30 வருடங்களுக்கு முன்னால், மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக திருமணம், குழந்தைகளின் பிறந்தநாள் எல்லாவற்றையுமே எளிமையாக நெருங்கிய சொந்தங்களுடன் கொண்டாடினர். எங்களில் பூனூல் கல்யாணம் போன்ற விசேஷங்களையெல்லாம் மிக சிக்கனமாக அதிக பணவிரயமில்லாமல், நெருங்கிய சொந்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு கொண்டாடுவது அல்லது மடத்திலேயே இன்னும் இரண்டு மூன்று ஏழைச் சிறுவர்களுடன் சேர்ந்து செய்து கொள்வது என்பது வழக்காமாகயிருந்தது.
என் பெரிய அக்காவிற்கு திருமணம் ஆகி 38 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. அப்போதே எங்கள் வீடுகளில் வரதட்சினை வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது. அதே போல் சீர் இதைத் தான் செய்யவேண்டும் என்பதோ இவ்வளவு பவுன் நகை போடவேண்டும் என்பதோ கூட நானறிந்த வரையில் கேள்வியே படாத ஒன்று. பேசப்படும் ஒரே ஒரு கட்டாயாமான விதி வருபவர்களை நன்றாக கவனித்து சாப்பாடு போட்டு வழியனுப்ப வேண்டும் என்பது ஒன்றுதான். அதுவும் நடக்கவில்லை என்றால் காலாகாலத்திற்கும் “ தண்டமாக சாப்பாடு போட்ட அந்த கல்யாணத்தில்” என்று புலம்புவதோடு சரி.
என் கடைசி மாமா ”ரங்கா” என்றழைக்க்ப்படும் ரங்கநாதன். (இவர்தான் என் இரண்டாவது அக்காவை திருமணம் செய்தவர்) நாங்கள் யாரவது அழுதால் “ நல்லா அழறியே. சத்தமே கேக்கலை. இன்னும் சத்தமா அழு “ என சொல்லி சொல்லி தொண்டை தண்ணீர் வற்றுமளவுக்கு செய்து விடுவார். நாங்களும் அழது காரியத்தைச் சாதிக்க முடியாது என்பதை புரிந்துக் கொண்டோம். இன்றோ குழந்தை அழக் கூட வேண்டாம் கண் கலங்கினாலே போதும் என்ன உபசரிப்பு. எல்லாமே கிடைத்துவிடுகின்றது. முன்பெல்லாம் பென்ஸில் வாங்க வேண்டும் என்றால் பழைய பென்சிலை காண்பிக்க வேண்டும். யாரவது ரப்பர் தொலைத்து விட்டால் அந்த வருடம் முழுவதும் யார் கையையாவது எதிர் பார்க்க வேண்டும். இன்றோ 15,000 ரூ போன் தொலைந்தால் அடுத்த நாளே அதே மாதிரி போன் ஒன்றை வாங்கி கையில் கொடுத்துவிடுகின்றோம்.
சிறுவனாயிருந்த போது என் சித்தப்பா கல்யாணத்தில் என்னை ஜானவாசக் காரில் ஏற்றவில்லையென்று தரையில் பிரண்டு அழுததில் அடுத்த நாள் நல்ல ஜுரம். ஆனாலும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எல்லோருக்குமே அரை டஜன் குழந்தைகளிருந்த காரணமா, இல்லை வசதியில்லாததா என்பது புரியவில்லை.

அதே போல் நான் பார்த்த சில குடும்பங்களில் வயதானவர்கள் பஞ்சகச்சம், கோட், தலைப்பாகை அல்லது ஒரு மாதிரியான கருப்பு கலரில் தொப்பி அணிவார்கள். என் சித்தூர் தாத்தா வெளியில் செல்லும் போது பஞ்சகச்சம், டர்பன் மற்றும் கோட்டுடனும் கைத்தடியுடனும் தான் புறப்படுவார். “ ஏது தாத்தா இவ்வளவு கோட்” என்றால் ”எவ்வளவு சொந்தகாரா. இப்பல்லாம் எல்லரும் ஷோக்குதான் கோட் வாங்கறா. போட்டுகிறதுக்கு இல்லை. அதுக்கப்புறம் என் தலையிலே கட்டிடறா” என்றார். அதே மாதிரி கல்யாணம் என்றால் பஞ்சகச்சம், ஷர்ட்(அதில் பட்டன் இருக்காது. தங்கத்தால் செய்த பொத்தான்கள் ஒரு நூலில் கோர்க்கப்பட்டிருக்கும்) கழுத்தில் அங்கவஸ்திரம் சகிதமாகத்தான் தாத்தா ஆஜராவார்.
