Monday, March 25, 2013

இழப்பு



காஞ்சிபுரம் தாத்தா கிராமத்தில் போய் செட்டிலாகி விவசாயம் பண்ண வேண்டும், தன் வீட்டை மாடிவீடாக கட்டிக் கொண்டு தாயுடன் மகிழ்ச்சியாக வசிக்கவேண்டும் என்ற கனவினால், வேறு எந்த ஊரிலும் வீடு வாங்கவில்லை. ஜெயா பாட்டி 1965 வருடம் டைபாய்ட் வந்து படுத்தப் படுக்கையாக இருந்தார். அவருக்குச் சர்க்கரை வியாதியும் உண்டு. இவர் பிழைப்பது என்பது ரொம்ப கஷ்டம் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தாத்தா இன்ஸ்பெக்‌ஷன் போய் வந்து சுலோச்சி சித்தி (அவளுக்கு அப்போதுதான் திருமம் நிச்சயமாகியிருந்தது) சமைத்து வைத்திருந்த காரமான தொகையலை சாப்பிட்டுவிட்டு அடுத்த நாளைக்கு காரியரில் என்ன என்ன சாப்பாடு வேண்டும் என்று சொல்லிவிட்டு, அம்மாவின் மாமா மகன்(நாராயணன்) கால் அமுக்கத் தூங்கினார். நள்ளிரவு இரண்டு மணிக்கு வயிற்று வலி தாங்க முடியாமல் அலறத் தொடங்கியவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். எமர்ஜென்சியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது அப்பா, அம்மா மற்றும் ரங்கா மாமா திருப்பதி சென்றிருந்தனர். நாங்கள் எல்லோரும் சித்தூரிலிருந்தோம். அவர்கள் வரும் போது இரவு எட்டு மணி. ரங்கா மாமா மொட்டையடித்திருந்தார். அப்போது சித்தூர் தாத்தாவிற்கு காஞ்சிபுரத்திலிருந்து டிரங்கால் என்று தந்தி ஆபிசிலிருந்து வந்து சொன்னார்கள். அப்பா போய் பேசிவீட்டு வருவதற்குள் உறவினர் அனைவரும் ஜெயா பாட்டிக்கு டிக்கெட் கிழித்து விட்டார்கள். அப்பா வந்து தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்றும் எமெர்ஜென்ஸியாக அறுவை சிகிச்சை செய்யபட்டதையும் சொன்னபோது திடீரென்று ஒரு அமைதி நிலவியது. ஒவ்வொருவரின் மூச்சு காற்று கூட தெளிவாகக் கேட்டது. ஹாலில் இருக்கும் பெண்டுலம்  கடிகாரத்தின் அசைவுக் கூட காதில் பெரிதாக விழுந்து. முதலில் அப்பா, அம்மா தாத்தா பாட்டி மற்றும் ரங்கா மாமா அடுத்த நாள் விடியற்காலை முதல் பஸ்ஸில் காஞ்சிபுரம் கிளம்பி சென்றனர். அன்று டிசம்பர் 31 தேதி வெள்ளிக் கிழமை.

சித்தூரில் பெரியவர்கள் எல்லோரும் காஞ்சிபுரம் போய் சேர்ந்துவிட்டனர். அன்று இரவு சமையல் செய்யும் பொறுப்பு செல்லி(அத்தை)யின் தலையில் விழுந்தது. பொதுவாக சுத்து காரியம் செய்யும் அவள், அவ்வளவு பேருக்கு எவ்வளவு சாதம் வைப்பது என்பது தெரியாமல் திக்கு முக்காடி போனாள். முன்று தடவை சாதம் வைத்து எல்லாவற்றையும் ஒழித்து போட்ட பிறகு மாடியிலிருந்து ஞாணா அத்தையின் பையன் ரகு சாப்பிடுவதற்கு இறங்கி வந்தான். செல்லிக்கு கண்ணில் தண்ணீரே வந்துவிட்டது.

சித்தூரிலிருந்து இவர்கள் போய் சேருவதற்குள் காஞ்சிபுரம் தாத்தா இறந்து விட்டார். மயக்கம் தெளிந்து அவர் பேசிய கடைசிப் பேச்சு “மங்களம், வந்துட்டாளா?என்பது. அம்மாவின் பெயர் மங்களம். அடுத்த நாள் புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்கா வந்திருந்த பல ஆபிஸ்காரர்களின் ரோஜாப்பூ மாலைகளே அவரின் இறுதி ஊர்வல மாலைகளானது. அதற்கு அடுத்த நாள்  காலை நாங்கள் வந்து சேர்ந்தோம்.         

