கிராமங்களை சார்ந்த தன்னிறைவான பொருளாதாரத்தை மேற்கொண்டு, வளர்ச்சி என்பது கீழிருந்து மேலாக போகவேண்டும் என்ற காந்தியடிகளின் கனவு, ஐந்தாண்டு திட்டங்களினால் மண்ணாகிப் போனது. மேலிருந்து கீழே வரும் எந்த திட்டமுமே முழுமையாகப் பலனளிக்காது. யாருக்காக திட்டம் தீட்டப்படுகின்றதோ அவனுடைய பங்களிப்பு துளியும் அதில் இல்லை. இவர்களுக்காவது அவனுடையத் தேவைகள் தெரியுமா எனறால், அதுவும் பூஜ்ஜியம். இப்படித்தான் “நம் பாரம்பரியமான இயற்கை விவசாய முறைகளை முற்றிலும் புறக்கணித்து, பண்ணாட்டு உர நிறுவனங்களுக்கு ஏஜெண்டுகளாக மாறின இந்திய வேளாண் பல்கலைக்கழகங்கள்” என்கின்றார் வேளான் பல்கலையில் பட்டம் பெற்று, இயற்கை வேளாண்மையை பரப்புகின்ற முயற்ச்சியில் இருக்கும் திரு. நம்மாழ்வார். நம் பூமி எல்லா சக்தியையும், சத்தையும் இழந்து விஷமாகிப் போனது.
மத்திய அரசு, ‘ நூறு நாள் ஊரக வேலை வாய்ப்பு’ திட்டத்தின் கீழ் தினம் ரூ 120.00, எந்த கண்காணிப்புமின்றி வழங்கியது. விளைவு விவசாய வேலைக்கு ஆள் இல்லை. மந்திரியின் மகன் பொறியியல் கல்லூரி கட்ட வேண்டும் என்றால் 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தரும் கண்மாயை மூடினாலும் தவறில்லை; கண்டு கொள்ளவும் மாட்டோம், கேட்கவும் மாட்டோம் என கன்மூடித்தன்மாக அட்சியாளர்களின் அடிவருடும் அரசு இயந்திரம்.
சென்ற முறை பதவிக்கு வருவதற்காக அள்ளி விட்ட சலுகைகள். இலவச கலர் டி வி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் மாதம் 20 கிலோ அரிசி,. மாடு கொடுத்தவன் கயிறு கொடுக்க மாட்டானா என்பது போல் கூடவே கேபிள் இணைப்பும் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. ஏனெனில் அது குடும்ப வியாபாரம்.
இன்றைய தேதியில், தமிழன் எதையுமே உழைத்து வாங்க வேண்டிய நிலையில் இல்லை. வருடத்தில் 100 நாட்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு (வேலை செய்யாமல் வரும பணம்); அரிசி கிலோ ஒரு ரூபாய் போய் மாதம் 30 கிலோ இலவசம்; ஆடு மாடு இலவசம்; மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பேன் இலவசம்; +1 +2 ,மாணவர்களுக்கு சைக்கிள், மடிக் கணினி இலவசம்.
முன்பே பள்ளிக்கூட சீருடை இலவசம்; பள்ளியில் தினமும் முட்டையுடன் கூடிய சத்துணவு இலவசம்(சிறிய வயதில் அது உடம்பிற்கு நல்லதா என்பது பற்றி ஆராயச்சி உண்டா? இல்லை.!) தமிழினத் தலைவருக்குத் தோன்றியது, எம் ஜி ஆர் செயத்தைவிட தான் அதிகம் செய்யவேண்டுமென்று.. பின் விளைவுகளைப் பற்றி அவருக்கென்ன, “முட்டை தந்த நாயகன்” என்று கமல், ரஜினி ஒரு பக்கம்; வாலி,வைரமுத்து மற்றொரு பக்கம் என பாராட்டு விழா நடந்தால் போதும். கட்டாயம் மானாட மயிலாட நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கு எது சிறந்த வழி என்று யோசிக்காமல் வெறும் இலவசங்களா வழி? இன்றைக்கு வருமானத்தில் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் செலவிடும் குடிமகன்கள், அரசியல் கட்சிகள் இவர்களிடமிருந்து கொள்ளையடித்த அணுவிலும் சிறியதான ஒரு பங்கை, ஒட்டுக்காகக் காசாக வீசி, அரசாங்கத்தை கடன் வாங்க வைத்து அதில் இலவசங்களை வாரி வழங்கி, என்றும் இவர்கள் வறுமையில் வாடச் செய்வதை நினைத்தாலே மாற்றம் வந்துவிடும்.