”எதற்காக நாலைந்து தெருவை சுத்தி வரணும்” என்றால் அம்மா “யாராவது மாப்பிள்ளையைப் பாத்து அவன் ஏற்கனவே கல்யாணம் பண்ணிண்டவனா இருந்தா இல்லை அவன் மெண்டலா இருந்தா உடனேயே சொல்லிடுவா. கல்யாணத்தை நிறுத்திடலாம்”. சிறு வயதில் இது முழுக்க முழுக்க உண்மை என்றே நம்பினேன். நன்றாக விவரமறிந்த பிறகு ”என்ன அபத்தம் இது. ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாமென்றா.. அப்படியிருக்கும் போது கல்யாணத்தை நிறுத்த ஒரு உண்மையை யாராவது சொல்லுவாளா?. கல்யாணமோ பொண்ணு ஊர்ல தான் பெரும்பாலும் நடக்கிறது. பையனை யாருக்குத் தெரியும். இல்ல மெட்றாஸ் போல பெரிய சிட்டியிலே இது சாத்தியமா “ என்றெல்லாம் யோசித்து இந்த மாதிரி பைத்தியகாரதனத்தில் ஈடு படமாட்டேன் என முடிவு செய்திருந்தேன். என் பெரிய அண்ணாவின் கல்யாணத்தின் போதே ஜானவாசக் கார் ஊர்வலம் எல்லாம் கட்.
மண்டபத்தில் வைத்து ஆசிர்வாதம் செய்து கொடுத்த ஆடையுடன் (நான் கோட் மட்டும் வாங்கி கொண்டேன். சூட்டாக வாங்கவில்லை) ஆகஸ்ட் மாத சென்னை புழுக்கத்தில் மனைவியின் மாமா கபாலியின் காரில் ஆள்வார்பேட்டையிலிருந்த சத்திரத்திலிருந்து மயிலை சென்று கபாலியை தரிசித்து தொப்பமாக நனைந்து சத்திரம் வந்தடைந்தேன்.
இப்போது இல்லாத சடங்குகள் எல்லாம் வந்துவிட்டன. பெண்கள் எல்லோருக்கும் ஆளை வைத்து மதியம் மெஹந்தி போடுவது, அழகாயிருப்பவர்களை அசிங்கப்படுத்துவதற்கென்றே அழகு நிலையங்களுக்கு கூட்டி போவது, வட இந்திய முறையில் குதிரை மீது ஏறி ”பாராத்” போவது ”பேண்ட் வாத்திய கோஷ்டி முழங்க” வித்தியாசமில்லாமல் அபத்தமாக ஆண்களும் பெண்களும் தெருவில் ஆடி கொண்டு போவது என்று எல்லாமே மாறிவிட்டிருக்கின்றது. பையனோ பெண்ணோ வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றால் கூட கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இருவருமே தமிழர்கள். அதுவும் வசிப்பதோ சென்னையில்.
ஏதோ வீணாகப் போவதைப் போல பணத்தை வாரியிறைக்கின்றார்கள். முன்பெல்லாம் சில்வர் அல்லது எவர்சில்வர் தட்டுகளில் எல்லாம் அப்படியே பழங்கள், பாதாம், முந்திரி, திராட்சை மற்றும் வளையாடலுக்கு பையனின் சகோதரிகள் வாங்கி வைத்ததை ”ஷிரிங் ராப்பிங்” செய்பவரிடம் போய் அவர்களிடத்தில் மரத்தட்டுகளை வாங்கி பிளாஸ்டிக் பேப்பர் சுற்றி ஷ்ரின்க் ராப் செயவ்தற்கு டிரேவுடன் கூடி வெறும் 2000 ரூபாய்தான். என் நண்பனின் மனைவி இந்த தொழிலில் நன்றாக பணம் சம்பாதிக்கின்றாள் இன்றைக்குச் சென்னையில் வீட்டிலிருந்த படி வருமானவரி கட்டாமல் சுலபமாக சம்பாதிப்பதற்கான ஏகப் பட்ட வழிகளில் இதுவும் ஒன்று. எலிசபத் டெய்லர் நடித்த father of the brideஇல் வருவது போல் Wedding plananer வேலை ரொம்பவும் லாபகரமாக இருக்கும் போலிருக்கின்றது. சீனாவிலிருந்து சீப்பாக சாமன்களை வாங்கி ஊரில் இருக்கும் இளிச்சவாயன் யார் தலையிலாவது கட்ட வேண்டியதுதான். இங்கே நவராத்திரிக்கு கொடுப்பதர்காக பலர் சீனாவிலிருந்து டான்ஸ் ஆடும் பிள்ளையார் எல்லாம் வாங்கி கொடுக்கின்றனர்.
