Friday, January 13, 2012

ஆணெண்ன? பெண்ணென்ன?

பெண் சிசுக் கொலை சகஜமாக உள்ள நாட்டில், அதை ஒழிப்பதற்காக அரசாங்கம் பிரபலங்களை வைத்துச் செய்த விளம்பர படத்தின் தலைப்பு  ஆணெண்ன? பெண்ணென்ன?. விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்த சமுதாயத்தில் ஆண் மக்கள் அவர்களின் உடலுழைப்பிற்காக விரும்பப்பட்டனர். பெண்களின் வாழ்வு  கல்வியின்றி அவர்கள் வெறும் பொழுது போக்குவதற்கும், பிள்ளை பெறுவதற்கும், வம்சவிருத்திக்கும் என்று பாழ்பட்டுவிட்டது.   மத தர்மங்கள்(எல்லா மதங்களும் அடக்கம்.  விகிதாச்சார அளவில் மட்டுமே ஒன்றுகொன்று சிறிய அளவில் மாறுபடுகின்றது) பல ஆணிற்குப் பாரபட்சமாகத் தான் இருந்தது. பெண்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கு கிடையாது; பெண்கள் பெற்றவர்களுக்கு நீத்தார் கடன் செய்யக் கூடாது, கல்யாணம் முடிந்தவுடன் பெண்ணிற்கு தன் பிறந்த வீட்டின் எந்த துக்கத்திலும் பங்கில்லை.
அதே போல் ஆணுக்கு இருக்கக் கூடிய பொறுப்புகளும் பெண்ணிற்கு இல்லை.
என்னுடைய சித்தூர் தாத்தா என் பாட்டியின் சாகோதரர்கள், மற்றும் சகோதரிகளின் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவர். எப்போதும் வீட்டில் சத்திரம் போன்றே ஆட்கள் வருவதும் போவதும். எங்கள் குடும்பத்திலும் ஆண் குழந்தை விரும்பப்பட்டது என்றாலும் பெண்களை வேறு படுத்தியதில்லை. அவர்களுக்கு சலுகைகளும் மிகவும் அதிகம். அந்த நாளிலிலேயே என் அத்தைக்குக் குழந்தை பிறந்திருந்த போதும் கணவனின் கொடுமையை பொறுத்துக் கொண்ட கண்ணகி போல வாழ வேண்டிய அவசியமில்லை, என்று விவாகரத்தும் வாங்கிக் கொடுத்தவர். தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு, அதன் பிறகு அந்தக் காலத்திய இண்டர்மீடியட் படிக்க வைத்து, பிறகு ஹிந்தி பிரசார சபாவில் பண்டிட் பட்டம் பெற வைத்தவர். ஹிந்தி பண்டிட் ஆக்கி கவர்ன்மெண்ட் ஸ்கூலிலும் வேலை வாங்கிக் கொடுத்து, இன்றைக்கும் பென்ஷன் வருமளவுக்கும், தன் சொந்த காலிலில் நிற்பதற்கும் வழி வகுத்துக் கொடுத்தவர். அந்த அத்தையைப் பார்த்துப் பிறகு பெண்களில் யாரும் படிப்பில்லாமல் இருக்கக்கூடாது என்று மீதி அத்தைகள் என்றில்லாமல், பேத்திகளையும், (அறுவை சிகிச்சையில் மேற்படிப்பிற்காக டில்லி AIIMS சென்ற என் சித்தப்பாவின் மனைவியும், இந்த பேத்தி வரிசையில் அடக்கம்) படிக்க வைத்தவர்.  அவருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பாரபட்சம் உண்டு என்றாலும் பெண்கள் அனைவரையும் படிக்க வைத்த இவ்விஷயத்தினால் என் கண்களில் ஒரு ஆதர்ஸ புருஷராகவே தெரிகின்றார்.

என் அப்பாவோ பெண்களுக்குத்தான் நிரம்ப முக்கியத்துவம் கொடுத்தார். முதல் இரண்டு குழந்தைகள் பெண்களாக இருந்ததும் காரணாமாகயிருக்கலாம். பெரிய அண்ணனிடம் அடுத்த அண்ணனிடமும் அவருடைய மிகுந்த ஆசைக்குக் காரணம் அவர்கள் எப்போதுமே மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அதிலும் இரண்டாவது அன்ணன் 20 வயதிலேயே வேலைக்கு சென்று விட்டவன். அப்பாவிடம் தனக்கு எதுவும் வேண்டும் என்று கேட்கக் கூடத் தெரியாதவன். நானும் என் தம்பியும்   அப்பா வேலையில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, பிறந்தவர்கள். எந்தக் கவலையுமில்லாமல் வளர்ந்தவர்கள். உண்மையிலேயே ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டிகள் மட்டுமில்லாது கடைகுட்டிகள். அப்பாவிற்கு எப்போதுமே பேத்திகள்தான் உசத்தி. பேரன்கள் எப்போதுமே  அம்மாவின் மற்றும் எங்களுடைய செல்லம்.
