Monday, January 7, 2013

சாதுரியம்


என் சித்தூர் தாத்தாவின் பார்வையில் காவிரி மற்றும் தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் வசிப்பவர்கள் சாமர்த்தியசாலிகளாகவும், சாதுரியம் மிக்கவர்களாகவும் கருதப்பட்டனர். வட ஆற்காடு மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம். வானம் பார்த்த பூமி. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் கடுமையான வெயில். ஆண்களோடு வீட்டிலிருக்கும் பெண்களும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தினப்படி சமையல் செய்வதே பெண்களுக்கு மிகக் கடினமாகத்தான் இருக்கும். ஊர் வம்பு பேசுவதற்கோ வெளி விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கோ நேரம் இருக்காது. அதனால் அவர்கள் சாமர்த்தியசாலிகளாகவோ வாக்கு சாதுர்யர்களாகவோ இருக்க வாய்ப்பு அதிகம் இல்லை. எதையும் நம்பும் அப்பாவிகள். அசமஞ்சங்கள்.

டஆற்காட்டில் வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும்   நுண்கலைகளில் பெரிய ஈடுபாடோ ரசனையோ கூட கிடையாது.  அதே தஞ்சாவூர் (அவர் காலத்திய தஞ்சாவூர் மாவட்டம்) நெல்லை மாவட்டத்துக்காரர்களுக்கு தண்ணீருக்கு பிரச்சனையேயில்லை. வயலில் எதை போட்டாலும் விளையும்; உழைப்பும் கூட மிக குறைந்த அளவிலேயே தேவைப்படும். அதனால்தான் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வெத்திலையைக் குதப்பிண்டு, சீட்டாட்டத்திலும், பாட்டுக் கச்சேரி பரத நாட்டியம் என பல கலைகளிலும் ஈடுபாடு காட்ட முடிகிறது. அவர்களுடைய பேச்சிலேயே பெண்ட வார்த்தைகளும், (கெட்ட வார்த்தைகள்- இதுவும் தாத்தாவின் அகராதியில் ஒன்று) கேலியும், குதர்க்கமும் கலந்தே  வரும். நம்ம வீட்டு பெண்ணோ ஆணோ அவாளோட குப்பை கொட்ட முடியாது. அதனாலேயே தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், திருநெல்வேலி என்றால் ஜாதகத்தையே பார்க்க மாட்டேன், என்று தாத்தா  அடிக்கடிச் சொல்லுவார்.

நான் தாத்தாவிடம் சாமர்தியர்த்திற்கும் சாதுர்யத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் சாமர்த்தியம் பெரும்பாலும் சுயநலம் சார்ந்திருக்கும். அதுலே மற்றவனை பற்றிய அக்கறையோ அவனுக்கு ஏற்படக்கூடிய விளைவை பற்றி  கவலையோ துளிகூட இருக்காது. Mostly self centered ஆக இருக்கும். சாதுர்யம் என்பது கசப்பான மருந்தைக் கூட தேனிலே குழைத்து இனிப்பா குடுக்கறமாதிரி. Packaging becomes more important than the Content" என்பார்.

எங்கள் குடும்பத்தில் மூத்தக் குழந்தைகள் அதிகமாக பேசுவதில்லை. அவ்வளவு எளிதாக உணர்ச்சிவசப்படுபவர்களும் அல்லர். எதிலும் அனாவசியமாக சம்பந்தப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். அதே போல் கெட்ட பெயரும் வாங்க மாட்டார்கள்.  குழந்தை  பருவத்தில் பேச்சு வருவதற்கு ரொம்ப நாளானதாலோ என்னவோ  தெரியவில்லை வார்த்தையை அளந்து தான் பேசுவார்கள். நாம் எதையாவது இப்படிச் செய்என்று சொன்னால் கூட எதிர்த்து பேசாமல் தாங்கள் நினைத்ததையே சாதிப்பார்கள். அதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாலும்  நான் செய்யமாட்டேன்னு சொல்லலியே! செய்வேன் ஆனா எப்பன்னு தெரியலைஎன்று  வரும்ஆனா வராது ….” வடிவேலு காமெடி மாதிரி நழுவிவிடுவார்கள். இரண்டாவதாகவோ  அல்லது என்னைப் போல் ஐந்தாவதாகவோ பிறந்திருந்தால், அவ்வை சண்முகியில் மணிவண்ணன் கூறுவது போல ஓட்டைவாய்டா முதலிகதைதான். வாய் ஒயாமல் பேசி சம்பந்தமில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து அலைச்சல் மட்டுமின்றி அவப்பெயரும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். 