பெரிய வீட்டுத் திருமணங்களுக்கே ஒரு தனியான அந்தஸ்து. சமீபத்தில் லண்டனில் நடந்த அரசுத் திருமணம் உலகின் பல மூலைகளுக்கு நேரிடையாக ஒளிபரப்பப்பட்டு அத்துணை மக்கள் பார்த்தனர். நம்மூரில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் திருமணம் மற்றும் சினிமா நடிகர்களின் வாரிசுகள் திருமணம். கோலாகலமாக நடைபெறுகின்றன. குமுதம் இதழில் வெளியான அழகிரியின் வாரிசு திருமணத்தில் மு க வின் குடும்ப புகைப் படம்கூட அவர் இந்த தேர்தலில் இவ்வளவு மோசமாகத் தோற்றதற்குக் காரணமாயிருக்கலாம்..
அன்று இந்நவீன தொலை தொடர்பில்லாத காரணத்தால் மக்களுக்கு வேறு வழி? நேரிடையாக மண்டபத்தின் அருகில் நின்று கொண்டோ அல்லது பிரபலங்கள் வரும் பாதையில் நின்றோ பார்ப்பது ஒன்றுதான் வழி. இப்போது விஜய் டீவியிலும் சரி குமுதம் இணையதளத்திலும் சரி உடனேயே ரஜினியின் மகள் திருமணம் ஒளிபரப்பப்பட்டது.
தொலைகாட்சி வர்ணணையைவிட அற்புதமாக கம்பன் இராமன் ஊர்வலம் வருவதைக் காண வந்த மகளிரின் நிலையை மட்டுமே வர்ணிப்பதை மட்டும் இங்கு காண்போம். இப்போது புதிதாக வந்திருக்கும் 3 D தொலைகாட்சிப் பெட்டிகள் கூட காண்பிக்கமுடியாதவை நம் மணக்கண்ணில் தோன்றும்.
விரிந்து வீழ கூந்தல் பாரார்; மேகலை அற்ற நோக்கார்
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்; இடை தடுமாறத் தாழார்
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு “ நீங்குமி. நீங்கிமின்” என்று
அருங் கல்ம் அனைய மாதர் – தேன் நுகர் அளியின் பொய்த்தார்.
இராமனின் அழகைப் பருக வந்த மகளிர் ஒருவர்க்கு ஒருவர் இடித்துக் கொண்டு நெருங்கியவாறு முந்துதலால். கூந்தல்கள் சரிந்தன, மேகலைகள் அறுந்தன, மெல்லிடைகள் நெளிந்தன என்கின்றார். உள்ளம் ஒன்றில் தோய்ந்துவிட்டால், உடலும் உடல் சார்ந்த பொருள்களும் ஒரு பொருட்டாக கவனம் பெறுவதில்லை எனும் உளவியல் தத்துவத்தை இராமன் கோலம் காண வந்த மகளிரின் அலங்கோலம் மூலம் விளக்கியுள்ளது கம்பனின் திறமையின் வெளிப்பாடு.
கண்னினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம்; இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார்’
மண்ணின் நீர் உலந்து. வானம் மழை அற வறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார்.
பண்புப் பொருள்கள் எல்லாம் கண்ணால் ஒஆன் (காண ??) இயலாதவை. நாட்டிய மரபில் “நெஞ்சு கொளின்” அல்லது காட்டலாகாப் பொருள். கண்ணால் காணவியலாத காதல் எனும் பண்புப் பொருள் மானுட வடிவம் பெற்று வந்துள்ளது, வாருங்கள்; பெண்ணாய் பிறந்த பயனை இன்று பெற்று விடுவோம் என்று இராமனைக் காண மிதிலை மகளிர் ஒடினர். உலகில் தெய்வீகக் காட்சி காண்டற்கு அரியதாதலின் மழை வறண்ட காலத்து உண்ணும் நீர் கண்டுவிட்ட மானினத்தை மகளிருக்கு உவ்மையாக்கினார் கவி.
