Friday, December 7, 2012

கூத்து


என்னுடைய சிறுவயதில் சிறு நகரங்களில் மட்டுமே வாழ்ந்திருக்கின்றேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது பெரிய டவுன் என்றும் சொல்ல முடியாது.  நான் இருந்த ஊர்களில் மாவட்ட தலைநகரங்கள் என்றால் அது திருச்சி, வேலூர் மற்றும் கடலூர்தான். மீதி எல்லாமே தாலுக்கா ஹெட்குவார்ட்டர்ஸ். பெரும் கோவில் சார்ந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு நடக்கும் தீபப் பெருவிழா, நவராத்திரி திருவிழா, திரூஊடல் மற்றும் அருணகிரி நாதர் திருவிழா என்று எல்லா விழாக்களும் பெரும்பான்மையாக பத்து நாட்களுக்கு குறையாமல் நடக்கும். அச்சமயம் பட்டி மன்றம், பெரிய இசை கலைஞர்களின் இசை மற்றும் பாட்டு கச்சேரிகள், புலவர் கீரன், திரு முருக கிருபானந்த வாரியார், பால கிருஷ்ண சாஸ்திரிகள் போன்றவர்களின் உபன்யாசங்களும் கோவில் மண்டபத்தில் நடை பெறும்.
ஊரை சுற்றியிருக்கும் கிராமங்களில் திரௌபதி அம்மன் விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். கடைசியில் தீமிதி இருக்கும். அந்த பத்து நாட்களும் கரகாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை நிகழ்சிகளுடன் கூத்தும் நடைபெறும். கூத்தில் முக்கியமாக அரவான் பலி, திரௌபதி துகிலுரிதல், கீசக வதம், பீஷமர் வதம் மற்றும் துரியோதன வதம் போன்றவை இடம் பெறும். வேறு சில அம்மன் கோவில்களில் இராமயண நிகழ்சிகள் நடை பெறும். அதுவும் விடுமுறை நாட்களாக இருந்து விட்டால் நள்ளிரவு வரை நீடிக்கும்.

கூத்து நடைபெரும் இடம் கோவில் வெளித்திட்டாகவோ அறுவடை முடிந்த நிலமாகவோ இருக்கும்.. நீளமான மூங்கில் கழிகள் இரண்டு நட்டு அதில் ஆயிரம் வாட்ஸ் பல்பு லைட்டுகளைக் கட்டுவார்கள். இதை சுற்றி அரை வட்டமாக பார்வையாளர்கள் உட்காருவார்கள். கூத்திற்கு இன்றியமையாதது பின்பாட்டுக் காரர்கள். ஆண்களே பெண்களுக்கும் பின் பாட்டு பாடுவர். அவ்வபோது ராகம் போட்டு வசனங்களையும் கூறுவர். வசனங்கள் பல சமயம் பேச்சு வழக்கில் தான் இருக்கும். பாடல்கள் நாடகத் தமிழில் இருக்கும். அருமையாக கதை நிகழ்வுக்கு ஏற்ப அமைந்திருக்கும் எல்லா வரிகளிலும் மிகையுணர்ச்சி அதிகமாகவிருக்கும். இசைக்கும் கருவிகள் என்றால் பெரும்பாலும் ஆர்மோனியம் மத்தளம், ஜால்ரா ஆகியவைதான்.

நடித்து முடித்தவுடன் நடிப்பவர்கள்  டீக் குடித்து விட்டு மறுபடியும் தங்கள் காட்சி வரும் போது போய் நடித்து விட்டு வருவர். அவர்களுடைய உடையலங்காரம் பளிச்சென்ற வண்ணத்தில் தான் இருக்கும். பெரிய ஷோல்டர் பேடுடன் கூடிய கழுத்து அங்கி, பம்பரம் போன்ற பாவாடை, கலர் கலராக மணி மாலைகள், ரோஸ் பவுடர் பூசிய முகம், ஆண்களும் கண்ணுக்கு மையிட்டுக் கொண்டு, உதட்டில் சாயம் பூசிக் கொண்டு தெளிவாக இவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்பது போல் தான் இருக்கும். ஒவ்வொரு வேடத்திற்கும் ஒரு நிறம் இருக்கும். துரியோதனனுக்கு கருப்பு, துச்சாதனுக்கு மஞ்சள், கிருஷ்ணருக்கு பச்சை என்று, அவர்கள் உடைகளின் வண்ணம் அதற்கு இசைவாக அமையும். கடவுள் வேடமிருப்பவர்கள் விரதம் இருந்து வேடமிட்டு நடிப்பார்கள். அசைவத்தையும் தவிர்த்துவிடுவார்கள் என்பது நான் கேள்விப்பட்டது. எனக்கு இராமயணம் மாஹாபாரதம் இரண்டும் மிக அதிகமாக அறிமுகமானது தெருக்கூத்தின் மூலம் தான். பாட்டி என்ன தான் கதைகள் சொன்னாலும், நானே படித்திருந்தாலும் நிகழ் கலையாக அதை பார்க்கும் போது என் கற்பனை மேலும் விரிவடைந்தது. சித்தூருக்கு போகும் போது என்னுடய கற்பனையும் கொஞ்சம் சேர்த்து நான் பார்த்த கதைகளை ஆடி பாடி பாராட்டும் பெறுவேன்.

இந்தோனேஷியா ”பாலித்” தீவில் தினம் பல்வேறு இடங்களில் அவர்களுடைய நடனம் நடைபெறுகின்றது. இந்த நாட்டிய நடனங்கள் எல்லாமே நம் ஊரில் உள்ள கூத்துடன் நெருங்கியத் தொடர்புடையவையாகாவே எனக்கு பட்டது. என் மனைவியோ “ நம்ம ஊர் தெருக்கூத்தே தான் இது.  நம்ம ஊரிலே இதையெல்லாம் காசு கொடுத்து பார்ப்போமா. இங்கு வந்து இவ்வளவு காசை தண்டம் பண்ணி பாக்கறோம்” என்று அலுத்துக் கொண்டாள். நம்மூரில் சினிமா மற்றும் டீவியின் தாக்கத்தால் தேங்கி அழிந்து போகும் நிலைக்கு வந்துவிட்டது வேதனையளிக்கின்றது. மிகவும் நுணுக்கமான இந்த கலை.யில் இன்றைக்குக் கூட கூத்து “ வாத்தியாரை” வெற்றிலை வாழைப் பழம் மற்றும் தேங்காய் வைத்து அழைத்து நிச்சயம் பண்ணும் வழக்கம் இருக்கின்றது. அதை பழமை என்று ஒதுக்கிவிடும் இளைஞர்களையும், அவர்களை மரியாதை இல்லாமல் நடத்தும் அவலத்தையும் நம் பாராம்பரியத்தை புரிந்து கொள்வதிலோ அல்லது பராமரிப்பதிலோ சிறிதும் அக்கரையில்லாத சமூக மாற்றத்திற்கும் என்ன காரணம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அரசாங்கம் இந்த கலைகளை தினமும் நடக்கும் நிகழ் கலையாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையாகவும் அதே சமயம் வருவாயையும் பெருக்கும் விதமாகவும் நடத்தலாம். ஞானமுள்ள சிலர் இருக்கும் போதே அவரகளுக்கும் நிரந்தர மற்றும் நல்ல வருமானம் உள்ள தொழிலாகவும் இதை கட்டாயம் மாற்ற முடியும்.

பாலியில்” நடைபெறும்  நாட்டித்தில் ஒன்று “ரங்குடா” எனும் பாதி நாய் பாதி சிங்கம் போன்ற உருவத்துடன் இருக்கும், குறும்புடன் கூடிய ஆனால் நல்லதை மட்டுமே மனிதர்களுக்கு நினைக்கும் புராண விலங்கிற்கும் ”ப்ரோங்” எனப்படும் விதவை சூனியக்காரிக்கும் நடைபெறும் போராட்டமாகும். கடைசியில் யமனின் உதவியுடன் ரங்குடா போராட்டத்தில் வென்று பரோங்கை துரத்திவிடும். இதில் ரங்குடா பாத்திரத்தின் அந்த உருவத்தை இருவர் இயக்குவர்.
 

