Friday, May 25, 2012

திருக்கல்யாணம்

என் திரும மூகூர்த்தம் கொஞசம் லேட் என்பதால் நிதானமாக எழுந்திருக்க முடிந்தது. சத்திரத்தில் குழாயில் தண்ணீர் வரவில்லை. அதை ஏற்பாடு செய்வதற்குள் காமாக்ஷி அத்தை "நாயனகாரார் வரனும். மங்கள இசையோடுதான் மாப்பிள்ளை எண்ணை தேய்ச்சுக்கணும் ஒரு வழியாக அத்தை என் கால்களுக்கு நலங்கிட்டு தலையில் எண்ணைத் தடவ, சுமாரகவிருந்த அந்த சத்திர பாத்ரூமில் வழுக்கி விழாமல் மங்கள நீராடி முடித்தேன். என் மனைவியோ சத்திரத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற விதியை முறித்து சத்திரத்திற்கு அருகிலிருக்கும் அவர்கள் சொந்தகாரர் ஒருவர் வீட்டிற்கு குளித்து வருவதற்கு சென்று விட்டார்.


குளித்தவுடன் நன்றாக டிபன் சாப்பிட்டுவிட்டு  ஒரு எட்டு முழம் வேஷ்டி ஷர்ட் அணிந்து கொண்டு மண்டபத்தையடைந்தேன். ஷர்ட்டை கழற்றி விட்டு “விரதம் ஆரம்பித்தது. இனிமேல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது தான் என சொல்லாமல் சொல்வது போல், விரதம் பண்ணும் போது நடுவில் வேஷ்டியால் கண்ணை மூடுவர்.  
எங்கள் குடும்பத்தில் எல்லோருமே அடிக்கடி காபி குடிப்பவர்கள். எங்கள் குடும்ப சாஸ்திரிகள் இதனை நன்றாகறிந்தவர். எங்களுக்கு வசதியாகயிருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஷார்ட் கமர்ஷியுல் பிரேக் விட்டுவிடுவார். பழங்காலத்தில் விரதத்தின் போதும் மூகூர்த்தம் முடியும் வரைக்கும் மமகன் மற்றும் மமகள் அவர்கள் பெற்றோர் சாப்பிடக் கூடாது. காலை டிபன் கூட இவர்களுக்கு இல்லை, வந்திருக்கும் உறவினர்களுக்கு மட்டுமே. நல்லவேளை இதையெல்லாம்  எங்கள் குடும்பம் நிராகரித்து ஆண்டுகள் பலவாகிவிட்ட. இதற்கு நிச்சயமாக என் தாத்தா அப்பா உட்பட குடுமபத்தினர் அனைவருக்குமே பசி வேளை தவறிப் போய்விட்டால் வரும் கடும் தலைவலி, அந்த எரிச்சலில் வரும் கோபம் அதன் காரணமாக மற்றவர்களை “வள்என்று பிடிங்கிவிடும் குணம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இந்த கொடுமை போறாது என்று அன்றிரவு வெள்ளித் தட்டில் பால் சாதம்தான் 
சாப்பிடவேண்டும். என் பார்ட்ர் ஜேவீயின் திருமணத்தின் போது கூட அவர்கள் இருவரும் அதை முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு சிறிது நேரம் கழித்து மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். என் நாக்பூர் சித்தி பசங்கள் தயிர் சாதத்திற்கு சர்க்கரை, சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.  என் அம்மாவிடம் அவர்களுடன் சேர்ந்து எனக்கு சாதம் போட வேண்டாம் என்று சொல்லி விடுவேன். எங்கள்: வீட்டிலோ மூன்று சாதத்திற்கும் கறி(பொரியல்) இருந்தாலும் ஊறுகாய் மிக அவசியம். ஆவக்காய், கசுமாங்காய் மற்றும் எலுமிச்சங்காய் ஊறுகாய்தான் எங்கள் நிரந்தர சைட் டிஷ். கறி இல்லையென்றாலும் எங்களுக்கு பரவாயில்லை. அதே போல் சாப்பாடு “பத்திக்க பத்திக்க சூடாக இருக்க வேண்டும். என் மனைவிக்கோ கறி இல்லாமல் சாப்பிட முடியாது. அதே போல் சூடாகவும் சாப்பிட மாட்டாள். ஊறுகாய் என்பதை கண்ணால் பார்த்தாலே வயிற்றுவலி வந்துவிடும். இவள் கண் பட்டே எனக்கு 5 வருடங்களுக்கு முன் பீபி (BP) வந்துவிட்டது.    .