காஞ்சிபுரம் தாத்தாவின் காரை, தாத்தா இறந்த பிறகு கொஞ்ச நாள் அப்பா வைத்துக் கொண்டிருந்தார். அம்மாவிற்கு என்னவோ அந்தக் காரைப் பார்த்தால் தன் தந்தையையே பார்ப்பது போலிருக்கும். ஒரு தடவை வேலூரிலிருந்து அந்தக் காரை எடுத்துக் கொண்டு அப்பா அம்மா நான் மற்றும் என் சித்தி சுலோச்சி, இருங்கூர் கிராமத்தில் இருந்த அம்மாவின் பாட்டியைப் போய் பார்த்தோம். பாட்டிக்கு கூன் இருந்தது. பெரிய கொம்பை வைத்துக் கொண்டுதான் நடப்பார். செருப்பு அணிய இவருக்கும் என் ஜெயா பாட்டிக்கும்  தெரியாது. திடீரென்று சென்றதால் ஒன்றுமில்லா நிலையில் தோட்டத்திலிருந்து பஜ்ஜியிலையைப் பறித்து, பாட்டி எங்களுக்கு பஜ்ஜி போட்டுக் கொடுத்தார். கிளம்புவதற்கு முன் அந்தக் காரை தன் மகனை நினைத்துக் கொண்டு நன்றாகத் தடவி பார்த்து கண் கலங்கியபடியே உள்ளே சென்றுவிட்டார். ஒரு வெள்ளிக் கிழமை அந்தக் கார் விற்கப்பட்டு அப்பாவிடமிருந்து வாங்கியவர் ஒட்டிக் கொண்டு போனார். என்றைக்கும் கண் கலங்கி பார்த்திராத அம்மா அன்று கண் கலங்கினார். காஞ்சிபுரம் தாத்தா இறந்ததும் ஒரு வெள்ளிக் கிழமையன்றுதான்.

 நாங்கள் சென்னையிலிருந்த போது அப்பா அம்பாசிடர் கார் வைத்திருந்தார். பெரிய ண்ணன் ராகவன் அதை ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜேவி (கர்ணன் எப்படி கவச குண்டலத்துடன் பிறந்தானோ அதே போல இவன் பிறக்கும் போதே காருடனும் புல்லட்டுடனும் பிறந்திருக்க வேண்டும்), அண்ணா மண்ணி நான், தம்பி ரவி காஞ்சிபுரம் போய் காமாக்‌ஷி அம்மன் கோவிலுக்கும் சங்கர மடத்திற்கும் போயிருந்தோம். போகும் போது ஜேவி ஓட்டினான். வரும் போது அண்ணன். ஹைவேசில் அது தான் முதல் முறையாக அவன் ஓட்டுவது. சிறிது நேரம் கழித்து மாடு ஒன்று குறுக்கில் வந்தது. அண்ணன் பிரேக் பிடிக்காமல் ஹார்ன் அடித்து கொண்டு மாட்டின் மேல் மோதி விட்டான். மாடு கீழே விழுந்து எழுந்து நின்றுவிட்டது. ஜேவீ ஓர் நிமிடம் கூடத் தாமதிக்காமல் கார் கதவை திறந்து கொண்டு அந்தப் பையனை நோக்கிச் சென்றுப் பாளாரென்று ஒரு அறை விட்டு விட்டு, உடனே என் அண்ணாவை நகரச் சொல்லி விட்டு டிரைவர் சீட்டில் ஏறி, வண்டியை கிளப்பி விட்டு வேகமாக ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். காரில் ஹெட்லைட் உடைந்திருந்தது.

வீட்டிற்கு வந்து, காபி குடித்து விட்டு ஜேவி அவனுடைய பைக்கை எடுத்து கொண்டு கே கே நகர் சென்றான். நாங்கள் எல்லோரும் குளித்து பேசிக் கொண்டிருந்தோம். என் நண்பன் தேவநாதன் அன்று இரவு எங்கள் வீட்டிற்கு சாப்பிட வருவதாக சொல்லியிருந்தான். மாலை 5.45 மணிக்கு வாசுவிடமிருந்து போன் வந்தது, தேவநாதன் அக்ஸிடெண்டில் இறந்து போய்விட்டான். பாடி வந்து கொண்டிருக்கின்றது என்றான்.

தேவநாதன்(தேவா) என்னுடைய மிக நெருங்கிய நண்பன். இவனுடைய அப்பா கருர் வைஸ்யா பேங்கில் ரீஜனல் மானேஜர். நல்ல செக்கச்செவேலென்று இருப்பான். லிப்ச்டிக் பூசாமலேயே உதடுகள் பிங்க் நிறத்திலிருக்கும். டிகிரி திருச்சி St. ஜோசப் கல்லூரியில். சொந்த ஊர் குளித்தளை. நிறைய சொத்து. நிலம், புலம் வீடு என்று, அதுவும் வாழையும் நெல்லும் விளையும் பொன் விளையும் பூமி. இவன் தான் மூத்தவன். நல்ல பொறுப்பானவன். இவனுக்கு கீழே இரண்டு தங்கைகள் இரண்டு தம்பிகள். ஐயங்காராக இருந்தாலும் பிள்ளையார் கோவிலுக்கும் வருபவன் என்பது மட்டுமில்லாமல் பிள்ளையாரை துதிக்கையாழ்வார் என்றும் சொல்லாதவன். இவன் பாட்டி சம்ரக்க்ஷனை செய்து கொண்டவர். மிக்க மடி மற்றும் ஆசாரம் பார்ப்பவர்.