ஔவையார் இளமையில் வறுமை கொடியது என்றார். அன்றைய நிலையில் வறுமையுடைய மக்கள் தங்கள் பிள்ளைகளைக்கூட விற்கத் தயாராய் இருந்தார்கள் என்பதைப் பெரிய புராணத்திலிருந்து அறிகிறோம். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதியார்-பின்னர் சிறுதொண்டர் என்று புகழ்பெற்ற பெருமகனார்-தம்முடைய மகனை அரிவதற்கு முன்னர் மனைவியிடம் பேசுவதைச் சேக்கிழார் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். ‘மைந்தர்தமை நினைவு நிரம்ப நிதிகொடுத்தால் தருவாருளரே’ என்று சொல்கிறார். ஆகவே, நிரம்பப் பொருள் கொடுத்தால் தங்கள் பிள்ளைகளை விற்கத் தயாராய் இருந்தார்கள் என்று அறிகிறோம்.
இதற்கு முன்னர், வடநாட்டில் வழங்கும் சுநச்சேபன் கதை இதை நன்கு வலியுறுத்துகிறது. நரபலி இடுவதற்காக ஒரு பிள்ளை வேண்டும் என்று அரசன் பெரும்பணத்தைக் கொடுத்துப் பிள்ளை வாங்கப் புறப்படுகிறான். மூன்று பிள்ளைகளையுடைய இரிசிகன் தன் முதல் பிள்ளையையும், அவன் துணைவி தன் கடைசிப்பிள்ளையையும் தாங்கள் வைத்துகொண்டு இடையில் நின்ற சுநச்சேபனை பொருளுக்கு விற்று விட்டார்கள் என்று அறிகிறோம்.
கம்பனோ மன்னாரட்சி நன்கு வளர்ந்து செம்மைப் பட்ட காலத்தில் தோன்றியவன். நிலப்பிரபுத்துவத்தின் உச்சியில் செயல்படும் ஒரு மைய அரசு. அந்த அரசின் அதிகாரம் அரசனின் கையில்.கம்பனுடைய காலம் அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில் சமுதாயம் ‘ உடையவர்கள், இல்லாதவர்கள்’ என்ற பெரும் பிரிவைக் கொண்டிருந்தது என்பதில் ஐயப்பாடேயில்லை. சங்க காலம் தொடங்கி பன்னிரண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டு முடியத் தமிழகத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருப்பது போன்றே இவ்வேறுபாடு இருந்திருக்கிறது. உடையவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள். இல்லாதவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள் இல்லாதவர்களிலே புலவர்களாக, அறிஞர்களாக இருந்தவர்கள் இந்த உடையவர்களை அண்டி வாழ்ந்திருக்கிறார்கள். உடையவர்களும் எதோ அந்தப் பெருஞ்சொத்துக்கும் தாங்கள் உரிமைக்காரர்கள் என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
பெரும் சொத்துடையவர்கள் அந்தச் சொத்துக்குத் தாங்கள் உரிமையாளர்கள் என்று நினைக்காமல், அதைப் பாதுகாத்துப் பங்கிட வேண்டிய கட்டுப்பாடு உடையவர்கள் என்ற தர்மகர்த்தா முறையில்தான் பழந்தமிழ்ச் செல்வர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கம்பனுடைய காலத்திலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
கம்பனுடைய வரலாறு நமக்குத் தெரியவில்லை. ஆனால், அதே நேரத்தில் தன் காலில் நிற்க முடியாதவனாய், அதாவது அவனுடைய குடும்பம் அவனைத் தனிப்பட்ட முறையில் வாழ வைக்க வாய்ப்பு இல்லாததாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சடையப்ப வள்ளல் என்ற பெரியதொரு பெருமகனை அண்டித் தன் வாழ்நாளைச் செலவிட்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
சடையப்பரைப் பொறுத்தமட்டில் கம்பனை மகனாகவே ஏற்றுக்கொண்டு அற்புதமாக வளர்த்தான் என்பதில் ஐயப்பாடு இல்லை. அந்த நன்றிப் பெருக்கைக் கடைசிவரை கம்பன் மறக்கவும் இல்லை.
