Monday, February 4, 2013

வரங்கள்



எங்கள் வீட்டில் பெரிய அண்ணன் மட்டும் திருச்சி நேஷனல் ஸ்கூல் மற்றும் வேலூர் ஊரிஸ் ஸ்கூலிலும் ஆங்கில மீடியத்தில் படித்தான். மற்றவர்கள் எல்லோரும் தமிழ் மீடியம்தான். வேலூரிலிருந்து அப்பாவிற்கு திருவண்ணாமலை மாற்றல் ஆகியது. அப்போது அண்ணா 10 வது படித்துக் கொண்டிருந்தான். திருவண்ணாமலையில் டேனீஷ் மிஷன் ஸ்கூலில் 9 வது வரையில் தான் ஆங்கில மீடியம் இருந்தது. இவனுக்கு தமிழ் மீடியத்தில் படித்து பரிட்சை எழுத முடியாது என்பதால், சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் காலணியிலிருந்து என் பெரிய மாமாவின் வீட்டில் தங்கி, புரசைவாக்கம் MCTM ஸ்கூலில் 10 மற்றும் 11 வது படித்து விட்டு அரும்பாக்கத்திலிருக்கும் DG வைஷ்வா கல்லூரியில் பீயூஸி படித்தான். இவன் ஸ்கூலிலிருந்தே தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று தவறாமல் முதல் பரிசு வாங்குவான். எப்போதுமே புத்தங்கங்கள்தான் பரிசு பொருட்கள். பாரதியாரின் கவிதைகள் மூன்று புத்தகங்கள் வீட்டில் இருந்தது. பாரதியின் அறிமுகம் எனக்கு அப்போது தான் ஆரம்பமாகியது.


திருவண்ணாமலையில் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் போது காலாண்டுப் பரிட்சைக்கு முன் அப்பாவிடம் “ இங்கிலீஷ் மீடியத்துலே படிக்கப் போறேன். தமிழ் மீடியத்துலே படிச்சா பீயூஸிலே பயங்கர பிராப்ம் வருதாம்” என்றேன். “உன்னால் முடியுமா”? பெயில் ஆக மாட்டியே?” இது அப்பாவின் கவலை. இப்போது போலில்லாமல் அன்று எல்லா வகுப்புகளுக்கும் ஆண்டுத் தேர்வு உண்டு, பெயிலும் உண்டு. நான் ”கவலையே பட வேணாம். நான் கட்டாயம் பாஸ் பண்ணுவேன்” என்றேன். இரண்டு நாள் கழித்து அப்பா “போய் ஐசக்கைப் பாரு. நான் அவர் கிட்டே பேசிட்டேன்.” ஐசக் என்பது பள்ளியின் தலைமையாசிரியர். பொதுவாக அவரைப் பார்ப்பது கடினம். பிரேயரின் போதுதான் அவரைப் பார்க்க முடியும். 10 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு சயின்ஸ் எடுப்பார் என்று கேள்வி. நான் போய் வெளியே உட்கார்ந்திருக்கும் பியூனிடம் சொல்லி கால் மணி கழித்து அவரைப் பார்த்தேன். அவரிடம் நான் விஷயத்தை சொன்னதும் “உங்க அப்பா சொன்னாப்லே. இந்தா சீட்டு. இதை கொண்டு போய் 8C லே வாத்தியார் கிட்டக் கொண்டு போய் கொடு. அப்புறமா நாளைக்கு 8 ரூ வாங்கி வந்து ஆபீஸ்ல குடு” என்றார். எல்லாவற்றிற்க்கும் தலையாட்டிவிட்டு 8 C வகுப்பிற்கு சென்றேன், அப்போது கிளெமெண்ட் என்பவர் சயின்ஸ் வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். மூன்றாவது பெஞ்சில் உட்காரச் சொன்னார். எனக்கு ஒருபுறம் தாஸ் இன்னொரு புறம் நடேச சாஸ்திரி வீட்டு பையன் ரவிசங்கர். அதே வகுப்பில் தான் ரமேஷ் பாபுவும், ரைஸ்மில் ரெட்டியார் பையன் அருணாச்சலமும் படித்தார்கள். ரமேஷ் பாபுவுடன் இன்றைக்கும் தொடர்பிருக்கின்றது.  தாஸை நாங்கள் அண்ணா நகரில் இருக்கும் போது பார்த்தேன். எஸ் எஸ் எல் சீயுடன் படிப்பை நிறுத்திய அவன் பல்லவனில் கண்டக்டராக இருந்தான். நான் பயணிக்கும் 27 C  ரூட்டிலேயே வேறு இருந்தான். ஒரே ஒரு முறை லேடிஸ் ஸ்பெஷல் பஸ்ஸிலும் கூட என்னை  ஏற்றி கொண்டுச் சென்றிருக்கின்றான். அண்ணா நகரை விட்டபின் தொடர்பெல்லாம் போய்விட்டது.

