Saturday, June 29, 2013

அஜந்தா, எல்லோரா



சென்ற வருடம் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறையில், தீடிரென்று எனக்கு ஷீரடி போய் சாயி பாபாவைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. என் அக்கா பூனாவில் இருந்ததால் பிரச்சினை எதுவுமில்லை. என் சித்தி பையன் ஸ்ரீதர், ரங்காபாத்தில் இருந்தான். அவன் ஷீரடியில் ஓட்டலும் தரிசனத்திற்கு ஆளும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னான். இவன் ஔரங்காபாத்தில் இருப்பதால் அஜந்தா எல்லோராவையும் பார்த்து விட்டு வர வேண்டும் என்று தீர்மானம் செய்தேன். என் அக்காவும் மாமாவும் உடன் வர சம்மதிதார்கள்.

என் மனைவியின் மாமாவின் மகள் ஜனவரியில் ஒருவாரம் விடுமுறைக்காக ஹாங்காங் வந்திருந்தாள். அந்த ஒரு வாரத்தில், மாமாவும் மாமியும் பூனா போய் அவர்கள் நண்பர் வீட்டில் தங்கி விட்டு, ஷீரடி போவதாக ஏற்பாடு செய்து விமான புயணச்சீட்டும் வாங்கி வைத்திருந்தனர்.ஆனால் தீடிரென்று கைவலி என்று டாக்டரை பார்க்க சென்னை வந்திருந்த மாமாவிற்கு சிறு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட அவர்கள் பயணம் தடைப்பட்டது, விமான டிக்கெட் பணமும் விரயமானது.

ஏப்ரலில் நான் போவதாக தீர்மானித்தவுடன் மாமியை தொடர்பு கொண்டு ”நீங்கள் வருகின்றீர்களா?” என்றதற்கு அவரும் ”வருகிறேன்” என்று சொன்னார். மாமி என் அக்காவை எங்கள் வீட்டு பங்ஷனில் பார்த்தோடு சரி என்றாலும், மாமியின் தன்மையான சுபாவம் மற்றும் இனிமையாக எல்லோருடனும் சகஜமாக பழகும் இயல்பினாலும், மாமிக்கு தாரளாமாக அக்கா வீட்டிலும் சரி ஸ்ரீதர் வீட்டிலும் சரி பிரச்சனையிருக்காது என்று தீர்மானித்திருந்தேன்.


என மாமானார் மாமியார் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் காரம் துளியும் இல்லாத உணவையே சாப்பிடுகின்றனர்.தாளிப்பதில் கூட மிளகாய், மிளகு, இஞ்சி பச்சை மிளகாய் சிறிதும்கூடாது. அவர்களுக்கேற்ற வகையில் மிளகாய் துளியும் இல்லாத சமையல் செய்து தரவேண்டும் என்றால் அது வீட்டு சமையலாக இருந்தால் தான் முடியும். நான் மாமனாரையும் மாமியாரையும் ”நீங்கள் கட்டாயம் வந்தால் தான் ஆச்சு. இல்லேன்னா எப்போ போக போறீங்க” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ”நான் அஜந்தா எல்லோரா இரண்டையும் பார்க்கப் போகின்றேன்” என்றேன். அதுவரை பஞ்சவடி, ஷீரடி, திரையம்பகேஷ்வரர், சனி சிங்கனாபூர் என்று ஷேத்ராடனம் மட்டுமே என்று நினைத்து தயங்கிக் கொண்டிருந்த மாமனார், அஜந்தா எல்லோரா என்றவுடன் சிறிது மயங்கி, வருகின்றேன் என்று சொன்னர். என் மனைவி ”ஏன் அவாளை போர்ஸ் பண்றிங்க. அதுவும் உங்க அக்கா வீடுன்னா பரவாயில்ல. உங்க கசின் பிரதர் வீடு வேற. நானே அவாளை ஒரு தடவைதான் பார்த்திருக்கேன். உங்களாலே அனாவசியாமா எங்க வீட்டு மனுஷாளுக்கு ஆப்ளிகேஷன்” என்றாள். நான் ”கவலைபடாதே. அப்படி ஆப்ளிகேஷன்னா அது எனக்கு தான். உங்க அப்பா, அம்மாவிற்கோ  மாமிக்கோ இல்லை. எனக்கு மட்டும் தான். எனக்கு எங்க பேமலியைப் பத்தி நல்லாத் தெரியும்.

நாங்கள் புறப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னால் மாமாவிற்கு கடும் ஜூரம் வந்து ஹாஸ்பத்திரியில் சேர்த்தனர். அதனால் அவரால் எங்களுடன் பயணத்தில் வரமுடியவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. வாடகை வண்டியான டோயோட்டா காரில் ஓட்டுனருடனும் சேர்த்து ஏழு பேர்தான் போகமுடியும் நான் அது seven seater வண்டி என்றவுடன் ஏழு பயணிகள் மற்றும் ஓட்டுனர் என்று 8 பேர் பயணிக்கலாம் என்று தவறாக கணக்கிட்டிருந்தேன்.

