Saturday, May 19, 2012

பொன் மாலை

என் பெற்றோரின் திருமணம் 1947ஆம் வருடம் நடந்தது. என்னுடைய இரண்டு தாத்தாக்களுமே மாமா மருமான் உறவு. சித்தூர் தாத்தா அப்போது வாயல்பாடி எனும் கிராமத்தில் ஹைவேசில் சூப்பர்வைஸர். அம்மாவின் அப்பா மதனபள்ளியில்(ஜே கேவின் ரிஷிவேலி ஸ்கூல் இருக்குமிடம்) ஹைவேசில் சூப்பர்வைசர். சித்தூர் தாத்தாவே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகவும் வாயல்பாடிக்கு அருகில் இருக்கும் சிந்தபட்டி எனும் கிராமத்தில் நிலச்சுவான்தார் வெங்கடசுப்பாரெட்டி வீட்டில் திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்பா திருமனத்தின் போது கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அம்மா அப்பாவின் சொந்தங்கள்  மதனபள்ளி மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் அவர்களாக பணம் செல்வழித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்களாம்.. அப்பாவின் பெரியப்பா மகள்கள் இருவர் அவர்களின் பிள்ளைகள்(ராப்பா,செல்லப்பா, வெங்கட்ராமன்), அம்மாவின் பாட்டி தாத்தா என்று மொத்தமே இரண்டு வீடு மனிதர்களின் எண்ணிக்கையுமே 60 க்கு மேல் இல்லை. வெங்கட்ராமன் என் அப்பாவிற்கு பிடித்தவர். இவர்கள் மதறாஸ் டவுனில் பவளக்காரத் தெருவில் வசித்து வந்தனர். இவர் ஷேர் மார்கெட், வைர வியாபரம் மற்றும் பட்டுபுடவை வியாபரமும் செய்தவர். காஞ்சிபுரத்திற்கு இவர் உயிருடன் இருந்த வரை, சித்தூர் தாத்தா இவரைதான் அழைத்துக் கொண்டு புடவை வாங்குவார். என் ஒரு அத்தையின் கல்யாணத்திற்கு புடவை வாங்க கிளம்பும் போது மூன்று பேராக போகவேண்டாம் என்பதினால் நானும் ஒரு தடவை காஞ்சிபுரம் போயிருக்கின்றேன்.

என் அம்மாவின் திருமணத்திற்கு இவர்தான் புடவை..வாங்கி தந்தார்.அப்போதைய நூறு ரூபாய் விலையில் வைர மூக்குத்தியும் வாங்கி தந்தாராம். அப்போதெல்லாம் இன்று போல் வசதியெல்லாம் கிடையாது.  அம்மாவைக் கேட்டால் “அன்று சுகாதாரம் பற்றிய அறிவேத் துளிக்கூட இல்லை. டாய்லட் வசதி அறவேயில்லை. குளிக்கிறதுக்காகவாது பெண்கள் வீட்டில் இருக்கும் வெந்நீர்உள்ளை உபயோகப் படுத்திக் கொண்டோம். ஆம்பளைங்க பாவம். ஆறு பக்கந்தான் போகணும், எல்லாத்துக்கும்.  என் தங்கை “சுந்தரி கல்யாணமே சித்தூர் வீட்டில் நடந்தது. எல்லாம் ட்ரை லெட்ரின். அப்போ எல்லாம் கல்யாணத்துலே இரண்டு மூணு டையரியா கேஸ். சிலது ஆஸ்பத்திரி வரைக்கும் போகும். கேட்டா பித்தளை பாத்திரம் கல்மிழச்சுண்டுடுத்து (food poisoning).  ஈயம் சரியா பூசலைன்னு ஏதானும் காரணம் சொல்லுவா. ஆனா டாய்லெட் வசதி சரியில்லாததுதான் காரணம்னு இப்ப எனக்கு தோன்றது. இப்பல்லாம் சாப்பாட்டுலேந்து எல்லாமே ஸ்டண்டர்ட் ஆயிடுத்து. என்னா ஒண்ணு  நிறைய பணம் வேணும்

அம்மாவின் கல்யாணத்திற்கு ஆன மொத்த செலவே ஆறாயிரம் ருபாய். அன்று ஜானவாசம், ரிசபஸன் கோட்டு சூட்டு என்றெல்லாம் இருக்கவில்லை. நல்ல வேத பாராயணம் அருகிலுள் கோவிலுக்கு செல்வது என்று வெறும் நெருங்கிய சொந்தங்களுடன் திருமணம் ஆடம்பரமில்லாமலிருந்தது.  