ஒன்பதாவது காலாண்டு பரிட்சைக்குப் பிறகு அப்பாவிற்குக் கடலூர் மாற்றலாகியது. கடலூரில் St ஜோஸப் பள்ளியில் சேர்ந்தேன். என் தம்பியும் அதே ஸ்கூல். முதலில் வீடு மஞ்சகுப்பத்திலேயே இருந்ததால், மதியம் வீட்டிற்குப் போவோம் சாப்பிடுவதற்கு. ஒரு வருடம் கழித்து புதுப்பாளையம் மசூதி தெருவிற்கு மாற்றிக் கொண்டுச் சென்ற பிறகு மதியம் ”தாயி” இருவருக்குமாக சாப்பாடு காரியரில் எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பாள். ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு மரத்தை சுற்றி விளையாட ஆரம்பித்து விடுவோம். எனக்கு வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு செல்வதற்கு என் அண்ணன் வைத்திருந்த பழைய ஹெர்குலிஸ் சைக்கிள் கிடைத்தது. என் தம்பியையையும் வைத்து கொண்டு டபிள்ஸ் அடித்துக் கொண்டு போகவேண்டும். அவன் நல்ல குண்டன் வேறு. இது எல்லாம் ஒரு ஆறு மாதம் நீடித்தது. பத்தாவது வகுப்பில் அரையாண்டுத் தேர்வில் பொது கணிதம் மற்றும் அல்ஜீப்ராவில் பெயில் மார்க் எடுத்தவுடன் எனக்கு அப்பா டியூஷன் வைத்துக் கொள் என்றார்.  எங்கள் பள்ளியிலேயே கணித ஆசிரியர். ஜோசப் தன்மையாக நிதானமாக சொல்லித் தருவார். அவரிடமே காலை மாலை இரு வேளைகளிலும் டியூஷன். காலை 5 மணிக்கு ஆரம்பமாகும். 7.30 மனிக்கு முடியும். அதற்கு நான் காலை 4.30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சாயங்காலம், பள்ளியிலிருந்து நேராகவே அவர் வீட்டுக்கு சென்றுவிடுவேன். தினமும் 40 பைசாவிற்கு அவர் வீட்டருகே இருந்த சந்திரா ஒட்டலில் ஒரு ஸ்பெஷல் சாதா தோசை, நிறைய சாம்பார், சட்னி சாப்பிட்டு விட்டு டியூஷன் போவேன். அந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்தவர் சீதாராமய்யர். இவர் உதவி தலைமையாசிரியரும் கூட. இவர் என் மாமாக்களுக்கும் ஆசிரியராக இருந்திருக்கின்றார்.

