Friday, February 17, 2012

நவராத்திரி

வேலூரில் நான் சிறுவனாக இருந்த காலத்தில், முதல் வகுப்பு சேருவதற்கு வயது குறைந்தது ஐந்தாவது இருக்க வேண்டும். இப்போது பூற்றீசல் போல் புறப்பட்டிருக்கும் நர்ஸரி பள்ளிகள், அந்நாளிலில்லை. அதனால் பொழுதுகள் வீட்டிலுள்ள அம்மா, பாட்டி, சித்தி இவர்களுடன் கழிந்தன. பண்டிகை நாட்களில் அந்த அந்த பண்டிகைக்கு குறிப்பிட்டவாறே எல்லாவற்றையும் பண்ணுவது அம்மாவின் வழக்கம்.
பொம்மை கொலு வைப்பது கூட ஒவ்வொரு குடும்பத்தினரின் வழக்கம். என் அப்பா வீட்டில் கொலு வைப்பது உண்டு; ஆனால் எங்கள் அம்மா வீட்டில் அந்த வழக்கம் கிடையாது.  இத்தனைக்கும் அப்பா மணந்தது சொந்தத்தில். அத்தையின் பேத்தியை. எங்கள் வீட்டில் ஏழு படிக்கட்டுகளுடன் கூடிய பெரிய மரச்சட்டம் இருக்கும். அத்தனை பொம்மைகளும் பத்திரமாக துணி மற்றும் பேப்பர் சுத்தி வைக்கப்பட்டு, பெரிய மூடிப் போட்ட டிரம்களில் பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
அமாவாசையன்று பலகைகள் மற்றும் சட்டத்தையும் இறக்கி அதை ஒழுங்கான கோணத்தில் சாய்த்து சட்டத்தைச் சுவற்றில் வைத்துப் பொருத்தி, பலகைகளைக் குறுக்கில் பொருத்தி அவை சட்டத்தில் சரியாக பொருந்தியிருந்தால் மாத்திரம், வெளியில் தெரியும் இரண்டு ஓட்டைகளுக்கும், ஆப்பு அடித்து, பலகைகள் சாயாமல், விழாமலலிருக்க நடுவில் இருக்கும் இரண்டு பலகைகளின் அடியில் இந்த பொம்மைகள் எடுத்த டிரம்கள் வைக்கப்படும். ஒவ்வொரு பொம்மையாகப் பிரித்து துடைத்து “எது பெயின்ட் போய்விட்டது? எது அடுத்த வருடம் வாங்க வேண்டியது? என்பது தீர்மானிக்கபட்டு அம்மாவின் ஆணைக்கேற்ப அடுக்கி வைக்கப்படும். மாற்றல் ஆகி புதிய ஊரில் இந்த பொம்மை இறக்கும் நிகழ்வு ஒரு வாரம் முன்னே நடக்கும். காரணம் லாரியில் வரும் போது எத்தனை பொம்மை தப்பியது எனப் பார்த்து புதியன வாங்குவதற்கு வசதியாக.
அம்மா என்றாவது ஒரு நவராத்திரியில் வீட்டில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால், அக்காக்கள் அண்ணன்கள் இருவருமே பலகை அடுக்கி கொலு வைத்து விடுவார்கள். அதே போல் பச்சை கலர் பேப்பரில் குடைக் கம்பியை நடுவில் வைத்து சுருக்கி இழுத்து மாவிலைப் போல் செய்து, நூலில் ஒட்டி கொலு படிகளுக்கும் மேல் விதானத்திலும் செயற்கை மாவிலைப் பந்தல் அமைப்பார்கள். கீழ் இரண்டு வரிசையில் நாங்கள் விளையாடும் பொம்மைகள் இருக்கும். பொம்மையை வைத்துவிட்டாள் அடுத்த ஒனப்து நாளும் அதை எடுக்கக் கூடாது.  


பக்கவாட்டில் சுவற்றோரம் பிரிட்டானியா டின்னைப் போட்டு, மணலைக் கொட்டி, மேலே ஒரு கோபுரம் பக்கத்தில் முருகன் சிலை: போவதற்கு படிக்கட்டு என்று மலை உருவாகும். மலை பசுமையாக இருப்பதற்காக இரண்டு நாள் முன்பே கடுகு அல்லஹ்டு கேழ்வரகை ஊறவைத்த முளைவிட்டு வந்த செடி அழகாக பதியப்பட்டிருக்கும். ஒரு புறம் கோவில். அதையொட்டி ஒரு பூங்கா என்று கலை நயம் மிக்கதாக இருக்கும். என் பெரிய அண்ணனுக்கு இதிலெல்லாம், அதீத ஈடுபாடு. அழகாகப் பூத்தொடுப்பான், பிளாஸ்டிக் பை பிண்ணுவான். இன்று கூட அவன் சூட்கேஸ் பேக் செய்தால் எல்லாபொருட்களுமே ஒரு ஒழுங்கான நேர்த்தியுடன் அடுக்கப்பட்டிருக்கும். அவன் தான் இந்த மொத்த கலை அலங்காரத்திற்கும் பொறுப்பு.

