Saturday, January 21, 2012

உபசரிப்பு, முறை

எங்காவது நான் போகின்ற வழியில் உறவினர் யாரேனுமிருந்து, எனக்கும் நேரமிருந்தால் கட்டாயம் அவர்கள் வீட்டிற்குச் சென்று, பார்த்து, பத்து நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் வருவேன். கல்யாணமான புதிதில் என் மனைவியின் சொந்தக்காரர்கள் வீடு, வழியிலிருந்தால் அவர்கள் வீடுகளுக்கும் செல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். என் மனைவிக்கு இதில் அவ்வளவு விருப்பமில்லை. முதலிலேயே சொல்லிட்டுதான் போகணும்.. அவாளுக்கு எவ்வளவோ வேலையிருக்கும். நாம போய் நந்தி மாதிரி ஏன் நிக்கணும்?” நான் உடனேயே அவர்கள் முக்கியமான வேலையிருக்கின்றது என்றால் சொல்லி விட்டுக் கிளம்பி, அவர்கள் வேலையைப் பார்த்துக் கொள்வார்கள்". " நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை. அதனாலே அவா அப்படியெல்லாம் மூஞ்சிலே அடிச்ச மாதிரி சொல்ல மாட்டா" என பதில் உடனேயே வந்தது. அப்பொழுது, எனக்கு யாருடைய வீட்டிற்கும்  சொல்லிக் கொண்டுப் போவதோ வருவதோ பழக்கமில்லாதது. வீடு பூட்டியிருந்தாலும் அதைப் பற்றியோ, வேஸ்டாக ஒரு சுத்து சுத்தி வந்ததைப் பற்றியும் கவலைப் படாதவன். கடைசியாக அவள் எடுத்த அஸ்திரம் "அவா நம்ம வீட்டுக்கு வருவதேயில்லை. நாம் ஏன் அவா வீட்டுக்குப் போகணும்? "  "அவா வருவதும் வராததும் அவா இஷ்டம். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நான் இப்படித்தான்என்றேன். சிறு வயதிலேயே என் பெரிய மாமா கூறி, அது மண்டையில் ஆழப்பதிந்திருந்தது. வந்து போயிண்டு இருந்தாதான் உறவு. குற்றம் பார்க்கில் சுற்றமில்லை
திருந்தாத ஜன்மம்; யார் சொல்லியும் கேட்காதது என நினைத்தாளோ என்னவோ என்னை என் வழியே செல்ல விட்டாள். அவளை விட அவள் சுற்றத்தாரிடம் நான் பாப்புலர் என்பது மட்டுமில்லாமல், நெருங்கியவனும் கூட.
முன்னறிவிப்பின்றி அப்பா ஆபிஸிலிருந்து யாரையேனும் (JE அல்லது S O) வீட்டிற்கு திடீரென்று அழைத்து வருவார். அப்படியில்லையென்றால்  ஆபீஸிற்கு சாப்பாடு கேரியரில் போகும். இதற்கென்றே  இரண்டு ஐந்து அடுக்குடன் கேரியர், அதற்கெ இரண்டு பச்சைநிற மூங்கில் கூடைகள் பீங்கான் பிலேட்டுகள் ஸ்பூன் என்று எல்லாம் இருக்கும். நான் சிறுவயதில் பெரியவானவுடன் முதலில் வாங்க வேண்டிய ஒரு முக்கியப் பொருளாக கருதியது இந் காரியர் தான். சி.ஏ படிக்கும் போதும் சரி, முடித்து சென்னை கோபலபுரத்தில் பிராக்டிஸ் செய்யும் போதும் மூன்று அடுக்கு காரியரை வயர்கூடையில் தட்டு(பிசைந் சாம் எனக்குப் பிடிக்காது), ஹார்லிக்ஸ் பாட்டிலில் மோர் சகிதம்தான் செல்வேன்.
அப்பா இறந்த போது வந்த அவரின் நெருங்கிய நண்பர் ஸ்ரீதரன் சார் (அவரும் அப்பாவை எங்கள் வீட்டில் அழைப்பது போலவே சீனா என்றுதான் கூப்பிடுவார்) சொன்னார் “ சீனாவினுடைய ஹாஸ்பிடாலிட்டி யாருக்குமே வராது. உங்க வீட்டிற்கு வந்தோ, இல்லை உங்க வீட்டிலிருந்த வந்த சாப்பாட்டையோ சாப்பிடாத PWD ஆபிஸர்களே கிடையாது. இவன் AEயாயிருக்கும் போதே நேரா CE ஆபிஸ் போவான். எங்க அம்மாவை பார்த்து அது எப்படிம்மா நீங்க அவ்வளவு சீக்கிரம் சமையல் பண்ணி அனுப்பிடுவீங்க? எனக்கு சீனா கேக்கறதைப் பார்த்தா ஏதோ ஒட்டல்லில் ஆர்டர் குடுப்பதைப் போலிருக்கும் அம்மா “அப்படியென்ன பெரிசா கேட்டுட்டார். சாப்பாடுதானே. அவர் குணம் தெரியும் அதனால் எப்படியிருந்தாலும் மேலேயே மூணு நாலுபேர் சாப்பிடுற மாதிரிதான் சமைப்பேன். மிஞ்சி போச்சுன்னா வைக்க வேண்டியது சாதம் மட்டும்தான். உண்மையிலேயே ஆச்சர்யம்தான். ஆள் அம்பு இருந்தாலும் பண்ணுவதற்கு மனதும் வேண்டும். மீந்தால் சேமித்து அடுத்த நாள் சாப்பிடலாம் என்பதற்கு பிரிட்ஜும் கிடையாது.


