திரைப் படங்களில் எவ்வளவோ மாற்றம் வந்தாலும் திரைக்கதையில் அவ்வளவாக மாற்றம் வரவில்லை. தமிழ்த் திரைக் கதையில் மாறாதிருப்பது, ஒரே பாட்டில் ஏழை, இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரானாவது, 1 மாத குழந்தை 4 நிமிடத்தில் 26 வயது வாலிபனாவது போன்றவை.
மயக்கம் போட்டவர் விழித்தவுடன் “நான் இப்போ எங்கேயிருக்கேன்?” என்று எக்ஸிபிஷனில் தொலைந்த குழந்தை போல் கேட்பது, குழப்பத்தில் இருப்பவருக்கு மேல் தலையில் மின் விசிறி சுழலுவது, வில்லன் சத்தமாக ஐஜி ஆபிஸ் எதிரிலேயே கமிஷனரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவது, ஓடிவரும் போலீஸ்காரர்கள் ஒன்றாகவே ஓடுவது, ஹீரோ எதிர்ப்புறமிருந்து கையை ஆட்டிக் கொண்டே ஓடிவிடுவது, நாற்பது பேர் வந்தாலும் ஒரே ஆளாக நின்று ஹீரோ சண்டை போட்டு ஜெயிப்பது, நாயகன் எவ்வளவோ கொலைகள் செய்திருந்தாலும் நீதிபதி சாட்சி யில்லையென்று கூறி விடுதலை செய்வது, காதலனும் காதலியும் மரத்தைச் சுற்றி ஆடிப்பாடி காதலிப்பது என்று தமிழ்த் திரையில் மாறாத clichés இன்றும் பல உண்டு.
திரைக் கதையில் இன்னுமொரு மிகப் பழமையான உத்தி Flash Back. இது இன்னவாறு நடந்தது என்று, முன்னமிருந்த வாழ்க்கையைச் சொல்லி “ரவுடியாகிய நான் ஏன் ஆட்டோ டிரைவரானேன் என்ற உண்மையைக் கூறி தங்கைக்கு மெடிகல் சீட் வாங்கி குடுப்பதிலிருந்து “இப்படி என் வாயிலே விஷத்தைக் கொடுத்தால் தான் நீ குள்ளமாயிட்டே” என்று பழிதீர்க்கும் படலத்திற்கு பிள்ளையார் சுழி போடுவதும் Flash Back மூலம்தான்.
கருப்பு வெள்ளைப் படமாயிருந்தவரை யாரும் கவலைப் படாதது Flash Backகின் கலர். கலர் பிலிம் ஆனவுடன் Flash Back கருப்பு வெள்ளை அல்லது சேஃபியா கலர் ஆனது,
நான் பார்த்த ஒரு சீனப்படத்தில் (The Road Home) வித்தியாசமாக, டைரக்டர்(Zhang Yi Mau) Flash Backஐ கலரிலும் நிகழ்காலத்தைக் கருப்பு வெள்ளையிலும் காண்பித்து, இந்த ஒரு சிறு வித்தியாசத்தின் மூலமே திரையில் கவிதைப் படைத்தார். கிராமத்தில் ஆசிரியராக இருந்த தந்தையிறந்ததைக் கேட்டு மகன் நகரத்திலிருந்து ஊருக்கு வருகிறான். அவனுடைய பார்வையில் தாய் தந்தையரின் காதல் விரிகிறது. மருத்துவமனையிலிருந்து அடக்கம் செய்வதற்காக உடலை, பழைய முறைப்படி தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும் என்கின்றாள் தாய் கடுமையான பனிமழை பொழிந்து கொண்டிருக்கின்றது. ஊரிலோ இளைஞர்கள் யாரும் இல்லாத காரணத்தால் வேண்டாம் என எவ்வளவோ கூறியும் மறுத்து விடுகிகிறாள் தாய். அவள் சொல்லும் காரணம் ”அப்போதுதான் ஆவிக்கு வீட்டிற்கு வர வழித்தெரியும்” என்பது மட்டும்தான். இவர்கள் வெளியூரிலிந்து ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு மருத்துவமனை இருக்கும் நகரத்திற்கு போகின்றனர். தந்தையிடம் படித்து வெளியூர்களில் இருக்கும் பழயை மாணவர்கள் எல்லாம் வந்து கொட்டும் பனிமழையிலும் ஊர் வந்து சேர்வதும், காசுக்காக பணியில் அமர்த்தப்பட்டவர்களும் காசை வேண்டாம் எனக் கூறிவிடுகின்றனர். அதை பள்ளிக்கூடத்திற்கு கொடுத்து விட்டு, தந்தை நடத்திய பள்ளியில் மகன் தந்தை தானே எழுதி தயாரித்த புத்தகத்தை வைத்து ஒரு நாள் பாடம் நடத்துகின்றான் என்று படம் முடிவடையும்.