நாங்கள் இங்கிருந்து மார்ச் 31ஆம் தேதி கிளம்பி பாம்பேவிற்கு அன்று இரவு 11.30 மணிக்குப் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தோம். நம் பயணஉடமைகளை எடுக்கும் இடத்தில் இருந்து கார் பார்க் வரை யார் நம்மை வரவேற்க வந்திருக்கின்றார்களோ இல்லையோ கொசு வந்து நம்மை அணை த்து ரத்த பாசத்தை  வெளிப்படுத்தியது. வண்டியில் கொஞ்ச நேரம் டார்டாய்ஸ் கொசுவத்தி ஏற்றி வைக்க வேண்டும் போல், அப்படியிருந்த்து. கே கே டிராவல்ஸின் டவேரா வண்டியின் மூலம் பூனாவிற்கு கிளம்பினோம். நான் முன் சீட்டில் உட்கார, பின் சீட்டில் மனைவி நன்றாக கால் நீட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். ஹைவேஸில் ஒரு இரண்டு மணி நேரம் ஏகப்பட்ட லாரி டிரக் வாகனங்களின் போக்குவரத்தினால் எங்கள் வண்டி ஊர்ந்துதான் போக முடிந்தது. வழியில டிரைவர் வண்டியை மிகப் பெரிய சிற்றுண்டி வளாகத்திற்கருகில் நிறுத்தினார். இரவு இரண்டு மணிக்கு சூடாக வடா பாவும், இட்லி தோசை வடையும், பாவ்பாஜி, சமோஸா, மற்றும் சாட் ஒருபுறம், இன்னோரு புறம் பீட்சா, பர்கர் சைனீஸ் நூடுல்ஸ் என்றும் வேறொரு புறம் சிக்கன் மட்டன் என்று விற்பனை கொடிகட்டிப் பறந்தது. ஒருபுறம் வேகவைத்த கடலையில் வெங்காம் பச்சைமிளகாய் தக்காளி போட்டு சூடாக ஒரு சுண்டல். ஒரு பாக்கட் 10 ரூ என்று வாங்கி கொண்டேன். விடியற் காலை மூன்றரை மணிக்கு, என் மருமான் ராஜாவையும் அவன் மனைவி சாம்பவியையும் நாலைந்து தடவை தூக்கத்தில் இருந்து எழுப்பி, வழிக்கேட்டு காலை 4 மணிக்கு வீட்டிற்கு போய் சேர்ந்தோம். அக்கா(மஞ்சு) அந்த தி காலையிலும் நாலு தோசை சுட சுட வார்த்துக் கொடுக்க, சட்னி சாம்பாருடன் சாப்பிட்டு காபியையும் குடித்து விட்டு 5 மணிக்கு படுத்துக் கொண்டேன். மனைவியோ எதுவுமே சாப்பிடாமல் படுத்துக் கொண்டாள்.

இரண்டாம் தேதி காலை சென்னையிலிருந்து மாமனாரும் மாமியாரும் கிளம்பி மதியம் இரண்டு மணிக்கு பூனாவிற்கு பிளேனில் வந்தனர். மாமி பெங்களூரிலிருந்து காலை கிளம்பி பதினென்றரை மணிக்கு ஏர்போர்ட் வந்திறங்கினார். பூனாவில் விங்க்ஸ் எனும் ரேடியோ டாக்ஸி மிக சுலபமாக பயனிகளை ரவேற்பதற்கு பயன் படுகின்றது. தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இரயில் அல்லது விமானத்தில் வரும் பயணியின் பெயர் மற்றும் மொபைல் நம்பர் குடுத்து நம் நம்பரையும் கொடுத்து விட்டால், ஒரு மணி நேரத்திற்கு முன்னால் டிரைவரின் மொபைல் எண் நமக்கு அளிக்கப்படுகின்து. நாம் இந்த நம்ரை குறுஞ்செய்தியாக வருகின்றவர்களுக்கு அனுப்பிவிட்டால், அவர்கள் விமானம் தரையைத் தொட்டவுடன் போனை ஆன் செய்ய டிரைவரின் நம்பர் சேர்ந்துவிடுகின்து டிரைவரும் உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு எந்த வழியில் எவ்வாறு வரவேண்டும், என்று அழகாக கூறி நிதானமாக பொறுப்புடன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்னர், நிர்ணயிக்கப்ட்ட தொகையைவிட ஒரு நயா பைசா எதிர்பார்க்காமல். அப்படியே நாம் 10 ரூபாய் கொடுத்தாலும் மிக்க மகிழ்ச்சியாக வாங்கி கொள்கின்ற விதம், எனக்கு சென்னையில் ஆட்டோககாரர்கள் பயணிகளை ம் காய்ச்சி மரங்களாக நினைத்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதை தேவையின்றி ஞாபகப்படுத்தியது.

