Saturday, April 14, 2012

கனவுகள்

தொல்காப்பியம் களவியலில் ஆண்களுக்கும்/பெண்களுக்கும் காதலில் ஏற்படும் அவஸ்தைகளை (உணர்வை விட இது மேலான் வார்த்தி என்பதால் இளம்பூரணர் அவஸ்தி என்பதையே அவர் உரையில் குறிப்பிடுகின்றார். 2000 வருடங்களுக்கும் மேலாக இன்றைக்கும் காதலர்களின் நிலை இதேதான்.  வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்
நோக்குவதெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபிணை களவு என மொழிப

ஒரு பெண்ணை/ ஆடவனை  பார்க்க பார்க்க விருப்பம் எழுதல்  பேசலாமா, வேண்டாமா என்று ஒருதலையாக மனதுக்குள் யோசித்தல் என்னடா, எப்படி ஆரம்பிக்குறது என்று யோசித்து வருந்தி(உனவு சரியாக சாப்பிடாமல்) மெலிதல், தன் மனதுக்குள் இது சரியா வரும் என்று நமக்கு நாமே ஊக்கம் செய்தல், சொல்லும் வரை இறப்பது போல் துன்பம் அடைதல், பார்க்கும் இடம் எல்லாம் அவன்/ அவள் பெயர், உருவம் தெரிதல், வழக்கமாக செய்யும் வேலையை மறத்தல் (அவன்/அவள் நினைவாக இருத்தல்), எதிலும் கவனம் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருத்தல், இப்படி இருப்பதற்கு செத்து போயிடலாமோ என்று யோசித்தல்.......இப்படி எல்லாம் இருப்பது ஒருவர் காதலில் வீழ்ந்து விட்டார் என்பதற்கு உள்ள அறிகுறிகள். கண்ணதாசனின் அருமையான வரிகள் “பாலிருக்கும் ... பழமிருக்கும்...எனும் பாவமன்னிப்புப் பாடல்தான் தோன்றுகின்றது.
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறா
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்
.........
மெய்தொட்டுப் பயிரல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழா அல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் ......
பெண் (ஆண்) முன்னால் வலிய சென்று அவள் (அவன்) கவனத்தை ஈர்த்தல்
பேசி பேசியே தன் வசப்படுத்த முயற்சி செய்தல் நல்லபடியாக (நைசாக ) பேசுதல், சிரிக்கும் படி வேடிக்கை செய்தல்  அவர்களின் மனநிலையை அறிந்து சந்தர்ப்பம் பார்த்து மெல்ல எடுத்து தன்னை பற்றி எடுத்து உரைத்தல், தெளிவு ஏற்படுத்துதல் (கேட்பதற்கு முன்னரே தான் யார், எதிர்கால திட்டம் என்ன, நல்லவன் வல்லவன் என்று கூறுதல்)... சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தொட்டு பேசுதல், முடிந்தால் தழுவி கொள்ளுதல்...  நீ தேவதை, ராஜா குமரி, நீதான் உலக அழகி என்று பொய்யாகப் பாராட்டுதல், அவளை நினைத்து ஏங்குதல் , கூடுதல் , ஊடல் கொள்ளுதல்..........
இப்படி எல்லாம் காதல் வரும் போதும், வந்த பின்னும் நிகழும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
காதலில் ஆணோ பெண்ணோ சொல்வதற்கு முன்னரே இருவருக்கும் ஒத்த மன உணர்வு வந்து விடுகிறது, இப்படி வந்த பிறகு தான் நாம் தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கிறோம். ஆணோ பெண்ணோ இப்படி சிக்னல் வராமல் பெரும்பாலும் யாரும்  காதலை வெளிப்படுத்துவதில்லை.
இது வில்லியம் ஷேக்ஸ்பியர்
WHEN I SAW YOU I FELL IN LOVE AND YOU SMILED BECAUSE YOU KNEWஎன்கின்றார்.

என் பெரிய அண்ணன் பெண் பார்க்க சென்றபோது மன்னியுடன் பத்து நிமிடங்கள் தனியாகப் பேசினான். அதுதான் நான் முதல் தடவையாக கேள்விப்பட்டது. ரோஜா திரைப்படத்தில் ஆச்சர்யப்படும் சிறுமியின் நிலைதான் என்னுடையது. மன்னி பெங்களூர்; அண்ணா பாம்பே. இரண்டாவது அண்ணன் நெல்லூர் மன்னி டில்லி.

என் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இரண்டு வீட்டிலும் தொலைபேசி இருந்தும் நாங்கள் பேசிக் கொண்டதில்லை. பெண் பார்க்க போனபோதும் நான் தனியாக பேசவில்லை. பத்து நிமிடம் பேசி என்னால் பெரிதாகத் தெரிந்து கொண்டுவிட முடியாது என்ற என் நினைப்பே அதற்குக் காரணம். என்னுடன் வந்திருந்த என் இரண்டாவது அண்ணந்தான் நிறைய பேசினான்

என் இரண்டாவது அண்ணன் அவனுடைய திருமணத்தின் போது என்னுடைய சிஏ நண்பர்களிடத்து ரவா உப்புமாவைக் கிளறிண்டேயிருக்கின்றமாதிரி என்னமோ எல்லாரும் சிஏ படிக்கிரீங். யாரவது முடிச்சீங்களா? என கிண்டல் அடித்தான். என் சிஏ நண்பர்கள் அனைவரும் காலேஜ் முடித்து இல்லை எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத படித்துக் கொண்டிருந்தவர்கள். நான் ஒருவன் மட்டும் தான் 24 வயதில் சேர்ந்தவன். ஜெவியும் நானும் ஒரே வயது. அவன் எனக்கு அறிமாகும் போதே அவன் மூன்று வருட ஆர்டிகள்ஷிப் முடித்தவன். பள்ளி படிப்பு சாந்தோம் செயின் பீட்ஸ்ல், பீகாம் லயோலாவில். இவனும் நானும் தான் சேர்ந்து பிராக்டீஸ் ஆரம்பிதோம். கோபலபுரத்தில் ஆபிஸ்.

ஜெவியின் மனைவி உஷாவும் சிஏ இண்டர் பாஸ் பண்ணவள்தான். என் திருமணம் நிச்ச்யமானவுடன் “ஏண்டா. இதே பொண்ணோட ஜாதகம் பத்தி என் அம்மா பேசும் போது மாமி இண்டர் பாஸ் பண்ணவ என்னைக்கு பைனல் பாஸ் பண்றதுன்னு கேட்ட. இப்ப மட்டும் எப்படி ஒத்துண்ட?”  “அவாளும் நார்த் ஆற்காட். அப்பாவுக்கும் அம்மாவிற்கும் பிடிச்சுப் போச்சு சரி சரி. பொண்ணைப் போய் பார்த்தியாஇல்லைடா. அம்மா கட்டாயம் நிச்சதார்த்தம் முடிவதற்கு பின்னால தான் போய் பார்க்கணும் அது கூட ஜாஸ்தி போய் வழிய வேணான்னா” ” அட போடா லூசு. எனக்கோ அவ ஊட்டியிலே இருந்தா. என்னாலே போகமுடியலை. உனக்கு இங்க வடபனியிலேயேயிருக்கா. அண்ணாநகர்லேந்து 100 பீட் ரோடிலே வந்தா 10 நிமிஷம். போய் பார்த்து சினிமா  ஓட்டல்னு போய் பேசி பழகிண்டா நல்லது என அறிவுரை வழங்கினான்.  