அத்தைதான் அலங்காரம் செய்ய வேண்டும் மணமகனுக்கு கண்ணுக்கு மையிட்டு கன்னத்தில் திருஷ்டிப் பொட்டுவைத்து கண்ணாடி காண்பித்து என எல்லாவற்றையும்  செய்ய வேண்டும். எனக்கு ஐந்து அத்தைகள். ஆனாலும் பெரிய அத்தைதான் (காமாக்ஷி) செய்ய வேண்டும். சுமங்கலி பிரார்த்தனையிலும் அவருக்கு தான் முதலிடம். ஏன் ஓவ்வொரு கலாயணத்திற்கு ஒரு அத்தை என்று ஒரு ரொட்டேஷன் சிஸ்டமிருந்தால் நன்றாவிருந்திருக்குமோ என எண்ணுவதுண்டு. ஆனாலும் குடும்ப வழக்கத்தை மீற முடியாது.  

அதே போல் இன்னொரு முக்கிய உறவு மாமா மாமி. இவர்கள் தான் அம்மான்” (அம்மா மனையில் உட்காருவதால் அம்மாவின் வீட்டு சீர் வரிசை.) ஆசிர்வதாம் செய்ய வேண்டும். இதிலும் முதல் மாமாவிற்குதான் சிறப்பிடம். மற்றவர்கள் எல்லாம் பங்களிப்பதற்கு மட்டும் தான். என் அப்பா அவர்கள் வீட்டில் முதல் ஆண் மகன் என்பதாலும் அவருக்கு மொத்தம் 21 மருமான்/மருமாள் என்பதாலும் எல்லாக் கல்யாணங்களிலும் மாலை மாற்றுவதற்கும் அம்மான் ஆசீர்வாதத்திற்கும் அப்பா/அம்மாவிற்கு தான் முதலில். இரண்டாவது மூன்றாவது நாலாவது எல்லாமே ஒப்புக்குச் சப்பாணிதான். இயந்திரத்து நடு அரசி போலத்தான்.
விரதம் முடிந்த பிறகு கண்ணைச் சுற்றிய அந்த வேஷ்டியை பஞ்க் கச்சமாகக் கட்டி அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு நண்பர்கள் மற்றும் உறவினருடன் காசியாத்திரை சென்றேன். கையில் ஒரு பனைஓலை விசிறி வேறு.

விசிறியைக் கையில் பிடித்த போது அது எப்பேர்பட்ட பயங்கரமான ஆயுதமாக என் அம்மாவின் கையிலிருந்தது என்பதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. எங்கள் வீட்டில் நான் மற்றும் எனக்கு மூத்த இரு சகோதரகளுக்கும் வயது வித்தியாசம் ஆங்கில காலண்டர் படி இரண்டு வருடம் என்றாலும் தமிழ் மாதக் கணக்குபடி இன்னும் குறைவுதான். வேலூரில் நாங்கள் வசித்து வந்த போது சினிமா மற்றும் எங்கு வெளியே செல்வது என்றாலும் சகோதரர்கள் மூவரும் ஒன்றாகாத் தான் செல்வோம். ஒரு சமயம் என்னை வீட்டில் விட்டு விட்டு இவர்களிருவரும், ஹைதராபாத் சித்தப்பாவுடன் தினகரன் தியேட்டரில் “கிளியோபாட்ரா படம் பார்க்க சென்று விட்டார்கள். அடல்ஸ் ஒன்லி படம் என்றாலும் எஞ்சினீயர் பசங்க அதுவும் ஒரு பெரியவருடன் வந்தால் தினகரன் தியேட்டரில் வயதை பார்க்கமாட்டர்கள். (என் வயது 10க்குள் தான் இருக்கும்) அது அடல்ஸ் ஒன்லி படம் என்ராலும் இவர்கள் பார்க்கும் போது நான் ஏன் பார்க்கக் கூடாது என்பதற்காக கத்தி அமர்கம் பண்ணினேன். என் அம்மா என்னை தன் அருகே அழைத்து, என்னை இறுக்கி பிடித்துக் கொண்டு ஒடமுடியாமல் செய்து, கையில் வைத்திருந்த விசிறி கட்டையால் விளாசித் தள்ளிவிட்டார். முதுகெல்லாம் தழும்பாகிவிட்டது. அடுத்த வீட்டிலிருந்த என் சித்தி வீட்டிற்குப் போய் சித்தப்பா வந்தவுடன் முதுகை காண்பித்து அவர் தேங்காய் என்னை தடவி இங்கேயே இரு என சொல்ல அடுத்த பத்து நாளும் அங்கிருந்தே ஸ்கூலுக்குச் சென்றேன்.

சிறிது தூரம் நடந்து சென்ற பின் மாமனார் மாமியார் இருவரும் வந்து பாத பூஜை செய்து (அன்று மாப்பிள்ளை மஹாவிஷ்ணுவின் அம்சம் என்கின்றது நம் பாரம்பரியம்). காசிக்கு சென்று படித்து  துறவறம் பூணும் உத்தேதிலிருக்கும் மணமகனை இல்லறம் எவ்வளவு சிறந்தது எனக் கூறி தன் மகளையும் கொடுப்பதாகச் சொல்லி அழைத்து வந்து இருவரும் மூன்று முறை எங்கள் தோளிலணிந்திருக்கும் மாலைதனை மாற்றி, ஊஞ்சலில் அமர்ந்தோம். நெருங்கிய இருவீட்டு உறவினர்களும் பால் பழம் கொடுக்க அதை உடனேயே சாப்பிட்டு கையை துடைத்துக் கொள்ள ஒரு டவலையும் வைத்திருந்தோம். சுமங்கலிகள் கண் திருஷ்டிக் கழிக்க மண்டபத்தில் போய் அமர்ந்தோம்.

