என்னுடைய சிறுவயதில் சிறு நகரங்களில் மட்டுமே வாழ்ந்திருக்கின்றேன்.
கிராமம் என்றும் சொல்ல முடியாது பெரிய டவுன் என்றும் சொல்ல முடியாது. நான் இருந்த ஊர்களில் மாவட்ட தலைநகரங்கள் என்றால்
அது திருச்சி, வேலூர் மற்றும் கடலூர்தான். மீதி எல்லாமே தாலுக்கா ஹெட்குவார்ட்டர்ஸ்.
பெரும் கோவில் சார்ந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு நடக்கும் தீபப் பெருவிழா, நவராத்திரி
திருவிழா, திரூஊடல் மற்றும் அருணகிரி நாதர் திருவிழா என்று எல்லா விழாக்களும் பெரும்பான்மையாக
பத்து நாட்களுக்கு குறையாமல் நடக்கும். அச்சமயம் பட்டி மன்றம், பெரிய இசை கலைஞர்களின்
இசை மற்றும் பாட்டு கச்சேரிகள், புலவர் கீரன், திரு முருக கிருபானந்த வாரியார், பால
கிருஷ்ண சாஸ்திரிகள் போன்றவர்களின் உபன்யாசங்களும் கோவில் மண்டபத்தில் நடை பெறும்.

கூத்து நடைபெரும் இடம் கோவில் வெளித்திட்டாகவோ அறுவடை முடிந்த நிலமாகவோ இருக்கும்.. நீளமான மூங்கில் கழிகள் இரண்டு நட்டு அதில் ஆயிரம் வாட்ஸ் பல்பு லைட்டுகளைக் கட்டுவார்கள். இதை சுற்றி அரை வட்டமாக பார்வையாளர்கள் உட்காருவார்கள். கூத்திற்கு இன்றியமையாதது பின்பாட்டுக் காரர்கள். ஆண்களே பெண்களுக்கும் பின் பாட்டு பாடுவர். அவ்வபோது ராகம் போட்டு வசனங்களையும் கூறுவர். வசனங்கள் பல சமயம் பேச்சு வழக்கில் தான் இருக்கும். பாடல்கள் நாடகத் தமிழில் இருக்கும். அருமையாக கதை நிகழ்வுக்கு ஏற்ப அமைந்திருக்கும் எல்லா வரிகளிலும் மிகையுணர்ச்சி அதிகமாகவிருக்கும். இசைக்கும் கருவிகள் என்றால் பெரும்பாலும் ஆர்மோனியம் மத்தளம், ஜால்ரா ஆகியவைதான்.

இந்தோனேஷியா ”பாலித்” தீவில் தினம் பல்வேறு இடங்களில் அவர்களுடைய
நடனம் நடைபெறுகின்றது. இந்த நாட்டிய நடனங்கள் எல்லாமே நம் ஊரில் உள்ள கூத்துடன் நெருங்கியத்
தொடர்புடையவையாகாவே எனக்கு பட்டது. என் மனைவியோ “ நம்ம ஊர் தெருக்கூத்தே தான் இது. நம்ம ஊரிலே இதையெல்லாம் காசு கொடுத்து பார்ப்போமா.
இங்கு வந்து இவ்வளவு காசை தண்டம் பண்ணி பாக்கறோம்” என்று அலுத்துக் கொண்டாள். நம்மூரில்
சினிமா மற்றும் டீவியின் தாக்கத்தால் தேங்கி அழிந்து போகும் நிலைக்கு வந்துவிட்டது
வேதனையளிக்கின்றது. மிகவும் நுணுக்கமான
இந்த கலை.யில் இன்றைக்குக் கூட கூத்து “ வாத்தியாரை” வெற்றிலை
வாழைப் பழம் மற்றும் தேங்காய் வைத்து அழைத்து நிச்சயம் பண்ணும்
வழக்கம் இருக்கின்றது. அதை பழமை என்று ஒதுக்கிவிடும் இளைஞர்களையும், அவர்களை மரியாதை
இல்லாமல் நடத்தும் அவலத்தையும் நம் பாராம்பரியத்தை புரிந்து கொள்வதிலோ அல்லது பராமரிப்பதிலோ
சிறிதும் அக்கரையில்லாத சமூக மாற்றத்திற்கும் என்ன காரணம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
அரசாங்கம் இந்த கலைகளை தினமும் நடக்கும் நிகழ் கலையாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையாகவும் அதே சமயம் வருவாயையும் பெருக்கும் விதமாகவும்
நடத்தலாம். ஞானமுள்ள சிலர் இருக்கும் போதே அவரகளுக்கும் நிரந்தர மற்றும் நல்ல வருமானம்
உள்ள தொழிலாகவும் இதை கட்டாயம் மாற்ற முடியும்.