ஆனாலும் நிச்சயதார்த்தம் முடியும் வரை என் அம்மாவின் கட்டளைக்கு மதிப்பளித்து   அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை. நிச்சயதார்த்தம் ஜுன் 12ஆம் தேதி. 13 ஆம் தேதி சாயந்திரம் ஸ்கூட்டரில் (ஹீரோ ஹோண்டா TSE 8241)  வடபழனியிலிருக்கும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். மனைவியோ  வாசலிலிருக்கும் கைபம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள். அவசர அவசரமாக் முகம் கழுவி வந்தமர்ந்தாள். என்னுடைய மாமியார்தான் அதிகம் பேசினார். நான் மனைவியை வெளியே அழைத்துக் கொண்டு போகலாமா என்ற கேள்விக்கு அவரைக் கேட்டுவிட்டு சொல்கின்றேன் என்றார். அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு போய் மனைவியையும் அழைத்துக் கொண்டு லாங் டைரவ்வா வேளச்சேரியிலிருக்கும்  நண்பன் பாஸ்கர் வீட்டிற்குச் சென்றேன்.

ஆகஸ்ட் 27 திருமணம். அது வரையில் தினமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவளும் நானும் பெரும்பாலும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருப்போம். ஐந்து திரைப்படங்களுக்குச் சென்றோம். பல்வேறு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம். கல்யாணத்திற்கு முன் மனைவியின் தம்பிக்கு பெங்கலூரில் பூனூல் கல்யாணம். என்னையும் வருமாறு அழைத்தனர். போனால் அத்தை வீட்டில்தான் தங்க வேண்டும். அப்போதெல்லாம் ஒட்டலில் தங்கலாம் என்ற நினைப்பே எழுந்ததில்லை. அவ்வளவு பணமும் கையில் கிடையாது என்பது தான் உண்மை. வீட்டில் என்ன சொல்லிவிட்டு போவது என்ற காரணத்தால் போகவில்லை. அவர்கள் பெங்களூர் மெயிலில் போவதற்காக ஆட்டோ வரவழைத்திருந்தனர். மாமானார் மகளைப் பார்த்து ஏறிக்கொள்என்றதற்கு மாமியார் “ இல்லைம்மா. அவ அவரோட ஸ்கூட்டர்ல வராஎன்றதும் “ஒஹோ”.  அந்த ஒஹோவின் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. தன் கட்டுபாட்டிலிருந்து விலகி மகள் இந்த ஒரு அப்பாவியை அடக்கி ஆளப் போகின்றாளே என்ற ஆச்சர்யத்தினால் உண்டான ஒரு நக்கல் கலந்த ஓசையாகத் தான் இன்று என் காதில் ஒலிக்க்கின்றது.

அவர்கள் வீட்டிற்கு வரும் அத்தனை சொந்தக்கார்களையும் நன்றாக அறிந்து கொண்டேன். தாத்தா, பாட்டி மாமா மாமி என அனைவரிடமும் நன்றாக பேசி பழகி கொள்ள முடிந்தது. அதே போல் மனைவியும் நானும் பேசும் போது எங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொந்தக்காரர்களைப் பற்றியும் எங்களைப் பற்றியும் பேசிக் கொள்வோம். பார்க்காத சொந்தகாரர்களும் பழகாதவர்களாகத் தோன்றாத அளவுக்கு பேசிக் கொள்வோம்.

தம்பிகளுடன் எவ்வளவுதான் நெருக்கமாயிருந்தாலும் எல்லாவற்றையும் அவர்களுடன் சொல்ல முடியாது. ராஜீவ் காந்தி புண்ணியத்தில் மத்திய அரசு பணியாளர்களுக்கு வாரம் ஐந்து நாள் மட்டுமே வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வார நாட்களில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு. ஆனால் சனி ஞாயிறு அதுவும் யாரவது உறவினர்கள் வந்தால் ஏதேதோ சாக்குச் சொல்லிவிட்டுதான் போவேன். ஒரே ஒரு நிரந்த சாக்கு, கிளையண்ட் ஒருத்தனைப் பார்க்கப் போக வேண்டும் என்பதுதான்.

முனிவனுடன் மிதிலை வந்து சீதையிடம் காதல் வசப்பட்ட இராமனுக்கும் அதை யாரிடமும் கூற முடியாத நிலை. விசுவாமித்திரன் வந்ததையறிந்த ஜனக மஹாராஜன் வந்து அழைத்துப் போய் அவர்களை ஒரு மாளிகையில் தங்கவைத்தான்.

அங்கு சதானந்த முனிவன் வருகின்றான். இவன் ஜனக குல புரோகிதன். கௌதம முனிவருக்கு அகலிகையிடம் தோன்றியவன். வந்தவனை வீரர்கள் இருவரும் வணங்கி வாழ்த்தினர். சதானந்த முனிவனும் இவர்களை வாழ்த்தினான். விசுவாமித்திரன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.



விசுவாமித்திரனை நோக்கி   நீ இங்கு வருவதற்கு  இந்த மிதிலை நகரம் தான் செய்த பாக்கியம்தான் என்ன?” என வினவினான்.  விசுவாமித்திரன் இராமனைக் காண்பித்து இந்த வள்ளல்தான் தாடகையை கொன்று நின் அன்னை சாபமும் தீர்த்தவன்எனஇராமனின் புகழ் பாடினான்.  சதானந்தன் உன் அருளிருக்கையில் இவ்வீரர்களுக்கு எது தான் முடியாது ?” எனக்கேட்டுவிட்டு வீரரிருவருக்கும்  விசுவாமித்திரன் வரலாற்றைக் கூறுகின்றான்.


அரசனான விசுவாமித்திரன் எப்படி வேட்டையாடப் போகும்போது வசிட்டனிடம் உள்ள காமதேனுவை கவர்ந்து செல்ல முற்பட்டு  வசிட்டனிடம்  சண்டையில் தோற்று போனான். அரசனைவிட முனிவனின் சக்தி உயர்ந்தது எனும் ஞானம் பிறக்க தவம் மேற்கொண்டு  பெரிய முனிவனாகினான்.

திரிசங்கு எனும் மஹாராஜன்  விசுவாமித்திரனிடம் தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்லவேண்டும் என கேட்க விசுவாமித்திரனும் அவனை அப்படியே சொர்க்கத்திற்கு அனுப்ப, இந்திரன் இது இயற்கைக்கு விரோதமானது என்று திரிசங்குவை ஏற்க  மறுத்துக் கீழே தள்ளிவிடுகின்றான். திரிசங்குவை அப்படியே அந்தரத்தில் நிறுத்தி அவனுக்காகவே  மூவுலகும் படைக்கத் தொடங்கிய அதி தவ வலிமையுடவன் விசுவாமித்திரன்.  நரபலிக்கு விற்கப்பட்ட சநச்பேசனுக்கு வித்தைகள் சொல்லிக் கொடுத்து அவனை நரபலியிலிருந்து காப்பாற்றினவன் இவன். எப்படி தேவர்களும் வசிட்டனும்  விசுவாமித்திரன்  பிரம்மரிஷியாக (பிரம்ம இருடி) ஏற்றனர் என்ற வரலாறு முழுவதையும் கூறுகின்றான்.