பையனுக்கு 28, பெண்ணுக்கு 24 வயதானதிற்கும் மேலான நிலையில் திருமணம் நடக்கும் போது இது எல்லாம் அவசியமாகத் தெரியவில்லை. ஆயினும் பெற்றோர்களின் திருப்தி நமது கலாச்சாரம், பாரம்பரியம்  என்ற பேச்சில் எல்லாமே அடிபட்டுப் போய்விடுகின்றது. மாலை மாற்றும் போது பெண்னையும் பையனையும் வேறு தோளுக்கு மேல் தூக்கி சில சமயம் கீழே போட்டதும் உண்டு. என்னைத் தூக்குவது எளிதான காரியம் என்றாலும், தூக்கி எங்காவது யாருக்கேனும் ஸ்லிப் டிஸ்க் வந்துவிடப் போகின்றது என்ற காரணத்தினால் கட்டாயம் அந்த அசிட்சையெல்லாம் வேண்டாம் என்று நாங்களிருவரும் கண்டிப்பாக கூறியிருந்தோம்.

சுமங்கலிகள் மணல் மற்றும் வில்வ இலைகளின் மேல் பரப்பிவைக்கப்பரட்ட மண் பாத்திரத்திலிருந்த  நவதானியங்கள் வளர்வதர்காக (பாலிகை) நீர் தெளித்து ஆசியருளினர். பின் மாமனார் ஒரு சேரில் அமர்ந்திருக்க அவருக்கு நான் பாத பூஜை செய்தேன். பிறகு மணமகளுக்கு மூகூர்த்த புடவை பெரியவர்கள் ஆசிர்வதித்துக் கொடுக்க மணமகள் தந்தையின் மடியில் அமர இடுப்பைச் சுற்றி ஒரு நாணை அணிவித்து நுகத்தடி தலையில் பூட்டி மந்திரங்கள் சொல்லி நீர் தெளித்து திருமாங்கல்யம் கட்டினேன். உடனேயே அனைவரும் கைக்குலுக்க ஏதோ நான் வாநாளில் அன்று ஒலிம்பிக் நூறு மிட்டர் பந்தயத்தில் ஜெயித்தவனுக்கு உண்டாகும் சந்தோஷத்தை உணர்ந்தேன்.
பிறகு ஏழு தடவை ஹோமத்தை வலம் வந்து மனைவியின் கால்களை பிடித்து அம்மியில் வைத்து மனைவியின் கால்களுக்கு  மெட்டியணிவித்து, மீண்டும் மனைப்படியில் அமர்ந்தோம். மைத்துனன் பொரியை மூன்று முறை கொடுக்க மனைவியின் கையுடன் சேர்த்து வாங்கி ஹோமத்திலிட்டேன். மீண்டும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து காஷுவல் டிரெஸ்ற்கு   மாறி இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். (அதே புடவை வேட்டியில் சாப்பிடக்கூடாது. அதுவும் கூறப்புடவை அணிந்து கொண்டு). அடுத்த நாள் செய்ய வேண்டிய பிரவேச ஹோமம் மற்றும் சேஷ ஹோமம் எல்லாவற்றையும் என் கல்யாணத்தின் போது காலையிலேயே செய்து முடித்துவிட்டனர். பாலிகையையும் அப்போதே ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் கரைத்துவிட்டனர்.

என் திருமணத்தில் சாப்பிடும் போது ஒருவருக்கு ஒருவர் ஸ்வீட் ஊட்டிக் கொள்வது போன்ற சேஷ்டைகளில்லாமல் இருந்தது. சமையல் அறுசுவையரசு நடராஜன். இவருடைய மகன் குமார்தான் ரஜினி மகள் சௌந்தர்யா கல்யாணத்தின் போது சமையல். சாப்பாடு மிக நன்றாக இருந்து. மளிகை சாமனெல்லாம் வாங்கி கொடுத்து அவர்கள் சமையல் செய்த காலம். சமீபத்தில் சென்னை மற்றும் பாம்பாயில் நடந்த திருமணங்களில் திரு. ராஜ சேகர் அவர்களின் சாப்பாடு மிக விசேஷமாகப் பேசப்பட்டது. அதே போல் என் மனைவியின் மாமா பையன் கலயாணத்தில் “கல்யாணமாலை என்பவர்களின் சமையலும் பட்சணங்களும் அற்புதமாகவிருந்தது என்று என் மனைவி கூறிக்கொண்டேயிருக்கின்றாள்.(அவா போட்ட வடை மாதிரி வரவே வராது. வெளியிலே அவ்வளவு கரகரப்பு உள்ளே அப்படியே பஞ்சு மாதிரி)

