Friday, November 25, 2011

வெள்ளம்

சிறு வயதுமுதல் காதில் பிரச்சினையிருந்ததால் நீச்சல் கற்றுக் கொள்ள வாய்ப்பேயில்லை. சிறிய அண்ணன் மட்டும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் நீச்சல் கற்றுக் கொண்டான். அவனுடன் போகும் போது, கிணற்றில் இறங்கி அவர்கள் நீச்சல் பயில, மேலே உட்கார்ந்திருக்கும் நான் யாரையாவது நீச்சல் நல்லாத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டால் அவனுக்கு நீச்சல் தெரியுமான்னு கேக்கறியே .......அவன் காவேரி ஆளுடா என்பான்.  பிறகு ஆறு ஒடுமிடத்தில் பெண்களும் கூட, மிகத் திறமையாக நீந்துவதைப் பார்த்திருக்கின்றேன்.


நான் வேலூரில் சிறியவனாக இருந்த போது பாலாற்றில் தண்ணீர் போயே பார்த்ததில்லை, வெள்ளத்தை எங்கே பார்ப்பது? திருவண்ணாமலையில் ஆறு பார்க்கவேண்டும் என்றால் சாத்தனூர் அணைக்குத்தான் செல்ல வேண்டும். கடலூரில் நாங்கள் இருந்த போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. சாத்தனூர் அணை திறக்கபட்டதாக அப்பாவிற்கு செய்தி வந்தது. அப்பாவும் “சரியாக இன்னும் எட்டு மணி நேரத்தில் (விடியற்காலை 3 மணி அளவில்) வெள்ளம் கடலூருக்கு வந்துவிடும்என்றார். தென் பெண்ணைக் கரையோரம் வசித்த நண்பனிடம் சொன்னதற்கு நாங்க பார்க்காத வெள்ளமா? என்றான். தென் பெண்ணையும், கெடில நதியும் கரைபுரண்டு வந்து வீடுகளையும் மாடுகளையும் அடித்துச் சென்றது. நணபனைத் தேடி போன போது பள்ளிக்கூடத்தில் அவ்னுடைய குடும்பம் தங்கியிருந்தது. வீட்டிலுள்ள் அனைத்தையும் வெள்ளம் கொண்டுப் போய்விட்டது அவனுடைய புத்தகங்களையும் சேர்த்து. அனைத்தையும் இழந்து அவன் நின்றபோது  பயம் ஒன்று தான் மனதிலிருந்தது.

சித்தூரில் தாத்தா மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் வந்தது. அப்பா வெள்ளப் பெருக்கை பார்வையிட்டு வந்ததும், விழுப்புரத்திலிருந்து கண் திறக்காமல் கொட்டும் அக்டோபர் மாத மழையில் கிளம்பினோம். வீட்டின் (ரங்கநாதன் தெரு) கோடியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சூரக்காய் உடைத்துவிட்டு NH 45 இல் திரும்பும்போது, எதிரில் வந்த லாரி சற்றே உரசியதால் பயணம் செயத காரின் ஒரு headlight பணால். ஏம்பா தூங்கலியா? என்ற அப்பாவின் கேள்விக்கு டிராவல்ஸ் ஓட்டுனர் “இபோதாங்க வந்தேன். ரெண்டு நாளா தூக்கமில்லாம வண்டி ஓட்டி வந்தேன்.. அவனை டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கச் சொல்லி வேலூர் வரைக்கும் நானே ஓட்டறேன். நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்க. அப்புறம நீ ஓட்டுவியாம். திருவண்ணாமலைலே ஹெட் லைட்டை மாத்திக்கலாம் அப்பா ஓட்ட, ஒரே ஒரு விளக்குடன் பயணம் தொடர்ந்தது.


வழியில் ஒரு தரைப் பாலத்தில்,  கார் டயரளவிற்கும் மேல் வெள்ளம் போய் கொண்டிருந்தது. பெரிய அண்ணா உயரம் கம்மி. தம்பிக்கோ வயதும் குறைவு. நல்ல உயரம் என்றால் அது என் இரண்டாவது அண்ணனும் நானும். நீங்க ரெண்டு பேரும் கையைக் கெட்டியாகப் பிடிச்சுண்டு, வெள்ளப் போக்கிற்கு எதிர்புறமாக போங்க. அணைத்தாற் போல் நான் காரை ஓட்டி வருகிறேன். ஒண்ணும் ஆகாது. நான் இருக்கேன் அப்பா சொன்னதும், வேலையின் நிமித்தம் எத்தனையோ வெள்ளத்தைப் பார்த்திருக்கார் என்ற நம்பிக்கையிருந்தாலும், பயத்துடன்  பாலத்தைக் கடந்தோம். சித்தூர் போவதற்கு முன்பே கடுமையான ஜுரம், இருவருக்கும்.