”பாலியில்” நடைபெறும்
நாட்டித்தில் ஒன்று “ரங்குடா” எனும் பாதி நாய் பாதி சிங்கம் போன்ற உருவத்துடன்
இருக்கும், குறும்புடன் கூடிய ஆனால் நல்லதை மட்டுமே மனிதர்களுக்கு நினைக்கும் புராண
விலங்கிற்கும் ”ப்ரோங்” எனப்படும் விதவை சூனியக்காரிக்கும் நடைபெறும் போராட்டமாகும்.
கடைசியில் யமனின் உதவியுடன் ரங்குடா போராட்டத்தில் வென்று பரோங்கை துரத்திவிடும். இதில்
ரங்குடா பாத்திரத்தின் அந்த உருவத்தை இருவர் இயக்குவர்.

தமிழகத்தில் பழங்கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்ச்சியாக
“சங்கமம்” என்ற நிகழ்சி ”கனிமொழியின்” முயற்ச்சியால் கடந்த திமுக ஆட்சியாளர்களின்
முழு ஆதரவுடன், பொங்கல் விடுமுறை சமயத்தில் நடைப்பெற்றது. பரவலாக வரவேற்பும் பெற்றது.
ஜெயலலிதாவின் காழ்ப்புனர்ச்சிகாரனமாக ”சங்கமம்” அஸ்தமித்தது. சங்கமத்தில் ஆயிரம் குறைகள்
இருந்தாலும் குறைகளை களைந்து, வளர்த்தெடுப்பதை விடுத்து, ஒரேயடியாக ஒழித்துவிட்ட ஜெயாவின்
அராஜகப் போக்கை சங்கம் வளர்த்த தமிழகம் மட்டுமின்றி, நிகழ்கலைகளையே மூச்சாகக் கொண்டு
வாழும் கலைஞர்களும், ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். அவர்களின் சாபம்
ஒரு போதும் வீணாவதில்லை.
மாணவர்களை மார்க் வாங்கும் மெஷின்களாக மாற்றும் பள்ளிகள்,
அவர்களுக்கு நுண்கலைகளில் ஏன் பயிற்சியளிப்பதில்லை?. நம் பாரம்பரிய சங்கீதத்தை, இசையை ரசிக்கும் ரசனையை ஏன் அளிப்பதில்லை.? நாடகத்தை அதன்
பல்வேறு கூறுகளை ஏன் அறிமுகம் செய்து அவர்களின் ரசனை தளத்தை உயர்த்துவதில்லை?. சினிமாவை
இரசிப்பதையும் கூட இன்றைய சூழ்நிலையில் இருக்கும் தொழில் நுட்பம் காரணமாக பரவலாக அறிமுகப்படுத்த
முடியும் என்ற போதும் ஏன் செய்வதில்லை.? மாணவர்களை பணம் காய்ச்சி மரமாக கல்விச் சாலை
நடத்துபவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் நினைப்பதுமே காரணம் என்றே எனக்குத் தோன்றுகின்றது.
. வெளிநாடுகளில் அதுவும் சர்வதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மிகவும் சுதந்திரமாகவும்
கல்வியை விரும்பி கற்பவர்களாகவும், அவர்களுக்கு இசையிலும் நாடகத்திலும் ரசனையை சிறு
வயது முதற்கொன்டு வளர்ப்பதைப் பார்கின்றேன்.