என்னுடைய நெருங்கிய நண்பரின் தந்தையுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது “என்னைவிட வயதில் பெரியவர்களை நான் போய்ப் பார்ப்பேன்; என்னைவிட சிறியவர்கள் எனை வந்துப் பார்க்கவேண்டும். அதே போல் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் நான் தான் போய் பார்க்கவேண்டும் என்றார். இதில் எனக்கும்  உடன்பாடே. 
தசரதன் தான் பெரியச் சக்கரவர்த்தியாயிருந்தும் தன் காரியம் ஆக வேண்டுமென்பதால் உரோமபாதன் இருக்கும் அங்க தேசத்தை நோக்கி அமைச்சர் சுமந்திரனுடன் தேரில் சென்றான். தசரதன் வருகின்ற செய்தியை ஒற்றர்கள் மூலம் கேள்வியுற்ற உரோமபதன் தசரதனை எதிர் சென்று வரவேற்கப் புறப்பட்டான். கடந்த 10 வருடங்களில் சென்னைக்குச் சென்று வந்தது நினைவுக்கு வந்தது. ஒரே ஊரில் இருக்கும் சொந்த சகோதர்கள் கூட வாரம் ஒரு நாளில் சந்தித்துக் கொள்வதில்லை. தெரியாமல் வாரநாட்களில் பிரைம் டைமில் சென்று விட்டால் ஏன் இவன் வந்து விட்டான் என்ற பார்வை. அல்லது நாமும் அவர்கள் பார்க்கும் அத்தொடரைப் பார்ப்பவராக இருக்க வேண்டும். சீரியல்கள் இல்லாத வாரக்கடைசியில் போகலாம் என்றால் அவர்கள் வெளியே சாப்பிட, ஷாப்பிங் அல்லது கோவிலுக்கு அல்லது அவர்களின் பண்ணை வீட்டிற்கோ சென்று விடுகின்றனர். அந்த வீட்டிற்கு, தெரிந்தோ, தெரியாமலோ, பணத்தை நேர்வழியிலேயே சம்பாதித்திருந்தாலும் நெருங்கிய சொந்தத்தைக் கூடக் கூப்பிடுவதில்லை. 
இவர்களுக்குப் போன் பண்ணாமல் போக முடிவதில்லை. இதனாலேயே இப்பொழுதெல்லாம் போன் பேசிவிடுவதோடு சரி. இவ்வர்களில் பாதி பேர் நம்மைக் கூப்பிடும் போது கட்டாயம் சொல்லும் வார்த்தை “ Come home some time”. நானும் ஓயாமல் “Tell me the exact time and date and let me know if I am coming for lunch or dinner” என்று கேட்டும் பதில் “எப்ப வேணா வா. அப்படிச் சொன்னதை நம்பி நான் ஏமாறத் தயாராயில்லை.
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன்-    தனைக் கண்ணுற்று. எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர்நின்று அரசர்பிரான் இழிந்துழி. சென்று அடியில் வீழ.
முதிர்கின்ற பெருங்காதல் தழைத்து ஓங்க. எடுத்து இறுக முயங்கலோடும்.
கதிர் கொண்ட சுடர் வேலான்தனை நோக்கி.  இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்;
எதிர் கொள்ள வருகின்றவரைப் பார்த்தவுடன் தான் சக்கரவர்த்தியாயிருந்தாலும் தன்னுடையத் தேரிலிருந்து இறங்குகின்றான் தசரதன். உரோமபாதன் தசரதன் பாதத்தில் வீழ்ந்து வணங்குகின்றான். பேரன்பு கொண்டு தசரதன் அவனை வாரி எடுத்து தழுவுகின்றான். ஒரு நண்பர் தான் கார் வாங்கிவிட்டதை எனக்கு அறிவிக்க, ஒரு நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரும் போது  காருக்குள்ளிருந்தே ஹாரன் அடித்து கைக்காட்டி சென்றது தசரதன் தேரிலிருந்து இறங்கினான் என்று படித்தப் போது நினைவியில் ஆடியது. ரோமபதன் காலில் விழும்போதே அவனை வாரி தழுவி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் தசரதன் எனும் போது : கே கே எஸ் எஸ் ஆர் இராமச்சசந்திரன்குடும்ப சகிதமாக ஜெயாவின் காலில் வீழந்ததைப் புகைப்படும் எடுத்து பத்திரிகைகள்ளில் போட்ட அரசியல் கட்சிகளின் கலாசாரம் மனதிலாடியது.
மிகவும் மகிழ்ந்த உரோமபதன் தசரதனை நோக்கி
யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்.
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?’ என. மனம் மகிழா. மணித் தேர் ஏற்றி.
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்   என உரைக்கும் உரவுத் தோளான்.
உபசார வார்த்தைகளை கூறி உரோமபாதன் பெரியவர்களை உபசரிக்கும் போது முறையின் செய் வேண்டியவைகளைச் செய்து விருந்தளித்து 
செவ்வி நறுஞ் சாந்து அளித்து. தேர் வேந்தன்-
 