வந்தவர்கள் சாப்பிட்டு உறங்கி பூனாவை சுற்றிப் பார்க்க காரில் போனார்கள். நானும் ராஜாவும் அடுத்த நாள் பயணத்திற்காக டோயோட்டோ இன்னோவா டீசல் வண்டி ,மூன்று இரவு தங்கும் படியும் போக வேண்டிய வழிகளையும் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்பதையும், எங்கு சாப்பிட வேண்டும் என்பதையும் நன்றாக விசாரித்து தீர்மானித்துக் கொண்டு அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கு வண்டியை வரவழைப்பது என்று தீர்மானித்தோம்.. மஞ்சுவும்  சாம்பவியும் காலையில் ழுந்து இட்லி வார்த்துக் கொண்டு, மிளாகாய் பொடி தோய்த்தும், என் மாமானார் மாமியாருக்காக வெறும் இட்லி, தயிர் சாதமும்  எடுத்துக் கொண்டோம். மாமி பெங்களூரிலிருந்து வரும்போது 50 மெதி ப்ரோட்டாவும், காரமாங்காய் தொக்கும் சர்க்கைப் போட்ட மாங்காய் தொக்கும் எடுத்து வந்திருந்தார்.

நாங்கள் எலெக்டிரிக் கெட்டுலும் நெஸ்கபே கோல்ட் இன்ஸ்டண்ட் காபி ஷாசேவும், (பாலும் சர்க்கரையும் கூட சேர்த்தது) எடுத்து போயிருந்தோம். என் மாமியார் எலெக்டிரிக் ரைஸ் குக்கர், அரிசி, காரத்துடன் கூட பருப்பு பொடி, தங்களுக்கு காரமில்லா பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி, புளியோதரை மிக்ஸ், நல்லெண்ணை சாஷே, சர்க்கரை, உப்பு முதலியன எடுத்து வந்திருந்தார். வழியில் தின்பதற்கு கிராண்ட் ஸ்நாக்ஸ் தட்டை, கைமுறுக்கு வீட்டிலே செய்து கொண்டு வந்த தேன்குழல், கடலைக்காய் உருண்டை என்று முன்னேற்பாடாக எடுத்து கொண்டு வந்திருந்தார். முதல் நாள் இரவு பிளாஸ்டிக் பிளேட், ஸ்பூன், நாப்கின் பிஸ்கட், தண்ர் சில மாத்திரைகளையும் வாங்கி கொண்டோம்.

காலையில் 5 மணிக்கு வண்டிவந்தது. எல்லா சாமான்களையும் பத்திரமாக ஏற்றிவிட்டு சாமியை வேண்டிக் கொண்டு நாசிக் கிளம்பினோம். பஞ்சவடி, திரையம்பகேஸ்வரர் பார்த்துவிட்டு, ஷீரடியில் இரவு தங்கி இரவிலும் அடுத்த நாள் காலையிலும் பாபாவின் தரிசம் பார்த்துக் விட்டு சனி சிங்கனாபூர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, இரவு 7.30 மணிக்கு ஔரங்காபத்திலிருக்கும் ஸ்ரீதர் வீட்டிற்குச் சென்றோம்.

காலையில் அவல் உப்புமா செய்து கையில் எடுத்துக் கொண்டு அஜந்தா சென்றோம். காரை நிறுத்தி விட்டு, மாசுகட்டுப்பாட்டிற்காக மஹாராஷ்ட்ரா அரசு இயக்கும் பேருந்தில் ஏறி, வழியெல்லாம் கரும் டீசல் புகைக் கக்கி கொண்டு அது குகைகளுக்கு அருகில் சேர்த்தது. மொத்தம் முப்பது குகைக் கோவில்கள். ஆங்கிலம் பேசக்கூடிய கைட் மேலே சென்றிருந்த்தால் அவர் வருகைக்காக குகை எண் ஒன்றில் காத்திருந்தோம். உள்ளே 30 40 பேரை விட்டு கதவை சாத்தி விடுகின்றார்கள். 

கைட் LED டார்ச அடித்து பக்கசுவர், தூண்களில் அனைத்து பக்கங்களிலும் மேலும் விதானத்திலும் உள்ள ஓவியங்களை விளக்கி நமக்குச் சொல்லுகின்றார். எல்லாமே புத்த ஜாத கதைகளின் அடிப்படையில் அமைந்த ஓவியங்கள்.



புத்தரின் முற்பிறப்புகள், 6 தந்தங்களை கொண்ட வெள்ளை யானை தந்தங்களை தானகவே அரசிக்குக்  கொடுத்து இறந்து போவது, ஜனகனின் துறவறம், புத்தரின் அம்மா மாயாவிற்கு வரும் கனவு, வெள்ளை யானை அவள் உடம்பில் புகுவது, லும்பினி போகும் வழையில் பிள்ளைப் பெறுவது, மாராவிற்காக புத்தர் ஆயிரம் புத்தர்களாக மாறுவது என்று எல்லா குகைகளிலும் அற்புதமான ஓவியங்கள். 1800 வருடங்கள் ஆனாலும் மங்கிப் போகாமல், அதே அழகுடனும் நேர்த்தியுடனும் காப்படுகின்றன. சில விடங்களில் மேற் கூறை பிய்ந்து ஓவியங்கள் சிதிலமடைந்து போய்விட்டிருக்கின்றன. அதை பார்த்த போது மனது சங்கடமானது என்றாலும், ஏதோ இந்தளவுக்காவாது காப்பாற்றுகின்றார்களே என்று சந்தோஷமாகவும் இருந்து.