பொதுவாக கல்யாண சத்திரங்களில் பெண் வீட்டார் ஒரு அறை முழுக்க அவர்கள் பெண்களுக்கு செய்யும் சீர் வகைகளை அடுக்கி வைப்பர். இவ்வளவு வெள்ளி, இவ்வளவு எவர்சிலவர், பித்தளை, வெங்கலம் சாமான்கள் என்று  பெண் வீட்டாரின் அந்தஸ்த்தை மற்றவர்கள்(பெண்/பிள்ளை வீட்டார்) எடை போட அது உதவும்.

இந்த சீர் வைக்கும் அறைகளை பூதம் காப்பது போல் திருமணம் நடக்கும் மூன்று நாட்களும் கண் கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். அதற்கேற்றார் போல் யாராவது எதையாவது திருடிவிடுவர். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் போலீசை அழைப்பதற்கும் பயப்படுவர் தங்கள் கௌரவத்தை நினைத்து. அதுவும் மாப்பிள்ளை வீட்டார் யார் மீதாவது சந்தேகமிருந்தால் இன்னும் சங்கடம் அதிகம். அன்று உள்ளூரிலேயேயிருந்தாலும் இன்றைக்கு இருப்பது போல் காண்ட்ராக்ட் வசதியன்று இல்லததாலும். வாகன வசதி இன்றிருப்பதைப் போல் பல்கி பெருகாததாலும் நெருங்கிய உறவினர்கள் உள்ளுரிலேயிருந்தாலும் சத்திரத்தில்தான் தங்குவர். சர்வ சாதாரணமாக தொலைந்து போவது மோதிரம் குழந்தைகளின் ஜிமிக்கி. சில சமயங்களில் பெரிய பொருட்கள் கூட காணாமல் போவதுண்டு. இதை யார் எடுத்தது எனத் தெரியாமல் நெருங்கிய சொந்தங்களையே சந்தேகக்கண் கொண்டு பார்த்து உறவே முறிந்து போவதும் உண்டு.

இந்த தொந்தரவினால் என் கல்யாணத்தின் போது என் அம்மா என் மாமியாரிடம் நீங்க இன்ன போடறீங்களோ அது உங்க பொண்ணுக்குத் தெரிஞ்சா போதும். எங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. என்ன சீர் வைக்கறீங்களோ அதை நீங்களே அவா தனி வீட்டுக்குப் போகும் போது கொண்டு போய் வச்சிடுங்க. சத்திரத்திக்கு எடுத்துக் கொண்டு வரவும் வேண்டாம். அவஸ்தையும் பட வேண்டாம். மீதியாருக்கும் தெரியணும்ன்ற அவசியமில்லை. என்று கச்சிதமாகச் சொல்லிவிட்டார்

என் நண்பன் “குடிராஜேந்திரகுமார் கல்யாணத்தில் இப்பொழுது நடைமுறையிலிருப்பது போல் முதல் நாள் சாயந்திரம் ரிசப்ஷ்ன்”. கல்யாணத்து முதல் நாள் இன்னிக்கு வரவேற்பு பண்ணுகின்றனர். இதில் என்ன தவறுஎன்பது அவன் வாதம். சரி நாளைக்குதான் கல்யாணம் இன்னிக்கு பொண்ணை எப்படி அறிமுகப் படுத்துவே?. என்னோட வுட் பீ வைப்னா? என்பது என் வாதம். இத பாரு இப்பதான் இந்த மாதிரி சடங்குகளுக்கு எல்லாம் பெண்ணையும் பக்கத்திலே நிற்க விடுகின்றனர். இல்லையென்றால் நாளைக்கு மணமேடையிலேதான் பெண்ணையேப் பார்க்கமுடியும். போய் சாப்பிட்டுவிடு. ஊர்லேர்ந்து ஜங்க வந்தா அதன் பிறகு கும்பலாகிவிடும்என்றான். இன்றோ எங்கள் வீடுகளிலும் கூட ஒரு வேளைத் தெரியாத்தனமாக பெற்றோர் பார்த்து திருமணம் நிகழ்ந்தால் முதல் நாள் தான் ரிசப்ஷன் (10 திருமணங்களில் 3 தான் இதே சமுகத்தில் அமைவதாக வருத்தத்துடன் சொன்னார் என் மாமனார். என்னைப் பொறுத்த வரை ஜானவாசம் ரிசப்ஷன் இரண்டுமே தேவையில்லாத ஒன்று. நான் பார்த்த மலையாளத் திருமணங்களில் சடங்குகள் மிகவுமே குறைவானதாக இருந்தது.  
தம்பிகள் மற்றும் வந்திருந்த நண்பர்கள்( பாஸ்கர், மணிவண்ணன், நாகராஜன் மற்றும் சுவாமிநாதன்) கிழே போய் அமர்ந்து கொண்டு பாஸ்கரைப் பாட சொல்லி நல்ல கச்சேரி ஒன்று தொடங்கினோம். அவன் பாடி முதல் பாட்டு “ இது ஒரு பொன் மாலைப் பொழுதுஅன்று எல்லாமே பொன் போலத்தான் தோன்றியது எனக்கு. அவர்கள் வீட்டில் நெருங்கிய சொந்தகார்கள்  எனக்கு ஏற்கனவே அறிமுகம். அது மட்டுமில்லாமல் மனைவியின் மாமாவும்(கபாலி) சீஏ எனபதால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டில் யாரும் நான் தினம் தோறும் அவர்கள் வீட்டிக்குச் சென்று கொண்டிருந்தேன் என சந்தேகப் படவில்லை.

