Thursday, January 17, 2013

ஹாஸ்பத்திரி

ஒரே ஊரில் அல்லது சென்னை போன்ற பெருநகரங்களில் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாருடன் வசிப்பவர்கள் வீட்டில் ஒரு சிலர் மருத்துவமனை  வல்லுநர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் நல்ல ஓட்டல்கள் அல்லது காண்டீனில் கிடைக்கும் சிறப்பான உணவு வகைகளும் டிபன் வகையறாக்களும் அத்துபடியாக இருக்கும். இன்னும் சிலர் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிக்கும், அவரோடு தங்குபவர்களுக்கும் வேளாவேளைக்கு சரியான உணவை சமைத்துக் கொடுப்பதில் வல்லுநர்களாக இருப்பார்கள். பல நேரங்களில் டாக்டருக்கே கூட உணவு விஷயத்தில் அறிவுரை சொல்லக் கூடிய அளவுக்கு அனுபவத்தின் மூலம் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். எங்கள் வீட்டில் அம்மா, நான், என் பெரிய மண்ணி மற்றும் அம்மாவின் மாமா மகன் நாராயணன் இவ்வகை மருத்துவமனை வல்லுநர்கள். இதற்கென்றே தனி சாப்பாடுக் கூடைகள், பிளாஸ்க், டார்ச்லைட் எல்லாம் எங்கள் வீடுகளில் தயார் நிலையில் இருக்கும்.
சென்னை அண்ணா நகரில் மார்கழி மாத இளங்குளிர் காற்று வீசும், ஒரு விடியற்காலை 4 மணிக்கு நானும் மண்ணியும் எழுந்து பூஜை செய்ய குளித்து விட்டு அமரும் நேரம், அப்பா படுக்கையறையிலிருந்து மார்பைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து ஹாலில் போடப்பட்டிருந்த ஷெட்டியில் அமர்ந்தார். நானும் மண்ணியும் "அப்பா காபி வாசனையில எழுந்துட்டா" என்று சொல்லியவாறே பூஜையை தொடர்ந்தோம். அப்பா அதற்குள் நாராயணனை எழுப்ப அவன் அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பா ஷெட்டியில் சரிய ஆரம்பித்துவிட்டார். "இது கட்டாயம் ஹார்ட் அட்டாக் தான். ஜெயா அத்தைக்கும்(என் பாட்டி) இதே மாதிரிதான் இருந்தது. உடனேயே டாக்டரை பார்க்கணும்என்றான் நாராயணன். சாந்தி காலனியில் இருந்த அத்திம்பேர் வீட்டிற்கு விஷயத்தை சொல்வதற்காக  சைக்கிளில் வேகமாகப் போனேன். அவர் வீட்டுக்கருகில் டிவிஎஸ்ஸிலிருந்து ஓய்வுபெற்ற ஸ்ரீனிவாசன் என்பவரின் மருமகள் டாக்டர் சியாமளா, பெரம்பூர் இரயில்வே ஹாஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர், அதே சாந்தி காலனியில் இரண்டு தெரு தள்ளி வசித்து வந்தார். அத்திம்பேர் அவரை பார்த்து அழைத்து வருவதாகவும் எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் டிராவல்ஸ்காரர்களிடம் சொல்லி எங்கள் காரை ஒட்ட உதவும்படி வேண்டிக்கொள்ள சொன்னார்.  சிறிது நேரத்திற்கெல்லாம் வந்தவர்  "அவா கேட்டை பூட்டிண்டு தூங்கறா. நாய் வேற வெளியிலே சுத்திண்டேயிருக்கு. அப்பாவோட கார்டியாலஜிஸ்ட் டாக்டர் தணிகாசலம் அண்ணா நகர் ரௌண்ட்டானா கிட்ட தானே இருக்கார். நேரா போயிடலாம்" என்றார். காரில் அப்பாவை கூட்டிக் கொண்டு டாக்டர் தணிகாசலம் வீட்டிற்குப் போனோம்.  நாய் குரைப்பதை பார்த்து அவர் வெளியே வந்தார். அப்பா காரிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும் "நோ.. நோ.. ஸ்ரீனிவாசன், பர்ஸ்ட் போய் சுபேதா நர்ஸிங் ஹோம்ல (இது சேத்துப்பட்டில் ஹாரிங்டன் ரோடில் உள்ளது)  போய் அட்மிட் ஆயிட்டு காலையிலே சொல்லுங்க" என்றார். எனக்கு அந்த ஹாஸ்பத்திரிக்கு போக இஷ்டமில்லை. அங்குதான் சில மாதங்களுக்கு முன் என் பெரிய மாமா டாக்டர் கிருஷ்ணமூர்த்தி இறந்து போனார். அவருக்கும் கார்டியாலஜிஸ்ட் தணிகாசலம்தான். எனவே வேறு எங்காவது 24 மணி நேர பாலி கிளினிக் இருக்கிறதா என பார்க்கலாம் என்று சிந்தாமணிக்குச் சென்றோம். அங்கிருந்து ஷெனாய் நகர் போகும் வழியில் ண்ணா நகர் 24 மணி நேர பாலி கிளினிக் இருந்தது. அப்போது மணி 4.45. அந்நேரம் டூயூட்டி டாக்டராக இருந்தவர் டாக்டர் நடராஜன். அப்போதுதான் சுடச்சுட எம் பி பி எஸ் பரிட்சை பாஸ் பன்னியவர். உடனேயே "இது சிவியர் ஹார்ட் அட்டாக்" என்றவர் எமெர்ஜென்சியாக ஒரு ஊசி போட்டுவிட்டு ஸார்பிடால் மாத்திரையை வாய்க்கடியில் வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவருடைய ப்ரொபஸர் ஜே ஆர் சங்கரன் கிளினிக்குக்கு போகலாம் என்று சொல்லி எங்களிடம் கார் இருக்கிறதா? என்று கேட்டதோடு அப்படி இல்லை என்றால் தன் காரிலேயே போகலாம் என்றும் கூறினார்.