மற்றொன்று “உபூட்” பகுதியில் குரங்கு கோவிலில் நடைபெறும் ”கேச்சாக்” என்பது. இதில் சீதை பொன் மானை வேண்டும் என்று கேட்பதிலிருந்து சீதையின் தீக்குளிப்பு வரை நடந்த நிகழ்ச்சிகளை சொல்வது. எந்த விதமான வாத்தியக் கருவிகளும் கிடையாது. அதற்கென பாரம்பரிய பயிற்சி பெற்றவர்கள் வாயினாலும் கையினால் மார்பு தோள், தொடைகளைத் தட்டுவதனாலெழும்  ஓசைகளே பிண்ணனியிசையாகும். நம் ஊரில் உள்ளதை போலவேத்தான் அவர்களின் உடைகளும், கால் கை அங்க அசைவுகளும். கை முத்திரைகளும் தெருக்கூத்துடன் நெருங்கிய தெடர்புடையது. இதற்கு பின்படுதாவாகவிருப்பது பச்சையும் நீலமும் கலந்த கலரில் இருக்கும் இந்தியப் பெருங்கடல். சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு ஆரம்பித்து சூரியஸ்தமனத்திற்கு பிறகு முடிவடைகின்றது. நடன அசைவுகளில் பயங்கர நிதானமும் மெண்மையும் இருக்கும். அரங்கத்தில் 60 70 பேர் ஒரே மாதிரி கீழ்வஸ்திரம் மட்டும் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து அரை வட்டமாக அமர்கின்றனர். பின்னர் ஒரு பெரிய விளக்கை ஏற்றி வைக்க ஒரு பூசாரி வந்து நான்கு திசைகளுக்கும் நாட்டியத்தில் நடிப்பவர்களுக்கும் தண்ணீர் தெளித்து ஆசிர்வதித்து அவர்கள் பாலி பாஷையில் கதை அறிமுகம் செய்விக்கின்றார். சீதை வருவதிலிருந்து ராம லக்‌ஷ்மனர் வருகை, ஒரு பெண் பெண்மானாக ஒடி வந்து சீதை அதை தனக்கு வேண்டும் என்பதிலிருந்து நாட்டியம் தொடங்குகின்றது. கடைசியில் சீதையின் அக்னி பிரவேசம் நடைபெறும் போது பெரிய தீச்சுவாலை பற்றி எறியவிடப்பட்டு அதை அக்னி பகவான் வந்து அணைப்பதுடன் நடனம் முடிவுறுகின்றது. இது நடைபெரும் இடம் கடல் மட்டத்தில் இருந்து 500 600 அடி உயரத்தில் செங்குத்தான மலையின் மீது ஏறியதில் களைத்திருந்த  மேறிகிலிருந்து முகத்தில்அடித்த வெய்யில் உடம்பையும் சேர்த்தே தீய்த்தது. அரை மணி நேரம் கழிந்தபின்  கடல் காற்றின் குளுமையால் வெக்கை மறைந்தது. கேசாக் நாட்டிய கோரஸ்காரர்கள் எழுப்பும் சத்தம் பாறைகளில் மோதும் கடல் அலைககளின் சத்தத்தையும் அடக்கிக் கொண்டிருந்தது. செக்க சிவந்திருந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரஞ்சு கலரை இழந்து கரு நீலமாக மாறிக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரே ஒரு கீற்று போல் இருந்த ஆரஞ்சு கலர் மறைந்து மின்வெட்டால் இருளில் மிதக்கும் தமிழகத்தின் சிற்றூர்கள் போலானது. ஜெனெரேட்டர் வைத்திருக்கும் பாக்கியவான்களின் கடைகளில் எரியும் விளக்கு போல், வானத்தில் நட்சத்திரங்கள் மினுமினுத்தன.

தமிழகத்தில் பழங்கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்ச்சியாக “சங்கமம்” என்ற நிகழ்சி ”கனிமொழியின்” முயற்ச்சியால் கடந்த திமுக ஆட்சியாளர்களின் முழு ஆதரவுடன், பொங்கல் விடுமுறை சமயத்தில் நடைப்பெற்றது. பரவலாக வரவேற்பும் பெற்றது. ஜெயலலிதாவின் காழ்ப்புனர்ச்சிகாரனமாக ”சங்கமம்” அஸ்தமித்தது. சங்கமத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் குறைகளை களைந்து, வளர்த்தெடுப்பதை விடுத்து, ஒரேயடியாக ஒழித்துவிட்ட ஜெயாவின் அராஜகப் போக்கை சங்கம் வளர்த்த தமிழகம் மட்டுமின்றி, நிகழ்கலைகளையே மூச்சாகக் கொண்டு வாழும் கலைஞர்களும், ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். அவர்களின் சாபம் ஒரு போதும் வீணாவதில்லை.  

மாணவர்களை மார்க் வாங்கும் மெஷின்களாக மாற்றும் பள்ளிகள், அவர்களுக்கு நுண்கலைகளில் ஏன் பயிற்சியளிப்பதில்லை?. நம் பாரம்பரிய சங்கீதத்தை, இசையை ரசிக்கும் ரசனையை ஏன் அளிப்பதில்லை.? நாடகத்தை அதன் பல்வேறு கூறுகளை ஏன் அறிமுகம் செய்து அவர்களின் ரசனை தளத்தை உயர்த்துவதில்லை?. சினிமாவை இரசிப்பதையும் கூட இன்றைய சூழ்நிலையில் இருக்கும் தொழில் நுட்பம் காரணமாக பரவலாக அறிமுகப்படுத்த முடியும் என்ற போதும் ஏன் செய்வதில்லை.? மாணவர்களை பணம் காய்ச்சி மரமாக கல்விச் சாலை நடத்துபவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் நினைப்பதுமே காரணம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. . வெளிநாடுகளில் அதுவும் சர்வதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மிகவும் சுதந்திரமாகவும் கல்வியை விரும்பி கற்பவர்களாகவும், அவர்களுக்கு இசையிலும் நாடகத்திலும் ரசனையை சிறு வயது முதற்கொன்டு வளர்ப்பதைப் பார்கின்றேன்.

ஏன்? நான் ”டேனிஷ் மிழனில்” படிக்கும் போது நெசவிலிருந்து, நாடகம், ஓவியம் மற்றும் சங்கீதம் (அதுவும் கர்நாடக சங்கீதம்) மட்டுமின்றி நீதிபோதனை வகுப்புகளும் இருந்தது, எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம் பெரிய மைதானம் இருந்தது. கிரிக்கெட், வாலிபால் புட்பால் போன்ற விளையாட்டுகள் விளையாட எல்லா வசதிகளும் பள்ளியில் இருந்தது. வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் எல்லா வகுப்பு மாணவர்களும் விளையாட வழியும் இருந்தது. ஏன் எதற்காக இது மாறியது?. இன்றைக்கு இது தான் நியதி., எனக்கு பிடிக்கின்றதோ இல்லையோ நான் இந்த வேடத்தைதான் அணிய வேண்டும் என்று தள்ள படுகின்றனர். எல்லோருமே யாராலோ மனமாற்றத்திற்கு உள்ளாகி நம் சுய புத்தியை தொலைத்து, வாழ்க்கையையும் தொலைக்கின்றோம்.

“அரசரில் பிறந்து அரசரில் வளர்ந்து பின் அரசரில் புகுந்து பேரரசியானவள்” கைகேயி.. அவள் வெறும் ஒரு வேலைக்காரி சொன்னதால் மட்டும் மனம் மாறிவிடக்கூடியவளா? கூனியும் லேசுபட்டவள் இல்லை. அவளுடைய வாதங்களை, அவள் சொன்ன வரிசையில் வைத்துப் பார்த்தால் ஒரு பெரிய மனவியல் நிபுணராகவே காட்சியளிக்கின்றாள். பெரும்பாலும் வீட்டில் நடக்கும் விஷயங்கள் மொத்தம் வெளியே போவதும் அதே போல் சில வீடுகளில் வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகள் அல்லது வயதானவர்களுக்கு உதவிக்கு இருப்பவர்கள் ஆட்டுவிக்கின்றபடி ஆடும் எஜமானர்களும் உண்டு. சசிகலா ஜெயலலிதாவை ஆட்டுவிப்பது போல. சிலவருடங்களுக்கு முன்னால் பெங்களூரில் வசித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த ஓவியரின் மனைவி தேவிகா ராணி அவர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் அவள் வீட்டில் வசித்து வந்த உதவியாளர் ஒருவரினால் சுருட்டப்படது. ஆயினும் மிக பெரிய மனிதர்கள் அந்த டிரஸ்டில் இருந்த்தால் மீட்கப்பட்டது.




கூனி கைகேயிடம் முதலில் கேடு காலம் வரும் போது அதை அறியாமல் உறங்கி கொண்டிருக்கின்றாயே என்றாள்; அவள் கேடு காலம் என்றது இராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதையே. கைகேயியோ “ இராமனை பெற்ற எனக்கு என்ன தீங்கு வர முடியும்”? என்றவுடன் இராமனை குறை கூறி காரியம் நடவாது என்று முடிவுக்கு வந்தாள்.