இவ்வளவு அளப்பரிய தவத்தின் பயனுடைய விசுவாமித்திரன் அருளைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு ஆற்றமுடியாத காரியம் யாதுமில்லை என அவர்களை வாழ்த்தி விட்டு தன்னிருப்பிடம் போய் சேர்ந்தான்.

விசுவாமித்திரன் வரலாறை கூறுவதற்கு, முன்பே எவ்வளவோ இடமிருந்த போதும் இவ்விடத்தில் ஏன் கூறினான் என்பது சற்றே சிந்திக்க வைக்கின்றது.
அகத்தியனுடைய வரலாற்றை விசுவாமித்திரனே தாடகை வதத்தின் போது கூறுகின்றான். வனவாசத்தில் இராமன் அகத்தியன் ஆசிரமித்திற்குச் சென்று அவனை வணங்கி, ஆசியும் அவன் பூஜித்து வந்த வில்லையும் அம்பையும் பெற்றுக் கொண்டு இராவணனுடன் யுத்தம் செய்தான். விசுவாமித்திரனே இராமனிடம்
அரிய யான் சொலின். ஐய! நிற்கு    அரியது ஒன்று இல்லை;  
பெரிய காரியம் உள; அவை    முடிப்பது பின்னர்; என்று முன்னர் சொன்னதும் யோசிக்கப்படவேண்டும். அதனால்தான் சதானந்தன் “இராமா. நீ கவலைப் படாதே. இவன் உங்களை வெறும் வேள்வி காண்பதற்காக மட்டும் அழைத்து வரவில்லை. நீ கன்னி மாடத்தில் பார்த்து காதலில் விழுந்த பிராட்டியையும் உனக்கு மமுடிப்பதற்காகத்தான் என சொல்வது போல தான் எனத் தோன்றுகின்றது.
முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தபின். இருட்
கனியும் போல்வன். கங்குலும். திங்களும்.
த்னியும் தானும் அத் தையலும் ஆயினான்.
விசுவாமித்திரனும் தம்பியும் படுக்கப் போன்பின் இருள்கனி போன்றவனானான் இராமன் இரவில் உருவெளிப்பாட்டில் தோன்றிய சீதையே துணையாக இருக்க தூங்காதிருந்தான்.

விண்ணின் நீன்கிய மின் உரு இம் முறை
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே கொலோ?
எண்ணின் ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்.
மின்னல் தோன்றி உடனே மறைவது; அன்றியும், கண், கை, கால் முதலிய அவங்களை கொண்டிராது. என கண்களுக்கு புலப்படும் உருவோ, மின்னல் போன்ற பளபளப்புடன் கண் கை கால் முதலிய அவயங்களைப் பெற்றுள்ளது. ஆகவே மின்னல் பெண்ணுருவம் பெற்று வந்துள்ளது என்று இவ்வாறாக அவ்வுருவத்தைச் சொல்வதன்றி வேறுவகையாகச் சொல்ல வழியில்லை என்ன புதுமை இதுஎன்று இராமன் நினைத்தான்.

நிச்சயதார்தத்திற்கு பிறகு தினமும் வரப்போகும் மனைவியை பார்ப்பதற்கு அவர்கள்  வீட்டிற்கு சென்றதனால், வீடு திரும்ப நேராமாகிவிடும். அவர்கள் வீட்டிலோ, இல்லை ஓட்டலிலோ சாப்பிட்டுவிடுவதால் பசி வேறு எடுக்காது. எங்கள் வீட்டில் பொதுவாக இரவு ஒன்பதரைக்குத்தான் இரவு சாப்பாடு. நான் சரியாக சாப்பிடாததை கவனித்த அண்ணாவின் மகன்சித்தப்பா எங்கேயா வெளியிலே சாப்பிட்டு வரா. இல்லேன்னா ஏன் இவ்வளவு கம்மியா சாபட்றாஎன்றான். இல்லைடா ஆபிஸ்லே நிறைய காபி குடிக்கிறேன். அதுவுமில்லாம வீட்டுக்கு வந்த உடனேயும் காபியா!. முதல்ல இந்த காபி குடிப்பதை நிறுத்த வேண்டும்.என்று ஒருவாறு சமாளிப்பேன்.

ஏதோ ஞாபகத்தில் அன்று பார்த்த சினிமா பாடலை பாடித் தொலைத்துவிடுவேன். என் தம்பியோ எப்ப படம் பார்த்தஇல்லைடா பாஸ்கர் பாடினான். ஏற்கெனவே பார்த்துவிட்ட படத்தினை இவர்களுடன் மறுபடியும் பார்க்க வேண்டும். ஆன வரைக்கும் வாயிலே கோலிட்டுப் பார்ப்பார்கள். முதல் தடவை பார்ப்பது போல் நடிக்கவேண்டும். அண்ணவின் மகள் எங்களுடன் தான் தூங்குவாள். காதின் மடலைத் திருகி கொண்டேதான் தூங்குவாள். காதைத் திருகி ரொம்ப வலியெடுத்துவிடவே அவள் கையை விலக்க “ நானும் பாத்துண்டுதான் இருக்கேன். நீ ரொம்ப மாறிப் போய்ட்ட. உன் பேச்சு கா. நான் இனிமே தாத்தாவோடத்தான் படுத்துப்பேன்அடுத்த நாள் அவளுக்கு களஞ்சியம் ஸ்டோர்லேர்ந்து சாக்லெட் வாங்கி கொடுத்து சமாதானம் செய்யவேண்டும்.

அருள் இலால் எனினும் மனத்து ஆசியால்
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுந்ங்கலால்
தெருள் இலா உலகின் சென்று நின்று வாழ்
பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே
காம நோயைத் தருகின்ற விடம் போன்ற தன் கண்களால் சீதை விழுங்குவதால் இராமனுக்கு பார்த்தவிடத்திலெல்லாம் அச்சீதையின் வடிவமே தோன்றியது.   
எல்லாப் பொருளையும் சீதையாக காணும் தெள்ளறிவில்லாமையை உலகத்தின் மேலேற்றி  “தெருள் இலா உலகுஎன்கின்றான் இராமன்.

வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு. கதிர் முலைதாம் இரண்டு.
உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
என்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ?

தேர் தட்டு போன்ற அல்குலொன்றும், வாளாயுதம் போன்ற நீண்ட கண்களிரண்டும், இறுமாந்தது போன்ற தனங்களிரண்டும் வாயினுள்ளே அடங்கிச் சிறந்த புன்சிரிப்பு என்ற ஒன்றும் உண்டு; இத்தானிக் கருவிகளும் வேண்டுமோ அந்த யமனுக்கு என்னைக் கொல்வதற்கு என்று சிந்தித்தான் இராமன்.