தனை நோக்கி. இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்திஎன. நிகழ்ந்த பரிசு
அரசர்பிரான் கழறலோடும்.
உணவு உணடபின் சந்தனமளித்தல் மரபு. அதனால்தான் இதற்கு முன் கவியில் விருந்தைக் குறிப்பிட்டு  இக்கவியில் சந்தனத்தைக் குறிப்பிடுகின்றார். பெரியவர்களுக்குச் செய்ய வேண்டிய பதினாறு வகையான உபசாரங்களாவன: 1. அர்க்கியம் : கை அலம்ப நீர் அளித்தல்.  2. பாத்யம் : பாதங்களை அலம்புவதற்கு நீர் கொடுத்தல். 3. ஆசமநீயம் : மும்முறை மந்திர நீர் அருந்துவது. 4. ஆசனம் : உட்கார ஆசனம் அளிப்பது. 5. அபிஷேகம் : நீராடுதல். 6. வஸ்திரம் : புதுத் துணி உடுத்துதல். 7. கந்தம் : சந்தனம் போன்ற மணப் பொருட்களை இடுதல். 8. புஷ்பம் : மலர் சூட்டுதல். 9. தூபம் : சாம்பிராணிப் புகை. 10. தீபம் : விளக்குக் காட்டுதல். 11. நைவேத்தியம் : அமுது படைத்தல். 12. கற்பூரம் : கற்பூர ஆரத்தி செய்தல். 13. சாமரம் : கவரி வீசுதல். 14. ஆலவட்டம் : விசிறி சமர்ப்பித்தல். 15. சத்ரம் : குடை எடுத்தல். 16. தர்ப்பணம் : கண்ணாடி காட்டுதல்)
இன்றும் கூட நான் சில திருமண நிகழ்ச்சிகளில் அல்லது ஏதோ வீட்டு விசேஷங்களில் கூட யாரேனும்ம் நெருங்கிய சொந்தங்களே கூட தன்னை சரியாக உபசரிக்கவில்லை என்று சாப்பிடாமல் பாதியிலேயே போய், அழைத்தவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குவதைப் பார்க்கின்றேன். கூட்டம் அதிகமாகயிருக்கும் போது எப்படியும் எல்லோரையும் உபசரிப்பது என்பது எவ்வளவு முயன்றாலும் முடியாமல் போய்விடுகின்றது. ரொம்பவே சகஜமாக இருக்கின்றார்களே என்று கவனிப்பில் சிறு குறைபாடு நேர்ந்தாலும், உடனே மூகமெல்லாம் சிவந்து ஒரு பெரிய முட்டைகோஸ் மாதிரி ஆகி பார்பவர்களுக்கும் வேதனையளிக்கும் என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.
தசரதன் தான் ருசியசிங்க (கலைக்கோட்டு) முனிவனை அயோத்திக்கு வரவழைத்து யாகம் செய்ய வேண்டும் எனக் கூற 
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக்
கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வு முடியோய்!எனலும். தேர் ஏறிச்
சேனையொடும் அயோத்தி சேர்ந்தான்.
பொறாமை  முதலிய  தீய  குணங்களை நீக்கிய மனத்தை   உடையவரான கலைக்கோட்டு  முனிவரை அயோத்திக்கு அழைத்து வந்து உன்னிடம் சேர்த்து விடுவேன். உயர்ந்த அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன்  கூறியதும் உடனே தயரதன் தேரேறி. சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.
மன்னவன் அகன்றதும் உரோமபாதன் ருசியசிங்க முனிவரையடைந்து சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து தனக்கு ஒரு வரமளிக்க வேண்டும் என அதற்கு முனிவன் யாது அவ்வரம் என வினவ “ தேவரீர் அயோத்தி சென்று யாகம் முடிவித்து மீண்டும் இந்நகர் மீள வேண்டும் என்றான் அவரும் தன் மனைவியான சாந்தையோடு அயோத்தியை அடைந்தார்.
எங்கள் வீடுகளில் ஊருக்குக் கிளம்பும்போதும் சரி, பண்டிகைக் காங்களிலும் சரி கட்டயாம் பரிட்சை எழுதும் போதும் பெரியவர்களுக்கு சாஸ்டாங்கமாக் நம்ஸ்காரம் செய்து விட்டு கிளம்புவது வழக்கம். என் அத்தை பிள்ளைகள் பரிட்சைக்கு போகும் போது நம்ஸ்கரித்தால் 80-85%என்று மார்க்கையும் மறக்காமல் சொல்லி ஆசிர்வதிப்பார் என் அத்திம்பேர். அன்று ஒரு வேளை கணக்குப் பரிட்சையா இருந்தால் அத்தை “ஏண்ணா. இன்னிக்கு கணக்கு பரிட்சை என்றதும் அத்திம்பேர் உடனேயே “ 95-100%என்று மாற்றி சொல்லி ஆசிர்வதிப்பார். என் தந்தையை பொருத்த வரை நன்றாக் கஷ்டப்பட்டு டித்தால் போதும். பாசாவதைப் பற்றியோ பெயிலாவதைப் பற்றியோ வருத்தப்டமாட்டார். என்னுடை இன்னொரு அத்திம்பேர் குடும்த்தில் மனிதர்கள் காலில் விழுவது என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள். என் மாமனாருக்கும், நான் நமஸ்காரம் செய்யும் போது என்ன செயவது, சொல்வது என்பது குறித்து எப்போதுமே குழப்பம்தான்.  
தூதர் முனிவன் வருகின்றான் என உரைக்கவும் தசரதன்
எழுந்தனன் பொருக்கென. இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை. ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை. வேரினோடுமே. இராமன் பிறந்து அரக்கர் தம் கொலைத்தொழிலை அழிப்பான். ஆகையால் தீவினை வீழ்ந்தன வேரோடு என்கின்றார். இரண்டு மூன்று யோசனை தூரம்(4800 கெஜம் ஒரு யோசனை தூரம். சுமாரக 4.3 கீமி. ஹரே ராம் ஹரே கிருஷ்னா நிறுவனர் சுவாமி பிரபுபாத ஒரு யோசனை என்பதை 8 மைல் என்றே குறிப்பிடுகின்றார்.) சென்ற தசரதன் பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல் முதிர்ந்த மா தவமுடை முனியை. கண்களால்.   எதிர்ந்தனன்
தனக்கு    மக்கட் பேறில்லை என்பதைப் பெருந்துயராக மலையை ஒத்த துன்பமாகக் கருதியிருந்தான் என்பதால் ‘‘மனத்துயர்ப்  பிறங்கல்’’ என்றான்.   அத்துயரம்  அடியோடு தீர்ந்தது என்பதால் “பிறங்கல் பிதிர்ந்ததுஎன்றான். எம்என்றதால் தேவியரையும்  நாட்டுமக்களையும்  உட்படுத்திக்  கூறினான்.  என்பது  கருத்து. 
பிறங்குதல்: வளர்தல்.  பிதிர்தல்:  சிதறுண்டு  போதல்.
இழிந்து போய் இரதம். ஆண்டு. இணை கொள் தாள் மலர்
விழுந்தனன். வேந்தர்தம் வேந்தன்;    மெய்ம்மையால்.
மொழிந்தனன் ஆசிகள் - முதிய   நான்மறைக்
கொழுந்து மேல் படர்தரக்  கொழுகொம்பு ஆயினான்.
