Friday, December 30, 2011

நகரம்

அப்பா சித்தூர்தான் சொந்த ஊர் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், பல்வேறு ஊர்களில் அப்பா பணியாற்றினதால் எந்த ஊரையும் என்னால் சொந்த ஊராக நினைக்க முடியவில்லை. எனக்கு நினைவு தெரிய, மூன்று வருடங்களுக்கு மேலாக அப்பா எந்த ஊரிலும் இருந்ததில்லை. அவர் வேலை செய்த நாள் வரை  இருந்த ஊர்கள் அனைத்துமே சொந்த ஊர்தான். நான்  என் ஊர் என்று சொல்வது இந்த ஊர்களனைத்தின் கலவையே. திருவண்ணாமலையில்தான் கார்த்திகை தீபத்தின் போது மாக்கல்லில் செய்யப்படும்  “கச்சட்டி”( கல்சட்டி) கிடைக்கும். அதை வாங்கி வந்து பழக்க வேண்டும். முதலில் அதை, பச்சைத் தண்ணீரில் போட்டு ஊறவைப்பார்கள். பிறகு லேசான சூட்டில் வெந்நீர் ஊற்றி வைப்பர். சூட்டின் அளவை அதிகப் படுத்திக் கொண்டே வருவர். பிறகு சூடான சாம்பரை அதில் ஊற்றி வைப்பர். சில நாட்களுக்குப் பிறகு தான் அதை அடுப்பிலேயே ஏற்றுவர். ரொம்ப நல்லா பழகியிருந்தால் தான் தாளிக்கவும் அதை பயன் படுத்துவர். என்ன ஒரு கஷ்டம். நிறைய நேரமாகும். ஆனால் அதில் வத்தக் குழம்பு, மோர்க்குழம்பு, ரசவாங்கி என்று எது பண்ணினாலும் அடுத்த நாள் கையை முகர்ந்தாலும் அந்த வாசம் வரும்.
நம் எல்லோருக்குமே நம் ஊரின் மீது பாசமிருக்கும். அந்த மண்ணின் மணம், தண்ணீரின் சுவை, அவ்வூர் கோவிலின் சிறப்பு, அங்கு கிடைக்கும் பொருளின் உயர்வு, சமையலின் விசேடன பரிமாணம் என்று. ஒவ்வொன்றுமே ஒவ்வோரு வகையில் மனதில் நிலைத்திருக்கும்,அம்மாவின் சாப்பாடு போல. பெரு நகரங்கள் இந்த அடையாளங்களைத் தொடர்ந்து அழிக்க முயன்றாலும், இன்றைய வரை தோற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

