என்னுடன் சீஏ படித்த நண்பன் அனில் குமார் ரெட்டி: ஆந்திரா மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம். அவன் சீஏ பரிட்சையே எழுதவில்லை. ஒய் எம் சி ஏ ஹாஸ்டலில் தங்கி சீஏ படித்துக் கொண்டிருந்தான். அப்போது வெளியூரில் இருப்பவர்கள் அல்லது சென்னையில் இருப்பவர்களே கூட தபால் மூலமாகவோ அல்லது சென்னையில் இருப்பவர்கள் தென்னிந்திய சீஏ சங்கத்தில் நேரிடையாகச் சென்றோ பரிட்சை எழுதுவதற்கு இருக்கும் "மாதிரி வினாத்தாளை" எழுத வேண்டியது, பரிட்சை எழுதுவதற்கு (இண்டர் மற்றும் பைனல்) மிக அவசியம். மாதிரி வினாத்தாள் பரிட்சை எழுதுவதற்கு ரெட்டி வந்தாலே அவனுடைய வரதட்சினை அந்த கால கணக்குப் படி ஒரு லட்சம் கூடிவிடும். அடுத்த ஜன்மத்திலாவது ஆந்திரா ரெட்டியாகப் பிறக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். என வயத்திரிச்சலை கிளப்புவதற்காகவே இவன் என் மனைவி இருந்த அதே காலனியில் குடியிருந்தான்.
என்னுடைய சீனியர் இராமசாமி. நாட்டுக் கோட்டை செட்டி. அவனுடைய அப்பாவும் சீஏ. இவன் வீடு மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரிக்கு வெகு அருகில். இவன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அப்பா இறந்து விட்டார். அப்போது மிகப் பிராபல்யமான ஒரு அய்யஙகார் ”உபாத்தியாயா” (அவர் சீ ஏ பரிட்சை மாணவர்களுக்கு வருமானவரி பாடம் நடத்துவார். பஞ்சகச்சம், காதில் கடுக்கன் மற்றும் தலைபாகையுடன் தான் தினமுமே வருவார்). அவர் அவனுடைய அப்பாவின் வாடிக்கையாளர்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இவன் சீஏ படிப்பை முடித்ததும் இவனிடமே ஒப்படைத்தார்.
இவனுடைய கல்யாணம் தேவகோட்டையில் நடந்தது. வரதட்சினை பணம் மட்டும் 25 லட்சம். அது மட்டுமின்றி 250 பவுன் வெறும் தங்க நகைகள். வைர வகையறாக்கள் தனி. 50 தலையனை, 50 போர்வை, 50 ஜமுக்காளம், பெண்ணுக்கு கணக்கில்லாத அளவுக்கு புடவை என்று (என் தோழி ஒருத்தி கணக்கெடுத்தாள். தினம் ஒரு புடவை கட்டினாலும் ஐந்து வருடத்திற்கு அந்த புடவைகள் வரும் என்று.) ஒரு அறை முழுக்க வெள்ளி சாமான்கள், இன்னொரு அறை முழுக்க பித்தளை சாமான்கள் என்று என் நண்பர்கள் அனைவருக்குமே தலை சுற்றியது. அன்று ”ரெட்டியாகும்” ஆசையை விட்டு விட்டு ”நாட்டுக் கோட்டைச் செட்டி” ஆக அடுத்த ஜன்மத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
என் கல்யாணம் நடந்தது 1989 ஆகஸ்ட் 27 ஆம் தேதி. அன்று ஞாயிற்றுக் கிழமை. மாலை தூர்தர்ஷனில் “ மௌன ராகம்” திரைப்படம். அதற்கு முந்தைய வியாழக்கிழமையே அத்தைகள், சித்தப்பாக்கள், மாமா மற்றும் மாமி என வெளியூரிலிருந்து வருபவர்களால் வீடு நிரம்பி வழிந்தது. நாங்கள் ஒன்றும் நிரம்ப ஆசாரம் பார்பவர்கள் இல்லையென்றாலும் சமையலுக்கு எல்லாம் ஆள் வைக்கவில்லை. எல்லாமே அம்மா, மன்னி, சித்திகள் அத்தைகள் என்று இவர்களே எல்லாவற்றையும் செய்தனர். இன்றிருப்பது போல் 30- 35 பேருக்கு சாப்பாடு வரவழைக்க முடியவில்லை. இப்போதிருப்பது போல் அன்றைக்கு அதற்கு ஆள் இல்லை. ”சமையல்கார மாமியை வைச்சுண்டு அவாளுக்கு சுத்து வேலை செய்யறதுக்கு, நம்பளே செஞ்சு முடிச்சிடலாம்” என மன்னி அன்று கூறுவார். இந்த மாதிரி மூன்று நாள் விசேஷங்களுக்குக் கூட என் மாமா நாராயணன் கொத்தாவால் சாவடிப் போய் பெரிய மூட்டையில் காய்கறி வாங்கி கொண்டு வருவான்.