ஆகும் நல்வழி; அல்வழி என மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்
பாகுபோல் மொழிப் பைந்தொடி கண்னியே.
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!

தன்மனது மனம் சீதையிடம் சென்றதனால், அவள் கலியாணமாகாத அரச கன்னிகையாகயிருக்க வேண்டுமென்று நினைத்தான் இராமன். “என் மனம் நல்வழி ஆகும். அல் வழி ஆகுமோ  என்று இயைந்து உரைப்பதும் உண்டு. ஸ்ரீராமனுக்கு அன்றிரவு தூங்காமலேயே கழிந்தது. இரவு தூங்காமலிருந்தால் அடுத்த நாள் எந்த வேலையுமே சரியாக செய்யமுடியாது. முதல் பரிட்சைக்கு முந்திய இரவு எனக்கு தூக்கம் வராது.  பரிட்சை ஹாலில் அமர்ந்து கேள்விதாள் வரும் வரையில் தூக்கம் கண்ணைச் சுற்றும். எப்படி பரிட்சை எழுதப் போகின்றோம் என்று மலைப்பாக இருக்கும். ஆணால் கேள்வித்தாள் வந்தவுடன் புத்தங்களின் பக்கங்களே மனத்திரையில் தோண்றி மளமள வென்று எழுதி முடித்து விடுவேன். பின்வரும் பரிட்சைகளில் என்றைக்குமே பிரச்சினையில்லை. 

Friday, March 30, 2012

மாறுதல்

நாக்பூரில் நம்பர் 10 தரம்பெட் எக்ஸ்டென்ஷனில் என் சித்தி வீட்டில் வசித்தபோது அங்கு நாடக விழா இரண்டு நாட்களுக்கு நடந்தது. அதில் மூன்று நாடகங்களில் நான் நடித்திருந்தேன். ஒன்று “சபாக்களும் சங்கங்களும்” . எப்படி தென்னிந்திய நுண்கலைக் கழகம்  ஒவ்வொருவருடைய தலை க த்தினால் கேரளா, கர்நாடகா, தெலுங்கு மற்றும் தமிழ் சங்கங்களாக உருவெடுத்தது என்பதை கிண்டலுடன் சொல்லும் நாடகம். அவர்கள் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் காரணமே, தமி எழுதப் படிக்க மற்றும் இயல்பாகவே நன்றாக உச்சரிப்பதும் தான். மீதி இரண்டு நாடகங்களும் நினைவிலில்லை. இந்த நாடகங்களில் குளறுபடியேதும் செய்யாமல் இருக்கும் பொருட்டு சௌந்தர்ய லஹரிகிருஷ்ணணைச் சந்தித்தேன். அவர் ’3 அப்புறம் 60ஆம் நம்பர் ஸ்லோகத்தை தினம் 108 தடவை ஜபி. ஜாமாயச்சுடலாம் என்றார்.  ஜமாய்த்தேனோ இல்லையோ என்பது தெரியாது, ஒப்பேத்திவிட்டேன்.

இந்த அக்டோபரில்  சென்னையிலிருந்த போது என் தாயாரிடம் காண்பிப்பதற்காக நான் கம்பனைப் பற்றி எழுதியிருந்தவைகளை கொண்டு சென்றிருந்தேன். சித்தி மகன் முரளி ஸ்டேட் பாங்கில் டி ஜி எம் ஆக சென்னையிலிருந்தான். நான் ஹாங்காங் புறப்படும் நாளில் என்னைப் பார்பதற்காக வந்திருந்தான். என் மாமனார் மாமியாரும் வழியனுப்புவதற்காக வந்திருந்தர். அப்போது முரளிக்கு அம்மா நான் எழுதியவைகளைக் காண்பித்தார். என் மாமனார் இவர் சித்தூர் வீட்டைப் பத்தியெல்லாம் எழுதியிருக்கிறார். முரளி அவன் அப்பவே நாக்பூரைக் கலக்கினவன் சார். பெரிம்மா நீ படிச்சுட்டு சொல்லு. நான் எடுத்துண்டு போய் படிக்கிறேன்’.

நாடகம் எப்படியிருந்தது என தெரிந்து கொள்வதற்கும்  இன்றிருப்பது  போல் அன்று (1980) வீடியோவும் கிடையாது.. ஏதோ முப்பது வருடத்திற்கு முன் நடந்தது அவன் நினைவுக்கு வந்ததே நான் ரொம்ப சொதப்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

ஹாங்காங்கில் நாடக விழா ஆரம்பித்தது சுவாரஸ்யமான ஒரு விஷயம். 17 18 நடிக நடிகையர் பங்குபெறும் 2 ½ மணி நேர நாடகம் ஒன்று நடைபெற்றது. அதில் நாரயணமூர்த்தியும் பாட்டு வாத்தியாராக நடித்தார். நாரயணமூர்த்தி “இத்தனைபேரும் ஒரே இடத்துலே சேந்து ப்ராக்டிஸ் பண்றதெல்லாம் கஷ்டண்டோய். தனித் தனியா நாலு டீமா போடலாம். டிராமா காம்படீஷனா வெச்சுக்கலாம். பரிசுத் தொகையும் குடுக்கலாம்”. அப்படி ஆரம்பித்தது இங்கு நாடக விழா. எல்லா ஆண்டுமே நண்பன் ராம் கதை, வசனம், இயக்கம் என மூன்று துறைகளையும் கவனித்துக் கொண்டு உற்சாகத்துடன் பங்கேற்பான். இம்முயற்சிகளில் அவனுக்கு பெரிதும் உறுதுணை அவன் அண்ணன் மணி.

ராமின் கல்கி 2000 எனும் நாடகத்தில் எனக்கு தமிழ் வெறி பிடித்த கல்வியமைச்சராக சிறு வேடம் ஒன்று குடுத்தான். அந்த வருடம் முதல் பரிசை நாங்கள் வென்றோம். அதன் பிறகு ஐ ஓ பி வங்கி சம்பத்குமார் அவர்களின் நாடகத்தில் வீரப்பன் வேடம். அதற்கான என் ஒரே ஒரு தகுதி அடர்த்தியான மீசை.

அதற்கு அடுத்த வருடம் நான் இயக்கிய சுஜாதாவின் மாறுதல் எனும் நாடகம். நண்பர்கள் முரளி நாரயணன், கே ஜி ஸ்ரீனிவாசஸ், கவிதா குமார் மற்றும் நான் பங்கேற்று நடித்தோம். வசனம் சுஜாதா என்பது நல்ல பக்கபலம். ஒத்திகைகளுகாக கவிதா வரமுடியாத சமயமெல்லாம். கே ஜி ஸே அந்த பாத்திரத்தின் வசனங்களையும் நடிப்பான். எல்லா ஒத்திகைகளுமே வீட்டிலேதான். நேரமாகிவிட்டால், வீட்டில் என்ன இருக்கின்றதோ அதையே சாப்பிட்டோம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் என ஒரு மாதம் முன்புதான் ஒத்திகைகள் ஆரம்பிக்கும். கே ஜி ஸும், முரளியும் முதல் தடவை ஒத்திகைக்கு வருமுன்பே எல்லா வசன்ஙகளையும் மனப்பாடம் செய்துவிடுவர். அது எப்படி இரண்டு நாட்களில் அதை செய்கின்றனர் என்பது எனக்கு அவர்கள் மேலுள்ள மதிப்பை அதிகமாக்கியது. எனக்கு இதிலெல்லாம் ஆலோசனை மற்றும் அறிவுரை கூறி வழிநடத்தியவர் மு.ராமநாதன்.