மதியம் சத்திரம் சென்ற நாங்கள் சயங்காலம் 6 .30 மணிக்கு மண மேடையை அடைந்தோம். நான் வேஷ்டி சட்டையில் இருக்க என் தந்தையோ வழக்கமக இருக்கும் பாண்ட் ஷர்டில் தான் இருந்தார். நிச்சயதார்தம் என்பது வெறும் சொந்தக்கார்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்களுடன் நடைபெறுவது என்பதனால் சற்றே விருந்தைனர்களை உபசரிப்பது என்ற தொந்திரவு இல்லாத்ததனால் பொறுமையாக நிதானமாக இருக்கலாம். இரண்டு வீட்டுப் பெரியவர்களும் கூடி மேடையில் அமர்ந்தனர். இரண்டு வீட்டு சாஸ்திரிகளும் திருமணப் பத்திரிக்கையை வாசித்தனர். இன்னாரின் புதல்வனுக்கும் இன்னாரின் புதல்விக்கும் நாளை திருமணம் என்று.
ஊர்வலமாகச் சென்ற இராமன் வசிட்டனும் விசுவாமித்திரனும் மண்டபத்தையடைந்ததுடன்
திருவின் நாயகன். மின் திரிந்தாலெனத்
துருவு மா மணி ஆரம் துயல்வர.
பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்.
கார்மேகம் மண் நோக்கித் தாழ்வது உலக வளம் செழிப்பதற்கு ஆதலின் இராம மேகமும் உலகுக்கு நலம் செழிக்கத் தாழ்ந்தது போல் வசிட்டன் குலகுரு. விசுவாமித்திரன் இடைவந்த குரு. ஆகவே வசிட்டனை முதலில் வணங்கி அடுத்து விசுவாமித்திரனை வணங்கினான் என்பதையுணர்த்த “ இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்என்றார்.

தசரத மன்னவனும் மண்டபம் வந்து சேர்ந்து எல்லோரையும் முறைப்படி வணங்கி அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தனர். பல தேசத்து மன்னர்களும் வந்தமர ஜன்கன் அவர்களனைவரையும் உபசரித்தான். அப்போது
                                        சனகனை இனிது நோக்கி.
மா இயல் நோக்கினாளைக் கொணர்க! என. வசிட்டன் சொன்னான்.

உரைசெய. தொழுத கையன் உவந்த உள்ளத்தன். ‘பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு என்று. ஆயிழையவரை ஏவ.
கரை செயற்கு அரிய காதல் ஏவ. கடாவிட. கடிது சென்றார்.
பிரைசம் ஒத்து இனிய சொல்லார். பேதை தாதியரில் சொன்னார்.

