Saturday, May 19, 2012

பொன் மாலை

என் பெற்றோரின் திருமணம் 1947ஆம் வருடம் நடந்தது. என்னுடைய இரண்டு தாத்தாக்களுமே மாமா மருமான் உறவு. சித்தூர் தாத்தா அப்போது வாயல்பாடி எனும் கிராமத்தில் ஹைவேசில் சூப்பர்வைஸர். அம்மாவின் அப்பா மதனபள்ளியில்(ஜே கேவின் ரிஷிவேலி ஸ்கூல் இருக்குமிடம்) ஹைவேசில் சூப்பர்வைசர். சித்தூர் தாத்தாவே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகவும் வாயல்பாடிக்கு அருகில் இருக்கும் சிந்தபட்டி எனும் கிராமத்தில் நிலச்சுவான்தார் வெங்கடசுப்பாரெட்டி வீட்டில் திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்பா திருமனத்தின் போது கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அம்மா அப்பாவின் சொந்தங்கள்  மதனபள்ளி மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் அவர்களாக பணம் செல்வழித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்களாம்.. அப்பாவின் பெரியப்பா மகள்கள் இருவர் அவர்களின் பிள்ளைகள்(ராப்பா,செல்லப்பா, வெங்கட்ராமன்), அம்மாவின் பாட்டி தாத்தா என்று மொத்தமே இரண்டு வீடு மனிதர்களின் எண்ணிக்கையுமே 60 க்கு மேல் இல்லை. வெங்கட்ராமன் என் அப்பாவிற்கு பிடித்தவர். இவர்கள் மதறாஸ் டவுனில் பவளக்காரத் தெருவில் வசித்து வந்தனர். இவர் ஷேர் மார்கெட், வைர வியாபரம் மற்றும் பட்டுபுடவை வியாபரமும் செய்தவர். காஞ்சிபுரத்திற்கு இவர் உயிருடன் இருந்த வரை, சித்தூர் தாத்தா இவரைதான் அழைத்துக் கொண்டு புடவை வாங்குவார். என் ஒரு அத்தையின் கல்யாணத்திற்கு புடவை வாங்க கிளம்பும் போது மூன்று பேராக போகவேண்டாம் என்பதினால் நானும் ஒரு தடவை காஞ்சிபுரம் போயிருக்கின்றேன்.

என் அம்மாவின் திருமணத்திற்கு இவர்தான் புடவை..வாங்கி தந்தார்.அப்போதைய நூறு ரூபாய் விலையில் வைர மூக்குத்தியும் வாங்கி தந்தாராம். அப்போதெல்லாம் இன்று போல் வசதியெல்லாம் கிடையாது.  அம்மாவைக் கேட்டால் “அன்று சுகாதாரம் பற்றிய அறிவேத் துளிக்கூட இல்லை. டாய்லட் வசதி அறவேயில்லை. குளிக்கிறதுக்காகவாது பெண்கள் வீட்டில் இருக்கும் வெந்நீர்உள்ளை உபயோகப் படுத்திக் கொண்டோம். ஆம்பளைங்க பாவம். ஆறு பக்கந்தான் போகணும், எல்லாத்துக்கும்.  என் தங்கை “சுந்தரி கல்யாணமே சித்தூர் வீட்டில் நடந்தது. எல்லாம் ட்ரை லெட்ரின். அப்போ எல்லாம் கல்யாணத்துலே இரண்டு மூணு டையரியா கேஸ். சிலது ஆஸ்பத்திரி வரைக்கும் போகும். கேட்டா பித்தளை பாத்திரம் கல்மிழச்சுண்டுடுத்து (food poisoning).  ஈயம் சரியா பூசலைன்னு ஏதானும் காரணம் சொல்லுவா. ஆனா டாய்லெட் வசதி சரியில்லாததுதான் காரணம்னு இப்ப எனக்கு தோன்றது. இப்பல்லாம் சாப்பாட்டுலேந்து எல்லாமே ஸ்டண்டர்ட் ஆயிடுத்து. என்னா ஒண்ணு  நிறைய பணம் வேணும்

அம்மாவின் கல்யாணத்திற்கு ஆன மொத்த செலவே ஆறாயிரம் ருபாய். அன்று ஜானவாசம், ரிசபஸன் கோட்டு சூட்டு என்றெல்லாம் இருக்கவில்லை. நல்ல வேத பாராயணம் அருகிலுள் கோவிலுக்கு செல்வது என்று வெறும் நெருங்கிய சொந்தங்களுடன் திருமணம் ஆடம்பரமில்லாமலிருந்தது.  

பொதுவாக கல்யாண சத்திரங்களில் பெண் வீட்டார் ஒரு அறை முழுக்க அவர்கள் பெண்களுக்கு செய்யும் சீர் வகைகளை அடுக்கி வைப்பர். இவ்வளவு வெள்ளி, இவ்வளவு எவர்சிலவர், பித்தளை, வெங்கலம் சாமான்கள் என்று  பெண் வீட்டாரின் அந்தஸ்த்தை மற்றவர்கள்(பெண்/பிள்ளை வீட்டார்) எடை போட அது உதவும்.

இந்த சீர் வைக்கும் அறைகளை பூதம் காப்பது போல் திருமணம் நடக்கும் மூன்று நாட்களும் கண் கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். அதற்கேற்றார் போல் யாராவது எதையாவது திருடிவிடுவர். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் போலீசை அழைப்பதற்கும் பயப்படுவர் தங்கள் கௌரவத்தை நினைத்து. அதுவும் மாப்பிள்ளை வீட்டார் யார் மீதாவது சந்தேகமிருந்தால் இன்னும் சங்கடம் அதிகம். அன்று உள்ளூரிலேயேயிருந்தாலும் இன்றைக்கு இருப்பது போல் காண்ட்ராக்ட் வசதியன்று இல்லததாலும். வாகன வசதி இன்றிருப்பதைப் போல் பல்கி பெருகாததாலும் நெருங்கிய உறவினர்கள் உள்ளுரிலேயிருந்தாலும் சத்திரத்தில்தான் தங்குவர். சர்வ சாதாரணமாக தொலைந்து போவது மோதிரம் குழந்தைகளின் ஜிமிக்கி. சில சமயங்களில் பெரிய பொருட்கள் கூட காணாமல் போவதுண்டு. இதை யார் எடுத்தது எனத் தெரியாமல் நெருங்கிய சொந்தங்களையே சந்தேகக்கண் கொண்டு பார்த்து உறவே முறிந்து போவதும் உண்டு.