தசரதன் பகையின்றி உலகம் முழுவதையும் அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசாண்டு கொண்டிருக்கையில், தனக்குப் பின் அரச பரிபாலணம் செய்வதற்கு வாரிசில்லாமைக் குறித்து கவலை கொண்டு தன் குல குருவை நாடிப் போகின்றான்.
அவன் அப்போதும் தனக்கு பின் அரசாளுவதற்கு வாரிசு வேண்டும் என்றோ தன் இராஜ்ஜியத்தின் பாத்தியத்தை கொடுப்பதற்காகவோ என சொல்லாமல் வசிட்டனிடம்
'அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.
”60 ஆயிரம் வருடங்கள் எந்த விதமான குறையுமில்லாமல் அரசாண்டும், என் காலத்திற்கு பிறகு இந்த இராஜ்ஜியத்தை ஆளுவதற்கு சந்ததியில்லையே என்ற குறை என் உள்ளத்தில் உண்டாயிருக்கின்றது” என வசிட்டனிடம் கூறிய தசரதன், மேலும்,
அருந்தவ முனிவரும் அந்தணாளரும்
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உஅழ்க்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும். என் அகத்தை’ என்றான்.
தனக்கு சந்ததியில்லாமையால் “ என் பின் வையகம் மறுகுவது என்பதோர் மறுக்கம் உண்டு” எனப் பொதுவாக கூறிய அரசன், புதல்வனை விரும்புவது முனிவர் முதலியோரை காத்தல் பொருட்டேயன்றி தன் நன்மையைக் கருதியன்று என அவனுடைய குறையை வற்புறுத்த இங்கு விவரித்துக் கூறுகின்றான்.
முரசறை செழுங்கடை முத்த மாமுடி
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்
விரைசெறி கமலமென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன் மன்த்தில் எண்ணினான்.
அலைகடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை
மலை என விழிதுயில் வளரும் மாமுகில்
கொலைதொழில் அரக்கர்தங் கொடுமை தீர்ப்பென்” என்று
உலைவுறும் அமரர்க்கு உரைத்த வாய்மையை.
தசரதன் தன் குறையைக் கூறவும் பிரம்மனின் மகனான் வசிட்டன் பாற்கடலில் துயிலும் திருமால், கொலைத்தொழில் அரக்கர் தம் கொடுமை தீர்ப்பேனென்று கூறியதை மனதில் எண்ணினான். அந்த பிளாஷ்பேக் சம்பவத்தை அடுத்த 22 கவிகளால் விவரித்துக் கூறுகின்றார்.
தேவர்கள் சிவனிடத்து தங்கள் குறைகளைச் சொல்ல, அவர்களுடன் சேர்ந்து சிவனும் பிரம்மாவிடம் செல்ல, பிரம்மா தன்னாலியன்ற உதவிகளைச் செய்வதாக கூறினார்.
இருபது கரம் தலை ஈர்-ஐந்து என்னும் அத்
திருஇலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால்
கரு முகில் என வளர் கருணைஅம் கடல்
பொருது இடர் தணிக்கின் உண்டு; எனும் புணர்ப்பினால்
இராவணனை ஒழிப்பது தம்மால் முடியாத காரியம்; திருமால் கருணையால் அவ்வரக்கனை ஒழித்தால்தான் தேவர்களுக்கும் மானுடருக்கும் துயர் தீரும் என்று பிரம்மனும் சிவனும் மற்றைய தேவர்களும் ஆலோசித்தனர்.
