வெளிநாடு வருவதோ, ஒருவரை சந்தித்து பழகி நண்பராவதோ தற்செயலாக, அனிச்சையாக, தனிச்சையில் நடக்கும் விஷயங்கள் என்று நான் நினைத்திருந்தேன். நண்பர் ரமணி அவர்கள், இங்கு பணியில் இருந்து ஓய்வு பெற்று கிளம்புகையில், ”நாம் ஒருவரை ஒருவர் பார்ப்பதோ, சிரிப்பதோ, அறிமுகமாவதோ, தெரிந்து கொள்வதோ தற்செயலாகவோ தனிச்சையாகவோ நடக்கும் விஷயங்கள் அல்ல. இது முன் கூட்டியே தீர்மானிக்கபட்ட விஷயம். It is purely Destiny and in life nothing is accidental or incidental” என்றார். அவர் கூறியது முதல் மனதில் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. என் வாழ்வில் ஏற்பட்ட ஓர் இனிமையான சந்திப்பு ஊழ்வினையில் எனக்கு நம்பிக்கையை வளர்த்தது
ஓரு சனிக்கிழமை குடும்பத்துடன் சாப்பிடப் போக வேண்டும் என்று திட்டமிட்டிருந்தும், கடைசி நிமிடம் எனது சோம்பேறித்தனத்தால் வேண்டாம் என்றேன். மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். இதனால் அடுத்த இரு வாரமும் வெளியே சென்றது, என் செய் வினைப்பயன்.
சாப்பிடப் போன இடத்தில், எப்போதோ ஒரே ஒரு தடவைப் பார்த்திருந்த இளம் தம்பதியினர், தங்கள் சிறு குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், ஏழு எட்டு பேர் வயதான ஒரு பெண்மணியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு போவதைப் பார்த்தேன். அதில் ஒருவர் முகம் மட்டும் பரிச்சயமான முகமாக இருந்ததது. மனம் முழு கவனத்துடன் யார் என்று யோசிப்பதிலிருக்க, இளம் தம்பதியரை மறந்தேன். மனைவியோ, அவர்களுடன் மிகவும் முக்கியமான விஷயங்களை நெருங்கிய நண்பர்களுடன் பேசுவது போல், பேசிக் கொண்டேயிருந்தாள். மகனோ, இதற்கும் தனக்கும் எந்த தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்று தெளிவாக இருந்தான்.
அந்தப பரிச்சிய முகத்தின் சொந்தக்காரர், 3 இடியட்ஸ் மற்றும் முன்னாபாய் எம் பி பி ஸ் படங்களில் அற்புதமாக நடித்திருந்த பொமன் இரானி. சிறிது தூரம் சென்றிருந்தாலும் அவருடைய முகம் தெரியும் அருகில் இருந்தோம். இதை உறுதிப் படுத்துவதற்காக என மகனிடம் “சற்று திரும்பிப் பார். பொமன் இரானி போல் இருக்கிறது” என்றேன். அவனும் “ஆமாம்” என்று உறுதிப்படுத்திவிட்டு “அவரிடம் ஆட்டோகிராஃப் அல்லது புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கலாமே” என்றான். மனைவியோ, எங்களுடைய பரிதவிப்பையோ, பசி வயிற்றைக் கிள்ளுவதைப் பற்றியோ, சிறிதும் அக்கறையின்றி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். தம்பதியினர் அவர்களாகவே விடை பெற்றனர். பொமன் இரானியும் மறைந்தார். மறையாமலிருந்தது, என் மனைவியின் கோபம்.