சுழித்துக் கொண்டு ஓடும் ஆற்றை முதல் முறையாக பார்த்தது ஹரித்வாரில். இரவு பத்து மணிக்குப் போய் சேர்ந்ததும் அங்கிருந்த மடாதிபதி “ போய் கங்கையில் ஸ்நானம் பண்ணிண்டு வாங்கோ. அதுக்குள்ளெ சாப்பாடு ரெடியாய்டும். துணைக்கு வந்த டெல்லி யூ என் ஐ கேன்டீன் நடத்துனரான நாரயணஸ்வாமி அய்யர் அவர்களின் மகன் முரளியும் வேறு வழியின்றி, மற்றொரு அக்டோபர் மாத இரவில் கங்கையின் படித்துரையில் மூழ்கிணோம். சில நொடிகளில் அந்தக் குளிர்ச்சி ஒத்துக் கொண்டு, நன்றாக அனுபவித்து நீராடீனேன். படித்துறையில் உட்கார்ந்து பார்க்கும் போது கங்கையின் அகலமும், சுழிப்பும், வேகமும், தண்ணீரில் விழும் வெளிச்சம் ஆற்றின் போக்கிற்கேற்ப நர்த்தனமாடிக் கொண்டே சென்றது. பெண் பார்த்து, இரு குடும்பத்தினரும் சரி என்று சொல்லி, நிச்சயதார்த்தமும் ந்டந்த பிறகு, கல்யாணத்திற்கு இடைப்பட்ட நாட்களில் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றிய மனைவியின் முகத்தைப்போல, பார்த்துக் கொண்டே வாழ்நாளைக் கழித்துவிடத் தோன்றியது.   

ஒரு கதையை, அழகான திரைக்கதையாக மாற்றி, இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்,  தேர்ந்த நடிக நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் திரையில் தோற்றுவிப்பதைப் போல, கம்பனும் ஒவ்வொரு காண்டத்தையும் பல படலங்களாகப் பிரித்து அவனுக்குள்ள மரபு மற்றும் இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் மிக அரிய சித்திரத்தை வார்த்தைகளின் கட்டால் நம் கண் முன்னே உருவாக்குகின்றான்.
இராமாயணத்திற்கு கம்பன், வால்மீகி வழியிலேயே ஆறு காண்டங்களாகப் பிரித்து அதற்கு அவன் இட்டப் பெயர்களையேயிடுகின்றான். வால்மீகி இராமாயணத்தில் பாலகாண்டம் வால்மீகியால் எழுதப் பட்டதா எனும் சந்தேகம் இன்றளவும் உண்டு என்கின்றார் அ. ச. ஞா. ஆனால் அந்த சந்தேகம் கம்பனில் இல்லையென்றாலும், ஏராளமான இடைச் செருகல்களும் பாட மற்றும் பிரதி  பேதங்களும் இருக்கின்றன.

இக்காண்டம் ஆற்றுப்படலம் தொடங்கி பரசுராம படலம் ஈராக 23 படலங்களைக் கொண்டது என்கிறது கோவைக் கம்பன் கழகம். ஆயினும் படலங்களின் எண்ணிக்கையிலும் பெயர்களிலும், ஏன் பாடல்களின் எண்ணிக்கையிலுமே வை மு கோ மாறுபடுகின்றார். அவரே கூறுவது போல் அவர் எத்தனை பிரிதிகளைப் பார்த்து எது சரி? எது தவறு? எது கம்பனுடையது? எது மிகைப்பாடல்? என கடினமாக ஆராய்ச்சியில் உழைப்பை செலவிட்டதாலேயே உருவானது பிரசித்திப் பெற்றது இவ்வுரை. இது கம்பன் பாடியதில்லை என சகட்டு மேனிக்கு, மிகைப் பாடல்கள் என தள்ளுவதும் காலத்தின் கோலம் என்கின்றார் அவர்.

சங்க இலக்கியத்தில் மூழ்கி நீராடியக் கம்பன், நாட்டையும் மக்களையும் தனித்தனியே வர்ணிக்க வேண்டுமென்று புதுமையை முதன் முதலில் புகுத்துகின்றான். ஒரு நாட்டின் வளம் அதன் மண்ணைச் சார்ந்திருந்தாலும், அந்த வளம் கூட மக்களின் மனவளத்தினால்தான் என்பதை உணர்ந்த கம்பன் ஆற்றுப் படலத்தில்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

குற்றத்தை மிகுதியாகச் செய்கின்ற ஐந்து பொறிகளாகிய அம்புகளும், மணியாரங்கள் ஒலிக்கின்ற மார்பகங்களையுடைய பெண்களின் கண்களாகிய  போர்த்தொழில் வெல்ல வல்ல அம்புகளும், ஒழுக்க நெறிக்கு அப்பால் செல்லாத கோசல நாடு என்று, மக்கள் ஐம்பொறிகளையும் வென்று அறநெறி வழியில் நடப்பதால்தான் நாடு சிறப்புற்றது என்ற கருத்தை முதல் பாடலிலேயே சொல்கின்றான்.

இமயமலையில் மழை பெய்வதை பொன்மயமான அம்மலையை வானவர் தங்கள் உலகிற்குக் கொண்டு செல்லவேண்டி இடைவிடாது வெள்ளித் தாரைகளை உருக்கி போட்டது மாதிரியும், உவந்து உள்ளது அனைத்தும் தரும் மேலானவர்களைப் போலும் மேகம் பொழிந்தது என அற்புதமாகக் கற்பித்து

புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி. வான்.
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்.
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின். வழங்கின-மேகமே. என்று கூறுவ்து நயக்கத் தக்கது..

