Thursday, November 10, 2011

வீடு..

 
பழமொழிகள் சர்வசாதாரணமாக அலட்சியமாக மிகப் பெரிய விஷயங்களை கூறுவிடுகின்றன. “வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப் பார்.

வீடு என்பது அந்தக் காலத்தில் எல்லோருக்குமே ஒரு எட்டாத கனவாகத்தான் இருந்தது. பூர்வீக சொத்து இல்லாத, அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர், 1990கள் வரையில் கூட, சென்னையில் ஒரு வீடு கட்டுவதற்குள் படும் பாடு தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளானயிருப்பவன் படும் பாட்டிற்குச் சற்றே சமமாகயிருக்கும்.


பிஎஃப் கடன் விண்ணப்பித்து, அப்போதிருந்த கடன் வழங்கும் நிதிநிறுவனமான LIC அல்லது HDFCயில் பல தடவை நடந்து கடனுக்கு அங்கீகாரம் வாங்கவேண்டும். அதற்கு முன்பே வரைபடம் போட்டு அதற்கு அலைந்து கார்பரேஷனிலோ அல்லது பஞ்சாயத்திலோ பர்மிஷன் வாங்க வேண்டும். சிமெண்ட் தட்டுப்பாடு இருந்த காலத்தில் இறக்குமதியான கொரியன் சிமெண்ட்டுக்கு PWDயிடமிருந்து பெர்மிட் வாங்கி, இரும்புக் கம்பிக்கு நடையாய் நடந்து, மேஸ்திரி பாதியில் வேலையை விட்டு விட்டு ஓடிவிட, இன்னொரு மேஸ்திரியைப் பார்த்து வைத்து, திருடும் காவல்காரனை மாற்றி, பாதிராத்திரி வரும் மணலுக்காவும் செங்கல்லுக்காவும் காத்திருந்து இறக்க வேண்டும். பணம் பற்றாமல் பணக்கார உறவினரிடம் வெட்கத்தைவிட்டு கடன் வாங்கி, முழுவதுமாக முடிக்கு முன்பே குடிபுகுந்து, அடுத்த நான்கைந்து ஆண்டுகள் தேவைகளையுமே குறைத்து, திரும்பிப் பார்க்கும் போது, கன்னங்கரேலென்றிருந்த தலைமுடி, இருந்தால் அதிசயம்!. முக்கால் வாசிப்பேருக்கு தலை நரைத்திருக்கும். ஆனாலும் வீட்டிலுள்ள அனைவர் முகத்திலும் எவ்வளவோ சங்கடங்கள், சிரமத்திற்கு மத்தியிலும் எங்கள் தேவைக்கேற்ற மாதிரி, மனை சாஸ்திரத்தில் கூறப்பட்டபடியே வீட்டைக் கட்டி முடித்து விட்டோமென்ற, தனிக் களை வீசும்.

சிறு வயதில் நான் பார்த்த பெரும்பான்மையான வீடுகள் ஒரே மாதிரிதான் இருக்கும். அவ்வளவாக பெரிய மாறுபாடிராது. சித்தூரில் இருந்த தாத்தாவின் வீடு எனக்கு மிகவும் பிடித்தது. தெருவிலிருந்து சில படிகள் ஏறியவுடன் இரண்டு புறமும் இரு தூண்களுடன் கூடிய தாழ்வாரம், உள்ளே நுழைந்தவுடன் ஒரு பக்கம் தாத்தாவின் ஆபிஸ் ரூம், அதன் எதிர்புறம் இருட்டு உள். இதைத் தாண்டி வீட்டினுள் நுழைந்தால் நடுவில் பெரிய முற்றம், மாடியிலிருக்கும் ரூம்களின் ஜன்னல்களிருந்தும் முற்றத்தைப் பார்க்கலாம். இந்த முற்றத்தில்  அத்தைகளின் கல்யாணமே நடந்ததாக தாத்தா கூறுவார். எனக்கு நினைவிருப்பது எங்கள் நான்கு சகோதரர்களின் பூணூல் கல்யாணம். முற்றத்தைச் சுற்றி தாழ்வாரம்.

இடப்புறமாக பெரிய ஹால். சுவற்றின் மேலே இரு வரிசைகளில் படங்கள். மேல் வரிசையில் ரவிவர்மாவின் கடவுள்களிருந்து காந்தி நேருவரை. கீழ் வரிசையில் கல்யாணம் முடிந்து ஸ்டுடியோ போய் எடுத்துக் கொண்ட நேராக இருக்கும் போட்டோக்களில், குடும்பத்தின் அனைத்து உறவினரையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளளாம். நடுவில் ஊஞ்சல். எதிர்ப்புறம் இரண்டு மூன்று அறைகள். ஆபிஸ் ரூமை ஒட்டியத் தாழ்வாரத்தையடுத்து ஒரே சமயத்தில் 20 பேர் சாப்பிடக்கூடிய டைனிங் ஹால், அதையொட்டி பெரிய சமையலறை. அதனுள்ளேயே இருக்கும் பூஜை அறை.