முனிவனைக் கண்களால் கண்ட உடனேயே வேந்தன், தன்  ரதத்திலிருந்து கீழிறங்குகின்றார்.
அவர்களைத் தக்கபடி உபசரித்து மாநகர் வந்ததும், வசிட்டனும் ருசியசிங்க முனியும் அரச மண்டபம் அடைந்தனர்.
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும். அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும். வேத்தவை பொலிய மேவினார்.
ஐவரை   அறுவர்  ஆக்கிய’  ஐம்புலன்களையும் தத்தம் நெறியில் செல்லவிடாது  தடுத்து நிறுத்திய என்பது பொருள். ஐந்து,  ஆறு என்ற எண்ணு  பெயர்களை  அமைத்த நயம் கருதத்தக்கது. வசிட்டன் என்பதற்கு அண்மையில் இருப்பவன் என்றும் ஒரு  பொருளாம்.  அரிய  மறைகளெல்லாம் திரண்டு ஒரு வடிவம் கொண்டதெனத் திகழ்பவன் என்றது கலைக்கோட்டு   முனிவனை. வேந்து+அவை=வேத்தவை.  வேந்தவைக்கு இம்முனிவர்களால் பொலிவுண்டாயிற்று என்பது கருத்து.
’சான்றவர் சான்றவ! தருமம். மா தவம்.
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும். இழப்பு இன்றாம்அரோ.
உன ஆசியால் என் பமையா குலம் ஆட்சியில் நிலைப் பெற்று விளங்கும் என்ற தசரதன் கூற்றுக்கு முனிவன் புகழ் பெற்ற நீண்டதவத்தையுடைய வசிட்டனின் துணையும் குற்றமில்லாத நல்ல செய்கையும் உடையவன் நீ; ஆதலால் உனக்கு ஒப்பாக இவ்வுலகில் யாரிருக் முடியும்எனக் கூறி
என்றன பற்பல இனிமை    கூறி. நல்
குன்று உறழ் வரி சிலைக்    குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம்    நடத்த எண்ணியோ.
இன்று எனை அழைத்தது இங்கு?    இயம்புவாய்!என்றான். “ என்னை இங்கு அழைத்து நன்மை பயக்கும் அரி மகம்( அசுவமேத யாகம்) நடத்த மட்டும் எண்ணியோ?
வினவ தசரதன் உலப்பு இல் பல் ஆண்டு எலாம். உறுகண் இன்றியே.
தலப் பொறை ஆற்றினென்;    தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார்    அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற. இனி     நல்க வேண்டுமால்.
பல ஆண்டு.நாட்டின் தலைமையிலிருந்துவிட்டேன்.  மைந்தர் இன்மையால் எனக்குப் பிறகு இந்த நாட்டை நெறி  நின்று காக்க வல்ல மைந்தரை இனி நீங்கள் தான் கொடுத்தருள வேண்டும்.என்றான் .
சென்னையில் என் சொந்தக்காரர்ளில் ஒருவரை பார்ப்பதற்காக ஞாயிறு மாலை முன் கூட்டியே சொல்லிவிட்டுச் சென்றேன். அவர்கள் 7.00 மணிக்கு கச்சேரிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் நான் சரியாக 4.30 மணிக்கே சென்றதால், என்னை நன்கு உபசரித்தனர். எல்லாவற்றையும் பற்றிப் பேசிவிட்டு பேச்சு அவர்களின் இரு ஆண் குழந்தைகளைப் பற்றித் திரும்பியது. அவர்கள் பிள்ளைகளைப்  பார்ப்பதற்காக அமெரிக்காச் சென்று வந்ததைப்,  பற்றி  பேசிக் கொண்டிருந்தர். 
அவர்களுக்குக் கல்யாணம் ஆகி 14 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்தவர்கள். வடக்கில் வேலையையாயிருந்தவர்கள், சென்னைக்கு வரும் வழியில் நாக்பூரில் இருக்கும் என் சித்தி வீட்டிற்கு சென்று இரண்டு நாள் இருந்து விட்டு வருவதற்காக, வெள்ளிக்கிழமை போய் இறங்கினார்கள். அன்று மாலையே தேவி உபாசகர் ஸௌந்தர்ய லஹரி கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என் சித்தி. அவரிடம் இவர்கள் தங்களுக்குக் குழந்தையில்லை என்றனர். அவரும் இவர்களை சௌந்தர்ய லஹரியில் ஒரு சுலோகத்தை குறிப்பிட்டு 48 நாட்களுக்கு தினமும் 108 முறை மேடையில் பாலா திரிபுரசுந்தரியின் படத்தை வைத்து, குளித்து ஈரத்துணியுடன் பிரதட்சினம் செய்து ஓவ்வொரு தடவை சொல்லி முடித்தப் பின்னும் நமஸ்கரிக்கச் சொன்னார். அவர்களும் ஆழ்ந்த சிரத்தையுடன் செய்தனர். ஒரு வருடத்திலேயே அவர்களுக்கு அழகான ஒரு ஆண் பிள்ளை பிறந்தான். அடுத்த வருடத்திலேயே இன்னொரு ஆண் மகன். நானும் நாக்பூரில் பின்னொரு முறை என் கல்யாணத்திற்கு முன், திரு. கிருஷ்ணனை சந்தித்திருக்கின்றேன்.
முனிவனும் அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர்-ஏழும் ஒம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக. ஈண்டு!என்றான்.
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்: நிருபர்க்கு ஏந்தலும்.
தூய நல் புனல் படீஇ. சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன்.
கலப்பை- உபகரணம். வேள்விச்சாலை அமைத்தற்கு நிலம் உழுதற் பொருட்டு உழுபடை வேண்டுவதால் “ கலப்பை யாவையும் என்பதற்கு உழுபடை முதலிய எல்லாக் கருவிகளையும் என்றும் உரைக்கலாம்.
ஒருவருட காலம் நடந்த அசுவமேத யாகத்தில் ருசியசிங்கன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்த
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.
அப்போது  அந்த  வேள்வித் தீயிலிருந்து;  தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக ஒரு   பூதமானது அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே  தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.  ஏய்  எனச் சொல்வதற்குள்  (ஒரு  அளவைக் குறிப்பு) கம்பர் இச்சொல்லைப்  பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.
 பூதம் வைத்து விட்டுச் சென்றதும் ருசியசிங்க முனிவனும்
உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்என்றான்.
உனக்குரிய பட்டத்து அரசியர்களுக்கு மூத்தவள். இளையவள் என்ற
முறைப்படியே கொடுப்பாயாக. கொடுத்தால் உலகம் உய்க்கும் மக்ள் பிறப்பார்கள் என்று கூறினான்.