மலையிருந்து இறங்கும் சரயு நதியின் வெள்ளம், தம்மிடம் வரும் காமுகரின் தலை முதல் கால் வரை சிறிது காலம் மட்டும், உள்ளன்பின்றி அவர்களின் செல்வத்தைக் கவரும் வரை தழுவிடும் விலை மகளிரைப் போல, மலையின் உச்சி, நடு மற்றும் அடிவாரத்தில் சிறிது தங்கி அங்குள்ள எலலாப் பொருளையும் வாரியிழுத்துக் கொண்டு வெள்ளம் போவதைக் கூறுவது:

தலையும் ஆகமும் தாளும் தழீஇ. அதன்
நிலை நிலாது. இறை நின்றது போலவே.
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.

பலவிடங்களில் விலை மகளிரை உவமையாக்குகின்றான் கவி.       

வினைப்பயன் காரணமாகவே மனித வாழ்வில்  மாற்றம் வருவது இயற்கையெனும் கணியன் பூன்குன்றானாரின்  கருத்திற்கேற்ப
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி.   மருதத்தை முல்லை ஆக்கி.
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு அரு மருதம் ஆக்கி.
எல்லையில் பொருள்கள் எல்லாம்    இடை தடுமாறும் நீரால்.
செல்லுறு கதியின் செல்லும்வினை    என. சென்றது அன்றே.

வேறுபாடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட்டல்லால்
மறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா. என்ற தாயுமானவரின் பாடலின் சமய கொள்கையை ஒத்து

கல்லிடைப் பிறந்து. போந்து  கடலிடைக் கலந்த நீத்தம்.
எல்லைஇல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள்ஈதுஎன்னத்
தொல்லையில் ஒன்றேஆகி. துறைதொறும். பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும்   பொருளும்போல். பரந்து அன்றே. 

எல்லாவுர்களிடத்தும் உள்ளே இருப்பது பரமாத்வின் அதே ஒளிதான், துளிதான் எனப்படுவதாக
போது அவிழ் பொய்கைதோறும். புது மணல் - தடங்கள்தோறும்.
மாதவி வேலிப் பூக வனம்தொறும். வயல்கள்தோறும்.
ஓதிய உடம்புதோறும் உயிர்  என. உலாயது அன்றே.

சரயுவின் வெள்ளத்தை  குடிகாரர்களுக்கும், வணிகருக்கும், வாரங்களுக்கும், யானைக்கும் என்று பலவிதமாக வர்ணித்த கவி அடுத்தப் படலமான நாட்டுப் படலத்தில் மிக அற்புதமாக நாடு, என்றால் அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போல் ஒரு நாட்டைப் படைக்கின்றான். 
                             
                                                                                 தொடரும்

Friday, November 18, 2011

கோபுரம்

கோவில்களின் அழகே தனி. ஒன்று போல் ஒன்றிருப்பதில்லை. வீடுகளுக்கு தாழ்வரைகளைப் போல, நெடிதுயர்ந்திருக்கும் கோபுரங்களே, கோவில்களுக்கழகு. தூரத்திலிருந்தே கோபுரங்கள் நம்மையழைக்கும். உற்சவகாலங்களில் மட்டுமே தோரண விளக்குகள் பெறும் கோபுரங்கள், இரவில் ஒளிவிட்டு மனதிலும் ஒளிவிடச் செய்து, நம்மை ஒரு மோனத்தில் ஆழ்த்தும்.
ஒவ்வொரு நிலையிலும் அற்புதமான சிற்பங்கள். சில பயமுறுத்தும். சில ஆச்சரியப்படவைக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் வெள்ளைக்காரன் பொம்மை போல.  அந்நாளில் கோபுரங்கள் மேலே ஏறுவதற்கு உள்ளூர்க்காரர்களை அனுமதித்தனர். விதானத்திலே வண்ண வண்ண ஓவியங்கள். எந்த நாளிலும் கோபுரவாசலையொட்டி வீசும் காற்று குளத்துத் தண்ணீரின் குளுமையும், நந்தவனத்தின் மலர்களின் வாசனையையும் சுமந்தே வரும்.


பள்ளி விடுமுறை நாட்களில் திருவண்ணாமலையில், அண்ணாமலையாரின் ராஜகோபுரத்தை கழுத்து வலிக்கப் பார்த்து, நண்பர்களுடன் உள்ளிருக்கும் இரண்டு குளங்களையும், ஏழு பிரகாரங்களையும் சுற்றி, எல்லா சிற்பங்களையும் பார்த்து ரசிப்போம். ஊரையொட்டி ரமணாஸ்ரமம் இருந்ததால் வெள்ளைக்காரர்கள் அதிகம். அவர்களுடன் பேசுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் கோவிலையும், சிற்பங்களையும், நம் பண்பாட்டையும் வர்ணிப்பது, ரொம்பவே மிகைடுத்தப்பட்டதாக, அன்று தோன்றியது.


மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்கள் வண்ணமயமானதாக வர்ணத்தால் குழைத்திருந்த போதும் என்னை அது அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. கோவையருகே இருக்கும் பேரூர் எனும் சிற்றூரில் இருக்கும் கோவிலும் அங்குள்ள அற்புதமான சிற்பங்களும்,ஒரு கோணத்தில் பார்த்தால் புன்னகைக்கும் மற்றொரு கோணத்தில் பார்த்தால் கடுமையான கோபத்துடன் காட்சியளிக்கும் காளியின் சிற்பம்,
தஞ்சாவூர் பெரியகோவிலும் உள்ளிருக்கும் சிற்பங்களும் என்னை மிகவுமே கவர்ந்தவை. 

மிக பழமையான, கூட்டம் அதிகமில்லாத, அற்புத சிற்பங்களைக் கொண்ட கோவில்களே எனககுப் பிடித்த கோவில்கள்.

பெரும்பான்மையானேர் இஸ்லாம் மதத்தினைச் சார்ந்து வசிக்கும் இந்தோனேசியாவின், மத்திய ஜாவா தீவுகளில் ஆயிரம்  வருடங்களுக்கும் முந்தைய  பழமையான சிவன் கோவிலும், புத்தர் கோவிலும் இருப்பதாகவும் அதை கட்டாயம் வந்து பார்க்கவேண்டும் என்று என் அண்ணாவும் மன்னியும் கூறினர். எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் மனைவி மற்றும் மகனுடன்  சென்றேன். எங்களை வரவேற்று ஊர்சுற்றிக் காண்பிப்பதற்கு அமர்த்தப்பட்டவர்  பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்கும், பாலித்  தீவைச்சார்ந்த ஒரு இந்து.
                                                                                                             
                                                                                                                                                
ஊருக்கு வெளியிலிருந்தே தெரியும் வரிசையான கோபுரங்கள். எல்லாச் சுற்றுலாத் தங்களையும் போல் நுழைவுக் கட்டணம் செலுத்தி, கடைகளில் கிடைக்கும் அறிய கலை வேலைப்பாட்டுடன கூடியப் பொருட்களையெல்லாம் நோட்டம் விட்டு, திரும்பிப் போகும் போது எதையெல்லாம் வாங்கவேண்டும் என்று பட்டியலிட்டுக் கொண்டே தோட்டங்களின் வழியாகவும் நன்கு பராமரிக்கப்ட்ட புல்தரையினூடாகவும், பவளமல்லி மற்றும் செண்பக மலர்களின் வாசம் முகர்ந்தும் சென்றோம். கூட வந்த கைட், அந்தச் செடிகளை தாய்லாந்திலுருந்து இறக்குமதி செய்து அங்கே பயிரிட்டுப் பராமரிப்பதாக சொன்னார். செண்பக மலரின் பேர் கேட்டதற்கு “செண்பகாஎன்றதும் இனம் தெரியாத ஆச்சரியம்.

 “நீஙகள் இந்து, அதுவும் பிராமணன். ஆயினும் சமஸ்கிருதம் உங்களுக்கு ஏன் தெரியவில்லை? ஆச்சரியத்தையடுத்து அவமானம். திராவிடக் கட்சிகளைப் பற்றியோ அல்லது மொழி வெறுப்பை ஊட்டி ஆட்சியைப் பிடித்ததையோ, தலைவர்களின் பேரர்கள் மட்டுமே ஹிந்தி கற்றதையா அவரிடம் நான் பேசமுடியும்? என் ஊழ்வினையை நொந்து கொண்டேன்.

அவர் இந்து மதத்தைப் பற்றியும், மதக் கோட்பாடுகளைப் பற்றியும் தன்னுடைய நாட்டைப் பற்றியும் பேசியதை நானும் என் மகனும் மிகவுமே ரசித்துப் பாராட்டினோம். என் மனைவியோ இந்த ஆள் வாய் ஓயாம பேசறான். அவனே ஜோக் அடிக்கறான். அவனே சிரிக்கிறான். பேசாமா இருக்க மாட்டானா?என்று ஒரு கைட் பிழைப்பில் மண் அள்ளி போடப் பார்த்ததில், நானும் மகனும் செய்வதறியாது திகைத்தோம்.

உடைந்த ஏராளமான கற்குவியல்கள் மூலம் இண்டர்லாக்கிங் முறை கற்று நிமிர்ந்து பார்த்தால், நடுவில் உயரமான சிவன் கோவில், பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹிஷாசுர மர்த்தினியின் கோபுரங்கள். ஆவுடையப்பராக (லிங்கோத்பவராக) மட்டும் நானறிந்த சிவன் பெரிய சிலைவடிவத்தில். சிற்பங்களையெல்லாம் பார்த்து ரசித்து பழமையான பரம்பனான் கோவில் வளாகத்தைப் பார்த்தப் போது உண்டான மயிர்கூச்செறிப்பையும் உணர்வுகளையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. நானே, முன்னோர் பிறவிவியில் அங்கு வாழ்ந்ததைப் போலிருந்தது.

