Friday, February 10, 2012

கோடை



கோடை விடுமுறை காலம் என்றாலே சிறு வயதில் அளவுக்கு மீறிய உற்சாகம். வீட்டில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் வடாம் வேலைகள். அம்மாவும் பாட்டியும் 20 நாட்களுக்கு முன்பிருந்தே பிசியாகிவிடுவார்கள். முந்தைய வருடங்களில் செய்த தவறுகளை பட்டியலிட்டுத் தவிர்ப்பது முதல் வேலை. அரிசியை களைய விட்டு உலர்த்தி அரைத்து மாவாக சலித்து வைப்பது என்று காலையிலிருந்து இரவு வரை எல்லோருக்கும் பயங்கரமான வேலை இருக்கும். பழைய நாழி பிள்ளிகளை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து துரு போக தேய்த்து வெய்யிலில் காய வைத்து எடுத்து வைத்து அந்தந்த நாழியுடைய பிள்ளைகளுடன்  பொருத்தி வைப்பார்கள்.

25 நாட்கள் ஒரு பாக்டரியில் நடப்பது போல் வேலை ஜருராக நடக்கும். விடியற்காலையிலேயே எழுந்து ஏற்கெனவே அரைத்து வைக்கப் பட்ட அரிசி மாவை அளவு பார்த்து  போட்டு, அதற்கு ஏற்ற அளவில் பச்சைமிளகாய்களை உரலில் அரைப்பார்கள். சுமாராக அரைக் கிலோவிற்கு அதிகமாக இருக்கும். தூக்கத்திலும் கூட அந்த நெடி தும்மல் வரவழைக்கும். வீட்டில் இருந்த பெரிய பித்தளை ஜனதாக் குக்கரில் நீரை நன்றாக கொதிக்க வைத்து நிதானமாக மாவையும் மிளகாய் விழுதையும் போட்டு கலக்கி சரியான பக்குவத்தில் எடுத்து இறக்குவார்கள். இறக்கியவுடன் தயாராக பிழிந்து வைக்கப்பட்டிருக்கும் எலுமிச்சை பழச் சாறை போட்டு மேலும் கலக்கி, டேஸ்ட் பார்ப்பதற்காக எங்களுக்கும் கொடுத்து, அதே சூட்டோடு மாடிக்குப் போய் தென்னம் மட்டையில் துணி போட்டு முறுக்குப் பிழிவது போல நாழியில்  மாவைத் தினித்து பிழிந்து விடுவார்கள். நான்கு பக்கங்களிலும் துணி காற்றில் பறக்காமல் இருக்க சொம்பு வைத்து, அதற்கு குறுக்கிலும் நெடுக்கிலும் டிவைன் நூல் கட்டி, சிறு கருப்பு துணியையும் காகம் வராமல் இருப்பதற்காகக் கட்டுவார்கள். நாங்கள் பள்ளியிலிருந்து திரும்புவதற்குள் அதை துணியிலிருந்து பிரித்து வைத்திருப்பார்கள். அது பாதி உலர்ந்தும் உலராததாகவும் இருக்கும். அதைப் பொரிக்காமல் அப்படியே சாப்பிடலாம். அடுத்த நாளில் மீண்டும் ஒரு புது பேட்ச். நன்றாகக் காய்ந்த அரிசி மற்றும் ஜவ்வரிசி வடாங்களைப் பார்த்துப் பார்த்து செய்து வருடம் முழுவதும் சேமித்து வைக்க பிரிட்டானியா பிஸ்கட் டின்கள் வாங்கி, அதில் காற்று புகா வண்ணம் மூடி, விருந்தினர் வரும் அன்றைக்குத்தான் அந்த டப்பா இறக்கப்படும். அன்றுதான் அப்பளம் மற்றும் வடாம் பொரிக்கப்படும். பொரித்த வடாம் நமுத்து போகாமல் இருப்பதற்கு பெரிய எவர்சில்வர் பாத்திரம் அடியில் ஜல்லியுடன் கூடியது, அதில் எடுத்து வைப்பார்கள்.