தசரதன் ஏன் பரதனை தூரதேசத்திற்கு அனுப்பினான் என்பது எனக்கு இன்று புரிந்தது என்று தசரதனை சூழ்ச்சிக்காரனாக சித்தரித்தாள். அதுவும் எடு படவில்லை. பெற்ற பிள்ளை பாசத்தை தூண்டுகின்றாள்;  ”நீ பரதனை பெற்று என்ன பயன்? அசராட்சியில்லாமல் அவன் வாழ்வதைக் காட்டிலும் இறந்து போகலாம்” என்று. கைகேயி அதற்கும் மசியாமல் “மயில் முறை குல முறைமையைப் பற்றி பேச அரம்பித்து விடுகின்றாள்.

மூத்தவனுக்கு பட்டம் என்பது முறை. முறை தவறினால் பழி நேரிடும். மூத்தவன் என்பதை மந்தரை திருத்தி, வயதில் மூத்தவர் என்றால் தசரதன் உயிரோடு இருக்கும் போதே இளையவனான் இராமனுக்கு முடிசூட்டும் போது பரதனுக்கு முடிசூட்டுவதில் என்ன முறை திரும்பிவிடும்? என்று கேட்கவும் கைகேயின் மனம் தடுமாறியது.

கூனி சளைக்காமல் சக்களத்தி சண்டையை தூண்ட  முயற்சிக்கின்றாள். ”கௌசல்யைக்கு வாழ்வு வரும் நீ தாழ்ந்து விடுவாய். உன்னை அண்டும் உன் உறவினர்களுக்குக் கூட நீ ஒன்றும் செய்ய முடியாது. நீ கோசலையிடம் சென்று இரந்து வாங்க வேண்டும்” என்கின்றால். இதிலும் அவள் மனம் மாறவில்லை.

கடைசியாக பிரம்மாஸ்திரத்தை ஏவுகின்றாள். உன் தந்தைக்கும் இராமனின் மாமானாரான ஜனகனுக்கும் ஏற்கெனெவே பகையுண்டு. தசரதன் உன் கணவன் என்பதினால் ஜனகன் பேசாமலிருந்தான். இராமன் அரசனாகிவிட்டல் அவன் உன் தந்தைக்கு உதவமாட்டான். உன் தந்தை மற்றும் குடும்பத்தின் கதி அதோ கதி” என்றவுடன் கைகேயின் மனதில் மாற்றம் வருகின்றது...

போரிலே ஈடுபட்டு லாவகமாக தசரதனின் உயிரைக் காப்பாற்றக் கூடிய அறிவாளியானவளான கைகேயி இப்படி பட்டவர்தனமாக திரிக்கப்பட்ட வாதத்திலா மனம் மாறுவாள். பிறந்த வீட்டிலுள்ளவர்களுக்கு புகுந்த வீட்டினரால் தீங்கு வரும் எனும் போது எந்த பெண்ணும் அதை எப்பாடுபட்டாவது தடுக்க முயல்வது முறை. அதிலும், சாதராண இடத்தில் பிறந்து, உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண்களுக்கு ஒரு வகையான தாழ்மையுணர்ச்சி இருக்கும். அதை யாரேனும் சுட்டிக் காட்டிவிட்டால், காலம் கனிந்தவுடன், புலி போல் பாய்ந்துவிடுவார்கள்

கேகேயன் ஒரு சிற்றரசன் மட்டுமே. ஆனால் தசரதன் சக்கரவர்த்தி.(இதிலும் கூட வேறு சில புராணக்கதைகளின் படி தசரதன் காசியருகில் இருந்த ஒரு சிறு தேசத்திற்கு அதிபதி. அவன் கோசலையிடம் மனம் பறிகொடுத்து, அவளை மன்முடித்து, ஆண்வாரிசில்லாத கோசல தேசத்தையடைந்து அதனால் தான் அவன் சக்கரவர்த்தியானான்.) கேகேயனை விட ஜனகனே கூட பெரிய அரசன் தான். அதைத்தான்  மிக அழகாக சரியான நேரத்தில் கூனி ஞாபகப்படுத்தினாள்.  

கைகேயி கூனியினால் மனம் திரிந்து செய்த தவறு  மன்னிக்கப்பட வேண்டியது.  இவர்கள் பொதுவாக தீங்கிழைப்பவர்கள் அல்லர் என்றாலும் சூழிநிலை காரணமாக தீங்கிழைத்துவிடுகின்றனர். இதைச் சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் கவிஞனுக்கு இருக்கின்றது. கூனியை கூற “”கொடுமனக் கூனி” ”மூன்றுலகினுக்கும் ஒர் இறுதி மூட்டுவாள்” ”காலக் கோளனாள்” “வெவ்விடம் அனையவள்” ”சூழ்ந்த தீவனை” ”வேதனைக் கூனி” ”தீய மந்தரை” என்று பல்வாறாக அர்ச்சனை செய்கின்றான்.

அவனே கைகேயியை குறிக்கும் போதோ ”தெய்வக்கற்பினாள்” ”ஆழந்த பேரன்பினாள்” கேகேயர்கிறை திருமகள்” ”தேவி” என்ற அடைமொழிகள் கொடுக்கின்றான். அவன் அவளை அறிமுகபடுத்தும் போது அவள் உறங்கி கொண்டிருக்கின்றாள். சாதராணமாக விழித்திருக்கும் போது நம் அறிவின் துணை கொண்டு நாம் தீய சிந்தனைகளை அடக்கி, நம் முகம் எனும் கண்ணாடி அச்சிந்தனையை காட் டாமல் மறைக்கமுடியும் ஆனால் உறங்கும் போது அவ்வாறு செய்யவியலாது. எப்பேற்பட்ட உலக அழகியாகவேயிருந்தாலும் உறங்கும் போது அழகுடன் விளங்க மாட்டார்கள்.

இந்நிலைக்கு மாறக யாரவது உறங்கும் நிலையில் அழகாகாத் தோன்றினால் அவர் மிகசிறந்த எண்ணமும் பண்பும் உடையவர் என்பதேயாகும். குழந்தைகள் உறங்கும் போதும் அதே பொலிவுடன் விளங்குவதையும் பார்க்கலாம்.

கம்பன் அவளை அறிமுகபடுத்தும் போதே
நாற்கடல் படுமணி நளினம் பூத்தது ஓர்
பார்கடல் படுதிரை பவளவல்லியே
போர்க்கை கண் அருளி – அருள் பொழியப் பொங்கு அணை
மேற்கடந்தாள்  தனி விரைவில் எய்தினாள்

கடைக் கண்களில் அருள் வழிந்து ஓடியது அவள் உறங்கும் போதே என்றால், அவள் விழித்திருக்கும் போது எவ்வளவு அருளுடன் விளங்குவாள் என்பதை கவி நம் கற்பனைக்கே விட்டு விடுகின்றான். தனக்கு சம்பந்தமேயில்லாதவர்களிடத்தும் அருளுடையவளாக கைகேயி இருப்பதால் தான் “அளி” என்ற சொல்லை கம்பன் கூறுகின்றான். அப்படிப் பட்டவளே மனம்திரிந்து கல்னெஞ்சத்தவளாகி தீங்கிழைத்தாலும் அதற்குக் காரணம் “அரக்கர்தம் பாவமும் நல் அந்தணர் தம் தவமும்”. அவள் மனம் திரிந்தது என்கின்றார் கவி. அறமும் பாவமும் எப்போதும் ஒன்றாக சேராதவை. அவையே ஒன்றாக சேரும் போது கைகேயினால் என்ன செய்யமுடியும்.? (இது அ.ச ஞா 1957 ஆம் ஆண்டில் எழுதிய கேகேயன் மடந்தை என்ற கட்டுரையை அடியொட்டியது.)

இதே அ ச ஞா அவர்களே 40 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மரபு முறையை விட்டு வாசிக்கும் போது கைகேயி முற்றிலும் குற்றமற்றவளாக தோன்றுகின்றாள் என்கின்றார், “நாடக மயில்” என்று அவர் எழுதிய கட்டுரையில். பின்வருவன அக்கட்டுரையை அடியொட்டி எழுதப் பட்டது.