எத்தனையோ முறை நிலநடுக்கத்தாலும் எரிமலையாலும் தாக்கப்பட்டாலும் மீண்டும், மீண்டும் புனருத்தாரணம் செய்து அவர்கள் அதனை அந்நாட்டின் மிகவுமே அரியப் பொக்கிஷம் போல் பாதுகாப்பது, தமிழகத்தில் மட்டுமின்றி அனைத்து இந்தியாவிலும் நாம் நம் சரித்திரத்தை அறிந்து கொள்ளவோ, ஆவணப்படுத்தவோ முயலவேயில்லை என்ற வருத்தத்தைத் தந்தது.

அந்த நாட்டிலேயேயில்லாத கற்களை கொண்டு, நிலநடுக்கத்தையும் தாங்க்கூடிய வகையில் அற்புதமான தொழில்நுட்பத்துடன் சோழ மன்னர்கள் நிர்மாணித்தது அவர்கள் கட்டிடக் கலையில் நுண்ணியத் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்குச் சான்று. மிகவுமே ரசிக்கத்தக்க அற்புத சிற்பங்களை ஒவ்வொரு கல்லிலும் காலத்தால் அழியாதபடி செதுக்கி வைத்திருப்பது அன்றைய சோழப் பேரரசு, கலைகளிலும் நாகரீகத்திலும் எத்துணை உயர்ந்திருந்தது என்பதை எண்ணி ஆனந்ததிலும் மகிழ்ச்சியிலும் மனம் பூரித்தது.

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி உருவாவதற்கு காரணம் இந்தோனேஷியாவின் வர்த்தக, கலாச்சாரச் தொடர்பேயாகும். அதுவரையில் ஆவியில் வைத்து சமைக்கும் தொழில்நுட்பம் தமிழகத்திலில்லை.   

இது எல்லாவற்றையும் விட நான் பெருமிதம் கொண்டது இதற்கு வித்திட்டவன் கம்பன் என்றுணர்ந்தபோது. அதனால்தானோ பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பாரினில் பிறக்கவில்லை என்றதில் கம்பனை முதலில் கூறினான்.   

பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்த முதலியார் ஒரு பேரரசு வீழ்ச்சி  பெறும் நிலையிலோ அல்லது பேரரசு ருவாகும் காலத்திலோதான் பெருங்காப்பியங்கள் உருவாகின்றன என்பது உலக காப்பியங்களை ஆய்ந்தறிந்த திறானாய்வாளர்களின் கருத்தாக்  கூறுகின்றார்.
கம்பன்  காலம்  ஒன்பதாம்  நூற்றாண்டு.  பல்லவர்கள்   வீழ்ச்சியடைந்து சோழர்கள்  அப்போதுதான் தலை  தூக்கத் தொடங்கினர். இந்த இடைக் காலத்தில்தான் கம்பன் தோன்றியிருக்கிறான். சோழ  சாம்ராஜ்யம் தொடங்குகின்ற அந்தக் காலத்தில் தோன்றியவன் கம்பநாடன். சோழ  சாம்ராஜ்யம்  நானூறு  ஆண்டுகள்   வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர் சேக்கிழார்.( 12 ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி)ஆக,  சோழ  சாம்ராஜ்யத்தின்  தொடக்கத்தில்  கம்பனும், அதன் வீழ்ச்சியில்  சேக்கிழாரும்  இரண்டு  பெருங்காப்பியங்களை  ஆக்கித்
தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

வால்மீகியில் அரசானாக மட்டுமே அறியப் பெற்ற ராமனனுக்கு கம்பனுடைய காலத்தில் இறைவனாக ஆக்கப்பட்டு, கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன.  அவனுடைய கதையை கம்பன் மறுபடியும் சொல்வதற்கு ஒரே காரணம் புதிதாக எழப் போகும் சோழப்பேரரசு எப்படி இருக்கவேண்டும்? எப்படியிருந்தால் நூற்றாண்டுகள் நிலைத்திருக்க முடியம்? என்ற கவிஞனின் சிந்தனைதான்.  

வேறு நாடுகளை ஆக்கிரமிக்காமல், உதிரம் சிந்தாமல், யுத்தமில்லாமல் சோழப் பேரரசு உதயமாகி ஆதிக்கம் செலுத்தமுடியாது. ஆயினும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கவேன்டும் என்றால், அந்தப் பேரரசு எல்லாவற்றிலுமே அறத்தையே துணையாகச் சார்ந்து இருந்தால் தான் நடக்கும்.

அதைச் சொல்வதற்கு இராமனுடைய கதையை விட வேறு சிறந்த கதை ஏது? என்ற காரணத்தினால்தான் கம்பன் இராமனின் கதையைச் சொன்னான். சோழப் பேரரசும் தான் வென்ற கீழை நாடுகள்தோறும் கம்பனின் ராமயணத்தையும் பரத நாட்டியத்தையும், சைவத்தையும் புத்த மதத்தையும் கூடவே சுமந்து சென்றது.