நிறைய திருமணங்களில் சத்திரம் நன்றாகவிருந்தாலும் சாப்பாடு கெடுத்துவிடும். எல்லாமே நன்றாவிருந்தாலும் சாப்பாடு பல சமயம் போறாமல் போய்விடும். 600 பத்திரிகை அடித்து பெரும்பாலனேருக்கு நேரிடையாக அழைப்பும் மற்றவர்களுக்கு போனிலும் கூப்பிட்டுவிட்டு ரிசப்ஷனுக்கு எங்களுக்கு 300 பேர் தான் வருவா என்று நாமே அதி புத்திசாலிகளாக கூறி வில்லங்கம் வரவழைப்போம். 

மாலை வரவேற்பு முடிந்து உணவு உண்ட பின் சத்திரத்தில் தண்ணிர் இல்லாத காரணத்தால் அடுத்த நாள் காலை கிளம்புவதைத் தவிர்த்து, என் மனைவியின் குடும்பத்தினருக்கு அழுவதற்குக் கூட அவகாசாமில்லாமல், உடனேயே வீட்டிற்கு கிளம்பினோம். உள்ளூரிலேயே இருந்தாலும் கட்டு சாதக் கூடையில்லாத திருமணம் என்னுடையது.

அடுத்த நாள் என் நண்பன் ஜகதீசனுக்கு திருமணம். அவன் கல்யாணத்திலும் சமையல் அறுசுவையரசு நடராஜன்தான். அண்ணா நகரிலிருந்து போகும் வழியில் சத்திரத்திலிருந்த என் மாமானார், மாமியார் மற்றும் அவர்களின் நெருங்கிய சில சொந்தங்களை பார்த்து விட்டு கல்யாணத்திற்குச் சென்றோம்.

சிலப்பதிகார காம் கிபி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு. இது கண்ணகி கோவலன் திரும நிகழ்ச்சி. மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை! ... ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர், விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்ன்று வர்ணிக்கின்றார்.

கம்பன் காலம் 9 ஆம் நூற்றாண்டு, கம்பனும் சீதையின் கல்யாணத்தை வேதவிதி முறையின்படிதான் நடத்துகின்றான். 1800 வருடங்களுக்கும் மேலாக குடும்ப பழக்கங்களைப் பொருத்தும் திருமணச் சடங்குகள் சிறிதளவு மட்டுமே  மாறியிருக்கின்றது என்பது  ஆச்சரியமளிக்கின்றது.

விடிந்தால்  திருமணம். நொடிகள் யுகங்களாகின்றன மனமக்கள் இருவருக்கும். மங்கள் முரசு அறைகின்றது மககள் எழுந்து நகரை அலங்கரிக்கின்றனர். தம்மை அழகு படுத்தி கொள்கின்றனர். இராமன் எழுந்து மங்க நீராடினான்.
ன்ன மென் நடையாரும்.    மழ விடை அனையாரும்.
கன்னி நல் நகர். வாழை    கமுகொடு நடுவாரும்.
பன்ன அரு நிறை முத்தம்    பரியன தெரிவாரும்.
பொன் அணி அணிவாரும்.   மணி அணி புனைவாரும்.  

அன்னம்போல் நடக்கும் நடையுடைய (மிதிலைநகரப்)    பெண்டிரும்;   இளமைபொருந்திய  காளைகளின்  பீடுநடையுடைய ஆடவரும்;  பிற மன்னரால் வெற்றி கொள்ளப்படாத  அந்நன்னகரில் எங்கும்; வாழை மரங்களையும் கமுக மரங்களையும்  கொண்டுவந்து  நாட்டுபவர்களும்;  விலைகூற  முடியாத  மதிப்புடைய நிறைந்த  முத்துக்களில்.   பெரியனவாகவுள்ள  முத்துக்களைத்  தேர்ந்து எடுத்து  அணிந்துகொள்வார்களும்;  பொன்னால் ஆன அணிகளே (போதுமென) அணிந்துகொள்பவர்களும்; மணியால்  ஆன
அணிகளே (எமக்கு  வேண்டும்  என) லங்கரித்துக்  கொள்பவரும் (ஆயினர்).  