இந்த தொந்தரவினால் என் கல்யாணத்தின் போது என் அம்மா என் மாமியாரிடம் நீங்க இன்ன போடறீங்களோ அது உங்க பொண்ணுக்குத் தெரிஞ்சா போதும். எங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. என்ன சீர் வைக்கறீங்களோ அதை நீங்களே அவா தனி வீட்டுக்குப் போகும் போது கொண்டு போய் வச்சிடுங்க. சத்திரத்திக்கு எடுத்துக் கொண்டு வரவும் வேண்டாம். அவஸ்தையும் பட வேண்டாம். மீதியாருக்கும் தெரியணும்ன்ற அவசியமில்லை. என்று கச்சிதமாகச் சொல்லிவிட்டார்

என் நண்பன் “குடிராஜேந்திரகுமார் கல்யாணத்தில் இப்பொழுது நடைமுறையிலிருப்பது போல் முதல் நாள் சாயந்திரம் ரிசப்ஷ்ன்”. கல்யாணத்து முதல் நாள் இன்னிக்கு வரவேற்பு பண்ணுகின்றனர். இதில் என்ன தவறுஎன்பது அவன் வாதம். சரி நாளைக்குதான் கல்யாணம் இன்னிக்கு பொண்ணை எப்படி அறிமுகப் படுத்துவே?. என்னோட வுட் பீ வைப்னா? என்பது என் வாதம். இத பாரு இப்பதான் இந்த மாதிரி சடங்குகளுக்கு எல்லாம் பெண்ணையும் பக்கத்திலே நிற்க விடுகின்றனர். இல்லையென்றால் நாளைக்கு மணமேடையிலேதான் பெண்ணையேப் பார்க்கமுடியும். போய் சாப்பிட்டுவிடு. ஊர்லேர்ந்து ஜங்க வந்தா அதன் பிறகு கும்பலாகிவிடும்என்றான். இன்றோ எங்கள் வீடுகளிலும் கூட ஒரு வேளைத் தெரியாத்தனமாக பெற்றோர் பார்த்து திருமணம் நிகழ்ந்தால் முதல் நாள் தான் ரிசப்ஷன் (10 திருமணங்களில் 3 தான் இதே சமுகத்தில் அமைவதாக வருத்தத்துடன் சொன்னார் என் மாமனார். என்னைப் பொறுத்த வரை ஜானவாசம் ரிசப்ஷன் இரண்டுமே தேவையில்லாத ஒன்று. நான் பார்த்த மலையாளத் திருமணங்களில் சடங்குகள் மிகவுமே குறைவானதாக இருந்தது.  
தம்பிகள் மற்றும் வந்திருந்த நண்பர்கள்( பாஸ்கர், மணிவண்ணன், நாகராஜன் மற்றும் சுவாமிநாதன்) கிழே போய் அமர்ந்து கொண்டு பாஸ்கரைப் பாட சொல்லி நல்ல கச்சேரி ஒன்று தொடங்கினோம். அவன் பாடி முதல் பாட்டு “ இது ஒரு பொன் மாலைப் பொழுதுஅன்று எல்லாமே பொன் போலத்தான் தோன்றியது எனக்கு. அவர்கள் வீட்டில் நெருங்கிய சொந்தகார்கள்  எனக்கு ஏற்கனவே அறிமுகம். அது மட்டுமில்லாமல் மனைவியின் மாமாவும்(கபாலி) சீஏ எனபதால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டில் யாரும் நான் தினம் தோறும் அவர்கள் வீட்டிக்குச் சென்று கொண்டிருந்தேன் என சந்தேகப் படவில்லை.

மதியம் சத்திரம் சென்ற நாங்கள் சயங்காலம் 6 .30 மணிக்கு மண மேடையை அடைந்தோம். நான் வேஷ்டி சட்டையில் இருக்க என் தந்தையோ வழக்கமக இருக்கும் பாண்ட் ஷர்டில் தான் இருந்தார். நிச்சயதார்தம் என்பது வெறும் சொந்தக்கார்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்களுடன் நடைபெறுவது என்பதனால் சற்றே விருந்தைனர்களை உபசரிப்பது என்ற தொந்திரவு இல்லாத்ததனால் பொறுமையாக நிதானமாக இருக்கலாம். இரண்டு வீட்டுப் பெரியவர்களும் கூடி மேடையில் அமர்ந்தனர். இரண்டு வீட்டு சாஸ்திரிகளும் திருமணப் பத்திரிக்கையை வாசித்தனர். இன்னாரின் புதல்வனுக்கும் இன்னாரின் புதல்விக்கும் நாளை திருமணம் என்று.
ஊர்வலமாகச் சென்ற இராமன் வசிட்டனும் விசுவாமித்திரனும் மண்டபத்தையடைந்ததுடன்
திருவின் நாயகன். மின் திரிந்தாலெனத்
துருவு மா மணி ஆரம் துயல்வர.
பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்.
கார்மேகம் மண் நோக்கித் தாழ்வது உலக வளம் செழிப்பதற்கு ஆதலின் இராம மேகமும் உலகுக்கு நலம் செழிக்கத் தாழ்ந்தது போல் வசிட்டன் குலகுரு. விசுவாமித்திரன் இடைவந்த குரு. ஆகவே வசிட்டனை முதலில் வணங்கி அடுத்து விசுவாமித்திரனை வணங்கினான் என்பதையுணர்த்த “ இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்என்றார்.

தசரத மன்னவனும் மண்டபம் வந்து சேர்ந்து எல்லோரையும் முறைப்படி வணங்கி அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தனர். பல தேசத்து மன்னர்களும் வந்தமர ஜன்கன் அவர்களனைவரையும் உபசரித்தான். அப்போது
                                        சனகனை இனிது நோக்கி.
மா இயல் நோக்கினாளைக் கொணர்க! என. வசிட்டன் சொன்னான்.

உரைசெய. தொழுத கையன் உவந்த உள்ளத்தன். ‘பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு என்று. ஆயிழையவரை ஏவ.
கரை செயற்கு அரிய காதல் ஏவ. கடாவிட. கடிது சென்றார்.
பிரைசம் ஒத்து இனிய சொல்லார். பேதை தாதியரில் சொன்னார்.

கவிஞர் அரண்மனை நடைமுறைகளை நன்கறிந்தவர் என்பதனை இப்பாவும் உணர்த்தும். ஆணைகளை முறைப்படி ஒருவர் தமக்குகீழே இருக்கும் ஒருவர்க்கு உரைக்க அவர் அவர்க்கு கீழே இருப்பாரிடம் உரைக்கும் முறை பண்டேயிருந்த முறை இப்பாடலால் அறியலாம். கரை செயற்கு அரிய காதல் கடாவிடஆய மகளிர் சென்றனர் என்பதனால் சீதை மாட்டு அவர்கள் வைத்திருந்த பேரன்பு புலப்படும். மகிழ்ச்சியால்  அவர்கள் சொற்கள் தேன் போன்று இனித்தன என்பார். பிரைசம் – தேன்.

அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு அணி என் அமைக்குமாபோல்
உமிழ் சுடர்க் கலன்கள். நங்கை உருவின்னை மறைப்பது ஒரார்
அமிழ்தினைச் சுவை செய்தென்ன. அழகினுக்கு அழகு செய்தார்-
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ
நினைக்கும் நினைவு நல்லதாயினும் அதற்கு மாறான் செயல் புரியத் தொடங்குதல் பேதமை. சீதைக்கு அணிசெய்ய கருதுதலின் மேல் வைத்து அப்பண்பினை விளக்கியவாறு பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர், சீதை அணி பறித்து அழகு செய்வாள் என அவள் பெருமையை கவி அருமையாக விளக்குகின்றார்.

அவள் கரிய கூந்தலுக்கு மாலையணிவித்து நெற்றியில் சுட்டியணிவித்து
வெள்ளத்தின் சடிலத்தாந்தன் வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர. தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக் கொண்டு அகன்ற காளை அல்லன்கொல்? ஆம்கொல் என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார்.
வில் ஒடித்த வீரன் கன்னி மாடத்தில் தன் கண்வழி நுழைந்து இதயத்தில் நிரைந்துள்ள அவனே என்பதனைத் தெளிவாக் அறியாமையால் சீதை தவித்த தவிப்பினை உணர்த்துவதற்கு கவிஞர் பிரானுக்கு காதணியின் அசைவு போதுமானதாயிற்று.

கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து
ஈனம் இல் கலங்கல் தம்மின் இயைவன் அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார்தம் மங்கல கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன் போது ததைக்கு அணி யாது மாதோ?
சீதையின் கழுத்துக்கு அழகுதரும் சிறப்புடைய அணிகள் உலகில் எதுவும் இல்லை என்றாலும் தோழியர் உலக வழக்குக்கு ஏற்றவாறு இருப்பனவற்றில் சிறப்புள்ளவற்றை பூட்டினர். பிராட்டியின் அவதாரம் இலக்குமியாகிய திருவின் அவதாரமாதலின் உலகத்து மகளிர் கழுத்தில் அணியும் திருமாங்கல்யம் ஆக இருக்கும் இவள் கழுத்திற்கு யாரால் தகுந்த அணி அணிய இயலும் என்று வியந்தவாறு ஒரு பெண் மணங்கொள்ளுங் காலை அவள் பொன்னும் பொருளும் வாழ்க்கையின் புனிதத் தன்மையும் அப்பொழுதுதான் அடைகிறாள். ஆதலின் திருமகள் அவளை அப்பொழுது தான் வந்தடைகிறாள் எனக்கருதி மணத்திற்குத் திருமணம் எனப் பெயரிட்டனர் முன்னோர். அவளுக்கு அவன் அடையாளமாகப் பூட்டும் மங்கல நாணிற்கு “திருஎன்று பெயரிட்டனர். மாங்கல்யம் சூட்டுதலை “திருப்பூட்டுஎன்று இன்றும் வழங்குவர். வான்மீகத்தில் திருமாங்கல்ய தாரணம் குறிப்படவில்லையென்றாலும் கம்பர்பிரான் காலத்தில் அது வழக்கத்திலிருந்தது என்பதை கம்பன் குறிப்பிக்கின்றார்.

நஞ்சினோடு அமுதம் கூட்டி நயனங்கள் ஆன என்ன.
செஞ்சவே நீண்டு. மீண்டு சேயரி சிதறி. தீய
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள்.
அஞ்சன நிறமோ? அண்ணல் வண்ணமோ? அறிதல் தேற்றாம்.
உகர்ந்தார்க்கு அமுதாகவும் உகவாதார்க்கு நஞ்சாகவும் அமைந்தன பிராட்டியின் விழிகள். கன்னிமாடத்தில் அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியபோதுஅவள் விழிகளில் அவன் கருமை நிறம் நிறைந்தது என நினைப்பூட்டுவார் போலவும் அதை வியப்பதைப் போலவும்  அண்ணல் வண்ணமோ? எனக் கவிபிரான் கூறினார் என்றும் எண்ணலாம். பிராட்டியின் கண்களின் அக, புற அழகும் இப்பாடலில் வருணிக்கப்பட்டுள்ள திறம் காண்க. இராமபிரானைத் தவிர பிறரிடத்தில் பொது நோக்கமே கொண்டு சிறப்பு நோக்காகிய காதல் நோக்கு இல்லாமையை “வஞ்சமும் களவும் இன்றிஎன்பதனால் சுட்டினார்.  

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியபோது அவள் விழிகளில் அவன் கருமை நிறம் நிறைத்து என நினைவூட்டுவார் போல அண்ணல் வண்ணமோ எனக் கூறினார் என்றலும் உண்டு.  மகளிர் விழிகளில் நஞ்சும் அமிர்தமும் கலந்துள்ளன என்பதை “ நஞ்சும் அமிர்தமும் போல் குணத்தஎன்று சீவக சிந்தாமணியிலும் காணலாம்.

நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி வேத பராகர்க்கு ஈந்து செம் பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி
கை வளர் மயில் அனாளை வலம் செய்து காப்பும் இட்டார்.

எனக்கும் என மனைவிக்கும் உடையை பெரியவர்கள் ஆசீர்வதித்து கொடுத்தனர். பத்து நிமிடத்தில் உடையணிந்து மண்டபம் வந்துவிட்டேன். ஆனாலும் என் மனைவி அலங்காரம் முடித்து வருவதற்கு அரைமணிக்கும் மேலாகிவிட்டது. அன்றுதான் என் திருமண வாழ்க்கையில் பெண்கள் அலங்கரித்துக் கொண்டு வருவதற்கு ஆகும் நேரம் குறித்த உண்மை உரைத்தது. அதன் பிறகு என் மனைவியின் தம்பி எனக்கு மாலையும் மோதிரமும் அணிவித்தான். பிறகு இரு சுமங்கலிகள் ஆரத்தி எடுத்தனர். எங்கள் இருவருக்கும் மஞ்சள் கயிற்றில் காப்புக் கட்டினர்.  அந்தக் காப்பைக் கட்டிய பிறகு சத்திரத்ததை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது. ஒரே விதிவிக்கு நான் பெற்றோருடன் கோவிலுக்கு போவது.  ஆயினும் அடுத்த நாள் காலை குளிப்பதற்காக என மனைவி சத்திரத்திற்கு அருகிலிருந்த அவர்கள் உறவினர் வீட்டிற்கு குளிப்பதற்கு சென்றாள்.

அதே போல் மண்டபத்தில் கலசம் வைக்குமிடத்திலும் ஹோமம் பண்ணுமிடத்திலும் பிரதட்சணமாகத்தான் செல்ல வேண்டும். இது எல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. என் நண்பன் ஆர் வி (ஆர். வெங்கடேஷ்) “அவா வீட்டிலே பாரு. எல்லாத்தையும் ஒழுங்காச் சொல்லி குடுத்திருக்கா. உனக்கு ஒண்ணுமேத் தெரியலை!”.  “இத பார் ஆர் வீ இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று எந்தவிதமாதன கட்டுப்படுகளும் எங்கள் வீட்டிலிருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. என்றேன்.

இழை குலாம் முலையினாளை;. இடை உவா மதியின் நோக்கி
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்குற்று நின்றார்-
உழை குலாம் நயந்தார்மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார்?
உலகத்து  மங்கையர் எல்லோரையும் எல்லோரும் விரும்பாமைக்கும்.
சீதையை எல்லோரும்  விரும்புதற்கும்  காரணம் சீதை அழகின்  குவியல்.  ஒவ்வோர் உறுப்பே அழகுடைய   மங்கையரே.    ஆடவரின்   இத்தனை   மோகத்துக்குக் காரணம்  ஆவர்  என்றால். அனைத்துறுப்புகளும்  அழகு  கொழிக்கும் சீதையின்மேல்  உலகினர்   பெருவிருப்பங்   கொள்ளுதல்  வியப்பன்று என்று கூறுகின்றார் கவிச்சக்கரவர்த்தி.
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம்
எழுந்து இடை விழுந்து அயர்வது என்ன. அயல் எங்கும்
கொழுந்துடைய சாமரை குலாவ ஓர் காலபம்
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என் வந்தாள்

சீதை நடந்து வருகின்றாள். இரு மருங்கிலும் வெள்ளை சாமரங்கள் மேலும் கீழுமாக வீசப்படுவது சீதையின் நடையுடன் போட்டி போடமுடியாமல் விழுந்து மீண்டும் எழுந்து ஓடிவரும் அன்னங்களின் கூட்டம் போலிருந்தது எனவும் மயிலுக்குக் கலாபம் தோகையினையும் சீதைக்கு கலாபம் இடையணியையும் குறித்தது. தோகை ஒளிர ஒரு மயில் போல் வந்தாள் சீதை.
அன்னவளை “அல்லல் என ஆம் என் அயிர்ப்பான்
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியோடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழ கவி கொள் இந்திரனை ஒத்தான்.

அந்தச்  சனக மன்னன் திருமகளை.  (தான் கன்னிமாடத்தருகே    கண்ட)    அம்மங்கை   யல்லளோ   என்றும். அம்மங்கையே   ஆவாளோ  என்றும்.  உண்டான   ஐயமுடையவனாய் (இருந்த ஐயம் நீங்கி. அவளே  இவள் என்று அறிந்த  மகிழ்ச்சியினால்); இந்திரனை ஒத்தான்.  