அஜந்தாவில் பிக்குகள் தங்குமிடம் ( சைத்திர்யங்கள்) ஓவியங்கள் இல்லாத சில குகைகளில் அற்புதமான சிற்பங்கள். எல்லாமே அங்கேயேக் கிடைக்கும் வெவ்வேறு விதமான நவரத்தினங்களையும் பாறையில் இயற்கையாகத் தோன்றும் வண்ணங்களையும் ரைத்து வண்ணக் குழம்பாக்கி தை பூசியிருக்கின்றனர். நீலம் மட்டும் பாரசீகத்திலிருந்து வரவழைக்கபட்டிருக்கின்றது. இரண்டாம் புலிகேசி பாரசீக தூதுவர் ஒருவரை வரவேற்பதாக ஒரு ஓவியமும் இருக்கின்றது.

அன்றைக்கு இருந்த ஒரே உபகரமான சுத்தி மற்றும் உளியைக் கொண்டு அதீத கற்பனைத் திறத்துடனும், மிகுந்த கவத்துடனும் அற்புதமான இயற்கையோடு ஒன்றி ஒட்டிய கட்டிடகலையின் உச்சமாக, ஒரு குதிரை லாடம் போன்ற அமைப்பில் குடையப்பட்ட குகைக் கோவில்களில், தரையைத் தவிர மீதியிடங்களில் வைக்கோல், களிமண், மாட்டு சாம் சுண்ணாம்பு கலவைகளைப் பூசி அதன் மீது மறுபடியும் சுண்ணாம்பு கலவையை பூசி முன்று பரிமாணமாக்கிக் கொண்டு, அதில் ஒவியங்களின் சித்திரக் குறிப்புகளை வரைந்து அதில் இயற்கை வர்ணங்களைத் தீட்டி, அதன் மேல் பளபளப்பிற்கு சங்குகளையூம் சிப்பிளையும் பொடித்து தேய்த்து மேற்பூச்சில் பூசினர். கி மு ஒன்று முதல் கி பி 2 வரையிலும் அதற்கு பிறகு நானூறு ஆண்டுகள் கழிந்த பிறகு கி-5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ச்சியாக குகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குகைகளுக்குள் குறைந்த அளவு வெளிச்சமே வருகின்றது. ஏப்ரல் மாத்திலேயே குகைள் இருட்டாகத்தான் இருந்தன. அவர்கள் ஓவியம் வரையும் போது எண்ணை விளக்குகளையோ இல்லை கண்ணாடிகளின் மூலம் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தையோ கொண்டுதான் இந்த ஆற்புதமான ஓவியங்களை உருவாக்கியிருக்க வேண்டும்

மேல் விதாத்தில் ஒரு காலை பின்னால் தள்ளி கொண்டு சீறிப் பாயவதற்கு தயாரகவிருக்கும் காளை மாடு. அற்புதமான வெண்ணிறத்தில் மாடு, மாட்டின் கால், வால் மற்றும் கண்ணின் இமை மற்றும் கண்ணின் மணி மட்டும் கருமை நிறத்தில், சுற்றி செம்மண் நிறம், நாம் எந்த திசையை நோக்கித் திரும்பினாலும், மாடும் அந்த  திசையில் நம் மீது பாய்வதற்கு தயாரகவிருக்கின்றது. ஒரு தூணில் நான்கு மான்கள், இரண்டு படுத்திருக்கின்றன் இரண்டு நின்று கொண்டிருக்கின்றன ஆனால் ஒரே தலைதான். விருந்துண்ணும் இருவர், ஒருவரின் கால்களில் வெள்ளைக் கலர் சாக்ஸ் அதற்கேற்றார் போல் அவர் தலையில் வெள்ளைக்கலர் தலைப்பாகை மற்றொருவர் நீல நிறசாக்ஸுடன் அதற்கு மேட்சிங்காக நீல நிறத் தலைப்பாகையுடன் காட்சியளிக்கின்றார்கள், இன்னொரு சிலையில் பாடம் நடத்தும் ஆசிரியர், முதல் வரிசையில் அமைதியாக பாடத்தை கவனமாக கேட்கும்மாணவர்கள், கடைசி வரிசையில் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளும் குறும்பு மாணவர்கள் சிலர், இன்றைக்கும் வகுப்பரைகளில் இருக்கும் நிலை அன்றைக்கும் இருந்தது என அறிந்தபோது எதோ ஒரு சில விஷயத்திலேனும் நாம் நம் பராம்பரியத்தை இன்றளவும் கைவிடவில்லை என்று மனம் மகிழ்ந்தது.

கிளாசிக் ஆரியகளின் தோற்றத்திற்கு எடுத்துக்காட்டாக த்பாணியின் ஓவியம். வெண்ணிறத் தோற்றத்துடன் தலையில் நவரத்தினங்கள் பதித்த தங்கக் கீரீடம், கூரிய நாசி, சிறுத்த உதடுகள், கழுத்தில் மூன்று வடம் முத்து மாலைகள் சிறுத்த இடுப்பை ஒரு பக்கமாக வளைத்துக் கொண்டு கொஞ்சம் சொருகும் விழிகளுடன் கையில் தாமரை ஏந்தி நிற்கும் அவனருகில், கறுப்பு நிறத்துடன் கண்களின் வெண்திரையில் மட்டும் வெண்மைக் காட்டி, அகன்ற இடுப்புடன். பெரிய மார்பகத்தில்,, கழுத்து காதுகளில் நகைகள் அணிந்த நிற்கும் திராவிட அரசகுமாரி அவனை பார்த்து மயங்கி நின்று கொண்டிருக்கின்றாள்.