சிறுவனாக இருக்கும்போது விடுமுறைக்கு தாத்தா வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. மிகச் சிறிய வயதில் சென்னை பரங்கிமலையில் சில வருடங்கள் வசித்தோம். அப்பாவின் அரசாங்கக் குடியிருப்பு ரயில் நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில். அன்று பரங்கிமலை ஒரு சிறு கிராமமே. பாண்டிபசார், தி நகர் தான் சென்னை நகரின் பள பளப்பான பகுதிகள். தி நகரில் இருக்கும் அத்தைவீட்டருகில் சினிமா நடிகர்கள் பலருடைய  வீடு இருந்தது. பாண்டி பஜாரில் பாண்டியன் காபி ஒர்க்ஸிலிருந்து வரும் காபி பொடியின் மணம்,. சாந்தாபவன் ஓட்டலிலிருந்து வரும் நெய்யின் மணத்துடன் சேர்ந்த தோசையின் வாசம் அந்த ஓட்டலின் சாம்பார் வாசம் நினைத்தவுடனேயே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். இந்த ஒட்டலில் ஒரு விசித்திரம் என்னவென்றால் பார்சலுக்குத் தனி பில், அங்கேயே சாப்பிடுவதற்குத் தனி பில். நான் பியூசி படித்துக் கொண்டிருந்த நாட்களில், அப்பா ஏதோ வேலையாக வந்தார். காலை டிபன் சாந்தா பவனிலிருந்து வாங்கி வருவதற்கு என் அத்தையின் மகனையும் என்னையும் அனுப்பினார். இவன் அங்கே போய் உடகார்ந்தவுடன் இரண்டு இட்லி இரண்டு பிளேட், இரு காபி என ஆர்டர் செய்து அங்கேயே சாப்பிட்டோம். பில் வந்த பிறகு இரண்டு இட்லி இரண்டு வடை மூணு பிளேட், ரெண்டு மசாலா தேசை முறுகலா, ஒரு பூரி மசால் பார்சல் என ர்டர் கொடுத்தான் . பில் வந்தவுடன் அந்த பில்லையும் பார்சலையும்  என் கையில் கொடுத்துவிட்டு, இவன் போய் நாங்கள் சாப்பிட்டதற்கு மட்டும் பில் கொடுத்துவிட்டு, உடனேயே என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டான். பாதி வீட்டிற்கு வந்த வழியில் தான் ஏண்டா பார்சலுக்கு பில்லே கொடுக்கலை? இல்லியே கொடுத்துட்டேனே? இல்லியே பில்லே என் கிட்டதானே இருக்கு. சரி, சரி. போய் சீனா மாமாக் கிட்டே சொல்லாதே. உனக்கு போனாப் போறதுன்னு பாதி. 3ரூ வைச்சுக்கோ.
அது திருட்டு என்றோ தவறு என்றோத் தோன்றவில்லை. அடுத்த நாள், கிடைத்த மூணு ரூபாயை வைத்துக் கொண்டு வாணிமஹால் பக்கத்தில் தள்ளு வண்டியில் விற்கப்படும் பட்டாணி சுண்டல், மசால் வடை மற்றும் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு எப்பவுமே கூட்டம் அலைமோதும். வாணலியிலேந்து எடுத்தவுடனேயே மசால் வடையும் மிளகாய் பஜ்ஜியும் காணாமல் போய்விடும். சாப்பிட்டுக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் என் சித்தப்பா வந்ததை கவனிக்கவில்லை. அவரும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்துவிட்டு, வீட்டிற்கு போகும் வழியில்ஏம்பா, அவன் எந்த எண்ணையிலே பண்றானோ சுத்தமாயிருக்கா? இல்ல. வீட்டிலேயே சாப்பிடலாமே. நான் இந்த வாரம் சித்தியை பண்ணித் தரச் சொல்றேன். சரி இன்னிக்கு எங்கிட்டெ காசு வாங்கிண்டு  போகலை. பின்னே ஏது காசு?”  சாந்தா பவன் விஷயத்தை சொன்னதும் “ உங்க அப்பா வேணும்னா அத்தை வீட்லேயே உன்னை விட்டுருக்கலாமே, ஏன் என் வீட்டிலே உடனும்?. சாந்தா பவன்காரன் போலிஸ்காரன் கிட்டே கம்பிளைண்ட் கொடுத்தா உங்க அப்பாவோட மானம்தானே போகும். அவனோட இனிமேல சேராதே. மீதி காசையும் அவன் கிட்டயே குடுத்துடு. பிராயசித்தமா இன்னிக்கு சாயங்காலம் சந்தி பண்ணும் போது, இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன்னு வேண்டிண்டு 108 காயத்ரி  ஜபம் பண்ணு”.  நான் அங்கிருந்த வரை சாந்தாபவன் பக்கம் அதற்குப்பிறகு எட்டிப் பார்க்கவேயில்லை..  