ஜேவி, நான் மணிவண்ணன், தேவா, பாஸ்கர் என்று ஒரு கும்பலாகத்தான் சுற்றுவோம். பாஸ்கர் மந்தைவெளி; ஜேவி கே நகர்; தேவா ஷெனாய் நகர்; நான் அண்ணாநகர்; மணிவண்ணன் அய்யானாவரம் பஸ்டிப்போவிற்கு அருகில். தேவா, மணி, நான் மூவரும்தான் தினம் பார்த்துக் கொள்வோம்.எனக்கும் மணிக்கும் இருந்து சைக்கிள்தான். தேவா விஜய் ஸ்கூட்டர் வைத்திருந்தான். ஜேவி பொதுவாக புல்லட். எல்லோரும் சேர்ந்து போவதாக இருந்தால் அவன் அப்பாவின் பியட் கார். தேவா, மணி நான் மூன்று பேரும் ஒன்றாக ஜாயின்ட் ஸ்டடி பண்ணுவோம். முக்கால்வாசி சாப்பிடுவதற்கே எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இரவு ஒன்றரை மணிக்கு சாந்தி காலனி போலிஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் டீக்கடையில் டீ, ஒரு பட்டர் பிஸ்கட் சாப்பிட்டு விட்டு வந்து படிப்பு மீண்டும் தொடரும். முன்று மணி வரை படிப்போம். இந்த டீ காபி செலவிற்காக நாங்கள் வெளியூர் ஆடிட் செல்லும் போது கிடைக்கும் பயணப் படியில் சேர்த்து வைத்து அதிலிருந்து செலவழிப்போம். அப்போதெல்லாம் ஒரு நூறு ரூபாய் இருந்தாலே மொத்த மெட்ராஸும் எங்களுடையது என்று கெத்தாகச் சுற்றுவோம்.

என் சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் இவர்கள் அனைவரையும் நன்றாக  தெரியும். பத்து நாள் குழந்தையைக் கூட தேவா தூக்கி வைத்து கொள்வான். என் அண்ணாவின் இரண்டாவது மகளை பத்து நாள் குழந்தையிலிருந்து மடியில் வைத்து கொண்டு கொஞ்சுவான். அண்ணாவின் இரண்டு குழந்தைகளுக்கும் அவன் பேவரிட். அண்ணாவின் மகன் அக்க்ஷை ”தேவா வர்றதுக்கு லேட்டாகும். யெஸ் மினிஸ்டர் பாக்காமா வரமாட்டான்” என்பான். நாங்கள் மூவரும் படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னால், சாந்தி காலனி மாரியம்மன் அதில் இருந்த பிள்ளையார் கோவில், மற்றும் அய்யப்பன் கோவிலுக்கு நடந்துச் சென்று வந்து விட்டுதான் ஆரம்பிப்போம்.

தேவாதான் எங்கள் வட்டத்தில் பர்ஸ்ட் அட்டெம்டிலேயே சீஏ பாஸ் பண்ணவன். என் நண்பர்கள் வட்டாரத்தில் எல்லோருமே நான் தேவா மற்றும் மணி ஒன்றாக சேர்ந்து பிராக்டீஸ் ஆரம்பிபோம் என்று எதிர் பார்த்தனர். நானும் மணியும் பாஸாவதற்கு சிறிது காலமாகியது. தேவா, வாசு மற்றும் வெங்கடாத்திரியுடன் சேர்ந்து (நாங்கள் அனைவருமே ஒரே நிறுவணத்தில்தான்  தான் பயின்றோம்) பிராக்டீஸ் ஆரம்பித்தனர். வெங்கடாத்திரிக்கு. கோடம்பாக்கம் யுனைட்டட் இந்தியா காலனியில் வீடு. இவன் பிறகு வாசுவின் தங்கையை திருமணம் செய்து கொண்டான்.

ஞாயிற்று கிழமை காலை பத்தரை மணிக்கு தேவநாதன் கிளம்பி
தி.நகரிலிருந்த வாசுவின் வீட்டிற்கு சென்றான். லயோலா கல்லூரி தாண்டி ”ப்ரவுன் ஸ்டோன்” அப்பார்மெண்ட் அருகில் சாலை ஒரு பிளைண்ட் டர்ன் எடுக்கும். நடுவில் மீடியனும் இருக்காது.  அப்போது லயலோ கல்லூரியின் காம்பெண்ட் சுவர் முழுக்க குடிசை வாசிகள் ஆக்ரமித்திருந்தனர். அதனால் எந்த வண்டியோட்டுனருமே அங்கு வேகமாக போவதற்கு பயப்படுவர். தேவநாதன் தவறாமல் ஹெல்மெட் அணிவான். பின்னாடி உட்காருபவர் கூட ஹெல்மெட் இல்லாமல் ஏற்ற மாட்டான்