அரத்தம் உண்டனைய மேனி அகலிகைக்கு அளித்த தாளும்
விரைல் கருங் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடந் தோளும். காண மறுகினில் வீழும் மாதர்
இரைத்து வந்து. அமிழ்தின் மொய்க்கும் இனம் என்னல் ஆனார்.
கோசிக முனிவன் மட்டும் கண்டு மகிழந்த இராமபிரானின் கை வண்ணத்ததையும் கால் வண்ணத்தையும் எல்லோரும் காணும் வாய்ப்பை மிதிலை நல்கியுள்ளதால் வாய்ப்பை நழுவ விடாது, மிதிலை நகரத்துப் பெண்கள் அமிழ்தத்தை உண்ண மொய்க்கின்ற வண்டினம் போல் இராமபிரானின் அழகு எனும் அமிழதத்தை உண்டு திளைக்க மொய்த்தனர். அமிழ்தம் சாவாமைக்கு காரணமாவது மட்டுமின்றி பெருஞ்சுவையும் நல்க வலல்து. இறைவனடி சார்ந்த உயிர்கள் அழியாநிலை எய்திப் பேரின்பம் உறுதலை குறிப்பால் உணர்த்தினார். அகலிகைக்கும் சீதைக்கும் அருள் செய்த தாளும் தோளும் நாமும் பெண்களாதலால் நமக்கும் அருளச்செய்வான் எனும் மகளிர் நினைப்பையும் குறித்தார் கம்பர்.
வீதிவாய் செல்கின்றான்போல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களுடே வாவும் மான் தேரில் செல்வான்.
யாதினும் உயர்ந்தோர் தனனை“ யாவர்க்கும் கண்ணன்” என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறு பொருள் உணர்த்திட்டான்.
கண்ணன் என்பதற்குறிய பல் பொருள்களுள் அடங்காது மாதர் கண்களுட் செல்கின்றவன் என்ற புதிய பொருளும் உண்டாக்கி இமையாது விழித்து நோக்கிய மிதிலை மகளிர் கண்களுள் எல்லாம் இராமன் நிறைந்தான் என்று அழகாக கூறுகின்றார் கவி. கண்ணன் எனும் தமிழ்ச் சொல் அனைவரிடத்தும் கண்ணோட்டமாகிய அருளையுடையவன் என்றும், யாவருக்கும் கண் போன்ற அருமையுடயவன் என்றும் ஞானக் கண்ணை அளிப்பவன் என்றும் எல்லாவித்தும் இருப்பவன் என்றும் பொருள் தரும் இப்போது அனைத்து மகளிருடைய கண்களினூடேயும் செல்பவன் என்று மேலும் ஒரு மிகுதியான பொருளை சேர்த்துவிட்டான் என்று சுவைபட கூறினார். உறு பொருள் – மிகுதியான பொருள்
குழை உறா மிளிறும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த
தழை உறாக் கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறாப் புண் ஆறாத இள முலை ஒருத்தி சோர்ந்து
மழை உறா மின்னின் அன்ன மருங்குல்போல் நுடங்கி நின்றாள்
குழை எனும் காதணியின் மேல் சென்று ஒளிரும் கெண்டை மீன்களைப் போன்ற கண்கள் மேகங்கள் மழைத் துளிகளைப் பொழிதல் போல் கண்ணீர் துளிகளை சிந்தி நிற்க தழையில்லாத கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதன் மலர்க் கணைகள் பாய்வதனால் புண் ஆறாத நூல் இழை நுழையும் அளவும் வெற்றிடமில்லாத இளைய தனங்களையுடையாள் ஒருத்தி மேகத்தில் உதிக்காமல் மண்ணில் உதித்த மின்னற் கொடி போன்ற தனது இடையை போலவே மற்றையங்கங்களும் இளைத்து இராமன் சென்று விட்டதனால் சோர்ந்து நின்றாள். மழை உறா மின்; தழை உறாக் கரும்பு இல் பொருள் உவமைகள். கண்ணீர் சிந்திடுதலுக்கும் சோர்ந்து நிற்குங் காரணம் – இராமனைத் தனக்கு தலைவனாகப் பெற்று கூடிக் களிக்க இயலாவிடினும் இன்னுஞ்சிறிது பொழுது கண்ணிற்கண்டு களிப்பதற்குங்கூடாமல் அவன் விரைவில் மறைந்தமை.