விடம் நிகர் விழியாரும்.  அமுது எனும் மொழியாரும்.
கிடை புரை இதழாரும். கிளர் நகை வெளியாரும்.
தட முலை பெரியாரும்.  தனி இடை சிறியாரும்.
பெடை அன நடையாரும். பிடி என வருவாரும்.-
(விரும்பாதார்க்கு)   நஞ்சினையொத்த கண்ணினரும்;  (விரும்புவார்க்கு) அமுதினை  யொத்த  மொழியினரும்; சிவந்த நெட்டியை யொத்த உதட்டினை டையாரும்; விளங்கும் பற்களோ வெண்ணிறமாக  உடையாரும்; அகன்ற  தனங்களின்  பெருமை   கொண்டவர்களும்; தனித்தன்மை வாய்ந்த மிகச்சிறிய இடையினை  உடையவர்களும்; பெண் அன்னத்தின்  நடையினை  யுடையவர்களும்; பெண்யானையைப்  போல  நடந்து  வருபவர்களும்   (ஆகிய பெண்டிர் எங்கும்) (ஆயினர்).  வாழ்கையில் இன்றும் நப்பதைக் கண் முன்னால் காட்டுகின்றார்.
இராமன ங்க நீராடி அவர்கள் எடுத்து வந்த ரங்கநாதனை வணங்கினான்.
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்.
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்.
கங்கையே முதலிய கலந்த நீரினால்.
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே

கோது அறு தவத்துத்தம் குலத்துளோர் தொழும்
ஆதிஅம் சோதியை அடி வணங்கினான் -
அரசர்களும் சமய குரவர்களும்.வேற்றிடஞ் செல்லுங்கால்  தாம் வழிபடும் தெய்வ  வடிவங்களை.  உடன்  கொண்டு செல்லுதல்  மரபாதலால். அயோத்தி வேந்தர்கள்  வழிபடும்  இட்சுவாகு குல தனமாகிய அரங்கனின் விக்ரகம்  மிதிலைக்குக்    கொண்டு  வரப்பட்டு வழிபடப்பட்டது எனலாம்.   

நான் குளித்து முடித்து நாங்கள் கையோடு எடுத்துச் சென்றிருந்த எங்கள் குலதெய்வமாகிய வெங்கடாசலபதி மற்றும் அலமேலுமங்கா படங்களுக்கு பூஜை செய்வதற்குச் சென்றால்,  அறைக் கதவை சாத்தி பூட்டி இரவில் என் மாமா அண்ணா நகரிலிருந்த எங்கள் வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலையில் வருவதாகக் கூறிவிட்டு போனவர் வர தாதமாகி எங்கள் அப்பா என்னைத் தவிர அனைவரையும் போட்டுக் காய்ச்சி எடுத்துவிட்டார். எங்கள் அம்மாவோ அலட்டிக் கொள்ளாமல் “ கவலையே படாதீங்கோ. வாத்தியார் அப்படியே லேட்டாச்சுன்னாலும்  மந்திரத்தை ஸ்பீடா சொல்லி அட்ஜஸ்க் பண்னிடுவார். பாஸஞ்சர் டிரெயின் சட்டுன்னு எக்ஸ்பிரஸ்ஸா மாறிடும். எதுக்கு அநாவசிய டென்ஷன்?” என்றார்.


குளித்து முடித்த இராமன் ஆடை அணிகளன்களை அணிகின்றான். இராமன் குண்டலம் அணிவதற்குக் கூட மிக அழகாக அதற்கும் ஒரு காரணத்தைக் கவி அற்புதமாக கற்பிக்கின்றார்
தம் இல் இரு குழை. இரவு. நன் பகல்.
காதல் கண்டு உணர்ந்தன. கதிரும் திங்களும்.
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற.
தூது வந்து உரைப்பன போன்று தோன்றவே.
 இரவிலும் நல்ல பகலிலும் (சீதை   படுகிற) காதல் நோயைக் கண்கூடாகக் கண்டு  உணர்ந்தவர்களாகிய சூரியனும் சந்திரனும்; தூதாக (இராமனிடம்) வந்து;செவியின் உள்உற ;-  சீதை காதல் நோயைப் பிறர்க்கும் தெரியாவண்ணம்  உரைக்க வேண்டி இராமனின்   காதுகளின்  உள்ளே  சென்றடையும்படி; அச்சீதையினது  எண்ணத்தைச் சொல்பவை  போன்று;  குற்றமற்றரண்டு   குண்டங்களைத் (தன்   செவிகளில்)  விளங்க இராமன் அணிந்தான்).
தூது சென்றுஎன்னும் பாடத்தினும் தூது வந்துஎனும் பாடமே சிறந்து. (why so ?)

சீதை அலங்கரித்து மண்டபத்தில் நுழைவதை
சிலையுடைக் கயல். வாள் திங்கள்.    ஏந்தி. ஓர் செம் பொன் கொம்பர்.
முலை இடை முகிழ்ப்ப. தேர்மேல்    முன்திசை முளைத்தது அன்னாள்.
அலை கடல் பிறந்து. பின்னை    அவனியில் தோன்றி மீள
மலையிடை உதிக்கின்றாள் போல்.    மண்டபம் அதனில் வந்தாள்.
ஒரு  பொன்னிறப் பூங் கொம்பு வில்லையும் கயலையும் உடைய ஒரு சந்திரனை ஏந்தி. முல்லை மலர் அரும்ப வந்தால் எப்படியிடுக்குமோ அப்படி ஜானகிண்டபத்திற்கு வந்தாள்.