 இன்னொரு ஓவியத்தில் அப்ஸரஸ் அவள் தலையில் அணிந்திருக்கும் தலைப்பாகையில் தொங்கும் முத்துக்களின் சரங்கள், அவள் காதை அலங்கரிக்கும் குழைகள், நீண்ட கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரம், அதனை ஒட்டி அவள் போட்டிருக்கும் அருமையான கல்பதித்த நெக்லஸ் அதில் அழகாக சேர்ந்து தொங்கும் முத்துக்களின் சர வரிசைகள், மயக்கும் விழிகளுடன் மயக்குவதற்கா திர்க்கும் ஒரு குறுநகை, பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் கருநிற அழகியாக பறக்கும் அப்ஸரஸ் என்று ஒவ்வொரு ஓவியமும் எவ்வளவு வருடங்கள் என்றில்லாமல், நம் அன்றைய மனநிலைக்குத் தகுந்தவாறு தினம் ஒரு புதுக்கதை சொல்லும்.

யூவான் சாங் கிபி 7 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்த போது ஆயிரத்துற்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் அங்கிருந்ததாகவும், சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி அவருக்கு அவ்விடத்தில் வரவேற்பளித்தாகாவும் அவருடைய நூலிலே குறிப்பிட்டிருக்கின்றார். அப்போது அவர்கள் எவ்வாறு வாழந்திருப்பார்கள், என்ன சாப்பிடிருப்பார்கள் காய்கறி எங்கு பயிரிட்டிருப்பார்கள் என்று நினைக்க நினைக்க ஆச்சர்யமாகவிருந்தது.

புத்த மதம் எப்படி சட்டென்று இந்தியாவில் இருந்து மறைந்தது, அதுவும் எந்தவிதமான சுவடும் இல்லாமல் என்ற கேள்வி எழுந்தது. பௌத்தம் வீழ்ச்சியடைந்பிறகு அந்த சுத்து வட்டார மக்களுக்குக் கூட குகைகள் இருந்தற்கான அடையளமோ, சுவடோ தெரியாமல் மரங்களும் செடிகளும் மொத்தமாக மூடிவிட்டிருந்திருக்கின்றன. இதுவும் ஒர் பேருதவியே. இல்லையென்றால் இஸ்லாமியயர் இந்தியாவில் படை எடுத்த போது சூரையாடி அழித்திருப்பர். அப்படியே இல்லை என்றாலும் ஔரங்காபாத்தில் பக்கத்திலேயேவிருந்த மதவெறி பிடித்த ஔரங்கசீப், காட்டாயம் இடித்து தரை மட்டமாக்கியிருப்பான். மறைத்த மரங்களுக்கும் மறந்த மனங்களுக்கும் என்  நன்றியைத் தெரிவித்தேன்.

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அனைத்து ஓவியங்களின் அழகை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. ஆனால் ஒருவனை நமக்குத் தெரியும் அது கம்பன். கம்பன் எனும் மாபெரும் கலைஞன் ஒருவன் மட்டுமே இவர்களுக்கு இணையாக, இவர்கள் வண்ணத்தில் உருவாக்கியதையும் மீறி வார்த்தைகளில் வடிக்கக் கூடிய ஒரே கலைஞன்.

கம்பனுக்கும் வால்மீகி எழுதிய இராமயாணம் என்ற மூலம் அழகாகச் செதுக்கபட்ட குகைக் கோவில் போல் கிடைக்கின்றது. அவன் அதன் அடிநாதத்தை மாற்றாமல் அவனுடைய அற்புதமான திமையால் ஓவ்வொரு பாத்திரத்தையும், நிகழ்ச்சியையும் மிக அற்புதமாக மிகச் சிந்த முறையில் உயர்வாகப் படைக்கின்றான். நாம் நம் பார்வைக்கு அயோத்தியா காண்டத்தில் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம். நிகழ்ச்சிகள் நடைபெறும் விதத்தையும் அமைப்பையும் முழுமையாக மாற்றி மிகப் பிரமாண்ணடமான காட்சிகளை சிருஷ்டித்துக் காட்டுகின்றான் கம்பன்.   