ஜே ஆர் சங்கரன் கிளினிக் கீழ்ப்பாக்கத்தில் இருந்தது. அவருடைய மகன் டாக்டர் ராம்குமார், நடராஜனுடன் படித்தவர். போய்ச் சேர்ந்தவுடன் வந்து ஒருமுறை பார்த்த டாக்டர் நாங்கள் யார் என்னவென்று தெரியாத காரணத்தால், "நீங்க ஜி எச் போயிடுங்க நான் போன்ல கூப்பிட்டு சொல்லிடறேன்" என்றார். அதற்கு அத்திம்பேர் "டாக்டர் இவர் PWD எஞ்சினியர். இவர் பிள்ளை லிண்டாஸ்லே எக்சிகூட்டிவ், நான் பேங்க்ல மானேஜர். இப்ப பாங்க் திறக்கலை. காலையிலே நீங்க எவ்வளவு பணம் வேனும்னாலும் கொண்டு வந்து தரேன்" என்றார்.  மணி 5.00. இதை கேட்டவுடன் தான் ஹார்ட் மானிட்டர் உடனே வந்தது. அப்பா சுயநினைவை இழந்து சோபாவில் படுத்துவிட்டிருந்தார். நேரடியாக அவருடைய இருதயத்தில் ஒரு ஊசி போடப்பட்டு, அடுத்த அரை மணி நேரத்தில் ஐசியூக்கு கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டு சிகிச்சை ஆரம்பமாகியது. “இன்னும் அபாய கட்டத்தில் தான் இருக்கிறார். 48 மணி நேரத்திற்கு ஒன்றும் சொல்ல முடியாது. நெருங்கின சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லிவிடுங்கள்” என்றார் டாக்டர்.