இவ்விடர் திருமாலால்தான் தீருமென்றெண்ணி திருமாலை தியானிக்கத் திருமாலும் தோன்றினார். தோன்றிய மஹாவிஷ்னுவிடம், தேவர்கள்
”ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழ்ந்தன; திருவின் நாயக!-
உய் திறம் இல்லை” என்று உயிர்ப்பு வீங்கினார்.
”விண்ணுலகத்தோரும் மண்ணுலகத்தோரும் செய்கின்ற நற்கருமங்களுக்கெல்லாம் அரக்கர் பேரிடையூறாகயிருக்கின்றனர். ஆதலால், நீ அவர்களை ஒழிக்காவிட்டால் எங்களால் பிழைத்திருக்க முடியாது” என்று தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அனுசர் – பின்பிறந்தவர்; அனுஜ் –எனும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.
எனறனர். இடர் உழந்து. இறைஞ்சி ஏத்தலும்.
மன்றல் அம் துளவினான். ‘வருந்தல்; வஞ்சகர்-
தம் தலி அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீ கேண்ம’ என. உரைத்தல் மேயினான்.
”வருந்தாதீர். பூமியில் மானுடனாகத் தோன்றி இராவணனுடைய சிரங்களைத் துண்டித்து உங்கள் கவலைத் தீர்ப்பேன்” எனக் கூறி மேலும்
’வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்.
காணினும், வரையினும் கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று’ என
ஆனனம் மலர்ந்தனன் – அருளின் ஆழியான்
’ தேச்வர்கள் எல்லோரும் குரங்குகளாக் காடுகளிலும், மலைகளிலும் நறுமணமுள்ள சோலைகளிலும் கூட்டங்களுலனே அவதரித்திடுவீர்’ என அருளின் ஆழியான் அருளினான்.
ஒரு சமுயம் சிவபெருமானோடு பார்வதி தேவி இனபமனுபவித்துக் கொண்டிருந்தால். “சிவபூஜையில் கரடி புகுவதைப்” போல் தேவர்கள் நுழைந்து அவர்களைத் தடுத்துவிட்டனர்; தனக்கு புத்திரன் தோன்றுமுன் தடுத்ததனால் “இனி மனைவியரிடத்து நுமக்கு சந்ததி தோன்றாதொழிக” என பார்வதி தேவி தேவர்களை சபித்தாள். அதனால் தேவர்களுக்கு தமது மனைவியரிடத்து சந்ததியுண்டாவாகையால் இராவணன் நந்தி தேவரையிகழ, நந்திதேவன் முக விகாரமுள்ள சாதிகளால் அரக்கர்நாசம் நேரிடுமென்று சாபம் கொடுத்தனாலும், தேவர்கள் வானராயினர் என்பது புராணம். அவதரித்தல் – மேல்நிலையிலிருந்து கிழே வருதல். வா நரம் – மனிதரினும் (நரன்) சிறிது வேறுபட்ட வடிவமுடையது என்பது பற்றிய பெயர்.
”நமது சங்குசக்கரங்களும் திருவனந்தாழ்வானும்(ஆதிசேஷன்) எனக்கு தம்பியராய் நாம் அயோத்தியில் தசரத சக்கரவர்த்திக்கு புத்திரனாய் பிறந்து அரக்கரது வாழ்வையும் நமது கணையால் ஒழிப்போம்” என பெருமாள் அருளினார்.
இதையெல்லாம் மறுபடி மனதிலோட்டிப்பார்த்த வசிட்டன் தசரதனைப் பார்த்து
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என. முனி இதயத்து எண்ணி
மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி.
தீது அற முயலின். ஐய! சிந்தைநோய் தீரும்’ என்றான்.
இந்த Flash Back கலரா அல்லது கருப்பு வெள்ளையா என்பதை
கருமுகில் தாமரைக் காடு பூத்து. நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய. ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல் கழலுன்மேல் வந்து தோன்றினான் என மஹாவிஷ்ணு வருவதை கூறுகின்றார் கவி. இப்பாடலை படித்து அவரவர் ஆசைக்கேற்ப தீர்மானிக்கலாம்.
மன்னவன் அது கேட்டு யாகத்திற்கு என்ன செய்யவேண்டும் என வினவ ருசியசிங்கன் முனிவனை அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்விக்க வேண்டும் என கூறுகின்றான்.
தொடரும்
No comments:
Post a Comment