கல்யாணத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை சுமங்கலி பிரார்தனை. ஏழு சுமங்களிகள் இல்லை ஒன்பது சுமங்கலிகள் மடியாக கொசம்புடவை கட்டிக் கொண்டு அமருவர். நிச்சயம் தேவை ஒரு கன்யா பெண். அன்று ஒரு நாள் மகளிர் முதலில் சாப்பிடுவார்கள். ஆனால் அதற்கு முன் எல்லா சமையல் வேலையையும் முடித்து விட்டிருக்க வேண்டும். வெளியூரிலிருந்து வந்து நம் வீட்டிலேயே தங்கியிருந்தால் பிரச்சினை ஒன்றும் இல்லை. உள்ளூரிலிருந்தால் அவர்கள் வீட்டிற்கு முதல் நாள் போய், வெற்றிலை தாம்பூலத்துடன் சீயக்காய் மற்றும் எண்ணையும் கொடுத்து அடுத்த நாள் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அழைத்து வரவேண்டும்.
எங்கள் வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு கடலைப் பருப்பு வடையும் பருப்பு வெல்லப் போளியும் பண்ணுவார்கள். தூங்கி எழுந்து பிறகு பெரிய அத்தைகளிருவரும் நல்ல பெரிய தோசை தவா விளிம்பு வரையும் போளி இடுவர். நெய்யும் வெல்லமும், கடலைபருப்பும் சேர்ந்து வேகும் போது எழும், மணத்தின் சுவையறிய வேண்டுமென்றால், மேற்கு மாம்பலத்தில் உள்ள ”வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்லுக்கு” விஜயம் செய்யுங்கள்.(இதுதான் ஒரிஜினல். நிறைய இடத்தில் இதே பெயரில் கடைகள் நடக்கின்றன என்ற போதும் இவர்களுக்கு வேறு எந்த கிளையும் கிடையாது. ). அன்றைக்கே கூட அத்தைகளிருவரையும் வைத்து ஒரு கடை திறந்திருந்தால் அமோகமாக போயிருக்கும். அப்போதெல்லாம் எனக்கு இந்தளவுக்கு வியாபார எண்ணங்கள் இருக்கவில்லை.
எங்கள் வீட்டில் பண்டிகைநாட்களில் பண்ணப்படும் வெறும் கடலைப் பருப்பு வடைகள் ”மாரடைப்பான்” என்ற வகையில் வகைப்படுத்தி சுவாமி பிரசாதம் என்ற அளவில் ஒரு சிறு வில்லையை மட்டும் சாப்பிடுவோம். மீந்திருக்கும் வடை மாவில் அம்மா வெங்காயம் போட்டு மசால் வடை தட்டி பாணலியில் போட்டபடியிருப்பாள். அம்மா வாணலியிலிருந்து எடுத்து போடுவதற்குள் வடைகள் மாயமாகிவிடும்.