ஹாங்காங்கில், நண்பர்கள் என சொல்லிக் கொண்டு என் வீட்டில் நிறைய பொழுதுகள் கழித்த சில நண்பர்களே கூட இது ஒரு பேக்கு. உன்னைப் போல் உண்டான்னு சொல்லிட்டா உசிரைக் கூட கொடுக்கும்...  தத்தின்னு"  என்னை  பயன்படுத்தி நான் ஏமாந்து போன ஒவ்வொரு தடவையும், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால் முடிவில் இது தான் நான், நான் ஏன் மாறவேண்டும்? ஏமாற்றியவன் தானே மாறவேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டு பழையபடியே இருப்பேன்.



சில வருடங்களுக்கு முன் அப்போதுதான் அறிமுகமாயிருக்கும் நபருக்கும் எனக்கும் பலமுறை நடந்திருக்கும் உரையாடல்:

அறிமுக நபர் : நீங்க எங்கேயிருக்கீங்க?” 

நான்  : வெஸ்டர்ன் ஸ்டீரிட்லே, சய் யிங் பூன்லேசில வருடங்களுக்கு பிறகு சௌத் ஹொரைஸன்இப்பொது சிறிது காலாமாக தைக்கூ ஷிங் 

 எந்த இடத்திலிருக்கிறேன் என்பதை வைத்தே அவர் மனதிற்குள் என்னுடைய NET WORTH ஐ கணக்கிடுவார்.

எங்க வேலை பண்றீங்க

நான் விலாவரியாக கம்பெனி பெயர், முகவரி எல்லாம் சொல்லி விட்டு நீங்க எங்க வேலை பண்றீங்க?” என்றால் மொட்டையாக அது... டிரேடிங் கம்பெனிஎந்த கம்பெனி என்ற விவரமோ எங்கிருக்கிறது என்ற தகவலோ  சிறிதும் இருக்காது.

எவ்வளவு வீட்டு வாடகை?”

ஆரம்பகாலத்தில் பேக்கு மாதிரி சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு நீங்க எனக்கு நெருங்கிய நண்பரும் இல்லை;  சொந்தக்காரனும் கிடையாது. இந்த இரண்டு பேருக்கு மட்டும் தான் இந்த விஷயத்தை நான்  சொல்றதுஎன்றும் சிரித்த முகத்துடன் சொல்லப் பழகி இருந்தேன். கம்பெனி பெயரை கேட்டால் கூட நானும் இப்பொதெல்லாம் 'டிரேடிங் கம்பெனி' என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டேன். ஹாங்காங்கில் பொதுவாக தமிழர்கள் மிகக் குறைவு. அதனால் இவர்களுக்கு ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகம் உண்டு. ஆனால் தங்கள் விஷயம் ஒன்று கூட மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். எப்படி இருக்கீங்க?” என்ற கேள்விக்கு "நல்லாயிருக்கேன்என்று தப்பித் தவறி சொல்லிவிட்டேன் எனில் உங்களுக்கு என்ன! பெரிய கம்பெனி. எங்களை மாதிரி சின்ன கம்பெனியா?” என்று சொல்லிக் கேட்டுக் கேட்டு  இப்போதெல்லாம் ஏதோ ஓடுதுஎன்று சொல்பவனாகி முற்றிலுமாக மாறிவிட்டேன்.