ஏன்? நான் ”டேனிஷ் மிழனில்” படிக்கும் போது நெசவிலிருந்து,
நாடகம், ஓவியம் மற்றும் சங்கீதம் (அதுவும் கர்நாடக சங்கீதம்) மட்டுமின்றி நீதிபோதனை
வகுப்புகளும் இருந்தது, எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம் பெரிய மைதானம் இருந்தது. கிரிக்கெட்,
வாலிபால் புட்பால் போன்ற விளையாட்டுகள் விளையாட எல்லா வசதிகளும் பள்ளியில் இருந்தது.
வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் எல்லா வகுப்பு மாணவர்களும் விளையாட வழியும் இருந்தது.
ஏன் எதற்காக இது மாறியது?. இன்றைக்கு இது தான் நியதி., எனக்கு
பிடிக்கின்றதோ இல்லையோ நான் இந்த வேடத்தைதான் அணிய வேண்டும் என்று தள்ள படுகின்றனர்.
எல்லோருமே யாராலோ மனமாற்றத்திற்கு உள்ளாகி நம் சுய புத்தியை தொலைத்து, வாழ்க்கையையும்
தொலைக்கின்றோம்.
“அரசரில் பிறந்து அரசரில் வளர்ந்து பின் அரசரில் புகுந்து
பேரரசியானவள்” கைகேயி.. அவள் வெறும் ஒரு வேலைக்காரி சொன்னதால் மட்டும் மனம் மாறிவிடக்கூடியவளா?
கூனியும் லேசுபட்டவள் இல்லை. அவளுடைய வாதங்களை, அவள் சொன்ன வரிசையில் வைத்துப் பார்த்தால்
ஒரு பெரிய மனவியல் நிபுணராகவே காட்சியளிக்கின்றாள். பெரும்பாலும் வீட்டில் நடக்கும்
விஷயங்கள் மொத்தம் வெளியே போவதும் அதே போல் சில வீடுகளில் வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகள்
அல்லது வயதானவர்களுக்கு உதவிக்கு இருப்பவர்கள் ஆட்டுவிக்கின்றபடி ஆடும் எஜமானர்களும்
உண்டு. சசிகலா ஜெயலலிதாவை ஆட்டுவிப்பது போல. சிலவருடங்களுக்கு முன்னால் பெங்களூரில்
வசித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த ஓவியரின் மனைவி தேவிகா ராணி அவர்களின்
பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் அவள் வீட்டில் வசித்து வந்த உதவியாளர் ஒருவரினால்
சுருட்டப்படது. ஆயினும் மிக பெரிய மனிதர்கள் அந்த டிரஸ்டில் இருந்த்தால் மீட்கப்பட்டது.
கூனி கைகேயிடம் முதலில் கேடு காலம் வரும் போது அதை அறியாமல்
உறங்கி கொண்டிருக்கின்றாயே என்றாள்; அவள் கேடு காலம் என்றது இராமனுக்கு பட்டாபிஷேகம்
என்பதையே. கைகேயியோ “ இராமனை பெற்ற எனக்கு என்ன தீங்கு வர முடியும்”? என்றவுடன் இராமனை
குறை கூறி காரியம் நடவாது என்று முடிவுக்கு வந்தாள்.

தசரதன் ஏன் பரதனை தூரதேசத்திற்கு அனுப்பினான் என்பது எனக்கு
இன்று புரிந்தது என்று தசரதனை சூழ்ச்சிக்காரனாக சித்தரித்தாள். அதுவும் எடு படவில்லை.
பெற்ற பிள்ளை பாசத்தை தூண்டுகின்றாள்; ”நீ
பரதனை பெற்று என்ன பயன்? அசராட்சியில்லாமல் அவன் வாழ்வதைக் காட்டிலும் இறந்து போகலாம்”
என்று. கைகேயி அதற்கும் மசியாமல் “மயில் முறை குல முறைமையைப் பற்றி பேச அரம்பித்து
விடுகின்றாள்.
மூத்தவனுக்கு பட்டம் என்பது முறை. முறை தவறினால் பழி நேரிடும்.