அப்பா இறந்த போது எல்லாருக்குமே வருத்தமிருந்தாலும் கடைசி ஆறு மாதமாக படுக்கையிலேயே கழித்ததால் அந்த நரக வேதனையிலிருந்து விடுபட்டாரே என்று மனதை தேற்றிக் கொண்டிருக்கையில் பேத்திகள் ஒரேயடியாக அழுது கொண்டிருந்தனர். அப்போது வந்திருந்த என் மருமான்  “பேத்திகள் எல்லாருமே ரொம்ப ஓவரா பீலிங் காமிக்கிறாங்க. எங்களுக்குக் கூட வேதனையிருக்கு, கண்ல  தண்ணிவரது. இவா அழரது இனிமே பிளைண்ட் சப்போர்ட் இருக்காதேன்னுதான். . தாத்தா எப்பவுமே இவாளத்தான் கண்ணை மூடிண்டு சப்போர்ட் பண்ணா:  
என் மனைவி வீட்டின் பெரிய கூட்டுக் குடும்பத்தின் தலைவர் சில வருடங்களுக்கு முன் காலமானார். அவர் தன் தந்தையார் இறந்த பின்பு தான் பட்டப் படிப்பு படித்ததையும் மறந்து, அவர்களின் பட்டுப் புடவைக் கடையில் முழம் போடுவதற்காக வந்தேன்என எந்த வருத்தமுமின்றிக் கூறுவார். ஆசாரத்தின் காரணமாக மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம் பி பி எஸ் சேர்ந்து, மருத்துவப் படிப்பைத் துறந்தவர். வாழ்வியல் ஆதாரத்தையிழந்த தூரத்து சொந்தங்களையும் ஆதரித்து, அவர்களுக்கு உறைவிடம், உணவு உடையும் கொடுத்தது மட்டுமின்றி, மிக்க கௌரவத்துடன் நடத்தி, அவர்கள் குழ்ந்தைகளையும் ஆளாக்கி, மேலே கொண்டுவந்த மஹானுபாவர். கம்ப ராமாயணப் பாடல்களை மனனமாகக் கூறுவார். தமிழின்பால் மிகுந்த பற்றும் ஆர்வமும் கொண்டவர். என்னையும் ஊக்கப்படுத்தியவர். 
என் அக்காவின் சம்பந்தி வீட்டில்  மருமகளின் தந்தை, அவள் பிறக்கும் சமயம் இறந்துவிட்டார். ஆயினும் மீதி இருந்த இரண்டு சகோதரர்கள் ஒன்றாகவே இருந்து எல்லாருடையக் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து இன்றும் ஒன்றாகவே இருந்து வருகின்றார்கள். எல்லா வீடுகளிலுமே இப்படி நல்லதே நடக்கும் என்று கூற முடியாது அதற்கு விட்டுக் கொடுக்கும் மனோபாவம், அல்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதிருப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவை வேண்டும். பெரும்பான்மையானக் குடும்பங்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றன. இப்போதோ கூட்டுக் குடும்பம், எல் ஜி கெட்டி கூட்டுப் பெருங்காயம் பொடியாய்ப் போனமாதிரி தனிக் குடித்தனமாகிவிட்டது. தன் மனைவி தன் பெண்டு தன் பிள்ளையென்று.
திருக்குறளில் ஒரு அத்தியாயம் முழுவதும் பெண் பேச்சைக் கேட்டால் உருப்படமுடியாது என்று உள்ளது. “பெண்வழிச் சேரல். காமத்தால் வருவன நேரே பகையல்லவாயினும் ஆக்கம் சிதைத்தல், அழிவைத்தருதல் எனும் தொழில்களால் பகையோடு ஒத்தலின் பகையின் பாற்படுபனவாம் எனறு, அதைப் பகைப் பகுதியின் இறுதிக்கண் கூறுகின்றார் திருவள்ளுவர்.
பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது.)
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
தன் மனையாளை அஞ்சுவான்; தான் தேடிய பொருளே யாயினும், அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இரு  முதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும்). நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். திருக்குறளில் சொல்லாத விஷயமில்லை எல்லா விஷயங்களும் சொல்லப்பட்டுவிட்டன என்பவர்கள் சொன்னவற்றை அன்றைய நாளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமேயன்றி, இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிடக் கூடாது.
தசரதனுக்கு ஏற்கெனவே ஒரு பெண் இருந்ததகவும் அவளை வளர்ப்பு மகளாக ங்க தேசத்தைச் சேர்ந்த தன் நண்பனிடன் விட்டுவிட்டதாகவும் படித்த போது தோன்றியது “ ஆணென்ன?  பெண்ணென்ன?. திருக்குறளைப் போலவே இதையும் அந்த கால கட்ட சூழலுக்குத் தான் பொருத்திப் பார்க்கவேண்டும்.
ஆண் மகன் இல்லாதவன் “புத் (தமிழில் புற்று) எனும் நரகத்திற்குப் போவான்.  அதனால்தான் ஒரு புத்திரன் வேண்டும். புற்று என்பது கொடியவினைப்பயன்(பூர்வ ஜன்மத்தைச் சார்ந்த விஷயம்). கான்ஸருக்கு தமிழில் புற்று நோய் என்று  பெயர் வைத்த காரனம்  ஒரு வேளை நரகத்தினும் கொடிய வியாதி என்பதைத்தான் குறிப்பிடுகின்றதோ? பாம்பு புற்று மற்றும் கரையான் புற்றுக்கும் சம்பந்தமில்லையோ என யோசிக்க வைக்கின்றது.   திரு. நெல்லை கண்ணனும் பெரியவர்கள் “புத்தமிழில் புற்று என்பதை நரகம் எனும் பொருளில் குறிப்பிடுவார் என்கின்றார்..
காசியப முனிவனின் புதல்வன் விபண்டகனெனும் முனிவன். அவனின் புதல்வன் ருசியசிங்கனென்று பேர் பெற்றவன். மனிதர்களையேப் பாராமல் தபோவனத்திலேயே தன் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்து விட்டதனால், நாடு நகரங்களில் வாழ்கின்ற மானுடரை விலங்குகள் என்று நினைப்பவன். சகல சாஸ்தரங்களிலும் வல்லவன். மகா தபஸ்வி. அந்த முனிவன் வந்து யாகத்தை முடித்தால் புத்திரர் பிறப்பார் என்று வசிட்டன்  தசரதனிடம் கூறுகின்றான்.
கலை மானிடத்துப் பிறந்தவனாதலால் இம்முனிவன் முகத்தில் ஒற்றைக் கலைமான் கொம்புடையவன். மான் முகமுடையவன் அல்லன். இந்த முனிவனைப் பற்றியே “ நெற்றியில் கொம்பு முளைத்தவனோ? என்ற பேச்சு நிகழ்வதாயிற்று. தமிழில் இவன் பெயர் “கலிக் கோட்டு முனிவன்
தசரதன் வசிட்டனை ருசிய சிங்கன் எங்கிருக்கின்றான் அவனை அழைத்து வரும் வழி யாது எனக் கேட்க ருசிய சிங்கன் உரோமபாத மன்னவனிடத்து(கால் பாதத்தில் மயிருள்ளவன் என்பது பொருள்) இருத்தலாலும், அம்மன்னவன் தான் வளர்த்த தசரதன் புதல்வியான சாந்தையென்ற மகளை அம்முனிவனுக்கு மணம் செய்து தந்ததனாலும் “ முனிவனை அழைத்து வரலாம் என்று சொல்லி தசரத மன்னவனுக்கு மனதில் படுமாறு ருசிய சிங்கனுடைய வரலாற்றை கூறினான் வசிட்டன்.
உரோமபாதன் ஆளும் அங்க நாட்டில் வெகு காலமாக மழையில்லாமல் வரண்டிருக்க, சிறந்த நூல்களறிவில் பொருந்திய முனிவர்களை வரவழைத்துக் கேட்க அவர்கள் “கலைக் கோட்டு முனிவரினவான் பிலிற்று மென்றார். அலைகளைக் கொண்ட கடலை ஆடையெனக் கொண்ட பூலோகத்தில் வாழ்பவரை மிருகங்கள் என என்னும் கோதுஇல் குணத்து அருந்தவனை எங்ஙனம் கொணர்வது என்று யோசிக்க
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை.