வசிட்டன் முறைப்படி வேத விதிப்படி ஹோம் வளர்த்தான்.
தண்டிலம் விரித்தனன்: தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து. மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து. எரி குழும. மூட்டினன்;பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன்.  
(வசிட்ட  மாமுனிவன்)   (அக்கினி வளர்க்கும்   இடத்தே  பரப்ப  வேண்டிய) மணலைப்  பரப்பினான்;  தருபைகளை உரிய இடங்களில்  வைத்தான்; (அக்கினி வைத்தற்குரிய) வட்டமான இடத்தை  வேத  விதிப்படி  ஏற்படுத்தி;   மெல்லிய மலர்களைக் கொண்டு நெய்யை   ஆகுதியாகச் சொரிந்து  ஓம   அக்கினி   குவிந்தெழுமாறு செய்தான்; - தொன்று தொட்டு  வந்த  வேத  நெறிப்படி  (மந்திரங்களால்)  தொழுது.  (மணச் சடங்கினைச்) செய்தான்.
  
தண்டிலம்: மணல்; வடசொல். அக்கினியைப் பிரதிட்டிக்குமிடத்தே  சதுரமாகப் பரப்புகின்ற ணல் (சீவக. 2463) என்பர்

மன்றலின் வந்து. மணத் தவிசு ஏறி.
வென்றி நெடுந் தகை வீரனும். ஆர்வத்து
இன் துணை அன்னமும். எய்தி இருந்தார்;ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்  (நறுமணப்  பொருள்களின்  திருமணத்தோடு
வந்து;  திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி; வெற்றியினையும்  பெருமைக் குணங்களையும் உடைய   வீரனான  இராம  பிரானும்;   அந்த இராமபிரான்பால் பேரன்பினை யுடையவளாய்   (அவனுக்கு)    இனிய    துணையாக ஆகவுள்ள     அன்னம் அனைய சீதையும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள்; (ஒன்றோடொன்று) ன்றியிணைந்த பேரின்பத்தையும் (அதற்கு உபாயமான) யோக நிலையினையும் ஒத்தவர்கள் ஆனார்கள். இராமன் போகத்தையும், சீதை யோகத்தையும்  ஒத்தனர்.


கோமகன் முன் சனகன். குளிர் நல் நீர்
பூமகளும் பொருளும் என. நீ என்.
மா மகள் தன்னொடும். மன்னுதிஎன்னா.
தாமரை அன்ன தடக் கையின். ஈந்தான். (தசரதச்)  சக்கரவர்த்தித் திருமகனான
இராமனின்  எதிர்நின்று  சனக  மன்னன்;நீ (பரம்) பொருளாகிய  திருமாலும்.  தாமரையில்   வாழும்   திருமகளும்  போல என்னுடைய  பெருமைக்குரிய  திருமகளான  சீதையுடனே  நிலைபெற்று வாழ்க’  என்று  கூறி;  குளிர்ந்த   தூய  நீரைத்  (தாரை வார்த்து) தாமரை மலர் போன்ற (இராமனது) வலத் திருக்கையில் கொடுத்தான்.  
அந்தணர் ஆசி. அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை. தார் முடி மன்னர்
வந்தனை. மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ.
அவ்வாறு   சனகன்  சீதையை  இராமன் திருக்கையில்  தரும்போது) அந்தணர்களின்  ஆசி  ஒலியும்; (உலகிற்கு) அரிய அணிகலம் போன்றுள்ள மாதர்கள் பாடுகின்ற பல்லாண்டு இசை  ஒலியும்;

வெய்ய கனல்தலை வீரனும். அந் நாள்.
மை அறு மந்திரம் மும்மை வழங்கா.
நெய் அமை ஆவுதி யாயையும் நேர்ந்தான்.
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்.    மாவீரனாகிய  இராமபிரான்  அப்பொழுது;
குற்றமற்ற மந்திரங்களை சொல்லி ஹோமவிதிப்படி எல்லாவற்றையும் செய்தான்.
 இடம் படு தோளவனோடு. இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ்வரு போதின்.
மடம் படு சிந்தையள். மாறு பிறப்பின்.
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்.  
இடம்  அகன்ற  தோளினனான இராமனோடு;  அவ்வச்சயமத்திற்கு ஏற்றவாறு  ஓமம்  முதலிய   வைதிகச்   சடங்குகளைச்  செய்வதற்காகத் தொடங்கப்  பெற்ற; வெம்மையுடைய (வேள்வித்) தீயைச் சுற்றி வருகின்ற பொழுதில்; பெண்மைக்குரிய)  பேதைமைக்  குணம்   (இயல்பாய்)   அமைந்தமனத்தினளான   சீதை;  மாறி மாறி வருகின்ற இயல்பினையுடைய பிறவிகளில்  (உயிர்  உடம்பைத்   தொடர்கின்ற  வழக்கத்திற்கு மாறாக) உடம்பு   உயிரைத்   தொடர்கின்றதைப்   போல.   இராமனைப்  பின் தொடர்ந்தாள்.
வலம்கொடு தீயை வணங்கினர். வந்து.
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி.
இலங்கு ஒளி அம்மி மிதித்து. எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 
 (இராமனும் சீதையும்) (வேள்வித்) தீயினை  வலம்  வந்து  வணங்கினர்; அவ்வாறு. வலம் வந்து  வணங்கியபின் அழகிய பொரியிடுதல் முதலிய செய்யத்தக்க பொருள்கள் கொண்டு செய்யத்தக்கனவற்றைச் செய்து முடித்து;  விளங்கும் ஒளியுடைய அம்மிக்கல்லை (காலால்) மிதித்து; எதிரிலே  நின்று கொண்டுள்ள     நிலைகலங்காத    கற்பென்னும்   திண்மை   பூண்ட அருந்ததியினையும் கண்டனர்.  
அம்மி    மிதித்தலும் அருந்ததி காணலும்  சீதைக்குரிய செயல்களே என்றாலும் இருவருக்கும் பொதுவாகக் கூறினார்.