வீட்டில் மண்ணிக்கு போன் போட்டு சொல்லி விட்டு, எஸ் டி டீ வசதி இல்லாததால் கோடம்பாக்கத்தில் இருந்த என் அண்ணனின் ஆபீசுக்கு காலை 8 மணிக்குச்  சென்றேன். அங்கிருந்து காத்மாண்டுவிற்கு கான்பெரன்ஸுக்காக சென்றிருந்த பெரிய அண்ணனுக்கும், நெல்லூரிலிருந்த இரண்டாவது அண்ணனுக்கும், திருப்பதியில் இருந்த டாக்டர் சித்தப்பாவுக்கும் சொல்லிவிட்டு வீட்டிற்குப் போனேன். அம்மாவிடம் "ஹார்ட் அட்டக்காம். அட்மிட் பண்ணியிருக்கு. இன்னும் சீரியஸ்தான்" என்றேன். தனக்கு இரண்டு புடவைகளை எடுத்துக் கொண்டு மண்ணியிடம் "நான் கிளம்பறேன். நீ வீட்டைப் பாத்துக்கோ. சாயந்திரம் இவன் கிட்ட காபியும் இராத்திரிக்கு கொஞ்சமா தயிர் சாதமும் குடுத்து அனுப்பிடு. இந்தந்த இடத்துலே எல்லா பணமும் இருக்கு. சாவி இந்தா" என்று ண்ணியிடம் கொடுத்து விட்டு என்னோடு புறப்பட்டார். எனக்கு அடுத்த மூன்று நாட்களில் ICWAI பைனல் எக்ஸாம் இருந்ததால் நாராயணன் இரவு அம்மாவிற்கு துணையாகத் தங்கியிருந்தான். பதினாறு நாட்கள் கழித்து அப்பா வீட்டிற்குத் திரும்பி வந்தார்.
1993ம் வருடம் என் மாமனார் அலுவல் நிமித்தமாக பாரிஸ் மாண்ட்பெலியர்(Montpellier) மற்றும் லண்டன் சென்றார். கூடவே எனது மாமியாரையும் முதல் தடவையாக வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றார். பதினைந்து நாட்கள் கழித்துத் திரும்பி வந்தனர். நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். அவர்கள் வீட்டு வழக்கப்படி, எனக்கே கூட அவர்கள் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தெரிவித்தனர். திரும்பி வந்த பதினைந்து நாட்களுக்கெல்லாம் ஜுரம் உடல் வலி என்று இருவருமே அவஸ்தைப் பட்டனர். ஒரு சமயம் டைபாய்ட் போலவும் மற்றொரு சமயம் மஞ்சள் காமாலை போலவும்  இரத்தப் பரிசோதனையில் மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தது. இவர்கள் குடும்ப டாக்டர் திரு அனந்தராமன். அவர் இவர்களுக்கு தூரத்துச் சொந்தமும் கூட. எனக்கும் என் பையனுக்கும் கூட அவர்தான் டாக்டர். முதலில் கோடம்பாக்கத்தில் கிளினிக் வைத்திருந்தார். இவர் 3 ரூபாய் மட்டும் வாங்கி கொண்டு ஏழை மக்களுக்குச் சிகிச்சையளிப்பவர். பிறகு அவர் வீட்டிலேயே நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தார். வயதானவர். வெறும் எம் பி பி ஸ் தான். ஆனாலும் நோய் அறிகுறிகளை ஆய்ந்தறிவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். ஒரு வாரம் இரண்டு வாராமாகியது. ஒன்றும் குணமான  பாடில்லை. இரண்டு வாரம் கழித்து எடுத்த பிளட் டெஸ்டில் யூரியா லெவல் இருவருக்கும் மிக அதிகமாகி இருக்க உடனேயே விஜயா ஹாஸ்பிடலில் இருவரையும் சேர்த்து சிறுநீரக மருத்துவர் ரவிச்சந்திரனை (Nephrologist) பார்க்கும் படி பரிந்துரை கடிதம் தந்ததோடு அந்த டாக்டருடன் பேசி அப்பாயின்ட்மெண்டும் வாங்கிக் கொடுத்தார். அவரது கடிதத்தில் அதுவரை நாங்கள்  கேள்வியேப்பட்டிராத "லெப்டோ ஸபைராசிஸ்" என்ற வைரல் இன்பெக்ஷன் என்று தான் சந்தேகப் படுவதாகவும் எழுதியிருந்ததை பார்த்து அது என்ன வியாதி என்று என் மனைவி கேட்டதற்கு அது "எலியின் மூத்திரத்திலிருந்து பரவும் வியாதி. அது டைபாய்ட் மற்றும் ஜாண்டிச் என்று இரு நோய்களுக்குமுள்ள அறிகுறிகளையும் மாற்றி மாற்றி காட்டி கடைசியில் கிட்னி பெயிலியூரில் கொண்டுபோய் ஆளை குளோஸ் பன்னிவிடும்" என்றார்.

விஜயா ஆஸ்பத்திரி டாக்டரை பார்த்தவுடன் இருவரையுமே உடனேயே அட்மிட் பண்ணச் சொன்னார். என் மகனுக்கு அப்போது இரண்டு வயது.  வீட்டை பார்த்து கொள்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணி வைத்துவிட்டு அடுத்த நாள் அட்மிட் ஆகிறோம் என்று டாக்டரிடம் சொல்லிவிட்டு வந்த என் மனைவி, என்னை உடனே சென்னை வரும்படிக் கூறினார். 

நான் பெங்களூரிலிருந்து இரவு பத்து மணிக்கு அரசுப் பேருந்தில் புறப்பட்ட நேரம் நல்ல மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஆம்பூருக்கும் வேலூருக்கும் நடுவில் மரங்கள் கீழே விழுந்து இரண்டு பக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் பயணம் தொடங்கியது. காலை ஐந்தரை மணிக்கு சென்னை வந்திருக்க வேண்டிய நான், இரவெல்லாம் தூக்கமில்லாமல் பசி மற்றும் தலைவலியுடன் பத்து மணிக்கு வந்து சேர்ந்தேன். என் தலையை பார்த்தவுடன் நான் வேண்டும் என்றே லேட்டாக வந்தது போல் என் மனைவி "ஏன் லேட்? இவ்வளவு நாழியா ஆகும்" என்றார். “மரம் விழுந்து எல்லா பஸ்சும் லேட் நீ சாயந்திரம் நீயூஸ்ல பாக்காலாம்என்றேன்.