மைக் கருங் கூந்தல்.செவ்வாய். வாள் நுதல். ஒருத்தி உள்ளம்
நெக்குனள் உருகுகின்றாள்; “நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனான்; போகாவண்ணம். கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன்; தோழி! சேருதும் அமளி” என்றாள்.
அஞ்சனமை போன்ற கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும் ஒளிபொருந்திய
நெற்றியினையும் உடையாள் ஒரு மங்கை (இராம பிரானை நினைந்து) மனம்நெகிழ்ந்து) உருகுகின்றவளாய் (தன் தோழியை நோக்கி); (என் உயிர்த்) தோழியே! வஞ்சகனாகிய இராமன் என்நெஞ்சினுள்ளே (கண்வழியாக வந்து) உட்புகுந்து அகப்பட்டுக்கொண்டான்; அவன் இனி வெளியேறிவிடாதபடி என் கண் இமைகளை அவன் உள் நுழைந்த வாயிற்கதவைச் சிக்கென அடைத்துவிட்டேன்; (எனக்கு வழிகாட்டு) அவனை நுகர்தற்கு மஞ்சம் சேர்வேன் என்று கூறினாள். உரியவர் அறியாது நெஞ்ச வீட்டுள் புகுந்து அங்கிருந்த நாணம் நிறை முதலிய உயர் பொருள்களைக் கவர்தலால் இராமன் வஞ்சன் ஆனான். ‘கண் விழி நுழையுமோர் கள்வனே கொலாம் என்பார் முன்னும்.
நெற்றியினையும் உடையாள் ஒரு மங்கை (இராம பிரானை நினைந்து) மனம்நெகிழ்ந்து) உருகுகின்றவளாய் (தன் தோழியை நோக்கி); (என் உயிர்த்) தோழியே! வஞ்சகனாகிய இராமன் என்நெஞ்சினுள்ளே (கண்வழியாக வந்து) உட்புகுந்து அகப்பட்டுக்கொண்டான்; அவன் இனி வெளியேறிவிடாதபடி என் கண் இமைகளை அவன் உள் நுழைந்த வாயிற்கதவைச் சிக்கென அடைத்துவிட்டேன்; (எனக்கு வழிகாட்டு) அவனை நுகர்தற்கு மஞ்சம் சேர்வேன் என்று கூறினாள். உரியவர் அறியாது நெஞ்ச வீட்டுள் புகுந்து அங்கிருந்த நாணம் நிறை முதலிய உயர் பொருள்களைக் கவர்தலால் இராமன் வஞ்சன் ஆனான். ‘கண் விழி நுழையுமோர் கள்வனே கொலாம் என்பார் முன்னும்.
கல்யாணங்களுக்கு அழகு சேர்ப்பதே பெண்கள்தான். ஆண்களுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஆடைகளை தேர்ந்தெடுப்பதிலோ அல்லது அழகாகத் தோன்ற வேண்டும் என்ற கட்டயாமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆண்கள் அணிந்து கொள்வதற்கு சில நகைகள் வந்திருந்தாலும் பெண்களுடன் ஒப்பிடவே முடியாது புடவைகளின் வர்ண ஜாலம், அதற்கேற்றார் போல் ஜாக்கெட்டுகள் அதில் இல்லாத வேலைபாடுகள் , அதற்கேற்றார் போல் தலையிருந்து கால் வரை மாட்சிங்காக நகைகள் அணிவதில் என் மனைவி வீட்டு உறவினர்களின் பொறுமையையும், அவர்கள் அதற்காக படும் சிரமங்களையும் நினைத்தால் அவர்கள் பிறந்த பயனே அதற்காகத்தானோ என எண்ணம் எழும். இதையும் மீறி சிலர் தன்னிடம் இருப்பது போல் இன்னொருவரிடம் நகையோ, புடவையோ இருக்கக் கூடாது என்பதற்கு அவர்கள் படும் பாடு நல்ல வேடிக்கை. எந்த கடையில் வாங்கியது என்பதை மட்டும் எவ்வளவு துருவித் துருவிக் கேட்டாலும் சொல்லவே மாட்டார்கள். அந்தப் பேச்சையே அவர்கள் மாற்றும் விதம் மேலாண்மை வகுப்புகளில் பாடமாகவே வைக்கலாம். இதில் என் மனைவியும் அடக்கம். என் மாமியார் தான் வாங்கவில்லை என்றாலும் கூட மற்றவர்களுடன் போய் பார்த்து வாங்குவதிலும் எந்த கடையில் வாங்கியது என்பதையும் மறைப்பதில்லை என்ற வகையில் சற்றே மாறுபட்டவர். எந்த வயதினர் எப்படி எல்லாம் ஆடையணிந்து நகைகள் போடலாம் என்று ஒரு தேசிய ஆடை அணியலங்காரத் தேர்வாணையத்தின் தனிப் பெரும் தலைவியாகயிருந்திருக்க வேண்டியவர் அவர்.