மாதர் எழுந்து. யாம் ஏகி. அருந் தவனைக்
கொணர்தும்என. வணக்கம் செய்தார். 
ஓளி பொருந்திய நெற்றியையும், கருத்த நீண்ட கண்களையும், சிவந்த அதரத்தோடு கூடிய வாயையும், முத்துப் போன்ற பற்களையும், இரட்டையாகவுள்ள மெல்லிய தனங்களையுமுடைய விலைமாதர் சிலர் எழுந்து “ நாங்கள் போய் ருசியசிங்க முனிவனை அழைத்துக் கொண்டுவருவோம் என்று சொல்லி வணக்கம் செய்தனர்..     
அவர்களின் மொழிக் கேட்ட அரசன் மகிழ்ந்து அவர்களுக்கு ஆபரணங்கள் மற்றும் சேலைகள் முதலியவற்றையும் கொடுத்து நன்மையுள்ள பல செல்வங்களையும் கொடுத்தான்.
பனிப் பிறையைப்  பழித்த நுதல். பணைத்த வேய்த் தோள்.
ஏங்கும் இடை. தடித்த முலை. இருண்ட குழல்.  
மருண்ட விழி. இலவச் செவ் வாய்ப் பூங்கொடியீர்! ஏகும்என.
தொழுது இறைஞ்சி.  இரதமிசைப் போயினாரே
அவர்களும் இரதத்தில் ஏறிப் போயினர்.  அவன் வசிக்குமிடத்திற்கு அருகில் குடியமர்ந்து அவன் தந்தையில்லாத நேரம் சென்று அவனை வணங்கினர். தன்னைப் போல் பிறரையும் நினைத்த அவன், அவர்களும் தன்னைப் போல் முனிவர்கள் என்றே எண்ணினான். அவர்கள் அவனை “தம்மிருப்பிடம் தேவரீர் வரவேணும் என்றழைக்க அவனும் அவர்களுடன் போகலானான்.
தங்கள் நெஞ்சம் போல் பிறரை மயக்கவல்ல அந்த விலைமகளிர் மிகுகின்ற மகிழ்ச்சியையும்  ஆச்சரியமடைந்த மனத்தையுடையவர்களுமாய் “ அம்ம ஈது இதுவென (முனிவனே எங்கள் ஆசிரமம் இதோ! இதோ! என) முனிவன் தொடர, பரந்த நீண்ட அங்க தேச வழியில் சென்றனர். அவன் வளநகர் வருமுன்னே
“சளசள வெனமழைத் தாரை கான்றன
குளனொடு நதிகள்தங் குறைகள் தீரவே
அரசன் உடனே காமமும். வெகுளியும். களிப்பும். கைத்த அக்காமுனி இவண் அடைந்தனன்கொல் - கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?”  உணர்ந்து சேனையுடன் வந்து முனிவனை எதிர்கொண்டு முனிவனை வணங்க, தேவர்களும் முனியின் கோபத்தால் என்ன விளைவுகள் வருமோ என்று அஞ்சிக் கொன்டிருந்த வேளையில் உரோமபாதன் அம்முனிவன் சினத்தை “ கரையெறி யாதலை கடலும் போன்றதே  என ஆற்றினான்.

பிறகு முனிஸ்ரேஷ்டனுக்கு அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி. வேறு
உரைக்குவது இலது என உவந்து. தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முகநலாள்தனை.
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன்
முனிவனுக்குத் தன் வளர்ப்பு மகளான சாந்தயை முறையாகத் திருமணம் செய்வித்தான். அதானல் வேந்து அருள்
செறிகுழல் போற்றிட. திருந்து மா தவத்து
அறிஞன். ஆண்டு இருக்குநன்; அரச!என்றனன்.
 உரோமபாதன் உவந்து அளித்த நெருங்கிய குழலையுடைய சாந்தை உபசரிக்க அதுமுதல் அங்கு தான் உள்ளான் என்றான் வசிட்டன். தசரதனுக்கு தன் எண்ணம்  நடந்துவிடும் என்ற நம்பிக்கை தந்த உற்சாகத்தின் விளைவினால் உடனேயே ருசிய சிங்கரை அழைத்து வரப் புறப்பட்டான்.
ஓவியம்:  திரு எஸ். இளையராஜா                                       தொடரும்                                                                                                                                                                              

No comments:

Post a Comment