கம்பனுடைய அடிமனத்தில் அது உறுத்திதானிருக்கும். அதனால்தான் இந்த எண்ணம் தோன்றி இருத்தல் வேண்டும். ‘தன்னுடைய காலில் நிற்கமுடியாமல் தன்னுடைய குடும்பத்தார் தன்னைத் தனிப்பட்ட முறையில், சுதந்திரமாக வாழவைக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தானே சடையப்பனைப் போன்ற வள்ளலை அண்டியிருக்க வேண்டியிருக்கிறது’ என்ற மன நெருடல் ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? உடையார், இல்லார் என்ற இரண்டு பெரும் பிரிவாகச் சமுதாயம் அமைந்திருந்ததுதான் காரணம்.
இந்த நினைவு ஆழமாகப் பதியப் பதியப் பெரும் கவிஞனாகிய அவன், இந்த உடையார் இல்லார் என்கிற வேறுபாட்டோடு கூடிய சமுதாயத்தில் வாழும்போதே, ‘இதெல்லாம் இல்லாத ஒரு சமுதாயம் இருந்தால் எப்படி இருக்கும்’ என்ற கற்பனையில் திளைத்திருக்க வேண்டும். கம்பநாடன் இவற்றுக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்று நினைத்தான் போலும். அப்படி அவன் கனவு கண்டதனுடைய விளைவுதான் நாட்டுப் படலத்தில் அவன் அமைத்திருக்கின்ற சமுதாயம்.
அது மட்டுமன்று. இப்படி ஒரு கற்பனை நாட்டைப் பாடுவதன் மூலம் பின்னே வளர்ந்து வருகின்ற சோழப் பேரரசு சமுதாயத்தை அமைக்கும்போது உடையார்-இல்லார் வேறுபாட்டை மிகுதிப்படுத்தாததாய் இருக்க வேண்டும் என்று அவன் கருதியிருத்தல் கூடும்.
இந்தப் பெருங்காப்பியம் ஒரு கலங்கரை விளக்கமாக நின்று சமுதாயம் எப்படி அமைய வேண்டுமென்று மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற ஆசானாகவும் அமைந்திருக்கிறது.
காப்பியத்தினுடைய பல்வேறு பணிகளில் அறிவுறுத்தல், பயிற்றுவித்தல் முதலான கடமைகளும் இருக்கின்ற காரணத்தினால், தன்னுடைய காப்பியத்தில் தொடக்கத்திலேயே இதனைச் சொல்வதன் மூலம் சோழப் பேரரசில் எப்படிச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதைக் கவிஞன் கற்பனை மூலம் கண்டான் என்று நினைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை.
காப்பியத்தினுடைய பல்வேறு பணிகளில் அறிவுறுத்தல், பயிற்றுவித்தல் முதலான கடமைகளும் இருக்கின்ற காரணத்தினால், தன்னுடைய காப்பியத்தில் தொடக்கத்திலேயே இதனைச் சொல்வதன் மூலம் சோழப் பேரரசில் எப்படிச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதைக் கவிஞன் கற்பனை மூலம் கண்டான் என்று நினைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை.