இவன் அந்த வளைவில் திருப்பும் போது எதிரில் வந்த போலிஸ் ஜீப் இவன் ஸ்கூட்டரில் மோதியது. அப்போதும் இவனுக்கு உயிர் இருந்திருக்கின்றது. உடனடியாக ஹாஸ்பத்திருக்குக் கூட்டி கொண்டு செல்லாமல் பாண்டி பசார் தி நகர் போலிஸ் ஸ்டேஷன் சென்று அங்கு இரண்டு முன்று மணி நேரத்தை வீணடித்திவிட்டு பிறகு தான் அவனை இராயபேட்டா ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றனர். இதனாலேயே இவன் இறந்து போனான்.  அதே ப்ரவுன் ஸ்டோன் அப்பர்ட்மெண்ட் எதிரில் மூன்று வருடம் கழித்து சென்னை கஸ்டம்ஸில் வேலை பார்த்து வந்த என் அத்தை மகன் அனந்த கிருஷ்ணன் இரவு பத்தரை மணிக்கு கஸ்டம்ஸில் கிரிகெட் மேட்ச்சிற்காக வந்திருந்த நண்பனை பெரம்பூரில் விட்டு விட்டு,  வீடு வரும் போது லாரி மோதி இறந்து போனான். அதிலும் போகும் போது ரொம்ப லேட்டாகிவிட்டால் அங்கேயே தங்கிவிடுவதாக கூறவே அடுத்த நாள் காலை 8 மணிக்கு மேல் தான் தேடுதலே ஆரம்பமாகியது. பத்தரை மணிக்குத் தான் தெரிந்தது அவன் உயிரோடு இல்லை என்று.

என் இன்னொரு நெருங்கிய நண்பன் பாஸ்கர். இவனுடைய அப்பா லக்ஷ்மணன். இவர் மெடிக்கல் ரெப்ரெசெண்டிவாகவிருந்து டூரிங் அலுத்து போய் மருந்து கம்பெனியின் ஆபிஸில் மானேஜராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அம்மா ஒரு பின்னனி பாடகி. இவனுடைய தம்பி பாலாஜி. மந்தைவெளியிலிருந்த இவர்கள், சொந்த வீடு கட்டிக் கொண்டு வேளச்சேரிக்கு சென்றனர். அந்த வீட்டின் மொட்டை மாடியில் எவ்வளவோ வாரக் கடைசிகளை பாஸ்கருடன் கழித்திருக்கின்றேன். பாஸ்கரின் தந்தையும் நன்றாக பாடுபவர். இரண்டு பேரும் சேர்ந்து நல்ல மூடிலிருக்கும் போது பழைய சினிமா பாடல்களை பாடினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். கண்ணை மூடிக் கொண்டாலோ அந்தப் பாடல் காட்சிகள் மனதில் ஓடும். பாஸ்கரும் நன்றாகப் பாடுவான்.     

இவர்கள் வீட்டு கிரஹ பிரவேசத்தின் போது மாடு கீழே விழுந்து விட்டது. பிறகு ஒரு தடவை கிணறு சரிந்து விட்டது. பாஸ்கரின் அம்மாவிற்கு  சர்க்கரை வியாதி இருந்தது. டாக்டரிடம் ரெகுலராக செக்கப்பும் செய்து கொள்வார். இதற்கென்றே அவர்கள் நீண்ட காலம் தொடர்ந்து பார்த்து வந்த குடும்ப மருத்துவரை பார்ப்பதற்காகவே வேளச்சேரியிலிருந்து மந்தைவெளி வருவார். கையில் வந்த நகசுத்திக்காக அந்த டாக்டரை பார்த்தப்போது அவரும் சின்னதாக் கீறி சீழை வடித்து விட்டு பாண்டேஜ் போட்டு அனுப்பினார். மூன்று நாளைக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் அடிக்க HM ஹாஸ்பத்திரியில் உள் நோயாளியாக சேர்க்கப்ப்ட்டார். நகசுத்திதானே என்று யாருமே பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் ஒரே வாரத்தில் இறந்துவிட்டார். சர்க்கரை வியாதியினால் கீடோன்ஸ்(keytones) அதிக அளவில் உற்பத்தியாகி கீடோஅசிடாசிஸ் எனும் வியாதியினால் இறந்தார் என்று அதற்குப் பிறகு தான் தெரிந்தது. நகசுத்திப் போய் மரணத்தை வரவழைக்குமா என்று யோசித்தால் இன்று வரை எனக்கு இந்தக் கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை. இத்தனைக்கும் டாக்டர் குடும்ப டாக்டர். அவருக்கு இவருடைய உடல் நிலை அத்துபடி. ஆயினும் நமக்கு நேரம் நன்றாகயிருக்க வேண்டும்.

விரைந்து தேரோட்டிக் கொண்டு ஐந்து நாழிகை பொழுதில் அயோத்தியின் மதிலை கண்ட சுமந்திரன், வசிட்டனை கண்டு இராமன் யாருமறியாமல் கானகம் சென்றதை சொன்னவுடன் எல்லாவற்றையும் அறிந்த தவமுனிவனான் வசிட்டன் ”பாவம் தசரதன் இறப்பான்” என்றான்.
கடிகை ஓர் இரண்டு மூன்றில், கடி மதில் அயோத்தி கண்டான்;
அடி இணை தொழுதான், ஆதி முனிவனை; அவனும், உற்ற
படி எல்லாம் கேட்டு, நெஞ்சில் பருவரல் உழந்தான்; முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான், ‘அந்தோ! முடிந்தனன், மன்னன்என்றான்.
 