நறத்து உறை முதிர்ச்சி உறு    நல் அமுது பில்குற்று.
அறத்தின் விளைவு ஒத்து. முகடு    உந்தி. அருகு உய்க்கும்.
நிறத் துவர் இதழ்க் குயில்    நினைப்பினிடை அல்லால்.
புறத்தும் உளதோ?” என    மனத்தொடு புகன்றான்.


தேனில் உறைகின்ற இனிமை முற்றி வளைவது போன்று இனிமைதரும் நல்ல தேவாமுதத்தைத் துளித்து அறச்செயல்கள் முற்றிவிளைகின்ற விளைவினைப் போன்று;    (நலம்  அனைத்தும்  தந்து)  (அக் கன்னிமாடத்தின்) உச்சியிலிருந்து இறங்குவித்து என்     அருகே செலுத்தப் பெற்றிருக்கும்  செந்நிறங் கொண்ட இதழ்களையுடைய குயில் ஒன்று  என்
மனத்தின் இடத்தில்தான் இருந்தது. அப்படியன்றி அக்குயில் வெளியேயும் உள்ளதோ எனச் சீதையை அருகில் கண்ட இராமபிரான் தன் மனத்தோடு கூறிக்கொண்டான். 


சீதையின் காதல் மிக ஆழமானது மட்டுமின்றி அழுத்தமானதும் கூட. வில்லில் நாணேற்றுபவனுக்கு தான் மாலையிட வேண்டும் என்று அவளுக்குத தெரியும். ஆனாலும் அவள் மனதை கன்னிமாடத்திலிருந்து பார்த்த இராமனிடம் பறி கொடுத்தாள். வில்லை உடைத்தவன் இராமனாக இல்லாத பொழுது தான் உயிரை விடுவேன் என்கின்றாள். இராமனும் சீதையைக் காதலித்தான் என்றாலும் முனிவன் வில்லை ”நாணேற்றுக” என்றவுடன் “வில்லை நாணேற்றினால் தான் ஒரு பெண்ணுக்கு மாலையிட வேண்டும் என்று தெரிந்தும்  பெண் யார்  என்ற கேள்விகூட எழாமல் வில்லை வளைக்கின்றான். இராமயணத்தின் சிறப்பு என்று தெலுங்கில் “ஒக மாட!” (ஒரு வார்த்தை) ”ஒக பாண!” (ஒரு அம்பு) ”ஒக பத்தினி!” (ஒரு மனைவி) என  சொல்லுவார்கள்.  இப்பிறவிக்கு ஒரே மனைவி என்பது இராமனுக்கு சீதையின் காதலின் ஆழத்தைப் பார்த்து தான் வந்திருக்கவேண்டும். வில்லை நாணேற்றும் போது கூட அவனுக்கு அப்படிப்பட்ட எண்ணமிருப்பதாக்த் தெரியவில்லை. . அவன் வாழ்ந்த சமுதாய அமைப்பு பலதார மனத்தை ஏற்றுக் கொண்டது. சுந்தர காண்டத்தில் சீதை அனுமனுக்கு சொல்லும் போது 

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
"இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன்" என்ற, செவ் வரம்

தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய். 

திருமணம் முடிந்த பின் இராமன் சொன்னான் என்கின்றாள். வரம் என்ற வார்த்தை கூட சீதையின் வேண்டுகோளுக்கிணங்க என்ற பொருளிலும் வரும்.

எய்ய வில் வளைத்தும் இறுத்தும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள்
ஐயனை அகத்து வட்வே அல் புறத்தும்
கைவளை திருதுபு. கடைக் கணின் உணர்ந்தாள்.
நீலமாலை  கூற்றால்.  முன்பே  ஓரளவு   போக்கியிருந்த  ஐயத்தை மீண்டும்  முழுதும்   போக்கிடத் துணிந்தாள் சீதை. பெண்மைக்குத் தனிப்பெருமை சேர்க்கும் நாணத்தைப்     பெண்ணரசியாகிய பிராட்டிக்கும்  சேர்த்து  அதனைமேலும்  பெருமை  பெற  வைத்துள்ள பெருந்திறம் நயக்கத்தக்கது.  வரிசிலை   யண்ணலும்  வாட்கண்   நங்கையும் இருவரும்  மாறிப்புக்கு  இதயம்  எய்தி   (கம்ப. 516)  யவர்  ஆதலின்.
அகத்தில் இருந்த ஐயனைத் தொடும் அளவு அருகில் இருந்தும் நேராகத்  திரும்பிப்  பார்க்க இயலாமல் தடுத்த நாணத்தை வெல்ல கைவளையைத்  திருத்தும்  முகமாகத்  தலைசாய்க்காமல்  கண்சாய்த்துக் கண்ட   நேர்த்தியைச்  சொல்வலைப்  படுத்தியுள்ள   திறம்  எண்ணி எண்ணி   மகிழத்   தக்கது.  

கருங் கடை நெடுங் கண் ஒளியாயாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும்
அருங் கலன் அணங்கு- அரசி ஆர் அமிழ்து அனைத்தும்
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்.
அமிழதம் அனைத்தையும் தான் ஒருத்தியே குடித்தது போல் மனமகிழ்ச்சியில் உடல் பருத்தாள் சீதை.

என் அண்னாவின் மகள் எனக்கு மட்டும் எப்படி மாலை போடலாம் தனக்கும் அதே மாதிரி மாலை வேண்டுமென்று நச்சரித்து அவளும் அழகான சிறிய மலர் மாலை அணிந்து என் க்கத்தில் அமர்ந்து கொண்டாள். மனைவி அலங்கரித்து கொண்டு மேடைக்கு வரும் போதே இவள் ஓடிப் போய் “ரொம்ப அழகாயிருக்கீங்கசொல்லிவிட்டு வந்தாள். அப்போது வீடியோ கிராபர் எங்களிருவயும் தனியே அழைத்து ஷூட் செய்ய கூப்பிட்டார். இவளோ தானும் வருவேன் என் அம் பிடித்தாள். நான் அஞ்சு நிமித்திலே வந்துவிடுகின்றேன் என்று கூறி விட்டு வந்தேன். சிறு குழந்தையருகில் இருந்ததால் நாங்களிருவரும் சகஜமாக யாருக்கும் சந்தேகம் வராத படி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வாரம் கழித்து வந்த வீடியோவைப் பார்பதற்கு டெக் வாடகைக்கு எடுத்து அதனுடன் இன்னும் இரண்டு சினிமாவையும் எடுத்து கொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து பார்த்தோம். எந்த விதமா டென்ஷனுமில்லாமல் நாங்களிருவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடானெயே என் தம்பி மற்றும் பெரிய மன்னி இருவருமேஇவன் அவா வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கான். இல்லேன்னா இவ்வளவு சகஜமாயிருக்க முடியாது. அதுவும் அவா கபாலி மாமா பிந்து மாமி  எல்லாரோடையும் அப்படி சிரிச்சு பேச முடியாதுஎன்று கலாட்டா பண்ண ஆரம்பித்துவிட்டர். நான் சி நாள் போயிருக்கிறேன் என்றவுடன் என் அம்மா நீங்க ரெண்டு பேரும் ஸ்கூட்டர்ல போனதைக் கூட கேள்விபட்டேன்என்று சொல்லவும் எத்தனை சினிமாவிற்குச் சென்றோம் என்று தலைப்பே மாறியது.