மூத்தவன் என்பதை மந்தரை திருத்தி, வயதில் மூத்தவர் என்றால் தசரதன் உயிரோடு இருக்கும்
போதே இளையவனான் இராமனுக்கு முடிசூட்டும் போது பரதனுக்கு முடிசூட்டுவதில் என்ன முறை
திரும்பிவிடும்? என்று கேட்கவும் கைகேயின் மனம் தடுமாறியது.
கூனி சளைக்காமல் சக்களத்தி சண்டையை தூண்ட முயற்சிக்கின்றாள். ”கௌசல்யைக்கு வாழ்வு வரும் நீ
தாழ்ந்து விடுவாய். உன்னை அண்டும் உன் உறவினர்களுக்குக் கூட நீ ஒன்றும் செய்ய முடியாது.
நீ கோசலையிடம் சென்று இரந்து வாங்க வேண்டும்” என்கின்றால். இதிலும் அவள் மனம் மாறவில்லை.
கடைசியாக பிரம்மாஸ்திரத்தை ஏவுகின்றாள். உன் தந்தைக்கும்
இராமனின் மாமானாரான ஜனகனுக்கும் ஏற்கெனெவே பகையுண்டு. தசரதன் உன் கணவன் என்பதினால்
ஜனகன் பேசாமலிருந்தான். இராமன் அரசனாகிவிட்டல் அவன் உன் தந்தைக்கு உதவமாட்டான். உன்
தந்தை மற்றும் குடும்பத்தின் கதி அதோ கதி” என்றவுடன் கைகேயின் மனதில் மாற்றம் வருகின்றது...
போரிலே ஈடுபட்டு லாவகமாக தசரதனின் உயிரைக் காப்பாற்றக்
கூடிய அறிவாளியானவளான கைகேயி இப்படி பட்டவர்தனமாக திரிக்கப்பட்ட வாதத்திலா மனம் மாறுவாள்.
பிறந்த வீட்டிலுள்ளவர்களுக்கு புகுந்த வீட்டினரால் தீங்கு வரும் எனும் போது எந்த பெண்ணும்
அதை எப்பாடுபட்டாவது தடுக்க முயல்வது முறை. அதிலும், சாதராண இடத்தில் பிறந்து, உயர்ந்த
இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண்களுக்கு ஒரு வகையான தாழ்மையுணர்ச்சி இருக்கும். அதை யாரேனும்
சுட்டிக் காட்டிவிட்டால், காலம் கனிந்தவுடன், புலி போல் பாய்ந்துவிடுவார்கள்
கேகேயன் ஒரு சிற்றரசன் மட்டுமே. ஆனால் தசரதன் சக்கரவர்த்தி.(இதிலும் கூட வேறு சில புராணக்கதைகளின் படி தசரதன் காசியருகில் இருந்த ஒரு சிறு தேசத்திற்கு அதிபதி. அவன் கோசலையிடம் மனம் பறிகொடுத்து, அவளை மன்முடித்து, ஆண்வாரிசில்லாத கோசல தேசத்தையடைந்து அதனால் தான் அவன் சக்கரவர்த்தியானான்.) கேகேயனை விட ஜனகனே கூட பெரிய அரசன் தான். அதைத்தான் மிக அழகாக சரியான நேரத்தில் கூனி ஞாபகப்படுத்தினாள்.
கைகேயி கூனியினால் மனம் திரிந்து செய்த தவறு மன்னிக்கப்பட வேண்டியது. இவர்கள் பொதுவாக தீங்கிழைப்பவர்கள் அல்லர் என்றாலும்
சூழிநிலை காரணமாக தீங்கிழைத்துவிடுகின்றனர். இதைச் சுட்டி காட்ட
வேண்டிய பொறுப்பும் கவிஞனுக்கு இருக்கின்றது. கூனியை கூற “”கொடுமனக் கூனி” ”மூன்றுலகினுக்கும்
ஒர் இறுதி மூட்டுவாள்” ”காலக் கோளனாள்” “வெவ்விடம் அனையவள்” ”சூழ்ந்த தீவனை” ”வேதனைக்
கூனி” ”தீய மந்தரை” என்று பல்வாறாக அர்ச்சனை செய்கின்றான்.