பீயூசி சென்னையில் ஏம் ஜெயினில் படித்த போது மதிப்பெண்ணிற்காக சம்ஸ்கிருதம் எடுத்தேன். என் மண்டையில் ஏறாத விஷயமாகவே அது இருந்தது. “ராமஹ ராமௌ ராமான்னு” என்று ஒருமை, இருமை மற்றும் பன்மையைக் குறிக்கும் இலக்கணக் குறிப்பு என் தலைக்குள்  போகவேயில்லை. நள தமயந்தி மற்றும் காளிதாசரின் ரகுவம்சம் காண்டோ 4 பாட புத்தகங்கள். ஒரே ஒரு அதிர்ஷ்டம். ஆங்கிலத்தில் பதில் எழுதலாம். நளன் தமயந்தி ராம் என்பது போன்றவற்றை மட்டும் சமஸ்கிருதத்தில் எழுதி தப்பித்தேன். கணக்கு எடுத்தவர் பாலு. இவர் VP ஆகவும் இருந்தார். கெமிஸ்ட்ரி எடுத்தவர் டாக்டர். ரங்கசாமி. இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர். காரில் தான் காலேஜிற்கு வருவார்.

ஏனோ அவருக்கு என் பேரில் ஒரு இனம் தெரியாத வெறுப்பு. அவருடைய வகுப்பு எப்பொதும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது பீரியட் ஆக இருக்கும் அதுவும் வீட்டிலிருந்து ஒழுகும் தயிர் சாதத்தைக் கொண்டு போய் சாப்பிட்ட பிறகு, தன்னையறியாமல் சாமியாடும் போது வேண்டும் என்று என்னை மட்டும் கேள்விகேட்டு பதில் சொல்லாவிட்டால் வெளியேற்றிவிடுவார். அப்போது எனக்கு ஆங்கிலமும் அவ்வளவாக பேச வராது. ஆனால் டிசம்பர் மாதம் நடந்த மாடல் தேர்வில் கல்லூரியிலே நான் தான் முதலாவதாக வந்தேன் ஆங்கிலத்திலும், கெமிஸ்டிரியிலும்.  

 
பிஸ்ஸி விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில். ரயில்வே காலனியை கடந்து போகவேண்டும் இல்லை பாண்டி ரோடிலிருந்து போகவேண்டும். நாங்கள் இருந்த ரங்கநாதன் தெரிவிலிருந்து குறைந்தது மூன்று மைல் தூரம். கொஞ்சம் விட்டா கோலியனூரே வந்துவிடும். கெமிஸ்டிரி ப்ரொபஸர்கள் , ஜணாதனன், ராமநாதன் மற்றும் கண்ணையா. கண்ணையா இவர் திருநெல்வேலியை சார்ந்தவர். இவருடைய தம்பி செல்லதுரை என் வகுப்பில் படித்தான். அவன் அடிக்கடி சொல்லும் வார்த்தை  ”எலே! நிக்கி!” நிக்கி என்பதே அவன் பட்டப் பெயராயிற்று. பிஸிக்ஸ் ப்ரொபஸர் பழனிச்சாமி மற்றும் கல்யாணி. கல்யாணிதான் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பனைத் தேடி காட்டிற்குள் தூது சென்றவர். கணித ஆசிரியர்கள் தேவராஜன் மற்றும் குருமணி. குருமணி எங்கள் சித்தி குடியிருந்த வீட்டிலேயே ஒரு போர்ஷனில் குடியிருந்தார்.  சில வருடங்கள் கழித்து ராமநாதன், கண்ணையா மற்றும் பழனிச்சாமி எல்லோருமே சென்னை ஏசி டெக்கில் பிஎச்டி படித்தனர். என்னுடைய ஒன்னு விட்ட சித்தப்பா அங்கு கணிதப் பேராசியர். அவர் இவர்களிடம் பிரசாத்தை தெரியுமா என்றால், அனைவருமே நல்ல சர்டிபிகேட் கொடுத்தார்கள்.