வடாமில் தான் எத்தனை வகை. கட்டை வடாம், பூவடாம், ஜவ்வரிசி வடாம், அவல் வடாம், வெங்காய வடாம்(இது ஸ்பெஷல் ஒரே நாளில் காய வேண்டும். இல்லையென்றால் பொரித்தாலும் கடுக்கென்றிருக்கும்) பொரித்த நெல் பொரியுடன், சிறு சிறு துண்டுகளாய் கீறிப் போடப்பட்ட பூசணித்துண்டுடன் அரைத்த மிளகாயும் சேர்த்து ஊறவைத்து செய்யும் பொரி வடாம் தான் கிங் ஆஃப் வடாம்..



நாங்கள் வளர வளர வடாமின் டெக்னிக்கிலும் ஏகப் பட்ட மாறுதல்கள். பிளாஸ்டிக் ஷீட், மிஷினில் அரைப்பது, முதல் நாளிலிலேயே மிளகாயை அரைத்து விடுவது (உண்மையிலேயே அவர்கள் அந்த காலத்தில் எப்படித்தான்  கையால் உரலில் அரைத்தார்களோ கண்ணும் எரிந்து கையும் எரிவதை நான் இப்போது வெஜிடபிள் ரைஸ் பண்ணுவதற்காக அரைக்கும் ஏழு மிளகாயிலிருந்தே உணர்கின்றேன்.). அம்மாவிற்கு ஒரு அதிர்ஷ்டம். எங்கள் சித்தி நாங்கள் வசித்த ஊரிலேயே ஒரு தெரு அல்லது இரண்டு தெரு தள்ளி வசித்ததுதான். அம்மாவின் அம்மாவும்,. மாமாவும் கூட எங்கள் வீட்டிலேயே இருந்தார்கள். தென்னை மரத்தின் எல்லா பாகங்களும் பயனளிப்பது போல வடாமும் மாவாக ஒரு ருசி, உலர்ந்தும் உலராததுமாக இருக்கும் போது தனிச்சுவை பொரித்தால்
அதன் சுவையே அலாதி, மோர் சாதத்திற்கு வடாம் போட்டுக் கொண்டு சூடான ரசத்தின் அடி வண்டி அதன் மேல் விடும் போது சுர்ரென்று வரும் சத்தம் பொங்கியெழும் அதன் மணம், நல்ல காரசாராமான ஊறிய பழைய எலுமிச்சங்காய் உறூகாயை எங்கள் வீட்டில் “தேனாட்டம் எலுமிச்சங்காய் என்பது போல், இப்போது நினைத்தாலும் நாவினிக்கின்றது.

இதே சமயத்தில் தான் உரலில் உலக்கை வைத்து மிகவும் நைசாக இடிக்கப்பட்டு எண்ணெய்ப் பிசுக்குடன் கூடிய உளுந்து அப்பளம், மற்றும் அரிசி, பச்சை மிளகாய், பிரண்டை அரைத்துப் போட்டு செய்யும் அரிசி அப்பளம் தயாராகும். இதை நேரடியாக வெய்யிலில் உலர்த்தாமல் நிழலில் உலர்த்துவார்கள். மோரில் ஊறவைத்துத் தயாராகும் மோர் மிளகாய், மலிவு விலையில் கிடைக்கும், வெண்டை, கத்தரி மற்றும் கொத்தவரங்காய் வத்தல் முதலியனவும் தயாராகும். அவைகளை உலர்த்தி எடுத்து வைப்பார்கள்.  அதே போல் தஞ்சாவூர் குடமிளகாய் வாங்கி, புளித்த தயிரும் உப்புடனும் சேர்த்து ஒரு வாரத்திற்கு மேல்லாக வெய்யிலில் பச்சைகலரிலிருந்த மிளகாய் காய்ந்து செம்பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை உலர்த்தி எடுப்பர். தயிர் சாதத்திற்கு ட்டுமின்றி என் அம்மா மிளகாய் வத்தலை நன்கு பொரித்து எடுத்து சிறிது நல்லெண்ணையில் அதை பொடித்துப் போட்டு “கடுகெண்ணைய்என்ற பெயரில் இட்லிக்குத் தொட்டுக் கொள்ள வைப்பார்கள். நன்றாக எங்களனைவரின் நாக்கையும் வளர்த்து விட்டார். எங்கள் வீட்டிற்கு வந்த சமையல்கார மாமி உன் பசங்களுக்கு இருக்கிற நாக்குக்கு யாராலெயுமே சமைச்சுப் போடமுடியாதுஎன்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார்.  UV Rays பற்றி சிறு கவலையுமின்றி அடிக்கின்ற வெய்யிலை வீணாக்காமல் சோலார் எனர்ஜியை முழுவதுமாக பயன்படுத்திய சமூகம்.
  பெரிய அண்ணனுக்குத் திருமணமாகி சில வருடங்கள் கழித்து சென்னை வந்தவுடன் அப்பாவும் சென்னைக்கு வர அப்போதிலிருந்து மன்னிதான் அம்மாவின் ரைட் ஹாண்ட் வடாம் மற்றும் ஊறுகாய் விஷயத்தில். மன்னி இன்றும் சென்னைக்கு அந்த சமயத்தில் வந்து தனக்கு வேண்டிய வடாம் மற்றும் ஊறுகாய் வகைகளைச் செய்து கொண்டு இந்தோனேஷியா திரும்புகின்றார், ஒவ்வொரு வருடமும்.   



