கோவில்களின் அழகே தனி. ஒன்று போல் ஒன்றிருப்பதில்லை. வீடுகளுக்கு தாழ்வரைகளைப் போல, நெடிதுயர்ந்திருக்கும் கோபுரங்களே, கோவில்களுக்கழகு. தூரத்திலிருந்தே கோபுரங்கள் நம்மையழைக்கும். உற்சவகாலங்களில் மட்டுமே தோரண விளக்குகள் பெறும் கோபுரங்கள், இரவில் ஒளிவிட்டு மனதிலும் ஒளிவிடச் செய்து, நம்மை ஒரு மோனத்தில் ஆழ்த்தும்.
ஒவ்வொரு நிலையிலும் அற்புதமான சிற்பங்கள். சில பயமுறுத்தும். சில ஆச்சரியப்படவைக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் வெள்ளைக்காரன் பொம்மை போல. அந்நாளில் கோபுரங்கள் மேலே ஏறுவதற்கு உள்ளூர்க்காரர்களை அனுமதித்தனர். விதானத்திலே வண்ண வண்ண ஓவியங்கள். எந்த நாளிலும் கோபுரவாசலையொட்டி வீசும் காற்று குளத்துத் தண்ணீரின் குளுமையும், நந்தவனத்தின் மலர்களின் வாசனையையும் சுமந்தே வரும்.
பள்ளி விடுமுறை நாட்களில் திருவண்ணாமலையில், அண்ணாமலையாரின் ராஜகோபுரத்தை கழுத்து வலிக்கப் பார்த்து, நண்பர்களுடன் உள்ளிருக்கும் இரண்டு குளங்களையும், ஏழு பிரகாரங்களையும் சுற்றி, எல்லா சிற்பங்களையும் பார்த்து ரசிப்போம். ஊரையொட்டி ரமணாஸ்ரமம் இருந்ததால் வெள்ளைக்காரர்கள் அதிகம். அவர்களுடன் பேசுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் கோவிலையும், சிற்பங்களையும், நம் பண்பாட்டையும் வர்ணிப்பது, ரொம்பவே மிகைபடுத்தப்பட்டதாக, அன்று தோன்றியது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்கள் வண்ணமயமானதாக வர்ணத்தால் குழைத்திருந்த போதும் என்னை அது அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. கோவையருகே இருக்கும் பேரூர் எனும் சிற்றூரில் இருக்கும் கோவிலும் அங்குள்ள அற்புதமான சிற்பங்களும்,ஒரு கோணத்தில் பார்த்தால் புன்னகைக்கும் மற்றொரு கோணத்தில் பார்த்தால் கடுமையான கோபத்துடன் காட்சியளிக்கும் காளியின் சிற்பம்,
தஞ்சாவூர் பெரியகோவிலும் உள்ளிருக்கும் சிற்பங்களும் என்னை மிகவுமே கவர்ந்தவை.
தஞ்சாவூர் பெரியகோவிலும் உள்ளிருக்கும் சிற்பங்களும் என்னை மிகவுமே கவர்ந்தவை.
மிக பழமையான, கூட்டம் அதிகமில்லாத, அற்புத சிற்பங்களைக் கொண்ட கோவில்களே எனககுப் பிடித்த கோவில்கள்.
பெரும்பான்மையானேர் இஸ்லாம் மதத்தினைச் சார்ந்து வசிக்கும் இந்தோனேசியாவின், மத்திய ஜாவா தீவுகளில் ஆயிரம் வருடங்களுக்கும் முந்தைய பழமையான சிவன் கோவிலும், புத்தர் கோவிலும் இருப்பதாகவும் அதை கட்டாயம் வந்து பார்க்கவேண்டும் என்று என் அண்ணாவும் மன்னியும் கூறினர். எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் மனைவி மற்றும் மகனுடன் சென்றேன். எங்களை வரவேற்று ஊர்சுற்றிக் காண்பிப்பதற்கு அமர்த்தப்பட்டவர் பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்கும், பாலித் தீவைச்சார்ந்த ஒரு இந்து.
ஊருக்கு வெளியிலிருந்தே தெரியும் வரிசையான கோபுரங்கள். எல்லாச் சுற்றுலாத் தலங்களையும் போல் நுழைவுக் கட்டணம் செலுத்தி, கடைகளில் கிடைக்கும் அறிய கலை வேலைப்பாட்டுடன கூடியப் பொருட்களையெல்லாம் நோட்டம் விட்டு, திரும்பிப் போகும் போது எதையெல்லாம் வாங்கவேண்டும் என்று பட்டியலிட்டுக் கொண்டே தோட்டங்களின் வழியாகவும் நன்கு பராமரிக்கப்ட்ட புல்தரையினூடாகவும், பவளமல்லி மற்றும் செண்பக மலர்களின் வாசம் முகர்ந்தும் சென்றோம். கூட வந்த கைட், அந்தச் செடிகளை தாய்லாந்திலுருந்து இறக்குமதி செய்து அங்கே பயிரிட்டுப் பராமரிப்பதாக சொன்னார். செண்பக மலரின் பேர் கேட்டதற்கு “செண்பகா” என்றதும் இனம் தெரியாத ஆச்சரியம்.
