Friday, November 2, 2012

துறவு

சித்தூர் தாத்தா காலை 5 மணிக்கு எழுந்து 5.30 மணிக்கு காபி குடிப்பதற்கு முன் ரேடியோவை ON செய்வார். முதலில் வலப்பக்கம் மேலிருக்கும் வால்வு சிகப்பு கலரில் எரிய ஆரம்பிக்கும். அது பச்சை கலர் வந்தவுடன் ஒலிபரப்புக்குத் தயார் என்று அர்த்தம். கீழே இரண்டு கண் போல் பெரிதாக இரு குமிழ்களிருக்கும். ஒன்று நமக்கு வேண்டிய ஸ்டேஷனை தேர்வு செய்யவும் மற்றது வாலுயூமிற்குமானது. சைடில் பாண்ட் மாற்றக் கூடிய வசதியிருக்கும். இரண்டே இரண்டு பாண்ட்தான். ஒன்று மீடியம் வேவ் மற்றது ஷார்ட் வேவ். ஆல் இந்தியா ரேடியோவின் ஆரம்ப இன்னிசையுடன் தான் காலை அவருக்கு ஆரம்பிக்கும். தமிழில் ” ஆல் இண்டியா ரேடியோ செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயணஸ்வாமி” என்ற கணீரென்ற  குரலுடன் ஆரம்பிக்கும் செய்திகள் முடிவதற்குள் வீட்டில் உள்ள அனைவரும் நண்டு சிண்டு முதல் கொண்டு எல்லோரும் எழுந்தாக வேண்டும். அவர்கள் படுத்துக் கொண்டிருந்த பாயை சுருட்டி போர்வையை மடித்து தலைகாணியை எடுத்து  தற்கென்றிருக்கும் அறையில் ஒழுங்காக அடுக்கி வைத்து விட்டு, பல் தேய்க்கப் போக வேண்டும். அதற்குப் பிறகு தூங்குவது கைக் குழந்தைகள் மட்டுமே.

6.30 மணிக்கு இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் வரும். தாத்தா எப்போதும் இந்து தான் படிப்பார். ஒரு 45 நிமிடத்தில் மேலோட்டமாக படித்துவிட்டு மற்றவர்களுக்குத் தருவார். என் தந்தையிருந்தால் இது 15 நிமிடமாகக் குறைக்கப்பட்டு அப்பாவிற்கு உடனேயே கொடுக்கப்பட்டுவிடும்.

தாத்தா செய்திகள் மட்டும் தான் கேட்பார் காலை செய்திகள் முடிந்தவுடன் ரேடியோ அத்தைகள் வசம் வந்துவிடும். அவர்கள் ஹிந்தி பாடல்கள் தான் கேட்பார்கள். எங்களுக்கு புரியக்கூடாது என்றால் தெலுங்கு அல்லது ஹிந்தியில் பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஹிந்தி பேசுவதால் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பும் அவர்களுக்கு உண்டு.

காலை ஏழரை மணிக்கு ஆபிஸ் ரூமிலிருந்து “எவடி அங்க?என்று தாத்தாவின் குரல் வரும் உடனேயே பெரிய டம்பளிரில் ஹார்லிக்ஸ் வரும். அதை குடித்துவிட்டு, 8 மணிக்கு வெந்நீர் உள்ளில் குளித்துவிட்டு, ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு சமயலறைலிருக்கும் சுவாமியிடம் பட்டையாக வீபூதி அணிந்து கொண்டு ஐந்து நிமிடம் முணுமுணுப்பாக ஏதோ ஸ்லோகம் சொல்லிவிட்டு, டைனிங் ஹாலில் பஞ்சக்கச்சம் அணிந்து கொண்டு ஒரு கை வைத்த பனியனையும் போட்டுக் கொண்டு வெளியே வருவார் சிகப்பாக பழுத்த பழம் போல் இருப்பார். 5 அடி எட்டங்குலம் உயரம், பரந்து விரிந்த தோள்கள், நீண்ட கைகள் என்று   ஆஜானுபாகுவாய் இருப்பார். அந்த காலத்திலே ரேக்ளா வண்டி, இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி, மோட்டார் சைக்கிள் எல்லாம் வைத்திருந்தவர். மானை ஆசையாக வளர்த்தும் வந்தார். நான் பார்த்தது அவருடைய பச்சை கலர் ஹெர்குலீஸ் சைக்கிள் தான்.
மித்தத்திற்கு அருகில் ரேழியில் அவரின் ஈசி சேர் இருக்கும். அதிலேயே காலை நீட்டிவிட்டு தூங்கவும் செய்யலாம். அடிக்கடி பொடி போடுவார். அதனால் அவருடைய கைக்குட்டை எப்போதும் அழுக்காக இருக்கும். நாங்கள் யாராவது போனால், ஈசி சேரில் அமர்ந்த படி எங்களிடம் இந்து பேப்பரை கொடுத்து எடிடோரியல், லெட்டர்ஸ் டு தி எடிட்டர் மற்றும் கடைசி பக்கத்தில் வரும் பக்தி பற்றி பத்தியை உரக்கப் படிக்க சொல்வார். எங்கள் உச்சரிப்பில் வரும் பிழைகளைத் திருத்தி ஏதேனும் ஒரு வார்த்தையை எடுத்து கொண்டு அதன் பொருள், விளக்கம், அதன் மூலம் மற்றும் அதன் பயன்பாடு எல்லாம் சொல்லித் தருவார். ரென் அண்ட் மார்டின் ஆங்கில இலக்கண புத்தகம் அவருக்குத் தேவையே இல்லை.