தோள் கண்டார். தோளே கண்டார். தொடு கழல் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்; தடக்கைக் கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.
வாள் போன்ற கண்களையுடைய பெண்டிருள் இராமனது திருமேனியழகினை
முழுவதும் பார்த்தவர்கள் யாவர் உள்ளனர் (ஒருவருமில்லை) ; (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள். பிறசமயங்கள் கூறும் இறை வடிவங்களை நோக்காது. தம் வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல இராமனைக் காண வந்த மகளிர் (அப்பெருமானின்) உறுப்புக்கள் பலவும் நோக்காது ஓர் உறுப்பின் அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.
முழுவதும் பார்த்தவர்கள் யாவர் உள்ளனர் (ஒருவருமில்லை) ; (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள். பிறசமயங்கள் கூறும் இறை வடிவங்களை நோக்காது. தம் வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல இராமனைக் காண வந்த மகளிர் (அப்பெருமானின்) உறுப்புக்கள் பலவும் நோக்காது ஓர் உறுப்பின் அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.
சமயங்கள் ஒரு பரம் பொருளின் பல கூறுகள் என்றவாறு “வணங்கும் துறைகள் பலப் பலவாக்கி மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலப்பலவாக்கி அவை அவை தோறும் அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்” (திருவிருத். 69) எனும் நம்மாழ்வார் பாசுரத்தின் கருத்துப் பதிவு “ஊழ்கொண்ட சமயத்து அன்னாள் உருவு கொண்டாரை ஒத்தார்” எனும் உவமையில்பதிந் துள்ளமை காண்க. முழுமுதற் பரம்பொருளின் பல்வேறு வடிவங்களும் ஒரு வடிவத்தையோ அல்லது ஒரு பகுதியினையோ கண்ட ஒவ்வொரு சமயத்தவரும் அந்தந்த ஒரு வடிவினையே அல்லது பகுதியினையே முடிவாகக் கொண்டு விட்டது போலிருந்தது
இப்பெண்களின் நிலை என்றவாறு. கவிஞர் பிரானின் கடவுட் கொள்கை துல்லியமாக விளங்கும் இடங்களுள் இதுவும் ஒன்று எனலாம். அந்தந்த அங்கங்களைக் கண்டவர்கள் அங்கங்கேயே நின்று கொண்டு. அடுத்த அங்கங்களின் அழகைக் காண விழிகளைப் பெயர்க்க முடியாமற் போனமை. அவர்கள் குறையில்லை என்று
உணர்த்தும்.
இப்பெண்களின் நிலை என்றவாறு. கவிஞர் பிரானின் கடவுட் கொள்கை துல்லியமாக விளங்கும் இடங்களுள் இதுவும் ஒன்று எனலாம். அந்தந்த அங்கங்களைக் கண்டவர்கள் அங்கங்கேயே நின்று கொண்டு. அடுத்த அங்கங்களின் அழகைக் காண விழிகளைப் பெயர்க்க முடியாமற் போனமை. அவர்கள் குறையில்லை என்று
உணர்த்தும்.
அருப்பு மென் முலையால். அங்கு. ஓர் ஆயிழை
‘இருப்பு நெஞ்சினையேனும். ஓர் ஏழைக்கா.