கொலு வைத்தவுடன் பக்கதில் இருப்பவர் சற்று தொலைவில் இருப்பவர்கள் எல்லோரையும் அக்காள்கள்  இருவரும் சென்று அழைக்க வேண்டும். அதற்கு துணையாகச் செல்ல வெட்டி ஆபிஸர் என்னை விட்டால் வேறு யார்?. எல்லார் வீட்டிலும் தவறாமல் கிடைக்கும் சுண்டல் பொட்டலங்கள்; எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு பையில் போட்டு வீட்டிற்கு வந்தவுடன் பிரித்து அனைவரும் சாப்பிடுவோம், ஆயிரம் குறைகள் கூறிக் கொண்டு. எல்லார் வீட்டிலும் ஒரே மாதிரி பட்டாணி, கடலைப் பருப்பு, கொண்டைக் கடலை, கருப்புக் கடலை மற்றும் இதர வகைகள். ஒரு நாள்  கட்டாயம் டைத்தக்கடலை, கொப்பரை மற்றும் சக்கரை கலந்த “பப்புல் பொடி. வாயில் போட்டவுடன் புகை போல் வருவதால் நாங்கள் அதை ‘பீடி பொடி”. என்றழைப்போம்.
கட்டாயம் சிறுமிகள் பாட்டு பாடுவார்கள். ஆனால் எங்கள் குடும்பத்திற்கும் பாட்டிற்கும் ரொம்ப தூரம். பாட்டு என்றில்லை, விளையாட்டு, நுண்கலைகளில் பயிற்சியும் அவ்வாறே.  எங்களுடையப் பொழுதுபோக்கு மற்றும் ரசனையெல்லாம். சாப்பாடு, சினிமா, புத்தகம் மற்றும் பேச்சில்தான். எங்கள் அக்காக்களை யாரும் பாட சொல்லி நான் கேட்டதில்லை. கேட்ட ஒருத்தருக்கு என் அக்காவின் பதில் “சுண்டலும் வேணாம். வெத்திலைப் பாக்கும் வேண்டாம்”. எங்கள் வீட்டிற்கு வரும் சிறுமிகளுக்கும் இந்த தொந்தரவு கிடையாது.
பொதுவாக எல்லா கொலுவிலும் நான் பார்த்தது தசாவதாரம் செட், கருடன் மேல் மஹாவிஷ்ணு, மீனாட்சி கல்யாணம், மாடு மேய்க்கும் கோபால கிருஷ்ணன், வள்ளித் திருமணம் முதலியவைதான். ஆனால் எல்லோர் வீட்டிலும் கட்டாயமிருந்தது காந்தியும் நேருவும். பொம்மைகள் களிண்ணால் செய்யப்பட்டவையாதலால் மிகவும் கமாக இருக்கும். ஒரு தடவை சித்தூரில் கொலு வைத்த போது மாடு மேய்க்கும் கோபாலகிருஷ்னனின் பொம்மையின் கனத்தைத் தாங்குவதற்கு அடியில் சரியான டின்களை வைக்காததால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பெரும் சத்ததுடன் மொத்த பொம்மைகளும் சரிந்து வீழ்ந்தன. அன்றிரவு முழுவதும் உடையாத பொம்மைகளி எடுத்து வைத்து காலையில் வாங்க வேண்டிய பொம்மைகளைப் பட்டியலிட்டுவிட்டுத் தூங்கினார் என் பெரிய அத்தை. எல்லோருக்குமே அது அபசகுனமாகப் பட்டது. ஆனாலும் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