கம்பன் இரு பெண்களை மயிலுக்கு ஒப்பிடுகின்றான். ஒன்று மலைகுல மயில். இதை மலைசூழந்த கிட்கிந்தையில் வாழும் வாலியின் மனைவிக்கு ஒப்பிடுவது சாலப் பொருத்தமே. இன்னொன்று “ நாடக மயில்”. இதை உவமையாக கைகேயிக்கு கூறுகின்றான். மந்தரை போன பின்னும் தசரதன் நள்ளிரவு வருவதற்குமிடையில் அவள் தரையில் கிடந்ததை

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்      துயின்றென்ன,
கவ்வை கூர்தரச் சனகி ஆம்      கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்என்று அயோத்தி வந்து      அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள்,      கேகயன் தனையை.
ஆடுமயில் என்றோ நாட்டிய மயில் என்றோ கூறியிருந்தால் அதில் புதுமையில்லை. ஆனால் ஒரு அதி முக்கியமான கட்டத்தில் கம்பன் ஏன் அதிமுக்கியமான ஒருபாத்திரத்தை “நாடகமயில் என்று குறிப்பிடவேண்டும்” நாடகம் நடிப்பவர்கள் ”தாம் யார் என்பதை மறைத்துக் கொண்டு அந்த பாத்திரத்திற்குறிய வேடத்தை புனைந்து நடித்தல் வேண்டும். மயில் தன்னுடைய இயல்பான மென்மை. நளினம், அழகு ஆகியவற்றை மறைத்துக் கொண்டு நாடகத்தில் நடிப்பதற்காகாக ஏதோ ஒரு வேடத்தைப் புனைந்துக் கொண்டு நடிக்கத் தொடங்கிவிட்டது என்ற பொருளை பெற வைக்கின்றான். எனவே எந்த பாத்திரத்தை நாடக மயில் என்று உருவகித்தானோ அந்த பாத்திரம் தன் சுயத்தை மறைத்துக் கொண்டு. ஏற்றுக் கொண்ட ஏதோ ஒரு பாத்திரத்தின் வேடத்தை நடிக்கத் தொடங்கிவிட்டது.

அதே போல் கைகேயியை பெண் மானாக உருவகிப்பதும் நோக்கத் தக்கது. மான் இயல்பாகவே மருண்ட பார்வையும் குறிக்கோள் அற்ற முறையில் இங்கும் அங்கும் ஒடித்திரியும் இயல்புடையது. மருண்ட பார்வை அச்சத்தின் காரணமாகவே வருகின்றது,. இன்னது செய்வது என்ற முடிவுக்கு உறுதியுடன் வர முடியாமையால் இங்கும் அங்குமாக ஓடுகின்ற இயல்பைப் பெற்றுள்ளது. இதே குணாதிசயத்தை கைகேயிற்கு ஏற்றிப் பார்க்கலாம்.

இதுவரை கைகேயியின் வாழ்க்கை தெளிந்த அமைதியான நீரோட்டம் போல் சென்று கொண்டிருந்தது. மன்னர் மன்னனாகிய தசரதன் கணவன். புவிக்கெல்லாம் வேதமே யான இராமன் மைந்தன். அவள் வாழ்க்கையில் மருட்சிக்கேயிடமில்லை. ஆனால் இப்போது ஒரு தலை கீழ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கணவனின் விருப்பதிற்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பிரியமான மைந்தன் இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இவை இரண்டையும் செய்வது சரியா தவறா என்ற எண்ணம் மனப்போராட்டமாக அமைந்து விடுகின்றது. இதுவே, உறங்கும் போது கூட கடைக்கண்ணில் அருள் வழியும் அதே கண்களில் மருட்சி தோன்ற காரணம். தான் மேற்கொண்ட முடிவினால் யார் யாருக்கு என்ன விளையுமோ என்ற அச்சம் காரணமாக அவள் கண்ணில் மருட்சி தோன்றலாயிற்று. அவளுடைய மனப்போராட்டத்தையும் கண்ணிலுள்ள மருட்சியையும் விரிவாக கூறாமல் ”நவ்வி வீழ்ந்தென” என்ற ஒரு சொல் மூலமாக கவிஞன் கூறிவிடுகின்றான்.

இந்த போராட்டம் கூனி போன பிறகிலிருந்து தசரதன் வருவதற்கு சற்று முன் வரையிலிருந்தது. இதன் முடிவில் கைகேயி ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றாள். அவளுடைய உடல வாகு, மென்மைதன்மை, அருள் நிரம்பிய மனம் அனைத்தும் அவளுடைய இயல்பான தன்மைகளாகும். அவள் முடிவை நிறைவேற்ற வேண்டுமானால். வலிமை பொருந்திய உடம், கருமமே கண்ணாகியிருக்கும் உணர்ச்சியற்ற வரண்ட உள்ளமும் கொண்ட பாத்திரமாக எது நிகழந்தாலும் மாறி, நடிக்க வேண்டும். மயில் போன்ற சாயலையுடைய கைகேயி இந்த வன்கண்மையுடை பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும். இதைத் தான் கவி “ நாடக மயில் என்று குறிப்பிடுகின்றான்.

அப்படியானால் நான்காம் அடியிலுள்ள மூதேவி என்று அவளைக் குறிப்பதேன்? அவளுடைய உள்ளகிடக்கை தெரிந்தவுடன் கவி கோபம் கொண்டு அவ்விதம் அவளை மூதேவி என்று ஏசினான் என்றே கேகேயன் மடந்தை கட்டுரையில் அ ச ஞா குறிப்பிட்ருந்தார். அவரே 40 ஆண்டுகள் கழித்து வேறு நோக்கில் பார்க்கும் போது அது கைகேயியைக் குறித்த சொல் அல்ல அது அவள் ஏற்றுக் கொண்ட வேடத்தைக் குறித்தது என்கின்றார். மானும் மயிலும் வேடத்தை மேற் கொண்ட வேடதாரியையும், மூதேவி என்பது ஏற்றுக் கொண்ட வேடத்தையும் குறிக்கும்.

இவ்வாறு பொருள் கொள்ள இப்பாடல் இடமளிக்குமா என்றால், வரங்கள் கேட்டு முடிந்த பின்னர் எந்த நிலையிலும் அவள் தன் மனதை மாற்றிக் கொள்ள தாயாரகவில்லை என்ற பகுதியை விளக்கவேண்டியுள்ளது. 

அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ, இன்று, இவ் உலகங்கள், இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே?
கைகேயி தனக்கு இயல்பாக உள்ள அருளை துறந்து விட்டாள். அதற்கு காரணம் அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் என்ற இரண்டு மட்டுமே அவள் இந்த வேடத்தைப் புனைய காரணமாயின என்கின்றான். வேடம் போட்டுக் கொண்ட பின் அவள் பேசிய சொற்களுக்கு அவளை குறை சொல்லி பயனில்லை. ”நல்லருள் துறந்தனள் தூ மொழி மடமான்”. என்று நம்மை எச்சரிக்கின்றான்.

அவசரப்பட்டு நல்லருள் துறந்தனள் என்ற முடிவுக்கு வர வேண்டாம் என்று. இரண்டு வரங்கள் வேண்டும் என்றதும் ஒரு வரத்தினால் பரதன் நாடாள்வதும் மற்றொன்றினால் சீதையின் கேள்வன் காடாள்வதும் மற்ற அரசர்கள், தன் பாதம் பணியும் தசரத சக்கரவர்த்தி இவள் காலில் விழுந்து கெஞ்சும் போதும் விட்டு கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பவளின் பேச்சு எப்படி தூமொழியாகும்? இதன் விளைவுகள் தசரதன் உயிரிழந்தான்; இவளும் விதவையானாள்; இராமன் காட்டிற்கு சென்றான்;.பரதனும் முடிசூட்டிக் கொள்ளவில்லை; இவளுக்கோ தீராத பழி நேர்ந்தது இவள் பேசிய சொற்களால் எனும் போது அவை எப்படி தூ மொழியாகும்? அவை கடுஞ்சொற்கள்தான் என்றால் கவிஞன் ஏன் தூமொழி என்று கூறவேண்டும்?

தசரதன் கைகேயியை மணக்க கேகேய மன்னனிடம் கேட்கும் போது அவன் தன் மகளின் மகன் பட்டத்திற்கு வரமுடியாது என்பதனால் மறுத்துவிடுகின்றான். தசரதன் கைகேயிற்கு பிறக்கும் மகனுக்கே அரசு முடி சூட்டுவேன் என்று திருமணவாக்குறுதியாக (கன்யா சுல்கம்) அளித்த பின் தான் திருமணம் புரிந்து கொண்டான். ஆனால் இராமன் பிறந்த தினம் முதற் கொண்டு அதை அடியோடு மறந்துவிடுகின்றான். கம்பன் இதை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் ஒரேயடியாக இதை மறைக்கவுமில்லை. கைகேயி வேண்டுமென்றால் கன்யா சுல்கத்தை நினைவுருத்தியிருக்கலாம். அப்படி செய்தால் இவளுடைய பழி நீங்கும்; ஆனால் தசரதன் பொய்யனாகிவிடுவான். தசரதனே கூட ” உன் கழுத்தின் நாண், உன மகற்கு காப்பின் நாண் ஆம்” எனும் மாபெரும் சாபமிட்டதையுயும் கூட  பொருட்படுத்தாமல் மனதை கல்லாக்கி கொண்டு, தான் விதவை ஆவதையும் கூட பொருட்படுத்தாமல்.தன் மகனே தன்னை வெறுத்தாலும் கலங்கிடாமல் தான் ஏற்று கொண்ட வேடத்தை கன் கச்சிதமாக முடிப்பதைத்தான் “ நாடக மயில்” என்ற அடை மொழியின் மூலம் கூறுகின்றான் கவிஞன். கன்யா சுல்கத்தை பற்றி யார் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் புரியும் படி கூறிவிட்டு வெளிப்படையாக கம்பன் கூறவில்லை. மயில் முறை குல உரிமை என்றால் தசரதன் 14 பாடல்களில் இராமனை வேண்டி வற்புறுத்த அவசியமேயில்லை. அது அவனுடைய உரிமையும் கூட.