இதே கல்லூரியில் தான் தெய்வசிகாமணி எனும் “ பொன்முடியும்” ப்ரோபஸராக, சைக்கிளில் வந்து செல்பவராக இருந்தார். தி மு க அமைச்சரவையில் மினிஸ்டராகவும் பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கும் கல்லூரிகளுக்கும் அதிபதியாகவும் இன்று இருக்கின்றார். கல்யாணி திண்டிவனத்தில் இருந்து சேவை செய்து கொண்டிருக்கின்றார். ராமநாதனின் மருமகனை இங்கு சந்தித்தேன். அவன் மூலம் அவர் ப்ரெஸிடன்ஸி கல்லூரியில் முதல்வராகி ஓய்வு பெற்றதை அறிந்தேன்.

தமிழ் ப்ரொபஸர் சிதம்பரம் செட்டியார். இவர் விழுப்புரம் நகராட்சி மேல்நிலை பள்ளிக்கு அருகில் வசித்து வந்தார். அவர் வீட்டுக்கு மிக அருகில் என் சித்தியின் வீடு, கீழ் அனுமார் கோவில் தெருவில் இருந்தது. இவர் அற்புதமாக பாடம் நடத்துவார், பாட திட்டத்தில் இல்லாதவற்றையும் சேர்த்தே சொல்லிக் கொடுப்பர். கம்பனிடம் அதீத ஈடுபாடு. அப்போது பாட திட்டத்தில் இருந்தது அனுமன் தூது மட்டும் தான். ஆனாலும் விலாவாரியாக மூன்று மாதம் முக்கியமான கம்பன் கவிதைகள் ஆராய்ந்து பாடத்தை நடத்துவார். லீவு நாட்களில் சித்தி வீட்டிற்கு செல்லும் போது அவருடைய வீட்டிற்கு போய் பாரதியையும் சிலம்பையும் சிறிது கற்றதுண்டு. ஆயினும் அதன் பெருமையோ அருமையோ அன்று புரியவில்லை.
21 வருடம் வரை தமிழ் படித்தும் ஒரே ஒரு தமிழ் வாத்தியாரின் பெயரை மட்டுமே என்னால் நினைவு கூறமுடிகின்றது. சின்ன வயதிலேயே மொழி இலக்கணம் நன்றாக புரியும்படி சொல்லிக் கொடுக்காத வாத்தியார்கள் அவர்கள் கடனே என்று சொல்லிக் கொடுத்தார்கள். நானும் கடனே என்றே கற்றுக் கொண்டேன். இருவருக்குமே இருக்கும் இந்த அலட்சியத்திற்கு முக்கியமான காரணமாக எனக்குப் படுவது தமிழ் மார்க்குகள் மேற்படிப்புக்கோ அல்லது பட்டப்படிப்பிலோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதில் பாஸ் மார்க் வங்கினால் போதும். அதுவும் 35 மார்க்குதான்.
 
எனக்கு பாரதியின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.  எளிமையான தமிழில் மிக ஆழமான கருத்துக்களையும் பாண்டித்யம் அறியா எனை போன்றோரும் கவிதா இன்பம் அறிய முடியும் என்று நிருபித்த அமரவார்த்தைகளின் கரூவூலம் அவன். அதுவும் அவன் கண்ணன் பாடல்களில் மனதை இழக்காமலிருக்க முடியாது. அதே போல் பாஞ்சாலி சபதமும் குயில் பாட்டும். எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது மயக்க அனுபவத்தைத் தருகின்ற மகுடியின் நாதம் அது.

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை என்பது போல் இங்கு குறைவான தமிழர்களேயிருப்பதால் என்னை போன்றோருக்கும் பாரதிவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு முறை இலக்கிய வட்டக் கூட்டதில் பாரதி விழா நடைபெற்றபோது அவன் இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களை விட குறைவானவர்கள் தான் வந்திருந்தனர். திரு. குருநாதன் மிக அருமையாக “தோழர் பாரதி” எனும் தலைப்பில் அன்று உரையாற்றினார்.