மனைவி இருவரையும் அழைத்து கொண்டு ஹாஸ்பத்திரியில் சேர்த்து விட்டு டாக்டர் வந்தவுடன் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். அவளுடைய பெங்களூர் பாட்டி வீட்டிலிருந்தார். அவர் காபி போட்டுக் கொடுக்க குளித்துச் சாப்பிட்டுவிட்டு சாயங்காலம் ஹாஸ்பத்திரிக்கு பையனையும் அழைத்துக் கொண்டுச் சென்றேன். இரண்டு பேரும் அடுத்தடுத்த படுக்கையில் படுத்திருந்தனர். அமர் அக்பர் ஆண்டனி என்ற இந்தி சினிமாவில் தொலைந்து போன மூன்று சகோதரர்கள் அடுத்தடுத்த படுக்கையில் தங்கள் தாயார் என்று தெரியாமல் ஒரே சமயத்தில் இரத்தம் குடுப்பது போன்ற மிக அபத்தமான காட்சி ஞாபகம் வந்து சிரித்தும் விட்டேன். என் மனைவியோ கண்ணாலேயே என்னை எரித்து விடுவது போன்று பார்த்தாள்.

டிரிப்ஸ் மூலம் மருந்துகளை அனுப்பி யூரியா லெவலை குறைக்கும்  சிகிச்சையை ஆரம்பித்திருந்தனர். மகனோ கையிலேயே  நிக்காமல் கீழேயிறங்கி எப்படியாவது அந்த டிரிப்ஸை எடுத்து விடுவது என்பதில் குறியாக இருந்தான். இந்த ரூம் இல்லைன்னா அடுத்த ரூமில் நுழைந்து  விடுவான். அரைமணி நேரம் எந்த டிரிப்ஸையும் இவன் புடுங்காம இருந்துவிட்டால் அன்றைய சாயந்திரம் வடபழனி கோவிலில் சூரக்காய் உடைப்பதாய் மனதிற்குள் வேண்டிக் கொண்டேன். என் மாமனார் ஆபீஸிலிருந்து வந்திருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் "நல்ல ஒத்துமை சார் உங்க ரெண்டு பேருக்கும். ஜோடியா வந்து ஹாஸ்பிடல்ல படுத்துண்டிருக்கீங்க. பாக்கறதுக்கே நல்லாயிருக்கு" என்றார். நான் "ஏன் சார். போயும் போயும் இந்த மாதிரி விஷயத்திலேயா ஒத்துமை வரனும். இது  மத்த விஷயத்திலேயிருந்தா நல்லா இருக்கும்" என்றேன். 

"லெப்டோ ஸ்பைராஸ்" என்று கண்டுபிடிப்பதற்கு நடத்தப்படும் பிளட் டெஸ்ட் சென்னையிலேயே இரண்டே இடங்களில் தான் இருந்குது ஒன்று ஜீ எச் மற்றது அப்போலோ என்றும் கூறி பிளட் சாம்பிளை கொடுத்தனர். அன்று வெள்ளிக்கிழமை. ஜீ எச் சென்று அங்கிருக்கும் வெட்டர்னரி ரிஸர்ச் கிளினிக்கிற்குச் சென்றேன். இது போன்ற ஒன்று அங்கே இயங்கி வருவது பலருக்கும் தெரியாத ஒன்று. பல வருடங்களுக்கு முன் அங்கே என் மாமாவின் நண்பர் டாக்டர் மஹாதேவன் மற்றும் பிஎச்டி செய்து கொண்டிருந்த டாக்டர் தமிழ் செல்வியும் இருந்தனர். நேராக போய் அங்கு இருந்தவரிடம் "டாக்டர் மஹாதேவன் இருக்காரா?" என்றேன். "இல்லை சார், அவர் போய்விட்டார். இப்ப டாக்டர் தமிழ்செல்விதான் இருக்காங்க" என்றார். நான் "டாக்டர் கிருஷ்னமூர்த்தி என் மாமா. டாக்டரை பார்ககனும்", சிறிது நேரத்தில் போய் பார்க்க முடிந்தது. விவரங்களை கேட்டுவிட்டு "பிளட் டெஸ்ட் ஆளுங்க இப்ப இருக்கமாட்டாங்க. நாளைக்கு சனிக்கிழமை. அடுத்து உடனே கிருஸ்துமஸ் லீவு. ரொம்ப லேட்டாயிடும், எனக்கு தெரிந்த லாப் அண்ணாநகர்லே இருக்கு. அந்த லேப் வச்சிருக்கிறவர் ராமச்ந்திரா மெடிக்கல் காலேஜ்லே புரொபஸரா இருக்கார். அவருக்கு லெட்டர் எழுதித் தரேன்.  இப்பவே கொண்டு போய் குடுங்க. திங்கள் கிழமைக்குள்ள ரிசல்ட் வந்துவிடும்" என்றார். அந்த டாக்டர். “உங்க மாமாவோட பார்க்கும் போது சீஏ படிச்சிட்டிருந்தீங்க. பாஸ் பண்ணிட்டீங்களா?" "பாஸ் பண்ணி கடந்த ஐந்து வருடமாக பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருக்கின்றேன். ரொம்ப தாங்க்ஸ் இந்த உதவிக்கு" என்றேன். "டோண்ட் மென்ஷன். உங்க மாமாவோட ஸ்டுடண்ட் நான். ஹி வாஸ் கிரேட் மேன்" என்றார். இறந்து போன மாமாவின் மறந்து போன முகத்தை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன். 

