
ஐய நுண் இடையார் ஆடும்    ஆடக அரங்கு கண்டார்.

நெய் திரள் நரம்பின்- தேனொழுக்குபோல் திரண்ட வடிவமான யாழ் நரம்பினிசை போல்
தண்ணுமை – மத்தளத்தின் ஒலி

பாட்டுப்பாடிக் கொண்டே அபிநயத்துடனே ஆடுதல் செய்யுமிடத்துச் செய்யும் முறைமை நான்கு வகையிலாகும்: கையும் கருத்தும், மிடறும், சரீரமும் என. இவை நான்கினுள் “ கைவழி நயனம் செல்லஎன்றதனால் கருத்தின் தொழிலையும், “ மழலையின் இயன்ற பாடல்என்றதனால் மிடற்றின் தொழிலையும் ஆடும் என்றதனால் சரீரத்தின் தொழிலையும் கூறினார். யாழ்நரம்புக்குத் தேனொழுக்கு உவமை. நெய் தேன் எனப் பொருளாதலை :நெய்க் கண்ணிறா அல்என்ற கலித்தொகை பகுதியாலும் அறியலாம். நெய் திரள்என்பதற்குக் கறை பிடியாதிருத்தல் பொருட்டு நெய்பூசப்பட்டுள்ள யாழ் என்று பொருளுரைப்பாரும் உளர்.
நாடகசாலைக்குரிய கூத்தி (நடன மங்கை) முதலியோரின் அமைதிகளுள் தன்னுமை முதல்வன் இவர்களமைதி “தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித தூங்கஎன்றதனாலும் கூத்தியமைதி “ ஐய நுண்ணிடையார்என்றதாலும், அரங்கினமைதி “ஆகவரங்குஎன்றதனாலும் கூறப்பட்டன. “மனதின் வழிக் கண்செல்லஎன்பது “ கண்வழி மனம் செல்லஎன்றது பயிற்சி மிகுதியை விளக்கிற்று.  

வள் உகிர்த் தளிர்க் கை நோவ    மாடகம் பற்றி. வார்ந்த
கள் என நரம்பு வீக்கி.    கையொடு மனமும் கூட்டி.
வெள்ளிய முறுவல் தோன்ற   விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளிப் பாணித் தீம் தேன் செவி மடுத்து. இனிது சென்றார்.

கூர்மையான நகங்களியுடைய தளிர் போல மெல்லிய தமது செங்கைவிரல்கள் நோகும்படி:  வீணையின் முறிக்காணிகளைப் பிடித்துத் திருகி:  ஒழுகின்ற தேந்தாரி போன்ற அவ்யாழ் நரம்பை இறுக்கூட்டி, கையொடு மனமும் கூட்டி அந்நரம்புகளின்மேல் வருடச்செல்லுகின்ற கைவிரல்களின் குறிப்புடனே மனதையும் பதியவைத்து; வெண்ணிறமான தமது புன்சிரிப்பு வெளிப்பட,  புதிதாய் வந்தவர்க்கு இனிய உணவிடுதல்போலே கொடுத்த தெள்விளிபாணி  தெளிவான இசையோடு கூடிய பாட்டாகிற இனிப்புள்ள தேனை செவி மடுத்து மூவரும் இன்பமாகச் சென்றார்கள்.

இத்தகைய இனிய கீதத்தைக் கேட்டதனால் உண்டாகிற ஆனந்தத்தால் வழிநடந்து செல்லும் இளைப்புத் தீர மூவரும் இனிது சென்றனர். வீணை வாசிப்போர்க்கு அவ்வாசிப்பினையால் இயல்பாக உண்டாகும் மனமகிழ்ச்சியைக் காட்டும் இனிய பார்வையையும் புன்னகையையும், விருந்தினரை இனிது நோக்கிப் புன்முறுவல் புரிந்து உபசரிக்கும் செயலாக அமைத்துக் கொண்டார். மாடகம்பற்றி நரம்பு மீட்டுதலால் கைக்கு நோவுண்டாகிறதெனெ மகளிரது மிக்க மென்மைத் தன்மையைத் தெரிவித்தார். மாடகம் என்பது நால் விரலளவான பாலிகை வடிவாய் நரம்பை மீட்கும் கருவி. கையோடு மனமும் கூட்டி என்றது கீதத்தில் ஒழியப் பிறிதொன்றில் மனம் வையாமல் மனோவேகமாகக் கையை விசைபடச் செலுத்துவதைக் கூறியவாறு. “வெள்ளிய முறுவல் தோன்ற என்றதனால் அதிக சிரமில்லாமல் அரிய கீதங்களையும் உல்லாசமாக எளிதில் பாடவல்ல தன்மை உணர்த்தப்பட்டது. புன்சிரிப்புச் செய்யும் காலத்துப் பற்களின் வெள்ளொளி சிறிது வெளித் தோன்றுமாதலால் “ வெள்ளிய முறுவல் தோன்ற என்றார். செவிமடுத்தல் – வாயால் உண்ணல் போலக் காதால் கேட்டு மகிழ்தல்.

வாளரம் பொருத வேலும்.    மன்மதன் சிலையும். வண்டின்
கேளொடு கிடந்த நீலச்    சுருளும். செங் கிடையும். கொண்டு. நீள் இருங் களங்கம் நீக்கி.    நிரை மணி மாட நெற்றிச்
சாளரம்தோறும் தோன்றும்    சந்திர உதயம் கண்டார்.

தெருவில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக உப்பரிகைமேல் சாளரங்கள் தோறும் நிற்கின்ற மகளிரது முகங்களின் தோற்றத்தைக் கண்டமை கூறும். வானத்தில் காண்பதனாகிய சந்திரன் ஒன்றே ஒன்றுதான். அதுவும் பகலில் ஒளிமழுங்கியது; களங்கமுள்ளது; இவர்கள் வீதிவழியே செல்லும்போது பகலிலும் ஒளிமழுங்காது களங்கமற்றுப் பல சந்திரர்கள் ,மாளிகைச் சாளரந்தோறும் உதித்ததை வியப்புடனே கண்டவாறு சென்றனர் என்றார்.

அவர்கள் நகரினுள்ளே ஊஞ்சலில் ஆடும் மகளிரையும், பல வகையான பொருட்களை விற்கும் அங்காடித் தெருக்களையும், யானைகள் போரிடுவதையும், குதிரைகள் மண்டலகதியிலே சுழன்றாடும் காட்சியையும், மதுபானம் செய்து ஊட்டிய மாதர்களையும், இளைய மகளிர் பந்தாடும் காட்சியினையும், இளைஞர் வட்டாடுமிடத்தினையும், பெண்கள் நீர்நிலைகளில் நீராடும் காட்சிதனையும், மகளிர் பூக்கொய்து விளையாடும் சோலைகளையும் பார்த்துக் கொண்டே சென்றனர்.  

மேற்கூறிய கவிகளில் எல்லாம் “ கண்டார் சென்றார்  தெருவினிலே பல இனிமையான விஷயங்களைக் கண்டும், கேட்டும் சென்றவர் ஓரிடத்தில் மட்டும் நின்றார்என்கின்றார்.