இலக்கியவட்டக் கூட்டதில் கவிதை எனும் தலைப்பிலேயே ஒரு முறை கூட்டம் நடைபெற்றது. அதில் அவரவர்கள் தாங்கள் இரசித்து, படித்து மகிழ்ந்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில் ராமநாதன் புதுக் கவிதையைப் பற்றி உரையாற்றினார். அதில் 70களில் ஆனந்தவிகடனில் வெளிவந்து முதல் பரிசையும் வென்ற அரங்கநாதனின் கவிதை “நள்ளிரவில் வாங்கினோம் சுதந்திரம்; இன்னும் விடியவேயில்லை” எனும் கவிதையை அவருடன் படித்த இன்னொரு மாணவனை ரொம்ப பாதித்தாகவும் அவனும் பதிலுக்கு “பட்ட பகலில் வாங்கியிருந்தால் மட்டும் என்ன சாதித்திருப்போம்? என்று எழுதி அதுவும் பரிசு பெற்றது என்று கூறி அப்துல் ரகுமான், மீரா மற்றும் விக்ரமாதித்யன் முதலியவர்களின் சில கவிதைகளையும் அறிமுகப் படித்தினார்.

பிறகு ரகுமானின் பால்வீதி எனும் கவிதைத் தொகுப்பை படித்தேன் எனக்கு பிடித்த சில கவிதைகளில் ”ஐந்தாண்டுக்கு கொருமுறை” என்ற தலைப்பின் கீழ்
வாக்கு மூலம்
 புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
      போலி நளன்களின் கூட்டம்
மையில் மாலையுடன்
      குருட்டு தமயந்தி.
நளன் தமயந்தி கதை நாம் கேள்விப்பட்டது தான். தமயந்தியை மணப்பதற்காக தேவர்கள் அனைவருமே நளன் போன்ற உருவத்திலேயே வந்தனர். ஆனால் இமையா வரம் உடையவர்களாதாலால் தமயந்தி சுலபமாக அவனைக் கண்டுபிடித்து மாலையிட்டாள்.

இதையே இன்றைய தேர்தல் களத்திற்கு ஒப்பிடும்போது அந்த தமயந்தி குருடாகவும் இருக்கின்றாள் என்பதை வாக்காளர்களுக்கும், போலி நளன்களாக வேட்பாளர்களும்,இருந்தால் என்பதை மிக அழகாகக் கூறும் கவிதையிது. மரபின் தொன்மத்தின் மேலேயிருந்து கவிதை எழும் போது அது அத்துணை வீர்யாமாகிவிடுகின்றது. பெர்னாட் ஷா சொன்னது போல் “நான் ஷேக்ஸ்பியரை விடப் பெரியவன்; ஏனெனில் நான் அவன் தோள்கள் மீது நின்று கொண்டு இவ்வுலகை பார்க்கின்றேன்” மரபின் வழியில் வந்த புதுக்கவிதைகளும் அவ்வாறே விளங்குகின்றன.

அதே தொகுப்பில் அப்துல் ரகுமான்
வரங்களே 
சாபங்களாகும் என்றால்
இங்கே தவங்கள்
எதற்காக?
இது இத்தொகுதியில் தேர்தலையும் ஓட்டு போடும் வரம் உள்ளதையும் அந்த வரங்கள் பிறகு சாபங்களாக மாறுவதையும் அதனால் தேர்தல் தேவைதானா? என்று கவி எழுப்பும் கேள்வி என்றாலும் இராமயண பின்புலத்துடன் பார்க்கும்போது மிக அற்புதமான கவிதையாக விரிகின்றது என்று நண்பர் இராமநாதன் ஒரு முறை பேசினார்.