அவனே கைகேயியை குறிக்கும் போதோ ”தெய்வக்கற்பினாள்” ”ஆழந்த
பேரன்பினாள்” கேகேயர்கிறை திருமகள்” ”தேவி” என்ற அடைமொழிகள் கொடுக்கின்றான். அவன் அவளை
அறிமுகபடுத்தும் போது அவள் உறங்கி கொண்டிருக்கின்றாள். சாதராணமாக விழித்திருக்கும்
போது நம் அறிவின் துணை கொண்டு நாம் தீய சிந்தனைகளை அடக்கி, நம்
முகம் எனும் கண்ணாடி அச்சிந்தனையை காட் டாமல் மறைக்கமுடியும் ஆனால் உறங்கும்
போது அவ்வாறு செய்யவியலாது. எப்பேற்பட்ட உலக அழகியாகவேயிருந்தாலும் உறங்கும் போது அழகுடன்
விளங்க மாட்டார்கள்.
இந்நிலைக்கு மாறக யாரவது உறங்கும் நிலையில் அழகாகாத் தோன்றினால்
அவர் மிகசிறந்த எண்ணமும் பண்பும் உடையவர் என்பதேயாகும். குழந்தைகள் உறங்கும் போதும்
அதே பொலிவுடன் விளங்குவதையும் பார்க்கலாம்.
கம்பன் அவளை அறிமுகபடுத்தும் போதே
நாற்கடல் படுமணி நளினம் பூத்தது ஓர்பார்கடல் படுதிரை பவளவல்லியே
போர்க்கை கண் அருளி – அருள் பொழியப் பொங்கு அணை
மேற்கடந்தாள் தனி விரைவில் எய்தினாள்
கடைக் கண்களில் அருள் வழிந்து ஓடியது அவள் உறங்கும் போதே
என்றால், அவள் விழித்திருக்கும் போது எவ்வளவு அருளுடன் விளங்குவாள் என்பதை கவி நம்
கற்பனைக்கே விட்டு விடுகின்றான். தனக்கு சம்பந்தமேயில்லாதவர்களிடத்தும் அருளுடையவளாக
கைகேயி இருப்பதால் தான் “அளி” என்ற சொல்லை கம்பன் கூறுகின்றான். அப்படிப் பட்டவளே மனம்திரிந்து
கல்னெஞ்சத்தவளாகி தீங்கிழைத்தாலும் அதற்குக் காரணம் “அரக்கர்தம் பாவமும் நல் அந்தணர்
தம் தவமும்”. அவள் மனம் திரிந்தது என்கின்றார் கவி. அறமும் பாவமும் எப்போதும் ஒன்றாக சேராதவை. அவையே ஒன்றாக சேரும் போது கைகேயினால் என்ன செய்யமுடியும்.?
(இது அ.ச ஞா 1957 ஆம் ஆண்டில் எழுதிய கேகேயன் மடந்தை என்ற கட்டுரையை அடியொட்டியது.)
இதே அ ச ஞா அவர்களே 40 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மரபு
முறையை விட்டு வாசிக்கும் போது கைகேயி முற்றிலும் குற்றமற்றவளாக தோன்றுகின்றாள் என்கின்றார்,
“நாடக மயில்” என்று அவர் எழுதிய கட்டுரையில். பின்வருவன அக்கட்டுரையை அடியொட்டி எழுதப்
பட்டது.
கம்பன் இரு பெண்களை மயிலுக்கு
ஒப்பிடுகின்றான். ஒன்று மலைகுல மயில். இதை மலைசூழந்த கிட்கிந்தையில் வாழும் வாலியின்
மனைவிக்கு ஒப்பிடுவது சாலப் பொருத்தமே. இன்னொன்று “ நாடக மயில்”. இதை உவமையாக கைகேயிக்கு
கூறுகின்றான். மந்தரை போன பின்னும் தசரதன் நள்ளிரவு வருவதற்குமிடையில் அவள் தரையில்
கிடந்ததை
நவ்வி வீழ்ந்தென, நாடக
மயில்
துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை.
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை.

அதே போல் கைகேயியை பெண் மானாக உருவகிப்பதும் நோக்கத் தக்கது. மான் இயல்பாகவே
மருண்ட பார்வையும் குறிக்கோள் அற்ற முறையில் இங்கும் அங்கும் ஒடித்திரியும் இயல்புடையது.