கவிஞர் அரண்மனை நடைமுறைகளை நன்கறிந்தவர் என்பதனை இப்பாவும் உணர்த்தும். ஆணைகளை முறைப்படி ஒருவர் தமக்குகீழே இருக்கும் ஒருவர்க்கு உரைக்க அவர் அவர்க்கு கீழே இருப்பாரிடம் உரைக்கும் முறை பண்டேயிருந்த முறை இப்பாடலால் அறியலாம். கரை செயற்கு அரிய காதல் கடாவிடஆய மகளிர் சென்றனர் என்பதனால் சீதை மாட்டு அவர்கள் வைத்திருந்த பேரன்பு புலப்படும். மகிழ்ச்சியால்  அவர்கள் சொற்கள் தேன் போன்று இனித்தன என்பார். பிரைசம் – தேன்.

அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு அணி என் அமைக்குமாபோல்
உமிழ் சுடர்க் கலன்கள். நங்கை உருவின்னை மறைப்பது ஒரார்
அமிழ்தினைச் சுவை செய்தென்ன. அழகினுக்கு அழகு செய்தார்-
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ
நினைக்கும் நினைவு நல்லதாயினும் அதற்கு மாறான் செயல் புரியத் தொடங்குதல் பேதமை. சீதைக்கு அணிசெய்ய கருதுதலின் மேல் வைத்து அப்பண்பினை விளக்கியவாறு பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர், சீதை அணி பறித்து அழகு செய்வாள் என அவள் பெருமையை கவி அருமையாக விளக்குகின்றார்.

அவள் கரிய கூந்தலுக்கு மாலையணிவித்து நெற்றியில் சுட்டியணிவித்து
வெள்ளத்தின் சடிலத்தாந்தன் வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர. தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக் கொண்டு அகன்ற காளை அல்லன்கொல்? ஆம்கொல் என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார்.
வில் ஒடித்த வீரன் கன்னி மாடத்தில் தன் கண்வழி நுழைந்து இதயத்தில் நிரைந்துள்ள அவனே என்பதனைத் தெளிவாக் அறியாமையால் சீதை தவித்த தவிப்பினை உணர்த்துவதற்கு கவிஞர் பிரானுக்கு காதணியின் அசைவு போதுமானதாயிற்று.

கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து
ஈனம் இல் கலங்கல் தம்மின் இயைவன் அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார்தம் மங்கல கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன் போது ததைக்கு அணி யாது மாதோ?
சீதையின் கழுத்துக்கு அழகுதரும் சிறப்புடைய அணிகள் உலகில் எதுவும் இல்லை என்றாலும் தோழியர் உலக வழக்குக்கு ஏற்றவாறு இருப்பனவற்றில் சிறப்புள்ளவற்றை பூட்டினர். பிராட்டியின் அவதாரம் இலக்குமியாகிய திருவின் அவதாரமாதலின் உலகத்து மகளிர் கழுத்தில் அணியும் திருமாங்கல்யம் ஆக இருக்கும் இவள் கழுத்திற்கு யாரால் தகுந்த அணி அணிய இயலும் என்று வியந்தவாறு ஒரு பெண் மணங்கொள்ளுங் காலை அவள் பொன்னும் பொருளும் வாழ்க்கையின் புனிதத் தன்மையும் அப்பொழுதுதான் அடைகிறாள். ஆதலின் திருமகள் அவளை அப்பொழுது தான் வந்தடைகிறாள் எனக்கருதி மணத்திற்குத் திருமணம் எனப் பெயரிட்டனர் முன்னோர். அவளுக்கு அவன் அடையாளமாகப் பூட்டும் மங்கல நாணிற்கு “திருஎன்று பெயரிட்டனர். மாங்கல்யம் சூட்டுதலை “திருப்பூட்டுஎன்று இன்றும் வழங்குவர். வான்மீகத்தில் திருமாங்கல்ய தாரணம் குறிப்படவில்லையென்றாலும் கம்பர்பிரான் காலத்தில் அது வழக்கத்திலிருந்தது என்பதை கம்பன் குறிப்பிக்கின்றார்.

நஞ்சினோடு அமுதம் கூட்டி நயனங்கள் ஆன என்ன.
செஞ்சவே நீண்டு. மீண்டு சேயரி சிதறி. தீய
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள்.
அஞ்சன நிறமோ? அண்ணல் வண்ணமோ? அறிதல் தேற்றாம்.
உகர்ந்தார்க்கு அமுதாகவும் உகவாதார்க்கு நஞ்சாகவும் அமைந்தன பிராட்டியின் விழிகள். கன்னிமாடத்தில் அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியபோதுஅவள் விழிகளில் அவன் கருமை நிறம் நிறைந்தது என நினைப்பூட்டுவார் போலவும் அதை வியப்பதைப் போலவும்  அண்ணல் வண்ணமோ? எனக் கவிபிரான் கூறினார் என்றும் எண்ணலாம். பிராட்டியின் கண்களின் அக, புற அழகும் இப்பாடலில் வருணிக்கப்பட்டுள்ள திறம் காண்க. இராமபிரானைத் தவிர பிறரிடத்தில் பொது நோக்கமே கொண்டு சிறப்பு நோக்காகிய காதல் நோக்கு இல்லாமையை “வஞ்சமும் களவும் இன்றிஎன்பதனால் சுட்டினார்.  

அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியபோது அவள் விழிகளில் அவன் கருமை நிறம் நிறைத்து என நினைவூட்டுவார் போல அண்ணல் வண்ணமோ எனக் கூறினார் என்றலும் உண்டு.  மகளிர் விழிகளில் நஞ்சும் அமிர்தமும் கலந்துள்ளன என்பதை “ நஞ்சும் அமிர்தமும் போல் குணத்தஎன்று சீவக சிந்தாமணியிலும் காணலாம்.

நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி வேத பராகர்க்கு ஈந்து செம் பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி
கை வளர் மயில் அனாளை வலம் செய்து காப்பும் இட்டார்.

எனக்கும் என மனைவிக்கும் உடையை பெரியவர்கள் ஆசீர்வதித்து கொடுத்தனர். பத்து நிமிடத்தில் உடையணிந்து மண்டபம் வந்துவிட்டேன். ஆனாலும் என் மனைவி அலங்காரம் முடித்து வருவதற்கு அரைமணிக்கும் மேலாகிவிட்டது. அன்றுதான் என் திருமண வாழ்க்கையில் பெண்கள் அலங்கரித்துக் கொண்டு வருவதற்கு ஆகும் நேரம் குறித்த உண்மை உரைத்தது. அதன் பிறகு என் மனைவியின் தம்பி எனக்கு மாலையும் மோதிரமும் அணிவித்தான். பிறகு இரு சுமங்கலிகள் ஆரத்தி எடுத்தனர். எங்கள் இருவருக்கும் மஞ்சள் கயிற்றில் காப்புக் கட்டினர்.  அந்தக் காப்பைக் கட்டிய பிறகு சத்திரத்ததை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது. ஒரே விதிவிக்கு நான் பெற்றோருடன் கோவிலுக்கு போவது.  ஆயினும் அடுத்த நாள் காலை குளிப்பதற்காக என மனைவி சத்திரத்திற்கு அருகிலிருந்த அவர்கள் உறவினர் வீட்டிற்கு குளிப்பதற்கு சென்றாள்.

அதே போல் மண்டபத்தில் கலசம் வைக்குமிடத்திலும் ஹோமம் பண்ணுமிடத்திலும் பிரதட்சணமாகத்தான் செல்ல வேண்டும். இது எல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. என் நண்பன் ஆர் வி (ஆர். வெங்கடேஷ்) “அவா வீட்டிலே பாரு. எல்லாத்தையும் ஒழுங்காச் சொல்லி குடுத்திருக்கா. உனக்கு ஒண்ணுமேத் தெரியலை!”.  “இத பார் ஆர் வீ இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று எந்தவிதமாதன கட்டுப்படுகளும் எங்கள் வீட்டிலிருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. என்றேன்.

இழை குலாம் முலையினாளை;. இடை உவா மதியின் நோக்கி
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்குற்று நின்றார்-
உழை குலாம் நயந்தார்மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார்?
உலகத்து  மங்கையர் எல்லோரையும் எல்லோரும் விரும்பாமைக்கும்.
சீதையை எல்லோரும்  விரும்புதற்கும்  காரணம் சீதை அழகின்  குவியல்.  ஒவ்வோர் உறுப்பே அழகுடைய   மங்கையரே.    ஆடவரின்   இத்தனை   மோகத்துக்குக் காரணம்  ஆவர்  என்றால். அனைத்துறுப்புகளும்  அழகு  கொழிக்கும் சீதையின்மேல்  உலகினர்   பெருவிருப்பங்   கொள்ளுதல்  வியப்பன்று என்று கூறுகின்றார் கவிச்சக்கரவர்த்தி.
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம்
எழுந்து இடை விழுந்து அயர்வது என்ன. அயல் எங்கும்
கொழுந்துடைய சாமரை குலாவ ஓர் காலபம்
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என் வந்தாள்