அன்று எல்லாவற்றிலுமே ஒரு முறையிருந்தது. அம்முறை அறத்தைடிப்படயாகக் கொண்டிருந்தது. தமிழில் பிள்ளைத்தமிழ் உருவாதற்கு காரணமாகவிருந்தவர் குழந்தை செல்வம் இல்லாத பெரியாழ்வார். கம்பனோ பிரபந்தத்தில் துளையாமாடியவன்(நீரில் மூழ்கியும் நீந்தியும் நெடுநேரம் விளையாடுதல்). ஆனால் இராமனின் குழந்தைப் பருவத்தைப் பற்றியோ அவனின் சிறுவயது விளையாடல்களையோப் பாடவேயில்லை.  

                                                                                தொடரும்

Friday, January 13, 2012

ஆணெண்ன? பெண்ணென்ன?

பெண் சிசுக் கொலை சகஜமாக உள்ள நாட்டில், அதை ஒழிப்பதற்காக அரசாங்கம் பிரபலங்களை வைத்துச் செய்த விளம்பர படத்தின் தலைப்பு  ஆணெண்ன? பெண்ணென்ன?. விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்த சமுதாயத்தில் ஆண் மக்கள் அவர்களின் உடலுழைப்பிற்காக விரும்பப்பட்டனர். பெண்களின் வாழ்வு  கல்வியின்றி அவர்கள் வெறும் பொழுது போக்குவதற்கும், பிள்ளை பெறுவதற்கும், வம்சவிருத்திக்கும் என்று பாழ்பட்டுவிட்டது.   மத தர்மங்கள்(எல்லா மதங்களும் அடக்கம்.  விகிதாச்சார அளவில் மட்டுமே ஒன்றுகொன்று சிறிய அளவில் மாறுபடுகின்றது) பல ஆணிற்குப் பாரபட்சமாகத் தான் இருந்தது. பெண்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கு கிடையாது; பெண்கள் பெற்றவர்களுக்கு நீத்தார் கடன் செய்யக் கூடாது, கல்யாணம் முடிந்தவுடன் பெண்ணிற்கு தன் பிறந்த வீட்டின் எந்த துக்கத்திலும் பங்கில்லை.
அதே போல் ஆணுக்கு இருக்கக் கூடிய பொறுப்புகளும் பெண்ணிற்கு இல்லை.
என்னுடைய சித்தூர் தாத்தா என் பாட்டியின் சாகோதரர்கள், மற்றும் சகோதரிகளின் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவர். எப்போதும் வீட்டில் சத்திரம் போன்றே ஆட்கள் வருவதும் போவதும். எங்கள் குடும்பத்திலும் ஆண் குழந்தை விரும்பப்பட்டது என்றாலும் பெண்களை வேறு படுத்தியதில்லை. அவர்களுக்கு சலுகைகளும் மிகவும் அதிகம். அந்த நாளிலிலேயே என் அத்தைக்குக் குழந்தை பிறந்திருந்த போதும் கணவனின் கொடுமையை பொறுத்துக் கொண்ட கண்ணகி போல வாழ வேண்டிய அவசியமில்லை, என்று விவாகரத்தும் வாங்கிக் கொடுத்தவர். தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு, அதன் பிறகு அந்தக் காலத்திய இண்டர்மீடியட் படிக்க வைத்து, பிறகு ஹிந்தி பிரசார சபாவில் பண்டிட் பட்டம் பெற வைத்தவர். ஹிந்தி பண்டிட் ஆக்கி கவர்ன்மெண்ட் ஸ்கூலிலும் வேலை வாங்கிக் கொடுத்து, இன்றைக்கும் பென்ஷன் வருமளவுக்கும், தன் சொந்த காலிலில் நிற்பதற்கும் வழி வகுத்துக் கொடுத்தவர். அந்த அத்தையைப் பார்த்துப் பிறகு பெண்களில் யாரும் படிப்பில்லாமல் இருக்கக்கூடாது என்று மீதி அத்தைகள் என்றில்லாமல், பேத்திகளையும், (அறுவை சிகிச்சையில் மேற்படிப்பிற்காக டில்லி AIIMS சென்ற என் சித்தப்பாவின் மனைவியும், இந்த பேத்தி வரிசையில் அடக்கம்) படிக்க வைத்தவர்.  அவருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பாரபட்சம் உண்டு என்றாலும் பெண்கள் அனைவரையும் படிக்க வைத்த இவ்விஷயத்தினால் என் கண்களில் ஒரு ஆதர்ஸ புருஷராகவே தெரிகின்றார்.