         


Saturday, May 12, 2012

ஜானவாசம்

30 வருடங்களுக்கு முன்னால், மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக திருமணம், குழந்தைகளின் பிறந்தநாள் எல்லாவற்றையுமே எளிமையாக நெருங்கிய சொந்தங்களுடன் கொண்டாடினர். எங்களில் பூனூல் கல்யாணம் போன்ற விசேஷங்களையெல்லாம் மிக சிக்கனமாக அதிக பணவிரயமில்லாமல், நெருங்கிய சொந்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு கொண்டாடுவது அல்லது மடத்திலேயே இன்னும் இரண்டு மூன்று ஏழைச் சிறுவர்களுடன் சேர்ந்து செய்து கொள்வது என்பது  வழக்காமாகயிருந்தது.

என் பெரிய அக்காவிற்கு திருமணம் ஆகி 38 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. அப்போதே எங்கள் வீடுகளில் வரதட்சினை வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது. அதே போல் சீர் இதைத் தான் செய்யவேண்டும் என்பதோ இவ்வளவு பவுன் நகை போடவேண்டும் என்பதோ கூட நானறிந்த வரையில் கேள்வியே படாத ஒன்று. பேசப்படும் ஒரே ஒரு கட்டாயாமான விதி  வருபவர்களை நன்றாக கவனித்து சாப்பாடு போட்டு வழியனுப்ப வேண்டும் என்பது ஒன்றுதான். அதுவும் நடக்கவில்லை என்றால் காலாகாலத்திற்கும் “ தண்டமாக சாப்பாடு போட்ட அந்த கல்யாத்தில்” என்று புலம்புவதோடு சரி.

என் கடைசி மாமா ரங்கா” என்றழைக்க்ப்படும் ரங்கநாதன்.  (இவர்தான் என் இரண்டாவது அக்காவை திருமணம் செய்தவர்) நாங்கள் யாரவது அழுதால் “ நல்லா அழறியே. சத்தமே கேக்கலை. இன்னும் சத்தமா அழு “ என சொல்லி சொல்லி தொண்டை தண்ணீர் வற்றுமளவுக்கு செய்து விடுவார். நாங்களும் அழது காரியத்தைச் சாதிக்க முடியாது என்பதை புரிந்துக் கொண்டோம். இன்றோ குழந்தை அழக் கூட வேண்டாம் கண் கலங்கினாலே போதும் என்ன உபசரிப்பு. எல்லாமே கிடைத்துவிடுகின்றது. முன்பெல்லாம் பென்ஸில் வாங்க வேண்டும் என்றால் பழைய பென்சிலை காண்பிக்க வேண்டும். யாரவது ரப்பர் தொலைத்து விட்டால் அந்த வருடம் முழுவதும் யார் கையையாவது எதிர் பார்க்க வேண்டும். இன்றோ 15,000 ரூ போன் தொலைந்தால் அடுத்த நாளே அதே மாதிரி போன் ஒன்றை வாங்கி கையில் கொடுத்துவிடுகின்றோம்.

சிறுவனாயிருந்த போது என் சித்தப்பா கல்யாணத்தில் என்னை ஜானவாசக் காரில் ஏற்றவில்லையென்று தரையில் பிரண்டு அழுததில் அடுத்த நாள் நல்ல ஜுரம். ஆனாலும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எல்லோருக்குமே அரை டஜன் குழந்தைகளிருந்த காரணமா, இல்லை வசதியில்லாததா என்பது புரியவில்லை.

யார் கண்டுபித்தது என்பது தெரியவில்லை  மூடாத காரில் ஏறி, சிண்டுகள் எல்லாம் கும்மியடித்து உட்கார்ந்து கொண்டு, நாலைந்து பேர் பெட்ரோமாக்ஸ் லைட் தலையில் ஏந்தி, நாலைந்து தெருவில் சுற்றி கோவிலுக்குப் போய் மாப்பிள்ளைக்கு அவர்கள் கோட் சூட் வாட்ச் மற்றும் ஷூ( கோவிலுக்குள் ஷூ செருப்பு எல்லாம் வரக்கூடாது எனபதால் அந்த ஷூ பெட்டியில் வெறும் சாக்ஸ் மட்டும் தான் இருக்கும்) எல்லம் ஆசீர்வாதம் செய்து கொடுத்து, பின்பு மறுபடியும் மண்டபம் வந்து சேருவார்கள். அந்நாளிலில் பெண்னை அப்போதும் கண்ணில் காட்டமாட்டர்கள். எங்கிருந்தோ பார்க்கவேண்டும். எனக்கு கொஞ்சம் விவரம் வந்த பிறகு நான் புரிந்து கொண்ட விஷயம் பழங்காலத்தில் பிராமணர்கள் ஆங்கிலயர்களுக்கு கீழே அரசாங்கத்திலோ அல்லது கம்பெனிகளிலோ வேலை செய்து வந்தனர். இன்னும் சிலர் லண்டன் போயே படித்திருந்தனர். அதனல் என்றாவது வெள்ளைக்காரன் கூப்பிட்டால் கோட் சூட் அணிந்து விருந்துண்ண செல்வதற்கு பெண்வீட்டாரின் தலையில் கை வைத்தார்கள்.

அதே போல் நான் பார்த்த சில குடும்பங்களில் வயதானவர்கள் பஞ்சகச்சம், கோட், தலைப்பாகை அல்லது ஒரு மாதிரியான கருப்பு கலரில் தொப்பி அணிவார்கள். என் சித்தூர் தாத்தா வெளியில் செல்லும் போது பஞ்சகச்சம், டர்பன் மற்றும் கோட்டுடனும் கைத்தடியுடனும் தான் புறப்படுவார். “ ஏது தாத்தா இவ்வளவு கோட்என்றால் எவ்வளவு சொந்தகாரா. இப்பல்லாம் எல்லரும் ஷோக்குதான் கோட் வாங்கறா. போட்டுகிறதுக்கு இல்லை. அதுக்கப்புறம் என் தலையிலே கட்டிடறாஎன்றார். அதே மாதிரி கல்யாணம் என்றால் பஞ்சகச்சம், ஷர்ட்(அதில் பட்டன் இருக்காது. தங்கத்தால் செய்த பொத்தான்கள் ஒரு நூலில் கோர்க்கப்பட்டிருக்கும்) கழுத்தில் அங்கவஸ்திரம் சகிதமாகத்தான் தாத்தா ஆஜராவார்.   

எதற்காக நாலைந்து தெருவை சுத்தி வரணும் என்றால் அம்மா “யாராவது மாப்பிள்ளையைப் பாத்து அவன் ஏற்கனவே கல்யாணம் பண்ணிண்டவனா இருந்தா இல்லை அவன் மெண்டலா இருந்தா உடனேயே சொல்லிடுவா. கல்யாணத்தை நிறுத்திடலாம்”.  சிறு வயதில் இது முழுக்க முழுக்க உண்மை என்றே நம்பினேன். நன்றாக விவரமறிந்த பிறகு என்ன அபத்தம் இது. ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாமென்றா.. அப்படியிருக்கும் போது கல்யாணத்தை நிறுத்த ஒரு உண்மையை யாராவது சொல்லுவாளா?.  கல்யாணமோ பொண்ணு ஊர்ல தான் பெரும்பாலும் நடக்கிறது. பையனை யாருக்குத் தெரியும். இல்ல மெட்றாஸ் போல பெரிய சிட்டியிலே இது சாத்தியமாஎன்றெல்லாம் யோசித்து இந்த மாதிரி பைத்தியகாரதனத்தில் ஈடு படமாட்டேன் என முடிவு செய்திருந்தேன். என் பெரிய அண்ணாவின் கல்யாணத்தின் போதே ஜானவாசக் கார் ஊர்வலம் எல்லாம் கட்.

