Saturday, January 21, 2012

உபசரிப்பு, முறை

எங்காவது நான் போகின்ற வழியில் உறவினர் யாரேனுமிருந்து, எனக்கும் நேரமிருந்தால் கட்டாயம் அவர்கள் வீட்டிற்குச் சென்று, பார்த்து, பத்து நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் வருவேன். கல்யாணமான புதிதில் என் மனைவியின் சொந்தக்காரர்கள் வீடு, வழியிலிருந்தால் அவர்கள் வீடுகளுக்கும் செல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். என் மனைவிக்கு இதில் அவ்வளவு விருப்பமில்லை. முதலிலேயே சொல்லிட்டுதான் போகணும்.. அவாளுக்கு எவ்வளவோ வேலையிருக்கும். நாம போய் நந்தி மாதிரி ஏன் நிக்கணும்?” நான் உடனேயே அவர்கள் முக்கியமான வேலையிருக்கின்றது என்றால் சொல்லி விட்டுக் கிளம்பி, அவர்கள் வேலையைப் பார்த்துக் கொள்வார்கள்". " நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை. அதனாலே அவா அப்படியெல்லாம் மூஞ்சிலே அடிச்ச மாதிரி சொல்ல மாட்டா" என பதில் உடனேயே வந்தது. அப்பொழுது, எனக்கு யாருடைய வீட்டிற்கும்  சொல்லிக் கொண்டுப் போவதோ வருவதோ பழக்கமில்லாதது. வீடு பூட்டியிருந்தாலும் அதைப் பற்றியோ, வேஸ்டாக ஒரு சுத்து சுத்தி வந்ததைப் பற்றியும் கவலைப் படாதவன். கடைசியாக அவள் எடுத்த அஸ்திரம் "அவா நம்ம வீட்டுக்கு வருவதேயில்லை. நாம் ஏன் அவா வீட்டுக்குப் போகணும்? "  "அவா வருவதும் வராததும் அவா இஷ்டம். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நான் இப்படித்தான்என்றேன். சிறு வயதிலேயே என் பெரிய மாமா கூறி, அது மண்டையில் ஆழப்பதிந்திருந்தது. வந்து போயிண்டு இருந்தாதான் உறவு. குற்றம் பார்க்கில் சுற்றமில்லை
திருந்தாத ஜன்மம்; யார் சொல்லியும் கேட்காதது என நினைத்தாளோ என்னவோ என்னை என் வழியே செல்ல விட்டாள். அவளை விட அவள் சுற்றத்தாரிடம் நான் பாப்புலர் என்பது மட்டுமில்லாமல், நெருங்கியவனும் கூட.
முன்னறிவிப்பின்றி அப்பா ஆபிஸிலிருந்து யாரையேனும் (JE அல்லது S O) வீட்டிற்கு திடீரென்று அழைத்து வருவார். அப்படியில்லையென்றால்  ஆபீஸிற்கு சாப்பாடு கேரியரில் போகும். இதற்கென்றே  இரண்டு ஐந்து அடுக்குடன் கேரியர், அதற்கெ இரண்டு பச்சைநிற மூங்கில் கூடைகள் பீங்கான் பிலேட்டுகள் ஸ்பூன் என்று எல்லாம் இருக்கும். நான் சிறுவயதில் பெரியவானவுடன் முதலில் வாங்க வேண்டிய ஒரு முக்கியப் பொருளாக கருதியது இந் காரியர் தான். சி.ஏ படிக்கும் போதும் சரி, முடித்து சென்னை கோபலபுரத்தில் பிராக்டிஸ் செய்யும் போதும் மூன்று அடுக்கு காரியரை வயர்கூடையில் தட்டு(பிசைந் சாம் எனக்குப் பிடிக்காது), ஹார்லிக்ஸ் பாட்டிலில் மோர் சகிதம்தான் செல்வேன்.