வால்மீகி கூற்று. தசரதன் மந்திரிகளை கூட்டி அலோசித்து இராமனுக்கு முடிசூட்ட நினைக்க அனைவரும் ஒப்புதல் அளித்து, வசிட்டன் நாளையே உகந்த நாள் என்றவுடன, இராமனை வருவித்து தசரதன் ”நாளை உனக்கு பட்டாபிஷேகம்” என்று சொல்லி இராஜ்ஜியத்தை எப்படி ஆள வேண்டும் என்று அறிவுரை வழங்கினான். விடைப் பெற்றுக் கொண்டு போன இராமன், நேராக கௌசள்யையிடம் செல்கின்றான். அவள் திருமகள் பூஜையில் இருக்கின்றாள். இவனுக்கு பட்டபாபிஷேகம் என்ற செய்தியறிந்த லக்ஷ்மணனும் சுமத்திரையும் அங்கு வருகின்றனர். பிறகு சீதையும் அவ்விடம் வருகின்றாள். தன் தாயிடம் நாளையே பட்டாபிஷேகம் என இராமன் கூறி லக்ஷ்மணணை ”நீ என்னுடன் இளவரசனாகவிருந்து இராஜ்ஜியத்தை பராமரிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டு ”வசிட்டர் என்னையும் சீதையையும் இன்றிரவு முழுவதும் விரதம் இருக்க சொல்லியிருக்கின்றார்” என்று கூறி அவர்களிடமிருந்து விடை பெற்று தன் மாளிகையடைந்தான்.       

கம்பன் கூற்று. தனக்கு வயதானதை உணர்ந்த தயரதன் இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று விரும்புகின்றான். மந்திரிமார்களிடம் கேட்டு அவர்களும் ஒப்புதல் அளிக்க, இராமனை வரவழைத்து அவனிடம் ”நீ இராஜ்ஜிய பரிபாலனம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என பலவிதமாக வேண்டுகோள் விடுக்க இராமன் இது அரச கட்டளை என்று ஏற்றுக் கொண்டு தன் மாளிகையடைகின்றன். கௌசல்யையின் சேடிப் பெண்கள் விஷயமறிந்துக் கொண்டு போய் அவளிடம் சொல்ல, மகிழ்ந்து சுமித்திரையயுடன் கோவிலுக்குப் போய் வணங்கி தான தர்மங்கள் செய்தாள். எல்லோருக்கும் ஓலையனுப்பிய தசரதன் வசிட்டன் சென்ற பிறகு ஜோசியர்களுடன் அலோசிக்க அவர்கள் ”நாளயே சிறந்த நாள்” எனக் கூற வசிட்டனை வரவழைத்து அவரிடம் ”நீங்கள் இராமனுக்கு இராஜ்ஜியம் ஆள்வதை பற்றி சொல்லி நாளை நடைபெறவிருக்கும் பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்” என்று சொல்கின்றான். வசிட்டனும் இராமனுக்கு இராஜநீதியை உபதேசித்து அவனை கோவிலில் விரதமிருக்கும் படி செய்கின்றான். முக்காலமும் உணர்ந்த வசிட்டன் நாள் பார்த்து பட்டபிஷேகம் தடைப்பட்டது என்ற அபகீர்த்தியை கம்பன் மாற்றிவிடுகின்றான்.

வால்மீகியில் கைகேயின் மனமாற்றத்திற்கு முக்கியமாக கூறப்படும் காரணங்கள் இரண்டு. ஒன்று கைகேயி கௌசல்யையிடம் கை கட்டி சேவகம் புரிய வேண்டும். மற்றது இராமன் பரதனை பட்டாபிஷேகம் முடிந்தவுடன்  காட்டிற்கு துரத்திவிடுவான்” என்பது தான்.

கம்பன் கையேயியைப் பற்றிக் குறிப்பிடும் போதே” தூமொழி மடமான், தூங்கும் போதும் கடைகண்ணில் அருள் பொழிபவள், இராமனை வளர்த்ததே கைகேயிதான் என்று பலவிதமாக அவளின் நல்ல குணங்களை புகழ்ந்து பாடுகின்றான். கைகேயின் மனம் மாற மிக முக்கியமான காரணம் ஜனகனுக்கு அவள் தந்தையிடம் இருக்கும் சண்டை, தசரதன் சக்கரவர்த்தியாக இருக்கும் வரை தசரனுக்கு பயந்து போரிடாமல் இருந்தான். இராமன் பட்டத்திற்கு வந்தால் ராமன் இவளுடைய தந்தைக்கு உதவமாட்டான். தன் மாமனாரின் பக்கம்தான் இருப்பான் என்று தன் பிறந்த வீட்டுக்கு வரும் ஆபத்தே அவள் மனம் மாருவதற்கு காரணம் என்கின்றான். அதையெல்லாம் விட “அரக்கர்தம் பாவமும் நல்லவர் இயற்றியத் தவமும்” என்று கூறி கைகேயின் பாத்திரத்தையும் உயர்வாகவே காண்பிக்கின்றான்.

வால்மீகியில்  வரம் கொடுத்துவிட்ட தசரதன் புலம்பிக் கொண்டிருக்கின்றான். இரவு விடிந்ததும் கைகேயி, சுமந்திரனை அனுப்பி இராமனை அழைத்துவரும்படி சொன்னாள். இராமன் வந்து போது தசரதன் “ராமா” என்ற சொல்லைத்தவிர வேறு ஏதும் பேசவில்லை. கைகேயி பரதன் நாடாளவேண்டும். நீ பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு போக வேண்டும்” என்கின்றாள். அப்போது இராமன் நான் அப்படியே செய்கின்றேன். ஆனாலும் தந்தை என்னுடன் பேசாதது எனக்கு மிகவும் வருத்தையளிக்கின்றது” என்று சொல்லி விட்டு தன் தாயான கௌசல்யையைப் பார்க்க அவள் மாளிகைக்கு புறப்படுகின்றான்.