தசரதன் இரண்டு வரங்கள் என்றோ கைகேயிற்குக் கொடுத்தது. அவன் தவமியற்றப் போகவேண்டும் ஆகவே இராமன் ராஜ்ஜிய பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இராமனிடம் வேண்டி பட்டாபிஷேகம் நடைபெறும் நாளில் கைகேயி அவ்வரத்தின் மூலம் பரதன் நாடாள வேண்டும், இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றாள். இவனுக்கு இராமனைத் தவிர வேறு நினைப்பு இல்லை. மூர்ச்சையாகிவிடுகின்றான். கைகேயியே ராமனிடம் கூற அவன் தன் தாயாரான கௌசல்யையிடம் சொல்லிக் கொண்டு விடைபெறும் வேளையில் இதை எப்படியும் தடுத்து நிறுத்துவேன் என்று அவள் கைகேயியின் மாளிகையை சென்று பார்க்கின்றாள். வசிட்டனும் வந்து அறிவுரை கூறியும் கைகேயியின் மனம் மாறவில்லை. தசரதன் அவளை நான் மனைவி என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்; பரதனும் என் ஈமச்சடங்குகளை செய்யக் கூடாது என்று கூறினான், தன் மகன் இராமன் காட்டுக்குப் போவது உறுதி என்றும் தான் இறப்பதும் உறுதி என்றும் உணர்கின்றான். அப்போது அவனுக்குத் தன் சிறுவயதில் சரவணகுமாரனின் கண்ணிழந்த இரு பெற்றோர்கள் இட்ட சாபம் நினைவுக்கு வருகின்றது. கொடுத்த வரங்கள் இவ்விடத்தில் சாபங்களாகி சாபங்களை நினைவூட்டுகின்றன.

பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளதுஎன்று,
அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான்.

இராமனோ காடு செல்லாமல் இருக்கமாட்டான். நான் உயிரை இழப்பதும் உறுதி. என்னுடைய இளைய வயதில் முனிவனிட்ட சாபம் ஒன்று இருக்கின்றது. அதை நீ கேள்” என்று கௌசல்யையிடம் தசரதன் கூறினான். 
  
வெய்ய கானத்திடையே, வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று, கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன்.

”வேட்டையின் மேல் அதிக விருப்பமுள்ள நான் சிங்கம் மற்றும் யானைகளும் வரும் ஒரு அடர்ந்த காட்டில் நதியின் கரையில் அன்று மறைந்திருந்தேன்” என்றான் தசரதன் மேலும்



ஒரு மா முனிவன் மனையோடு, ஒளி ஒன்றிலவாய் நயனம்
திரு மா மகனே துணையாய், தவமே புரி போழ்தினின்வாய்,
அரு மா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள.

”ஒப்பற்ற சிறந்த முனிவன் தன் மனைவியோடு கண்கள் பார்வையிழந்தவனாக தன் அழகிய சிறந்த  மகனே துணையாய் தவம் செய்து கொண்டிருக்கின்ற வேளையில், தாய் தந்தையருக்கு தண்ணிர் எடுத்துவர ஆற்றின் அருகில் சிறு வாயுள்ள குவளையில் நீரை முகர அது எழுப்பிய சப்தத்தை, நான் யானை நீர் அருந்துவதாக நினைத்து அம்பு விட்டேன். அது அப்பிள்ளையின் மீது பாய்ந்தது. அவன் அலறல் கேட்டவுடந்தான் என் தவறை உணர்ந்தேன்”.   

நீர் முகக்கும்ஓசை கேட்டு ஓசையின்மூலம் அம்பைவிடும்சப்த வேதி
என்னும் முறையில், யானை நீர்குடிப்பதாகக் கருதி அம்பை எய்தான்
ஆதலின் அறியேன்என்றான். இருமுதுகுரவர்க்கும் கடமைஆற்றும்
சிறப்பு நோக்கி, ‘திரு மா’, ‘அரு மாஎன்று அம்மகனைச் சிறப்பித்தார்.
மகனேகாரம் பிரிநிலை. வேறு துணையில்லை என்றவாறாம்.