அந்த வருடம் இங்கு இந்திய தூதரக அதிகாரி திரு எம். ஸ்ரீதரன் மற்றும் அவர்கள் மனைவி வைதேஹி இருவர் மட்டுமே நடித்த இயந்திர துடைப்பான் எனும் நாடகத்தை போட்டியில் பங்கேற்காமல் நடத்தினர். அரங்கத்திற்குள் நுழையுமுன்னே அந்த நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழுலும் சிறு அறிமுகம்வினியோகிக்கப்பட்டது. சு. ரா என்கின்ற சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய நாடகம் ஒரு சாமியாரைப் பற்றியது. போட்டியில் பங்கேறாகாததால் அவர்களுடைய நாடகம் கடைசியாக நடந்தது. . அவர்களிருவரையும்  முதன் முதலாகப் பார்த்தது அப்போதுதான். அவர்கள் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு நாங்கள் மேக்கப் (முரளி வயசான வேடத்தில் நடித்தான் என்பதால் தேங்காய் எண்ணையில் பவுடரைக் குழைத்து தலை சீவுவதுதான்) போட்டுக் கொண்டிருக்கும் போதே, பிஸ்கட் மற்றும் தண்ணிரும் கொடுத்து “ஆல் தெ பெஸ்ட்  சொல்லி எங்களை உற்சாகப் படுத்தினர். நாங்கள் தண்ணிர் கூட கொண்டுவரவில்லை. நாடகம் நடந்த சமயம் மைக் வேலை செய்யவில்லை என்பது கூட உணராமல் “ அப்பாடா. முடிச்சுட்டோம்”  எனத் திரை மூடிய பின் உள்ளே போகும்போது “உங்களுடைய டிரிட்மெண்ட் வித்தியாசமாக இருந்ததுஎன்றார்கள்.

அரங்கத்தில் வந்தமர்ந்த போது மூன்றாவது நாடகம்தான் நடந்து கொண்டிருந்தது. அப்போது இன்னொரு முறை நாடகத்தின் அறிமுகத்தைப் படித்தேன். சாமியாரைப் பற்றி நாடகம்.
இயந்திரத் துடைப்பான்நான் சாமியார்களைப் பற்றி வைத்திருந்த அனைத்து பிம்பங்களையும் உடைத்து சாதாரண மனிதனை முன்னிறுத்தியது. நான் பார்த்த சாமியரெல்லாம் காவி துணி அணிந்திருக்க இவரோ சிவாஜி கணேசன் மாதிரி, நைட் கவுன்ல தானே இருந்தார் என சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீதரன் அவர்கள் கண்ணிற்கு கீழே சிகப்பில் கோடுகள் வரைந்திருந்தார். ஒரு காட்சியில் அவர் குரலுடைந்து பேசும் போது அவர் கண்களில் கண்ணீர். நாடகம் முடிந்ததும் அவர்கள் மேடையில் அவையோருக்கு “curtain call”  எனும் முறைப்படி வணக்கம் தெரிவித்தனர். அதுதான் நான் முதல் தடவையாக நேரடியாகப் பார்த்த கர்டன் கால்.

ஏன், அதன் பேரே கூட எனக்கு அப்புறம் தான் தெரிந்தது. பிறகு தான் எங்களுக்குத் தெரிந்தது வைதேஹியும் ஸ்ரீதரனும் தங்கள் ஐக்யாகுழுவின் மூலம் நவீன தமிழ்நாடகங்களின் மிகப்பெரிய பங்களிப்பாளர்கள் என்பது. வைதேஹியுடன் நெருங்கிய நண்பரைப் போல் பேசி பழகிவிட முடியும். ஆனால் அது என்னவோ தெரியவில்லை, ஸ்ரீதரன் எனும் ஆசிரியரிடத்தில் நன் மதிப்பெண் வாங்க வேண்டும் எனும் நிலையிலுள்ள மாணவனைப் போல் தான் இருந்தேன்.

முரளி நாரயணனுக்கு நடிப்பில் முதல் பரிசு. அதை கொண்டாடுவதற்காக நாஙகள் அடுத்த நாள் ( ஞாயிற்றுக் கிழமை) ஓட்டலுக்குச் சென்றோம். உண்மையில் பரிசுக்குறியவர்களையும் அழைப்பது என்று நாரயண்மூர்த்தியிடமிருந்து வைதேஹியின் தொலை பேசி எண் வாங்கி, அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு குடும்பத்துடன் உணவருந்த வருமாறு அவர்களை அழைத்தேன். அவர்களும் வந்தனர்.

அதன் பிறகு அவர் இயக்கத்தில் “நிரபராதிகளின் காலம் எனும் நாடகம். கேஜிஸ், முரளிநாரயணன், அலமேலு இராமநாதன், எம் ஆர். ஸ்ரீனிவாசன், ராஜி ஸ்ரீனிவாசன், கார்த்திக் ஹரிஹரன், காதர், பிரகாஷ் நாகராஜ், வைதேஹி மற்றும் நான் நடித்திருந்தோம். ஒத்திகைகள் எல்லாம் முதல் முறையாக வீட்டிலில்லாமல் அர்பன் கவுன்சில் டான்ஸ் அரங்குகளில் நடந்தன. முதல் முறையாக நாடகத்தின் அனைத்து கூறுகளையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை வைதேஹி மற்றும் ஸ்ரீதரன் அளித்து, சொல்லியும் கொடுத்தனர். டீம் பில்டிங்கிறகாக விளையாட்டுகள்,  அனைவரும் சேர்ந்து ஸ்கிரிப்ட் வாசிப்பது, பாத்திரங்களின் தன்மை, வயது, குணம், மொழி முதலியவற்றை அலசுவது, நாடகத்தைப் பல கூறுகளாக பிரித்துக் கொள்வது, ஓவ்வொரு கூறுக்கும் ஒரு ஆக்‌ஷன், வசனத்தில் எந்த இடத்தில் அழுத்தம் கொடுப்பது, அது ஏன் அவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் விளக்கினர். அரங்க பதிவுகளை கவணிக்க ஒருத்தர், வசன உச்சரிப்புகளை கவனிக்க ஒருத்தர், ஒத்திகைகளை கவனிப்பதற்கு ஒருவர், அரங்க பொருட்களுக்கு ஒருத்தர், ஆடை அணிகலன்களுக்கென ஒருவர் என்று எங்களிடையே பகிர்ந்தளித்து, கராறாக இருப்பது போல் தெரியாது ஆனால் மிகவுமே கராறாகயிருந்தார்.