இனி கம்பன் கட்டியக் கலைக் கோவிலில் நுழையுமுன் அவன் எழுப்பிய ராஜ கோபுரத்தைப் பார்ப்போம். தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும், எய்தவுரைப்பது தற்சிறப்பாகும் மங்கள மொழி முதலில் வகுத்துக் கூறவேண்டுமென்பது மரபாவதாலும் “உலகம் எனும் மங்கள மொழியுடன் கடவுள் வணக்கம்:

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. முதல் மூன்றடிகளில் பரம் பொருளின் முடிவேயில்லாத படைத்தல், காத்தல் அழித்தல் என்ற விளையாட்டை நிகழ்த்துபவனாக கூறி “ உனக்கே நாமாட் செய்வோம் என்று ஆண்டாளருளி செய்தது போல் உனக்கே சரண் நாங்களே என்றும், இராமசரிதம் சரணாகதித் தத்துவத்தை விளக்குவதாலும், அன்னவர்க்கே சரண் என்று கூறினார்..

இனி அவையடக்கத்தின் காரணமாக
முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும்.
பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’

பைத்தியம் சொல்வதும், பேதையர் சொல்வதும், பக்தன் சொல்வதும் ஆராய்ச்சிக்குப் பொருளாகுமோ என்று முத்தமிழ் வித்தக அறிஞர்களை (திரு. மு. க அல்ல) கம்பன் கேட்பது எனக்கேயன்றி மிகச் சிறந்த புலமையுள்ள அவனுக்காக அல்ல.
இதுவரையில் கம்பனின் கவிகளைப் படித்த போது உடனே தோன்றுவது அகராதியினை அடிக்கடி தேடவேண்டாம் என்பது. , சற்றே ஈடுபாடும் சிறு முயற்சியுமிருந்தாலே போதும், பைந்தமிழ் இலக்கியச் சுவையறிவதற்கு எனபதேயாகும். 

கம்பனின் கவி வெள்ளத்தில் மூழ்குவோம்

                                                                                                                                              தொடரும்

Thursday, November 10, 2011

வீடு..

 
பழமொழிகள் சர்வசாதாரணமாக அலட்சியமாக மிகப் பெரிய விஷயங்களை கூறுவிடுகின்றன. “வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப் பார்.

வீடு என்பது அந்தக் காலத்தில் எல்லோருக்குமே ஒரு எட்டாத கனவாகத்தான் இருந்தது. பூர்வீக சொத்து இல்லாத, அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர், 1990கள் வரையில் கூட, சென்னையில் ஒரு வீடு கட்டுவதற்குள் படும் பாடு தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளானயிருப்பவன் படும் பாட்டிற்குச் சற்றே சமமாகயிருக்கும்.


பிஎஃப் கடன் விண்ணப்பித்து, அப்போதிருந்த கடன் வழங்கும் நிதிநிறுவனமான LIC அல்லது HDFCயில் பல தடவை நடந்து கடனுக்கு அங்கீகாரம் வாங்கவேண்டும். அதற்கு முன்பே வரைபடம் போட்டு அதற்கு அலைந்து கார்பரேஷனிலோ அல்லது பஞ்சாயத்திலோ பர்மிஷன் வாங்க வேண்டும். சிமெண்ட் தட்டுப்பாடு இருந்த காலத்தில் இறக்குமதியான கொரியன் சிமெண்ட்டுக்கு PWDயிடமிருந்து பெர்மிட் வாங்கி, இரும்புக் கம்பிக்கு நடையாய் நடந்து, மேஸ்திரி பாதியில் வேலையை விட்டு விட்டு ஓடிவிட, இன்னொரு மேஸ்திரியைப் பார்த்து வைத்து, திருடும் காவல்காரனை மாற்றி, பாதிராத்திரி வரும் மணலுக்காவும் செங்கல்லுக்காவும் காத்திருந்து இறக்க வேண்டும். பணம் பற்றாமல் பணக்கார உறவினரிடம் வெட்கத்தைவிட்டு கடன் வாங்கி, முழுவதுமாக முடிக்கு முன்பே குடிபுகுந்து, அடுத்த நான்கைந்து ஆண்டுகள் தேவைகளையுமே குறைத்து, திரும்பிப் பார்க்கும் போது, கன்னங்கரேலென்றிருந்த தலைமுடி, இருந்தால் அதிசயம்!. முக்கால் வாசிப்பேருக்கு தலை நரைத்திருக்கும். ஆனாலும் வீட்டிலுள்ள அனைவர் முகத்திலும் எவ்வளவோ சங்கடங்கள், சிரமத்திற்கு மத்தியிலும் எங்கள் தேவைக்கேற்ற மாதிரி, மனை சாஸ்திரத்தில் கூறப்பட்டபடியே வீட்டைக் கட்டி முடித்து விட்டோமென்ற, தனிக் களை வீசும்.

சிறு வயதில் நான் பார்த்த பெரும்பான்மையான வீடுகள் ஒரே மாதிரிதான் இருக்கும். அவ்வளவாக பெரிய மாறுபாடிராது. சித்தூரில் இருந்த தாத்தாவின் வீடு எனக்கு மிகவும் பிடித்தது. தெருவிலிருந்து சில படிகள் ஏறியவுடன் இரண்டு புறமும் இரு தூண்களுடன் கூடிய தாழ்வாரம், உள்ளே நுழைந்தவுடன் ஒரு பக்கம் தாத்தாவின் ஆபிஸ் ரூம், அதன் எதிர்புறம் இருட்டு உள். இதைத் தாண்டி வீட்டினுள் நுழைந்தால் நடுவில் பெரிய முற்றம், மாடியிலிருக்கும் ரூம்களின் ஜன்னல்களிருந்தும் முற்றத்தைப் பார்க்கலாம். இந்த முற்றத்தில்  அத்தைகளின் கல்யாணமே நடந்ததாக தாத்தா கூறுவார். எனக்கு நினைவிருப்பது எங்கள் நான்கு சகோதரர்களின் பூணூல் கல்யாணம். முற்றத்தைச் சுற்றி தாழ்வாரம்.