கல்யாணமாகி வீட்டிற்கு வந்த வருடம் வரலக்ஷ்மி நோன்பின் போது பூஜையெல்லாம் முடிந்த பிறகு மன்னி வெங்காயம் நறுக்குவதைப் பார்த்து அதி ஆச்சாரமான குடும்பத்திலிருந்து வந்த என் மனைவி பொறுக்கமுடியாமல் மன்னியிடம் “ எதற்கு வெங்காயம் நறுக்குறிங்க?” என மன்னி மசால் வடை பண்ணத்தான் எனவும் “ஏன் வெறும் கடலை பருப்பு வடைய சாப்பிட மாட்டாளா” என்றதற்கு என் அம்மா “பண்டிகையில் பட்சணம் பண்ணுவதே பசங்க சாப்பிடுவதற்காகத்தான். பெரியவா வேணுன்னா சாப்பிடட்டும் இல்லையா சாப்பிடாத இருக்கட்டும். பசங்க பிடிச்சு சாப்பிட்டா அதுதான் பிராசாதத்துக்கு மரியாதை” என சொல்லி பேசமுடியாமல் செய்துவிட்டார். அன்று என் மனைவிக்கு சந்தேகமே வந்துவிட்டது என் ஜாதியின் மேல்.
நெருங்கிய உறவினர்கள் சுமங்கலிப் பிரார்த்தனையன்றே பொங்கிடுவர் காலில் நலங்கு தீட்டி எண்ணைய் தேய்த்துக் குளித்து, புது வேஷ்டி சட்டை அணிந்து பெரியவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் வாங்க அவர்கள் பேண்ட், ஷர்ட் இல்லை பணமோ ஆசிர்வாதம் செய்வர். நான் முதலிலேயே எல்லோரிடமும் ஜரூராக ”அநாவசியமா ஷர்ட் பேண்ட் வாங்கி வேஸ்ட் பண்ணாம பணமா குடுத்துடுங்கோ. நானே பாத்து பார்க் அவின்யூவில வாங்கிக்கிறேன்”. அப்போதெல்லாம் மலிவு விலை ”எஸ். குமார்” ஷர்ட் கடைகள் ரொம்ப பிரசித்தம். அண்ணாநகரில் வீட்டிற்கு அருகிலேயே ஒன்று இருந்தது.
சனிக்கிழமை ஸ்வாமி சமாராதனை. குலதெயவத்திற்குப் பூஜை செய்துவிட்டு நேர்ந்து கொண்டு சத்திரம் கிளம்புவது. வீட்டிலிருக்கும் வெங்கடாசலதி அலமேலு மங்காத் தாயார் அவர்களின் படங்களை வைத்துப் பூஜை செய்து, மஞ்சள் துணியில் சுவாமிக்கு ஒரு ரூபாய் கட்டி சுவாமி உண்டியலில் போட்டுவிட்டு, யாத்ரா தானம் கொடுத்து விட்டு, ஸ்வாமி படங்களையும் எடுத்துக் கொண்டு பின் மதியம் சத்திரம் போவதற்குத் தயாரானோம்.
எங்கள் அண்ணாவின் கார் இருந்தது என்றாலும் அவர்கள் வீட்டில் இருந்து ஏனோ மூன்று கார் மற்றும் ஒரு வேன் ஏற்பாடு செய்திருந்தனர். அப்பாதான் தம்பி கல்யாணத்திற்கு தன் சொந்த செலவில் பஸ் ஏற்பாடு செய்தார். என்னை அழைத்துப் போக அவர்கள் வீட்டிலிருந்து அண்ணா நகர் வந்தவர் என் மாமானார் வீட்டின் ஒரே மாப்பிள்ளை மற்றும் அவருடைய மைத்துனர்கள் மூவர்.
எல்லோரும் ஒரே சமயத்தில் கிளம்பிப் போய் சேர்ந்தோம். போயிறங்கியவுடன் சின்ன மாலையணிவித்தனர். அப்பா எல்லோரையும் அவர்கள் வீட்டின் பெரியவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு வேனில் வந்த சாமான்களையெல்லாம் இறக்கி எங்கள் அறைகளில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் அறைகளுக்கு சென்றோம். மனைவியின் தம்பி மற்றும் சித்தப்பா மகன்கள் எல்லா சாமான்களையும் மூச்சிரைக்கக் கொண்டு வந்து வைத்தனர். எல்லாருமாக சென்று சாப்பாட்டு அறையில் அமர்ந்து காசி அல்வா, உருளைக் கிழங்கு போண்டா மற்றும் ரவா உப்புமா சாப்பிட்டு சாயந்திரம் ஜானவாசத்திற்காக தயாராகச் சென்றோம்.