அண்ணா நகர் சென்று பிளட் சாம்பிளை கொடுத்துத்  திங்கள் கிழமை ரிசல்ட்டும் வந்தது. இருவருக்குமே லெப்டோ ஸ்பைராஸிஸ் உறுதியானது. மாமானாருக்குக் கடுமையான பாதிப்பு மாமியாருக்கு மைல்ட்டான பாதிப்பு என்று கூறி சிகிச்சை தொடர்ந்தது. சில நாட்களில் என் மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டார். மாமனார் மேலும் பல நாட்கள் கழித்து விட்டுத் திரும்பினார். இவர்கள் உள்ளே நுழையும் போதே பாட்டி "இவரே நல்லா குழந்தையை பார்த்துக்குறார். ரொம்ப பொறுமைசாலி. அவளுக்குக் கூட அந்தளவு பொறுமை இல்லை" என்று என்னை  புகழ்ந்தார். என்ன இடி வரப்போகிறதோ என்று கொஞ்சம் பயந்தேன்.

 என் மனைவியோ தன் பெற்றோரை பார்த்து "நீங்க ரெண்டு பேரும் லண்டன் பாரிஸ்லாம் போனப்பவே நினைச்சேன். எல்லாம் திருஷ்டிதான். பொல்லாத கண்ணு" என்றாள். நான் "அப்படி எத்தனைப் பேருகிட்டே நீங்க சொல்லிட்டு போனீங்க? எனக்கே மூனு நாள் முன்னாலதான் தெரியும், அப்படியே திருஷ்டி போடனும்னா நீயோ இல்லை உன் தம்பியோதான் போட்டிருக்கனும். இல்லை உங்க அப்பா உங்க அம்மாவுக்கும், உங்க அம்மா உங்க அப்பாவுக்கும் போட்டிருக்கனும். வெளியார் யாரும் போட சான்ஸே இல்லை" என்றேன். "ஏன் நீங்க இல்லை?" என்றார் மனைவி. நான் "அப்படி புட்டிங் போடறவனா இருந்தா அலைந்து திரிஞ்சு செத்து போன என் மாமா பேரை யூஸ் பண்ணி பிளட் டெஸ்ட் வாங்கியிருக்க மாட்டேன்" என்று சொன்னதற்கு "அதுக்கு பிராயசித்தம்தான் இதை பண்ணீங்க" என்றார் அவர். அலைஞ்சு திரிஞ்சு ஊரிலிருந்து வந்தததுக்கு எனக்கு கிடைத்த பரிசு என நினைத்துக் கொண்டேன்.

கௌசல்யையும் பாவம். இராமனை காட்டுக் போகாமலிருக்க வேண்டி தசரதனை சந்திக்கச் சென்றாள். அவனோ மயங்கி வீழ்ந்திருக்கின்றான். அது கூடத் தெரியாதவள்  அவன் மேல் விழுந்து "நீ இப்படி செய்யலாமா?" என்று கேட்கின்றாள். அதற்கு காரணம் தன் மகன் காட்டுக்கு போகின்றானே என்ற துயரம். அதனால்  அவளுடைய கணவனின் நிலையை அறிய முடியவில்லை.
நடந்த கோசலை, கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன்
கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் - கெட்டு உயிர்
உடைத்த போழ்தின் உடல் விழுந்தென்னவே.

தயரதன் இருக்கும் இடத்திற்துக்கு நடந்துச் சென்ற கோசலை  கேகய நாட்டு மன்னனுக்கு மகளாகிய கைகேயியின் மாளிகையை அடைந்தாள். தயரதன் விழுந்து கிடக்கின்ற மண்ணில் உயிர் கெட்டுச்சிதறிய காலத்து உடலானது கீழே விழுந்தாற் போல விழுந்தாள்.