மருண்ட பார்வை அச்சத்தின் காரணமாகவே வருகின்றது,. இன்னது செய்வது என்ற முடிவுக்கு உறுதியுடன் வர முடியாமையால் இங்கும்
அங்குமாக ஓடுகின்ற இயல்பைப் பெற்றுள்ளது. இதே குணாதிசயத்தை கைகேயிற்கு
ஏற்றிப் பார்க்கலாம்.
இதுவரை கைகேயியின் வாழ்க்கை தெளிந்த அமைதியான நீரோட்டம் போல் சென்று கொண்டிருந்தது.
மன்னர் மன்னனாகிய தசரதன் கணவன். புவிக்கெல்லாம் வேதமே யான இராமன் மைந்தன். அவள் வாழ்க்கையில்
மருட்சிக்கேயிடமில்லை. ஆனால் இப்போது ஒரு தலை கீழ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கணவனின்
விருப்பதிற்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பிரியமான மைந்தன் இராமனைக்
காட்டுக்கு அனுப்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இவை இரண்டையும் செய்வது சரியா தவறா
என்ற எண்ணம் மனப்போராட்டமாக அமைந்து விடுகின்றது. இதுவே, உறங்கும் போது கூட கடைக்கண்ணில்
அருள் வழியும் அதே கண்களில் மருட்சி தோன்ற காரணம். தான் மேற்கொண்ட முடிவினால் யார்
யாருக்கு என்ன விளையுமோ என்ற அச்சம் காரணமாக அவள் கண்ணில் மருட்சி தோன்றலாயிற்று. அவளுடைய
மனப்போராட்டத்தையும் கண்ணிலுள்ள மருட்சியையும் விரிவாக கூறாமல் ”நவ்வி வீழ்ந்தென” என்ற
ஒரு சொல் மூலமாக கவிஞன் கூறிவிடுகின்றான்.

அப்படியானால் நான்காம்
அடியிலுள்ள மூதேவி என்று அவளைக் குறிப்பதேன்? அவளுடைய உள்ளகிடக்கை தெரிந்தவுடன் கவி
கோபம் கொண்டு அவ்விதம் அவளை மூதேவி என்று ஏசினான் என்றே கேகேயன் மடந்தை கட்டுரையில்
அ ச ஞா குறிப்பிட்ருந்தார். அவரே 40 ஆண்டுகள் கழித்து வேறு நோக்கில் பார்க்கும் போது
அது கைகேயியைக் குறித்த சொல் அல்ல அது அவள் ஏற்றுக் கொண்ட வேடத்தைக் குறித்தது என்கின்றார்.
மானும் மயிலும் வேடத்தை மேற் கொண்ட வேடதாரியையும், மூதேவி என்பது ஏற்றுக் கொண்ட வேடத்தையும்
குறிக்கும்.
இவ்வாறு பொருள் கொள்ள இப்பாடல் இடமளிக்குமா என்றால், வரங்கள் கேட்டு முடிந்த
பின்னர் எந்த நிலையிலும் அவள் தன் மனதை மாற்றிக் கொள்ள தாயாரகவில்லை என்ற பகுதியை விளக்கவேண்டியுள்ளது.
அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய
அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ, இன்று, இவ் உலகங்கள், இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே?
கைகேயி தனக்கு இயல்பாக உள்ள அருளை துறந்து விட்டாள். அதற்கு காரணம் அரக்கர்
பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் என்ற இரண்டு மட்டுமே அவள் இந்த வேடத்தைப் புனைய காரணமாயின
என்கின்றான். வேடம் போட்டுக் கொண்ட பின் அவள் பேசிய சொற்களுக்கு அவளை குறை சொல்லி பயனில்லை.
”நல்லருள் துறந்தனள் தூ மொழி மடமான்”. என்று நம்மை எச்சரிக்கின்றான்.துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ, இன்று, இவ் உலகங்கள், இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே?