அவனை ஆசனத்தில் அமரச் சொல்லும் கோசலையிடம் “ நான் தண்டகா வனம் போகப் போகின்றேன். தர்ப்பை புல்லில் அமர்ந்து முனிவர்களைப் போல் மாமிசத்தை விலக்கி கிழங்கு, கனிகள் மற்றும் தேனை உட்கொண்டு, பதினான்கு ஆண்டுகாலம் வாழப் போகிறவன். எனக்கு எதற்கு இந்த ஆசனம்” என்கின்றான். கௌசல்யை “எனக்கு குழந்தையே இல்லை என்றாலும் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன் நீ பிறந்ததே எனக்கு துன்பத்தைக் கொடுப்பதற்காகவா? என் கணவன் அதிகாரத்திலிருக்கும் வரை, .நான் என் வாழ்க்கையில் இதற்கு முன்பு வரை சந்தோஷத்தைப் பார்த்தது இல்லை. அதை உன் மூலாமாகவாவது தீர்த்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். என் கணவனோ கைகேயின் வேலைககாரர்களை விட என்னை கேவலமாக நடத்தினான். நான் அவனுடைய மீதி மனைவியரிடம் எவ்வளவோ இழி பேச்சு கேட்டிருக்கின்றேன். உனக்கு இராஜ்ஜியம் வரவேண்டும் என்று உனக்கு பூனூல் போட்டதிலிருந்து இந்த பதினேழு ஆண்டுகளும் நான் காத்திருந்தேன். நான் எப்படி அந்த அகங்காரியும் கோபக்காரியுமான கைகேயின் முகத்தை எப்படி  பார்ப்பேன்” என்கின்றாள். இலக்குவனும் அங்கு இருந்தான். அவன் கைகேயின் சூழ்ச்சி வலையில் வயதான நம் தந்தை சிக்கிக் கொண்டிருக்கின்றார்.. நாம் இதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை என்று சினத்துடன் கூற அவனை சமாதனப்படுத்தி சீதையைப் பார்த்து அவள் உடன் வர இராமன் உடனேயே சரியென்று சொல்லிவிட இலக்குவன் நானும் வருவேன் என்று சொல்லி அவனும் உடன் கிளம்பினான்.   

வால்மீகியில் தசரதன் முன்னிலையில் கைகேயி ராமனிடம் ”நீ காடு செல்லவேண்டும்” என்று சொல்கின்றார் போல்தான் வருகின்றது ஆனால் ம்பன் அதை மாற்றி கைகேயி மட்டுமே சொல்வதாக அமைத்து இராமன் ”தந்தை சொன்னால் என்ன தாயாகிய நீங்களே ஆணையிட்டாலும்  என்ன நான் அதை நிறைவேற்றக் கடமைப் பட்டவன்” என்று இராமனின் பண்புளைன்மடங்காக உயர்த்திக் காட்டுகின்றான். அதே போல் தசரதன் மயக்கமுற்று இராமன் சென்றதையே ஆறியாதவனாகவும் காட்டுகின்றான்.

வால்மீகியில் இராமனேக் கூட கம்பன் காட்டும் இராமனைப் போல் வாக்குச்சாதூர்யனாக இல்லை. கைகேயிடமிருந்து விடைபெறும் இராமன் கௌசல்யையிடம் போய் “ நின் காதல் திருமகன் பரதனே நாடாள்வான்” என்றது அவளும் “ முறைல்ல என்ற ஒன்றைத் தவிர பரதன் உன்னைவிட நல்லவன். இதை அரச கட்டளை என்று மட்டும் எண்ணாதே. இது உனக்கு அறம் என்று கூறி அவளின் பாத்திரத்தையும் மிக உயர்வாக படைக்கின்றான் கம்பன்.

வால்மீகியில் சுமத்திரையை போய் பார்த்து இராமன் விடை பெறுவாதாகவேயில்லை. அங்கும் மிக அற்புதமான முறையில் கம்பன் மாற்றி இலக்குவனுக்கு அவள் கூறும் அறிவுறையாக “ இவனுக்குத் தம்பி என்று போகாதே. ஒரு சேவகன் என்று போ. இவனை உன் தந்தையாகவும் சீதையை நானாகவும் நினை. இவனக்கு ஒரு ஆபத்து என்றால் நீ முதலில் உயிரைக் கொடுத்து தடுக்க வேண்டும்” என்றும் சீதையிடம் இன்னும் விஷயத்தைக் கூறாதபோதும் சீதையின் மனதையும் இலக்குவன் மனதையும்  அவள் நன்றாக அறிந்தவள் என்று அவளுடைய பாத்திரப் படைப்பையும் மிக உயர்த்திக் காட்டுகின்றான்.