சீதை நடந்து வருகின்றாள். இரு மருங்கிலும் வெள்ளை சாமரங்கள் மேலும் கீழுமாக வீசப்படுவது சீதையின் நடையுடன் போட்டி போடமுடியாமல் விழுந்து மீண்டும் எழுந்து ஓடிவரும் அன்னங்களின் கூட்டம் போலிருந்தது எனவும் மயிலுக்குக் கலாபம் தோகையினையும் சீதைக்கு கலாபம் இடையணியையும் குறித்தது. தோகை ஒளிர ஒரு மயில் போல் வந்தாள் சீதை.
அன்னவளை “அல்லல் என ஆம் என் அயிர்ப்பான்
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியோடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழ கவி கொள் இந்திரனை ஒத்தான்.

அந்தச்  சனக மன்னன் திருமகளை.  (தான் கன்னிமாடத்தருகே    கண்ட)    அம்மங்கை   யல்லளோ   என்றும். அம்மங்கையே   ஆவாளோ  என்றும்.  உண்டான   ஐயமுடையவனாய் (இருந்த ஐயம் நீங்கி. அவளே  இவள் என்று அறிந்த  மகிழ்ச்சியினால்); இந்திரனை ஒத்தான்.  

நறத்து உறை முதிர்ச்சி உறு    நல் அமுது பில்குற்று.
அறத்தின் விளைவு ஒத்து. முகடு    உந்தி. அருகு உய்க்கும்.
நிறத் துவர் இதழ்க் குயில்    நினைப்பினிடை அல்லால்.
புறத்தும் உளதோ?” என    மனத்தொடு புகன்றான்.


தேனில் உறைகின்ற இனிமை முற்றி வளைவது போன்று இனிமைதரும் நல்ல தேவாமுதத்தைத் துளித்து அறச்செயல்கள் முற்றிவிளைகின்ற விளைவினைப் போன்று;    (நலம்  அனைத்தும்  தந்து)  (அக் கன்னிமாடத்தின்) உச்சியிலிருந்து இறங்குவித்து என்     அருகே செலுத்தப் பெற்றிருக்கும்  செந்நிறங் கொண்ட இதழ்களையுடைய குயில் ஒன்று  என்
மனத்தின் இடத்தில்தான் இருந்தது. அப்படியன்றி அக்குயில் வெளியேயும் உள்ளதோ எனச் சீதையை அருகில் கண்ட இராமபிரான் தன் மனத்தோடு கூறிக்கொண்டான். 


சீதையின் காதல் மிக ஆழமானது மட்டுமின்றி அழுத்தமானதும் கூட. வில்லில் நாணேற்றுபவனுக்கு தான் மாலையிட வேண்டும் என்று அவளுக்குத தெரியும். ஆனாலும் அவள் மனதை கன்னிமாடத்திலிருந்து பார்த்த இராமனிடம் பறி கொடுத்தாள். வில்லை உடைத்தவன் இராமனாக இல்லாத பொழுது தான் உயிரை விடுவேன் என்கின்றாள். இராமனும் சீதையைக் காதலித்தான் என்றாலும் முனிவன் வில்லை ”நாணேற்றுக” என்றவுடன் “வில்லை நாணேற்றினால் தான் ஒரு பெண்ணுக்கு மாலையிட வேண்டும் என்று தெரிந்தும்  பெண் யார்  என்ற கேள்விகூட எழாமல் வில்லை வளைக்கின்றான். இராமயணத்தின் சிறப்பு என்று தெலுங்கில் “ஒக மாட!” (ஒரு வார்த்தை) ”ஒக பாண!” (ஒரு அம்பு) ”ஒக பத்தினி!” (ஒரு மனைவி) என  சொல்லுவார்கள்.  இப்பிறவிக்கு ஒரே மனைவி என்பது இராமனுக்கு சீதையின் காதலின் ஆழத்தைப் பார்த்து தான் வந்திருக்கவேண்டும். வில்லை நாணேற்றும் போது கூட அவனுக்கு அப்படிப்பட்ட எண்ணமிருப்பதாக்த் தெரியவில்லை. . அவன் வாழ்ந்த சமுதாய அமைப்பு பலதார மனத்தை ஏற்றுக் கொண்டது. சுந்தர காண்டத்தில் சீதை அனுமனுக்கு சொல்லும் போது 

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
"இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன்" என்ற, செவ் வரம்

தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய். 