வசிட்டன் சுமந்திரனுடன் யாரால் விதியை வெல்ல முடியும் என்று வருந்தி கொண்டே தசரதன் மாளிகையை அடைந்தான்.
இரதம் வந்து உற்றதுஎன்று, ஆங்க யாவரும் இயம்பலோடும்,
வரதன் வந்துற்றான் என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,
விரம மா தவனைக் கண்டான். வீரன் வந்தனனோ? என்றான்
தசரதன் தேர் வந்தது என்றவுடன் ”என் மகன் இராமன் வந்தானா?” என்று வினவினான்.

இல்லைஎன்று உரைக்லாற்றான் ஏங்கினன், முனிவன் நின்றான்;
வல்லவன் முகமே, ‘நம்பி வந்திலன்என்னும் மாற்றம்
சொல்லலும், அரசன் சோர்ந்தான்; துயர் உறு முனிவன், ‘நான் இவ்
அல்லல் காண்கில்லேன்என்னா, ஆங்கு நின்று அகலப் போனான்.
வசிட்டனால் இல்லை என்று உரைக்க முடியாம்ல் மௌனமாக ருக்க அவன் முககுறிப்பை பார்த்து உணர்ந்த தசரதன் தளர்ந்து போனான்.

உள்ளக் கருத்தை முகம் தெரிவிக்குமாதலின், முனிவன் முகத்தைக்
கண்டு அவன் அகக்கருத்தைத் தயரதன் அறிந்து சோர்ந்தானாம். அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்என்பது (குறள்.
706.)
இங்கே நோக்கத் தக்கது. ஆற்றல் சான்ற சிறந்த தவ முனிவனாகிய
வசிட்டன் பற்றும் பாசமும் அற்ற துறவி. அவனாலேயே தசரதனின் துன்பம்
காண இயலவில்லை என்றால்,  தசரதனது துன்பத்தின் அளவு மிகுதியும்,
அவன் இராமன்பால் கொண்டிருந்த அன்பின் மிகுதியும் புலப்படும். யாரை
நோக்கி வினாவினானோ அவன் முகத்தையே கண்டான் என்றலே
பொருந்தும். ஆதலின் வல்லவன் என்பது சுமந்திரனை அன்று.

நாயகன், பின்னும், தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ?’ என்று உரைத்தலும், தேர் வலானும்,
வேய் உயர் கானம், தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்,
போயினன்என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.
ஆயினும் தசரதன் சுமந்தரினிடம் இராமன் சேயனோ அணியனோ என்று வினவினான். தயரதன் தன் வாயால் காடு என்ற வார்த்தையை கூறுதற்கும் ஒவ்வாது அஞ்சி, முன்பும்வீரன் வந்தனனோஎன்றதும், இங்கும் சேயனோ
அணியனோஎன்றதும் அறிந்து உணரத் தக்கன. முன்பும் மண்ணே
கொள்நீ மற்றையது ஒன்றும் மறஎன்று இரண்டாவது வரத்தை மற்றையது
என்று தசரதன் குறித்ததை இங்கே நினைவு கூறலாம்.

இராமன் சீதையுடனும் இலக்குவனுடன் கானகம் போனான் என்று சுமந்திரன் சொன்ன அந்த வார்த்தை காதில் விழுந்த அதே விநாடி தசரதன் ஆவி போய்விட்டது என்கின்றான் கம்பன். தசரதன் இராமன் பேரில் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது உடனேயே புரியும் படியாக இவன் வால்மீகியிலிருந்து இந்நிகழ்வை முற்றிலும் மாற்றியமைக்கின்றான்.

வால்மீகியிலோ. தசரதன் கௌசல்யையுடன் அவளுடைய மாளிகையில் தங்கியிருந்து அவன் மேலும் மூன்று நாள் உயிரோடு இருந்து அச்சயம் தான் அவன் தன் சாபத்தைப் பற்றிக் கூறி, இராமனை பற்றியே புலம்பிக் கொண்டிருந்து விட்டு உயிர் இழக்கின்றான். அது இதிகாகசம். இது இன்னவாறு நடந்தது என்பதை கூறுவதுடன் மட்டுமல்லாமல் இராமர் உயிரோடு இருக்கும் போது எழுதபட்டது. அதனால் அதில் நுண்ணிய இலக்கிய அழகுகளை காணமுடியாது. அதனால் கம்பன் சாபத்தை முன்னாளில் கூறிவிட்டு காடு என்று கூட சொல்ல வருத்தப்பட்ட தசரதன் ”காகம் போனான்” எனும் போதே உயிர் போனான் என்று தசரதனின் இறப்பை அற்புத அவல நாடகமாக காட்டுகின்றான். 