தசரதனின் சேனை புறப்பட்டு வருகின்றது. கம்பன் கூறுவது போல் தசரதன் இன்னும் எழுந்திருக்கவில்லை. அதற்குள் அவன் சேனை மிதிலை நகரின் வாசலையடைந்தது. எதிர் கொண்டு அழைத்து அவர்களுக்குறிய முறையில் வரவேற்று உபசரித்து அனைத்தும் இன்றைக்குப் போலவே, அன்றைக்கும் செய்வது வழக்கமாகவிருந்தது.
கப்புடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற
துப்புடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கிக் காட்ட
அப்புடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த
உப்புடைக் கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே.
பாதாளலோகம் வரையில் ஆழமுள்ள எப்போதும் நீர் வெள்ளம் கடலிற் சென்றுசேரும் தன்மையுடைய பெரிய கங்கா நதியானது தசரதன் சேனையில் உள்ள யானைகளும், குதிரைகளும் வீரர்களும் இளைப்பாறும் பொருட்டு அந்நீரை பருகவே நதியில் நீர் குறைந்து மணல் தோன்றி கங்கா நதி அப்போது கடல்சென்று சேராமல் போனது என சொல்லுவதன் மூலம் தசரதனின் சேனை மிகுதியை கூறும் நயம் மிக அருமை. சதாரண உலகில் இயல்பில் நடக்கக்கூடிய ஒரு விஷயத்தைக் கம்பன் போன்ற மாபெரும் கவி கவனித்து அதையே தாம் சொல்ல வந்த விஷயத்தைக் கூறுவதற்கு எடுத்தாண்டால் நமக்கு கிடைப்பது இத்தகைய அருமையான கவிகள்.
கப்புடை நாவின் நாகர் உலகமும் – இரண்டாகப் பிளவுப்டுதலையுடைய நாகலோகத்தவர். கருடபகவானின் தாய் விந்தை தன் சக்களத்தியான கத்துருவினிடத்து அடிமை பூண்டிருந்ததை ஒழிப்பதற்கு அமிர்தக் கலசத்தினின்று சிந்தின அமுதத்தை நக்குகையில், கலசத்தை வைப்பதற்கு பரப்பிய தர்பைகளினாற் கீறப்பட்டு, கத்துருவின் மக்களான நாகக்ங்களின் நாக்கு ஆதியில் பிளவுப் பட்டது என்பது புராணம். இதே போல் இப்போது மனிதர்களிடத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்று சற்று சிந்தித்தால் ஒர் விந்தையான திரைக்கதையமைக்கலாம் தமிழக அரசியல் சூழ்நிலைகளை மட்டும் வைத்து.
‘வந்தனன் அரசன்’ என்ன. மனத்து எழும் உவகை பொங்க.
கந்து அடு களிறும். தேரும். கலின மாக் கடலும். சூழ
சந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற.
இந்திரதிருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான்.
கந்து அடு களிறும். தேரும். கலின மாக் கடலும். சூழ
சந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற.
இந்திரதிருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான்.
சூரிய குலத்துத் தசரதனை, சந்திர குலத்துச் சனகன் வரவேற்க வருகின்றான் ஆதலின். “சந்திரன் இரவிதன்னைச் சார்வதோர் தன்மை தோன்ற” என அழகுறக் கூறினார். தசரதனை “இந்திரன்” என முந்தைய சில கவிகளிலும் உவமிப்பார் கம்பன்.
தா இல் மன்னவர்பிரான் வர. முரண் சனகனாம்
ஏ வரும் சிலையினான். எதிர் வரும் நெறி எலாம்.
தூவு தண் சுண்ணமும். கனக நுண் தூளியும்.