என் அப்பாவோ பெண்களுக்குத்தான் நிரம்ப முக்கியத்துவம் கொடுத்தார். முதல் இரண்டு குழந்தைகள் பெண்களாக இருந்ததும் காரணாமாகயிருக்கலாம். பெரிய அண்ணனிடம் அடுத்த அண்ணனிடமும் அவருடைய மிகுந்த ஆசைக்குக் காரணம் அவர்கள் எப்போதுமே மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அதிலும் இரண்டாவது அன்ணன் 20 வயதிலேயே வேலைக்கு சென்று விட்டவன். அப்பாவிடம் தனக்கு எதுவும் வேண்டும் என்று கேட்கக் கூடத் தெரியாதவன். நானும் என் தம்பியும்   அப்பா வேலையில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, பிறந்தவர்கள். எந்தக் கவலையுமில்லாமல் வளர்ந்தவர்கள். உண்மையிலேயே ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டிகள் மட்டுமில்லாது கடைகுட்டிகள். அப்பாவிற்கு எப்போதுமே பேத்திகள்தான் உசத்தி. பேரன்கள் எப்போதுமே  அம்மாவின் மற்றும் எங்களுடைய செல்லம்.
அப்பா இறந்த போது எல்லாருக்குமே வருத்தமிருந்தாலும் கடைசி ஆறு மாதமாக படுக்கையிலேயே கழித்ததால் அந்த நரக வேதனையிலிருந்து விடுபட்டாரே என்று மனதை தேற்றிக் கொண்டிருக்கையில் பேத்திகள் ஒரேயடியாக அழுது கொண்டிருந்தனர். அப்போது வந்திருந்த என் மருமான்  “பேத்திகள் எல்லாருமே ரொம்ப ஓவரா பீலிங் காமிக்கிறாங்க. எங்களுக்குக் கூட வேதனையிருக்கு, கண்ல  தண்ணிவரது. இவா அழரது இனிமே பிளைண்ட் சப்போர்ட் இருக்காதேன்னுதான். . தாத்தா எப்பவுமே இவாளத்தான் கண்ணை மூடிண்டு சப்போர்ட் பண்ணா:  
என் மனைவி வீட்டின் பெரிய கூட்டுக் குடும்பத்தின் தலைவர் சில வருடங்களுக்கு முன் காலமானார். அவர் தன் தந்தையார் இறந்த பின்பு தான் பட்டப் படிப்பு படித்ததையும் மறந்து, அவர்களின் பட்டுப் புடவைக் கடையில் முழம் போடுவதற்காக வந்தேன்என எந்த வருத்தமுமின்றிக் கூறுவார். ஆசாரத்தின் காரணமாக மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம் பி பி எஸ் சேர்ந்து, மருத்துவப் படிப்பைத் துறந்தவர். வாழ்வியல் ஆதாரத்தையிழந்த தூரத்து சொந்தங்களையும் ஆதரித்து, அவர்களுக்கு உறைவிடம், உணவு உடையும் கொடுத்தது மட்டுமின்றி, மிக்க கௌரவத்துடன் நடத்தி, அவர்கள் குழ்ந்தைகளையும் ஆளாக்கி, மேலே கொண்டுவந்த மஹானுபாவர். கம்ப ராமாயணப் பாடல்களை மனனமாகக் கூறுவார். தமிழின்பால் மிகுந்த பற்றும் ஆர்வமும் கொண்டவர். என்னையும் ஊக்கப்படுத்தியவர். 
என் அக்காவின் சம்பந்தி வீட்டில்  மருமகளின் தந்தை, அவள் பிறக்கும் சமயம் இறந்துவிட்டார். ஆயினும் மீதி இருந்த இரண்டு சகோதரர்கள் ஒன்றாகவே இருந்து எல்லாருடையக் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து இன்றும் ஒன்றாகவே இருந்து வருகின்றார்கள். எல்லா வீடுகளிலுமே இப்படி நல்லதே நடக்கும் என்று கூற முடியாது அதற்கு விட்டுக் கொடுக்கும் மனோபாவம், அல்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதிருப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவை வேண்டும். பெரும்பான்மையானக் குடும்பங்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றன. இப்போதோ கூட்டுக் குடும்பம், எல் ஜி கெட்டி கூட்டுப் பெருங்காயம் பொடியாய்ப் போனமாதிரி தனிக் குடித்தனமாகிவிட்டது. தன் மனைவி தன் பெண்டு தன் பிள்ளையென்று.
திருக்குறளில் ஒரு அத்தியாயம் முழுவதும் பெண் பேச்சைக் கேட்டால் உருப்படமுடியாது என்று உள்ளது. “பெண்வழிச் சேரல். காமத்தால் வருவன நேரே பகையல்லவாயினும் ஆக்கம் சிதைத்தல், அழிவைத்தருதல் எனும் தொழில்களால் பகையோடு ஒத்தலின் பகையின் பாற்படுபனவாம் எனறு, அதைப் பகைப் பகுதியின் இறுதிக்கண் கூறுகின்றார் திருவள்ளுவர்.
பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது.)
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
தன் மனையாளை அஞ்சுவான்; தான் தேடிய பொருளே யாயினும், அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இரு  முதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும்). நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். திருக்குறளில் சொல்லாத விஷயமில்லை எல்லா விஷயங்களும் சொல்லப்பட்டுவிட்டன என்பவர்கள் சொன்னவற்றை அன்றைய நாளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமேயன்றி, இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிடக் கூடாது.
தசரதனுக்கு ஏற்கெனவே ஒரு பெண் இருந்ததகவும் அவளை வளர்ப்பு மகளாக ங்க தேசத்தைச் சேர்ந்த தன் நண்பனிடன் விட்டுவிட்டதாகவும் படித்த போது தோன்றியது “ ஆணென்ன?  பெண்ணென்ன?. திருக்குறளைப் போலவே இதையும் அந்த கால கட்ட சூழலுக்குத் தான் பொருத்திப் பார்க்கவேண்டும்.
ஆண் மகன் இல்லாதவன் “புத் (தமிழில் புற்று) எனும் நரகத்திற்குப் போவான்.  அதனால்தான் ஒரு புத்திரன் வேண்டும். புற்று என்பது கொடியவினைப்பயன்(பூர்வ ஜன்மத்தைச் சார்ந்த விஷயம்). கான்ஸருக்கு தமிழில் புற்று நோய் என்று  பெயர் வைத்த காரனம்  ஒரு வேளை நரகத்தினும் கொடிய வியாதி என்பதைத்தான் குறிப்பிடுகின்றதோ? பாம்பு புற்று மற்றும் கரையான் புற்றுக்கும் சம்பந்தமில்லையோ என யோசிக்க வைக்கின்றது.   திரு. நெல்லை கண்ணனும் பெரியவர்கள் “புத்தமிழில் புற்று என்பதை நரகம் எனும் பொருளில் குறிப்பிடுவார் என்கின்றார்..
காசியப முனிவனின் புதல்வன் விபண்டகனெனும் முனிவன். அவனின் புதல்வன் ருசியசிங்கனென்று பேர் பெற்றவன். மனிதர்களையேப் பாராமல் தபோவனத்திலேயே தன் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்து விட்டதனால், நாடு நகரங்களில் வாழ்கின்ற மானுடரை விலங்குகள் என்று நினைப்பவன். சகல சாஸ்தரங்களிலும் வல்லவன். மகா தபஸ்வி. அந்த முனிவன் வந்து யாகத்தை முடித்தால் புத்திரர் பிறப்பார் என்று வசிட்டன்  தசரதனிடம் கூறுகின்றான்.
கலை மானிடத்துப் பிறந்தவனாதலால் இம்முனிவன் முகத்தில் ஒற்றைக் கலைமான் கொம்புடையவன். மான் முகமுடையவன் அல்லன். இந்த முனிவனைப் பற்றியே “ நெற்றியில் கொம்பு முளைத்தவனோ? என்ற பேச்சு நிகழ்வதாயிற்று. தமிழில் இவன் பெயர் “கலிக் கோட்டு முனிவன்
தசரதன் வசிட்டனை ருசிய சிங்கன் எங்கிருக்கின்றான் அவனை அழைத்து வரும் வழி யாது எனக் கேட்க ருசிய சிங்கன் உரோமபாத மன்னவனிடத்து(கால் பாதத்தில் மயிருள்ளவன் என்பது பொருள்) இருத்தலாலும், அம்மன்னவன் தான் வளர்த்த தசரதன் புதல்வியான சாந்தையென்ற மகளை அம்முனிவனுக்கு மணம் செய்து தந்ததனாலும் “ முனிவனை அழைத்து வரலாம் என்று சொல்லி தசரத மன்னவனுக்கு மனதில் படுமாறு ருசிய சிங்கனுடைய வரலாற்றை கூறினான் வசிட்டன்.
உரோமபாதன் ஆளும் அங்க நாட்டில் வெகு காலமாக மழையில்லாமல் வரண்டிருக்க, சிறந்த நூல்களறிவில் பொருந்திய முனிவர்களை வரவழைத்துக் கேட்க அவர்கள் “கலைக் கோட்டு முனிவரினவான் பிலிற்று மென்றார். அலைகளைக் கொண்ட கடலை ஆடையெனக் கொண்ட பூலோகத்தில் வாழ்பவரை மிருகங்கள் என என்னும் கோதுஇல் குணத்து அருந்தவனை எங்ஙனம் கொணர்வது என்று யோசிக்க
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை.
மாதர் எழுந்து. யாம் ஏகி. அருந் தவனைக்
கொணர்தும்என. வணக்கம் செய்தார். 
ஓளி பொருந்திய நெற்றியையும், கருத்த நீண்ட கண்களையும், சிவந்த அதரத்தோடு கூடிய வாயையும், முத்துப் போன்ற பற்களையும், இரட்டையாகவுள்ள மெல்லிய தனங்களையுமுடைய விலைமாதர் சிலர் எழுந்து “ நாங்கள் போய் ருசியசிங்க முனிவனை அழைத்துக் கொண்டுவருவோம் என்று சொல்லி வணக்கம் செய்தனர்..     
அவர்களின் மொழிக் கேட்ட அரசன் மகிழ்ந்து அவர்களுக்கு ஆபரணங்கள் மற்றும் சேலைகள் முதலியவற்றையும் கொடுத்து நன்மையுள்ள பல செல்வங்களையும் கொடுத்தான்.
பனிப் பிறையைப்  பழித்த நுதல். பணைத்த வேய்த் தோள்.
ஏங்கும் இடை. தடித்த முலை. இருண்ட குழல்.  
மருண்ட விழி. இலவச் செவ் வாய்ப் பூங்கொடியீர்! ஏகும்என.
தொழுது இறைஞ்சி.  இரதமிசைப் போயினாரே
அவர்களும் இரதத்தில் ஏறிப் போயினர்.  அவன் வசிக்குமிடத்திற்கு அருகில் குடியமர்ந்து அவன் தந்தையில்லாத நேரம் சென்று அவனை வணங்கினர். தன்னைப் போல் பிறரையும் நினைத்த அவன், அவர்களும் தன்னைப் போல் முனிவர்கள் என்றே எண்ணினான். அவர்கள் அவனை “தம்மிருப்பிடம் தேவரீர் வரவேணும் என்றழைக்க அவனும் அவர்களுடன் போகலானான்.
தங்கள் நெஞ்சம் போல் பிறரை மயக்கவல்ல அந்த விலைமகளிர் மிகுகின்ற மகிழ்ச்சியையும்  ஆச்சரியமடைந்த மனத்தையுடையவர்களுமாய் “ அம்ம ஈது இதுவென (முனிவனே எங்கள் ஆசிரமம் இதோ! இதோ! என) முனிவன் தொடர, பரந்த நீண்ட அங்க தேச வழியில் சென்றனர். அவன் வளநகர் வருமுன்னே
“சளசள வெனமழைத் தாரை கான்றன
குளனொடு நதிகள்தங் குறைகள் தீரவே
அரசன் உடனே காமமும். வெகுளியும். களிப்பும். கைத்த அக்காமுனி இவண் அடைந்தனன்கொல் - கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?”  உணர்ந்து சேனையுடன் வந்து முனிவனை எதிர்கொண்டு முனிவனை வணங்க, தேவர்களும் முனியின் கோபத்தால் என்ன விளைவுகள் வருமோ என்று அஞ்சிக் கொன்டிருந்த வேளையில் உரோமபாதன் அம்முனிவன் சினத்தை “ கரையெறி யாதலை கடலும் போன்றதே  என ஆற்றினான்.

