Friday, February 24, 2012

ஆளுமை

சித்தூர் பாட்டி இரவில் படுத்து தூங்குவதற்குமுன் எங்களுக்கு எல்லாம் தன் நினைவிலிருந்து மஹா பக்த விஜயம், இராமாயணம் மற்றும் மஹாபாரத்திலிருந்து கதைகள் சொல்லுவார். எனக்கு மஹாபாரதத்தில் மூன்று பாத்திரங்கள் பரிதாபத்திற்கு உரியவை எனத் தோன்றும். கர்ணன், கடோத்கஜன் மற்றும் அபிமன்யு.  அபிமன்யு அர்ஜுனனின் மகன். சுபத்திரையின் வயிற்றில் கர்பத்திலிருக்கும் போது, அர்ஜுனன் சக்கரவியூகத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கையில் சுபத்திரை தூங்கிவிட,  ஊம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்ததாம் கருவிலிருந்த குழந்தை.  சக்கரவியூகத்தின் உள்ளே புகுவது முழுதையும் கேட்டது. வெளியே வருவதைப் பற்றி அர்ஜுனன் ஆரம்பிக்கும் முன்னே கிருஷ்ணன் அர்ஜுனனை அழைத்துச் சென்றுவிட்டார். அபிமன்யுவிற்கு சக்கரவியூகத்திற்கு உள்ளேச் செல்லத் தெரியும். உடைத்து வெளியே வரத்தெரியாது. யுத்தத்தில் பரிதாபமாக இறந்தான்.
பாட்டி கதை சொல்லும் போதெல்லாம் ஏன் அப்படி செய்தார் கிருஷ்ணர்? இவனும் பாண்டவ குடும்பம்தானே?என்றால், அபிமன்யுவும் அரக்க குணமுடையவன்; பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன் மற்றும் கர்ணண் போல,   இவா எல்லாரையும் இந்த அவதாரத்திலேயே முடித்துவிட வேண்டும்  என்பது பகவான் சித்தம். சும்மா சும்மாவா அவதாரம் எடுக்க முடியும் பகவானால் என்று முடித்து விடுவார். அதற்கு மேல் கேட்க தோன்றியதில்லை. பாட்டி மிக அருமையாக கதை சொல்லும்போது  கேள்வி கேட்டு அநாவசியமாக அவ்வனுபவத்தை இழக்க விரும்பாதது கூட ஒரு காரணம்.
பிறகு விஞ்ஞான பூர்வமாக குழந்தைகளுக்குக் கர்பத்திலேயே கேட்டு உணரும் அறிவும் ஆற்றலும் உண்டு என்று படிக்கும்போது, அபிமன்யு கதைதான் ஞாபகத்தில் வரும். பெண்கள் விசேஷமாக கர்ப்பகாலம் முழுவதும் சந்தோஷமாக இருக்கணும், நல்லதையே நினைக்கணும், நல்லதையே பார்க்கணும், கேக்கணும் என அம்மா அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பார்கள்.
எங்கள் குடும்பத்திற்கும் இசைக்கும் ரொம்ப தூரம். என் தங்கை (சித்தியின் பெண்) விழுப்புரத்தில் பாட்டுக் கற்றுக் கொண்ட போது அவளுடைய டீச்சருக்கு(நல்ல இனிமையான குரல்) குயிலி என்று பட்டப் பெயர் சூட்டியது, அப்பா தினம் சாயி பஜன் பண்ணும்போது “ மதுரம் மதுரம் “ என்று பாடினால் “ கோன் மதுரம்? என தூர்தர்ஷன் உதவியால் கற்றுக் கொண்ட இந்தியில் கிண்டலடிப்பது என்பது மட்டுமே என்னுடைய நேரடித் தொடர்பு சங்கீதத்துடன். ஆனாலும்  ரேடியோ பிறகு டேப்ரிக்கார்டர் முதலியவற்றின் பின்னணியில் தான் எப்போதுமே படித்தேன். அதுவும் நட்ட நடு ஹாலில்தான் படிப்பு. நடக்கும் எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டு, அவ்வப்போது அவர்கள் ஏதாவது மறந்து விட்டால் அதை ஞாபகப்படுத்துவது என் பிரதான வேலையாகவிருந்தது.
மனைவி பாட்டோ நடனமோ கற்றுக் கொள்ளவில்லை. சாஸ்திரிய சங்கீதத்தை ரசிக்குமளவுக்கு ஞானம் உண்டு. கற்றுக் கொள்ளாததை நினைத்து இப்போது வேதனைப் படுகின்றாள் எனக்கு ஒரு தலைவலி கம்மி என்ற சந்தோஷம். இல்லையென்றால் பாட்டுப் பாடி எப்படியிருக்கு? என்றால் என்ன பதில் சொல்வது. எப்படி பதில் சொன்னாலும் சிக்கல்தான். நல்ல வேளை அந்த அபாக்கியம் நான் பெறவில்லை.
அவள் கர்ப்பம் தரித்திருந்த காலத்தில், எனக்கு இல்லாத ஞானம் குழந்தைக்காவது இருக்கட்டும் என்று நல்ல மியூசிக் சிஸ்டம் வாங்கி, நல்ல கர்நாடக சங்கீத இசையை அவள் கேட்கும்படி செய்தேன். இன்று என் மகன் பாடாவிட்டாலும் (நல்ல இனிமையான குரல் ஆனால் எல்லாவற்றையும் மீறி கூச்சம்) கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை (சிம்பொனி) , திரையிசை(தமிழ் மற்றும் ஹிந்தி) இவைகளை ரசிக்கின்றான். டிசம்பரில் இரு வருடங்களாக சென்னையில். அவன் தாத்தாப் பாட்டியுடன் மியூஸிக் சீஸனில் நடக்கும் கச்சேரிகளுக்குப் போகின்றான். என்னையும் வா வா என்கின்றான். எனக்குக் கூட போகவேண்டும் என்றுதான் ஆசை,நாரத கான சபாவில் வருடா வருடம் ஞானாம்பிகாவின் அருமையான சாப்பாடு மற்றும் டிபன் வகைகளை சாப்பிட மட்டும். 
என் மகன் இசையை ரசிப்பதற்கு, அவனுக்கு இவ்வூரில் கட்டாயமாக இருந்த இசைப் பயிற்சி மற்றும் நுண்கலையை இரசிப்பதற்கும், நாடகத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் பெற்ற பயிற்சியும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
அண்ணாவின் மகன், மகள் இருவருமே அதிர்ஷ்டசாலிகள். தாத்தப் பாட்டி, சித்தப்பாக்கள், அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் என பெரிய பட்டாளத்துடன் வளர்ந்தவர்கள். என் நண்பன் பாஸ்கர் மந்தைவெளியிலிருந்து வேளச்சேரிக்கு, அவர்கள் சொந்த வீடு வீடு கட்டிக் கொண்டு போகும் போது, அவனுடைய அப்பா எனக்காகவே ஒரு கெஸ்ட் ரூம் வைத்திருந்தார். எஸ் பி பி போலவே மிக அருமையாகப் பாடுவான். அவன் வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் வசித்த அண்ணாநகர் வந்து எங்களுடன் தங்குவான். நான் சனிக்கிழமை வேளச்சேரி செல்வேன். இது அடுத்த வாரம் அப்படியே மாறும். அண்ணாவின் மகனுடன் வெளியில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவன், பிராக்டிஸ் ஆரம்பித்தப் பிறகு அண்ணாவின் மகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். நானும் பாஸ்கரும் அண்ணாநகர் கிராண்ட் தியேட்டரில் மௌனராகம் படத்தை, அந்தப் படம் ஓடிய 4 வாரங்களிலும் வாரக் கடைசிகளில் பார்த்தோம்.
சமீபத்தில் சென்னையில் மௌனராகம் படம் பார்த்துக் கொண்டே நாஙகள் கிராண்ட் தியேட்டரில் அந்த படத்தை எத்தனை தடவைப் பார்த்தோம் என்று நினைவிருக்கின்றதா என்று குறுஞ்செய்தியனுப்பினான் .
ஒவ்வொரு தடவையும் வீட்டிலிருந்து நாங்கள் கிளம்புவதற்கு முன்பு அண்ணாவின் மகள் ஓடிப் போய் மன்னியிடம், நான் சித்தப்பாவுடன் பாஸ்கு வீட்டுக்குப் போறேன். சாப்ட வரல என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்புவாள். பாஸ்கரும் (தமிழகப் பட்டி மன்றங்களில் பரவலாக அறியப் பெற்ற பாரதி பாஸ்கரில், பாஸ்கர் இவன் தான்) ஒவ்வொரு தடவையும் ஆகா! என்ன பொறுப்பு. இந்த வயசுலேயே என்பான். எங்காவது கிளம்புவதற்கு முன்பு, எங்கு போகிறேன், சாப்பிட வருவேன் இல்லை என்று கட்டாயம் சொல்லவேண்டும் என்பது எங்கள் வீட்டின் டென் கமாண்ட்மென்ட்ஸ்லில் ஒன்று.  
இக்கட்டான சூழ்நிலைகளில் இராமன் எப்படி முடிவெடுக்கின்றான் என்பதில் அவனுடைய ஆளுமை வெளிப்படுகின்றதை தாடகை வதத்தில் அதை மிக அழகாகச் சித்தரிக்கின்றார் கம்பர்