இராமன் தாயார் கொசல்யையிடம் விடைப் பெற்றுக் கொள்ள செல்லும் போது
சிறந்த தம்பி திருவுற எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? ”எந்தந்தையை மறந்தும் பொய்யிலனாக்கி” என்று சொற்றொடர் கட்டாயம் இந்த கன்யா சுல்கத்தைதான் குறிப்பிடுகின்றது” என்று ஐயுருவதற்கு வழிவகுக்கின்றது.

பரதன் ராமனை காட்டில் சந்திக்கும் போது இந்த இராஜ்ஜியம் உனது நீ வந்து ஆள வேண்டும் என்று பல பாடல்களில் வற்புறுத்தும் போது இராமன் ஒரு பாடலில்
வரன் நில் உந்தை சொல் மரவினால், உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,
அரசு நின்னதே; ஆள்கஎன்னவே,- 
.இது கன்யா சுல்கத்தின் போது தசரதன் கைகேயிக்கு கொடுத்த சொல் மரபினால் இப்புவி உனது அது மட்டுமில்லாமல் நீ பிறந்த போது இது உன்னுடையது ஆள்க என்ற மறை பொருளையும் கைகேயிக்கு இப்போது கொடுத்த வரத்தால் உன்னுடையது நீயே ஆள்க எனும் நேரிடைப் பொருளையும் தரும். இராஜ்ஜியத்தை திருப்பி கொடுக்க வந்த பரதன் மறு பேச்சே இல்லாமல்சரி இராஜ்ஜியம் எனது. நான் இப்போது அரசன்,. நான் உனக்கே இராஜ்ஜியத்தை தருகின்றேன் எனக் கூறுவது அவனும் கன்யா சுல்கத்தை பற்றி அறிந்திருக்கின்றான் என்பததையே உண்ர்த்துகின்றது. கன்யா சுல்கத்தை மறைத்து கைகேயி எனும் நாடக மயில் தசரதனை பழிக்கு ஆளாக்காமல் வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவனாக செய்து விட்டாள். அதனால்தான் அவள் பேசிய மொழிகள்தூமொழிஎன்கின்றான் கவிஞன்.

வால்மீகியில் கன்யா சுல்கம் விரிவாகாவே இராமனால் பேசப்படுகின்றது. கம்பனின் காப்பியப் போக்கின் நெடுகிலும் இராமன் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைப் பலருக்குச் சொல்ல வேண்டியிருக்கின்றது. கவி ஒரிடத்தைத் தவிர மீதியிடங்களில் இலக்குவன் வாயினாலேயே அதை பேசவைக்கின்றான். இராமனே சொல்வதாக காட்டப்படுவது பரத்துவாஜ முனிவரை சந்திக்கும் போது மட்டும் தான்..

ஒரு புது பார்வை என்றாலும், கம்பன் அவ்வாறு நினைத்துதான் எழுதியிருப்பானா என்பது சந்தேகமே. கூனியால் மனமாற்றம் கைகேயிக்கு ஏற்பட்டது என்பதை இராமன் பதிணாண்கு ஆண்டுகள் காட்டில் இருக்கும் போதும் மறக்கவில்லை. இராமன் சுக்ரீவனுக்கு அரசியல் நீதி பற்றிக் கூறும் போது தான் கூனியின் கூன் மேல் மண்னுருண்டை அம்பு விட்டதே தான் காட்டிற்கு வந்து பிராட்டியையும் தொலைத்து துன்புற்றதற்கு காரணம் என்று கூறி யாரையும் சிறியவர் என்று என்ன வேண்டாம் என்று அறிவுறைக் கூறுகின்றான்.  காப்பியத்தின் இறுதியில் சீதா பிராட்டியும் கூனியை எண்ணிப் பார்க்கிறாள். இராணவன் அழிவு நிகழ்கிறது. அவன் அழிந்ததும் அனுமன் சீதை உள்ள இடத்தை நோக்கி வருகிறான். அவளிடத்தில் இராமனின் வெற்றியைக் கூறி அவளை மீட்டுச் செல்ல அசோக வனத்திற்கு வருகிறான். அசோக வனத்தில் அப்போதும் அரக்கியர்கள் காவலுக்கு நிற்கின்றனர். சீதையிடம் வெற்றி வாசகத்தைச் சொன்ற அனுமன் அவளிடம் ஒரு வேண்டுகோளை வைக்கின்றான்.  இராவணனின் ஏவல்படி தினமும் சீதையைச் சொல்லாலும், செயலாலும் வருத்தி வந்த அசோகவனத்து அரக்கியரை தான் கொன்றுவி அனுமதி வேண்டும்  என்று அனுமன் கேட்க அதற்கு அவள் பதில் கூறுகின்றாள்.
யான் இழைத்த வினையின் இவ்விடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியர் அலரே இவர் ( மீட்சிப்படலம், 35).

ஆனாலும் இப்பார்வையில் ஒரு புதிய நயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.


                                                                                                                                                            தொடரும்

 

 

 

 

Sunday, November 25, 2012

கோலி


நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வானிலை மாற்றம் போல் விளையாட்டுகளும் சீசனுக்கு சீசன் மாறுபடும். அது யார் அறிவிப்பது என்றே தெரியாமல் பம்பரம், கோலி, காத்தாடி, கில்லி, சிகரெட் அட்டை என்று அவுட்டோர் கேம்களாகவும் தாயக்கட்டை, சீட்டாட்டம், பாம்பே டிரேட், கேரம் என்று இண்டோர் கேம்களாகவும் மாறும். கிரிக்கெட் பால் பேட்மிண்டன், வாலிபால் போன்றவை 15 16 வயதிற்கு மேல் தான் கனவே காணமுடியும்.

கோலியில் இரண்டு விதமான விளையாட்டு உண்டு. ஒன்று பேந்தா மற்றொன்று குழி. பேந்தாவில் ஒரு செவ்வக வடிவில் நடுவில் ஒரு கோடு வரையப்பட்டிருக்கும். பத்தடி தொலைவில் ஒரடிக்கு ஒரு கோடு வரையப்படும். இதற்கு பெயர் “உத்தி உத்தியிலிருந்து கோலியை பேந்தாவை  நோக்கி  போட வேண்டும். பேந்தாவிற்கு உள்ளே அல்லது வெகு அருகில் நின்ற கோலியுடையவன் ஆட வேண்டும். பேந்தாவிலிருந்து வெகு தொலைவில் இருந்த கோலி பேந்ந்தாவின் நடுக்கோட்டில் வைக்கப்படும்.


ஆடுபவன் மறுபடியும் உத்தியிலிருந்து பேந்தாவை நோக்கி கோலியை போட வேண்டும். பேந்தாவிற்கு உள்ளேயோ அல்லது நாலு விரல் கடை தூரத்திலோ கோலி நின்றால் அவுட்.. அடுத்தவன் ஆட வேண்டும். நான்கு விரற்கடைக்கப்பால் நின்றால் பேந்தாவின் நடுவில் இருக்கும் கோலியை அடிக்க வேண்டும்.  அடிக்கப்பட்ட கோலியன்றி அடித்த கோலி பேந்தாவிற்குள்ளோ அல்லது நாலு விரற்கடைக்கருகிலோ இருக்கக் கூடாது. அப்படி நின்றாலிம் அவுட். அடுத்தவன் ஆட வேண்டும். அப்படி நிற்கவில்லை என்றால் அவனே மீண்டும் ஆடவேண்டும். மறுபடியும் உத்திக்குச் சென்று எதிரியின் கோலியை அடிக்க வேண்டும். எதிரியின் கோலி பேந்தாவிற்கு வெளியில் இருந்தால் பேந்தா செத்து ஆறு மாசம் என்று சொல்ல வேண்டும். அப்படி சொல்ல வில்லை என்றால் அது அவுட்..அவுட்டான போதெல்லாம் ஆடுபவன் மாற வேண்டும்.

ஆடுபவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும் போது எதிரியின் கோலியை மூன்று தடவை தொடர்ந்து அடிக்க வேண்டும். இதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்கு தொலைவில் போய்விடும். ஒருவன் தன் கோலியால் அடிக்கும் போது போகிவர்கள் யாரவது தடுத்துவிட்டால் ”தூர்” என்று சொல்ல வேண்டும்.,போகிறவர்கள் அதை காலால் தள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவர். மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியை மூன்று தடவை அடித்து விட்டால்  எதிரி தன் கோலியை முட்டிகையால் தள்ளி கோலியை பேந்தாவிற்குள் வைக்க வேண்டும். அப்படி வைத்து விட்டால் அடித்தவன் ஜெயித்தவன்.