 பிறியார் பிரிவு ஏது?’ என்னும்; ‘பெரியோய் தகவோ!என்னும்;
நெறியோ, அடியேன் நிலை? நீ நினையா நினைவு ஏது?’ என்னும்,
வறியோர் தனமே!என்னும்; ‘தமியேன் வலியே!என்னும்;
அறிவோ; வினையோ?’ என்னும்; ‘அரசே! அரசே!என்னும்.   
(கோசலை தயரதன் நிலை கண்டு) பிரியக்கூடாதவர்களுடைய பிரிவுக்குக் காரணம் என்ன? இது உனக்குத் தகுதியோ?  எங்கள் தற்போதைய நிலை நீதியாகுமா?  இந்த நிலையை நீ நினையாமல் இருப்பது என்ன காரணம்? வறுமையுற்றவர்களுக்குச் செல்வமானவனே; தனியளான எனக்கு வலிமையான துணையே; இது உனக்கு அறிவு தானோ, அறிந்து செய்யாது ஊழ்வினையால் ஏற்பட்டதோ என்பாள். மன்னனே மன்னனே என்று புலம்புவாள்.

மின் நின்றனைய மேனி, வெளிதாய்விட நின்றதுபோல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய்
உறுகின்று உணரான்; என் என்று உரையான்; என்னே? இதுதான் யாது என்று  அறியேன் 
மன்னன் தகைமை காண வாராய்; மகனே!என்னும்.
தசரதனை நோக்கி பலவாறான கேள்விகளுக்கும், இவளை ஏன் கண்ணீர் வடிக்கின்றாய் என்றும் கூட கேட்காத தசரனுக்கு எதோ பெரிய தீங்கு நேர்ந்துவிட்டது என்றுணர்ந்த கௌசல்யைஇராமா! இதை வந்து பார்! உன் தந்தைக்கு உணர்வில்லை” என்று அரற்றினாள். இராமனோ சுமத்ரையின் மாளிகை நோக்கி போய்க் கொண்டிருந்தான். கௌசல்யையின் அழுகுரல் மன்னர்கள் கூடியிருந்த அவையை அடைந்தவுடன் அவர்கள் வசிட்டனை சீக்கீரம் சென்று பார்த்து விட்டு வாருங்கள் எனக் கூற, வசிட்டன் மன்னவனின் நிலையறிய வேண்டி கைகேயியின் மாளிகை அடைந்தான்.  

இறந்தான் அல்லன் அரசன்; இறவாது ஒழிவான் அல்லன்;
மறந்தான் உணர்வுஎன்று உன்னா, ‘வன் கேகயர்கோன் மங்கை
துறந்தாள் துயரம் தன்னை; துறவாது ஒழிவாள் இவளே;
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ,  
கைகேயி துன்பமற்றிருப்பதால் அவள் மனம் மாறியபடி கண்டு
வசிட்டன் இவ்வாறு கூறினான். அரசன் பிரக்ஞை இழந்திருப்பதும்,
இனி நிச்சயம் இறந்து படுவான் என்பதும் உணர்ந்த வசிட்டன், அவ்விடத்தே
கைகேயி துக்கமின்றி இருப்பதும், கோசலை வருந்திப் புலம்புவதும் கண்டு
கைகேயியே இந்நிலைக்குக் காரணமாயிருந்தல் வேண்டும் என உய்த்துணர்ந்து
உலகிற் பிறந்தார் மனம் வேறுபடல் யாராலும் அறியமுடியாது. நேற்றுவரை
மன்னன்பால் பெருங்காதலுடைய கைகேயி இன்று அவன் மூர்ச்சிக்கவும்
வருந்தாதுள்ளபடியால் யாருடைய மனம் எப்போது எப்படி மாறுபடும்
என்பதை அறிய இயலாது என்று கருதி மேலும் கைகேயியை வினாவச்
செல்கிறான் என்று அடுத்தச் செய்யுளில் தொடரும். அறுபதினாயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்திய மன்னவன் இறந்துபடும்நிலை
கிட்டியது கண்டு பிறந்தார்  பெயருந்தன்மை பிறரால் அறிதற்கெளிதோ
என்றான்.  இங்கே பிறந்தார் பெயர்தல் என்பது பிறந்தவர் இறத்தலாம்.

கைகேயியே வசிட்டனிடம் தன்னால் உண்டான எல்லாச் செயல்களையும் தானே கூறினாள். வசிட்டனும் தயரதனை சமாதானப் படுத்துதவதற்காக "கவலைப் படாதே இவளே இராமனுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுத்துவிடுவாள்" என்று நடக்காது என்று அவனுக்கு தெரிந்திருந்தும் கூறுகின்றான். ஆறுதலான பேச்சும் ராமனே அரசாள்வான் என்பதை கேட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக தசரதனுக்கு உயிர் வந்தது. வசிட்டனும் தன் சொல்லை கைகேயி தட்ட மாட்டாள் என்று நம்பிக்கையும் வைத்திருந்தான். கைகேயி விம்மி விம்மி அழுது அரசன் தன் வாக்கை மாற்றினால் தான் உயிர் வாழேன் தசரதன் உயிரே போனாலும் கவலை இல்லை என்று தான் நின்ற நிலையிலேயே நின்று இருந்தாள்.