இராமனும், இலக்குவனும் தாடகை எங்கே? என்று வினவுமுன்னே நேரிலே வந்த தாடகை
ஆர்த்து. அவரை நோக்கி    நகைசெய்து. எவரும் அஞ்ச.
கூர்த்த நுதி முத் தலை    அயில் கொடிய கூற்றைப்
பார்த்து. எயிறு தின்று    பகு வாய்முழை திறந்து. ஓர்
வார்த்தை உரைசெய்தனள் இடிக்கும்    மழை அன்னாள்

கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட. கருவறுத்தனென்; இனி. ‘’சுவை கிடக்கும்
விடக்கு அரிதுஎனக் கருதியோ? விதிகொடு உந்த.
படக் கருதியோ? - பகர்மின். வந்த பரிசு!என்றே.
எள்ளலின் காரணமாக நகைத் தோன்ற “ நீங்கள் இங்கே வந்தது மரணத்திற்குக் காரணமான உங்கள் ஊழ்வினை உங்கள் கழுத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு வந்ததனாலா? அன்றி இங்கு உள்ள உயிர்களையெல்லாம் கொன்று தின்றுவிட்டு இரைக் கிடைக்காமல் பசியால் உழல்கின்ற எனக்கு உணவு தரவேண்டுமென்ற கருத்தினாலா?என்று தாடகை வினாவினள்.
அது மட்டுமின்றி விழித்துப் பார்த்து மலைகளும் பொடிபட காலால் உதைத்து இந்த வேற்படையை இவர்கள் மார்பில் அழுந்தும்படி வேகமாக விடுவேன் என்று கர்ஜித்தாள்.
அண்ணல் முனிவற்கு அது    கருத்துஎனினும். ஆவி
உண்என. வடிக் கணை    தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்    தொடங்கியுளளேனும்.
பெண்என மனத்திடை    பெருந்தகை நினைந்தான்.
பேராரவாரம் செய்து கொண்டு பெருஞ்சினத்துடன் வந்த தாடகையை இராமபிரான் கொல்ல வேண்டுமென்று முனிவன் கருதினானாயினும், அம்முனிவன் குறிப்பை உணர்ந்தும், இராமபிரான் பெண்கொலை பெரும்பாவமென்று கருதி வாளாவிருந்தனன். ஆவியுண்ணுதல் – கொல்லுதல்; வடிக்கணை- ஆராய்ந்தெடுக்கப்பட்ட அம்பு.
சிறு வயதிலேயே குழந்தைளின் ஆளுமை, அவர்கள் எவ்விதம் தீர்மானிப்பர், இக்கட்டில் எப்படி நடந்து கொள்வர் என்பது தெரிந்துவிடுகின்றது. என் மகனுக்கு மூன்று வயது கூட நிரம்பாத நிலையில் சென்னையிலிருந்து இங்கு வந்தேன். பிறகு ஒருவருடம் கழித்து மனைவி. இங்கு அப்பொழுது பள்ளியில் சேர்க்கும் காலம் இல்லையாதலால், ஏப்ரல் மாத கோடை விடுமுறையின் போது மகன், என் மாமியாருடன் வந்தான். மெட்ராஸிலே தனிவீடு, கார், டிரைவர் என்ற வாழ்க்கை. இங்கு எல்லாமே பெட்டி பெட்டியாக வீடுகள். காரும் கிடையாது. அவனுக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. வ்வொரு பொருளையுமே உங்கவீடு சின்னது. அதான் சின்னதா இருக்கு. எங்க வீடு பெரிசு அதான் பெருசாயிருக்கு என்பான். இரண்டு மாதம் கழித்து யாயா நம்ம சாமானெல்லாம் எடுத்துக்கோ. நாம கிளம்பணுமேஎன்று கிளம்பிவிடுவான். அவன் ஒரு நாள் கூட கிளம்பும் போது அழுததில்லை. ஆனால் ஓவ்வொரு தடவையும் ஐந்தாவது வரை மெட்ராஸ்ல படிப்பேன். அதுக்குப்புறம் இங்கே வந்துடுவேன்.ஆறாவதுலேந்து இங்கேதான் படிப்பேன்அப்போது அவன் சரஸ்வதி வித்யாலயாவில் ஒன்றாவது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையின் போது வந்து எங்களுடன் இரண்டு மாதமிருந்துவிட்டு கிளம்புவான்.
எனக்கு பழக்கமான ஒருவரின் மனைவிக்கு சந்தேகம். ஏன் பையன் உங்களுடன் இல்லை. “அவனுக்கு இஷ்டமில்லை" என்றால், “சின்ன குழந்தைக்கு என்ன தெரியும்? என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நாளைக்கு உன் வீட்டிற்கு அவனை அனுப்பி வைக்கிறேன் நீயே கேட்டுக் கொள் என்றேன். அவன் ஆறாவது போகும் சமயம் என்னுடைய பழைய வேலையைவிட்டுவிட்டு சென்னையில் இன்னொரு வேலை ஒப்புக் கொள்ளும் சமயத்தில், இங்கும் இன்னொரு வேலை வாய்ப்பும் வைத்துக் கொண்டு, நான் முடிவெடுக்கத் தடுமாறிய சமயத்தில், மகன் இங்கு வந்து படிக்கின்றேன், என சொல்லவும் அதன்படி இங்கேயேயிருப்பது என்று தீர்மானித்தேன். அச்சமயம் நான் சென்னையில் வேலையில் சேர வேண்டிய கம்பெனியில் பணியாற்றிய நண்பனும் இங்கிருந்தான். ஏழுவருடம் கழிச்சு வரவிருந்த பெர்மனென்ட் ரெசிடென்சியை எங்கே வேணாம்னுட்டு அங்கே வந்திடுவியோன்னு பயந்தேன். நல்லவேளை என்றான்.