“நீஙகள் இந்து, அதுவும் பிராமணன். ஆயினும் சமஸ்கிருதம் உங்களுக்கு ஏன் தெரியவில்லை?” ஆச்சரியத்தையடுத்து அவமானம். திராவிடக் கட்சிகளைப் பற்றியோ அல்லது மொழி வெறுப்பை ஊட்டி ஆட்சியைப் பிடித்ததையோ, தலைவர்களின் பேரர்கள் மட்டுமே ஹிந்தி கற்றதையா அவரிடம் நான் பேசமுடியும்? என் ஊழ்வினையை நொந்து கொண்டேன்.
அவர் இந்து மதத்தைப் பற்றியும், மதக் கோட்பாடுகளைப் பற்றியும் தன்னுடைய நாட்டைப் பற்றியும் பேசியதை நானும் என் மகனும் மிகவுமே ரசித்துப் பாராட்டினோம். என் மனைவியோ ”இந்த ஆள் வாய் ஓயாம பேசறான். அவனே ஜோக் அடிக்கறான். அவனே சிரிக்கிறான். பேசாமா இருக்க மாட்டானா?” என்று ஒரு கைட் பிழைப்பில் மண் அள்ளி போடப் பார்த்ததில், நானும் மகனும் செய்வதறியாது திகைத்தோம்.
உடைந்த ஏராளமான கற்குவியல்கள் மூலம் இண்டர்லாக்கிங் முறை கற்று நிமிர்ந்து பார்த்தால், நடுவில் உயரமான சிவன் கோவில், பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹிஷாசுர மர்த்தினியின் கோபுரங்கள். ஆவுடையப்பராக (லிங்கோத்பவராக) மட்டும் நானறிந்த சிவன் பெரிய சிலைவடிவத்தில். சிற்பங்களையெல்லாம் பார்த்து ரசித்து பழமையான பரம்பனான் கோவில் வளாகத்தைப் பார்த்தப் போது உண்டான மயிர்கூச்செறிப்பையும் உணர்வுகளையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. நானே, முன்னோர் பிறவிவியில் அங்கு வாழ்ந்ததைப் போலிருந்தது.
எத்தனையோ முறை நிலநடுக்கத்தாலும் எரிமலையாலும் தாக்கப்பட்டாலும் மீண்டும், மீண்டும் புனருத்தாரணம் செய்து அவர்கள் அதனை அந்நாட்டின் மிகவுமே அரியப் பொக்கிஷம் போல் பாதுகாப்பது, தமிழகத்தில் மட்டுமின்றி அனைத்து இந்தியாவிலும் நாம் நம் சரித்திரத்தை அறிந்து கொள்ளவோ, ஆவணப்படுத்தவோ முயலவேயில்லை என்ற வருத்தத்தைத் தந்தது.
அந்த நாட்டிலேயேயில்லாத கற்களை கொண்டு, நிலநடுக்கத்தையும் தாங்கக்கூடிய வகையில் அற்புதமான தொழில்நுட்பத்துடன் சோழ மன்னர்கள் நிர்மாணித்தது அவர்கள் கட்டிடக் கலையில் நுண்ணியத் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்குச் சான்று. மிகவுமே ரசிக்கத்தக்க அற்புத சிற்பங்களை ஒவ்வொரு கல்லிலும் காலத்தால் அழியாதபடி செதுக்கி வைத்திருப்பது அன்றைய சோழப் பேரரசு, கலைகளிலும் நாகரீகத்திலும் எத்துணை உயர்ந்திருந்தது என்பதை எண்ணி ஆனந்ததிலும் மகிழ்ச்சியிலும் மனம் பூரித்தது.
தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி உருவாவதற்கு காரணம் இந்தோனேஷியாவின் வர்த்தக, கலாச்சாரச் தொடர்பேயாகும். அதுவரையில் ஆவியில் வைத்து சமைக்கும் தொழில்நுட்பம் தமிழகத்திலில்லை.
இது எல்லாவற்றையும் விட நான் பெருமிதம் கொண்டது இதற்கு வித்திட்டவன் கம்பன் என்றுணர்ந்தபோது. அதனால்தானோ பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பாரினில் பிறக்கவில்லை என்றதில் கம்பனை முதலில் கூறினான்.