நவராத்தியின் ஒவ்வொரு நாளும் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு அம்மாவுடன் இரவு 7.30 க்கு சென்று சாமி தரிசனம் செயவது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களை அடுக்கி எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புது வஸ்திரம் போர்த்தி பூஜை. அன்று படிப்புக்கு விடுமுறை. அடுத்த நாள் பிரித்து காலையில் ஒரு மணி நேரமாவது கட்டாயம் படிக்க வேண்டும். எல்லா பள்ளிகளிலும் விஜயதசமி அன்று புது மாணவர்கள் சேருவார்கள். ஒன்றாவது அடுத்த வருடத்தில் தான் சேர முடியும் என்றாலும், இந்த விஜயதசமி போது ஒன்றாவது சேருவார்கள். அடுத்த வருடம் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிப்பார்கள். நன்றாக படிக்கும் சிலர் டபுள்  ப்ரொமோஷன் வாங்கி அடுத்த வருடம் இரண்டாம் வகுப்பு போய்விடுவார்கள். வேலூர் இராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூலில் விட்டுவிட்டு வருபவர் தலை மறையுமுன்னே வீட்டிற்கு ஒடி வந்து நின்ற எனக்கு எனக்கு அவ்வாறெல்லாம் நடக்கவில்லை.

அறியாமையும் வறுமையும் அழிவதற்கு கல்வி எப்படி அவசியமோ, அப்படி இராமாவதா நோக்கம் நிறைவேறுவதற்கு இராமன் விசுவாமித்திரனுடன் வந்து அவன் வேள்வி காக்க தாடகையை அழிக்க வேண்டியது அவசியம்.
கடுமையான இப்பாலை நிலம் இவ்வாறிருப்பதற்கு  காரணம்
சுழி படு கங்கைஅம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ?பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம். அறிஞ! கூறுஎன்றான். இராமன் வினவினான்.
முனிவன்
என்றலும். இராமனை நோக்கி. ‘இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள். கூற்றின் தோற்றத்தள்.
அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள். உறுதி கேள்எனா.
உறுதி – உற்ற செயல் எனவே வரலாறு. மா என்ற பொதுப் பெயர் மையல் என்ற அடை மொழியைப் பெற்றதால் யானையை உணர்த்திற்று. வாரணம் ஆயிரத்தின் பலத்தைக் கொண்ட அரக்கி தாடகையும் இதற்குக் காரணம். அவள் வரலாற்றைக் கேள் எனக் கூறுகிறார். யட்சகர்கள் குலத்தில் சுகேது என்னும் பரிசுத்த குணமுடையவன் குழந்தையில்லாததால் பிரம்மனை நோக்கித் தவமிருந்தான்.
முந்தினன் அரு மறைக் கிழவன். முற்றும் நின்
சிந்தனை என்?என. சிறுவர் இன்மையால்
நொந்தெனன்; அருள்க என. நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை ஒரு மகளு உண்டாம் என்றான்.
“நுணங்கு கேள்வியாய்கதை கூறும் முனி இராமனை விளித்த விளி. கதை கூறுபவர் மற்றும் சிறந்த பேச்சாளர்களும் தாம் கூறுகின்ற கதையில்/பேச்சில் கவனக் குறைவு நிகழாதிருத்தல் பொருட்டு கதைக் கேட்பவரை விளித்து மேலும் கதை கூறுதல் இயல்பு. (திரு. நெல்லை கண்ணனும் இவ்வுத்தியைப் பயன்படுத்துவதை பார்த்தும்/கேட்டுமிருக்கின்றேன்).
சுகேது பிரம்மதேவன் வரத்தால் பிறந்த அப்பெண்ணை சுந்தனென்பவனுக்கு மணம் செய்து வைத்தான். அவர்களும் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்து வந்தனர். பல நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு மாரீசன் சுபாகு என்ற இரு மக்கள் பிறந்தனர். மக்கள் மாயை, வஞ்சனை( மாயம் -மந்திர சக்தியால் செய்யும் சூழ்ச்சி; வஞ்சனை – புத்திவலியால் செய்யும் சூழ்ச்சி) முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்று வளர்கையில், சுபாகு அகத்திய முனிவரின் ஆசிரமத்தில் மரங்களை பறித்து வீசி, மான்களைக் கொன்று உண்ட வேளை,  அகத்திய முனிவன் கோபத்தில் கண் திறந்துப் பார்க்க சாம்பலானான்.

கணவனிறந்ததைக் கேட்ட தாடகை தன் மக்களிருவருடனும் அகத்தியனைக் கொல்வேன் என
இடியொடு மடங்களும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அணடமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே
தாடகை மறும் அவர்தம் மைந்தர் முதலியோர் கோபாவேசத்தைத் தெரிவிக்கும் உருத்திரச்சிவை தோன்றவே கூறும்  இப்பாடல். மடங்கள்- எல்லாப்பொருளையும் அழியச் செய்வது.
குறுமுனி
தமிழ் எனும் அளப்பு அருஞ் சலதி தந்தவன்
உமிழ்கணல் விழிவழி ஒழுக உங்கரித்து
அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!என உரைத்தனன். அசனி எஞ்சவே.

தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவனனாகிய அகத்தியன் சாபமளிக்க அந்த நொடியிலேயே அவர்கள் அனைவரும் அரக்கராயினர்.(வடமொழி புலவனாகிய அகத்தியன் அவர்கள் சங்கத்தில் ஒரு புலவனோடு ஒருநாள் மாறுகொண்டு, அவர்களிறுமாப்பை அடக்கும் பொருட்டு சிவபெருமானிடம் சென்று தன் கருத்தை வெளிபடுத்திப் பேசிக்கொண்டிருக்கையில், தான் நின்ற மண்டபம் முழுவதும் திவ்வியபரிமளமொனெறு வீச, அகத்தியன் பரமசிவனை வினவ அம்மண்டபத்தின் மூலைக்குச் அழைத்துக் கொண்டு போய்க் குவியலாய்ப் போட்டிருந்த சில ஏட்டுப் பிரதிகளைக் காட்டவே, அவற்றைக் கண்ட மாத்திரத்தில் மதுரமென்று பொருளுள்ள தமிழ் என்னும் பெயரை அகத்தியன் பலமுறை சொல்ல, உடனே பரமசிவன் “இப்பாஷைக்கு ஆதாரவிதிகள் இவ்வேட்டுப் பிரதிகளிலுள்ளன என்று எடுத்துக் கொடுத்து உபதேசிக்க உடனே இம்முனிவனும் தென்திசைக்கேகி பொதியமலையில் வசித்து, அவ்விதிகளைக் கொண்டு “ பேரகத்தியம் சிற்றகத்தியம் என்னும் இலக்கண நூலைச் செய்து, அவற்றைத் தம் மாணாக்கியராகிய தொல்காப்பியன் முதலிய பன்னிருவர்க்கும் கற்பித்தருளித் தமிழை தழைத்தோங்கச் செய்தனென்பது “தமிழ் எனும் அளப்பருஞ் சலதி தந்தவன்என்பதில் குறித்த வரலாறு.). தாடகையின் சாப வரலாறு மற்றும் அகத்தியன் வரலாறு முதலியவை கோவைக் கமபன் கழக உரையில் இல்லை. ஆயினும் இதை நூலிலேயே பதிப்பித்திருக்கின்றார் வை மு கோ.

“ஸாகரின் ராமயணத் தொலைக் காட்சித் தொடர் மற்றும் மகாபாரதம் தொடர் இரண்டையும் என் மகன் அறிந்து கொள்ள வேண்டுமென்றும், அப்படியே ஹிந்தியையும் கொஞ்சமாவது கற்றுக் கொள்ளட்டும் என வாங்கி வைத்திருந்தேன். ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருந்தது. ஒரு நாள் “டாடி, ஸ்வாமியே சொல்லிட்டார். தமிழைப் போல ஒரு  பெஸ்ட் மொழி உலகத்தில இல்லைன்னு. ஸ்வாமியே சொன்னதுக்குப்புறமும்  நான் எதுக்கு ஹிந்தி கத்துக்கணும்?   “எங்கடா சென்னார்?என்பதற்கு அந்த பகுதியை இராமன் வனவாசத்தில் அகத்தியரின் பெருமையைக் கூறும் மேற்படி நிகழ்வைப் போட்டுக் காண்பித்தான்.
தாடகையின் மைந்தர்கள் இருவரும் பாதள லோகத்தில் தங்கியுள்ள “சுமாலி என்ற ராட்ச ராஜன் தனையடைந்து “உனக்கு நாங்கள் உற்ற புதல்வாராவோம் எனக்கூறி தஞ்சமடைந்தனர். சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேசகி என்பவளது தகப்பனாவான். இராவணன் இவர்களை மாமன்மாரென்றேப் பாராட்ட இவர்கள் உலகத்தாருக்குத் தீமைபுரிந்தனர்.
மிகும் திறன் மைந்தரை வேறு நீங்குறா.
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே
வகுந்துவின் வசுவரி வசிந்தது இவ் வனம்
புகுந்தனள்.- அழல் என புழுங்கும் நெஞ்சினாள்.
மிக்க வலிமையுடைய மக்களை அகத்தியன் சாபத்தால் பிரிந்த தாடகை நெருப்புப் போலக் கொதிக்கின்ற மனமுடையவளாய் இவ்வனத்தில் வசிக்கின்றாள் என்றான் முனி தாடகையைக் குறித்து