சி ஏ முடித்து, கோபாலபுரத்தில் தொழில் செய்யும் நேரம், மீதி ஆடிட்டர்களைப் போல் தவறாமல் மூன்று வேளை அட்டன்டென்ஸ் மார்க் பண்ணுமிடம் உட்லான்ட்ஸ் டிரைவின். அங்கு வெளியில் கீளீனராக இருக்கும் அரைக்கால் நிஜார் அணிந்த மணி மற்றும் பல சர்வர்கள், (எவ்வளவோ நாட்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு பில் குடுக்காமல் அடுத்த நாள் கொடுத்ததுண்டு). எல்லா நாட்களிலும் பார்க்கக்கூடிய, பி பி ஸ் தினம் பார்த்தாலும் நெருங்கிப் போய் பேசியதில்லை. பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அண்ணாநகரில் வசித்ததால், மெட்ராஸ் சொந்த ஊராக மாறியது.
அதிகப்  படியான மக்கள் கூடி வாழும் பெருநகரம், பல்வேறு குழுக்கள், பல்வேறு சமயத்திதினர், அதனில் இயல்பாகத் தோன்றும் போட்டிச் சமுதாயம்(Competitive Society), என்பவற்றால் விளையும் ஊறுகளைப் பற்றி பல்லவர்கள் காலத்தையடுத்து வந்த கம்பன் நன்கு அறிந்தவன்.
மேலை நாடுகளில் குறிப்பாக வாஷிங்டன், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற பெருநகரங்களில் குற்றம் மிகுதியாவதற்குக் காரம் ஆராய்ந்த உளவியல் வல்லுனர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பொழுது போக்குவதற்கும், விளையாடுவதற்கும், அறிவு வளர்க்கும் கல்வியைப் பெருக்குவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாதக் காரணங்களாலேயே சண்டையிடுதல் மற்றும் சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று கண்டு கூறியுள்ளனர்.
ஆகவே நகர அமைப்பில் சிறார்கள், குழந்தைகள், மகளிர், இளைஞர்கள் – வாழ்வை வளர்த்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள நேரம் போக-எஞ்சிய நேரங்களில் சிறந்த முறையில் பொழுது போக்க விளையாட அரங்கங்கள் முதலியன அமைதல் வேண்டும் என்றும் தற்கால சமூகவியளாலர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றை அன்றைக்கே கம்பன்
பந்தினை யிளையவர் பயிலிட மயிலூர்
கந்தஅனி யனையவர் கலைதெரி கழகம்
சந்தன வன மல் சண்பக வனமாம்
நந்தன வனமல நறைவிரி புறவம்.
மகளிர்கள் பந்தடிக்குமிடல் சந்தன சோலைகளே ஆயினும் மகளிரின் மேனிமணத்தால் செண்பகச் சோலையை ஒத்திருக்க, ஆடவர் வில்வித்தைப் பயிலுமிடம் நந்தவனங்களே ஆயினும் அவர்களது மேனிமணத்தால் முல்லை வனம் போலும்.
பொருந்திய மகளி ரோடு வதுவையிற் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல்சென் றென்ன இயலிசைப் பயன்றுய்ப் பாரும்
மருந்தினு மினிய கேள்வி செவியுறு மாந்து வாரும்
விருந்தினர் முகங்கண் டன்ன விழாவணி விரும்பு வாரும்


எல்லா வகைப் பொருத்தங்களும் உள்ள பெண்களுடன்    இல்லற வாழ்கையில் பொருந்தியிருப்பவர்களும் (பிறப்பே. குடிமை. ஆண்மை. ஆண்டொடு. உருவு. நிறுத்த காம வாயில். நிறையே. அருளே. உணர்வொடு. திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே  என்பது தொல்காப்பிய விதி. இவ்வாறு கொள்ளாமல் தினம், கணம், மேந்திரம், ஸ்திரீ தீர்ககம், யோனி, ராசி, ராசியதுபடி, வசியம், ரச்சி, வேதை எனச் சோதிட நூலார் கூறுவனவற்றைக் கொள்வாரும் உளர்);  பருந்தோடு அதன் நிழலும் தொடர்ந்து செல்வது போல இயல் இசைத்த இசைப்பாடலை அனுபவிப்பவர்களும்;  அமுதத்தை விட இனிமை மிக்க  கேட்டறியும் நூலறிவினைச் செவியிற்  பொருந்த  உண்டு அனுபவிப்பவர்களும்;  விருந்தினரின்  முகத்தைப் பார்த்து   உண்ணும்  சோறு  வழங்கும்  விழாவின்  சிறப்பை விரும்புவாரும் மக்கள் பொழுதைக் கழித்தனர். பருந்தும்  நிழலும்   போலப் பாட்டும் (சாகித்தியம்) இசையும் (சங்கீதம்) பொருந்திச்   செல்ல வேண்டும்;   இலக்கணம்    (இயல்)  அமைந்த இசையை  நுகர்வோர் அவ்விசையொடு    கலந்து  அனுபவிப்பதற்குப் பருந்தும்  நிழலும்  உவமையாகக் கொள்ளலும்   பொருத்தமே. மருந்து: அமிர்தம்.  கற்றில  னாயினும்  கேட்க’  என்றும்   ‘கற்றலிற் கேட்டலே நன்று’  என்றும்  கேள்விச்  செல்வம்  சிறப்பிக்கப்படுதலின்இனிய கேள்விஎன்றார்    