இது தவிர இதில் பல்வேறு சப்ரூல்ஸ் எல்லம் உண்டு. பேந்தாவிற்கு அருகில் உள்ள போது  தன் கோலியால் எதிரியின் கோலியை டிக்க முற்படும் போது பேந்தாமேல் கைப்படும் என்றோ இல்லை எதிரி பேந்தாமேல் கைப்படக்கூடாது”  என்றோ முதலில் சொல்லிவிட்டாலோ அதன் படி நடக்க வேண்டும். அதே போல் அடிக்கப்படும் கோலி பள்ளத்திலிருந்தால் அடிப்பவன் நேர் என்று சொன்னவுடன் கோலியை பள்ள நேருக்கு சமநிலையில் வைக்கவேண்டும்.

நானும் என இரண்டாவது அண்ணனும் பேந்தா எக்ஸ்பர்ட். என் தம்பிகள் மற்றும் நண்பர்கள் என்று வித்தியாமின்றி அனைவரின் கோலிகளையும் சர்வசாதரானமாக உடைத்திருக்கின்றோம். நல்ல தொலைவில் உள்ள கோலியைக் கூட குறித் தவறாமல் அடித்துவிடிவேன். என் அண்ணன் கோலியை என்றில்லாமல் பம்பரத்தையும் உடைப்பதில் வல்லவன். ஒருகாலத்தில் நானும் அவனும் கிட்டதட்ட ”டிமாலிஷன் ஸ்குவாட்” அளவுக்கு தெரு பசங்களின் கூட்டத்தில் இருந்தோம்.

 கோலியில் இன்னொரு வகை இருகுழி ஆட்டம். இதற்கு சுவரை ஒட்டி ஒரு சதுரமாக ஒரு கோடு போட்டுவிடு இட வலமாக இருகுழிகள் தோண்ட வேண்டும். எல்லோருக்கும் பொதுவான கோலியிருந்தால் போதுமாது. மொத்தம் மூன்று கோலிகள். இரண்டு உருட்டுவதற்கு ஒன்று அடிப்பதற்கு. ஒன்று பெரியாதாகவிருக்கும். இதற்கு  பெயர் குண்டன். இந்த சதுரக் கோட்டிற்கு பத்தடி தூரத்தில் உத்திக் கோடு கிழிக்கப்படவேண்டும். அதற்கு மேல் ஒரு கொட்டங்குச்சியை வைத்து விட்டு அதை டாப் என்பர். ஷாட் பூட் திரீ போட்டு ஆடுபவனை தேர்தெடுக்க வேண்டும்.

ஆடுபவன் இரண்டு சிறு கோலிகளை அரங்த்திற்குள் உருட்டி எதை அடிக்க வேண்டும் என்று கேட்பான். ஆடுகிறவனுக்கு கிட்டத்தில் இருப்பது கீழ் என்றும் தொலைவில் இருப்பது மேல் எனறும் அழைப்பது வழக்கம். அப்படி அடித்து விட்டால் ஆடுபவன் ஜெயித்து விட்டான். இதிலேயும் நிறைய சப் ரூல்ஸ் உன்டு. அரஙக்திற்குள் எறியப்பட்ட இரு கோலிகளுக்கு இடையே இரு விரற்கடை தூரத்திற்கு மேல் இருப்பின் எதிரி சொன்னதைத் தான் அடிக்க வேண்டும். இரு விரற்கடை அளவுதான் இருந்தால், ஆடுபவன் அவன் இஷ்டத்திற்கு அடிக்கலாம். அடித்த கோலியோ இல்லை அடிக்கப்பட்ட கோலியோ குழிக்குள் விழுந்து விட்டாள் டபுள் பாச்சா எனும் குற்றமாகும். இது அவுட்.. முதலில் எறிந்த இரு கோலிகள் அரங்கத்திற்கு உள்ளே வீழ்ந்தாலும் வெளியே வீழ்ந்தாலும், அடிக்கும் கோலி நேரா குழிக்குள் வீழ்ந்து விட்டால் பேசியதைப் போல் டபுளாக பணம் தரவேண்டும். அடிக்கும் கோலி, காயை அடிக்காமல் கோட்டின் மேல் நிற்பின் அது லாக் எனும் குற்றமாகும். குற்றம் எல்லாமே தோல்வியாகும். இது பெரும்பாலும் காசு வைத்து ஆடும் விளையாட்டு நாங்கள் இதையே சிகரெட் அட்டையை பணத்திற்கு பதில் பயன்படுத்தி விளையாடுவோம்.

என் அண்ணன் கணேசன் அனைத்து ஆட்டங்களிலும் சாம்பியன். எவ்வளவோ கோலியயையும் உடைத்திருக்கின்றான். கேட்டால் ஆட்டம்னு வந்துட்டா கனிக்ஹரம் (கருனை) பாக்க முடியாது. ஒரே இலக்கு. ஜெயிப்பதுதான்


மந்திரை போனவுடன் தலைவிரி கோலமான கைகேயி
விளையும் தன் புகழ் வல்லியை      வேர் அறுத்தென்ன,
கிளை கொள் மேகலை சிந்தினள்;     கிண்கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்     துடைப்பாள்போல்,
அளக வாள் நுதல் அரும் பெறல்     திலகமும் அழித்தாள்.
வளைமுதல் திலகமும் அழித்து கண்ணிர் விட்டு, தீட்டிய அஞ்சனம் அழிய, தரையில் வீழ்ந்தாள் கைகேயி. எங்கள் திருமத்தில் மப்பெண் கட்டாயாம் கொண்டைபோட்டுக் கொள்ள வேண்டும். ஐயங்காரில் கட்டாயம் அது ஆண்டாள் கொண்டையாகவிருக்கும். பொதுவாக தலை விரித்து யாரும் சாதாரண நாட்களிலேயேக் கூட இருக்கமாட்டார்கள். சின்னக் குழந்தைகளிலிருந்து பொட்டு வைப்பதும் ஆண்பிள்ளைகள் விபூதி அணிவதும் கட்டயாமான வழக்கமாகவிருந்தது. இப்போதெல்லாம் எல்லோரும் வடக்கத்திக் காரர்கள் போல தலயைவிரித்துப் போட்டுக் கொண்டே திரும நிகழ்வும் நடக்கின்றது. பெண்பிள்ளைகள் பொட்டு வைப்பதை பாவமாகக் கருதுகின்றனர். எங்கும் எதிலும் இப்போது நம் தனித்தன்மையிழந்து அந்நிய கலாச்சாரத்தின் அடிவருடிகளாக மாறிவிட்டோம். என் மகன் இன்றைக்கும் குளித்தவுடன் வீபூதி இட்டுக் கொண்டு தான் வெளியே செல்வான். அதே போல் சனி ஞாயிறுகளில் காயத்ரி ஜபம் சொல்லாமல் சாப்பிட வரமாட்டான். இங்கு வந்திருந்த என் சொந்தக்காரர்களில் ஒருவர் இவன் ஜபிப்பதை பார்த்ததும் வியந்து பாராட்டினார். என் நண்பரின் மனைவி இவன் பல்கலை கழகத்திற்கு போகும் வழியில் ஸ்டேஷனில் பார்த்தவர் எனக்கு போன் பண்ணி பிரணவ் கண்ணாடி போட்டு கொண்டு விட்டானா? நல்ல சிஷ்டுவா வீபூதி இட்டுண்டு இன்னிக்கு போனான் திருஷ்டி சுத்திப் போடுஙக என்றார். முன்பெல்லாம் பெரும்பான்மையோர் அப்படியிருந்ததால் அதை பாரட்டவேண்டும் என்ற எண்ணம் கூட யாருக்கும் வந்ததில்லை. இன்றைக்கு இருக்கும் சூழலே வேறு.

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்      துயின்றென்ன,
கவ்வை கூர்தரச் சனகி ஆம்      கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்என்று அயோத்தி வந்து      அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள்,      கேகயன் தனையை.
கைகேயி மான் வீழ்ந்தது போலவும் ஆடுகின்ற மயில் துயில்வது போலவும், அயோத்தியை விட்டு செந்தாமரை மலரில் வசிக்கும் திருமகள் என்று நீங்குவாள் அவளிடத்தை கைபற்ற வந்த அவளின் தமக்கை மூதேவியைப் போல இருந்தாள். ஓடும் மானையும் ஆடும் மயிலையும் கூறியது இந்நாள் வரையில் அவளிடமிருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது மட்டுமில்லாமல் அவளிடைய புற அழகில் மயங்கிய கவியின் கூற்றுமாகும். அவனுக்கு இவள் ஏன் இப்படி வீழ்ந்திருக்க்கின்றாள் என்ற கேள்வி எழுந்தவுடன் அவளுடைய உள் நோக்கம் புலப்படுகின்றது.  உடனே அவளை “ மூதேவி” என்று திட்ட ஆரம்பித்து விடுகின்றான்.