என் மாமனார் வீட்டில் (அவர்கள் சாம வேதம்/பாரத்வாஜ கோத்திரம்) அல்லது அவர்கள் வேதசாகை வழக்கப் படி நின்று கொண்டு மனைவியை அணைத்துக் கொண்டு பொரியிடுதல் வழக்கம். அந்த போட்டோவை மிகப் பெருமையாக எல்லோரிடமும் காண்பிப்பார். நான் அந்த மாதிரி ஒரு வழக்கம் இருந்ததையே அவர் மூலம் தான் அறிந்து கொண்டேன்.

மற்று உள. செய்வன செய்து. மகிழ்ந்தார்;முற்றிய மா தவர் தாள் முறை சூடி.
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்.
பொற்றொடி கைக்கொடு நல் மனை புக்கான். (இராமன்)  இன்னும்   செய்யத் தக்கவையான  சடங்குகளையெல்லாம்  செய்து  முடித்து;  மகிழ்ச்சியால் திளைத்து நிற்கும் பெருந்தவம்  முற்றிய  (வசிட்டன்.விசுவாமித்திரன் முதலிய) முனிவர்களின்      திருவடிகளை     முடியில்  சூடுமாறு   பணிந்து;  (தந்தையான)  தசரதச் சக்கரவர்த்தியின்  பாதங்களில்  வீழ்ந்து  கும்பிட்டவுடன்;   பொன்வளைகள் பூண்ட சீதையின் கரம் பற்றி தன் மனை புகுந்தான்.

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.
 (இராமன்)  கேகய மன்னனின்   மகளான    கைகேயியின்    ஒளிமிகுந்த   திருவடிகளை; (தன்னைப்பெற்ற) தாயான கோசலையி னிடத்துக்     கொண்டுள்ள   அன்பைக்காட்டிலும்   மிகு  அன்புடனே வீழ்ந்துவணங்கி;  (பின்பு) தன்னைப்  பெற்ற தாயான  கோசலையின்  இணையடிகளைத்  தலைக்கு அணியாகச்  சூடி. (வணங்கி); (அதன்பின்பு)    உளத்    தூய்மை    மிக்கவளான    சுமித்திரையின் திருவடிகளை வணங்கிய அளவிலே.  சீதை பணிதலும் மாமியர் மகிழ்வும்
 
தாயார்கள்

எண் இல கோடி பொன். எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம். மங்கையர் வெள்ளம்.
கண் அகல் நாடு. உயர் காசொடு தூசும்.
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!என்றார். மேலும் அத்தேவியர்  மூவரும்)
அளவற்ற  கோடிப்பொற்  காசுகளையும்;  அளவற்ற   கோடியான  அழகிய   கிடைத்தற்கரிய அணிகலங்களையும்;  பணிப்பெண்களின் பெருந்திரளினையும்;  இடமகன்ற  (சில) நாடுகளையும்; - விலையுயர்ந்த  பட்டாடைகளையும் சீதைக்குப் பரிசளித்தனர்.

எங்கள் சித்தூர் தாத்தா பாட்டி ஏதேனும் சீர் செய்தார்களா இல்லை நகை போட்டார்களா என்று.  அம்மாவிடம் கேட்டென். அதற்கு அம்மா பாட்டி “தங்கச் சுரங்கத்தையே கொடுத்திருக்கேன் தங்க நகை எதுக்குன்னுதான் எல்லார் கிட்டேயும் சொல்லுவா.  எல்லாம் வசதியைப் பொறுத்தது. சில பேர் ஜம்பத்துக்காக வேணா போடலாம்.என்றார்.
நூற் கடல் அன்னவர் சொற் கடன்நோக்கி.
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்.
கால் கடல்போல் கருணைக்கடல்; பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஒர் பள்ளி அணைந்தான்.  