கருப்புறு மனமும். கண்ணில்    சிவப்புறு சூட்டும் காட்டி.
உறுப்புறு படையின் தாக்கி;    உறு பகை இன்றிச் சீறி.
வெறுப்பு இல. களிப்பின் வெம் போர்    மதுகைய. வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம்    பொருத்துவாரும்;
சிலர் கோழிப் போரினால் பொழுதுபோக்குவதை கூறுவது. கோபத்தின் அடையாளமாக கண் சிவப்பதை “கண்ணிற் சிவப்புறு என்றார். கோழியைப் போர்க்கு விடுபவர் அதன்காலில் கத்தியைக் கட்டிவிடுதல் இயல்பு. ஆதலால் “உறுப்புறு படையில் தாக்கி என்றார். புறத்திணையில் “கோழிவென்றி என்ற ஒரு துறையுண்டு. 
எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையேடு ஏற்றை. ‘சீற்றத்து
உரும் இவைஎனாந்த் தாக்கி. ஊழுற நெருக்கி. ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி.
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப. மஞ்சுகிற ஆர்கின்றாரும்;

எங்கும்  பரவியுள்ள இருள் இரண்டு கூறாகப் பிரிந்து தம்முள் மோதுவது  போல எருமைக் கடாக்கள் காணப்படுகின்றன.   ஒரே நிறம். ஒரே  தரம்; உருவம் மட்டுமே இரண்டு. அவை மோதிப்  பொருவதைப் பார்த்து  வீரர்கள்  மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றனர்.   எருமையில் பெண் நாகு  என வழங்கும்.எருமையும் மரையும் பெற்றமும்   நாகே’ (தொல் பொருள். மரபு 63). எருமை நாகு; இருபெயரொட்டுப்   பண்புத் தொகை.

மக்கள் பயனுள்ள வகையில் பொழுதைப் போக்கும் கோசல நாட்டில் கல்வியிலும், ஈகையிலும் விருந்தோம்பலிலும் சிறப்புற்ற மகளிர் பந்தாடும் போது அதிர்ச்சியால் முத்துக்கள் சிந்த, ஏவல் மகளிரால் குப்பைகளாக் குவிக்கப்பட்ட அம்முத்துக்கள் சந்திரனுடைய ஒளியை விட வெள்ளொலி சிந்தும் என்றும், நடனசாலையில் நடிக்கின்ற மகளிரின் நோக்கு, தமக்கு இலக்காகிய ஆடவரின் மனத்தை தம்முட் கொள்ள, அதனால் அவ்வாடவர் ஆவிமெலிவாராயினர் என்றும் கூறும் கவி திரு அவதாரப் படலத்தில், சினிமாத் துறை ஆரம்பிக்க பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே, இன்றைக்கும் உபயோக்கின்ற உத்தியை கம்பன் கையாளுவதைப் பார்ப்போம்.
                                                                       தொடரும்