நள்ளிரவு தாண்டிய பிறகு தசரதன் தானே கைகேயிடம் ராமனின் பட்டாபிஷேக செய்தியை சொல்ல வந்தான். கோசலைக்கு தாதியர் போய் சொல்லிவிடுகின்றனர். அவளும் இன்னொரு ராயான சுமத்திரைக்கு சொல்லி அவளயும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனாள். இது நடந்து மாலை வேளையாயிருத்ல் வேண்டும். ஜோதிடர்கள் நாளையே பட்டாபிஷேகம் என்று சொன்னவுடன் தசரதன் நகர மாந்தர்களுக்கு பறையறிவித்து தெரியப்படுத்தச் சொன்னான். நகரத்தை அலங்கரிப்பதைப் பார்த்த கூனி போய் சொல்லித்தான் கைகேயிக்கு விஷயமே தெரிய வருகின்றது. ஏன் கோசலையும் சுமத்திரையும் கைகேயிக்கு நற்செய்தியை சொல்லவில்லை. இதற்கு ஒரே காரம் தான் இருக்க முடியும் அது கைகேயின் பால் அதீத பிரியம் தசரதன் வைத்த காரத்தால், அவள் மீது கொண்ட அசூயைதான் காரமாக  இருக்க வேண்டும். தசரதன் இராமன் பாலும் அதீத பாசம் வைத்தவன். அதனால்தான் இராமனைப் பெற்றவள் கோசலையாகவிருந்தாலும் வளர்த்தவள் கைகேயி ஆகினள். நல்ல புத்தியிருக்கும் போது அவளே சொல்லுகின்றாள் ராமனை பெற்ற எனக்கு என்ன குறை வந்துவிட முடியும்?. கைகேயியை பார்ப்பதற்கு வரும் இராமனை பார்க்கும் மக்களின் கருத்தாகவும் கவி நமக்கே இவ்வளவு சந்தோஷமாகவிருக்கின்றதே. இவனோ பெற்றவள் கையில் வள்ர்ந்தவன் இல்லை. இவனை வளர்த்தவள் கைகேயீ. அவள் மனம் என்ன மகிழ்ச்சியுறும் என்று அழகாகக் கூறுவார்

உள்ளே நிழைந்த தசரதன் கீழே வீழ்ந்துகிடக்கும் கைகேயியை தன் கரங்களால் தழுவி எடுக்க அவள் அவன் கைகளை விலக்கி மீண்டும் தரையில் வீழ்ந்தவள் ஒன்றும் சொல்லாமல் பெருமூச்சுவிடுபவளானாள். தசரதன் என்ன நடந்தது? யார் இதற்குக் காரணம். அவர்களை நான் தண்டிப்பேன். உடனே சொல்லிவிடு எனக் கேட்
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,
கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்
உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
பண்டைய இன்று பரிந்து அளித்திஎன்றாள்.

நெடுங்கண்களில் வழியும் நீர் மார்பில் வீழ எனக்கு முன்பு அளித்த இரண்டு வரத்தை இன்று பரிவுடன் அளிக்க வேண்டும் என்றாள். தன் கருத்தையறிந்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டான் என்ற காரன்த்தினாள் முதலில் வரம் தர வேண்டும் என்று நயமாக பேசுகின்றாள். வாய்மை என்ற சொல்லை ஏன் பயன் படுத்த வேண்டும்?

கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,
வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்;
உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணைஎன்றான்
இவளின் கருத்து இதுதான் எனத் தெரியாமால் உன் மைந்தன் ( இராமனின் பேரில் அதிக பாசம் உடையவள் என்று நம்பியதால் வந்தது) இராமன் மீது ஆணை உடனே தருவேன் என்றான். அப்படியும் அவள் தன் கருத்து தெரிந்தால் ஒரு வேளை இவன் மாறினாலும் மாறிவிடுவான் என்பதை மனதில் கொன்டு தேவர்கள் சாட்சியாக நீ எனக்கு வரத்தை அளிக்க வேண்டும் என்றாள்.

 என்னை யாரவாது காரியத்தைக் கூட சொல்லாமல் ”நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண வேண்டுமென்றால்” சரி என்று சொல்லி விட்டு அதை எப்படியாவது நிறை வேற்றுவதற்கு பாடு படுவேன். பலதடவை பட்டபின்பு தான் புரிந்தது, அவர்கள் என்னை உபயோகபடுத்திக் கொள்கின்றனர் என்று. அதன் பிறகு விஷயம் என்ன என்று தெரியாமல் யாருக்கும் எதற்கும் வாக்ளிப்பதை நிறுத்திவிட்டேன். என் மனைவிக்குக் கூட சாப்பிட இந்த வாரம் வெளியில் போகலாம் என்பதையும் கூட தவறாமல் தவிர்த்து விடுகின்றேன்.  என் மகன் சிறுவனாயிருக்கும் போதே தெரியாமல் கூட வாய்விட மாட்டான். எதைப் பற்றியும். அவனுடைய பிளே ஸ்கூல் டீச்சர் குந்தவை விளையாடுக்கு “ பிரணவ் நீ பெரிய ஆளான பிறகு, எனக்கு புடவை வாங்கி தருவீயா?” என்றால் சிரிப்பானே தவிர வாங்கித்தருவேன் இல்லை மாட்டேன் என்று எதுவும் கூற மாட்டான். எதற்குமே நான் பண்ண மாட்டேன் என்று சொல்ல மாட்டான் ஆனாலும் அவன் என்ன நினைக்கின்றானோ அதைத் தான் அவன் செய்வான். அவனுக்கு எந்த கெட்ட பெயருமே வராது.

 தசரதன் கைகேயிடம் ஏன் இப்படி சுற்றி வளைத்து தடுமாற்றம் அடைகின்றாய். உனக்கு வேண்டிய வரங்களை இப்போதே தருவேன் என கைகேயியும்
ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வதுஎனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

தீயவை என்று சொல்லபடும் யாவற்றிலும் தீயவளான கைகேயி என் மகன் நாடாள வேண்டும்; சீதையின் கணவன் காடாள வேண்டும் என்று தான் கோரும் அவ்வரங்கள் இதுதான் என்று கூறினாள். தீயவை - நெருப்பு, கூற்றுவன், நஞ்சு, பாம்பு முதலியன சிறந்தஎன்பது கொடிய என்னும்பொருளைத் தரும், ‘நல்ல பாம்பு’ ‘நல்ல வெயில்
என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல,
இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது சொல்லி நிற்றல் இவளையன்றிப்
பிறர்க்கு அரிது என்பதனால்புகன்று நின்றாள்என்றார்.

அதை கேட்ட தசரதன்
மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான்.

அவளை கொன்றாள் பெண் என்பதால் பழி வருமே என்ற காரணத்தினால் நாணி
பெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும் - வன் கைவேல் வெம்
புண் நுழைநிற்க உழைக்கும் ஆனை போல்வான்.

கைகேயியைக் கொன்றுவிடலாமா என்ற கருதி தயரதன் அதனால்
உண்டாகும் பழிக்கு நாணிஅதனைச் செய்யாமல் விடுத்தான். நாணுதலாவது
தனக்குப் பொருந்தாத இழிந்த செயலில் மனம் ஒடுங்குதல். முதல் வரம்
கொடும்புண் செய்ய, இரண்டாவது வரம் அப்புண்ணில் வேலை எடுத்து
நழைத்தாற்போன்ற மிகுந்த துன்பம் விளைத்தது.

அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
நஞ்சிலள்; ‘நாண் இலள்என்ன, நாணம் ஆமால்;
வஞ்சனை பண்டு மடந்தை வேடம்என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர்.
பெண்மை குணங்கள் யாதுமின்றி இருந்த கைகேயி நிலைபற்றிக்
கூறுவது நாணம் தருகிறது என்கிறார் கம்பர். ஐயன் - கணவன், தலைவன்,
நஞ்சிலள் - நைந்திலள் என்பதன்போலி.