இப்போது என் பெரிய அத்தை 88 வயதிற்கு மேலானவள், பாவம் ஒரு முதிர்ந்தோர் இல்லதில் இருக்கின்றாள். நான் யாரையும் குறை சொல்லவில்லை. நகர வாழ்கையில் இட நெருக்கடியிருக்குமிடத்தும் இன்றைய யதார்த்தம் இதுதான். இப்போது சென்னைக்கு அருகில் வயதானவர்களுக்கு என்றே பெரும் குடில்கள் கட்டப்படுகின்றன. அதேபோல் நான் இன்று சென்னையில் பெரும்பாலும் பார்ப்பது வயதானவர்கள் தனியாக தாங்கள் வாங்கிய வீட்டையும் சொத்தையும் அல்லது மகன் அல்லது மகள் வெளிநாட்டிலிருந்து வாங்கிய சொத்துக்களையும் பூதம் போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் IAS( Indian Aya Service) முடித்தவர்கள். ஓய்வுபெற்ற பின் அமெரிக்காவில் இருக்கும் மகன் அல்லது மகள்களுக்கு இரு குழந்தைகளின் பிரசவத்திற்கும் குழந்தைகள் டேகேர் சென்டரில் சேரும் வரையிலும் ஆயா சர்விஸ் செய்து முடித்து ஓய்ந்து போனவர்கள். இவர்களுக்கு அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் எந்த தட்பவெப்பநிலை என்பது முதற்கொண்டு அத்துப்படி. ஆனாலும் பேசுவதற்கு துணையுமில்லாமல் கண்களில் ஒரு வித நிரந்தரமாகிவிட்ட சோகத்துடன் நாட்களை கஷ்டப்பட்டு கடத்துகின்றனர். உண்மையில் பெரிவர்களையும் நெருங்கிய சொந்தங்களையும் வயதான காலத்தில் பார்த்து கொள்கின்றவர்கள் அனைவரும் என்னை பொறுத்த வரையில் தெய்வத்திற்கு சமானம்.
 
 இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகம் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்; -
இரு குன்று அனைய புயத்தாய்! - இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!என்றே.

முனிகுமரன் இரு கண்களும் இல்லாத தாய் தந்தையர் நீர் அருந்துவதற்காக வந்தேன். உணராமல் நீ விட்ட பாணத்தினால் நான் மரிப்பது நிச்சயம்,. வருந்தாதே. இது ஊழ்வினையின் பயன்” எனக் கூறி இறந்தான்.
.
தசரதன் இறந்த முனிக்குமரனையும் தண்ணிரை எடுத்துக் கொண்டு முனிவரை அணுகிய போது அவர்கள்

மைந்தன் வரவே நோக்கும், வள மாதவன் பால், மகனோடு
அம் தண் புனல் கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவாய்
வந்து இங்கு அணுகாய்; என்னோ வந்தது? என்றே, நொந்தேம்;
சந்தம் கமழும் தோளாய், தழுவிக் கொள வா" எனவே

மைந்தனே வந்துவிட்டன் என்று நினைத்து ஏன் இவ்வளவு நேரமாகிவிட்டது வருவதற்கு. வந்து எங்களைத் தழுவிக் கொள்” எனக்கூறியதைக் கேட்ட தசரதன்

வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘ நீ யார்?’ என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே  

”நான் வேழம் என்று நினைத்து விட்ட அம்பு உங்கள் மகன் மீது பாய்ந்துவிட அவன் அலறலால் என் தவறை உணர்ந்த நான் அவன் முன் சென்று வினவ அவன் எல்லாவற்றையும் எடுத்துக் கூறி உங்களை வணங்கி வானோர் எதிர்வந்து அழைத்துச் செல்ல உயிர்விட்டான்” என்றான்.