திருமணம் முடிந்த பின் இராமன் சொன்னான் என்கின்றாள். வரம் என்ற வார்த்தை கூட சீதையின் வேண்டுகோளுக்கிணங்க என்ற பொருளிலும் வரும்.

எய்ய வில் வளைத்தும் இறுத்தும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள்
ஐயனை அகத்து வட்வே அல் புறத்தும்
கைவளை திருதுபு. கடைக் கணின் உணர்ந்தாள்.
நீலமாலை  கூற்றால்.  முன்பே  ஓரளவு   போக்கியிருந்த  ஐயத்தை மீண்டும்  முழுதும்   போக்கிடத் துணிந்தாள் சீதை. பெண்மைக்குத் தனிப்பெருமை சேர்க்கும் நாணத்தைப்     பெண்ணரசியாகிய பிராட்டிக்கும்  சேர்த்து  அதனைமேலும்  பெருமை  பெற  வைத்துள்ள பெருந்திறம் நயக்கத்தக்கது.  வரிசிலை   யண்ணலும்  வாட்கண்   நங்கையும் இருவரும்  மாறிப்புக்கு  இதயம்  எய்தி   (கம்ப. 516)  யவர்  ஆதலின்.
அகத்தில் இருந்த ஐயனைத் தொடும் அளவு அருகில் இருந்தும் நேராகத்  திரும்பிப்  பார்க்க இயலாமல் தடுத்த நாணத்தை வெல்ல கைவளையைத்  திருத்தும்  முகமாகத்  தலைசாய்க்காமல்  கண்சாய்த்துக் கண்ட   நேர்த்தியைச்  சொல்வலைப்  படுத்தியுள்ள   திறம்  எண்ணி எண்ணி   மகிழத்   தக்கது.  

கருங் கடை நெடுங் கண் ஒளியாயாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும்
அருங் கலன் அணங்கு- அரசி ஆர் அமிழ்து அனைத்தும்
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்.
அமிழதம் அனைத்தையும் தான் ஒருத்தியே குடித்தது போல் மனமகிழ்ச்சியில் உடல் பருத்தாள் சீதை.

என் அண்னாவின் மகள் எனக்கு மட்டும் எப்படி மாலை போடலாம் தனக்கும் அதே மாதிரி மாலை வேண்டுமென்று நச்சரித்து அவளும் அழகான சிறிய மலர் மாலை அணிந்து என் க்கத்தில் அமர்ந்து கொண்டாள். மனைவி அலங்கரித்து கொண்டு மேடைக்கு வரும் போதே இவள் ஓடிப் போய் “ரொம்ப அழகாயிருக்கீங்கசொல்லிவிட்டு வந்தாள். அப்போது வீடியோ கிராபர் எங்களிருவயும் தனியே அழைத்து ஷூட் செய்ய கூப்பிட்டார். இவளோ தானும் வருவேன் என் அம் பிடித்தாள். நான் அஞ்சு நிமித்திலே வந்துவிடுகின்றேன் என்று கூறி விட்டு வந்தேன். சிறு குழந்தையருகில் இருந்ததால் நாங்களிருவரும் சகஜமாக யாருக்கும் சந்தேகம் வராத படி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வாரம் கழித்து வந்த வீடியோவைப் பார்பதற்கு டெக் வாடகைக்கு எடுத்து அதனுடன் இன்னும் இரண்டு சினிமாவையும் எடுத்து கொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து பார்த்தோம். எந்த விதமா டென்ஷனுமில்லாமல் நாங்களிருவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடானெயே என் தம்பி மற்றும் பெரிய மன்னி இருவருமேஇவன் அவா வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கான். இல்லேன்னா இவ்வளவு சகஜமாயிருக்க முடியாது. அதுவும் அவா கபாலி மாமா பிந்து மாமி  எல்லாரோடையும் அப்படி சிரிச்சு பேச முடியாதுஎன்று கலாட்டா பண்ண ஆரம்பித்துவிட்டர். நான் சி நாள் போயிருக்கிறேன் என்றவுடன் என் அம்மா நீங்க ரெண்டு பேரும் ஸ்கூட்டர்ல போனதைக் கூட கேள்விபட்டேன்என்று சொல்லவும் எத்தனை சினிமாவிற்குச் சென்றோம் என்று தலைப்பே மாறியது.


         


No comments:

Post a Comment