கண்னோடாதே, கணவன் உயிர் ஓடு இடர் காணேதே,
புண்ணூடு ஓடும் கனலோ? விடமோ?”  என்னப் புகல்வாய்;
பெண்ணோ? தீயோ? மாயாப் பேயோ? கொடியாய்! நீ; இம்
மண்ணோடு உன்னோடு என் ஆம்? வசையோ வலிதே!என்றான்.
இரக்கமில்லாமல் கணவன்   உயிர் உடலை விட்டுச் செல்லும் துன்பத்தையும் அறியாமல் புண்ணிற் புகும் நெருப்போ,  விடமோ என்று கருதும்படி பேசுகிறாய்; பெண்ணா அல்லது என்றும் அழியாத பேயோ?  நீ கொடியவள்.  இந்த மண்ணோடு உனக்கு என்ன உறவு இருக்கிறது உனக்கு வர இருக்கும் பழியோ மிக வலிதுஎன்றான் வசிட்டன், கைகேயிடம் "அரசன் கூறுமுன் நீயே இராமனிடம் கூறிவிட்டாய். இராமனோ கானகம் போகாமல் இருக்க மாட்டான். அவன் இல்லாமல் தசரதனும் உயிருடன் இருக்க மாட்டான். என்ன காரியம் செய்து விட்டாய்?" என்று வசிட்டன் மேலும் கைகேயிடம் கூறினான்.

தசரதனோ
விழிக்கும் கண் வேறு இல்லா, வெங்கான், என் கான்முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;
பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி, என் பல? உன்
கழத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் ஆம்' என்றான்.
"உன் கழுத்திலிருக்கு அம்மங்கள நானே உன் மகன் பட்டாபிஷேகத்தின் போது காப்பாகும். என்னை பார்க்கவிடாமல் நீயே அவனைப் பார்த்து கானகம் சென்றுவிட கூறிவிட்டாய். அவனோ போகாதிருக்க மாட்டான். அவன் போன பின்பு நானும் இருக்க மாட்டேன் என்றான் தசரதன்

இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கி
சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்;
மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று
உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு' என்றான்.
"இவள் என்னைவியும் அல்லல் நான் இறப்பது உண்மை. ஆயினும் பரதன்ன் நீர்கடன்களைச் செய்யக் கூடாது. அவனும் உரிமைக்கு ஆகான் என்று கோபம் தலைக்கேறியதனால் தசரதன் கூறினான். இவன் தன் பிள்ளைகளில் மீதி பேரைப் பற்றி துளிக் கூட அறிந்திருக்கவில்லை. பரதனைப் பற்றி கௌசல்யை கூறும் போது நின்னிலும் நல்லவன்என்றே அவனை குறிப்பிடுகின்றாள். தசரதனேக் கூட "உன் மகன் அரசு ஏற்கான்" என்று முன்னம் கூறியிருக்கின்றான். னாலும் இப்போது   

அவனால் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத நிலை. இராமனைக் காட்டுக்குச் செல்லாமல் தடுக்க ஒரு உபாயமும் இல்லை என்ற போது ஏற்படுகின்ற ஒரு வித உச்ச கட்ட மனச் சோர்வினால் இவ்வாறு கூறினான் என்றாலும் இவனுக்கு இராமனைத் தவிர வேறு பிள்ளைகளிடம் துளியும் பாசமில்லை. அப்படி நான்கு புதல்வரை பெற்றவன் ஒருத்தனிடம் மட்டும் பாசம் வைத்தால் அந்த பாவம் சும்மா விட்டு விடுமா? தசரதன் இறந்தது அந்த ஒரே காரணத்திற்காகத்தான்.