அவசரப்பட்டு நல்லருள் துறந்தனள் என்ற முடிவுக்கு வர வேண்டாம்
என்று. இரண்டு வரங்கள் வேண்டும் என்றதும் ஒரு வரத்தினால் பரதன் நாடாள்வதும் மற்றொன்றினால்
சீதையின் கேள்வன் காடாள்வதும் மற்ற அரசர்கள், தன் பாதம் பணியும் தசரத சக்கரவர்த்தி இவள் காலில் விழுந்து கெஞ்சும்
போதும் விட்டு கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பவளின் பேச்சு எப்படி தூமொழியாகும்? இதன்
விளைவுகள் தசரதன் உயிரிழந்தான்; இவளும் விதவையானாள்; இராமன் காட்டிற்கு சென்றான்;.பரதனும்
முடிசூட்டிக் கொள்ளவில்லை; இவளுக்கோ தீராத பழி நேர்ந்தது இவள் பேசிய சொற்களால் எனும்
போது அவை எப்படி தூ மொழியாகும்? அவை கடுஞ்சொற்கள்தான் என்றால் கவிஞன் ஏன் தூமொழி என்று
கூறவேண்டும்?
தசரதன் கைகேயியை மணக்க கேகேய மன்னனிடம் கேட்கும் போது அவன் தன் மகளின் மகன்
பட்டத்திற்கு வரமுடியாது என்பதனால் மறுத்துவிடுகின்றான். தசரதன் கைகேயிற்கு பிறக்கும்
மகனுக்கே அரசு முடி சூட்டுவேன் என்று திருமணவாக்குறுதியாக (கன்யா சுல்கம்) அளித்த பின்
தான் திருமணம் புரிந்து கொண்டான். ஆனால் இராமன் பிறந்த தினம் முதற் கொண்டு அதை அடியோடு
மறந்துவிடுகின்றான். கம்பன் இதை வெளிப்படையாக பேசவில்லை
என்றாலும் ஒரேயடியாக இதை மறைக்கவுமில்லை. கைகேயி வேண்டுமென்றால் கன்யா சுல்கத்தை நினைவுருத்தியிருக்கலாம்.
அப்படி செய்தால் இவளுடைய பழி நீங்கும்; ஆனால் தசரதன் பொய்யனாகிவிடுவான். தசரதனே கூட
” உன் கழுத்தின் நாண், உன மகற்கு காப்பின் நாண் ஆம்” எனும் மாபெரும் சாபமிட்டதையுயும்
கூட பொருட்படுத்தாமல் மனதை கல்லாக்கி கொண்டு,
தான் விதவை ஆவதையும் கூட பொருட்படுத்தாமல்.தன் மகனே தன்னை வெறுத்தாலும் கலங்கிடாமல்
தான் ஏற்று கொண்ட வேடத்தை கன் கச்சிதமாக முடிப்பதைத்தான் “ நாடக மயில்” என்ற அடை மொழியின்
மூலம் கூறுகின்றான் கவிஞன். கன்யா சுல்கத்தை பற்றி யார் யாருக்குத் தெரிய வேண்டுமோ
அவர்களுக்கு மட்டும் புரியும் படி கூறிவிட்டு வெளிப்படையாக கம்பன் கூறவில்லை. மயில்
முறை குல உரிமை என்றால் தசரதன் 14 பாடல்களில் இராமனை வேண்டி வற்புறுத்த அவசியமேயில்லை.
அது அவனுடைய உரிமையும் கூட.
இராமன் தாயார் கொசல்யையிடம் விடைப் பெற்றுக் கொள்ள செல்லும் போது
சிறந்த
தம்பி திருவுற எந்தையைமறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? ”எந்தந்தையை மறந்தும் பொய்யிலனாக்கி” என்று சொற்றொடர் கட்டாயம் இந்த கன்யா சுல்கத்தைதான் குறிப்பிடுகின்றது” என்று ஐயுருவதற்கு வழிவகுக்கின்றது.