வால்மீகியில் தசரதனிடம் கிளம்பும் வேளையில் மறுபடியும் சந்தித்து விடை பெறுவதாகவும் அப்போது அவன் சுமந்திரனை அழைத்து பெரிய போர் படையையும் நிறைந்த செல்வத்தையும் எடுத்துக் கொண்டு போகச் சொல்ல, அதற்கு கைகேயி ”என் பையனுக்கு மீதி என்ன இருக்கும்? இவனுக்கு ஒன்றும் கொடுக்கக் கூடாது” என்று தடுத்தாள் . சீதைக்கு கைகேயி மரவுரியைக் கொடுக்க அவள் கட்டமுடியாமல் தவிக்க அவளுக்கு இராமன் உதவுகின்றான். வசிட்டன் இதைப் பார்த்து கைகேயியை ஏசுகின்றான். தசரதன் சுமந்திரனை அழைத்து நல்ல தேர் ஒன்றை கொண்டுவரச் சொல்ல இன்னொரு ஏவளாளிடம் சீதையின் பதினான்கு ஆண்டுகால வனவாசத்திற்கு ஏற்ப சிறப்னா நகை அணிகலண்களை எடுத்து வரச்சொல்ல,  அவள் சர்வ அலங்காரபூஷிதையாக இராம இலக்குவர்களுடன் தேரேறி போனாள் என்கின்றான். கம்பன் மிக அழகாக இதை மாற்றி தசரதனை சந்திக்காமலேயே இராமனும் இலக்குவனும் வெறும் வில்லும் வாளும் துணையாகவும் மரவுரியணிந்தும் மூவரும் காடு நோக்கிப் போனார்கள் என்று கூறிவிடுகின்றான்.

வால்மீகியில் தசரதன் கைகேயி மாளிகை வந்த கௌசயையுடன், அவளுடைய மாளிகைக்குத் திரும்பி அங்கு சுமத்திரையும் வந்து அவனுக்கு பணிவிடை செய்கின்ன்றாள் . தசரதன் இராமனைப் பிரிந்து சுமந்திரன் திரும்பிவந்து சொல்லும் வரையிலும் நான்கு நாட்கள் உயிரோடு இருந்து பிறகு உயிரைவிடுவதாக கூறுகின்றார். அந்த நாட்களில் அவனுக்கு தன் சாபம் ஞாபகம்வர அதைப் பற்றிக் கூறுகின்றான். சுமந்திரனேக் கூட ராமனுடன் மூன்று இரவை கழித்து இராமன் குகனைப் பார்த்து விட்டு அவனுடன் கங்கை கடந்து பிறகுதான் திரும்பினான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது..  

கம்பன் அவ்வாரில்லாமல் அரண்மனை விட்டு வெளியேறிய அன்றிரவே இராமன் சுமந்திரனுடன் பேசி காலையில் காட்டிற்குள் புக, சுமந்திரன் காலையிலே திரும்பிவர ”வீரன் வந்தானா? என்று வினவ இவன் “வனம் புகுந்தான்” என்ற சொன்னபோழ்திலேயே தசரதன் இறந்தான் என்று காட்சியமைத்து தசரதன் தன் மகனிடம் வைத்திருந்த அளப்பறிய பாசத்தை நாம் அனைவரும் உணரும்படி செய்து காட்டி காட்சியினை தத்ரூபமாக அமைக்கின்றான். இராமனை பிரிந்து ஒரே இரவுதான் தசரதன் வாழ்ந்தான். இவனுடைய இறப்பும் நடப்பதேக் கூட கைகேயின் அரண்மனையில்தான். அங்கு இராமன் வனம் புகுவதை தடுக்க வந்த கௌசல்யையிடம் தன் சாப வரலாற்றை முழுமையாக கூறுகின்றான். பிறகு சுமத்திரையும் அவ்விடம் வந்து அவர்கள் அனைவரும் அங்கிருக்கையில் தன் உயிரைவிடுகின்ரான் தசரதன். அதே போல் குகனை பார்ப்பதோ, கங்கையை கடப்பதோ, எல்லாமே சுமந்திரன் கிளம்பிய பிறகு நடப்பதாக காட்டப்படுகின்றது. அதே போல் குகனின் பாத்திரப்படைப்பும் வால்மீயிலிருந்து வித்தியாசமாகவும் அற்புதமாகவும் கம்பன் மாற்றியமைத்திருப்பான் (இதை வரும் ”வேற்றுமை” எனும் அத்தியாத்தில் பார்ப்போம்)

அயோத்தியா காண்டத்தில் இதுவரையில் நாம் பார்த்தவற்றிலேயே ஒவ்வொன்றிலுமே மிகச்சீறிய, நுண்ணிய காட்சியமைப்புகளினாலும் அமைப்புகளினனாலும் மாற்றி அழகான கற்குகையாக இருந்த இராமாயணத்தை வண்ணத்தை வாரியிறைத்து அற்புத ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த,  காலத்தால் அழிந்துபோகாத அஜந்தா மற்றும் எல்லோராவை போல் மாற்றியமைத்துவிடுகின்றான். இனி அந்த அந்த படலத்தில் வரும் இருவருக்குமான வித்தியாசங்களைப் பார்ப்போம்.

                                                                                                                                         தொடரும்

No comments:

Post a Comment