Friday, December 23, 2011

கோட்டை


டெல்லியில் இருந்த 7 மாதங்களில், அதற்கு முன் தீபாவளி பட்டாசில் இரட்டை சரம் எலெக்டிரிக் வெடியில் பார்த்த RED FORT  பார்க்க பஸ்லில் போகலாம், என்று பஸ் நம்பரை எல்லாம் கரெக்ட்டாக கேட்டுக் கொண்டு நின்றால் பஸ் நம்பரும் இந்தியில். ஆங்கிலம் எங்கோ பின்னால் கண்ணுக்குத் தெரியாத இடத்தில். எல்லா பஸ் கண்டக்டரும் “லால் கீலா, லால் கீலாஎன்று கத்திக் கத்திக் கூப்பிட்டாலும் தமிழ் அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரிந்த என் சிற்றறிவிற்கு அது தான் RED FORTஎன்று தெரியாமல், தோல்வியைத் தழுவி வீடு வந்தேன். பிறகு மன்னியிடம் கேட்டு என் அறியாமையை போக்கி கொண்டு போய் பார்த்த போது பெரிய சுற்றுலா தமாகவும், மொழி தெரியாத காரணத்தால் மற்றவர் வைத்த கைட் என் சொல்கின்றார் என்றும் புரியாமல், வீடு வந்தால் போதுமென்று திரும்பினேன். எனக்கு RED FORT பிடிக்கவில்லை.
மெட்ராஸில் பீச் ரோடு வழியாக முன் மாலை வேளைகளில் டவுனிலிருந்து ஸ்கூட்டரில் வரும் போது, போகும் போது வியர்வையில் நனைந்த உடலை வருடும் குளுமையான கடல்காற்று St. George கோட்டையை ஏறெடுத்து பார்க்க வைத்ததில்லை.
திருவண்ணாமலையிருந்து இரண்டு சகோதரர்களும் மாமா நாரயணனுடன்(அம்மாவின் மாமா பையன். என் அம்மாவழி தாத்தாவீட்டில் வளர்ந்து படித்தவன். எங்களுடனேயே வசித்து வந்தான்) ஒரு நாள் விடியற்காலையில் கிளம்பி செஞ்சிக் கோட்டைக்குச் சென்றோம். வெயில் வருவதற்கு முன் ராணி கோட்டை மற்றும் ராஜா  கோட்டை ஏறி மேலிருந்து பச்சை தாவணி அணிந்திருக்கும் டேனிஷ் மிஷன் பள்ளி பெண் பிள்ளைகள் போல் தோற்றமளிக்கும் வயல்களைப் பார்த்தோம். செஞ்சிக்கு அருகில் வணக்கம்பாடி எனும் கிராமத்தில் வசித்து வந்த மாமாவின் சொந்த அக்கா அத்திம்பேர் அவர்கள் பசங்களையும் பார்த்து விட்டு, அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கி, அடுத்த நாள் காலை திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.   

வேலூரில் அப்பாவின் ஆபிஸ் கோட்டையிலிருந்தது. இக்கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டது. அவர்கள் காலத்தில் இது “ராயவேலூர் கோட்டை. விஜயநகர அரசர்களுக்குப் பிறகு சத்ரபதி சிவாஜி, அதன் பிறகு ஆற்காடு நாவாப், கடைசியில் ஆங்லேயர்களும் என இக்கோட்டையைக் கைப்பற்றினர். விஜய நகர சாம்ராஜயத்தை சேர்ந்த வாரிசு ஒருவர் மர்மமான முறையில் இக்கோட்டையில் கொல்லப்பட்டார் என்பதும், அங்கிலேயர் காலத்தில் கடைசி இலங்கை அரசன் மற்றும் திப்பு சுலதான் குடும்பத்தினர் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் ஊரிலே சொல்வார்கள். அதே போல் இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் நடந்த இடமும் இதுதான்.

நாங்கள் மூன்று சகோதர்களும் என்றாவது அப்பாவின் ஆபிசுக்கு செல்வோம். அகழியில் தெரியும் கோட்டையின் பிரதிபிம்பம் அந்த இடத்தையே அழகாக மாற்றிவிடும். அகழியில்
முதலை இருப்பதாக கூறியதை நம்பியிருக்கின்றேன்.  போலிஸ்காரர்கள் பயிற்சி நிலையம் கோட்டையில் இருந்ததால் எப்பொதும் நிறைய போலிஸ்காரர்கள இருப்பர். இவர்களை வைத்தே அதிகாரமில்லாத போலிஸ் என்பது வேலூரின் ஏழு அதிசயங்களில் ஒன்றானது அப்போது கோட்டையில் இருந்த கோவிலில் சாமி சிலை ஏதுமில்லை. கோவிலிலிருந்து வெளியூர் செல்வதற்கு நிறைய சுரங்கப்பாதைகள் இருந்ததாக கூறப்பட்டதை, நம்பி கிற்றிலிருந்து யாரேனும் வெளி வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்போம். 6 மணிக்கு கொடியிறக்கப் பட்டு கோட்டை தன்னை மூடிக் கொண்டுவிடும்.
இன்று வரையரைச் செய்யப்பட்ட தேசங்களின் எல்லை கோடு போல், முந்நாளில் மக்கள் சிறு குழுக்களாக வசித்த போது இல்லை. பல்வேறு சிறு குழுக்கள் தங்களில் வலிமையுள்ள பெரியவன் ஒருவனுடன் சமரசம் செய்து, அவனுக்கு சேனை மற்றும் விளைச்சலில் பங்கீடளித்து, எல்லைகளைக் காப்பது போன்ற பணிகளை செய்து, பெண் கொடுத்து, பெண்ணெடுத்து,  சண்டைகளைத் தவிர்த்து, சமாதானத்தைப் பேணி அதன் மூலம் வளமையை பெருக்கி வாழிவியல் ஆதாரங்களளையடைந்தது.
குறுநிலக்கிழார்கள், அரசர்கள் மற்றும் பேரரசர்கள் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் கோட்டையையும் அகழியையும் வசிப்பிடங்களையும் கட்டி அதில் வசித்துவந்தனர். அதனால்தானோ தமிழ் மரபில் நகரவர்ணனையில் கோட்டை மதில். அகழி, கொடி, மாளிகைகள் அங்கு வசிக்கும் மக்கள் என் வரிசை கிரமமாக வர்னை செய்வது வழக்கமாயிற்று. 
அயோத்தியா நகர வர்னையில் கம்பர்
செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின்    சீரிய கூரிய தீம் சொல்.
வவ்விய கவிஞர் அனைவரும். வடநூல்    முனிவரும். புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும். தவம் செய்து    ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர். இழிவதற்கு அருத்தி    புரிகின்றது - அயோத்தி மா நகரம்.