அவர் ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காண்பித்ததை இன்றும் எண்ணிப் பார்த்தால் அது எப்படி ஒருவர் எல்லாத் துறைகளிலும் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்க முடியும் என்பது தான் அன்றும் இன்றும் மதில் எழும் கேள்வி. அதுவும் நாடகத்தில் பிரஃபஸாராக வருபவர் தன் வாய்க்குள் துப்பாக்கி விட்டு சுட்டுக் கொண்டு  செத்து போகவேண்டும். இறந்த பிறகு அந்த பிணம் எப்படி கீழே விழும் எனபதை விஞ்ஞான பூர்வமாக விளக்கி நடித்தும் காண்பித்தார். எப்படி விழும் என்பதை அவர் முதல் தடவை பண்ணிய போது தடாலென்ற சத்தம் உண்மையில் அவர் கால் தடுக்கி கீழே விழுந்தவர் போல தான் இருந்தது. இதையே மூன்று முறை அன்று செய்தார். அடுத்த நாள் வைதேஹியிடம் கேட்டபோது “ எவ்வளவோ பிராக்டிஸ் இருக்கு இருந்தாலும் சில சமயம் வலிக்கத்தான் செய்யும்என்றார். அதே போல இந்த நாடகத்தில் சண்டைக் காட்சிகள் வேறு. ஒவ்வொரு நடிகருக்கும் தனியே படி  Chistling  Session ( வேண்டியதை மெருகேற்றி வேண்டாதவற்றை விலக்குவதற்கான டைரக்டரும் அந்த ஒரு நடிகரும் பங்கேறகும் ஒத்திகை).  நாடகத்திற்கு ஒரு வாரம் முன், அரங்கத்தில் ஒத்திகை. ஸ்ரீதரன் அன்று லைட்டிங்பண்ணிக் கொண்டிருந்தார். அப்போதுதான் முதல் முறையாக ஸ்பாட் லைட், ஃபென்னெல இவற்றின் பேரைக் கேள்விப்பட்டேன்.  ஸ்பாட் லைட்டின் ஃபோகஸை எவ்வாறு நமக்கு ஏற்ற வகையில் விழும்படி செய்வது என்பதைத் தெரிந்து கொண்டேன். இந்த நாடகதில் நேரடி இசை. ஜெயராம் தான் மிக அற்புதமாக செய்தார். இந்த நாடகத்திலும் முதல் நாளிலேயே அனைவரின் வசனங்களையுமே மனப்பாடம் செய்து என் வத்தெரிச்சலை முரளி நாரயணனும் கேஜிஸும் கொட்டிக் கொண்டனர்.

நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே சமயம் தான் இலக்கிய வட்டமும் ஆரம்பித்தது. தொடர்ந்து கூட்டங்களுக்கு வந்து அவர்களுடைய சிறந்த பேச்சால், சினிமா ரசனை அறிவால், அவர்கள் கூறிய விஷயங்களால் என்னில் மாறுதல் ஏற்பட்டது.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல் நிச்சயம். அப்படியிருந்த போதும் அத்தனை அலுவல்களுக்கிடையேயும் இவ்வளவு விஷயங்களை அவ்விருவர் இங்கு செய்தது என் நல்ல நேரம் தவிர வேறொன்றுமில்லை. என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்திற்கு என்னை உள்ளாக்கியது அவர்களுடன் பழகியது. கெமிஸ்ட்ரியில் கூறப்படும் “ கிரியா ஊக்கி என்பதற்கு அவர்களிருவரும் தான் சரியான எடுத்துக் காட்டு. சினிமாவிலிருந்து படிக்கும் புத்தகம் வரை சராசரிக்கும் கீழே எங்கோ இருந்த என்னை கைக் கொடுத்துத் மேலே தூக்கிவிட்டனர்.  

மாறுதல் வருவதற்கு வருடங்களும் ஆகலாம், விநாடியிலும் அது வரலாம். கன்னி மாடத்தில் பார்த்த சீதைக்கும் இராமனுக்கும் வந்ததைப் போல். அது வரையில் கவலையில்லாமல் இருந்த இருவர் உள்ளத்திலும் பார்த்த அந்த விநாடியே காதல் தோன்றி இருவரும் ஒருயிர் ஈருடல் ஆயினர்.

பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்?-நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும். மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே!  தன் கண்களுக்கு யானைப் பாகன் மறைந்த கணமே மதம் பிடித்த யானை  தன்னை அடக்குகின்ற அங்குசத்தை நிமிரச் செய்து அதைத் தள்ளிவிட்டுத்  தான்  விரும்பின  வழியே  செல்லுதல்போலத்  தான் விரும்பும்   தலைவனான  இராமன்   மறைந்து சென்ற  அளவிலே சீதையின்   மனம்   தன்னை  அடக்கி  வைக்கும்  நிறை என்னும் குணத்தை நீக்கித்  தான் விரும்பியவழிச் சென்றது என்றார். சிந்தை. நிறை.  மெய்ந்நலன்களாகிய  பெண்மைக் குணங்கள் யாவும் சிதைந்து ஒழிந்தன.
கால் உறு நெடு கண்வழி புகுந்த காதல் நோய்
பால் உறு பிரை என எங்கும் பரந்தது. பாலுறையவைக்கும் சிறுதுளி மோர் துளி பாலிலே முதலில் ஓரிடத்தில் சேர்ந்து, உடனே அப்பால் முழுவதையும் மாற்றுவதைப் போல் சீதையின் உடம்பு முழுவதும் காம நோய் பரவியது. தினம் தோறும் வாழ்வில் பயன்படுத்தப்படும் ஒரு விஷயத்தை அற்புதமாக கவி சீதையின் கண்வழி நுழைந்த காதல் அவள் உடல்முழுவதும் பரவி காமத்தீயை உண்டாக்குவதற்கு உவமையாகக் கூறிவிடுகின்றார்.
நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;ஊமரின். மனத்திடை உன்னி. விம்முவாள்;காமனும். ஒரு சரம் கருத்தின் எய்தனன்-வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே. மிகுந்து வரும் காம நோயால் வருந்தும் சீதை நோயைப் பற்றி ஒருவரிடமும் சொல்ல மாட்டாதவளாய் ஊமைகள் போல் மனத்திடத்திலேயே நினைத்து கலங்குவாள்; அப்போது மன்மதனும் எரிகிற நெருப்பிலே விறகைப் போட்டாற் போல தன் முதற்கணையை ஏவினான்.  மன்மதன் தன் ஐங்கணைகளுள் நினைப்பை மிகுவிப்புதும் முதற்கணையுமாகிய  தாமரைமலரை எய்தனனென்பார், “ ஒருசரங் கருத்தினெய்தனன்என்றார். இதனை நினைக்கு மரவிந்தம்என்றும் கூறுவர்.