தயரதனால் அடைக்கலமாகக் கொடுக்கப்பட்ட இராம இலக்குவர்கள் முனிவரின் நிழலைப் போல் தொடர்ந்து சரயு நதி கடந்து கடுமையானதொரு பாலை நிலத்தையடைந்தனர்.

பருதிவானவன் நிலம் பசை  அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம்   வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால்.   எரி சுடர்க் கடவுளும்
கருதின். வேம் உள்ளமு;  காணின். வேம் நயனமும்.
சூரியன் நிலத்தின் ஈரம் முழுவதையும் பருகுவேன் எனச் சூளுரைத்து- உலாவுகின்ற ப்பாலை நிலத்தில் வேனில்காலம்  தவிர வேறு பருவமே இல்லாமையால் அந்தப்பாலையின் வெப்பம்  பற்றி நினைக்கும் தீக்கடவுளின் மனமும்  வெந்துபோகும்;  பார்த்த  கண்களும் வெந்துபோகும்.

சிறு வயதின் பாதியைக் கழித்த வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் கோடையில் வெயில் கொளுத்தும். வேலூரின் ஏழு சிறப்புகளில் ஒன்றான மரமே இல்லாத மலைகளினால் அந்த பிரதேசத்தில் தனியாக அனல் வீசும். கண் மூக்கு எல்லாமே எரியும். சில சமயம் சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அதுவும் அக்னி நட்சத்திரத்தின் போது காலை 11.30 மணியவில் சைக்கிளில் தெருவில் சென்றால் பாலைவனத்திலிருப்பது போல் கால் நீர் ஓடும். வெய்யில் காலஙகளில் மழையடித்தால் தீடீரென்று “ ஐஸ்கட்டி மழையடிக்கும்.

படியின்மேல் வெம்மையைப்    பகரினும். பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும்    வான் முகடும் வேம்;விடியுமேல். வெயிலும் வேம்; மழையும்    வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில்.   வேறு யாவை வேவாதவே?
இப்பாலை  நிலத்தின் வெப்பத்தைச் சொன்னாலும்;  சொல்லும் நாவும்
முழுதும்  வெந்து போகும்;  முற்றும்  மூடியுள்ள  இருட்டும்  வானத்து உச்சியும் வெந்து போகும்விடிந்த பின்னாயின் சூரியகிரணமுமே வெந்து போகும்; - மேகமும்  மழையும்  வேகும்  மின்னலுடன் இடியும் வெந்து போகும்;
என்று  சொல்லக்  கூடுமானால் அப்பாலையின் வெப்பத்தால் வேகாதவை எவை? (ஒன்றுமில்லை என்பதாம்). 