இடப்புறமாக பெரிய ஹால். சுவற்றின் மேலே இரு வரிசைகளில் படங்கள். மேல் வரிசையில் ரவிவர்மாவின் கடவுள்களிருந்து காந்தி நேருவரை. கீழ் வரிசையில் கல்யாணம் முடிந்து ஸ்டுடியோ போய் எடுத்துக் கொண்ட நேராக இருக்கும் போட்டோக்களில், குடும்பத்தின் அனைத்து உறவினரையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளளாம். நடுவில் ஊஞ்சல். எதிர்ப்புறம் இரண்டு மூன்று அறைகள். ஆபிஸ் ரூமை ஒட்டியத் தாழ்வாரத்தையடுத்து ஒரே சமயத்தில் 20 பேர் சாப்பிடக்கூடிய டைனிங் ஹால், அதையொட்டி பெரிய சமையலறை. அதனுள்ளேயே இருக்கும் பூஜை அறை.

இதற்கு எதிர்பக்கம் கிணறு, சுற்றி ஒரு சிறு முற்றம், பெரிய தொட்டியுடன் கூடிய வெண்ணீர் அறை. வெளியே தோட்டம். இன்னுமொரு கிணறு மற்றும் குளியலறை. அதன் எதிர் புறம் ஸ்டோர் ரூம். அங்கு டிரங்கு பெட்டிகளில் இருக்கும் பழைய கல்யாண ஆல்பங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய பஞ்சாங்கங்கள், அந்த வருடம் பிறந்தவர்களின் தேதிக்கு நேரில் பிறந்த நேரத்தை தாத்தா சிகப்பு பேனாவால் ஆண், பெண், பிறந்த நேரம் எழுதி வைத்திருப்பார். ஆணியில் வளைந்த கம்பியில் ஒழுங்காக குத்தப்பட்டு இருக்கும் போஸ்ட் கார்டுகள் மற்றும் இன்லாண்ட் லெட்டர்கள். இதையெல்லாம் தாண்டி வாழை, முருங்கை, வேப்பிலை மற்றும் கறிவேப்பிலை மரங்கள் மற்றும் பூந்தோட்டம். கடைசியில் இரண்டு பெரிய, படம் வரையாத கழிப்பறைகள்.

தாத்தா ஆபிஸ் ரூமில் இருக்கும் பெரிய மேசையில் எப்போதும் புளுபிரிண்டை பார்த்துக் கொன்டிருப்பார். வரைப் படத்தில் வீட்டைக் காண்பித்து, வீடு என்றால் வெளியிருந்து பார்க்கும்போது கொல்லைப்புறம் வரையில் ஒரே நேர் கோடில்  இருக்கவேண்டும். சமையலறை அடுப்பு ஈசான மூலையிலும், படுக்கை அறை காற்றோட்டமாக இருக்க தெற்கு பக்கம் பார்ப்பதாக இருக்கவேண்டும் என்று கூறுவார்.

அன்று வீடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தததற்கும் காரணம், அவர்கள் வீட்டை காலாகாலத்திற்கும் வசிப்பதற்குறிய இடமாகவும் வாழ்வின் இன்றியமையாத ஆதாரமாகவும் பார்த்ததுதான். வீடு விற்பனைப் பொருளாக மாறவில்லை. அது நம்மைப் போல் ஒரு உயிருள்ளப் பொருளாக வீட்டிலுள்ள அனைவரின் பெருமை, கனவு, பெருமூச்சு, சந்தோஷம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும்.   

பெரிய மாமா, மேற்கு அன்ணாநகரில் வீடு கட்டி கிரஹப்பிரவேசத்திற்கு தி. நகரிலிருக்கும் அத்தை வீட்டிலிருந்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் இறங்கி 7 சி பஸ் பிடித்து, மேற்கு அண்ணா நகர் செல்லும் போது, அண்ணாநகர் டவர் அடுத்து வெகு தூரத்தில் தெரிந்த ஒரே கட்டிடம் மாமாவின் வீடுதான். மாமாவின் வீட்டு வெளியிலிருந்து, கொள்ளைப் புறம் தெரியவில்லை.

சமீபத்தில் பத்திரிக்கையில் பார்த்த விளம்பரம் ஒரு தமிழன் படைக்கும் உலக இலக்கியம்  இதேபோல் இது ஒரு காவியம் ; காப்பியம் என்று படைப்பிற்கு தலைபிட்டதாலேயே இவை எல்லாம் காவியமாகவோ காப்பியமாகவே ஆகிவிடுமா? கொள்ளைப் புறம் தெரியாத என் மாமாவின் வீடு மனதில் தோன்றியது.