மண்டபத்தில் வைத்து ஆசிர்வாதம் செய்து கொடுத்த ஆடையுடன் (நான் கோட் மட்டும் வாங்கி கொண்டேன். சூட்டாக வாங்கவில்லை) ஆகஸ்ட் மாத சென்னை புழுக்கத்தில் மனைவியின் மாமா கபாலியின் காரில் ஆள்வார்பேட்டையிலிருந்த சத்திரத்திலிருந்து மயிலை சென்று கபாலியை தரிசித்து தொப்பமாக நனைந்து சத்திரம் வந்தடைந்தேன்.

இப்போது இல்லாத சடங்குகள் எல்லாம் வந்துவிட்டன. பெண்கள் எல்லோருக்கும் ஆளை வைத்து மதியம் மெஹந்தி போடுவது, அழகாயிருப்பவர்களை அசிங்கப்படுத்துவதற்கென்றே அழகு நிலையங்களுக்கு கூட்டி போவது, வட இந்திய முறையில் குதிரை மீது ஏறி பாராத் போவது பேண்ட் வாத்திய கோஷ்டி முழங்க வித்தியாசமில்லாமல் அபத்தமாக ஆண்களும் பெண்களும் தெருவில் ஆடி கொண்டு போவது என்று எல்லாமே மாறிவிட்டிருக்கின்றது. பையனோ பெண்ணோ வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றால் கூட கொஞ்சம் ஒத்துக் கொள்லாம். ஆனால் இருவருமே தமிழர்கள். அதுவும் வசிப்பதோ சென்னையில்.

ஏதோ வீணாகப் போவதைப் போல பணத்தை வாரியிறைக்கின்றார்கள். முன்பெல்லாம் சில்வர் அல்லது எவர்சில்வர் தட்டுகளில் எல்லாம் அப்படியே பழங்கள், பாதாம், முந்திரி, திராட்சை மற்றும் வளையாடலுக்கு பையனின் சகோதரிகள் வாங்கி வைத்ததை ஷிரிங் ராப்பிங் செய்பவரிடம் போய் அவர்களிடத்தில் மரத்தட்டுகளை வாங்கி பிளாஸ்டிக் பேப்பர் சுற்றி ஷ்ரின்க் ராப் செயவ்தற்கு டிரேவுடன் கூடி வெறும் 2000 ரூபாய்தான். என் நண்பனின் மனைவி இந்த தொழிலில் நன்றாக பணம் சம்பாதிக்கின்றாள் இன்றைக்குச் சென்னையில் வீட்டிலிருந்த படி வருமானவரி கட்டாமல் சுலபமாக சம்பாதிப்பதற்கா ஏகப் பட்ட வழிகளில் இதுவும் ஒன்று. எலிசபத் டெய்லர் நடித்த father of the brideஇல் வருவது போல் Wedding plananer வேலை ரொம்பவும் லாபகரமாக இருக்கும் போலிருக்கின்றது. சீனாவிலிருந்து சீப்பாக சாமன்களை வாங்கி ஊரில் இருக்கும் இளிச்சவாயன் யார் தலையிலாவது  கட்ட வேண்டியதுதான். இங்கே நவராத்திரிக்கு கொடுப்பதர்காக பலர் சீனாவிலிருந்து டான்ஸ் ஆடும் பிள்ளையார் எல்லாம் வாங்கி கொடுக்கின்றனர்.

பெரிய வீட்டுத் திருமணங்களுக்கே ஒரு தனியான அந்தஸ்து. சமீபத்தில் லண்டனில் நடந்த அரசுத் திருமணம் உலகின் பல மூலைகளுக்கு நேரிடையாக ஒளிபரப்பப்பட்டு அத்துணை மக்கள் பார்த்தர். நம்மூரில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் திருமணம் மற்றும் சினிமா நடிகர்களின் வாரிசுகள் திருமணம். கோலாகலமாக நடைபெறுகின்றன. குமுதம் இதழில் வெளியான அழகிரியின் வாரிசு திருமணத்தில் மு க வின் குடும்ப புகைப் படம்கூட அவர் இந்த தேர்தலில் இவ்வளவு மோசமாகத் தோற்றதற்குக் காரணமாயிருக்கலாம்..

அன்று இந்நவீ தொலை தொடர்பில்லாத காரணத்தால் மக்களுக்கு வேறு வழி? நேரிடையாக மண்டபத்தின் அருகில் நின்று கொண்டோ அல்லது பிரபலங்கள் வரும் பாதையில் நின்றோ பார்ப்பது ஒன்றுதான் வழி. இப்போது விஜய் டீவியிலும் சரி குமுதம் இணையதளத்திலும் சரி உடனேயே ரஜினியின் மகள் திருமணம் ஒளிபரப்பப்பட்டது.

தொலைகாட்சி வர்ணணையைவிட அற்புதமாக கம்பன் இராமன் ஊர்வலம் வருவதைக் காண வந்த மகளிரின் நிலையை மட்டுமே வர்ணிப்பதை மட்டும் இங்கு காண்போம். இப்போது புதிதாக வந்திருக்கும் 3 D தொலைகாட்சிப் பெட்டிகள் கூட காண்பிக்கமுடியாதவை நம் மணக்கண்ணில் தோன்றும்.  

விரிந்து வீழ கூந்தல் பாரார்; மேகலை அற்ற நோக்கார்
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்; இடை தடுமாறத் தாழார்
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு “ நீங்குமி. நீங்கிமின்என்று
அருங் கல்ம் அனைய மாதர் – தேன் நுகர் அளியின் பொய்த்தார்.

இராமனின் அழகைப் பருக வந்த மகளிர் ஒருவர்க்கு ஒருவர் இடித்துக் கொண்டு நெருங்கியவாறு முந்துதலால். கூந்தல்கள் சரிந்தன, மேகலைகள் அறுந்தன, மெல்லிடைகள் நெளிந்தன என்கின்றார். உள்ளம் ஒன்றில் தோய்ந்துவிட்டால், உடலும் உடல் சார்ந்த பொருள்களும் ஒரு பொருட்டாக கவனம் பெறுவதில்லை எனும் உளவியல் தத்துவத்தை இராமன் கோலம் காண வந்த மகளிரின் அலங்கோலம் மூலம் விளக்கியுள்ளது கம்பனின் திறமையின் வெளிப்பாடு.

கண்னினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம்; இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார்
மண்ணின் நீர் உலந்து. வானம் மழை அற வறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார்.
பண்புப் பொருள்கள் எல்லாம் கண்ணால் ஒஆன் (காண ??) இயலாதவை. நாட்டிய மரபில் “நெஞ்சு கொளின்அல்லது காட்டலாகாப் பொருள். கண்ணால் காணவியலாத காதல் எனும் பண்புப் பொருள் மானுட வடிவம் பெற்று வந்துள்ளது, வாருங்கள்; பெண்ணாய் பிறந்த பயனை இன்று பெற்று விடுவோம் என்று இராமனைக் காண மிதிலை மகளிர் ஒடிர். உலகில் தெய்வீகக் காட்சி காண்டற்கு அரியதாதலின் மழை வறண்ட காலத்து உண்ணும் நீர் கண்டுவிட்ட  மானினத்தை மகளிருக்கு உவ்மையாக்கினார் கவி.