நல்ல  கவிதைக்கு உரிய இயல்புகளை முற்றிலும்   கொண்ட கவி நாயகராகிய கம்பர்  பல இடங்களில்   நற்கவிதை   மற்றும்  மாகவிதையின்  இயல்புகளைக்  கூறுவார்;  அவற்றுள் இஃது   ஓர் இடம். கவிதைக்கு    இன்றியமையாதவை    இனிய    சொற்கள்;     அந்தச் சொற்களிலே  அழகு  இருக்க  வேண்டும்; அழகு என்பது   பல்வகைச்செம்மையால் அமைவது.   அழகோடு  இனிமை  சேர    வேண்டும்.செம்மையும்  இனிமையும் மட்டும் போதா; சொல்லப்படும்   பொருளும் நல்லதாக    இருக்கவேண்டும்.   செம்மை.   இனிமை.    நற்பொருள் இவற்றைக்  கொண்டுதரும்  சொற்கள்  சீரியனவாய்.    நுட்பம் சுட்டும் கூர்மை கொண்டனவாய்  இருத்தலும்  இன்றியமையாதது.   ‘செவ்விய. மதுரம்  சேர்ந்த  நல் பொருளின் சீரிய தீம் சொல்   வவ்விய கவிஞர்என்ற   தொடர்   கொண்டே   சிறந்த இலக்கியத்    திறனாய்வையும் இலக்கியக் கொள்கையையும் உருவாக்கலாம்.
அயோத்தியை வர்ணிக்கும்போது
நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!    நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்    இருக்கையோ! திருமகட்கு இனிய மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்    வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி  உறையுளோ! யாது என உரைப்பாம்? மதில்கள் பல்வேறு வகையாகக் ட்டப்படிருக்கின்ற அயோத்தியா கோட்டையின் மதில்கள் பொன்னாலானது. 
மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்.  வேதமும் ஒக்கும்; விண் புகலால்.
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்.    திண் பொறி அடக்கிய செயலால்;காவலின். கலை ஊர் கன்னியை ஒக்கும்;    சூலத்தால். காளியை ஒக்கும்;யாவையும் ஒக்கும். பெருமையால். எய்தற்கு  அருமையால். ஈசனை ஒக்கும்.
வேதம் மிகப்பரந்து நுண்பொருள்களை உள்ளடக்கி  முடிவு காண முடியாதிருத்தல் போல அம்மதிலும்மிகப்பரந்து நுண்னிய வேலைப்படுகளைக் கொண்டு முடிவுகாண முடியாதிருக்கின்றதென்றும், தேவர்கள் விண்ணுலகத்தை அடைந்திருத்தல் போல மதிலும் உயர்ச்சியால் விண்ணுலகத்தை அடைந்திருக்கின்றதென்றும், முனிவர் ஐம்பொறிகளையக்கி நிற்பது போல் மதிலும் பல்பொறிகளைத்(சினத்து அயில். கொலை வாள். சிலை மழு.தண்டு.சக்கரம் தோமரம்.உலக்கை கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல்    என்று இவை கணிப்பு இல: கொதுகின் இனத்தையும்.உவணத்து இறையையும் இயங்கும் காலையும்இதம் அல நினைவார் மனத்தையும். எறியும் பொறி உள என்றால்.  மற்று இனி உணர்த்துவது எவனோ?) தன்னுள்ளக்கிக் கொண்டிருக்கின்றதென்றும், சூலம் தாங்கியதால் காளியைப் போலும், மாற்றரசர்க்கு அடைய முடியாததால் அப்பரம்பொருளை ஒத்திருந்தது என்கின்றார் கவி.