அப்பா இறந்த போது வந்த அவரின் நெருங்கிய நண்பர் ஸ்ரீதரன் சார் (அவரும் அப்பாவை எங்கள் வீட்டில் அழைப்பது போலவே சீனா என்றுதான் கூப்பிடுவார்) சொன்னார் “ சீனாவினுடைய ஹாஸ்பிடாலிட்டி யாருக்குமே வராது. உங்க வீட்டிற்கு வந்தோ, இல்லை உங்க வீட்டிலிருந்த வந்த சாப்பாட்டையோ சாப்பிடாத PWD ஆபிஸர்களே கிடையாது. இவன் AEயாயிருக்கும் போதே நேரா CE ஆபிஸ் போவான். எங்க அம்மாவை பார்த்து அது எப்படிம்மா நீங்க அவ்வளவு சீக்கிரம் சமையல் பண்ணி அனுப்பிடுவீங்க? எனக்கு சீனா கேக்கறதைப் பார்த்தா ஏதோ ஒட்டல்லில் ஆர்டர் குடுப்பதைப் போலிருக்கும் அம்மா “அப்படியென்ன பெரிசா கேட்டுட்டார். சாப்பாடுதானே. அவர் குணம் தெரியும் அதனால் எப்படியிருந்தாலும் மேலேயே மூணு நாலுபேர் சாப்பிடுற மாதிரிதான் சமைப்பேன். மிஞ்சி போச்சுன்னா வைக்க வேண்டியது சாதம் மட்டும்தான். உண்மையிலேயே ஆச்சர்யம்தான். ஆள் அம்பு இருந்தாலும் பண்ணுவதற்கு மனதும் வேண்டும். மீந்தால் சேமித்து அடுத்த நாள் சாப்பிடலாம் என்பதற்கு பிரிட்ஜும் கிடையாது.


என்னுடைய நெருங்கிய நண்பரின் தந்தையுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது “என்னைவிட வயதில் பெரியவர்களை நான் போய்ப் பார்ப்பேன்; என்னைவிட சிறியவர்கள் எனை வந்துப் பார்க்கவேண்டும். அதே போல் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் நான் தான் போய் பார்க்கவேண்டும் என்றார். இதில் எனக்கும்  உடன்பாடே. 
தசரதன் தான் பெரியச் சக்கரவர்த்தியாயிருந்தும் தன் காரியம் ஆக வேண்டுமென்பதால் உரோமபாதன் இருக்கும் அங்க தேசத்தை நோக்கி அமைச்சர் சுமந்திரனுடன் தேரில் சென்றான். தசரதன் வருகின்ற செய்தியை ஒற்றர்கள் மூலம் கேள்வியுற்ற உரோமபதன் தசரதனை எதிர் சென்று வரவேற்கப் புறப்பட்டான். கடந்த 10 வருடங்களில் சென்னைக்குச் சென்று வந்தது நினைவுக்கு வந்தது. ஒரே ஊரில் இருக்கும் சொந்த சகோதர்கள் கூட வாரம் ஒரு நாளில் சந்தித்துக் கொள்வதில்லை. தெரியாமல் வாரநாட்களில் பிரைம் டைமில் சென்று விட்டால் ஏன் இவன் வந்து விட்டான் என்ற பார்வை. அல்லது நாமும் அவர்கள் பார்க்கும் அத்தொடரைப் பார்ப்பவராக இருக்க வேண்டும். சீரியல்கள் இல்லாத வாரக்கடைசியில் போகலாம் என்றால் அவர்கள் வெளியே சாப்பிட, ஷாப்பிங் அல்லது கோவிலுக்கு அல்லது அவர்களின் பண்ணை வீட்டிற்கோ சென்று விடுகின்றனர். அந்த வீட்டிற்கு, தெரிந்தோ, தெரியாமலோ, பணத்தை நேர்வழியிலேயே சம்பாதித்திருந்தாலும் நெருங்கிய சொந்தத்தைக் கூடக் கூப்பிடுவதில்லை. 
இவர்களுக்குப் போன் பண்ணாமல் போக முடிவதில்லை. இதனாலேயே இப்பொழுதெல்லாம் போன் பேசிவிடுவதோடு சரி. இவ்வர்களில் பாதி பேர் நம்மைக் கூப்பிடும் போது கட்டாயம் சொல்லும் வார்த்தை “ Come home some time”. நானும் ஓயாமல் “Tell me the exact time and date and let me know if I am coming for lunch or dinner” என்று கேட்டும் பதில் “எப்ப வேணா வா. அப்படிச் சொன்னதை நம்பி நான் ஏமாறத் தயாராயில்லை.