என் சித்தப்பா (சித்தியின் கணவர்) W. V நாராயணன். இவர் போஸ்ட் அண்ட் டெலிக்ராப்ஸில் முதன்மை தந்தியனுப்புனர். இவர் திருமணத்தின் போது நான் பத்து மாத குழந்தை. நாங்கள் இருந்த ஊர்களில் எல்லாம் அநேகமாக இவரும் இருந்தார். வேலூரில் முதலில் நாங்கள் நல்லெண்ணை பிள்ளைக் கோவிலில் இருந்தோம். இவர் இரண்டு தெரு முன்னால் இருந்தார். சித்திக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போது பெரும்பாலும் நான் இவருடன் தான் படுக்கையில் படுத்துக் கொள்வேன். இரவில் மூத்திரம் போய்விட்டு “ஒரே ஈரமாயிடுத்து. நீ தள்ளிக்கோ” என்று சொல்லி அவரை தரையில் தள்ளி விட்டு நான் தூக்கத்தைத் தொடர்வேன். விழுப்புரத்தில் மிக அதிகமான வருடங்கள் இருந்தார். இவர் கட்சி சாராத ஒரு யூனியன் லீடரும் கூட.  இவர் அம்ப்யர் டெஸ்டில் மதறாஸில் முதன் முதலில் தேர்ச்சி பெற்றவர். துக்ளக் ஆசிரியர், நடிகர், வக்கில் என்று பன்முகம் கொண்ட சோவின் பள்ளிக்கூட நண்பர்.

இவருடைய தந்தை வாசுதேவன் என்பர் மிகப் பெரிய வக்கீல். பரம்பரை பணமும் அவருக்கிருந்தது. காந்திஜியின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வக்கில் பிராக்டிஸை விட்டு விட்டு, வந்தவர்களுக்கெல்லம் கொடுத்ததில் சொத்து மொத்தமாக கரைந்தும் போனது. என் சித்தப்பா நாலு வயது வரைக்கும் தங்கத் தட்டில் தான் சாப்பிடுவாராம். மெட்ரிக் படிப்பு முடிக்கவே ரொம்ப சிரம்ப்பட்டிருக்கின்றார். மெட்ரிக்கில் ஸ்டேட் பர்ஸ்ட். அப்போதைய இம்பீரியல் பாங்கிலும் (தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) போஸ்ட் அண்ட் டெலிகிராப்பிலும் வேலை கிடைத்தது. பாங்கை விட இதில் ஆறு ரூபாய் சம்பளம் அதிகம் என்கின்ற காரணத்தால் இதில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் கத்தி வைத்து கொண்டு பென்சில் சீவுவதே மிக அழகாகிருக்கும். கூர்மை என்றால் பென்சில் நுனியைத் தொட்டு பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவர் ஷேவிங் செய்வதற்குக் கூட ரொம்ப வருடம் கத்தியைத்தான் உபயோகித்து வந்தார். அதை பட்டைத் தீட்டுவதற்கு ஒரு ரப்பர் வாரும் அவரிடம் இருந்தது. வேலை இல்லை என்றால் வீட்டில் உட்கார்ந்து கொண்டு படிப்பது இல்லை எங்களுடன் கிரிக்கெட் அல்லது சீட்டு விளையாடுவது இதைத்தான் செய்வார். அவர் கோவிலுக்கு போய் நான் பார்த்தில்லை. படிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றால் டிக்ஷ்னரி இல்லை பைபிளைப் படிப்பார்.  எனக்கும் என் அண்ணனிருவர்க்கும் படிக்கும் ஆர்வத்தையும் மோகத்தையூம் ஊட்டி வளர்த்தவர் இவர்தான். ரிட்டையர் ஆன பிறகு இவர் விழுப்புரத்தை விட்டு விட்டு மகன்களுடன் இருப்பதற்காக சென்னை வந்தார். பெரும்பாலும் தி நகரிலும் பிறகு வளசரவாக்கத்திலும் இருந்த என் தம்பிகளுடன் வசித்து வந்தார். என்றாவது மாறுதல் வேண்டும் என்றால் நங்கநல்லூரில் இருக்கும் தங்ககையின் வீட்டிற்கு இவரும் சித்தியும் செல்வதுண்டு. (இந்த சித்தியையும் நான்  என் வழக்கம் போல் கியானி என்று பெயர் சொல்லிதான் அழைப்பது வழக்கம்.)

நானும் என் பெரிய அண்ணனும் சித்தப்பா எங்கேயிருந்தாலும் சென்று பார்த்துவிட்டு வருவதுண்டு. என் மற்றோர் அண்ணன் அவன் சென்னையில் இல்லாத காரணத்தால் அவ்வளவாக போய் யாரையுமே பார்ப்பதில்லை. என் தம்பி தி நகர் வருவதற்கு வண்டியோட்ட வேண்டுமே என்று அலறுவான். ஆனாலும் அவனும் ரெகுலராக பார்த்துவிடுவான் அம்மாவை கொண்டு விட்டு அழைத்து வரும் போது சித்தப்பா சித்தியை கட்டாயம் பார்த்துவிட்டு வருவான். .