பிறகு முனிஸ்ரேஷ்டனுக்கு அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி. வேறு
உரைக்குவது இலது என உவந்து. தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முகநலாள்தனை.
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன்
முனிவனுக்குத் தன் வளர்ப்பு மகளான சாந்தயை முறையாகத் திருமணம் செய்வித்தான். அதானல் வேந்து அருள்
செறிகுழல் போற்றிட. திருந்து மா தவத்து
அறிஞன். ஆண்டு இருக்குநன்; அரச!என்றனன்.
 உரோமபாதன் உவந்து அளித்த நெருங்கிய குழலையுடைய சாந்தை உபசரிக்க அதுமுதல் அங்கு தான் உள்ளான் என்றான் வசிட்டன். தசரதனுக்கு தன் எண்ணம்  நடந்துவிடும் என்ற நம்பிக்கை தந்த உற்சாகத்தின் விளைவினால் உடனேயே ருசிய சிங்கரை அழைத்து வரப் புறப்பட்டான்.
ஓவியம்:  திரு எஸ். இளையராஜா                                       தொடரும்                                                                                                                                                                              

Friday, January 6, 2012

திரைக்கதை

திரைப் படங்களில் எவ்வளவோ மாற்றம் வந்தாலும் திரைக்கதையில் அவ்வளவாக மாற்றம் வரவில்லை. தமிழ்த் திரைக் கதையில் மாறாதிருப்பது, ஒரே பாட்டில் ஏழை, இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரானாவது, 1 மாத குழந்தை 4 நிமிடத்தில் 26 வயது வாலிபனாவது போன்றவை.
மயக்கம் போட்டவர் விழித்தவுடன் “நான் இப்போ எங்கேயிருக்கேன்? என்று எக்ஸிபிஷனில் தொலைந்த குழந்தை போல் கேட்பது, குழப்பத்தில் இருப்பவருக்கு மேல் தலையில் மின் விசிறி சுழலுவது, வில்லன் சத்தமாக ஐஜி ஆபிஸ் எதிரிலேயே கமிஷனரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவது, ஓடிவரும் போலீஸ்காரர்கள் ஒன்றாகவே ஓடுவது, ஹீரோ எதிர்ப்புறமிருந்து கையை ஆட்டிக் கொண்டே ஓடிவிடுவது, நாற்பது பேர் வந்தாலும் ஒரே ஆளாக நின்று ஹீரோ சண்டை போட்டு ஜெயிப்பது, நாயகன் எவ்வளவோ கொலைகள் செய்திருந்தாலும் நீதிபதி சாட்சி யில்லையென்று கூறி விடுதலை செய்வது, காதலனும் காதலியும் மரத்தைச் சுற்றி ஆடிப்பாடி காதலிப்பது என்று தமிழ்த் திரையில் மாறாத clichés இன்றும் பல உண்டு.
திரைக் கதையில் இன்னுமொரு மிகப் பழமையான உத்தி Flash Back.  இது இன்னவாறு நடந்தது என்று, முன்னமிருந்த வாழ்க்கையைச் சொல்லி “ரவுடியாகிய நான் ஏன் ஆட்டோ டிரைவரானேன் என்ற உண்மையைக் கூறி தங்கைக்கு மெடிகல் சீட் வாங்கி குடுப்பதிலிருந்து “இப்படி என் வாயிலே விஷத்தைக் கொடுத்தால் தான் நீ குள்ளமாயிட்டே”  என்று பழிதீர்க்கும் படலத்திற்கு பிள்ளையார் சுழி போடுவதும் Flash Back மூலம்தான்.
கருப்பு வெள்ளைப் படமாயிருந்தவரை யாரும் கவலைப் படாதது Flash Backகின் கலர். கலர் பிலிம் ஆனவுடன் Flash Back கருப்பு வெள்ளை அல்லது சேஃபியா கலர் ஆனது,
நான் பார்த்த ஒரு சீனப்படத்தில் (The Road Home) வித்தியாசமாக, டைரக்டர்(Zhang Yi Mau) Flash Back கலரிலும் நிகழ்காலத்தைக் கருப்பு வெள்ளையிலும் காண்பித்து, இந்த ஒரு சிறு வித்தியாசத்தின் மூலமே திரையில் கவிதைப் படைத்தார். கிராமத்தில் ஆசிரியராக இருந்த தந்தையிறந்ததைக் கேட்டு மகன் நகரத்திலிருந்து ஊருக்கு வருகிறான். அவனுடைய பார்வையில் தாய் தந்தையரின் காதல் விரிகிறது. மருத்துவமனையிலிருந்து அடக்கம் செய்வதற்காக உடலை, பழைய முறைப்படி தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும் என்கின்றாள் தாய் கடுமையா பனிமழை பொழிந்து கொண்டிருக்கின்றது. ஊரிலோ இளைஞர்கள் யாரும் இல்லாத காரணத்தால் வேண்டாம் என எவ்வளவோ கூறியும் மறுத்து விடுகிகிறாள் தாய். அவள் சொல்லும் காரணம் அப்போதுதான் ஆவிக்கு வீட்டிற்கு வர வழித்தெரியும் என்பது மட்டும்தான். இவர்கள் வெளியூரிலிந்து ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு மருத்துவமனை இருக்கும் நகரத்திற்கு போகின்றனர். தந்தையிடம் படித்து வெளியூர்களில் இருக்கும் பழயை மாணவர்கள் எல்லாம் வந்து கொட்டும் பனிமழையிலும் ஊர் வந்து சேர்வதும், காசுக்காக பணியில் அமர்த்தப்பட்டவர்களும் காசை வேண்டாம் எனக் கூறிவிடுகின்றனர். அதை பள்ளிக்கூடத்திற்கு கொடுத்து விட்டு, தந்தை நடத்திய பள்ளியில் மகன் தந்தை தானே எழுதி தயாரித்த புத்தகத்தை வைத்து ஒரு நாள் பாடம் நடத்துகின்றான் என்று படம் முடிவடையும்.

கம்பன் இதே உத்தியைப் பயன் படுத்தி கதை சொன்னதைப் பார்ப்போம்.  ஆதிகாப்பியத்தில் நாரத முனி வால்மீகிக்கு உபதேசம் செய்ததாகக் கூறப்பட்டதாகக் கூறப்படுகின்றது. வால்மீகி காலத்தில் அரசனாக மட்டுமே அறியப் பெற்றவன் இராமன்.  கம்பன் காலத்திலோ அவன் விஷ்ணுவின் அவதாரமாகி கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன. கம்பன் இராமன் கதையை மறுபடியும் கூறும் போது அப்படியே வால்மீகியைத் தழுவிக் கூறிவிட முடியாது. கடவுளே இராமனாக அவதரித்தான் என்று கூற வேண்டியக் கட்டாயம். இதையெப்படி கூறுவது எனும் போது அவன் கையாண்ட வழி Flash Back. 
தசரதன் பகையின்றி உலகம் முழுவதையும் அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசாண்டு கொண்டிருக்கையில், தனக்குப் பின் அரச பரிபாலணம் செய்வதற்கு வாரிசில்லாமைக் குறித்து  கவலை கொண்டு தன் குல குருவை நாடிப் போகின்றான்.
அவன் அப்போதும் தனக்கு பின் அரசாளுவதற்கு வாரிசு வேண்டும் என்றோ தன் இராஜ்ஜியத்தின் பாத்தியத்தை கொடுப்பதற்காகவோ என சொல்லாமல் வசிட்டனிடம்
'அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.
60 ஆயிரம் வருடங்கள் எந்த விதமான குறையுமில்லாமல் அரசாண்டும், என் காலத்திற்கு பிறகு இந்த இராஜ்ஜியத்தை ஆளுவதற்கு சந்ததியில்லையே என்ற குறை என் உள்ளத்தில் உண்டாயிருக்கின்றது என வசிட்டனிடம் கூறிய தசரதன், மேலும்,
அருந்தவ முனிவரும் அந்தணாளரும்
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உஅழ்க்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும். என் அகத்தைஎன்றான்.
தனக்கு சந்ததியில்லாமையால் “ என் பின் வையகம் மறுகுவது என்பதோர் மறுக்கம் உண்டு எனப் பொதுவாக கூறிய அரசன், புதல்வனை விரும்புவது முனிவர் முதலியோரை காத்தல் பொருட்டேயன்றி தன் நன்மையைக் கருதியன்று என அவனுடைய குறையை வற்புறுத்த இங்கு விவரித்துக் கூறுகின்றான்.
முரசறை செழுங்கடை முத்த மாமுடி
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்
விரைசெறி கமலமென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன் மன்த்தில் எண்ணினான்.

அலைகடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை
மலை என விழிதுயில் வளரும் மாமுகில்
கொலைதொழில் அரக்கர்தங் கொடுமை தீர்ப்பென்” என்று
உலைவுறும் அமரர்க்கு உரைத்த வாய்மையை.
தசரதன் தன் குறையைக் கூறவும் பிரம்மனின் மகனான் வசிட்டன் பாற்கடலில் துயிலும் திருமால், கொலைத்தொழில் அரக்கர் தம் கொடுமை தீர்ப்பேனென்று கூறியதை மனதில் எண்ணினான். அந்த பிளாஷ்பேக் சம்பவத்தை அடுத்த  22 கவிகளால் விவரித்துக் கூறுகின்றார்.
தேவர்கள் சிவனிடத்து தங்கள் குறைகளைச் சொல்ல, அவர்களுடன் சேர்ந்து சிவனும் பிரம்மாவிடம் செல்ல, பிரம்மா தன்னாலியன்ற உதவிகளைச் செய்வதாக கூறினார்.
இருபது கரம் தலை ஈர்-ஐந்து என்னும் அத்
திருஇலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால்
கரு முகில் என வளர் கருணைஅம் கடல்
பொருது இடர் தணிக்கின் உண்டு; எனும் புணர்ப்பினால்
இராவனை ஒழிப்பது தம்மால் முடியாத காரியம்; திருமால் கருணையால் அவ்வரக்கனை ஒழித்தால்தான் தேவர்களுக்கும் மானுடருக்கும் துயர் தீரும் என்று பிரம்மனும் சிவனும் மற்றைய தேவர்களும் ஆலோசித்தனர்.
இவ்விடர் திருமாலால்தான் தீருமென்றெண்ணி திருமாலை தியானிக்கத் திருமாலும் தோன்றினார். தோன்றிய மஹாவிஷ்னுவிடம், தேவர்கள்
ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழ்ந்தன; திருவின் நாயக!-
உய் திறம் இல்லைஎன்று உயிர்ப்பு வீங்கினார்.
விண்ணுலகத்தோரும் ண்ணுலகத்தோரும் செய்கின்ற நற்கருமங்களுக்கெல்லாம் அரக்கர் பேரிடையூறாகயிருக்கின்றனர். ஆதலால், நீ அவர்களை ஒழிக்காவிட்டால் எங்களால் பிழைத்திருக்க முடியாதுஎன்று தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அனுசர் – பின்பிறந்தவர்; அனுஜ் –எனும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.
எனறனர். இடர் உழந்து. இறைஞ்சி ஏத்தலும்.
மன்றல் அம் துளவினான். ‘வருந்தல்; வஞ்சகர்-
தம் தலி அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீ கேண்மஎன. உரைத்தல் மேயினான்.

வருந்தாதீர். பூமியில் மானுடனாகத் தோன்றி இராவனுடைய சிரங்களைத் துண்டித்து உங்கள் கவலைத் தீர்ப்பேன்எனக் கூறி மேலும்
வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்.
காணினும், வரையினும் கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று என
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான்
தேச்வர்கள் எல்லோரும் குரங்குகளாக் காடுகளிலும், மலைகளிலும் நறுமணமுள்ள சோலைகளிலும் கூட்டங்களுலனே அவதரித்திடுவீர்என அருளின் ஆழியான் அருளினான்.
ஒரு சமுயம் சிவபெருமானோடு பார்வதி தேவி இனபமனுபவித்துக் கொண்டிருந்தால். “சிவபூஜையில் கரடி புகுவதைப்போல் தேவர்கள் நுழைந்து அவர்களைத் தடுத்துவிட்டனர்; தனக்கு புத்திரன் தோன்றுமுன் தடுத்ததனால் “இனி மனைவியரிடத்து நுமக்கு சந்ததி தோன்றாதொழிக என பார்வதி தேவி தேவர்களை சபித்தாள். அதனால் தேவர்களுக்கு தமது மனைவியரிடத்து சந்ததியுண்டாவாகையால் இராவணன் நந்தி தேவரையிகழ, நந்திதேவன் முக விகாரமுள்ள சாதிகளால் அரக்கர்நாசம் நேரிடுமென்று சாபம் கொடுத்தனாலும், தேவர்கள் வானராயினர் என்பது புராணம். அவதரித்தல் மேல்நிலையிலிருந்து கிழே வருதல். வா நரம் மனிதரினும் (நரன்) சிறிது வேறுபட்ட வடிவமுடையது என்பது பற்றிய பெயர்.
நமது சங்குசக்ரங்களும் திருவனந்தாழ்வானும்(ஆதிசேஷன்) எனக்கு தம்பியராய் நாம் அயோத்தியில் தரத சக்கரர்த்திக்கு புத்திரனாய் பிறந்து அரக்கரது வாழ்வையும்  நமது கணையால் ஒழிப்போம்” என பெருமாள் அருளினார்.
இதையெல்லாம் மறுபடி மனதிலோட்டிப்பார்த்த வசிட்டன் தசரதனைப் பார்த்து
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என. முனி இதயத்து எண்ணி
மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி.
தீது அற முயலின். ஐய! சிந்தைநோய் தீரும்’ என்றான்.


இந்த Flash Back கலரா அல்லது கருப்பு வெள்ளையா என்பதை
கருமுகில் தாமரைக் காடு பூத்து. நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய. ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல் கழலுன்மேல் வந்து தோன்றினான் என மஹாவிஷ்ணு வருவதை கூறுகின்றார் கவி. இப்பாடலை படித்து அவரவர் ஆசைக்கேற்ப தீர்மானிக்கலாம்.
மன்னவன் அது கேட்டு யாகத்திற்கு என்ன செய்யவேண்டும் என வினவ ருசியசிங்கன் முனிவனை அழைத்து வந்து  புத்திர காமேஷ்டி யாகம் செய்விக்க வேண்டும் என கூறுகின்றான்.
                                                                      தொடரும்