தசரதன் உனக்கு யார் இப்படி மனதை மாற்றியது என்று அவளுக்கு இராமன் பால் அன்பு மாறிப் போனதை உணர்ந்து முதலில் உன் மக இராமன் ஆணையாக தருவேன் என்றவன் இபோது என் மேல் ஆணை சொல் என்றான். கலங்காத உள்ளத்தினாலான கைகேயி
திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வென்; அன்றேல்,
வசைத் திறன் நின்வயின் நிற்க , மாள்வென்என்றாள்.
தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர
விருப்பமில்லை என்று உணர்ந்தகைகேயி, ‘வரம்கொடுத்தால் வாழ்வேன்;
இன்றேல் சாவேன்என்கிறாள். குசைப்பரியோய் - யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப்புகழ் உளதாயிற்று என்று குறிப்பித்தாள்..

ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ கொடிதே அறம்!என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!எனா எழும்; மெய் தளாடி வீழும் -
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்.
இந்த கொடுமை நான்கு ஐந்து திருமனம் செய்து கொண்ட எல்லா கிழவர்களுக்கும் இன்றும் நடக்கின்றது. இங்கு காசினோ கிங் எனப்படும் ஸ்டான்லி ஹோ அவர்களுக்கு நான்கு மனைவியர். அவருடைய கடைசி மனைவிக்கு அவருடை மூத்த மகளை விட வயது மிகவும் கம்மி. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது தன் பெயரில் இருந்த பங்குகளை கடைசி மனைவிக்கு மாற்ற, மற்ற மனைவிகள் மற்றும் குழந்தைகள் கோர்ட் படியேற, ஒரு வழியாக கெஞ்சி கூத்தாடி பங்குகளை தன் பேருக்கு மாற்றியதையும் பார்க்கின்றோம்.

கனிமொழிக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ அவளை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வந்துவிட வேண்டும் என்ற வெறி மு. கவின் துணிவு இராசாத்தி அம்மாளுக்கு இருப்பதையும் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம். கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தொ(த)ண்டர்கள் அனைவரையும் ஓரம் கட்டி தூக்கி எறிந்துவுட்டு, இராஜ்ஜிய சபா எம் பி ஆக்கி மந்திரி பதவி அதுவும் காபினெட் மந்திரி பதவி வேண்டும் என்று முக பாவம் பட்ட கஷ்டங்களும் அவமானாங்களும் ஏராளாம். மு.க மூன்று வருடங்களுக்கு முன் டெல்லியில் சென்று முகாமிட்டு தன் மகன், மகள், பேரன் என்ற மூவருக்கும் கேபினட் மினிஸ்டர் போஸ்ட் வேண்டும் என்றும்  அது மட்டுமில்லாமல், இந்த இலாக்காதான் வேண்டும் என்று வற்புறுத்த, தமிழகத்தை பாதிக்கும் எந்த விஷயத்திற்கும் டெல்லி செல்லாத  இவர சென்று ஐந்து நாள் முகாமிட்டார். “இவர் என் தந்தையை போன்றவர்” என்று கூறிய சோனியா காந்தி
இவரின் தயவு இந்த தடவை தேவையில்லை என்ற காரணாத்தால் காங்கிரஸ் இவரை அலை கழித்ததும்,  தள்ளாத வயதில் வீல் சேருடன் இவர் அலைந்ததும்,  மஹா கேவலம். ஒரு மதிப்பு மிக்கத் தலைவராக முன்பு வலம் வந்தவர், மதிப்பை இழந்து அவமானப்பட,  ஆங்கில மற்றும் வட இந்திய ஊடகங்கள் வாயிலாக கிழித்து எறியப்பட்டது அதைவிடக் கொடுமை.

 கோல் மேற்கொண்டும் குற்றம் அகற்றக் குறிகொண்டார் -
போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறைஎன்னா,
கால்மேல் வீழ்ந்தான் - கந்து கொல் யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்.
ம் பதவியே பெரிதெனக் கருதாமல் குற்றம் நிகழாது காக்க அரும் பாடுபடும் அரசரைப் போலத்தன் பெருமை நோக்காது கைகேயியைச் சினம் தணிவித்துக் குற்றம் நிகழாது காக்க எண்ணிய தயரதன்,அவள் காலில் விழுந்து வணங்கினான். கைகேயி மனம் மாறி வரங்களைத் தருமாறு வேண்டுவது தவிர்ந்தால்.அவளுக்கு வரந்தர மறுத்தலால் வரும் குற்றமும். இராமனுக்கு அரசளிப்பதாகச் சொன்ன வாக்குப் பொய்த்தலும் நீங்கி நன்மை உண்டாகும் என்ற எண்ணி அவ்வாறு செய்தான்.

கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும்,
நள்ளாது இந்த நானிலம்; ஞாலம்தனில் என்றும்
உள்ளார் எல்லாம்ஒத உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் வழி கொண்டு என் பயன்?’ என்றான்.
தயரதன் பரதன் பண்புகள் அறிந்தவனா என்றால் கிடையாது. ஆனாலும் எப்படியாவது இராமன் காட்டிற்குப் போவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் பரதன் அரசு பதவியை ஏற்க மாட்டான் என்கின்றான். அப்படியே அவன் கொண்டாலும் நானிலம் உள்ளவர்கள் பெருமையாகவோ புகழாகவோ அதை கருத மாட்டார்கள்.  யான் வற்புறுத்த இராமன் அரசினை ஏற்க இசைந்தான்; அவன் ஆசை கொண்டு முயலவில்லை.பரதன் நாட்டைப் பெறுவதற்காக இராமனைக் காட்டிற்குத் துரத்த வேண்டுவதில்லை. நீ விரும்பினால் தானாகவே பரதனுக்கு நாட்டை அளித்துவிடுவான். அப்பொழுது முறைகேடு யாதும் நேராது என்றான் தயரதன்.

வாய் தந்தேன் என்றே; இனி, யானோ அது மாற்றேன்;
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;
தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்
பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ?’
இரந்து கேட்டால் பேயும் தாய்போல இசையும் என்றால் பரதனுக்குத்
தாயாகிய நீ இசைதல் தவறாகுமோ? என்றான்.

இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்;
தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்,
முன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முன்வாயேல்,
என்னே? மன்னா! யார் உளர் வாய்மைக்கு இனி?’ என்றாள்
தன் கணவன் எவ்வளவு இரந்து வேண்டியும் இரங்காமையின் தன் நேர் இல்லாத் தீயவள்என்றார்.தீயவை யாவையினும் சிறந்த தீயாள்’ (1504) என்று முன்னர்க் குறித்தமை கருதத்தக்கது. நல்காய்என்பதனை முற்றெச்சமாக்கிச் செயற்படுத்தாமல் என்றும் பொருள் கொள்ளலாம். மன்னா? யார்உளர் வாய்மைக்கு இனிஎன்பது இகழ்ச்சிக் குறிப்பு

நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்.
உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடு இறவாமை நயஎன்றான். இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. உன் உயிர்க்கு என நல்லன் மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது ஒப்பு
நோக்கத்தக்கது. தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத்
தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான்

‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர்என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைச்

 கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? - கொடியோளே! இதுவரை கணவனைக் கொன்ற மகளிர் இல்லை. நீ கணவனாகிய என்னைக் கொல்லுகின்றாய் ஆதலின்உன்போலக் கொடியவர் உண்டோ என்று தயரதன் கைகேயியை இகழ்ந்தான். பத்தினிப் பெண்டிர் கணவன் இறந்தபின் உயிர்வாழா இயல்பினர் என்று நூல்கள் கூறும்.

ஆழிப் பொன் - தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி,
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,
ஊழின் பெற்றாய்என்று உரை; இன்றே ல், உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!என்றாள், சை அற்றாள்.

ஈவுஇரக்கமில்லாத கைகேயி ”மன்னவா காத்தலும் அறத்தை போற்றுதலும் உன் கடமை ஆகும். அதனைச் செய்க. இல்லையென்றால் நான் உயிர் மாய்வேன்” என்றாள் கருத்தைக் காட்டுகிறது.

வீய்ந்தாளே இவ் வெய்யவள்என்னா, மிடல் வேந்தன்
ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்; என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம்
நீந்தாய், நீற்தாய், நின்  மகனோடும் நெடிது!என்றான். தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று அஞ்சி, ‘ஈந்தேன், ஈந்தேன்என்று விரைந்து கூறினான். இவ் அடுக்கு -தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி இறந்த காலத்தில் கூறினார்.

 கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி,
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்.
தசரதன் வரம் தந்தேன் என்று சொன்னவுடன் அவனோ துயரக்கடலில் மூழ்கினான். கைகேயியோ உடனேயே தூங்க ஆரம்பித்து விட்டாள். தூக்கம் என்பது மனம் சமநிலையில் இருக்கும் போது மட்டுமே வரும் உளைச்சல்கள் இருந்தால் வராது. இவளுக்கும் நன்றாகத் தெரியும் இராமன் கானகம் போனால் தசரதன் மாள்வான் என்பது. அப்படியும் அவளுக்கு உடனேயே தூக்கம் எப்படி வந்தது? 

                                                                                                                                             தொடரும்