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆட் கொண்டு கா’ என்றாள்
எனக்காக மிக வலிய மலையை ஒடிக்க வேண்டா; மிக எளிய கரும்பை ஒடித்துக் காப்பாற்றுக என்று நயமுற கேட்டாள். அரும்பு அருப்பு எனவும் இரும்பு இருப்பு எனவும் கரும்பு கருப்பு எனவும் எதுகைக்காக வந்தது. ஒரு பெண்ணுக்கு வாழ்வுதர மேருமலையனைய வில்லை ஒடித்து அவளைக் காத்தவனே! நானும் ஒரு பெண் தானே? எனக்காக மன்மதம் பிடித்துள்ள வில்லை, ஒரு கரும்பு வில்லை ஒடித்துக் காப்பாற்றுதல் ஆகாதா? என்று மன்றாடுகிறாள். செயலில் உள்ள் நியாயத்தையும் செயலாற்ற வேண்டுவர்குரிய ஆற்றலையும் உணர்த்தி ”சீதையே ஏழையென்றால் நான் எத்தனை பெரிய ஏழை? எண்ணிப்பார்” என்று இறைஞ்சியவாறு.
மருள் மயங்கு மடந்தையர் மாட்டு ஒரு
பொருள நயந்திலன் போகின்றாதே; இவன்
கருணை எனப்து கண்டு அறியான் பெரும்
ப்ருணிதன்கொல்? படு கொலையான்!” என்றாள்
பருணிதன்: குணங்கள் பரிணமித்த பக்குவ ஞானி. புன்னகை கடைக்கண் வீச்சு முதலியவை மங்கையர் மாட்டு ஆடவர்க்குக் கிடைக்கும் பொருள்கள். இராமன் இத்தகைய எந்தப் பொருளையும் மகளிரிடத்துப் பெற விரும்பாமல் செல்கின்றானே என்பாள். “மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்; போகின்றதே! என வியந்தாள். விருப்பு வெறுப்பு ஆகியவற்றையெல்லாம் இந்த இளம் வயதிலேயே வென்றுவிட்ட பக்குவ ஞானி போலும் இவன் என்பாள்
“பருணிதன் கொல்!” என்று மேலும் வியந்தாள்.
“பருணிதன் கொல்!” என்று மேலும் வியந்தாள்.
வேலூரில் தினகரன் தியேட்டரில் ஆங்கில படங்கள் தான் திரையிடுவார்கள். படம் ஆரம்பிக்கும் முன் இரண்டு ரிக்கார்டுகளைப் போடுவார்கள். ஒன்று அப்போது பிரபலமாகவிருந்த “பேபி எலிபண்ட் வாக்” மற்றது ”கம் செப்டம்பர்” . படம் பார்க்க வருபவர்களுக்கு இவை ஒரு சிக்னலாக இருக்கும். அது முடிந்தவுடன் தான் அந்த திரையை மறைக்கும் பிங்க் நிறச் சீலை மேலெழும்பும். உடனேயே ஸ்லைடுகள் போட ஆரம்பிப்பார்கள். பாதி ஸ்லைடுகள் டுடோரியல் கல்லூரியின் விளம்பரங்கள்; பல புடவைக் கடைகளைப் பற்றியது; சில காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்புகள். இது முடிந்தவுடன் தான் திரைப்படம் ஆரம்பமாகும். அபூர்வமாக சில சமயம் திரைப்படம் ஒடிக் கொண்டிருக்கும் போதே படம் பார்ப்பவர்களில் யாராவது ஒருவரை திரையரங்கின் ஆபிஸுக்கு உடனே வரும் படி அழைப்பதாக இருக்கும். கண்ணாடியில் நாம் பார்ப்பதைப் போல எழுதும் சாமர்த்தியம் தியேட்டர் ப்ரொஜெக்டர் ஆப்பரேட்டருக்கு இருக்க வேண்டும் என்று கேள்வி. அப்போதுதான் சரியாக திரையில் வரும். இந்த படலத்தில் வரும் அனைத்துமே ஒரு ஸ்லைட் என்ன உள்ளடிக்கியிருக்குமோ, அதைப் போல் தான் உள்ளது. ஒருத்தி ”நான் கண்களால் இராமனை சிறை பிடித்து விட்டேன் என்னை வீட்டுக்கு அழைத்து போ” என தோழியிடம் கேட்கின்றாள். மற்றொருத்தியோ ”எனக்காக கடினமில்லாத கரும்பு வில்லையாவது உடைக்கக் கூடாதா?” என வினவுகின்றாள். எனக்கோ இவை பாலகாண்டத்தின் முக்கிய மற்றும் உச்சக்கட்டமான சீதா கல்யாணம் என்ற மெயின் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு தூண்டுகோலாக ஸ்லைடுகளாக காட்சியளிக்கின்றன.
No comments:
Post a Comment