12 வது முடித்துவிட்டு இவ்வூர் வழக்கப்படி அவன் கனடா தான் போகப் போகிறேன் என்றான். அதே போல் அவனுக்கு டொரண்டோ யூனிவர்சிட்டியில் வணிகம் ற்றும் பொறியிலில் சிவில் பிரிவிலும் இவன் பரிட்சை எழுதுவதற்கு முன்பே அட்மிஷன் வந்து விட்டது. நான் பொரியிலுக்கு வேண்டுமானால் நீ கனடா செல்லலாம். ஆனால் வணிகத்திற்கு ஹாங்காகிலேயே நல்ல யூனிவர்சிட்டியிருக்கும் போது கனடா செல்ல வேண்டாம் என்றேன்..ஹாங்காங் பல்கலை கழகங்களுக்கும் விண்ணப்பிக்க சொன்னவுடன் “ உனக்காகப் பண்ரேன் ஆனா நான் கனடாதான் போகப் போகிறேன்என்றான். நானும் சரி வரட்டும் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். இங்கும் அவனுக்கு உடனேயே சீட் வந்துவிட்டது, இங்கும் கடாவிலும் ஹாஸ்டலுக்கும் முன் பதிவு செய்திருந்தேன். அவன் எதற்கு வேண்டுமானாலும் போய் படிக்கட்டும் என்று. அவன் கனடாதான் போகப் போகிறான் என்று நான் முடிவுக்கு வந்ததிருந்த வேளையில் நான் இங்கேயேப் படிக்கப் போகிறேன். கனடா போகப் போவதில்லை என்று நண்பர்களுடன் ஓஷன் பார்க் சென்று திரும்பி வந்த மாலைப் பொழுதில் கூறினான். இன்று பட்டப் படிப்பை முடிக்கப் போகின்றான். வெளிநாடு போய் படிப்பதுதான் உயர்ந்தது எனும் மோகத்தையும் மாயையையும் உடைத்து  ஒரு பெரிய ரோல் மாடலாகத் திகழ்கின்றான். எங்கள் குடும்பத்தில் உறவினர்கள் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி “ஏன் இஞ்சினியரிங் படிக்கவில்லை?. நல்ல மானேஜர் 10 இஞ்சினியரை வேலைக்கு அமர்த்தலாம் என்று என் பெரிய அண்ணா கூறினதை நினைத்துக் கொள்வேன்.
குழந்தைககளுக்கே திடமான எண்ணங்கள் இருக்கும் போது பதினாறு வயது இராமனைப் பற்றிக் கேட்கவாவேண்டும்! .
இராமன் குறிப்பறிந்த விசிவாமித்திரன் இந்தத் தாடகையை பெண்ணென்றால் தகாது
தீது என்றுள்ளவை யாவையும் செய்து. எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;

நாண்மையே உடையார்ப் பிழைத்தால். நகை;வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்.
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?
சாரமிள்ளாத பொருள் என்று எங்களை தின்னாமல் விட்டது மட்டுமே இவள் குறை, மீதி அனைத்தையும் செய்திருக்கின்றாள். அது மட்டுமின்று நீ நினைக்கின்றபடி பெண்களைக் கொல்வது பலரும் ஏளனம் செய்யும் நகைப்புக்குறியதுதான் என்றாலும், இவள் பெண்ணேயல்ல ஆணே; அன்றியும் தன் பெயரை சொன்னாலும், அது கேட்ட மாத்திரத்திலேயே பெருவீரரும் தங்கள் வலிமை முழுவதையும் இழந்து இவளுடன் போரிடப் பின்வாங்குவாரென்றால். இவளிடத்திலே ஆண்மையுள்ளதென்பதா, மற்றையோரிடத்தில் ஆண்மையுள்ளதென்பதா? என்ற கேட்ட முனி மேலும் இந்திரனும், விஷ்ணுவுமே பெண் கொலையினால் புகழப் பெற்றவர். நான் ஆராய்ந்து கூறுகின்றேன் நீ தயங்காமல் இவளைக் கொல் எனக் கூறுகின்றான்.
மிக நீண்ட பரம்பரையிலே  சில அடிப்படையான கொள்கைகள்,  பண்பாடுகள் போற்றி  வளர்க்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று சுத்தவீரன் பெண்களைக் கொல்லக் கூடாது என்பதாகும். அந்த மரபில் வளர்ந்தவனாகிய இராகவனுக்கு தாடகையைக் கொல்வது என்பது நினைக்க முடியாததாக அமைகின்றது. இந்த நிலையில் விசுவாமித்திரன்  மிக அற்புதமான பல காரணங்களைக்   காட்டி   ‘இவள்  பெண்ணே  அல்லள்  -  பெண் உருவத்திலுள்ள அரக்கிஎன்று எவ்வளவு சொன்னாலும், பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்
இராமனுக்கு வித்தைகள் கற்றுக் கொடுத்தவன் மாபெரும் முனிவனாகிய வசிட்டன். அவன் ரகுவம்சத்தின் அரசகுரு. அவன் சொல்லியது ஒரு பொது தர்ம கொள்கை. “ பெண்ணைக் கொல்லக் கூடாது என்பது அது. விசுவாமித்திரனோ அரசன். பிறகு தவமியற்றி பிரம்மரிஷியானவன். அவன் பொது சட்டத்தை மாற்ற வேண்டும் மக்கள் வாழும் தற்சமய சூழ்நிலைக்குத் தக்கவாறு என்ற கருத்தைக் கொண்டவன். அதனால் தாடகையை பெண் என நினைக்காதே என்று இராமனுக்கு கூறுகின்றான். பெண் உருவம் படைத்தவள் ஆயினும் பெண்மை குணம் உள்ளவள் அல்ல, அரக்கி என்று எடுத்துக் கூறுகின்றான்.