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடிஎலாம்.
ஏ வரும் சிலையினான். எதிர் வரும் நெறி எலாம்.
தூவு தண் சுண்ணமும். கனக நுண் தூளியும்.
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடிஎலாம்.
”குற்றமில்லாத மன்னர்க்கு மன்னனான தசரதச் சக்கரவர்த்தி தனது நகரத்திற்கு வருவதால் சனகராஜன் எதிர் கொண்டு அழைத்துவர உள்ள வழிகள் முழுவதும் மங்கல நிகழ்ச்சிகளில் மேலே தூவப்படுகிற குளிர்ச்சி தரும் வாசனைப் பொடிகளும் (அணிகளின் உராய்வினால்) சிந்துகின்ற) பொன்னாபரணங்களின் நுட்பமான பொற் பொடிகளும் மலர்களிலிருந்து சிந்துகிற மெல்லிய மகரந்தப் பொடிகளும் ஆகிய இவையே (சிந்திய) பல்வகைத் தூசுகள் ஆகும்” என்கின்றார் கவி. பொதுவாக உலகில் எளியவையே தூசு எனப்பட அங்கு மதிப்பு மிக்கவையே தூசுகள் ஆயின எனக் கூறுவதால் ஜனகனின் செல்வச் செழிப்பை சொல்லாமலேயே புரிய வைத்தது மிக்க அழகு.
பொதுவாக ஒரே காலனியிலிருந்தாலும் எக்ஸ்னோராவிற்கு மாதம் 15 ரூபாய் கூடத் தராமல் ஏமாற்றுவர் கூட பெண் திருமணத்திற்காக ஒரு இலைக்கு ரூ 1200 என்றாலும் காலனியில் உள்ளவர்கள் அனைவரையும் அழைப்பது எல்லாமே செல்வ செழிப்பை தம்பட்டம் அடிப்பதற்காகத்தானே என்ற எண்ணம் உண்டாகியது இப்படாப் படித்த போது.
கந்தையே பொரு கரிச் சனகனும். காதலோடு
உந்த. ஓத அரியது ஓர் தன்மையோடு. உலகு உளோர்
தந்தையே அனைய அத் தகவினான் முன்பு. தன்
சிந்தையே பொரு. நெடுந் தேரின் வந்து எய்தினான்.
உந்த. ஓத அரியது ஓர் தன்மையோடு. உலகு உளோர்
தந்தையே அனைய அத் தகவினான் முன்பு. தன்
சிந்தையே பொரு. நெடுந் தேரின் வந்து எய்தினான்.
உலகீன்ற பரம் பொருளை உலகுக்கு ஈன்று தந்தவன் ஆனதனாலே தயரத மன்னன். உலகோர் அனைவர்க்கும் தந்தையாகும் தகவுடையோன் என்று நினைவூட்டுகின்றார். மூவுலகும் ஈன்றானை முன் ஈன்றான் ஆதலின் “மூவுலகுளோர் தந்தையே அனைய அத் தகவினான்” என்றார். வாயு வேகத்திலும் சிறந்தது மனோ வேகம் ஆதலின். “தன் சிந்தையே பொரு நெடுந்தேர்” எனத் தேரின் ஒப்பற்ற விரைவு குறித்து கூறும் கவி, பொதுவாக உலகத்தார்க்கு “ “மகன் அறிவு தந்தை யறிவு” (நாலடி 367) ஆதலின்
தந்தையே யனைய என்றார் என எண்ணும் போதே “As father so is The Son" எனும் ஆங்கில சொலவடை ஞாபகத்திற்கு வந்தது. பெண்களைப் பொறுத்தவரைல் “ தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை” எனும் பழமொழி கேட்டிருந்தாலும் இது தான் நான் முதல் தடவை மகன் அறிவு தந்தை யறிவு” பற்றிக் கேள்விப்படுவது நான் கேட்டதெல்லாம் “ வாத்தியார் பிள்ளை மக்கு, டாக்டர் பிள்ளை நோயாளி” என்பதுதான்.