அப்பாவிற்கு உடம்பு முடியாமல் படுத்த படுக்கையான பிறகு, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறையும் சேர்த்துக் கொண்டும், அக்டோபர் 10ம் தேதி அப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டும் என்று வருடத்திற்கு இரண்டு முறை போக ஆரம்பித்திருந்தேன். என் இரண்டாவது அண்ணனும் பெங்களூரிலிருந்து தவறாமல் இரண்டு தடவையும் வருவான். 2009ஆம் வருடம் ஏப்ரல் மாதம் வரும் போது வெள்ளிக்கிழமையன்று வளசரவாக்கத்தில் இருக்கும் சித்தப்பாவை போய் பார்த்து விட்டு வருவது என்று தீர்மானித்து அம்மாவும் சேர்ந்து கொள்ள ரவி (தம்பி) கணேசன்( அண்ணன்) அவைவரும் சாயங்காலம் 6 மணி அளவில் புறப்பட்டுப் போனேம். சித்தப்பாவும் பாவம் ஹாஸ்பிடல் மாத்தி ஹாஸ்பிடல் என்று அலைந்து நொந்து போய்விட்டார். அவர் “ பிரசாத் எப்படியும் வரும் போது வந்து பார்த்துடுவான். ரவியும் அடிக்கடி வரான். கணேசா நீ தன் வரதேயில்லை’ என்று அவனைப் பார்த்த மகிழ்ச்சியிலிருந்தார். பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். கணேசன் மெடிக்கல் ரெப்பாக இருந்தவன் என்பதால் அவனிடம் ஐந்து நிமிடங்கள் தன் உடல் உபாதையைக் கூறிக் கொண்டிருந்தார். 2 மணி நேரம் இருந்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கிளம்பினோம். அந்த ஞாயிற்றுக் கிழமை திருவண்ணாமலை போய் மலைவலம் சென்று வரவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம்.

சனிக்கிழமை இராத்திரி 11.45 மணிக்கு போன். நாரயண சித்தப்பா தவறிவிட்டார் என்று. சனிக்கிழமை பாகவதம் பஜனை கேட்டு பிரசாதம் சாப்பிட்டவர் சட்டென்று பின்னால் சரிய பத்து நிமிடத்திற்குள் உயிர் போய்விட்டது. அடுத்த நாள் காலை அவர்கள் வீட்டிற்கு போன போது தங்கை என்னைப் பார்த்து ”என்ன இருந்தாலும் இவன்தான் அவருடைய பெரிய பையன். கரெக்டா வந்தான். பாத்தான். அப்பாவும் இவா மூணு பேரையும் பாத்த சந்தோஷத்திலேயே, கஷ்டப்படமா போய் சேர்ந்தா” என்றாள்.

இப்போது புது புது நடைமுறைகளை எல்லாம் சொல்லி செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நம்மை ஆழ்த்திவிடுகின்றனர்.சித்தப்பாவின் காரியம் போது அப்படித்தான் “ அப்பா அம்மா இருக்கிறவா சுடுகாட்டுக்கு போகக் கூடாது” என்று என் தம்பி சொல்லியபோது நான்” என் frineds  எல்லாவற்றிர்கும் இதுவரை போயிருக்கின்றேன். இப்ப என்ன புதுசா? அத்வும் சொந்தம் வேறே?” என்றதற்கு வாத்தியாரிடமும் கேட்டு அவரும் அதையே சொல்லியபோது போகவேண்டும் என்றாலும் போகாமல் இருந்து விட்டோம் நானும் என் அண்ணனும். அதற்கு ஒரே காரணம் அப்பாவின் உடல்நிலை. அம்மாவும் அப்பாவும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்றாலும் போகமால் விட்டது இன்றும் என் மனதை உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றது.  

உயிர்ப்புஇலன், துடிப்பும் இல்லன்என்று உணர்ந்து, உருவம் தீண்டி,
அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு ஆர் உயிர் இன்மை தேறி,
மயில் குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் -
வெயில் சுடு கோடைதன்னில் என்பு இலா உயிரின் வேவாள்.
 மயில் போன்ற தன்மையுடை கோசலை உயிர்ப்பும் துடிப்பும் இல்லாமல் தசரதன் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து தொட்டு பார்த்து உயிர் போனதை அறிந்து எலும்பில்லா உயிர்களை கடுமையான கோடை காலம் எப்படை சுட்டு எறிக்குமோ அப்படையானவள் மயங்கி வீழ்ந்தாள்.