கம்பனின் காலத்தில் எப்பேர்ப்பட்ட கவிப்பேரரசானாலும் இவ்வாறு சுயதம்பட்டம் அடிக்க முடியாது. காரணம் தொல்காப்பியத்தின் கராறான விதிகள். கம்பனுக்குப் பின்னால் வந்த “தண்டியலங்காரம். பா மற்ற்ம் அணியைலக்கணத்தைத் தனியாக கூறியது. அதில் பெருங்காப்பிய நிலை பேசுங்காலைஎனத் தொடங்கிக் கற்றோர் புனையும் பெற்றியது என்பஎன காப்பிய இலக்கணம் வகுத்தது.

பட்டப் பெயரில் அழைக்காவிடில் கோபம் வருகின்றது தமிழனுக்கு. சமீபத்திய பரிதாபம் கௌதம்  மேனன். கலைஞர் என்று பட்டப் பெயரில் அழைக்காமல் கருணாநிதி என்று அழைத்து மேடையிலேயே சிக்கலில் சுற்றினார்.

கவிச்சக்கரவர்த்தியும் கல்வியிற் பெரியவரான கம்பரின் அவையடக்கம் இதற்கு எதிர்மறை.  

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென.
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று. இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!  

ஓயாத     ஒலி  கடலுக்கு இயல்புஆதலின் ஓசை பெற்று  உயர் பாற்கடல்என்றார். தேவருக்கு அமுது ஈந்த சிறப்பைப் பற்றி  உயர் பாற்கடல் என்றார்.  எளிய பூனை ஆழ்ந்து பரந்த பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடித்துத் தீர்த்துவிட முடியாது என்பது தெளிவு. ஆயினும். அந்த  முயற்சி கொண்டு  ஒரு பூனை பாற்கடலை அடைந்திருக்கிறதுஇம்முயற்சிக்கு ஆற்றலை விடப் பேராசையே காரணமாக இருக்கமுடியும்.  அதுபோல தனக்கு ஒப்பார்  இல்லா நின்றுயர் நாயகனின் புகழ்க் கடலை  அளந்துரைக்க முடியாது என்பது தெளிவு.  ஆயினும். ஆற்றல் கருதாத பேராசை  காரணமாக மட்டுமே இச்செயலில் துணிந்து இறங்கியிருப்பதாகக்  கவிச்சக்கரவர்த்தி கூறுகிறார்.  (பூனையை உவமையாகக் கொள்ளாமல் ஆசை பற்றிய அதன் முயற்சியையே உவமையாகக் கொள்ளல் வேண்டும்)

வையம் என்னை இகழவும். மாசு எனக்கு
எய்தவும். இது இயம்புவது யாது எனின்.-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.
வையம்: உலகம்; இங்குக் கல்வி. கேள்வி. ஞானங்களால்  உயர்ந்த பெரியோரைக் குறித்து. சான்றோரின்’  ஏளனத்துக்கும் புலமைக் குற்றத்துக்கும் இலக்காக  நேரிடும் என்பதை உணர்த்தும்.  இக்காப்பியம் இயற்ற முனைந்ததற்கும் போற்றுதலுக்கும் புலமை  மாண்புக்கும்  இடமான வான்மீகி முதலான சான்றோர்கள் அருளிய  தெய்வ மாக்கவிகளின் பெருமை  புலப்படுத்தும் ஆர்வமே காரணம்  என்கிறார்  கவிச்சக்கரவர்த்தி. கல்வியிற் பெரிய கம்பரின் அடக்கம் இவ்வாறு!

தொல்காப்பியனாரோ “ இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்தமொழியா னடிநிமிர்த்தொழுகினும்,தோலெனமொழிப தொன்மொழிப் புலவர் பழங்கதையை மறுபடியும் கூறினாலும்  ஏற்கெனவே வேறு மொழியில் கூறப்பெற்றதை அடியொட்டி தமிழில் பாடினாலும் அது தோலெனப்படும் என்கின்றார்.

கம்பனோ மிகவுமே தேர்ந்த சிறந்த புலவன். பொருள் தொடர்நிலை செய்யுல்களின் கட்டால்,  சொந்தமாகவே இவ்வளவு கட்டுபாடுகளுக்குள்ளும் பெருங்காப்பியம் இயற்றியிருக்க முடியும். ஆனாலும் அவன் பாரத தேசத்திலே ஏற்கெனவே பிரசித்தி பெற்ற வால்மீகியின் ராமாயணக் கதை என்ற வரைபடத்தை வைத்து, சிறந்த தேர்ந்த தன் புலமையினால்  ஒரு வார்த்தையையும் நீக்கவோ, சேர்க்கவோ முடியாதபடி நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் இராமவதாரம் எனும் மாபெரும் கலைக்கோயிலை மிகவுமே நுட்பமாகச் செதுக்கி நிர்மானித்தான்.

இது அவன் வைத்த பெயரில் வழங்கப்படாமல் அவனுடையப் பெயராலேயே வழங்கப்படுவதே அவனுடைய புலமைக்குச் சான்று என்றாலும் ஏற்கெனவே தெரிந்த, பரவலாக அறியப் பெற்ற இராமனுடைய கதையை ஏன் கூறவேண்டும்? அதற்கான கட்டாயம் என்ன?     


                                                                                                          தொடரும்...