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்த முதலியார் ஒரு பேரரசு வீழ்ச்சி பெறும் நிலையிலோ அல்லது பேரரசு உருவாகும் காலத்திலோதான் பெருங்காப்பியங்கள் உருவாகின்றன என்பது உலக காப்பியங்களை ஆய்ந்தறிந்த திறானாய்வாளர்களின் கருத்தாகக் கூறுகின்றார்.
கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. பல்லவர்கள் வீழ்ச்சியடைந்து சோழர்கள் அப்போதுதான் தலை தூக்கத் தொடங்கினர். இந்த இடைக் காலத்தில்தான் கம்பன் தோன்றியிருக்கிறான். சோழ சாம்ராஜ்யம் தொடங்குகின்ற அந்தக் காலத்தில் தோன்றியவன் கம்பநாடன். சோழ சாம்ராஜ்யம் நானூறு ஆண்டுகள் வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர் சேக்கிழார்.( 12 ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி)ஆக, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் கம்பனும், அதன் வீழ்ச்சியில் சேக்கிழாரும் இரண்டு பெருங்காப்பியங்களை ஆக்கித்
தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
வால்மீகியில் அரசானாக மட்டுமே அறியப் பெற்ற ராமனனுக்கு கம்பனுடைய காலத்தில் இறைவனாக ஆக்கப்பட்டு, கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன. அவனுடைய கதையை கம்பன் மறுபடியும் சொல்வதற்கு ஒரே காரணம் புதிதாக எழப் போகும் சோழப்பேரரசு எப்படி இருக்கவேண்டும்? எப்படியிருந்தால் நூற்றாண்டுகள் நிலைத்திருக்க முடியம்? என்ற கவிஞனின் சிந்தனைதான்.
வேறு நாடுகளை ஆக்கிரமிக்காமல், உதிரம் சிந்தாமல், யுத்தமில்லாமல் சோழப் பேரரசு உதயமாகி ஆதிக்கம் செலுத்தமுடியாது. ஆயினும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கவேன்டும் என்றால், அந்தப் பேரரசு எல்லாவற்றிலுமே அறத்தையே துணையாகச் சார்ந்து இருந்தால் தான் நடக்கும்.
அதைச் சொல்வதற்கு இராமனுடைய கதையை விட வேறு சிறந்த கதை ஏது? என்ற காரணத்தினால்தான் கம்பன் இராமனின் கதையைச் சொன்னான். சோழப் பேரரசும் தான் வென்ற கீழை நாடுகள்தோறும் கம்பனின் ராமயணத்தையும் பரத நாட்டியத்தையும், சைவத்தையும் புத்த மதத்தையும் கூடவே சுமந்து சென்றது.
இனி கம்பன் கட்டியக் கலைக் கோவிலில் நுழையுமுன் அவன் எழுப்பிய ராஜ கோபுரத்தைப் பார்ப்போம். தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும், எய்தவுரைப்பது தற்சிறப்பாகும்” மங்கள மொழி முதலில் வகுத்துக் கூறவேண்டுமென்பது மரபாவதாலும் “உலகம்” எனும் மங்கள மொழியுடன் கடவுள் வணக்கம்:
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. முதல் மூன்றடிகளில் பரம் பொருளின் முடிவேயில்லாத படைத்தல், காத்தல் அழித்தல் என்ற விளையாட்டை நிகழ்த்துபவனாக கூறி “ உனக்கே நாமாட் செய்வோம்” என்று ஆண்டாளருளி செய்தது போல் உனக்கே சரண் நாங்களே என்றும், இராமசரிதம் சரணாகதித் தத்துவத்தை விளக்குவதாலும், அன்னவர்க்கே சரண் என்று கூறினார்..
இனி அவையடக்கத்தின் காரணமாக
முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும்.
பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும்.
பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’
பைத்தியம் சொல்வதும், பேதையர் சொல்வதும், பக்தன் சொல்வதும் ஆராய்ச்சிக்குப் பொருளாகுமோ என்று முத்தமிழ் வித்தக அறிஞர்களை (திரு. மு. க அல்ல) கம்பன் கேட்பது எனக்கேயன்றி மிகச் சிறந்த புலமையுள்ள அவனுக்காக அல்ல.
இதுவரையில் கம்பனின் கவிகளைப் படித்த போது உடனே தோன்றுவது அகராதியினை அடிக்கடி தேடவேண்டாம் என்பது. , சற்றே ஈடுபாடும் சிறு முயற்சியுமிருந்தாலே போதும், பைந்தமிழ் இலக்கியச் சுவையறிவதற்கு எனபதேயாகும்.
கம்பனின் கவி வெள்ளத்தில் மூழ்குவோம்
தொடரும்
No comments:
Post a Comment