கடலில்  நீர் பொங்கும்;பெருமான் உள்ளத்தில் கருணை பொங்கும். கடல்  நீருக்கு அளவு  இல்லைபோல.  இவன்  உள்ளத்திற் பொங்கும் கருணைக்கும்   அளவில்லையென்க.     கருணை    அலையடிக்கும் கண்ணாளன் என்பார். கார்க்  கடல்  அன்ன கருணைக்கடல்என்றார். கால்  -  கருமை:  காற்றுமாம்  -  இராமபிரான்   கருணையின்  கடல்; பிராட்டியோ  அவன்  மேல்  வைத்த அன்பின் கடல்  என்பார்  “மால் கடல்  அன்ன  மனத்தவளோடும்”   என்றார்.  தெய்வத்  தம்பதியர்க்கு இச்சடங்குகள்  எல்லாம் தேவையோ  என்னும்  வினாவை  ஆசங்கித்து. மக்கள்   வாழ. வாழ்ந்து  காட்டப்பிறந்தவன்   ஆதலின்.   கற்றோர் சொற்படி  நடந்தான்  என்பார். நூல்கடல்   அன்னவர்   சொற்கடன் நோக்கிஎன்றார். 

சுந்தர காண்டத்தில் சீதை அனுமனிடம் “இந்தை இப்பிறவிக்கு இரு மாந்தரை சிந்தையாலும் தொடேன்! என்று இராமன்,  வந்து என்னைக் கைப்ற்றிய வைகல் வாய் எனக்கு செவ்வரம் அளித்தான். இதை அவன் திருச்செவி சாற்றுவாய்என்று கூறிய நிகழ்வு நடந்தவிடம். வைகல் (தங்குதல் என்ற பொருளும் உண்டு) வாய் என்பதற்கு இலாபமாக பெறப்படுவது ஆங்கிலத்தில்  :to be Granted)  என்ற பொருளும் உண்டு.

கொய்ந் நிறை தாரன். குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன். மங்கையர் நேர்ந்தார்
மைந் நிறை கண்ணியர். வான் உறை நீரார்.
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார்.
 
ஜனகனுக்கு பிறந்த இன்னொரு பெண்ணான ஊர்மிளையை இலக்குவனுக்கும் ஊரிலிருந்து வந்திருந்த பரத சத்ருக்கனர்களுக்கு ஜனகனின் சகோதரன் மகள்களிருவரையும் திருமம் முடித்தனர் என்று இரண்டே பாடல்களில் கவி கூறிவிடுகின்றான்.

என் இரண்டாவது அண்ணன் எப்போதுமே சொல்வது பொறந்தா ஒண்ணு முதலாவது பையனாவோ இல்லை கடைசி பையனாவோ இருக்கணும். நடுவுலே பொறந்தவா எல்லாம் யந்திரத்து நடுவிலே மாட்டின அரசி கதையாயிடும.  மாவாகவும் ஆ முடியாது அரிசியாகவும் இருக்க முடியாது நொய்யாத்தான் இருக்கணும் என்று. சித்தூருக்கு என் இரண்டு அண்ணன்களுக்கு மட்டும் பூணூல் கல்யாணம் பண்ணுவதாக நிச்சயிக்கபட்டு சென்றிருந்தோம். பத்திரிகையெல்லாம் அடித்து உறவினர்களுக்கு போஸ்டும் செய்யப்பட்டுவிட்டது. அப்போது சித்தூர் பாட்டி பக்கவாதம் வந்து படுக்கையிலிருந்தார். கடைசி சித்தப்பா ஏன் நாலு பேருக்குமே சேர்த்துப் போடலாமேஎன்று கேட்க தாத்தா “ நாலு பேருக்கு போட்டு ஒருத்தனுக்கு கல்யாணம் ஆச்சுன்னா, மூணு பிரம்மசாரி வீட்டிலேயிருக்க கூடாதுன்னு சொல்லுவா பெரியவாஎன்றதற்கு சித்தப்பா “திருப்பதியிலே தான் மஹா பெரியாவாயிருக்கா. போய் கேக்கலாம். அவர் சரி என்று சொன்னால் போட்டுவிடலாம்என்று போய் கேட்டு அவரும் போடலாம் என்று சொல்ல எங்கள் நால்வருக்கும் சித்தூர் வீட்டு மித்தத்தில் எங்கள் நால்வரின் பூணூல் கல்யாணம் நடைபெற்றது. போட்டா ஆல்பத்தில் பத்திரிகையை போட்டோ எடுத்து பிரிண்ட் போட்டு முதல் பக்கத்தில் ஒட்டியிருந்தனர். நான் அதில் என் பெயரையும் என் தம்பி பெயரையும் அழியாது இருக்கும் பொருட்டு, பால் பாயிண்ட் பேனாவினால் எழுதி வைத்திருந்தேன்.

No comments:

Post a Comment