விலைமகளிரின் குணத்தை பல இடங்களில் கூறும் கவி, மதிலைச் சுற்றியிருக்கும் அகழியை .
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை    அலைகடல் சூழ்ந்தன அகழி.
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்.    புன் கவி எனத் தெளிவு இன்றி.
கன்னியர் அல்குல்- தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி.
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;- நவிலலுற்றது நாம்.
கீழ்ப்போதலால் விலை மாதர் மனமும், தெளிவின்மையால் புல்லறிவாளர் கவியும், காவலுள்ளமையால் கன்னியரல்குல் தடமும், அகப்ட்ட பொருளைப் பற்றிக் கொண்டு வருத்தும் முதலையையுடமையால் ஐம்பொறிகளும் அகழிக்கு உவமையாக கூறுமிடம் இது.
அப்படிபட்ட மதிலும் அகழியும் சூழ்ந்தவிடத்திலுள்ள மாளிகைகள் மிக நெருக்கமாகவும் உயர்ந்தும் வரம்புஇல்(இந்த தொடரையும் கம்பர் பல இடங்களில் பயன் படுத்துகின்றார்.) எண்ணிக்கையிலும் உள்ளன எ சித்தரித்துக் காட்டும் கவி, மாளிகையின் தூண்களுக்கு விலை மகளிரை ஒப்பிடுமிடம் இது.
பாடகக் கால்அடி பதுமத்து ஒப்பன.
சேடரைத் தழீஇயின. செய்ய வாயின.
நாடகத் தொழிலின. நடுவு துய்யன.
ஆடகத் தோற்றத்த. மகளிர் போன்றன.
மாளிகைகளில் உள்ள வேலைப்பாடமைந்த தூண்களின் அடிப்பகுதி அஸ்திவாரத்தின் ஆத்தால் நாகலோத்தாரை தழுவுவதாகவும், வேலை திறத்தால் செப்பமுள்ளனவும், விரும்பிக் காணும் உள்வேலையை உடையனவும் நடுவிடமெல்லாம் சுத்த வெளியாய்யுள்ளனவும், பொன்னினாலாகிய வெளியமைப்பை உடயனவுமான அவை, பாடகமெனும் ஆபரமைந்த காலெனும் அடித்தாமரையை பெற்றிருத்தலும், யௌவன புருடர்களை தழுவுவதாலும், செந்நிறவாயுடனித்தாலும் தம்முடைய இடை சிறுத்திருத்தலால் பஞ்சின் தொடர் நுனியை பொன்போல் மேனியை உடையவராதலால் மாளிகைகள் விலை மகளிரை ஒத்தன எனகின்ற இப்பாட்டில் அடைமொழிகளின் ஒற்றுமையால் ஒருவிஷயத்தை வருணிக்கையில் மறைமுகமாக விலை மகளிரை குறிக்கும் மற்றொரு பொருள் தொனிப்பதை காண்க. நம் இன்றைய மொழியில் “double meaning”. ஆனாலும் எவ்வளவு அழகு. கடைசி வரி ஆடகத் தோற்றத்த. அளவு இலாதன என்பது கம்பன் கழகம். இப்படியும் ஒரு பாடம் உண்டு என கூறும் வை மு கோ, மகளிர் போன்றன என்றே பதிப்பித்திருக்கின்றார். மகளிர் எனும் நேரடி தன்மையான பொருளைத் தரும் வார்த்தையை கம்பன் பயண்படுத்தியிருப்பான் என்பது நம்பதகுந்ததாக் இல்லை.

                                                                                                                                                                                          தொடரும்