2ஜீ அலைவரிசை ஊழலில் கனிமொழி கைது செய்யப்பட்டபோது முதலில் “நான் பெண் என்பதால் எந்த சலுகையையும் கோரப்போவதில்லைஎன்று கூறியவர் தன் ஜாமின் மனுவில் கூறிய முதல் காரணம் “ நான் பெண். என் குழந்தையை கவனித்துக் கொள்ளவேண்டும். ஆகவே எனக்கு ஜாமின் வழங்கவேண்டும்என்பதுதான். இந்த வழக்கில் இன்னுமொரு விநோதம். வாதாடியவர் பெயர் பெற்ற வழக்கறிஞர் திரு. ராம் ஜெத்மாலினி”. இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவர். ஆயினும் பணத்திற்காக, பேருக்காக ஒரு சாதாரண “ செஷன்ஸ் கோர்டில் ஆஜரானார். அதை விட விநோதம் இவர் உச்சநீதிமன்றத்தில் வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவரவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று பொதுநல வழக்குத் தொடர்ந்தவர். எத்தனை விசுவாமித்திரர்கள் வந்தாலும் அசுரசக்தி (பணம், அதிகாராம்) இன்றும் அழியாமல்தான் இருக்கின்றது.


ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்?பகின்றேன் அலேன்;ஆறி நின்றது அறன் அன்று; அரக்கியைக்
கோறிஎன்று. எதிர் அந்தணன் கூறினான்.
இவள் மேல் உள்ள கோபத்தினால் சொல்லவில்லை, அழிவில்லாத நல்ல தருமத்தைப் பார்த்து இசைத்தேன். இவ்வரக்கியைக் கொல்வாயாக என்று கௌசிகமுனிவன் கூறினான்.
விசுவாமித்திரன் தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவன்   என்று  தசரதன் கட்டளை இட்டு அனுப்பினான்.  ஆதலால்,  இந்த  நான்கு இடமும் ஒன்றாக இருக்கிற
இந்த விசுவாமித்திரன் இப்போது கோறிஎன்று கட்டளை இடுகிறான்.
ஐயன் அங்கு அது கேட்டு. அறன் அல்லவும்
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறுஎன்றான்.
எனக்கு உன்னைப் போன்றவர் ஒன்றை ஏவினால் அதனைச் செய்ய வேண்டுவது கடமையென்று கூறினான் இராமன்.

வளர்ந்து, காளைப்பருவம் அடைந்த ஒருவன் தனக்கென்று சில எண்ணங்கள், நினைவுகள், குறிக்கோள்கள் முதலியவற்றை உடையவனாக   இருப்பான். முதன்முதலாக இப்போது அந்நிய மனிதனோடு   பழகுகிறான்   இராகவன்.  விசுவாமித்திரன்  முன்பின் பழக்கம் இல்லாதவன். அப்படிப்பட்ட ஒருவன்  ஒன்றைச் சொன்னான் என்றால்  சாதாரண மனிதர்கள்கூட அதை ஏற்றுக் கொள்வது கடினம். அப்படியிருக்க  அரச  குமாரன்  எப்படி  ஏற்றுக்கொண்டான்?
அதிலும்  ஓர்  அடிப்படை இருக்கின்றது.   கீதையில்  சொன்னபடி  சமதிருஷ்டி  உடையவனாக,ஸ்திதப்பிரக்ஞனாக ஒருவன் வாழ்வானேயானால் அவன் தான், தனது, தன்னுடைய    எண்ணம்  என்பதற்கு    அதிக    முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எது கடமை என்று சொல்லப்படுகிறதோ அதை நிறைவேற்றுவதில்   கண்ணும்   கருத்துமாக   இருப்பான். அந்தக் கடமையை  நிறைவேற்றும்போது  தன்னுடைய  விருப்பு வெறுப்புகள் குறுக்கிட அவன் இடம் கொடுப்பதே இல்லை. இராமன் தனது கருத்து எதுவாயினும் உலகங்களையெல்லாம் சிருஷ்டித்தவனும், காயத்ரீ மந்திரத்தைத் தோற்றுவித்தவனும், யாவராலும் போற்றப்படுகின்றவனும்,  பிரும்மரிஷி என்ற பட்டம் பெற்றவனுமாகிய விசுவாமித்திரன் இதுதான் அறம்என்று சொல்வானேயானால், இதுவரையில் அறம் என்பதற்குத் தான் கொண்டிருந்த கருத்தை ஒருபுறம் ஒதுக்கி  வைத்து விட்டு விசுவாமித்திரன்  ‘இவளைக் கொல்வதுதான்   அறம்  என்று  சொல்லும்போது  அதனை ஏற்றுக் கொள்கிறான் என்று காணுகின்றோம் அப்படி  ஏற்றுக்கொள்ளும்போது  இராமனுடைய  வளர்ச்சியையும் நாம்   அறிய  முடிகிறது.  உண்மையில்  சமதிருஷ்டி  உடையவனாக
அவன் வளருகிறான் என்பதைக் காண முடிகிறது.  ஆனாலும் பெண்ணைக் கொலை செய்வதை இராகவன் முழுமையாக் ஒப்புக் கொண்டானா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இவர்களுடைய கருத்தையறிந்த தாடகை
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை. அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா.
செங் கைச் சூல வெந் தீயினை. தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.
அவன் மேல் சிவந்த கையிலுள்ள சூலாயுதமாகிய கொடிய நெருப்பை, கொடிய தனது பயங்கரமான கண்களினின்று எழுகின்ற அக்கினிச் சுவாலையுடனே மேலெ செல்லும்படி வீசினாள்.
மாலும். அக் கணம் வாளியைத் தொட்டதும்.
கோல வில் கால் குனித்ததும். கண்டிலர்
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.இராமன் பாணத்தைத் தொட்டதும் அழகிய வில்லின் குதையை வளைத்ததையும் கண்டிலர்; கண்டது சூலாயுதத்தின் துண்டங்களையே. கண்டிலர் அகண்டனர் என்பதற்கு விசுவாமித்திர லட்சுமணர் எழுவாய் என்பாருமுளர். காரண காரியங்களை விளக்கும் பொருட்டு அம்பைத் தொட்டதை முன்னும், விற்கால் குனித்தலைப் பின்னுமாக வைத்துக் கூறினார்.