இதற்கு எதிர்பக்கம் கிணறு, சுற்றி ஒரு சிறு முற்றம், பெரிய தொட்டியுடன் கூடிய வெண்ணீர் அறை. வெளியே தோட்டம். இன்னுமொரு கிணறு மற்றும் குளியலறை. அதன் எதிர் புறம் ஸ்டோர் ரூம். அங்கு டிரங்கு பெட்டிகளில் இருக்கும் பழைய கல்யாண ஆல்பங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய பஞ்சாங்கங்கள், அந்த வருடம் பிறந்தவர்களின் தேதிக்கு நேரில் பிறந்த நேரத்தை தாத்தா சிகப்பு பேனாவால் ஆண், பெண், பிறந்த நேரம் எழுதி வைத்திருப்பார். ஆணியில் வளைந்த கம்பியில் ஒழுங்காக குத்தப்பட்டு இருக்கும் போஸ்ட் கார்டுகள் மற்றும் இன்லாண்ட் லெட்டர்கள். இதையெல்லாம் தாண்டி வாழை, முருங்கை, வேப்பிலை மற்றும் கறிவேப்பிலை மரங்கள் மற்றும் பூந்தோட்டம். கடைசியில் இரண்டு பெரிய, படம் வரையாத கழிப்பறைகள்.

தாத்தா ஆபிஸ் ரூமில் இருக்கும் பெரிய மேசையில் எப்போதும் புளுபிரிண்டை பார்த்துக் கொன்டிருப்பார். வரைப் படத்தில் வீட்டைக் காண்பித்து, வீடு என்றால் வெளியிருந்து பார்க்கும்போது கொல்லைப்புறம் வரையில் ஒரே நேர் கோடில்  இருக்கவேண்டும். சமையலறை அடுப்பு ஈசான மூலையிலும், படுக்கை அறை காற்றோட்டமாக இருக்க தெற்கு பக்கம் பார்ப்பதாக இருக்கவேண்டும் என்று கூறுவார்.

அன்று வீடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தததற்கும் காரணம், அவர்கள் வீட்டை காலாகாலத்திற்கும் வசிப்பதற்குறிய இடமாகவும் வாழ்வின் இன்றியமையாத ஆதாரமாகவும் பார்த்ததுதான். வீடு விற்பனைப் பொருளாக மாறவில்லை. அது நம்மைப் போல் ஒரு உயிருள்ளப் பொருளாக வீட்டிலுள்ள அனைவரின் பெருமை, கனவு, பெருமூச்சு, சந்தோஷம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும்.   

பெரிய மாமா, மேற்கு அன்ணாநகரில் வீடு கட்டி கிரஹப்பிரவேசத்திற்கு தி. நகரிலிருக்கும் அத்தை வீட்டிலிருந்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் இறங்கி 7 சி பஸ் பிடித்து, மேற்கு அண்ணா நகர் செல்லும் போது, அண்ணாநகர் டவர் அடுத்து வெகு தூரத்தில் தெரிந்த ஒரே கட்டிடம் மாமாவின் வீடுதான். மாமாவின் வீட்டு வெளியிலிருந்து, கொள்ளைப் புறம் தெரியவில்லை.

சமீபத்தில் பத்திரிக்கையில் பார்த்த விளம்பரம் ஒரு தமிழன் படைக்கும் உலக இலக்கியம்  இதேபோல் இது ஒரு காவியம் ; காப்பியம் என்று படைப்பிற்கு தலைபிட்டதாலேயே இவை எல்லாம் காவியமாகவோ காப்பியமாகவே ஆகிவிடுமா? கொள்ளைப் புறம் தெரியாத என் மாமாவின் வீடு மனதில் தோன்றியது.

கம்பனின் காலத்தில் எப்பேர்ப்பட்ட கவிப்பேரரசானாலும் இவ்வாறு சுயதம்பட்டம் அடிக்க முடியாது. காரணம் தொல்காப்பியத்தின் கராறான விதிகள். கம்பனுக்குப் பின்னால் வந்த “தண்டியலங்காரம். பா மற்ற்ம் அணியைலக்கணத்தைத் தனியாக கூறியது. அதில் பெருங்காப்பிய நிலை பேசுங்காலைஎனத் தொடங்கிக் கற்றோர் புனையும் பெற்றியது என்பஎன காப்பிய இலக்கணம் வகுத்தது.