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன்-    தனைக் கண்ணுற்று. எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர்நின்று அரசர்பிரான் இழிந்துழி. சென்று அடியில் வீழ.
முதிர்கின்ற பெருங்காதல் தழைத்து ஓங்க. எடுத்து இறுக முயங்கலோடும்.
கதிர் கொண்ட சுடர் வேலான்தனை நோக்கி.  இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்;
எதிர் கொள்ள வருகின்றவரைப் பார்த்தவுடன் தான் சக்கரவர்த்தியாயிருந்தாலும் தன்னுடையத் தேரிலிருந்து இறங்குகின்றான் தசரதன். உரோமபாதன் தசரதன் பாதத்தில் வீழ்ந்து வணங்குகின்றான். பேரன்பு கொண்டு தசரதன் அவனை வாரி எடுத்து தழுவுகின்றான். ஒரு நண்பர் தான் கார் வாங்கிவிட்டதை எனக்கு அறிவிக்க, ஒரு நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரும் போது  காருக்குள்ளிருந்தே ஹாரன் அடித்து கைக்காட்டி சென்றது தசரதன் தேரிலிருந்து இறங்கினான் என்று படித்தப் போது நினைவியில் ஆடியது. ரோமபதன் காலில் விழும்போதே அவனை வாரி தழுவி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் தசரதன் எனும் போது : கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சசந்திரன்குடும்ப சகிதமாக ஜெயாவின் காலில் வீழந்ததைப் புகைப்படும் எடுத்து பத்திரிகைகள்ளில் போட்ட அரசியல் கட்சிகளின் கலாசாரம் மனதிலாடியது.
மிகவும் மகிழ்ந்த உரோமபதன் தசரதனை நோக்கி
யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்.
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?’ என. மனம் மகிழா. மணித் தேர் ஏற்றி.
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்   என உரைக்கும் உரவுத் தோளான்.
உபசார வார்த்தைகளை கூறி உரோமபாதன் பெரியவர்களை உபசரிக்கும் போது முறையின் செய் வேண்டியவைகளைச் செய்து விருந்தளித்து 
செவ்வி நறுஞ் சாந்து அளித்து. தேர் வேந்தன்-
 
தனை நோக்கி. இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்திஎன. நிகழ்ந்த பரிசு
அரசர்பிரான் கழறலோடும்.
உணவு உணடபின் சந்தனமளித்தல் மரபு. அதனால்தான் இதற்கு முன் கவியில் விருந்தைக் குறிப்பிட்டு  இக்கவியில் சந்தனத்தைக் குறிப்பிடுகின்றார். பெரியவர்களுக்குச் செய்ய வேண்டிய பதினாறு வகையான உபசாரங்களாவன: 1. அர்க்கியம் : கை அலம்ப நீர் அளித்தல்.  2. பாத்யம் : பாதங்களை அலம்புவதற்கு நீர் கொடுத்தல். 3. ஆசமநீயம் : மும்முறை மந்திர நீர் அருந்துவது. 4. ஆசனம் : உட்கார ஆசனம் அளிப்பது. 5. அபிஷேகம் : நீராடுதல். 6. வஸ்திரம் : புதுத் துணி உடுத்துதல். 7. கந்தம் : சந்தனம் போன்ற மணப் பொருட்களை இடுதல். 8. புஷ்பம் : மலர் சூட்டுதல். 9. தூபம் : சாம்பிராணிப் புகை. 10. தீபம் : விளக்குக் காட்டுதல். 11. நைவேத்தியம் : அமுது படைத்தல். 12. கற்பூரம் : கற்பூர ஆரத்தி செய்தல். 13. சாமரம் : கவரி வீசுதல். 14. ஆலவட்டம் : விசிறி சமர்ப்பித்தல். 15. சத்ரம் : குடை எடுத்தல். 16. தர்ப்பணம் : கண்ணாடி காட்டுதல்)
இன்றும் கூட நான் சில திருமண நிகழ்ச்சிகளில் அல்லது ஏதோ வீட்டு விசேஷங்களில் கூட யாரேனும்ம் நெருங்கிய சொந்தங்களே கூட தன்னை சரியாக உபசரிக்கவில்லை என்று சாப்பிடாமல் பாதியிலேயே போய், அழைத்தவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குவதைப் பார்க்கின்றேன். கூட்டம் அதிகமாகயிருக்கும் போது எப்படியும் எல்லோரையும் உபசரிப்பது என்பது எவ்வளவு முயன்றாலும் முடியாமல் போய்விடுகின்றது. ரொம்பவே சகஜமாக இருக்கின்றார்களே என்று கவனிப்பில் சிறு குறைபாடு நேர்ந்தாலும், உடனே மூகமெல்லாம் சிவந்து ஒரு பெரிய முட்டைகோஸ் மாதிரி ஆகி பார்பவர்களுக்கும் வேதனையளிக்கும் என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.