மண் உருத்து எடுப்பினும். கடலை வாரினும்.
விண் உருத்து இடிப்பினும். வேண்டின். செயகிற்பாள்;எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி. ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்
“தடுப்பவரில்லாக் காரணத்தால் இவள் இவ்வாறு இவ்வளவு பாவங்களையும் செய்தாள் என்றான் முனிவன்.
நாங்கள் கடலூர் வந்த போது அப்பா பண்ட்ருட்டியிலிருந்து பேப்பர் மெஷ்ஷிலா ராமாயண செட் வாங்கி வந்தார். . மொத்தம் 350க்கும் மேல் பொம்மைகள். அததற்கு ஏற்றாற் போல் வில், கத்தி மற்றும் அமைப்புகள். இராமரின் பிறப்பிலிருந்து அக்னி பிரவேசம் வரை மிகவும் அழகான ண்ணத்தில் இருந்தது. அதில் தாடகை மலையைக் கைக்கு மேல் தூக்கி கொண்டு வருவது, இராமர் அம்பெய்வது, அவள் இறப்பது எல்லாமே இன்னும் நினைவிலிருக்கிறது. அந்த வருடம் எங்ள் வீட்டிற்கு நாங்கள் அழைக்காதவர்கள் கூட வந்து பார்த்தார்கள். எப்படியோ ஐந்து வருடங்கள் வரைதான் எங்களால் அதை பாதுகாக்க முடிந்தது. அப்பா இந்த ஐந்து வருடங்களில் திருத்தணி, விழுப்புரம் திண்டினம் போன்ற ஊர்களுக்கு மாற்றலாகிப் போனதில் எல்லா பொம்மைகளுமே உடைந்து விட்டன. ஆனாலும் நாங்கள் எல்லாம் இராமயணத்தில் ஒரளவு தேர்ச்சி பெற்றவரானோம். 

சூடக அரவு உறழ் சூலக் கையினள்;காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’
தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே;*
கண்ணின் காண்பரேல்ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் என மிக அழகாக “ஆடவர் எனப் பொதுப்பட கூறினமையால் முற்றும்துறந்த முனிவரும் இவனழகில் துவக்குண்டு ஈடுபட்டு நைவர் என பொருள் வந்தது. “கண்ணின்என்று வேண்டாது கூறினார், அவ்விராமனைக் காண்பதற்கு கண்கள் தவம் புரிந்திருக்க வேண்டுமென்பதற்கு. சழக்கு- குற்றம் அதனையுடயவள் சழக்கி. சழக்கு- நீதிக்குமாறானது என்றும் பொருள் கொள்பவர் உளர்.
உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்.
கிளப்ப அருங் கொடுமையை அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்;
அவள் எங்கிருகின்றாள் என இராமன் வினவு முன்னே அவனெதிரே தாடகை
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக. அனல் தறுகண்  அந்தகனும்  அஞ்சிப்
பிலம் புக. நிலக் கிரிகள் பின் தொடர வந்தாள்
தாடகை வரும் போதில் அவள் தன் பாதத்தை ஊன்றிவைக்க, அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் நிலம் குழிபட, அந்தக் குழியில் கடல் நீர் புகுமாறும், யமனும் அவள தன்  கொடும் தோற்றத்தைக் கண்டு நடுங்கிப் பிலத்தில் ஒளிந்து கொள்ளுமாறும், தான் வருகின்ற விசையால்(வேகம்) அசையா மலைகளும் இடம் விட்டுப் பெயர்ந்து தன் பின்னேத் தொடருமாறும் வந்தாள்.
மேலேக் கூறியத் தாடகையின் வரலாறு மற்றும் அகத்தியனைப் பற்றித் தமிழெனு அளப்பருஞ் சலதி தந்தவன் என்பதான பாடல்கள் எதுவுமே கம்பன் கழக உரையிலில்லை. ஆனால் இவற்றை நூலிலேயே பதிப்பித்துள்ளார் வை மு கோ. அவரும் சில பிரதிகளில் காணப்படவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். அதே போல் வால்மீகத்தில் இராவணனுடைய சொந்தம் அல்லது பாட்டி போன்றவள் என்பதோ அவன் அஞ்சையின் பேரிலே அவள் அவ்விடம் வசிப்பதோ இல்லை.
இராமனுக்கு அப்பொழுது பருவம் பதினாறு. ஆனாலும் அவனுடைய ஆளுமையைப் பற்றி முன்பே ஓரிடத்தில் கல்விகற்க தினமும் நகரத்தை விட்டு நீங்கி, மாலையில் திரும்பிவரும்போது அவன் மக்களிடம் அவர்களுடைய நலம் விசாரிப்பதிலேயே கோடிட்டுக்காட்டிடுவார் கவி. ஐந்திலேயே வளைந்தது.   

No comments:

Post a Comment