அவள் கல் மழை பொழிய இராமன் வில் மழையால் அதைத் தடுத்தான்.

சொல் ஒக்கும் கடிய வேகச்    சுடு சரம். கரிய செம்மல்.
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்    விடுதலும். வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது.    அப்புறம் கழன்று. கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன    பொருள் என. போயிற்று அன்றே!
இராமபிரானது பாணம் முனிவர்களின் சாப சொல்லுக்கு உவமையாகி “ இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவது போல புல்லர்க்கு மேலோர் சொன்ன சொல்லைப் போல் அவள் உடம்பில் தங்காது பின்னே உருவி போய்விட்டது.

தாடகை இறந்ததை இராவணனின் வீழ்ச்சிக்கு துர்நிமிதமாக
பொடியுடைக் கானம் எங்கும்    குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த்    தாடகை. தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு. அந் நாள்.    முந்தி உற்பாதம் ஆக.
படியிடை அற்று வீழ்ந்த    வெற்றிஅம் பதாகை ஒத்தாள்.
தேவர்களும் அரக்கர்தம் வீழ்ச்சி நிச்சயம் என்று மகிழ்ந்து
யாமும் எம் இருக்கை பெற்றேம்;
   
உனக்கு இடையூறும் இல்லை;கோமகற்கு இனிய தெய்வப்
   
படைக்கலம் கொடுத்திஎன்னா.
முனிவனினும் அவ்வாறே படைகலங்களை அருள அஸ்திரங்கள் யாவும் வேண்டி இராமனுக்கு அடிமையாயின.

எனவே, தர்மசங்கடமான நிலை வரும்போது மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எப்படி இராகவன் முடிவெடுக்கின்றான் என்பதை மிக அற்புதமாக அவனுடைய கன்னிப் போரிலே  வைத்துக் காட்டுகிறான் கம்பநாடன்.

முதன்முதலாக  அரச  குமாரனாகிய இராகவன் எப்படிப் பிற்காலத்தில்
வளரப்போகின்றான், எப்படிப் பிரச்சினைகளைச் சமாளிக்கப் போகிறான் என்பவற்றை  நாம் அறிந்துகொள்வதற்கு   முதல் முதல் ஒரு  சூழ்நிலை  ஏற்படும்போது  இவன்  எப்படி நடந்துகொள்கிறான் என்பதை வைத்துத்தான் இவனுடைய பிற்கால வாழ்க்கை அமையும்
என்பதை எடுத்துச் சொல்பவன்போலக் கம்பன் இந்த அற்புதமான காட்சியை நமக்குக் காட்டுகிறான்.

Friday, February 17, 2012

நவராத்திரி

வேலூரில் நான் சிறுவனாக இருந்த காலத்தில், முதல் வகுப்பு சேருவதற்கு வயது குறைந்தது ஐந்தாவது இருக்க வேண்டும். இப்போது பூற்றீசல் போல் புறப்பட்டிருக்கும் நர்ஸரி பள்ளிகள், அந்நாளிலில்லை. அதனால் பொழுதுகள் வீட்டிலுள்ள அம்மா, பாட்டி, சித்தி இவர்களுடன் கழிந்தன. பண்டிகை நாட்களில் அந்த அந்த பண்டிகைக்கு குறிப்பிட்டவாறே எல்லாவற்றையும் பண்ணுவது அம்மாவின் வழக்கம்.
பொம்மை கொலு வைப்பது கூட ஒவ்வொரு குடும்பத்தினரின் வழக்கம். என் அப்பா வீட்டில் கொலு வைப்பது உண்டு; ஆனால் எங்கள் அம்மா வீட்டில் அந்த வழக்கம் கிடையாது.  இத்தனைக்கும் அப்பா மணந்தது சொந்தத்தில். அத்தையின் பேத்தியை. எங்கள் வீட்டில் ஏழு படிக்கட்டுகளுடன் கூடிய பெரிய மரச்சட்டம் இருக்கும். அத்தனை பொம்மைகளும் பத்திரமாக துணி மற்றும் பேப்பர் சுத்தி வைக்கப்பட்டு, பெரிய மூடிப் போட்ட டிரம்களில் பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
அமாவாசையன்று பலகைகள் மற்றும் சட்டத்தையும் இறக்கி அதை ஒழுங்கான கோணத்தில் சாய்த்து சட்டத்தைச் சுவற்றில் வைத்துப் பொருத்தி, பலகைகளைக் குறுக்கில் பொருத்தி அவை சட்டத்தில் சரியாக பொருந்தியிருந்தால் மாத்திரம், வெளியில் தெரியும் இரண்டு ஓட்டைகளுக்கும், ஆப்பு அடித்து, பலகைகள் சாயாமல், விழாமலலிருக்க நடுவில் இருக்கும் இரண்டு பலகைகளின் அடியில் இந்த பொம்மைகள் எடுத்த டிரம்கள் வைக்கப்படும். ஒவ்வொரு பொம்மையாகப் பிரித்து துடைத்து “எது பெயின்ட் போய்விட்டது? எது அடுத்த வருடம் வாங்க வேண்டியது? என்பது தீர்மானிக்கபட்டு அம்மாவின் ஆணைக்கேற்ப அடுக்கி வைக்கப்படும். மாற்றல் ஆகி புதிய ஊரில் இந்த பொம்மை இறக்கும் நிகழ்வு ஒரு வாரம் முன்னே நடக்கும். காரணம் லாரியில் வரும் போது எத்தனை பொம்மை தப்பியது எனப் பார்த்து புதியன வாங்குவதற்கு வசதியாக.
அம்மா என்றாவது ஒரு நவராத்திரியில் வீட்டில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால், அக்காக்கள் அண்ணன்கள் இருவருமே பலகை அடுக்கி கொலு வைத்து விடுவார்கள். அதே போல் பச்சை கலர் பேப்பரில் குடைக் கம்பியை நடுவில் வைத்து சுருக்கி இழுத்து மாவிலைப் போல் செய்து, நூலில் ஒட்டி கொலு படிகளுக்கும் மேல் விதானத்திலும் செயற்கை மாவிலைப் பந்தல் அமைப்பார்கள். கீழ் இரண்டு வரிசையில் நாங்கள் விளையாடும் பொம்மைகள் இருக்கும். பொம்மையை வைத்துவிட்டாள் அடுத்த ஒனப்து நாளும் அதை எடுக்கக் கூடாது.  