நின்னிலும் நல்லன்என்பதற்கு என் நண்பர் "இச்சொற்றொடர் என்னை எப்போதும் போல் வேதனையில் ஆழ்த்தியது" என்றார். நான் காரணம் கேட்டதற்கு "பிள்ளைகள் எப்படியிருந்தாலும் தாயன்பு வேறுபடுத்திப் பார்க்கலாமா? இவளை பொறுத்த வரையில் இராமனே இவளின் அளவுகோல். பரதனை நல்லவன் என்று கூறுமிடத்திலும் கூட இவள் இராமனை விட நல்லவன் என்றுதான் கூறுகின்றாள்" என்றார். இது உண்மையிலேயே அப்படியா? என்னைப் பொறுத்தவரை பரதனை இவள் வளர்த்தாள். அதன் பொருட்டே அவன் மேல் மிகவும் பாசம் அதிகமாகயிருக்க வேண்டும். இதன் பொருட்டே கைகேயியே கூட "பரதனை பெற்ற கௌசல்யைக்கு அதைவிட வேறு என்ன சிறப்பான வாழ்க்கை இனி அமையப்போகின்றதுஎன்றே மந்தரையை கேட்கின்றாள்.

அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை,
மன்னவர் மன்னனேல் கணவன், மைந்தனேல்
பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன்; பார்தனில்
என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு?’ என்றாள்  
இராமனைத் தன் மகனாகவும் பரதனை கௌசல்யையின் மகனாகவுமே கைகேயி மனம் மாறும் முன்பு வரை நினைத்தாள். கௌசல்யை இதை ஏன் மணிமுகுடம் இல்லை, வெண்கொற்ற குடையில்லை பட்டம் சூட்டுவதற்கு ஏதேனும் தடையோ என நினைத்துப் பதட்டப்ட்ட தன் மனதிற்கே கூறிய ஆறுதலாக ஏன் எடுத்துக் கொள்ளக கூடாது? இவள் பரம் பொருளையே தன் வயிற்றில் வளர்த்தவள். அது மட்டுமின்றி இங்கு சக்களத்தியின் மகனான பரதனை அவன் அங்கு இல்லாதபோதும், இராமன் முகத்திற்கு எதிரிலேயே பரதன் ”உன்னை விட மூன்று மடங்கு நல்லவன்” என்கின்றாள். அவள் உண்மையை நேர்மையாக எடுத்துரைத்தாள்.  அவளுக்கு இரண்டாவது வரம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அதனால் உனக்கு இது அரசன் கட்டளை என்று ண்ணாதே? உனக்கு இது அறம் என்று கூறினாள். இராமன் காடு செல்ல வேண்டும் என்றதும் அவள் புத்திரப்பாசம் பீறிட்டு "வஞ்சகமோ இது மகனே" என்று கேட்டு அந்நிகழ்வை  தடுக்கும் பொருட்டு தசரதன் மாளிகை நோக்கி விரைகின்றாள். இதில் சகோதரர்களுக்குள் ஒப்பீடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது மட்டுமின்றி கௌசல்யையின் அன்பு முழுமையானது மட்டுமின்றி நால்வரிடத்தும் சிறிதும் வேறுபாடு இல்லாதது.

ஒப்பீடு இல்லாமல் உலகவாழ்க்கையில்லை என்பதும் உண்மை. கம்பனின் இராமனே கூட வாலி வதம் போது, அல்லும் பகலும் தன்னை இமைப் போல் காத்திட்டு வரும் இலக்குவனிடமே "தம்பியர் எல்லோரும் பரதனுக்கு ஒப்பாக முடியுமோ?”  என்கின்றான்.
'அத்தா! இது கேள்' என, ஆரியன் கூறுவான், 'இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
எத் தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?

இந்திரஜித்தின் பாணத்தால் இருமுறை வீழ்ந்து விட்ட இலக்குவனே கூட தன்னைத் தாழ்த்திக் கொண்டு மாயா சீதை படலத்தில் இந்திரஜித் அயோத்திப் போய் அனைவரையும் அழித்துவிடுகின்றேன் எனும் போது இராமனிடம் "இவனின் பாணம் வீரனான பரதனிடம் எடுபடாது அவன் என்ன இலக்குவனா?" என்று கேட்கின்றான். இத்தனைக்கும் இராமாயணத்தில் பரதன் ஒரு தடவைக் கூட வில்லையோ வாளையோ எடுத்துப் போரிடவில்லை.
அவ்விடத்து, இளவல், “ஐய! பரதனை அமரின் ஆர்க்க
எவ்விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று;
தெவ்விடத்து அமையின், மும்மை உலகமும் தீந்து அறாவோ?
வெவ்விடர்க் கடலின் வைகல். கேள்என விளம்பலுற்றான்

திரு. குருநாதனுடன் இதைப் பற்றி அவருடைய அறிவுரை கேட்க தெவிட்டாடத அவருக்கேக் கைவரக்கூடிய அழகு தமிழில் இரு மின்னஞ்சல் அனுப்பினார். நீங்களும் படித்து கம்பன் கவியின் ஆழகில் ஆழ்ந்து ஆழ்வார்களாக சுட்டி இதோ:
Guru's Msg 1

Guru's msg -2

                                                                                                                                         தொடரும்

No comments:

Post a Comment