பரதன் ராமனை காட்டில் சந்திக்கும் போது இந்த இராஜ்ஜியம் உனது நீ வந்து ஆள வேண்டும்
என்று பல பாடல்களில் வற்புறுத்தும் போது இராமன் ஒரு பாடலில்
வரன் நில் உந்தை சொல் மரவினால், உடைத்தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,
அரசு நின்னதே; ஆள்க” என்னவே,-
.இது கன்யா சுல்கத்தின் போது தசரதன் கைகேயிக்கு கொடுத்த சொல் மரபினால் இப்புவி உனது அது மட்டுமில்லாமல் நீ பிறந்த போது இது உன்னுடையது ஆள்க என்ற மறை பொருளையும் கைகேயிக்கு இப்போது கொடுத்த வரத்தால் உன்னுடையது நீயே ஆள்க எனும் நேரிடைப் பொருளையும் தரும். இராஜ்ஜியத்தை திருப்பி கொடுக்க வந்த பரதன் மறு பேச்சே இல்லாமல் “சரி இராஜ்ஜியம் எனது. நான் இப்போது அரசன்,. நான் உனக்கே இராஜ்ஜியத்தை தருகின்றேன் எனக் கூறுவது அவனும் கன்யா சுல்கத்தை பற்றி அறிந்திருக்கின்றான் என்பததையே உண்ர்த்துகின்றது. கன்யா சுல்கத்தை மறைத்து கைகேயி எனும் நாடக மயில் தசரதனை பழிக்கு ஆளாக்காமல் வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவனாக செய்து விட்டாள். அதனால்தான் அவள் பேசிய மொழிகள் “ தூமொழி” என்கின்றான் கவிஞன்.
வால்மீகியில்
கன்யா சுல்கம் விரிவாகாவே இராமனால் பேசப்படுகின்றது. கம்பனின் காப்பியப் போக்கின் நெடுகிலும்
இராமன் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைப் பலருக்குச் சொல்ல வேண்டியிருக்கின்றது.
கவி ஒரிடத்தைத் தவிர மீதியிடங்களில் இலக்குவன் வாயினாலேயே அதை பேசவைக்கின்றான். இராமனே
சொல்வதாக காட்டப்படுவது பரத்துவாஜ முனிவரை சந்திக்கும் போது மட்டும் தான்..
ஒரு புது பார்வை என்றாலும், கம்பன் அவ்வாறு நினைத்துதான் எழுதியிருப்பானா என்பது சந்தேகமே. கூனியால் மனமாற்றம் கைகேயிக்கு ஏற்பட்டது என்பதை இராமன் பதிணாண்கு ஆண்டுகள் காட்டில் இருக்கும் போதும் மறக்கவில்லை. இராமன் சுக்ரீவனுக்கு அரசியல் நீதி பற்றிக் கூறும் போது தான் கூனியின் கூன் மேல் மண்னுருண்டை அம்பு விட்டதே தான் காட்டிற்கு வந்து பிராட்டியையும் தொலைத்து துன்புற்றதற்கு காரணம் என்று கூறி யாரையும் சிறியவர் என்று என்ன வேண்டாம் என்று அறிவுறைக் கூறுகின்றான். காப்பியத்தின் இறுதியில் சீதா பிராட்டியும் கூனியை எண்ணிப் பார்க்கிறாள். இராணவன் அழிவு நிகழ்கிறது. அவன் அழிந்ததும் அனுமன் சீதை உள்ள இடத்தை நோக்கி வருகிறான். அவளிடத்தில் இராமனின் வெற்றியைக் கூறி அவளை மீட்டுச் செல்ல அசோக வனத்திற்கு வருகிறான். அசோக வனத்தில் அப்போதும் அரக்கியர்கள் காவலுக்கு நிற்கின்றனர். சீதையிடம் வெற்றி வாசகத்தைச் சொன்ற அனுமன் அவளிடம் ஒரு வேண்டுகோளை வைக்கின்றான். இராவணனின் ஏவல்படி தினமும் சீதையைச் சொல்லாலும், செயலாலும் வருத்தி வந்த அசோகவனத்து அரக்கியரை தான் கொன்றுவிட அனுமதி வேண்டும் என்று அனுமன் கேட்க அதற்கு அவள் பதில் கூறுகின்றாள்.
யான் இழைத்த வினையின் இவ்விடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியர் அலரே இவர் ( மீட்சிப்படலம், 35).
No comments:
Post a Comment