பக்கவாட்டில் சுவற்றோரம் பிரிட்டானியா டின்னைப் போட்டு, மணலைக் கொட்டி, மேலே ஒரு கோபுரம் பக்கத்தில் முருகன் சிலை: போவதற்கு படிக்கட்டு என்று மலை உருவாகும். மலை பசுமையாக இருப்பதற்காக இரண்டு நாள் முன்பே கடுகு அல்லஹ்டு கேழ்வரகை ஊறவைத்த முளைவிட்டு வந்த செடி அழகாக பதியப்பட்டிருக்கும். ஒரு புறம் கோவில். அதையொட்டி ஒரு பூங்கா என்று கலை நயம் மிக்கதாக இருக்கும். என் பெரிய அண்ணனுக்கு இதிலெல்லாம், அதீத ஈடுபாடு. அழகாகப் பூத்தொடுப்பான், பிளாஸ்டிக் பை பிண்ணுவான். இன்று கூட அவன் சூட்கேஸ் பேக் செய்தால் எல்லாபொருட்களுமே ஒரு ஒழுங்கான நேர்த்தியுடன் அடுக்கப்பட்டிருக்கும். அவன் தான் இந்த மொத்த கலை அலங்காரத்திற்கும் பொறுப்பு.

கொலு வைத்தவுடன் பக்கதில் இருப்பவர் சற்று தொலைவில் இருப்பவர்கள் எல்லோரையும் அக்காள்கள்  இருவரும் சென்று அழைக்க வேண்டும். அதற்கு துணையாகச் செல்ல வெட்டி ஆபிஸர் என்னை விட்டால் வேறு யார்?. எல்லார் வீட்டிலும் தவறாமல் கிடைக்கும் சுண்டல் பொட்டலங்கள்; எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு பையில் போட்டு வீட்டிற்கு வந்தவுடன் பிரித்து அனைவரும் சாப்பிடுவோம், ஆயிரம் குறைகள் கூறிக் கொண்டு. எல்லார் வீட்டிலும் ஒரே மாதிரி பட்டாணி, கடலைப் பருப்பு, கொண்டைக் கடலை, கருப்புக் கடலை மற்றும் இதர வகைகள். ஒரு நாள்  கட்டாயம் டைத்தக்கடலை, கொப்பரை மற்றும் சக்கரை கலந்த “பப்புல் பொடி. வாயில் போட்டவுடன் புகை போல் வருவதால் நாங்கள் அதை ‘பீடி பொடி”. என்றழைப்போம்.
கட்டாயம் சிறுமிகள் பாட்டு பாடுவார்கள். ஆனால் எங்கள் குடும்பத்திற்கும் பாட்டிற்கும் ரொம்ப தூரம். பாட்டு என்றில்லை, விளையாட்டு, நுண்கலைகளில் பயிற்சியும் அவ்வாறே.  எங்களுடையப் பொழுதுபோக்கு மற்றும் ரசனையெல்லாம். சாப்பாடு, சினிமா, புத்தகம் மற்றும் பேச்சில்தான். எங்கள் அக்காக்களை யாரும் பாட சொல்லி நான் கேட்டதில்லை. கேட்ட ஒருத்தருக்கு என் அக்காவின் பதில் “சுண்டலும் வேணாம். வெத்திலைப் பாக்கும் வேண்டாம்”. எங்கள் வீட்டிற்கு வரும் சிறுமிகளுக்கும் இந்த தொந்தரவு கிடையாது.
பொதுவாக எல்லா கொலுவிலும் நான் பார்த்தது தசாவதாரம் செட், கருடன் மேல் மஹாவிஷ்ணு, மீனாட்சி கல்யாணம், மாடு மேய்க்கும் கோபால கிருஷ்ணன், வள்ளித் திருமணம் முதலியவைதான். ஆனால் எல்லோர் வீட்டிலும் கட்டாயமிருந்தது காந்தியும் நேருவும். பொம்மைகள் களிண்ணால் செய்யப்பட்டவையாதலால் மிகவும் கமாக இருக்கும். ஒரு தடவை சித்தூரில் கொலு வைத்த போது மாடு மேய்க்கும் கோபாலகிருஷ்னனின் பொம்மையின் கனத்தைத் தாங்குவதற்கு அடியில் சரியான டின்களை வைக்காததால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பெரும் சத்ததுடன் மொத்த பொம்மைகளும் சரிந்து வீழ்ந்தன. அன்றிரவு முழுவதும் உடையாத பொம்மைகளி எடுத்து வைத்து காலையில் வாங்க வேண்டிய பொம்மைகளைப் பட்டியலிட்டுவிட்டுத் தூங்கினார் என் பெரிய அத்தை. எல்லோருக்குமே அது அபசகுனமாகப் பட்டது. ஆனாலும் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

நவராத்தியின் ஒவ்வொரு நாளும் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு அம்மாவுடன் இரவு 7.30 க்கு சென்று சாமி தரிசனம் செயவது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களை அடுக்கி எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புது வஸ்திரம் போர்த்தி பூஜை. அன்று படிப்புக்கு விடுமுறை. அடுத்த நாள் பிரித்து காலையில் ஒரு மணி நேரமாவது கட்டாயம் படிக்க வேண்டும். எல்லா பள்ளிகளிலும் விஜயதசமி அன்று புது மாணவர்கள் சேருவார்கள். ஒன்றாவது அடுத்த வருடத்தில் தான் சேர முடியும் என்றாலும், இந்த விஜயதசமி போது ஒன்றாவது சேருவார்கள். அடுத்த வருடம் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிப்பார்கள். நன்றாக படிக்கும் சிலர் டபுள்  ப்ரொமோஷன் வாங்கி அடுத்த வருடம் இரண்டாம் வகுப்பு போய்விடுவார்கள். வேலூர் இராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூலில் விட்டுவிட்டு வருபவர் தலை மறையுமுன்னே வீட்டிற்கு ஒடி வந்து நின்ற எனக்கு எனக்கு அவ்வாறெல்லாம் நடக்கவில்லை.