வைதேகி  நெருப்பிலே போடப்பட்ட பூங்கொடி போல வாடிநின்றாள். அதனைக் கண்ட தோழிமார்கள் சீதையைக் கொண்டுபோய் பரிகாரம் செய்ய மலர் மஞசத்தில் சேர்த்தனர். காமவேதனையை ஆற்றமாட்டாது சீதையின் கண்களிலிருந்து  கண்ணீர் மார்பிலே உதிர்ந்தன. கொல்லனது உலைக் கத்திலே எழுகிற புகை போல் வெளிப்பட்ட அவள் நெட்டுயிர்ப்பினால் அது உடனே ஆவியாகி மறைந்தது.
படுக்கையில் பரப்பிய மணமுள்ள மலர்கள், அவளுக்கு  மென்மை செய்யாமல் கூர்மையாகித்   உடம்பில்   தைத்தன; அவளது  உடம்பின் காமத் தீயால் பொரிந்து போன கலவைச்  சந்தனங்கள்  சிந்தியது  தீப்பொறிகள் போல் இருந்தது..  உதிர்ந்தன- (அவளது  உடம்பில் பற்றி) எரிகிற காமத் தீயானது   சுடுவதால் - அணிகலன்களில் உள்ள-நூல்கள் அறுபட்டு  நீங்கின  (படுக்கையில்  பரப்பட்ட)  தளிர்கள் கரிந்தன - கரிந்து போயின.  

நெருக்கி உள் புகுந்து. அரு    நிறையும் பெண்மையும்
உருக்கி. என் உயிரொடு    உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள்     புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன்    காமன் அல்லனே!
இராமனது     அழகிலே மயங்கிய சீதை இவன் மன்மதனோ என
ஐயுற்றாள்.  பின் கையில் கரும்பு வில் இல்லாமல் மூங்கில் வில்லையே
வைத்திருந்ததால் இவன் காமன் இல்லை என்று தெளிந்தாள்.    தோள் புணர் புண்ணியத்தணு என்றதனால், “ அவனுடைய தோளைப் புணர்வதற்கு மூங்கில் வில் நோற்றுள்ளது போல் நான் நோற்றிலனே! அத்தோளை புணர்தல் முன்னைய நல்வினை இருந்தாலொழியக் கூடாதன்றோ!என்று கருதியமைத் தோன்றும். 
பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?
கண்வழி   நுழையும் ஓர் கள்வன்’ - விசித்திரமான கள்ளன். அம் மைந்தனை  நான்  கண்டவுடனே என்னுடைய நலன். நாண். உணர்வு என்ற  இவற்றை  இழந்தேன்.  ஆகையால்.  அம் மைந்தன் கண்டார் கண்வழியே  புகுந்து  கரந்து  செல்ல  வல்லவன்’  என்கிறாள் சீதை எண்வழி: எண்ணுமிடத்து;எண் வழியுணர்வு- எண்ணத்தின் வழியே செல்கின்ற அறிவு. கள்வன் கொல யானரியேன் கரியானொருகாளாஇஎன்கின்றார் பெரியாழ்வார்.கள்வன்என்று அன்பிற்கு உரிய ஸ்ரீராமனைப் பழித்தது, தன்னை வருந்தவிட்ட வெறுப்பினாலாம். நடந்தடி வருந்தப் போனவன் நடப்பதனால் அடிவருந்துமே!என்று அப்பிரானிடத்து தனக்கு உண்டான இரக்கத்தைக் குறிப்பிடுகின்றாள்.

அவனை     முதலில்   தேவனோ   என்று      ஐயப்பட்டவள் கண்ணிமைத்தலால்   அந்த  ஐயம்  நீங்கினாள்.  பின்  கைவில்லும். மார்பின்   நூலும்  கண்டமையால்  அரசகுமாரனே  அவன்’  என்று தெளிந்தாள்.
அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ.
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என.
நல் நெடுங் கரங்களை நடுக்கி. ஓடிப்போய்-முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான். சீதையின்   காமத் தீ இயற்கை வெப்பமுள்ள கதிரவனையும் சுடும் வல்லமை      பெற்றதாயிற்று.     வெப்பம்       முதலானவற்றால்
துன்பப்படுகின்றவர்க்கு கைகள் நடுங்குதல் இயல்பு.   சூரியன் மறைந்து காதல் வேட்கையை மிக வளர்ப்பதாகிய அந்திப் பொழுதும் வந்தது.
நான் எழுதுவதை முதலில் படித்துப் பார்த்து வாசிப்பு தன்மை எப்படியிருக்கின்றது என இரு நண்பர்களிடம் கேட்பது வழக்கம். அப்போது ஒருவர் நான் காமம் என்று எழுதியதை காதல் என்று எழுதிவிடலாம், பங்காலத்தில் இரண்டும் ஒரே பொருளாகவிருந்தாலும் இப்போது காமம் என்து ஒரு விதமான பெர்வர்ஷனோடுதான் பார்ப்பார்கள் என்றார். எனக்கு சரியென்று பட்டாலும் திரு நெல்லைக் ண்ணனையும் ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாம் என்று அவருக்கு மின்னஞ்சலில்  இந்த கேள்வியை அனுப்பியிருந்தேன்.


திரு நெல்லை கண்ணன்
காமம் என்பது காதல் தான்.பின்னால் வந்த சிலர் அதனை ஒரு கெட்ட வார்த்தை போல் எண்ண வைத்து விட்டனர்.  வள்ளுவப் பேராசான்
 
தாமின்புறுவது பிறர் இன்புறக் கண்டு
  
காமுறுவர்   கற்றறிந்தார்  என்கின்றார்.  கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்கிறது தமிழ்

 
காமம் இல்லையேல் உயிர்க் குலம் ஏது நீங்கள் இல்லை நான் இல்லை யாரும் இல்லை. எதுவெல்லாம் உண்மையோ அதையெல்லாம் மன நோயாளிகள் சிலர் அசிங்கம் என்று சொல்லிப் போய் விட்டனர். கண்ணதாசன் நவராத்திரிப்  படப் பாடலிலே ஒரு வரி எழுதுவார் பாவம் எனறால் ஒரு ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா பயணம் போகும் பாதையில் திராட்சைக் கொடியை வளர்ப்பானா  எங்கே இல்லை எதனிடம் இல்லை எவர்   இதை மறந்து விட்டார் என்று. கம்பன் எழுதுவது மனித வாழ்வை. சீதை உடல் படும் பாடு உண்மையின் அடிப்படை. நலமுடன் வாழ்க.உங்கள் நண்பர் இந்தக் காலத்து இளைஞர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காக அதனைக் காதல் என்று எழுதி கொச்சைப் படுத்தி  விடாதீர்கள் இவர்களுக்கு எதுமே சரியாகச் சொல்லித் தரப் படவில்லை. நாம் நாமாகவே இருப்போம்.என்று எழுதினார். அதற்கேற்ப இங்கு காமம் காதல் என்ற பொருளிலேயே உரையில் உள்ளதுபடி எழுதப்பட்டுள்ளது.
மை வான் நிறத்து. மீன் எயிற்று.    வாடை உயிர்ப்பின். வளர்செக்கர்ப்
பை வாய் அந்திப் பட அரவே!    என்னை வளைத்துப் பகைத்தியால்
எய்வான் ஒருவன் கை ஓயான்;    உயிரும் ஒன்றே; இனி இல்லை;உய்வான் உற. இப் பழி பூண.    உன்னோடு எனக்குப் பகை உண்டா?
 