பாரும் ஓடாது. நீடாது எனும் பாலதே;சூரும் ஓடாது கூடாதுஅரோ; சூரியன்
தேரும் ஓடாது. மா மாகம் மீ; தேரின். நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாதுஅரோ.  நிலமகளும்  (வெப்பம்   பொறுக்காது) அந்த நிலத்தை விட்டு ஓடிப் போகநினைத்தாலும் இயலாதுஏனெனில் இடத்தை விட்டுப் பெயராத  தன்மை உடையவளாதலாலே;  பாலை நிலத்துகுரிய காளியும்
நீங்காள்;  நிலத்தெய்வம் நிலத்தை விட்டு நீங்கமுடியாது; அந்நிலத்துக்கு மேலே பெரிய வானத்திலே பாலையின் வெப்பம் தாங்காது குதிரைகள் சோர்ந்து போவதால் ரிதியின் தேரும் ஓடாது ஆராயின். அந்நிலத்துக்கு நேராக மேகமும்
ஓடாது வீசுகின்ற காற்றும் அங்குச் செல்லாது.

பட்டப்படிப்பை முடித்து நாக்பூரில் என் சித்திவீட்டிலிருந்தபடி நான் எம் ஐ டி சி யிலிருந்த ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராக சுமார் 9 மாத காலம் இருந்தேன். போனது ஏப்ரல் மாத முதலில். வீட்டிலிருந்து போக வர 12 கீமி தூரம். காலையில் சாப்பிட்டுவிட்டு கையில் மதிய உணவை எடுத்துக் கொண்டு ஏழு மணிக்கு முன்பே கிளம்பிவிடுவேன். அதற்கப்புறம் கிளம்பினால் வெயில் தீய்த்துவிடும். கையில் எப்போதும் வெங்காயம் மற்றும் நறுக்கிய எலிமிச்சைகள் கட்டிய கர்சீப், முகர்ந்து கொள்வதற்கு சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்க. இது எஙகள் சித்தி வீட்டில் கட்டாயம் எல்லோரும் எடுத்துக் கொண்டுச் செல்லவேண்டிய சாப்பாட்டைப் போல் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று. எனக்கு வேலூர், திருவண்ணாமலை வெயில் கைக் கொடுத்தான். மதியம் அந்த எலுமிச்சையை உப்புடன் சேர்த்து ஒரு சோடா வாங்கி சூடான, லெமன் சால்ட் சோடாவாக்கி குடித்துவிடுவேன். வெங்காயத்தை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டுவிடுவேன். சாயந்திரம் சூரியன் மறைந்த பிறகுதான் வீடு திரும்புவேன். அங்கெல்லாம் அப்போது திரையரங்குகளில் கூட ஏசி இருக்காது எல்லாமே ஏர்கூலர்கள் தான். சித்தி வீட்டில் சித்தப்பா, சகோதரர்கள் நால்வர், நான் மற்றும் அங்கு குடியிருந்தர்க்ள் அனைவருமே கயிற்றுக் கட்டிலில் வெளியில் தான் படுத்துக் கொள்வோம். எனக்கு நாக்பூர் குளிர்தான் ஒத்துக் கொள்ளவில்லை.   
தா வரும் இரு வினை செற்று. தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து. முத்தியில்
போவது புரிபவர் மனமும். பொன் விலைப்
பாவையர் மனமும். போல் பசையும் அற்றதே!
தாவி   வருகின்ற   நல்வினை தீவினையாகிய இரு வினைகளையும் அழித்து தள்ளுதற்கு   அரிய மூன்று  வகைப்பட்ட உயிர்ப் பகை ஆகிய காவலையும் கடந்து;
வீடு பேறடைவதற்குரிய காரியங்களையே செய்யும் ஞானிகள் மனமும்  
பொன்னுக்குத் தமது மேனியை விலைகூறும் விலை மாதர்களின் மனமும்  (எவ்வாறு பசையற்றிருக்குமோ அதுபோல்) இப்பாலை வனமும் பசையற்றுக் கிடந்தது.