பல காலம் தொடர்பே இல்லாமலிருக்கும் நபர் திடீரென்று காலையில் போன் பண்ணி "எப்படியிருக்கான் உன் பையன், என்ன பண்றான்? ஹவ் இஸ் லைஃப்? ஹவ் இஸ் பிரியா?” இப்படி யோசிப்பதற்கு சிறிதும் நேரம் குடுக்காமல் பேசினால், மனதில் எழும் ஒரே கேள்வி ஏன் இந்த போன் கால்? என்ன விஷயம்? இவருக்கு என்னால ஆகக்கூடிய வேலை என்ன இருக்கு?” என மனது யோசித்து கொண்டிருக்கும்போதே நான் குடும்பத்தோடு திருப்பதி போறேன். உங்களுக்கு யாரையாவது தெரியுமா? தரிசனம் ஏற்பாடு பண்ணனும். உங்க மாமா யாரையோ தெரியும்னு சொன்னாரேஎன்று மிதமான கேள்வி விழும். "மாமா சொல்லி பத்து வருஷம் ஆகிவிட்டது, இப்போ அவரே திருப்பதி போனாக்கூட அரசு டூரிஸ்ட் பஸ்ஸிலேதான் போறார். எனக்கு  யாரை தெரியும்? என்பதுடன்  உரையாடல் முற்றுப்பெறும். அடுத்த போன் காலுக்கு குறைந்தது இன்னும் பத்து வருடம் காத்திருக்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் நடந்த பிரிவினையின் போது மிகவும் பாதிக்கபட்டது பஞ்சாப்  மற்றும் வங்காளம். ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தனர். பத்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். டெல்லியை அடுத்து 55 கிமீ தூரத்தில் உள்ள புழுதி படைந்த கிராமம் பானிபட். ஆயினும் இது மிகவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம். யமுனை நதிக்கரையில் அமைந்த இந்நகரம் டெல்லிக்குத் தலைவாசலாக இருந்திருக்கின்றது. இங்கு மூன்று யுத்தங்கள் நடந்திருக்கின்றது. இந்தியாவில் இஸ்லாமிய அடிமை சுல்தான்களையும்,  முகலாயர்களையும் டெல்லி ஆட்சிப் பீடத்தில் அமர்த்தவும் இந்த மூன்று சண்டைகளும் உதவின. இங்கு எப்போதுமே அதிக அளவில் இஸ்லாமியர்கள் வசித்து வந்தனர். அதற்கு அடுத்து சீக்கியர்களும், இந்துக்களும் வசித்து வந்தனர். சுதந்திரத்தின் போது லாகூர் மற்றும் பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்த சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் அகதிகள் முகாம் அங்குதான் அமைக்கப்பட்டிருந்தது.


அந்த ஊரின் ஸ்டேஷன் மாஸ்டர் தேவிதத்தா எனும் இந்து. அவருடைய உதவியாளர் ஒரு இஸ்லாமியர். அன்று காலையில்தான் பாகிஸ்தானிலிருந்து வந்திறங்கிய சீக்கிய அகதிகள், பழிவாங்கும் வெறியுடன் தேடி அலைந்து கொண்டிருந்த போது அவர்கள் கண்ணில் பட்டார் தேவிதத்தாவின் உதவியாளர். அவர் எவ்வளவோ கெஞ்சினார். கடைசியில் ஸ்டேஷனில் எதுவும் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். சீக்கியர்களும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரை ஸ்டேஷனை விட்டு வெளியே அழைத்துச் சென்று தலையை சீவிவிட்டு வெறியுடன் முஸ்லீம்கள் வசித்து வந்த இடங்களை நோக்கி செல்லலாயினர். அவர்களை உய்விக்க வந்தவராக மஹாத்மா காந்தி சிறிது நேரத்தில் இரயில் வந்திறங்கினார். அவர் வந்தவுடன் அவசரமாக ஒரு மேடை போடப்பட்டது. அவர் ஒரு பெரிய உணர்ச்சிகரமான பேச்சாளர் அல்ல, கவர்ச்சியான சொற்களினால் மக்களைக் கவர. அவர் எப்போதும் பேசும் உண்மையே அவரது பேச்சிலும் இருந்தது. அந்த சத்தியத்தின் மஹிமை மக்களை உண்மையை உணரச் செய்து சத்தியப் பாதையில் அவர்களை வழிநடத்திச் சென்றது. கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் அவர்கள் உங்கள் மனைவியையா கற்பழித்தார்கள்? உங்கள் மகளையா கொன்றார்கள்?” என்று கூவியதற்கு காந்திஜி ஆம் அவர்கள் என் மனைவியைத்தான் கற்பழித்தார்கள். என்  மகளைத்தான் கொன்றார்கள். உங்கள் குழந்தைகள் என் குழந்தைகள் தான்.  வேண்டாம் சகோதரச் சண்டை. விட்டொழியுங்கள் இந்த வன்முறையை. ஒவ்வொருவரும் உங்கள் இஸ்லாமிய சகோதரர்களை இவ்விடத்தை விட்டுப் போக வேண்டாம் என்று காலில் விழுந்து கேட்டு கொள்ளுங்கள்என்றார். ஆயினும் சில வாரங்களில் 25000 இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் சென்றனர். இதை கேள்விப்பட்ட மஹாத்மா இஸ்லாம் நான்காம் பானிப்பட் யுத்தத்தில் தோற்றுபோய்விட்டதுஎன்று வருத்ததுடன் சொன்னார். தோற்றது இஸ்லாம் மட்டுமல்ல காந்தியும்தான்.


காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியறிந்தும், ஆல் இந்தியா ரேடியோ உடனடியாக செய்தியை அறிவிக்கவில்லை. நிலைய டைரக்டர் நிகழ்ச்சிகளை எந்த மாற்றமுமின்றி தொடர்ந்தார். தகவல் அறிந்து இந்தியாவின் கடைசி வைஸ்ராய் லார்ட் மௌண்ட் பாட்டன், பிர்லா மாளிகைக்கு விரைந்தார். அப்போது கூடியிருந்தவர்களில் சிலர் காந்தியை கொன்றது முஸ்லீம்தான் என்று உரக்க சொல்லிக் கொண்டிருந்த போது மௌன்ட் பாட்டன் உங்களுக்கு தெரியாதா? கொன்றவன் ஒரு இந்துஎன்று சத்தமாகக் கத்திவிட்டு மாளிகைக்குள் நுழைந்தார். அவருடைய உதவியாளர் உங்களுக்கு எப்படி தெரியும்?” என வினவ அவர் எனக்கும் தெரியாது. ஆனால் ஒரு முஸ்லீமாக இருந்தால் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் இரத்த ஆறுதான் ஓடும். அதனால்தான் நான் வேண்டிக்கொள்கின்றேன் அது ஒரு இந்துவாக இருக்க வேண்டும்என்றார். ஆல் இந்தியா ரேடியோ குற்வாளி யாரென்று அடையாளம் கண்ட பிறகே, தன் நிகழ்ச்சிகளை நிறுத்தி முக்கிய அறிவிப்பு என்று காந்தியின் மரணத்தையும் அவரை கொன்றவன் ஒரு இந்து என்பதையும் மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருந்தது. இந்த ஒரு சாதுர்யமான முடிவினால் ஆல் இந்தியா ரேடியோ வதந்திகளால் விளையக் கூடிய ஒரு மாபெரும் துயரத்தையும் உயிரிழப்பையும் தவிர்த்தது. நல்ல காலம் அன்று இத்தனை சேனல்களும் இல்லை. காந்தி தன் உயிரைக் கொடுத்து தேசத்தின் ஆத்மாவை தட்டி எழுப்பி அமைதி நிலவ வழிவகுத்தார்.
இராமனுக்கும் சங்கடமான நிலை. பட்டாபிஷேக என்று ஆவலுடன் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்க காட்டுக்கு போகவேண்டிய நிலை. அரசு பரதனுக்கு என்று சொல்லி இவன் கிளம்ப வேண்டும். தாயார் இருவர், தம்பி மற்றும் மனைவி என அனைவரையும் புரிந்து கொள்ளும்படி செய்து, அதுவும் உடனேயேப் புறப்பட வேண்டும்  என்பது மிகவும் கடினமான செயல். இராமனை வளர்த்தவள் கைகேயி. அவளுக்கு இருக்கும் சாதுர்யம் கட்டாயம் இவனிடமும் இருக்கின்றது. அவளே இராமனை பார்த்து இது அரசன் கட்டளை, அவனாக சொல்ல மாட்டான், நான் சொல்ல வேண்டும் என்று நீ விரும்பினால் நான் சொல்கின்றேன்என்று கூறி தான் வரம் பெற்றதையும் மறைத்து இவன் காட்டுக்கு போவதே கூட இவனுடைய நன்மைக்காவும் மேன்மைக்காகவும் என்று கூறி, இராமன் தசரதனை சந்திக்கவிடாமாலே தன் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டவள். கைகேயியின் மாளிகையை விட்டுக் கிளம்புவதற்கு முன் மறுபடியும் அவளை வணங்கி கௌசல்யையின் மாளிகைக்குச் சென்றான்.