அரத்தம் உண்டனைய மேனி அகலிகைக்கு அளித்த தாளும்
விரைல் கருங் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடந் தோளும். காண மறுகினில் வீழும் மாதர்
இரைத்து வந்து. அமிழ்தின் மொய்க்கும் இனம் என்னல் ஆனார்.
கோசிக முனிவன் மட்டும் கண்டு மகிழந்த இராமபிரானின் கை வண்ணத்ததையும் கால் வண்ணத்தையும் எல்லோரும் காணும் வாய்ப்பை மிதிலை நல்கியுள்ளதால் வாய்ப்பை நழுவ விடாது, மிதிலை நகரத்துப் பெண்கள் அமிழ்தத்தை உண்ண மொய்க்கின்ற வண்டினம் போல் இராபிரானின் அழகு எனும் அமிழதத்தை உண்டு திளைக்க மொய்த்தர். அமிழ்தம் சாவாமைக்கு காரணமாவது ட்டுமின்றி பெருஞ்சுவையும் நல்க வலல்து. இறைவனடி சார்ந்த உயிர்கள் அழியாநிலை எய்திப் பேரின்பம் உறுதலை குறிப்பால் உணர்த்தினார். அகலிகைக்கும் சீதைக்கும் அருள் செய்த தாளும் தோளும் நாமும் பெண்களாதலால் நக்கும் அருளச்செய்வான் எனும் மகளிர் நினைப்பையும் குறித்தார் கம்பர். 

வீதிவாய் செல்கின்றான்போல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களுடே வாவும் மான் தேரில் செல்வான்.
யாதினும் உயர்ந்தோர் தனனை“ யாவர்க்கும் கண்ணன்என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறு பொருள் உணர்த்திட்டான்.
கண்ணன் என்பதற்குறிய பல் பொருள்களுள் அடங்காது மாதர் கண்களுட் செல்கின்றவன் என்ற புதிய பொருளும் உண்டாக்கி இமையாது விழித்து நோக்கிய மிதிலை மகளிர் கண்களுள் எல்லாம் இராமன் நிறைந்தான் என்று அழகாக கூறுகின்றார் கவி. கண்ணன் எனும் தமிழ்ச் சொல் அனைவரிடத்தும் கண்ணோட்டமாகிய அருளையுடையவன் என்றும், யாவருக்கும் கண் போன்ற அருமையுடயவன் என்றும் ஞானக் கண்ணை அளிப்பவன் என்றும் எல்லாவித்தும் இருப்பவன் என்றும் பொருள் தரும் இப்போது அனைத்து மகளிருடைய கண்களினூடேயும் செல்பவன் என்று மேலும் ஒரு மிகுதியான பொருளை சேர்த்துவிட்டான் என்று சுவைபட கூறினார். உறு பொருள் – மிகுதியான பொருள்

குழை உறா மிளிறும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த
தழை உறாக் கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறாப் புண் ஆறாத இள முலை ஒருத்தி சோர்ந்து
மழை உறா மின்னின் அன்ன மருங்குல்போல் நுடங்கி நின்றாள்
குழை எனும் காதணியின் மேல் சென்று ஒளிரும் கெண்டை மீன்களைப் போன்ற கண்கள் மேகங்கள் மழைத் துளிகளைப் பொழிதல் போல் கண்ணீர் துளிகளை சிந்தி நிற்க தழையில்லாத கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதன் மலர்க் கணைகள் பாய்வதனால் புண் ஆறாத நூல் இழை நுழையும் அளவும் வெற்றிடமில்லாத இளைய தனங்களையுடையாள் ஒருத்தி மேகத்தில் உதிக்காமல் மண்ணில் உதித்த மின்னற் கொடி போன்ற தனது இடையை போலவே மற்றையங்கங்களும் இளைத்து இராமன் சென்று விட்டதனால் சோர்ந்து நின்றாள். மழை உறா மின்; தழை உறாக் கரும்பு இல் பொருள் உவமைகள். கண்ணீர் சிந்திடுதலுக்கும் சோர்ந்து நிற்குங் காரணம் – இராமனைத் தனக்கு தலைவனாகப் பெற்று கூடிக் களிக்க இயலாவிடினும் இன்னுஞ்சிறிது பொழுது கண்ணிற்கண்டு களிப்பதற்குங்கூடாமல் அவன் விரைவில் மறைந்தமை.   

மைக் கருங் கூந்தல்.செவ்வாய். வாள் நுதல். ஒருத்தி உள்ளம்
நெக்குனள் உருகுகின்றாள்; “நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனான்; போகாவண்ணம். கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன்; தோழி! சேருதும் அமளிஎன்றாள்.

அஞ்சனமை போன்ற கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும் ஒளிபொருந்திய
நெற்றியினையும் உடையாள் ஒரு மங்கை (இராம பிரானை நினைந்து) மனம்நெகிழ்ந்து) உருகுகின்றவளாய் (தன் தோழியை நோக்கி); (என் உயிர்த்) தோழியே! வஞ்சகனாகிய இராமன் என்நெஞ்சினுள்ளே (கண்வழியாக வந்து)  உட்புகுந்து அகப்பட்டுக்கொண்டான்; அவன் இனி வெளியேறிவிடாதபடி என் கண் இமைகளை அவன் உள் நுழைந்த  வாயிற்கதவைச்  சிக்கென அடைத்துவிட்டேன்; (எனக்கு வழிகாட்டு) அவனை நுகர்தற்கு மஞ்சம் சேர்வேன் என்று கூறினாள். உரியவர் அறியாது நெஞ்ச வீட்டுள் புகுந்து அங்கிருந்த நாணம் நிறை முதலிய உயர் பொருள்களைக் கவர்தலால் இராமன் வஞ்சன்  ஆனான்.  கண்  விழி  நுழையுமோர்  கள்வனே   கொலாம்  என்பார் முன்னும்.

கல்யாணங்களுக்கு அழகு சேர்ப்பதே பெண்கள்தான். ஆண்களுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஆடைகளை தேர்ந்தெடுப்பதிலோ அல்லது அழகாகத் தோன்ற வேண்டும் என்ற கட்டயாமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆண்கள் அணிந்து கொள்வதற்கு சில நகைகள் வந்திருந்தாலும் பெண்களுடன் ஒப்பிடவே முடியாது புடவைகளின் வர்ண ஜாலம், அதற்கேற்றார் போல் ஜாக்கெட்டுகள் அதில் இல்லாத வேலைபாடுகள் , அதற்கேற்றார் போல் தலையிருந்து கால் வரை மாட்சிங்காக நகைகள் அணிவதில் என் மனைவி வீட்டு உறவினர்களின் பொறுமையையும், அவர்கள் அதற்காக படும் சிரமங்களையும் நினைத்தால் அவர்கள் பிறந்த பயனே அதற்காகத்தானோ எ எண்ணம் எழும். இதையும் மீறி சிலர் தன்னிடம் இருப்பது போல் இன்னொருவரிடம் நகையோ, புடவையோ இருக்கக் கூடாது என்பதற்கு அவர்கள் படும் பாடு நல்ல வேடிக்கை. எந்த கடையில் வாங்கியது என்பதை மட்டும் எவ்வளவு துருவித் துருவிக் கேட்டாலும் சொல்லவே மாட்டார்கள். அந்தப் பேச்சையே அவர்கள் மாற்றும் விதம் மேலாண்மை வகுப்புகளில் பாடமாகவே வைக்கலாம். இதில் என் மனைவியும் அடக்கம். என் மாமியார் தான் வாங்கவில்லை என்றாலும் கூட மற்றவர்களுடன் போய் பார்த்து வாங்குவதிலும் எந்த கடையில் வாங்கியது என்பதையும் மறைப்பதில்லை என்ற வகையில் சற்றே மாறுபட்டவர். எந்த வயதினர் எப்படி எல்லாம் ஆடையணிந்து நகைகள் போடலாம் என்று ஒரு தேசிய ஆடை அணியலங்காரத் தேர்வாணையத்தின் தனிப் பெரும் தலைவியாகயிருந்திருக்க வேண்டியவர் அவர்.    