டெல்லியில் அண்ணாவின் மகனின் ஆயூஷ்ஹோமத்திற்கு அம்மா, இராண்டாவது அண்ணன், நாரயணன் மாமா மற்றும் நான் செய்யாறிலிருந்து சென்னை வழியாக டில்லிக்கு புறப்பட்டோம். அப்பாவிற்கு வேலையிருந்ததனால் வரயிலவில்லை. நான் அப்போதுதான் மருந்து விற்பனையிலிருந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு : வெட்டி ஆபிஸர். டெல்லி போனால் அண்ணாவின் பேச்சைக் கேட்டு நல்ல உத்தியோகத்தில் சேருவேன் என்ற நம்பிக்கை நானோ டில்லியிலிருந்த ராவ்ஸ் காலேஜில் சேர்ந்து ஐஏஸ்ஸாக வரவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். நாக்பூரில் சித்தியும் சித்தி மகனும் சேர்ந்து கொண்டார்கள்.. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்லில் இரண்டாம் வகுப்பில் ஆக்ஸ்ட் மாதம் ம். இரவு நேரத்தில் எல்லா ஜன்னல்களையும் மூடிவிடுவார்ள். மேல் ர்த்தில் டுத்து கொண்டிருந்த எனக்கு அனல் காற்று தனியா பாசத்தோடு என்னையே சுற்றும். டில்லியில் கோடைக் காமில்லையேத் தவிர சூரியன் சுளீரென்று மாலை ஏழரை மணி வரையில் அடிக்கும். அண்ணாவின் வீடு சப்தர்ஜங் என்கிளேவிலிருந்தது. முதல் மாடி. ஹவுஸ் ஓனர் ஒரு சீக்கியர். எதிர் புறம் எல்லாம் டிடிஏ குடியிருப்புகள். பிறந்த நாள் முடிந்து நான் அண்ணாவுடன் அங்கேயத் தங்கிவிட மற்றவர்கள் ஊர்திரும்பினர். அடுத்த நாள் என் அண்ணா பக்கத்து பிளாக்கிலிருக்கும் இடத்தில் போய் எதிர்வீட்டு யூ என் ஐ காண்டீன் மானேஜர் பையன் முரளியுடன் போய் டைப்ரைட்டிங் ஷார்ட் ஹாண்ட் சேர்த்துவிட்டான். ஐஏஸ் கனவு போய் குமாஸ்தாவாக ஆவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்ட என் வாழ்க்கை, ஆகஸ்ட் மாதத்திலும் சூடு குறையால் டிரையாக டில்லி போலவிருந்தது.
அப்பொழுது அண்ணா மர்கெட்டிங் ரிசர்ச் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். ஜகஜீத் இண்ட்ஸ்டிரீஸ் தயாரிக்கும் வீவா மால்டோவாவிற்காக  அனைத்திந்திய விளம்பர வாசகர் போட்டி நடந்தது. அதில் தமிழில் வந்திருந்த வாசகங்களை ஒரு பேப்பரில் தமிழில் எழுதி அதன் அடியில் ஆங்கிலத்தில் பொழிப்பெயர்த்து எழுதியிருந்தேன். திரு இந்திரா பார்த்தசாரதி போட்டி நடுவர்களில்  ஒருவர். கம்பெனியின் ஜெனெரல் மானேஜர் திரு மூர்த்தி அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் வீட்டிற்கு இரவு உணவு உண்ணும் வேளையில் வந்தார். “ உன் தம்பி ரொம்ப நல்லா டிரான்ஸ்லேட் பண்ணியிருக்கன்னு இ. பா சொன்னர். அந்த வேலைக்காக இதோ செக் 2000 ரூ. என்பெயரில் ஒரு கிராஸ் செய்யப்பட்ட ஒரு செக்கையும் கொடுத்தார்.
என்ன பண்ணப் போறான்?” ‘ஐ ஏஸ் படிக்கலாம்னு திட்டம். முதல்ல டைப்பிங் ஷார் ஹாண்ட் கத்துக்கட்டும்னு போயிண்டிருக்கான்.’ “ ஒண்ணும் வேணாம் ராகவா. ஐ ஏ ஸ் படிச்சுட்டு படிக்காத எம் எல் ஏ வரும் போது எழுந்து நிக்கணும். பேசாமா இவன் சிஏ ICWA படிக்கட்டும். நாளைக்கு காலையிலே ஆபி போகும் போது “ கணபதி அய்யருக்கு லெட்டர் கொடுக்கறேன். போய் பார்த்துவிட்டு வரட்டும்”   சிஏ என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்தில் முதல் (இப்போது வரையிலும் ஒரே )சிஏ நான்தான்.   
எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்.
அருந் தவன். இவர். பெரிது
அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும்.
பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிதுஎன
மனத்தின் நோக்கினான்.
 