தசரதன் தான் ருசியசிங்க (கலைக்கோட்டு) முனிவனை அயோத்திக்கு வரவழைத்து யாகம் செய்ய வேண்டும் எனக் கூற 
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக்
கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வு முடியோய்!எனலும். தேர் ஏறிச்
சேனையொடும் அயோத்தி சேர்ந்தான்.
பொறாமை  முதலிய  தீய  குணங்களை நீக்கிய மனத்தை   உடையவரான கலைக்கோட்டு  முனிவரை அயோத்திக்கு அழைத்து வந்து உன்னிடம் சேர்த்து விடுவேன். உயர்ந்த அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன்  கூறியதும் உடனே தயரதன் தேரேறி. சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.
மன்னவன் அகன்றதும் உரோமபாதன் ருசியசிங்க முனிவரையடைந்து சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து தனக்கு ஒரு வரமளிக்க வேண்டும் என அதற்கு முனிவன் யாது அவ்வரம் என வினவ “ தேவரீர் அயோத்தி சென்று யாகம் முடிவித்து மீண்டும் இந்நகர் மீள வேண்டும் என்றான் அவரும் தன் மனைவியான சாந்தையோடு அயோத்தியை அடைந்தார்.
எங்கள் வீடுகளில் ஊருக்குக் கிளம்பும்போதும் சரி, பண்டிகைக் காங்களிலும் சரி கட்டயாம் பரிட்சை எழுதும் போதும் பெரியவர்களுக்கு சாஸ்டாங்கமாக் நம்ஸ்காரம் செய்து விட்டு கிளம்புவது வழக்கம். என் அத்தை பிள்ளைகள் பரிட்சைக்கு போகும் போது நம்ஸ்கரித்தால் 80-85%என்று மார்க்கையும் மறக்காமல் சொல்லி ஆசிர்வதிப்பார் என் அத்திம்பேர். அன்று ஒரு வேளை கணக்குப் பரிட்சையா இருந்தால் அத்தை “ஏண்ணா. இன்னிக்கு கணக்கு பரிட்சை என்றதும் அத்திம்பேர் உடனேயே “ 95-100%என்று மாற்றி சொல்லி ஆசிர்வதிப்பார். என் தந்தையை பொருத்த வரை நன்றாக் கஷ்டப்பட்டு டித்தால் போதும். பாசாவதைப் பற்றியோ பெயிலாவதைப் பற்றியோ வருத்தப்டமாட்டார். என்னுடை இன்னொரு அத்திம்பேர் குடும்த்தில் மனிதர்கள் காலில் விழுவது என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள். என் மாமனாருக்கும், நான் நமஸ்காரம் செய்யும் போது என்ன செயவது, சொல்வது என்பது குறித்து எப்போதுமே குழப்பம்தான்.  
தூதர் முனிவன் வருகின்றான் என உரைக்கவும் தசரதன்
எழுந்தனன் பொருக்கென. இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை. ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை. வேரினோடுமே. இராமன் பிறந்து அரக்கர் தம் கொலைத்தொழிலை அழிப்பான். ஆகையால் தீவினை வீழ்ந்தன வேரோடு என்கின்றார். இரண்டு மூன்று யோசனை தூரம்(4800 கெஜம் ஒரு யோசனை தூரம். சுமாரக 4.3 கீமி. ஹரே ராம் ஹரே கிருஷ்னா நிறுவனர் சுவாமி பிரபுபாத ஒரு யோசனை என்பதை 8 மைல் என்றே குறிப்பிடுகின்றார்.) சென்ற தசரதன் பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல் முதிர்ந்த மா தவமுடை முனியை. கண்களால்.   எதிர்ந்தனன்
தனக்கு    மக்கட் பேறில்லை என்பதைப் பெருந்துயராக மலையை ஒத்த துன்பமாகக் கருதியிருந்தான் என்பதால் ‘‘மனத்துயர்ப்  பிறங்கல்’’ என்றான்.   அத்துயரம்  அடியோடு தீர்ந்தது என்பதால் “பிறங்கல் பிதிர்ந்ததுஎன்றான். எம்என்றதால் தேவியரையும்  நாட்டுமக்களையும்  உட்படுத்திக்  கூறினான்.  என்பது  கருத்து. 