 அச்சந்தருதலால் இருளை கருநிறமாகவும் பளபளத்தலால் விண்மீன்களை எயிறாக வும் (விஷப்பர்களாக), அனல் வீசுவதால் வாடையை உயிர்ப்பாகவும், தன்னை விழுங்குவது போலுதலால் செவ்வானத்தை வாயாகவும், கொல்ல வருவதால் மாலையை பாம்பாகவும் உருவகப்படுத்தினாள். மன்மதன் முன்னமே பிடித்து உயிர்கவர முயல்கிறான்; நீயும் வந்து தோன்றினாய்; எனது உயிர் ஒன்றேயாதலின், அவன் கருத்து கைகூடிவிட்டால், உனது முயற்சி விணாக முடியுமே! அன்றி, அவனிடத்தினின்று தப்பிப் பிழைக்க முயல்கின்ற எனது முயற்சி கைகூடுமாயின், அப்போது நலிவதற்காக இங்ஙனம் நீ செய்வதாயிருந்தால், வீண்பழியைக் கட்டிக்கொள்ளுமாறு உனக்கு என மேல் பகை மூள யாது காரணம்? ஒன்றுமில்லையே; ஆதலின் நீ இப்போது அப்பாற்செல் என்றாள் என்றும் அந்திபோதே எனக்கு உயிர் ஒன்றே; என்உயிரைக் கவர்ந்தாலன்றி மீள்வதில்லை என்று ஓயாது மன்மதன் அம்பு எய்கிறான்; அவ்வுயிரை அவன் கொண்டால் நான் பிழைத்திருக்க வேறு உயிரில்லை; ஆகவே, என் மீது பகை செலுத்தலால் உனக்கு என்ன பயனுண்டு? பயனின்றி வீணே வருத்துதற்கு என்னிடத்து முன்னமே பகையில்லையே; உண்டாயின் சொல்லுவாயென்றாள்என்றும் பொருளுரைக்கலாம்.
வெளி நின்றவரோ போய் மறைந்தார்;    விலக்க ஒருவர்தமைக் காணேன்;
‘’
எளியன். பெண்’’ என்று இரங்காதே.    எல்லியமாத்து இருளூடே.
ஒளி அம்பு எய்யும் மன்மதனார்.    உனக்குஇம் மாயம் உரைத்தாரோ?அளியென் செய்த தீவினையோ!    அன்றில் ஆகி வந்தாயோ?
அன்றில் எப்போதும் ஆணும் பெண்ணுங் கூடியே நிற்கும்; கணநேரம் ஒன்றையொன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தை பொறுக்கமுடியாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்று தரம் கத்தி கூவி அதன் பின்பும் தன் துனையைக் கூடாவிட்டால் உடனே இறந்துவிடும் இது வடமொழியில் கிரெளஞ்சமெனவும், தமிழில் குருகெனவும்படும். அன்றில் பறவை துணையைப்  பிரிந்து வருந்தி அந்நலிவால் கூவுகிற குரலோசை தலைவரைப் பிரிந்து வருந்துகிற மகளிர்க்கு அவ்வருத்தத்தை வளர்ப்பதாக கூறுவது கவிமரபு. விலக்க – நீகூவுவது என் வருத்தத்தை கூட்டுவதற்கு என்றும் உரைக்கலாம்; என் கண்ணெதிரில் காணப்பட்டவர் மறைந்து போகாதிருப்பின் உன் குரல் எனக்கு துன்பம் பயவாதென்பது கருத்து. இனி, விலக்க ஒருவர் தமைக் காணேன் என்பதற்கு – எனக்கு உணடான காமநோயை நீக்குவதற்கு ஒருவரையும் காணவில்லையே என்று உரைத்தலும் உண்டு. அப்போது தாதியர் தம் அருகிலிருந்தும் அவர்கள் தன் குறிப்பை அறிந்து அதனை நிறைவேற்ற மாட்டமையின் இங்ஙனம் கூறியது. துன்பம் செய்யும் அன்றிலொன்றே அவள் கண்முன் பட்டும் அத்துன்பத்தை ஒழிக்க கூடிவரெவரும் எதிர்படாமையால் கூறியதுமாம்.
இவ்வாறு காமநோயினால் பீடிக்கபட்ட பிராட்டியார் வேதனைப் பட்டுக் கொண்டிருக்க நிலவும் உதிதித்து.

கொடியை அல்லை: நீ யாரையும் கொல்கிலாய்;
வடு இல் இன் அமுதத்தொடும். வந்தனை.  
பிடியின் மென்நடைப் பெண்ணொடு; என்றால். எனைச்
சுடுதியோ? - கடல் தோன்றிய திங்களே! சந்திரனே! நீ எல்லோரையும் கொல்லும் தன்மையை இயற்கையாகப்  பெற்றாய் இல்லை;ஏனெனில் கடலினின்று தோன்றியவன் ஆதலால் இயல்பாகவே குளிர்ச்சி பொருந்தியவன்; அமுதத்தோடு   பிறந்தவனாதலால்   பெண்ணிடம் அன்பு  வைக்கத் தக்கவன்.  அவ்வாறு  இருக்க  நீ பெண்ணாகிய என்னை வருத்துவது
முறையோஎன்கிறாள் சீதை.    

நிலவைப் பார்த்து சீதை கூறுவதைப் போலவே கண்ணதாசன் “ அத்திக்காய் காய் ஆலங்காய் வென்னிலவே எனும் பாடலில் “ இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோஎன்று பாடுவதாய் வரும். இங்கோ சீதை நீ பிறவியில் குளிர்ச்சிஉடையவன். கடலினில் அமுத்தோடு வந்தவன். அமிழத்தைதை ஒத்தபெண்கள் பால் இயற்கையில் அன்பு வைக்கத்தக்கவன் என்று ஆண்பாலாகத்தான் காட்டுகின்றார். என் தாத்தாவோ சந்திரனை பெண்பாலாக்கி, என் இரண்டாவது சித்தியை (சித்தப்பா தன் அக்கா மகளையேத் திருமணம் செய்தவர்” ) ”நான் மட்டும் பெரிய மனசு வச்சு என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்லேன்னா நீ காட்டுல காயற நிலாவாத்தான் இருந்திருப்பேஎன்று தமாஷுக்காக கூறுவார். அதற்கு காட்டுல காயற நிலா எவ்வளவோ மேல், ரோடுல பட்டபகல்ல காயற சூரியனைவிட என்று பதிலளிப்பாள் சித்தி..

இவ்வளவு வேதனைபடும் இவளுடைய  நிலை எவ்வளவோ மேல். இவ்வளவு தாதி மார், சொந்த ஊர்.  இராமனுடைய நிலையைச் சற்றே சிந்தித்தால் வேறு ஒரு ஊரில், அதுவும் தம்பியுடனும் முற்றும் துறந்த, மிக சிறந்த தவத்தையுடைய அதே வேளையில் சட்டென்று கோபப்படக்கூடிய முனிவனுடன் இருக்கின்றவனால்  என்ன செய்ய முடியும்? அதுவும் அப்பெண்ணைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. அவன் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். கனவு கான்பது.