குழைக்கின்ற கவரி இன்றி, கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல, தருமம் பின் இரங்கி ஏக,
மழைக்குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன், ஒரு தமியன் சென்றான்.

கைகேயின் வீட்டிலிருந்து இராமன் தன்னந்தனியனாய் வென்கொற்றக் குடையுடன் கவரிவீச பொன்முடி அணிந்து வருவான் என எதிர்பார்த்துக் காத்திருந்த தாய் முன் இவையெல்லாம் இல்லாமல் சென்றான்.  அவன் தனியாக சென்றானா என்றால் இல்லை. இவ்விடத்திலிருந்து மீண்டும் அவன் அயோத்தி திரும்பி வரும் வரை கண்ணுக்கு புலப்படாதவிருவர் ஒருவர் முன்னும் மற்றொருவர் பின்னும் செல்கின்றனர். இழைக்கின்ற விதி முன்னே  செல்ல தருமம் பின்னால் சென்றது. 


பதவியேற்புக்கு குடும்பமில்லாமல் செல்வார்களா? அதுவும் தாயார் இல்லாமலா? என்று என் மனதில் கேள்வி எழுகின்றது. அதுவும் முடியாட்சி; அவர்கள் வைத்ததே சட்டம். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ராஜ வம்ச கல்யாணத்தின் போது பார்த்தால் கூட பளிச்சென்று தெரியும் ஒரே விஷயம் ராஜவம்சத்தில் வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதைதான். அதேபோல் தான் ஒரு அரசனுக்கு முடி சூட்டும் போதும் அவன் குடும்பத்திற்குத்தான் முதலிடம். அதுவுமில்லாமல் இந்து வேதவழிச் சடங்குகளில் மனைவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கோவையில் நடந்த செம்மொழி மாநாடு அரசு செலவில் மு க வின் குடும்பவிழாவாகவே நடந்ததைப் போல அரசுவிழாவாக இருக்கட்டும் இல்லை பதவியேற்பு வைபவமாயிருக்கட்டும் குடும்பத்தை தவிர யாருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் அழைப்பு விடுப்பதில்லை. 
புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும் ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு?’ என்றாள்.
கௌசல்யை இராமன் முடிசூட்டிக் கொள்ளவில்லை; புனித நீரில் நனையவுமில்லை காரணம் எதுவாக இருக்கும் என்று சந்தேகப்பட்டாள். இராமன் வணங்கியவுடன் அவனை வாழ்த்தி முடிசூடுவதில் ஏதேனும் தடையுள்ளதா?” என கேட்டாள். 
மங்கை அம் மொழி கூறலும், மானவன்
செங் கை கூப்பி, நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,
துங்க மா முடி சூடுகின்றான் என்றான்.
தாயிடத்துக் கூறுகின்றான் ஆதலின் அவள் வேற்றுமை இன்றி உணர வேண்டி முன்னதாகவே நின்காதல் திருமகன்’ ‘பங்கம் இல் குணத்து எம்பி என்றெல்லாம் இராமன் எடுத்துக் கூறினான். பரதன் என்ற சொல்லுக்கு நாட்டைப் பரிப்பவன் தாங்குபவன் என்பது பொருள். அப்பெயர்க்கேற்ப அவன் ஆட்சி உரிமை எய்தியது உணர்ந்து இன்புறற்குரியது. இராமன் சொல்ல வேண்டியது இரண்டே செய்திகள்தான். பரதன் அரசன்; நான் கானகம் செல்லவேண்டும் இது கைகேயி கேட்ட அதே வரிசையில். இதை இவன் மாற்றியும் சொல்லியிருக்கலாம். அம்மா அப்பா என்னை காட்டுக்கு அனுப்பிவிட்டார். எனக்கு மணிமுடியும் கிடையாது. பரதனுக்குத் தான் இராஜ்ஜியம்என்றும் கூறியிருக்கலாம். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணியே நின் காதல் திருமகன் என்று முதலில் கூறி தாயிடம் பரதன் மூடிசூட்டுவதற்கு தடங்கல் வராமல் செய்துவிடுகின்றான், அனுமனை சொல்லின் செல்வன் என்றழைத்த இராமனுக்கு  தான்  தெரியும் சொல்லின் அருமையும் பெருமையும். 
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;
குறைவு இலன் எனக் கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள்.கைகேயியின் அன்பு பெரிதும் இராமனுக்கும், கோசலையின் அன்பு பெரிதும் பரதனுக்கும் அமைந்துள்ளதை இக்காவிய ஓட்டத்தில் காணலாகும். நின்னினும் நல்லன் என்பதைப் பின் வரும் எண்ணில் கோடி இராமர்கள் என்னினும், அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ என்ற (10181.) கோசலைக் கூற்றை ஒப்பு நோக்கி உணர்க. 
என்று, பின்னரும், மன்னவன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்;
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து,
ஒன்றி வாழுதி, ஊழி பல என்றாள்.இது அரசகட்டளை என்று எண்ணாமல் மகனே இது உனக்கு நல்லதேயாகும் என்று எண்ணி, உனது தம்பிக்கு நானிலத்தைக் கொடுத்து ஒற்றுமையாகப் பல்லாண்டு வாழ்வாயாகஎன்று வாழ்த்தினாள். 
முறைமையன்று என்று இவள் குறிப்பிடும் போது கன்யா சுல்கத்தைப் பற்றி இவள் அறிந்திருந்தால் வந்திருக்குமா என்ற கேள்வி எழுகின்றது. இவளுக்குப் பிறகு தான் தசரதன் கைகேயியை மணந்திருக்கின்றான். அது மட்டுமல்லாமல் அவன் கைகேயியிடம் பேரன்பு உடையவனாகவும் இருக்கின்றான். அதன் பொருட்டே ஸ்ரீராமன் கைகேயிடம் வளரும்படி நேர்ந்திருக்கவும் கூடும். இவளுக்கு கைகேயியிடம் அவ்வவு சரியான உறவிருக்கவில்லை. ராமனுக்குப் பட்டாபிஷேகம் எனும் போது இவள் சுமத்திரையுடன் தான் கோவிலுக்குப் போகின்றாள். இவளே வேண்டாத வேளையாக இது மன்னவன் ஆனையென்று எண்ணாதே! உனக்கு நன்மை என்றே நினைந்து நடந்து கொள்என சொல்லிவிட்டாள், அடுத்து அவன் என்ன சொல்ல போகிறான் என்பதை  அறியாமலே. 
சமீபத்தில் இந்தியா போயிருக்கும் போது நான் என் சித்தி சித்தப்பாவை பார்க்கச் சென்றிருந்தேன் சித்தப்பா வாய் ஒயாமல் பேசுபவர். ஹாங்காங்லே நீ கார் வச்சிண்டிருக்கியா?
நான் இல்லை. காரைவிட பார்க்கிங் ரொம்ப விலை ஜாஸ்தி.” “ஆமாம் நான் கூட கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கேயெல்லாம் வீடு கூட ரொம்ப காஸ்ட்லி.  வீடே வாங்க முடியாது. தம்மாதுண்டு இடத்துக்கு கோடிலே செலவாகும்றா. நீ வீடு வாங்கிட்டியா? ஆனா உன்னால் எப்படி முடியும்? வாங்கியிருக்க மாட்டே”.
உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த சித்தி சற்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அவன் என்ன சொல்றான்னு கேக்கறதுக்குக் கூட டைம் குடுக்காமா நீங்களே பேசிந்தா அவன் என்ன சொல்ல முடியும். அடுத்த ஆளை கொஞ்சம் பேசவுடுங்கோஎன்று சொன்னார். நான் ஒன்றும் சொல்லாமல் என தங்கையிடம் ”பையன் எங்கே வேலைக்கு போறான்னு? பேச ஆரம்பித்துவிட்டேன். 
 ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,
'"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான்
அம்மா உன் நாயகன் என்னை நன்னெறிப்படுத்துவற்கு ஏவிய இன்னொரு பணி உண்டு அது கானகம் சென்று மாதவம் புரிந்தவருடன் பதினான்கு ஆண்டுகள் (பதினான்கு என்று சொல்வதைக் காட்டிலும் ஏழினோடு ஏழ் எனும் போது குறைவான் ஆண்டுகளாக தோன்றுவதை உணரலாம்) வசித்தபின் மீண்டு வரச் சொல்லியிருக்கின்றார் என்றான்.
'வஞ்சமோ, மகனே! உனை, "மா நிலம்
தஞ்சம் ஆக நீ தாங்கு" என்ற வாசகம்?
நஞ்சமோ! இனி, நான் உயிர் வாழ்வெனோ?
அஞ்சும்; அஞ்சும்; என் ஆர் உயிர் அஞ்சுமால். 
அரசாளச் சொல்லியிராவிட்டால் காடு போகவும் நேர்ந்திராது என்ற கணிப்பால் கோசலைவாசகம் வஞ்சமோ என்றாள். தஞ்சம் இவ் உலகம் நீ தாங்குவாய் என இத்தொடர் பரதனை நோக்கி வசிட்டன் கூறியதாகப் பின்னரும் வருதல் (2255.) அறிக. முன் இனிதாகிடும் நஞ்சுகூடப் பின் கொல்லும், அதுபோல், ‘அரசாள்க என்றது இனிதாகிப் பின்னர் காடுஏகுஎன முடிதலின் நஞ்சமோ எனக் கூறினாள். கௌசல்யை தன்னையும் காட்டிற்குச்அழைத்து செல்லவேண்டும் எனும் போது இராமன்
என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
துன்னும் கானம் தொடரத் துணிவதோ?
அன்னையே! அறம் பார்க்கிலை ஆம் என்றான்.“
என்னைப் பிரிந்து துயருறும் மன்னர் மன்னனின் துயர் தீர்க்காது என்னுடன் வருவது பத்தினி தருமம் ஆகாது. நானும் இலக்குவனும் முன்பு விசுவாமித்திரனோடு காடு சென்று எவ்வளவு மந்திரங்களையும் சீரும் சிறப்பும் பெற்றோம்! அதை நீ மறக்கலாகாது” என பலவாறாக ஆறுதல் கூறுகின்றான்.
சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?
எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ?’ என்றான் 
 “தாயே, நீ மனம் தடுமாறுவது எதனால்? தேவரும் தம் நிலைக்குப் பொருந்தியச் சிறந்த தவத்தைச் செய்து தம் நிலைக்கு மேலாக உயர்ந்தார்கள் அல்லவா (நான் பிரிந்து செல்கிற) ஆண்டுகள் எவ்வளவு உள்ளன? அந்தப் பதினான்கு ஆண்டுகளும், பதினான்கு நாள்கள் அல்லவா?  (இதற்கு வருந்துவானேன்).” அது கேட்ட கௌசல்யை இவனோ அரசனான தன் கவனே திரும்பிச் சொன்னால் தான் கானகம்  போகாமலிருப்பான் என்று அரசனை போய் பார்ப்பதற்கு புறப்புட்டுச் சென்றாள். முழுவிவரமும் அறியாத காரணத்தால்,அவளுடைய மனதில் தசரதனை மாற்றிவிடலாம் என்ற எண்ணம் இருந்தது,
                                                                 தொடரும்

No comments:

Post a Comment