காய்ந்து எழுகின்ற கொடிய பாலை நிலமான இத்தன்மையான நிலத்தை அரியதவத்தை உடைய விசுவாமித்திர முனிவன்  இந்த அரச குமாரர்கள் அளவற்ற ஆற்றல் வாய்ந்தவராலும் மலரி்னும் மென்மையான உடலைஉடையவர் ஆதலால் சிறிதளவேனும்  வருந்துவர்  என்று மனத்தில் எண்ணி அவர்களைப் பார்த்தான்.
நோக்கினன் அவன் முகம்; நோக்க. நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக. நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.
 (விசுவாமித்திர  முனிவன்)  அந்த அரசகுமரர்களுடைய  முகங்களைப் பார்த்தான்
அவ்வாறு பார்க்கவே அக்குறித்த பார்வையில் நோக்கமுடை அவ்வரசகுமாரர்களும்  முனிவரின் பாதங்களை வணங்க பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட இரண்டு அரிய வித்தைகளை அப்பார்வையின் வழியே அவர்கள் மனத்தில் பதியுமாறு ஊக்குவித்தான் அவைகளை  அக்குமரர் தமது உள்ளத்தில் நினைத்தனர்.
நோக்கின் வழி ஊக்கினன் என்பது “நயன தீட்சை எனப்படும்.
நோக்கு:   நோக்கம்  ‘நோக்குடைக் கோக்குமரர் அடிகுறுகஎன்றது. முனிவரது மனக் குறிப்பை உணர்ந்த குமாரர்கள் அவரை அடைந்து அருள் செய்யுமாறு வணங்கி  நின்றனர் எனும் கருத்துடையதாகும். நான்முகன் ஆக்கிய விஞ்சைகள்  இரண்டு பலை அதிபலை என்ற மந்திரங்களாகும். இவைகளை முனிவருக்குச் சொன்னது பிரமன். விஞ்சை: வித்தை.  ஊக்குதல்: செலுத்துதல். உள்ளுதல் நினைத்தல் உடனேயே அப்பாலை நிலம் இவர்களுக்கு குளிர்ச்சியானது.
வேலூரிலும், திருவண்ணாமலையிலும் பிறகு மெட்ராஸிலேயே வாழ்வின் பெரும் பகுதி கழிந்ததால் எனக்கு வெய்யில் எப்போதும் ஒரு பிரச்சினையாயில்லை. மன்னி பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூர் என்பதால் எப்போதுமே கோடையில் வேர்க்குரு எரிச்சல், என்றாலும் வடாம் வேளையில், காலையிலிருந்து பச்சைமிளாகாய் அரைத்து வெயிலோடுதான் உறவு.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்த என மனைவிக்கு 30 வருடங்களுக்குப் பிறகு வெய்யில் படும் பகுதிகளில் எல்லாம் சிறு சிறு கட்டி வந்து அப்படியே கருப்பு தழும்புகளாய் மாறி விட, டாக்டரிடம் கேட்டதற்கு வெய்யிலினால் வரும் அலர்ஜி இது என்றும், வெய்யிலில் செல்ல வேண்டாமென்றும் பரிந்துரைக்கப்பட்டாள். இங்கு வந்த பிறகும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மூன்று மாதமும் அவஸ்தைதான்
வேலையிலிருந்து ஓய்வுபெற்றபின் சென்னையில் வசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் இந்த இரண்டு மந்திரங்களை என் மனைவிக்கு உபதேசிக்க விசுவாமித்திர முனி வேண்டுமே என்பதே என்னுடைய  பெருங்கவலை.


No comments:

Post a Comment