ஒன்றோ, நல் நாட்டு உய்க்குவர்; இந் நாட்டு உயிர் காப்பார்
அன்றே? மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே?
இன்றே வந்து, ஈண்டு, “அஞ்சல்எனாது, எம்மகன் என்பான்
கொன்றான் அன்றோ தந்தையே?” என்றாள் குலைகின்றாள்.
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, மறுமை உலகமும்
மறுவின்று எய்துப, செறுநரும்விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த
செம்மலோர்என்பதால் (அகதா. 66)புதல்வரைப் பெற்றோர்க்குப் புகழ்,
பாதுகாப்பு, மறுமையில் நற்கதி ஆகியவை உண்டு என்பது நூலோரும்,
உலகமும் துணிந்த துணிவு. அப்படியிருக்கையில் என் மகனான் இராமனோ இன்றே வந்து பாய்ப்படாதே என்றி அருளி உயிரை காப்பாற்றாமல் தந்தையின் இறப்பிற்கு காரணமாகிவிட்டானே” என்றி மருகி நிலை குலைந்து போனாள்.

நோயும் இன்றி, நோன் கதிர் வாள், வேல், இவை இன்றி,
மாயும் செல்வ மக்களின் ஆக; மற மன்னன்
காயும் புள்ளிக் கர்க்கடம், நாகம், கனி வாழை,
வேயும், போன்றான்என்று மயங்கா விழுகின்றாள்.1
தன் மகனாலேயே மன்னன் இறந்துபட்டான். நண்டு கருவுயிர்க்கும்
போது இறந்து படும், நாகம் தன் முட்டையாலே இறந்து படும், வாழை
குலை ஈனும் போது இறந்து படும், மூங்கில் தன்பக்கக் கிளைகள் தோன்றும்
போது உராய்வினால் பற்றி அழியும், இவ்வாறு இவை தன் வம்சத்தாலேயே அழிகின்றது போல் இரமானாலா தசரதன் மரம் அமைய வேண்டும்
என்று அழுகிறாள் கோசலை. நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறும் காலத்து,
கொண்ட கருவழிக்கும் கொள்கை போல்” ‘மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற
காய் கூற்றம்’ (நான்மணிக். 84.), “புத்தன்றாய் நண்டு இப்பி வாழை புன்
மூங்கில், கத்தும் விரியன் கடுஞ்சிலத்தி- இத்தனையும், வேலாலும் வாளாலும்
அன்றியே தாம் கொண்ட, சூலாலே தம்முயிர்க்குச் சோர்வுநீலகேசி உரை
(
மேற்கோள் உலோகவசனச் செய்யுள்) ஆகியவற்றை இங்கே ஒப்பு நோக்கி
உணரலாம். நண்டும், பாம்பும் தன் கருவால் அழியும் என்பதை உயிர்நூலார்
உடன்படுவதில்லை. நாம் பாம்பு பால்குடிக்கும் என்றும் முட்டை சாப்பிடும் என்று இன்றளவும் நம்பிக் கொண்டுதானே இருக்கின்றோம்? இல்லாவிட்டால் இராம நாராயணனால் இவ்வளவு திரைப் படங்கள் எடுக்க முடியுமா?

வடித் தாழ் கூந்தற் கேகயன் மாதே! மதியாலே
பிடித்தாய் வையம்; பெற்றனை பேரா வரம்; இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம்?’ என்றாள் - முகில்வாய் மின்
துடித்தாலென்ன, மன்னவன் மார்பில் துவள்கின்றாள்.
மேகத்திடத்து மின்னல் துடித்தது போல தசரதன் மார்பில் துவளுகின்ற கோசலை “நீண்ட கூந்தலையுடைய கேகேயன் பெண்ணான கைகேயியே! உன்புத்திசல்லமையால் மாறுபட முடியாத வரத்தை பெற்று உன் லோசனையை நிறைவேற்றிக் கொண்டாய் அல்லவா” என்றாள்.

சுமத்திரை மற்றும் அனைத்து தேவிமார்களும் வருகின்றனர். அழுது புலம்புகின்றனர். வசிட்டன் சுமந்திரன் மூலம் சேதி கேட்டவன் ”விதியை வெல்லவும் முடியுமோ? என்று வருந்தி தசரதன் உடலை தைலத்தில் ஆழ்த்தினான். பிறகு கேகேய நாட்டிற்கு தூதர்களை அனுப்பி ஒன்றும் சொல்லாமல் பரதனை அழைத்து வரும் படி அனுப்பிவிட்டு சுமந்திரனிடன் பாதுகாப்பை பலப்படுத்தச் சொன்னான். விழிதெழுந்த மக்கள் இராமனை காணாமல் தேர் போன சுவட்டை வைத்துக் கொண்டுத் திரும்பி அயோத்தியா நகரம் வந்தைடைகின்றனர். தசரதன் இறப்பு நிகழ்வதும் கைகேயின் அரண்மனையிலேயே தான் நடக்கின்றது. ஆனால் வான்மிகியில் கௌசள்யையின் அரண்மனையில் தான் அது நிகழ்கின்றது. வசிட்டன் தேவிமார்களை தசரதன் ஈமச்சடங்குகள் நடைபெறும் போது உடன் கட்டை ஏற தயாராகும்படி கூறி பட்டமகிஷிகளை அவரவர் அரண்மனையில் தங்கவைத்தான் என்கின்றான் கம்பன். ஆனால் வான்மீகியில் உடன்கட்டை ஏறுவதாக கூறப்படவேயில்லை.