தந்தையே யனைய என்றார் என எண்ணும் போதே “As father so is The Son" எனும் ஆங்கில சொலவடை ஞாபகத்திற்கு வந்தது. பெண்களைப் பொறுத்தவரைல் “ தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை” எனும் பழமொழி கேட்டிருந்தாலும் இது தான் நான் முதல் தடவை மகன் அறிவு தந்தை யறிவு” பற்றிக் கேள்விப்படுவது நான் கேட்டதெல்லாம் “ வாத்தியார் பிள்ளை மக்கு, டாக்டர் பிள்ளை நோயாளி” என்பதுதான்.
கந்து - யானை கட்டுந்தறி. அதனை முறிக்கும் திறல் வாய்ந்த யானைப் படைக்குடையவன் சனகன்
எய்த. அத் திரு நெடுந் தேர் இழிந்து. இனிய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க. முன் சேறலும்.
கையின் வந்து. ‘ஏறு’ என. கடிதின் வந்து ஏறினான்;ஐயனும். முகம் மலர்ந்து. அகம் உறத் தழுவினான்.
மொய் கொள் திண் சேனை பின் நிற்க. முன் சேறலும்.
கையின் வந்து. ‘ஏறு’ என. கடிதின் வந்து ஏறினான்;ஐயனும். முகம் மலர்ந்து. அகம் உறத் தழுவினான்.
சேனை பின் நிற்கச் சனகன் முன் செல்லலும் தயரதன் கையால் சைகை காட்டித் தேர் ஏறச் செய்தலும் முகமும் அகமும் மலர இருவரும் தழுவுதலும் ஒரேபாடலில் சொல் ஓவியப் படிவம் ஆக்கியிருத்தல் சுவைத்து மகிழ வேண்டியவொன்று அக்காலத்து விருந்தினராம் வேந்தரை வரவேற்கும் ஒழுங்காசாரம் தெளிவுறச் சுட்டப்படலும் உணரலாம். “கையின் வந்து ஏறு” என்பதற்கு கைகொடுத்து வந்து ஏறுக
என்றான் என்றும் பொருளுரைக்கலாம்.
என்றான் என்றும் பொருளுரைக்கலாம்.
“முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம்” எனும் குறளுக்கிணங்க “ஐயனும் முகம் மலர்ந்து அகம் உறத்தழுவினான்” என்கின்றார் கவி.
எனையழைத்துப் போவதற்காக வந்திருந்த என் மாமானார் வீட்டின் ஒரே மாப்பிள்ளை என்னை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி” எப்படி பாலு ஒரு சார்ட்டர்ட் அக்கவண்டண்டுக்கு அதுவும் பிராக்டீஸ்ல இருக்கறவனுக்கு பொண்ணைக் கொடுத்தான்?” இவர் சென்னை எம் ஐ டீயில் எஞ்சினீயரிங் படித்து சொந்தமாக தொழில் நடத்துபவர். கூட வந்திருந்த மாமா அவரும் சார்டட் அக்கவ்ண்டன்ட். பெங்களூரில் பிராக்டீஸ் பண்ணுபவர். ”எஞ்சினியரை விட சீஏ மேல் என பார்த்து தெரிஞ்சிண்டிருப்பார். சும்மா வுடுங்க” அதற்கப்புறம் தான் தெரிந்தது என் மாமனார் எஞ்சினியரிங் தவிர வேறு எதையுமே அறியாதவர் என்று.
இன்னவாறு. இருவரும். இனியவாறு ஏக. அத்
துன்னு மா நகரின்நின்று எதிர்வரத் துன்னினான்-
துன்னு மா நகரின்நின்று எதிர்வரத் துன்னினான்-
தன்னையே அனையவன். தழலையே அனையவன்.
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான்.
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான்.
இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக என்பது கொண்டு தசரதனும் ஜனகனும் ஒரு தேரின் மீதே மிதிலை வந்தடைந்தனர் என தொனிப் பொருளுரைப்பர். இராமன் வில்லையுடைத்ததால்தான் தசரதன் வருகை நிகழ்ந்ததாகையால் ” சிலை இறப்புயம் நிமிர்ந்து அருளினான் என அதனையே இராமனுக்கு அடையாக்கினார். வில் ஒடித்த புஜத்தைக் காட்டியவாறே தந்தையை வரவேற்க இராமன் வந்தான்.