தோள் கண்டார். தோளே கண்டார். தொடு கழல் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்; தடக்கைக் கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.
வாள்   போன்ற கண்களையுடைய    பெண்டிருள்     இராமனது    திருமேனியழகினை
முழுவதும்  பார்த்தவர்கள்  யாவர் உள்ளனர் (ஒருவருமில்லை) ; (தமக்குத் தாமே  ஒவ்வொரு) முறையினைக்  கொண்ட  சமயங்கள்.  பிறசமயங்கள் கூறும்   இறை   வடிவங்களை   நோக்காது.   தம்   வடிவங்களையே நோக்கியவாறு  இருப்பது  போல  இராமனைக்   காண   வந்த மகளிர் (அப்பெருமானின்)  உறுப்புக்கள்  பலவும்  நோக்காது   ஓர்  உறுப்பின் அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.
சமயங்கள் ஒரு பரம்  பொருளின் பல கூறுகள் என்றவாறு வணங்கும்   துறைகள்  பலப் பலவாக்கி   மதிவிகற்பால்  பிணங்கும் சமயம்  பலப்பலவாக்கி  அவை அவை தோறும்  அணங்கும்  பலப்பல ஆக்கி  நின்  மூர்த்தி  பரப்பி   வைத்தாய்”   (திருவிருத்.  69) எனும் நம்மாழ்வார்  பாசுரத்தின்  கருத்துப்  பதிவு   ஊழ்கொண்ட  சமயத்து அன்னாள் உருவு கொண்டாரை ஒத்தார்எனும் உவமையில்பதிந் துள்ளமை   காண்க.  முழுமுதற் பரம்பொருளின் பல்வேறு வடிவங்களும்  ஒரு  வடிவத்தையோ  அல்லது  ஒரு  பகுதியினையோ கண்ட ஒவ்வொரு சமயத்தவரும் அந்தந்த ஒரு  வடிவினையே அல்லது பகுதியினையே    முடிவாகக்    கொண்டு   விட்டது   போலிருந்தது
இப்பெண்களின் நிலை என்றவாறு. கவிஞர் பிரானின் கடவுட் கொள்கை  துல்லியமாக விளங்கும் இடங்களுள் இதுவும் ஒன்று எனலாம். அந்தந்த அங்கங்களைக் கண்டவர்கள் அங்கங்கேயே நின்று கொண்டு.   அடுத்த   அங்கங்களின்  அழகைக்   காண  விழிகளைப் பெயர்க்க   முடியாமற்  போனமை.  அவர்கள்  குறையில்லை  என்று
உணர்த்தும்.                    

அருப்பு மென் முலையால். அங்கு. ஓர் ஆயிழை
‘இருப்பு நெஞ்சினையேனும். ஓர் ஏழைக்கா.
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆட் கொண்டு காஎன்றாள்
எனக்காக மிக வலிய மலையை ஒடிக்க வேண்டா; மிக எளிய கரும்பை ஒடித்துக் காப்பாற்றுக என்று நயமுற கேட்டாள். அரும்பு அருப்பு எனவும் இரும்பு இருப்பு எனவும் கரும்பு கருப்பு எனவும் எதுகைக்காக வந்தது. ஒரு பெண்ணுக்கு வாழ்வுதர மேருமலையனைய வில்லை ஒடித்து அவளைக் காத்தவனே! நானும் ஒரு பெண் தானே? எனக்காக மன்மதம் பிடித்துள்ள வில்லை, ஒரு கரும்பு வில்லை ஒடித்துக் காப்பாற்றுதல் ஆகாதா? என்று மன்றாடுகிறாள். செயலில் உள்ள் நியாயத்தையும் செயலாற்ற வேண்டுவர்குரிய ஆற்றலையும் உணர்த்தி சீதையே ஏழையென்றால் நான் எத்தனை பெரிய ஏழை? எண்ணிப்பார்என்று இறைஞ்சியவாறு.
மருள் மயங்கு மடந்தையர் மாட்டு ஒரு
பொருள நயந்திலன் போகின்றாதே; இவன்
கருணை எனப்து கண்டு அறியான் பெரும்
ப்ருணிதன்கொல்? படு கொலையான்!என்றாள்
பருணிதன்: குணங்கள் பரிணமித்த பக்குவ  ஞானி. புன்னகை கடைக்கண்   வீச்சு முதலியவை மங்கையர் மாட்டு  ஆடவர்க்குக் கிடைக்கும்  பொருள்கள்.  இராமன்   இத்தகைய  எந்தப் பொருளையும் மகளிரிடத்துப்    பெற   விரும்பாமல்    செல்கின்றானே    என்பாள். மடந்தையர்  மாட்டு  ஒரு  பொருள்  நயந்திலன்;  போகின்றதே! என வியந்தாள்.  விருப்பு  வெறுப்பு   ஆகியவற்றையெல்லாம்  இந்த  இளம் வயதிலேயே  வென்றுவிட்ட  பக்குவ  ஞானி  போலும் இவன் என்பாள்
பருணிதன் கொல்!என்று மேலும் வியந்தாள்.    


வேலூரில் தினகரன் தியேட்டரில் ஆங்கில படங்கள் தான் திரையிடுவார்கள். படம் ஆரம்பிக்கும் முன் இரண்டு ரிக்கார்டுகளைப் போடுவார்கள். ஒன்று அப்போது பிரபலமாகவிருந்த “பேபி எலிபண்ட் வாக்  மற்றது கம் செப்டம்பர். படம் பார்க்க வருபவர்களுக்கு இவை ஒரு சிக்னலாக இருக்கும். அது முடிந்தவுடன் தான் அந்த திரையை மறைக்கும் பிங்க் நிறச் சீலை மேலெழும்பும். உடனேயே ஸ்லைடுகள்  போட ஆரம்பிப்பார்கள். பாதி ஸ்லைடுகள் டுடோரியல் கல்லூரியின் விளம்பரங்கள்; பல புடவைக் கடைகளைப் பற்றியது; சில காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்புகள். இது முடிந்தவுடன் தான் திரைப்படம் ஆரம்பமாகும். அபூர்வமாக சில சமயம் திரைப்படம் ஒடிக் கொண்டிருக்கும் போதே படம் பார்ப்பவர்களில் யாராவது ஒருவரை திரையரங்கின் ஆபிஸுக்கு உடனே வரும் படி அழைப்பதாக இருக்கும். கண்ணாடியில் நாம் பார்ப்பதைப் போல எழுதும் சாமர்த்தியம் தியேட்டர் ப்ரொஜெக்டர் ஆப்பரேட்டருக்கு இருக்க வேண்டும் என்று கேள்வி. அப்போதுதான் சரியாக திரையில் வரும். இந்த படலத்தில் வரும் அனைத்துமே ஒரு ஸ்லைட் என்ன உள்ளடிக்கியிருக்குமோ,  அதைப் போல் தான் உள்ளது.  ஒருத்தி ”நான் கண்களால் இராமனை சிறை பிடித்து விட்டேன் என்னை வீட்டுக்கு அழைத்து போ” என தோழியிடம் கேட்கின்றாள். மற்றொருத்தியோ ”எனக்காக கடினமில்லாத கரும்பு வில்லையாவது உடைக்கக் கூடாதா?” என வினவுகின்றாள்.  எனக்கோ இவை பாலகாண்டத்தின் முக்கிய மற்றும் உச்சக்கட்டமான சீதா கல்யாணம் என்ற மெயின் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு தூண்டுகோலாக ஸ்லைடுகளாக காட்சியளிக்கின்றன.