அறியாமையும் வறுமையும் அழிவதற்கு கல்வி எப்படி அவசியமோ, அப்படி இராமாவதா நோக்கம் நிறைவேறுவதற்கு இராமன் விசுவாமித்திரனுடன் வந்து அவன் வேள்வி காக்க தாடகையை அழிக்க வேண்டியது அவசியம்.
கடுமையான இப்பாலை நிலம் இவ்வாறிருப்பதற்கு  காரணம்
சுழி படு கங்கைஅம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ?பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம். அறிஞ! கூறுஎன்றான். இராமன் வினவினான்.
முனிவன்
என்றலும். இராமனை நோக்கி. ‘இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள். கூற்றின் தோற்றத்தள்.
அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள். உறுதி கேள்எனா.
உறுதி – உற்ற செயல் எனவே வரலாறு. மா என்ற பொதுப் பெயர் மையல் என்ற அடை மொழியைப் பெற்றதால் யானையை உணர்த்திற்று. வாரணம் ஆயிரத்தின் பலத்தைக் கொண்ட அரக்கி தாடகையும் இதற்குக் காரணம். அவள் வரலாற்றைக் கேள் எனக் கூறுகிறார். யட்சகர்கள் குலத்தில் சுகேது என்னும் பரிசுத்த குணமுடையவன் குழந்தையில்லாததால் பிரம்மனை நோக்கித் தவமிருந்தான்.
முந்தினன் அரு மறைக் கிழவன். முற்றும் நின்
சிந்தனை என்?என. சிறுவர் இன்மையால்
நொந்தெனன்; அருள்க என. நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை ஒரு மகளு உண்டாம் என்றான்.
“நுணங்கு கேள்வியாய்கதை கூறும் முனி இராமனை விளித்த விளி. கதை கூறுபவர் மற்றும் சிறந்த பேச்சாளர்களும் தாம் கூறுகின்ற கதையில்/பேச்சில் கவனக் குறைவு நிகழாதிருத்தல் பொருட்டு கதைக் கேட்பவரை விளித்து மேலும் கதை கூறுதல் இயல்பு. (திரு. நெல்லை கண்ணனும் இவ்வுத்தியைப் பயன்படுத்துவதை பார்த்தும்/கேட்டுமிருக்கின்றேன்).
சுகேது பிரம்மதேவன் வரத்தால் பிறந்த அப்பெண்ணை சுந்தனென்பவனுக்கு மணம் செய்து வைத்தான். அவர்களும் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்து வந்தனர். பல நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு மாரீசன் சுபாகு என்ற இரு மக்கள் பிறந்தனர். மக்கள் மாயை, வஞ்சனை( மாயம் -மந்திர சக்தியால் செய்யும் சூழ்ச்சி; வஞ்சனை – புத்திவலியால் செய்யும் சூழ்ச்சி) முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்று வளர்கையில், சுபாகு அகத்திய முனிவரின் ஆசிரமத்தில் மரங்களை பறித்து வீசி, மான்களைக் கொன்று உண்ட வேளை,  அகத்திய முனிவன் கோபத்தில் கண் திறந்துப் பார்க்க சாம்பலானான்.

கணவனிறந்ததைக் கேட்ட தாடகை தன் மக்களிருவருடனும் அகத்தியனைக் கொல்வேன் என
இடியொடு மடங்களும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அணடமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே
தாடகை மறும் அவர்தம் மைந்தர் முதலியோர் கோபாவேசத்தைத் தெரிவிக்கும் உருத்திரச்சிவை தோன்றவே கூறும்  இப்பாடல். மடங்கள்- எல்லாப்பொருளையும் அழியச் செய்வது.
குறுமுனி
தமிழ் எனும் அளப்பு அருஞ் சலதி தந்தவன்
உமிழ்கணல் விழிவழி ஒழுக உங்கரித்து
அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!என உரைத்தனன். அசனி எஞ்சவே.

தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவனனாகிய அகத்தியன் சாபமளிக்க அந்த நொடியிலேயே அவர்கள் அனைவரும் அரக்கராயினர்.(வடமொழி புலவனாகிய அகத்தியன் அவர்கள் சங்கத்தில் ஒரு புலவனோடு ஒருநாள் மாறுகொண்டு, அவர்களிறுமாப்பை அடக்கும் பொருட்டு சிவபெருமானிடம் சென்று தன் கருத்தை வெளிபடுத்திப் பேசிக்கொண்டிருக்கையில், தான் நின்ற மண்டபம் முழுவதும் திவ்வியபரிமளமொனெறு வீச, அகத்தியன் பரமசிவனை வினவ அம்மண்டபத்தின் மூலைக்குச் அழைத்துக் கொண்டு போய்க் குவியலாய்ப் போட்டிருந்த சில ஏட்டுப் பிரதிகளைக் காட்டவே, அவற்றைக் கண்ட மாத்திரத்தில் மதுரமென்று பொருளுள்ள தமிழ் என்னும் பெயரை அகத்தியன் பலமுறை சொல்ல, உடனே பரமசிவன் “இப்பாஷைக்கு ஆதாரவிதிகள் இவ்வேட்டுப் பிரதிகளிலுள்ளன என்று எடுத்துக் கொடுத்து உபதேசிக்க உடனே இம்முனிவனும் தென்திசைக்கேகி பொதியமலையில் வசித்து, அவ்விதிகளைக் கொண்டு “ பேரகத்தியம் சிற்றகத்தியம் என்னும் இலக்கண நூலைச் செய்து, அவற்றைத் தம் மாணாக்கியராகிய தொல்காப்பியன் முதலிய பன்னிருவர்க்கும் கற்பித்தருளித் தமிழை தழைத்தோங்கச் செய்தனென்பது “தமிழ் எனும் அளப்பருஞ் சலதி தந்தவன்என்பதில் குறித்த வரலாறு.). தாடகையின் சாப வரலாறு மற்றும் அகத்தியன் வரலாறு முதலியவை கோவைக் கமபன் கழக உரையில் இல்லை. ஆயினும் இதை நூலிலேயே பதிப்பித்திருக்கின்றார் வை மு கோ.