“உங்களுக்கு சில பேரைப் பார்த்தாலே இளக்காரம். அவங்களோட சரியாப் பேசாமல் அவமானப்படுத்தி விட்டீர்கள்” என்று நல்லபடியாக அவளுடைய அன்றைய மாலைப்பொழுது ஆரம்பித்தது. சாப்பிடுவதற்காக மேஜையில் அமர்ந்தோம். என் மகன் தெரியாமல் எனக்காகப் பரிந்து ‘உன்னால் தான் நாங்கள் பொமன் இரானியைப் பார்த்து போட்டோவோ அல்லது ஆட்டோகிராஃபோ வாங்க முடியாமல் போய்விட்டது. நீ பாட்டுக்கு வள வளனு பேசிண்டே இருந்தே. அப்பா முதல்லேயே பாத்துட்டா”. மனைவிக்கு அதை கேட்டவுடன் கோபத்தால் மூக்குச் சிவக்க “ஏற்கெனவே சோடாபுட்டி கண்ணாடி. பகல்ல பசு மாடு தெரியாது. இராத்திரி, அரை குறை வெளிச்ததில பொமன் இரானி தெரியறது. வேலிக்கு ஓணான் சாட்சி” மகனைப் பார்த்து முறைக்கும் வேளையில், பொமன் இரானி அவர் குடும்ப சகிதம் வந்து எதிரில் இருந்த மேசையில் அமர்ந்தார்.
அவரைப் பார்த்து நான் ”ஹாய்” சொல்லவும், அவர் தலையசைத்து புன்னகையைப் பதிலளித்தார். நாங்கள் அவர் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்து, அவருடன் உரையாடிவிட்டு குடும்ப சகிதம் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர் காலையில் வந்ததாகவும், இன்னும் நான்கு நாட்களுக்கு இருக்கப் போவதாகவும் குறிப்பிட்டார். ஹாங்காங்கில் அவருடைய பொழுதுகள் இனிமையாக இருக்கும்படி வாழ்த்திவிட்டு புறப்படும் வேளையில் மனைவியின் கூற்று “destiny, நல்லவேளை. போனவாரம் வராம போனதும். இல்லையென்றால் இன்று இவரைப் பார்த்திருக்க முடியமா?” சினிமாவின் மகத்துவமே தனி.
இலக்கிய வட்டக் கூட்டத்தில் ”கம்பனின் காப்பியச் சுவை” எனும் தலைப்பில் “கம்பனும் வால்மீகியும்” என்று பேசுவதற்காக தமிழ் இணைய பல்கலைக் கழக நூலகம் மற்றும் இணையத்திலும், பல கட்டுரைகளையும், நண்பர் அருளிய அ.ச. ஞானசம்பந்த முதலியார் அவர்களின் ஒப்பீட்டாய்வுகளையும் படித்து கம்பனில் மயங்கி, தெரியாமல் “வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் கட்டாயம் ஒரு தடவையாவது கம்பராமாயணத்தை கோவை கம்பன் கழகத்தினரின் உரையுடன் படிக்கப் போகிறேன்” என்று வாய்விட்டு சொல்லிவிட்டேன். மனைவி “எல்லாம் புது வருட தீர்மானம்தான். அடுத்த வருடம் யூரோப் போலாம் போலாம்னு சொல்லிச் சொல்லியே, 22 வருடம் விளையாட்டா வெட்டிக்கு போச்சு”.
”நெல்லைக் கண்ணன்” இங்கு வந்த போது தனக்கு கம்பராமாயணத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் மனனமாகத் தெரியும் என்றார். மொத்தமே பத்து சதவீதப் பாடல்களை மட்டுமே எல்லோரும் கூறிக் கொண்டிருக்கின்றனர் என்றதும், “கம்பராமாயணத்தை எப்படி? யாருடைய உரையுடன் படிக்க வேண்டும்?”என்றதற்கு அவர் கட்டாயம் “வை. மு. கோ வாங்கி படியுங்கள். படித்து நீங்கள் ரசித்ததை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மிகவுமே அற்புதமாக இருக்கும்” என்றார்.
”யார் இந்த வை.மு.கோ?” என்று கேட்கத் தோன்றவேயில்லை. வாங்கும் உத்தேசமில்லாததும் காரணமாயிருக்கலாம். ஊரிலிருந்து வரும் போது சாம்பார் பொடி, ஊறுகாய் மற்றும் வீட்டுச் சாமான்களுக்கிடையில் புத்தகங்களுக்கு பெட்டியில் இடமில்லாததும், தீப்பெட்டி அடுக்கி வைத்தாற்போல் உயரமான சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளின் இடநெருக்கடியுமே முக்கியமான காரணங்கள்.