பிறங்குதல்: வளர்தல்.  பிதிர்தல்:  சிதறுண்டு  போதல்.
இழிந்து போய் இரதம். ஆண்டு. இணை கொள் தாள் மலர்
விழுந்தனன். வேந்தர்தம் வேந்தன்;    மெய்ம்மையால்.
மொழிந்தனன் ஆசிகள் - முதிய   நான்மறைக்
கொழுந்து மேல் படர்தரக்  கொழுகொம்பு ஆயினான்.
முனிவனைக் கண்களால் கண்ட உடனேயே வேந்தன், தன்  ரதத்திலிருந்து கீழிறங்குகின்றார்.
அவர்களைத் தக்கபடி உபசரித்து மாநகர் வந்ததும், வசிட்டனும் ருசியசிங்க முனியும் அரச மண்டபம் அடைந்தனர்.
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும். அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும். வேத்தவை பொலிய மேவினார்.
ஐவரை   அறுவர்  ஆக்கிய’  ஐம்புலன்களையும் தத்தம் நெறியில் செல்லவிடாது  தடுத்து நிறுத்திய என்பது பொருள். ஐந்து,  ஆறு என்ற எண்ணு  பெயர்களை  அமைத்த நயம் கருதத்தக்கது. வசிட்டன் என்பதற்கு அண்மையில் இருப்பவன் என்றும் ஒரு  பொருளாம்.  அரிய  மறைகளெல்லாம் திரண்டு ஒரு வடிவம் கொண்டதெனத் திகழ்பவன் என்றது கலைக்கோட்டு   முனிவனை. வேந்து+அவை=வேத்தவை.  வேந்தவைக்கு இம்முனிவர்களால் பொலிவுண்டாயிற்று என்பது கருத்து.
’சான்றவர் சான்றவ! தருமம். மா தவம்.
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும். இழப்பு இன்றாம்அரோ.
உன ஆசியால் என் பமையா குலம் ஆட்சியில் நிலைப் பெற்று விளங்கும் என்ற தசரதன் கூற்றுக்கு முனிவன் புகழ் பெற்ற நீண்டதவத்தையுடைய வசிட்டனின் துணையும் குற்றமில்லாத நல்ல செய்கையும் உடையவன் நீ; ஆதலால் உனக்கு ஒப்பாக இவ்வுலகில் யாரிருக் முடியும்எனக் கூறி
என்றன பற்பல இனிமை    கூறி. நல்
குன்று உறழ் வரி சிலைக்    குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம்    நடத்த எண்ணியோ.
இன்று எனை அழைத்தது இங்கு?    இயம்புவாய்!என்றான். “ என்னை இங்கு அழைத்து நன்மை பயக்கும் அரி மகம்( அசுவமேத யாகம்) நடத்த மட்டும் எண்ணியோ?
வினவ தசரதன் உலப்பு இல் பல் ஆண்டு எலாம். உறுகண் இன்றியே.
தலப் பொறை ஆற்றினென்;    தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார்    அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற. இனி     நல்க வேண்டுமால்.
பல ஆண்டு.நாட்டின் தலைமையிலிருந்துவிட்டேன்.  மைந்தர் இன்மையால் எனக்குப் பிறகு இந்த நாட்டை நெறி  நின்று காக்க வல்ல மைந்தரை இனி நீங்கள் தான் கொடுத்தருள வேண்டும்.என்றான் .