“ஸாகரின் ராமயணத் தொலைக் காட்சித் தொடர் மற்றும் மகாபாரதம் தொடர் இரண்டையும் என் மகன் அறிந்து கொள்ள வேண்டுமென்றும், அப்படியே ஹிந்தியையும் கொஞ்சமாவது கற்றுக் கொள்ளட்டும் என வாங்கி வைத்திருந்தேன். ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருந்தது. ஒரு நாள் “டாடி, ஸ்வாமியே சொல்லிட்டார். தமிழைப் போல ஒரு  பெஸ்ட் மொழி உலகத்தில இல்லைன்னு. ஸ்வாமியே சொன்னதுக்குப்புறமும்  நான் எதுக்கு ஹிந்தி கத்துக்கணும்?   “எங்கடா சென்னார்?என்பதற்கு அந்த பகுதியை இராமன் வனவாசத்தில் அகத்தியரின் பெருமையைக் கூறும் மேற்படி நிகழ்வைப் போட்டுக் காண்பித்தான்.
தாடகையின் மைந்தர்கள் இருவரும் பாதள லோகத்தில் தங்கியுள்ள “சுமாலி என்ற ராட்ச ராஜன் தனையடைந்து “உனக்கு நாங்கள் உற்ற புதல்வாராவோம் எனக்கூறி தஞ்சமடைந்தனர். சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேசகி என்பவளது தகப்பனாவான். இராவணன் இவர்களை மாமன்மாரென்றேப் பாராட்ட இவர்கள் உலகத்தாருக்குத் தீமைபுரிந்தனர்.
மிகும் திறன் மைந்தரை வேறு நீங்குறா.
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே
வகுந்துவின் வசுவரி வசிந்தது இவ் வனம்
புகுந்தனள்.- அழல் என புழுங்கும் நெஞ்சினாள்.
மிக்க வலிமையுடைய மக்களை அகத்தியன் சாபத்தால் பிரிந்த தாடகை நெருப்புப் போலக் கொதிக்கின்ற மனமுடையவளாய் இவ்வனத்தில் வசிக்கின்றாள் என்றான் முனி தாடகையைக் குறித்து

மண் உருத்து எடுப்பினும். கடலை வாரினும்.
விண் உருத்து இடிப்பினும். வேண்டின். செயகிற்பாள்;எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி. ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்
“தடுப்பவரில்லாக் காரணத்தால் இவள் இவ்வாறு இவ்வளவு பாவங்களையும் செய்தாள் என்றான் முனிவன்.
நாங்கள் கடலூர் வந்த போது அப்பா பண்ட்ருட்டியிலிருந்து பேப்பர் மெஷ்ஷிலா ராமாயண செட் வாங்கி வந்தார். . மொத்தம் 350க்கும் மேல் பொம்மைகள். அததற்கு ஏற்றாற் போல் வில், கத்தி மற்றும் அமைப்புகள். இராமரின் பிறப்பிலிருந்து அக்னி பிரவேசம் வரை மிகவும் அழகான ண்ணத்தில் இருந்தது. அதில் தாடகை மலையைக் கைக்கு மேல் தூக்கி கொண்டு வருவது, இராமர் அம்பெய்வது, அவள் இறப்பது எல்லாமே இன்னும் நினைவிலிருக்கிறது. அந்த வருடம் எங்ள் வீட்டிற்கு நாங்கள் அழைக்காதவர்கள் கூட வந்து பார்த்தார்கள். எப்படியோ ஐந்து வருடங்கள் வரைதான் எங்களால் அதை பாதுகாக்க முடிந்தது. அப்பா இந்த ஐந்து வருடங்களில் திருத்தணி, விழுப்புரம் திண்டினம் போன்ற ஊர்களுக்கு மாற்றலாகிப் போனதில் எல்லா பொம்மைகளுமே உடைந்து விட்டன. ஆனாலும் நாங்கள் எல்லாம் இராமயணத்தில் ஒரளவு தேர்ச்சி பெற்றவரானோம். 

சூடக அரவு உறழ் சூலக் கையினள்;காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’
தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே;*
கண்ணின் காண்பரேல்ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் என மிக அழகாக “ஆடவர் எனப் பொதுப்பட கூறினமையால் முற்றும்துறந்த முனிவரும் இவனழகில் துவக்குண்டு ஈடுபட்டு நைவர் என பொருள் வந்தது. “கண்ணின்என்று வேண்டாது கூறினார், அவ்விராமனைக் காண்பதற்கு கண்கள் தவம் புரிந்திருக்க வேண்டுமென்பதற்கு. சழக்கு- குற்றம் அதனையுடயவள் சழக்கி. சழக்கு- நீதிக்குமாறானது என்றும் பொருள் கொள்பவர் உளர்.
உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்.
கிளப்ப அருங் கொடுமையை அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்;
அவள் எங்கிருகின்றாள் என இராமன் வினவு முன்னே அவனெதிரே தாடகை
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக. அனல் தறுகண்  அந்தகனும்  அஞ்சிப்
பிலம் புக. நிலக் கிரிகள் பின் தொடர வந்தாள்
தாடகை வரும் போதில் அவள் தன் பாதத்தை ஊன்றிவைக்க, அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் நிலம் குழிபட, அந்தக் குழியில் கடல் நீர் புகுமாறும், யமனும் அவள தன்  கொடும் தோற்றத்தைக் கண்டு நடுங்கிப் பிலத்தில் ஒளிந்து கொள்ளுமாறும், தான் வருகின்ற விசையால்(வேகம்) அசையா மலைகளும் இடம் விட்டுப் பெயர்ந்து தன் பின்னேத் தொடருமாறும் வந்தாள்.
மேலேக் கூறியத் தாடகையின் வரலாறு மற்றும் அகத்தியனைப் பற்றித் தமிழெனு அளப்பருஞ் சலதி தந்தவன் என்பதான பாடல்கள் எதுவுமே கம்பன் கழக உரையிலில்லை. ஆனால் இவற்றை நூலிலேயே பதிப்பித்துள்ளார் வை மு கோ. அவரும் சில பிரதிகளில் காணப்படவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். அதே போல் வால்மீகத்தில் இராவணனுடைய சொந்தம் அல்லது பாட்டி போன்றவள் என்பதோ அவன் அஞ்சையின் பேரிலே அவள் அவ்விடம் வசிப்பதோ இல்லை.
இராமனுக்கு அப்பொழுது பருவம் பதினாறு. ஆனாலும் அவனுடைய ஆளுமையைப் பற்றி முன்பே ஓரிடத்தில் கல்விகற்க தினமும் நகரத்தை விட்டு நீங்கி, மாலையில் திரும்பிவரும்போது அவன் மக்களிடம் அவர்களுடைய நலம் விசாரிப்பதிலேயே கோடிட்டுக்காட்டிடுவார் கவி. ஐந்திலேயே வளைந்தது.