DVDயில் திரு சிவகுமாரின் “கம்பன் என் காதலன்”. தன்னுடை 67வது வயதில் ஒரு வருடம் முழுவதும் படித்து தான் ரசித்து மயங்கிய 100 பாடல்களின் வழியாகக் கம்பராமாயணத்தை அருமையாகப் பேசியதைக் கேட்ட போது வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் நானும் படித்து முடிப்பேன் என்று தீர்மானித்தேன்.
வாராக் கடனை வசூலிப்பதற்கான தென் அமெரிக்கப் பயணத்தில், இரு மாதங்களுக்கும் மேலாக அங்கு இருக்க, அலுவலுக தினசரி வேலைகளில்லாக் காரணத்தால், இணையத்தில் கோவை கம்பன் கழகத்தினரின் உரையுடன் கூடிய கம்பராமயணம் பால காண்டம் படித்து, பொழுதுகளைப் பயனுள்ளதாக்கிக் கொண்டேன்.
எனது உடல் நலமில்லாமல் இருந்த சமயம், ஹாங்காங் வரவிருந்த என் மாமனாரிடம், கோவை அற நிலையக் குழுவினரின் கம்ப ராமாயண உரை வாங்கி வாருங்கள் என்றேன். “ஏழு தொகுதிகள் அடங்கிய ஆச்சார்யா உரைதான் கிடைத்தது. வாங்கிவிட்டேன். நீஙகள் கேட்ட 10 தொகுதிகள் அடங்கிய கோவை கம்பன் உரை முழுமையாகக் கிடைக்கவில்லை” என்றார் எனக்கு யார் ஆச்சார்யா என்று தெரியவில்லை. தானம் குடுத்த மாட்டுக்கு பல்லைப் பார்க்க வேண்டாம், அதுவும் மாமனார் குடுத்ததைக் குறை கூறினால், நான் இக/பர லோகங்களில் உருப்படுவதற்கு வழியில்லை. வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
வரவேற்பறை மேசையில் அழகான ம செ வின் கலர் ஓவியத்துடன் பைண்டு செய்யப் பட்ட புத்தகங்கள் சிரித்தன. ”கம்பராமயணம் – உரையாசிரியர் - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்”. அப்போதுதான் வை மு கோ யாரென்று அறிந்து கொண்டேன். என்னுடய ஆச்சார்யா குழப்பம் நீங்கி இவர்தான் என் ஆசான் என முடிவானது.
இந்தப் புத்தகம்தான் படிக்கவேண்டும் என்பதும் ஊழ்வினை தான் போலும். கோவை கம்பன் கழக உரையில் பாடல் பதம் பிரித்தது எளிமையாக இருந்தது. உதாரண,த்திற்கு பால காண்டத்தில் தாடகை வதைபடலத்தில்
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம். கரிய செம்மல்.
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது. அப்புறம் கழன்று. கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் என. போயிற்று அன்றே!
சொல்லோக்குங் கடியவேகச் சுடுரசரங் கரிய செம்மல்
அல்லொக்கு நிறத்தினாண்மேல் விடுத்தலும் வயிரக்குன்றக்
கல்லொக்கு நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றெ.
இது வை மு கோ.
கோவை கம்பன் கழகத்தினர் உரையில் ஏற்கெனவே ஒரு முறை பால காண்டம் முழுதும் படித்திருந்ததால், வை மு கோவைப் படிப்பதில் முதலில் சற்று சிரமமிருந்தாலும் படித்து விட்டேன்.
அற்புதமான காப்பிய, காவியச் சுவையையும் நான் கற்றதையும் கேட்டதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது என்றும் நான் தீர்மானித்ததும், என்னை அறிந்த ஒரே காரணத்தால் மட்டும் இதை நீங்கள் வாசிக்க நேர்(நோ)வதும் ஊழ்வினைதான்.
ஊழ்வினை சிலசமயம், தொட(ராக)ர்ந்து வந்தும் ஊட்டும்.
No comments:
Post a Comment