தாய்தந்தையர் இருவரும்
வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்றுஎன்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!என்றார்;
போழ்ந்தாய் நெஞ்சைஎன்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.

மைந்தன் இறந்தவுடன் மிகவும் வேதனைப்படு ”நீ போய் நாங்கள் எப்படியிருப்போம். நாங்களும் உடன் வருகின்றோம்” என்று வருந்தினர். தசரதன் நானே உங்களுக்கு மகனாக உங்கள் எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றுவேன் “ என்றான்

வயதான பெற்றோர்கள் உயிருடன் இருக்கையில் சிறு வயதில் பிள்ளைகள் இறப்பது என்பது அப்பெரியவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனையாகும். அதுமட்டுமின்றி நோய் வாய்ப்படாமல் ஒரு விபத்திலோ இன்னொருவன் வீபரிதத்திலோ அந்த மரணம் விளைந்தால் அது இன்னும் கொடுமை. சீஏ படிக்கும் போது கிண்டியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பர்களில் ஒருவன் சாக்கடையில் வீழ்ந்து விட்ட பந்தை பொறுக்கச் சென்ற இன்னொரு நண்பன் தத்தளிப்பதைப் பார்த்து இவன் இறங்கி அந்த பைனைக் காப்பாற்றினான். ஆனால் இவன் இறந்து போனான். இவன் காரியங்களுக்குக் கூட காப்பாற்றப்பட்ட பையனோ அவன் குடும்பத்தினரோ வரவில்லை. இறந்தவனின் பெற்றோர் அப்போது பட்டத் துயரத்தை அப்படியே இந்த வரிகளில் என்னால் பார்க்க முடிகின்றது.

அவர்கள் தசரனை நோக்கி
தாவாது ஒளிரும் குடையாய்! தவறு இங்கு இது; நின் சரணம்,
காவாய்என்றாய்; அதனால், கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடர் உற்றனை நீ
போவாய், அகல் வான்என்னா, பொன் நாட்டிடை போயினரால்.
தவறு என்று உணர்ந்து சரணமும் அடைந்த காரணத்தினால் கடுமையான சாபம் கருதாமல் எப்படி நாங்கள் மகனை இழந்து வருத்தப்பட்டு இறப்பது போல் நீயும் உன் மகவை பிரிந்து இறப்பாய்” என்று கூறி தங்கள் பையனிருக்குமிடம் சென்றனர். தசரதன் அவர்களுக்கு நீர்க்கடன் செய்தான். இதைத் தான் பால காண்டத்தில் கம்பன்

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.    

சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், “இன் சொல்
மைந்தன் உளன்என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்;
அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும்,
எம்தம் உயிர் வீகுதலும், இறையும் தவறாஎன்றான்.

மகன் இன்றி இருந்த தயரதனுக்கு முனிவன் சாபம் மகன் உண்டு
என்பதை உணர்த்திற்று என்பதால் அப்போதைக்கு அது
மகிழ்ச்சியானதாகவே ஆயிற்று என்றானாம் - மகன் பிறப்பது முனிவன்
சாபத்தால் உண்மையாகி நிறைவேறியமையின் மகன்பிரிவதும், தன்னுயிர்
போவதும்கூட அச்சாபப்படி நிறைவேறுவது உறுதி என்றான்

நாம் கூட இன்றைக்கும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நமக்கு அளிக்கப்பட்ட வரமாகிய வாக்குச்சீட்டை பயன்படுத்துகின்றோம் நல்ல ஆட்சி வரும் என்று தசரதன் தனக்கு மகன் உண்டு என்று நம்பியதைப் போல. ஆனால் இன்று வரையிலும் அந்த நம்பிக்கை நிறைவேறவேயில்லை. ஒவ்வொரு தடவையும் நம்முடைய சாபங்கள் அதிகமாகவே ஆகின்றதே தவிர குறையவேயில்லை.


No comments:

Post a Comment