‘கோல் வரும் செம்மையும். குடை வரும் தண்மையும்சால் வரும் செல்வம்’ என்று உணர் பெருந் தாதைதன்.
மேல் வரும் தன்மையால். மிக விளங்கினர்கள். தாம்-
நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார்.
நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார்.
உலகத்தில் பிள்ளைகளால் சிறப்புப்பெருமை தந்தையர்களும், தந்தைகளால் சிறப்புறும் மைந்தர்களும் பலரிருக்கின்றார்கள். அவ்வாரில்லாமல் தசரதனது பெருமைக்கு ஏற்ற குமாரர்களும், குமாரர்களின் தகுதிக்கு ஏற்ற தந்தையுமாக விளங்கினர்.
சான்று எனத் தகைய செங் கோலினான். உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்.
‘ஆன்ற இச் செல்வம் இத் தனையும் மொய்த்து அருகு உற’தோன்றலை. ‘கொண்டு முன் செல்க!’ எனச் சொல்லினான்.
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்.
‘ஆன்ற இச் செல்வம் இத் தனையும் மொய்த்து அருகு உற’தோன்றலை. ‘கொண்டு முன் செல்க!’ எனச் சொல்லினான்.
தயரதனை “தாய் ஒக்கும் அன்பில்” என்பார் முன்னும். செங்கோல் தசரதனைப் போல் செலுத்தவேண்டும் என்னுமாறு ஆண்டான் ஆதலின் “சான்று எனத்தகைய செங்கோலினன்” என்றார். ” வையகம் முற்றும் வறிஞன் ஓம்பு மோர் செய்எனக் காத்து இனிது அரசு செய்தவன் அவன்” . ஆதலின் இல்லறத் திருவை ஏற்க இருக்கும் இராமனுக்கு ஏற்ற தருணம் எனக்கருதி அரச திருவை எங்ஙனம் கொண்டு செல்ல வேண்டும் எனத் தந்தை மகனுக்கு உரைத்த அருமையான வாசகங்கள் இவை.
பேதைமார் முதல் கடைப் பேரிளம் பெண்கள்தாம்.
ஏதி ஆர் மாரவேள் ஏவ. வந்து எய்தினார்.
ஏதி ஆர் மாரவேள் ஏவ. வந்து எய்தினார்.
ஆதி வானவர் பிரான் அணுகலால். அணி கொள் கார்
ஓதியார் வீதிவாய் உற்றவாறு உரைசெய்வாம்.
பரம பத நாதன் கைக்கெட்டுந் தூரத்தில் வந்துள்ளான் ஆதலின் ஆன்ம நாயகனைத் தரிசிக்க அத்துணைப்பருவ மங்கையரும் தெருவில் நின்றனர் என்க. உயிர்கள் ஆன்ம நாயகனிடத்தில் வேட்கை கொள்ளுதல் கற்பு வழு அன்று என்பது தோன்ற “ஆதி வானவர்பிரான் அணுகலால்” என்றார். எழுவகைப் பருவ மங்கையர்: பேதை (5-7) ;பெதும்பை (8-11) ; மங்கை (12-13) ; மடந்தை (14-19) ; அரிவை (20-25) ; தெரிவை (26-31) ; பேரிளம் பெண் (32-40). இவர்களும் தாமாக வரவில்லை ”அழியா அழகன் வீதிவந்தடைந்துள்ளான் போய் கண்பெற்ற பயன் கொள்ளுங்கள்” என்று மன்மதன் செலுத்த வந்துள்ளனர் என்பார். “மாரவேள் ஏவ வந்து எய்தினார்” என்றார். அடுத்து வரும் படலத்திற்குத் தோற்றுவாயும் செய்தார்.
ஓதியார் வீதிவாய் உற்றவாறு உரைசெய்வாம்.
No comments:
Post a Comment