சென்னையில் என் சொந்தக்காரர்ளில் ஒருவரை பார்ப்பதற்காக ஞாயிறு மாலை முன் கூட்டியே சொல்லிவிட்டுச் சென்றேன். அவர்கள் 7.00 மணிக்கு கச்சேரிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் நான் சரியாக 4.30 மணிக்கே சென்றதால், என்னை நன்கு உபசரித்தனர். எல்லாவற்றையும் பற்றிப் பேசிவிட்டு பேச்சு அவர்களின் இரு ஆண் குழந்தைகளைப் பற்றித் திரும்பியது. அவர்கள் பிள்ளைகளைப்  பார்ப்பதற்காக அமெரிக்காச் சென்று வந்ததைப்,  பற்றி  பேசிக் கொண்டிருந்தர். 
அவர்களுக்குக் கல்யாணம் ஆகி 14 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்தவர்கள். வடக்கில் வேலையையாயிருந்தவர்கள், சென்னைக்கு வரும் வழியில் நாக்பூரில் இருக்கும் என் சித்தி வீட்டிற்கு சென்று இரண்டு நாள் இருந்து விட்டு வருவதற்காக, வெள்ளிக்கிழமை போய் இறங்கினார்கள். அன்று மாலையே தேவி உபாசகர் ஸௌந்தர்ய லஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என் சித்தி. அவரிடம் இவர்கள் தங்களுக்குக் குழந்தையில்லை என்றனர். அவரும் இவர்களை சௌந்தர்ய லஹரியில் ஒரு சுலோகத்தை குறிப்பிட்டு 48 நாட்களுக்கு தினமும் 108 முறை மேடையில் பாலா திரிபுரசுந்தரியின் படத்தை வைத்து, குளித்து ஈரத்துணியுடன் பிரதட்சினம் செய்து ஓவ்வொரு தடவை சொல்லி முடித்தப் பின்னும் நமஸ்கரிக்கச் சொன்னார். அவர்களும் ஆழ்ந்த சிரத்தையுடன் செய்தனர். ஒரு வருடத்திலேயே அவர்களுக்கு அழகான ஒரு ஆண் பிள்ளை பிறந்தான். அடுத்த வருடத்திலேயே இன்னொரு ஆண் மகன். நானும் நாக்பூரில் பின்னொரு முறை என் கல்யாணத்திற்கு முன், திரு. கிருஷ்ணனை சந்தித்திருக்கின்றேன்.
முனிவனும் அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர்-ஏழும் ஒம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக. ஈண்டு!என்றான்.
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்: நிருபர்க்கு ஏந்தலும்.
தூய நல் புனல் படீஇ. சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன்.
கலப்பை- உபகரணம். வேள்விச்சாலை அமைத்தற்கு நிலம் உழுதற் பொருட்டு உழுபடை வேண்டுவதால் “ கலப்பை யாவையும் என்பதற்கு உழுபடை முதலிய எல்லாக் கருவிகளையும் என்றும் உரைக்கலாம்.
ஒருவருட காலம் நடந்த அசுவமேத யாகத்தில் ருசியசிங்கன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்த
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.
அப்போது  அந்த  வேள்வித் தீயிலிருந்து;  தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக ஒரு   பூதமானது அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே  தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.  ஏய்  எனச் சொல்வதற்குள்  (ஒரு  அளவைக் குறிப்பு) கம்பர் இச்சொல்லைப்  பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.
 பூதம் வைத்து விட்டுச் சென்றதும் ருசியசிங்க முனிவனும்
உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்என்றான்.
உனக்குரிய பட்டத்து அரசியர்களுக்கு மூத்தவள். இளையவள் என்ற
முறைப்படியே கொடுப்பாயாக. கொடுத்தால் உலகம் உய்க்கும் மக்ள் பிறப்பார்கள் என்று கூறினான்.


அன்று எல்லாவற்றிலுமே ஒரு முறையிருந்தது. அம்முறை அறத்தைடிப்படயாகக் கொண்டிருந்தது. தமிழில் பிள்ளைத்தமிழ் உருவாதற்கு காரணமாகவிருந்தவர் குழந்தை செல்வம் இல்லாத பெரியாழ்வார். கம்பனோ பிரபந்தத்தில் துளையாமாடியவன்(நீரில் மூழ்கியும் நீந்தியும் நெடுநேரம் விளையாடுதல்). ஆனால் இராமனின் குழந்தைப் பருவத்தைப் பற்றியோ அவனின் சிறுவயது விளையாடல்களையோப் பாடவேயில்லை.  

                                                                                தொடரும்

No comments:

Post a Comment