பட்டப் பெயரில் அழைக்காவிடில் கோபம் வருகின்றது தமிழனுக்கு. சமீபத்திய பரிதாபம் கௌதம்  மேனன். கலைஞர் என்று பட்டப் பெயரில் அழைக்காமல் கருணாநிதி என்று அழைத்து மேடையிலேயே சிக்கலில் சுற்றினார்.

கவிச்சக்கரவர்த்தியும் கல்வியிற் பெரியவரான கம்பரின் அவையடக்கம் இதற்கு எதிர்மறை.  

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென.
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று. இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!  

ஓயாத     ஒலி  கடலுக்கு இயல்புஆதலின் ஓசை பெற்று  உயர் பாற்கடல்என்றார். தேவருக்கு அமுது ஈந்த சிறப்பைப் பற்றி  உயர் பாற்கடல் என்றார்.  எளிய பூனை ஆழ்ந்து பரந்த பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடித்துத் தீர்த்துவிட முடியாது என்பது தெளிவு. ஆயினும். அந்த  முயற்சி கொண்டு  ஒரு பூனை பாற்கடலை அடைந்திருக்கிறதுஇம்முயற்சிக்கு ஆற்றலை விடப் பேராசையே காரணமாக இருக்கமுடியும்.  அதுபோல தனக்கு ஒப்பார்  இல்லா நின்றுயர் நாயகனின் புகழ்க் கடலை  அளந்துரைக்க முடியாது என்பது தெளிவு.  ஆயினும். ஆற்றல் கருதாத பேராசை  காரணமாக மட்டுமே இச்செயலில் துணிந்து இறங்கியிருப்பதாகக்  கவிச்சக்கரவர்த்தி கூறுகிறார்.  (பூனையை உவமையாகக் கொள்ளாமல் ஆசை பற்றிய அதன் முயற்சியையே உவமையாகக் கொள்ளல் வேண்டும்)

வையம் என்னை இகழவும். மாசு எனக்கு
எய்தவும். இது இயம்புவது யாது எனின்.-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.
வையம்: உலகம்; இங்குக் கல்வி. கேள்வி. ஞானங்களால்  உயர்ந்த பெரியோரைக் குறித்து. சான்றோரின்’  ஏளனத்துக்கும் புலமைக் குற்றத்துக்கும் இலக்காக  நேரிடும் என்பதை உணர்த்தும்.  இக்காப்பியம் இயற்ற முனைந்ததற்கும் போற்றுதலுக்கும் புலமை  மாண்புக்கும்  இடமான வான்மீகி முதலான சான்றோர்கள் அருளிய  தெய்வ மாக்கவிகளின் பெருமை  புலப்படுத்தும் ஆர்வமே காரணம்  என்கிறார்  கவிச்சக்கரவர்த்தி. கல்வியிற் பெரிய கம்பரின் அடக்கம் இவ்வாறு!

தொல்காப்பியனாரோ “ இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்தமொழியா னடிநிமிர்த்தொழுகினும்,தோலெனமொழிப தொன்மொழிப் புலவர் பழங்கதையை மறுபடியும் கூறினாலும்  ஏற்கெனவே வேறு மொழியில் கூறப்பெற்றதை அடியொட்டி தமிழில் பாடினாலும் அது தோலெனப்படும் என்கின்றார்.

கம்பனோ மிகவுமே தேர்ந்த சிறந்த புலவன். பொருள் தொடர்நிலை செய்யுல்களின் கட்டால்,  சொந்தமாகவே இவ்வளவு கட்டுபாடுகளுக்குள்ளும் பெருங்காப்பியம் இயற்றியிருக்க முடியும். ஆனாலும் அவன் பாரத தேசத்திலே ஏற்கெனவே பிரசித்தி பெற்ற வால்மீகியின் ராமாயணக் கதை என்ற வரைபடத்தை வைத்து, சிறந்த தேர்ந்த தன் புலமையினால்  ஒரு வார்த்தையையும் நீக்கவோ, சேர்க்கவோ முடியாதபடி நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் இராமவதாரம் எனும் மாபெரும் கலைக்கோயிலை மிகவுமே நுட்பமாகச் செதுக்கி நிர்மானித்தான்.

இது அவன் வைத்த பெயரில் வழங்கப்படாமல் அவனுடையப் பெயராலேயே வழங்கப்படுவதே அவனுடைய புலமைக்குச் சான்று என்றாலும் ஏற்கெனவே தெரிந்த, பரவலாக அறியப் பெற்ற இராமனுடைய கதையை ஏன் கூறவேண்டும்? அதற்கான கட்டாயம் என்ன?     


                                                                                                          தொடரும்...

No comments:

Post a Comment