15, 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் மூர் (1477-1535) ‘உட்டோப்பியா’ (UTOPIA) என்ற பெயரில் ஒரு கற்பனை நாட்டைப் படைக்கிறார். ‘உட்டோபியா’வில் ஒரு நகர அமைப்பு,. அந்நகரில் வாழ்கின்ற உழவர், தொழிலாளர் முதலியோர் வாழ்க்கை முறை, நீதி பரிபாலனம், ஒருவருக்கொருவர் நட்புக் கொண்டு வாழுமியல்பு, பிறரிடம் அம்மக்கள் கொள்ளும் உறவுமுறை போல்வனவற்றைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். இவர் (தாமஸ் மூர்) எந்த அளவு கம்பனைப் பின்பற்றிச் செல்லுகிறார் என்பது கற்று மகிழ வேண்டிய பகுதி.
வண்மை யில்லையோர் வறுமை யின்மையால்
திண்மை யில்லைநேர் செறுநற ரின்மையால்
உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்
ஒன்மை யில்லை கேள்வி யோங்கலால்.
“கொள் வாரிலாமை கொடுப்பார்களுமில்லை மாதோ” என்பது போல் கோசல நாட்டில் ஈகையின் பெருமைத் தெரியாது காரணம் வறுமையில்லை. வீரத்தின் பெருமைத் தெரியாது ஏனெனில் பகைவர்களேயில்லை. அதே போல உண்மை என்று யாருக்கும் தனியாகத் தெரியாது பொய்யுரையிலாமயால் என்கின்றான். அடுத்து
கூற்ற மில்லையொர் குற்றமி லாமையால்
சீற்ற மில்லை தம் சிந்தையிர் செம்மையால்
ஆற்ற நல்லற மல்ல திலாமையால்
ஏற்ற மன்றி யிழித்தக் வில்லையே.
சட்டங்களோ தண்டனை களோ சிறைச்சாலைகளோயில்லை, குற்றங்கள் இல்லாமையால்; யாரும் கோவப்படுவதில்லை: அவர்கள் எண்ணங்கள் செம்மையாக இருப்பதால்; நல்ல அறச் செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால் மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை. கூற்ரம் என்பதை யமனுக்கு என்ச் சொல்லி அங்கு அல்ப ஆயுசில் யாரும் இறப்பது இல்லை யாரும் தவறு செய்யாத காரணத்தால் என்ப் பொருளுரப்ப்தும் உண்டு.
இதையெல்லாம் விஞ்சி
கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்வி முற்ற
வல்லரு மில்லை யவைவல்லரல் லர்ருமில்லை
எல்லாரு மெல்லாப் பெருஞ்செல்வமு மெய்த லாலே
இல்லாரு மில்லை யுடையார்களு மில்லை மாதோ.
‘நிழலினருமை வெயிலில் அடிப்பட்டவர்க்கே தெரியும்” என்றபடி கல்வி, பொருள் என்ற இவை இல்லாதவரிருந்தால், அந்த கல்வி, செல்வம் என்றவற்றைப் பெற்றவர்களின் அருமை தெரியும். இந்நகரிலோ ஒவ்வொருவரும் கல்வி செல்வங்களைப் பெற்று உயர்ந்திருந்த்தால் “இவர் முற்றக்கற்ற கல்வியாளர், இவர் செல்வந்தர் “ என்று உயர்த்தி ஒருவரை சொல்ல முடியாதென்கின்றான்.
இவ்விடத்திலும் முதலிடம் கல்விக்கேயன்றி செல்வத்திற்கு இல்லை. செல்வத்தை ‘பொருந்த செல்வம்” (ஈகையுணர்வுடன் இருப்பவரிடத்தில் உள்ள நேர் வழியில் வந்த செல்வம்) என்று பிறிதொரு இடத்தில் கூறுவதையும் நினைத்திட வேண்டும்.
கொடுப்பவர், இரப்பவர், கற்றவர். கல்லாதவர்,கூற்றம், குற்றம் சீற்றமில்லா சமச்சீர் சமுதாயமுள்ள கோசல நாட்டின் வயல்கள், கிராமங்கள் இதைத் தாண்டி அயோத்தியா எனும் பெரும் நகருக்குள் புகுவதற்காக கோட்டை வாசலையடைகின்றோம்.
தொடரும்
No comments:
Post a Comment