சித்தூர் பாட்டி தாத்தாவிற்கு நேர் எதிர். பயங்கர குள்ளம். எப்போதும் ஒன்பது கஜம் புடவை. மடிசாராக கட்டுவார். மதியம் வரைக்கும் மடி. பாட்டியை யாரும் தொடக்கூடாது. எப்போதும் கிச்சனில் தான் வேலை. சமையல் சாப்பாடு முடிந்தவுடன் டைனிங் ஹால் சுத்தம் செய்யப்பட்டவுடன், அங்கேயே மதியம் சிறிது கண்ணயர்தல். மீண்டும் சாயங்காலம் காபி, டிபன் மற்றும் இரவு சாப்பாட்டிற்கான ஏற்பாடுகள். எப்போதும் ஓயாமல் ஏதோ ஒரு ஸ்லோகம்  சொல்லிக் கொண்டேயிருப்பாள். பாட்டியின் சமையல் என் அத்தைகள், சித்திகள் அல்லது என் அம்மா யாருக்குமே வரவில்லை. இவர்கள் அனைவரிலும் கொஞ்சம் பெட்டர் என்றால் அது காமாக்ஷி அத்தைதான். இன்றும் பாட்டி செய்யும் பச்சைமிளாகய் தொகையல், புளீயிட்டுக் கீரை, சிந்தகாய் தொக்கு( புளியங்காய் தொக்கு. இதையே பச்சை மிளகாய் மற்றும் சிகப்பு மிளகாய் போட்டு இரண்டு விதமாகச் செய்வதுண்டு) குருவி காரம்(வெறும் சிகப்பு மிளகாய் பழத்தி புலியுடன் சேர்த்து அரைத்து தாளிப்பது) மற்றும் நிம்மகாரம்(குண்டூர் மிளகாய் பொடியை எலுமிச்சம் பழச்சாறில் ஊறவைப்பது) நினைக்கும் போதே திருநெல்வேலி “இருட்டுக் கடை அல்வா” பல்லில் படாமல் தொண்டைக்குள் நழுவுவது போல் நாவில் ஊறிய நீர் என்னையறியால் தொண்டையில் புகும்.  முன்பு எங்கள் வீடுகளில் சமையல் காரசாரமாகவிருக்கும். இப்போது எல்லாமே குறைந்துவிட்டது. என் மனைவியின் வீட்டிலோ காரம் என்றாலே அதை கண்ணாலும் பார்ப்பதே பாவம் என்று கருதுபவர்கள். கல்யாத்திற்கு பிறகு யாரேனும் ஒருவர் தியாகம் செய்ய வேண்டும். காரம் விஷயத்தில் அது என் தலையில் விழுந்தது.

என் மனைவி வீட்டில் அவர்கள் முளக்கீரையை புளீயீட்டு செய்வதில்லை. நான் என் அக்காவைக் கேட்டு இரண்டு தடவை செய்யப்போக ஒரு தடவை காரம் அதிகமாகி நானே ஒரு வராம் பிரிட்ஜில் வைத்து சாப்பிடவேண்டியதாக போனது. அடுத்த தடவை புளி  அதிகமாகி நான் என் முயற்சியை கை விட்டேன். என் அக்கா சித்தூரில் டிகிரி படித்தவள். பாட்டியின் சமையலிலேயே வளர்ந்தவள். நன்றாக சமைப்துடன் அழகாகவும் பரிமாறுபவள். தற்சமயம் பூனாவில் வசிக்கும் அவளுடன் தங்கி ஷீரடி, அஜந்தா, எல்லோரா போனபோது அவளை இரண்டு நாள்   பூளியீட்டுக் கீரை பண்ணச் சொல்லிக் கேட்டிருந்தேன். அதை சாப்பிட்ட என் மனைவி அதன் சுவையில் மயங்கி ருக்குத் திரும்பியவுடன் ,அடுத்த இரண்டு வாரங்கள் அதை செய்து என்னை கீரையிலேயே மூழ்கடித்து விட்டாள்.
என் காஞ்சிபுரம் தாத்தாவும் (அம்மா வழி தாத்தா) என் சித்தூர் தாத்தாவும்  ஹைவேசில் முறையே எஞ்சினியர், ஓவர்சீயராக வேலைப் பார்த்தவர்கள். காஞ்சிபுரம் தாத்தா குடுமியை வெட்டி விட்டு படிப்பு முடிந்தவுடன் கிராப் வைத்துக் கொண்டவர். வேட்டியை துறந்து பேண்ட் ஷர்ட் என்று மாறிவிட்டவர். அவர் அந்த காலத்தில் போர்ட் கார்(MSZ 2122) வைத்திருந்தார். அதற்கு முன்னால் ஏரோப்பிளேன் போல் பானட்டின் மேல் ஒரு சிம்பல், நான்கு கதவுகளுக்கும் நடுவில் பிளாட் பார்ம், டிக்கியில் ஸ்டெப்னியும் காற்றடிக்கும் பம்பும் இருக்கும. சில வேலைகளில் வண்டி ஸ்டார்ட் ஆகாமலிருக்கும். அப்போது ரேடியேட்டர் கீழே “ட போல் இரும்பு ராடை பொருத்தி காரின் மோட்டார் பெல்டைச் சுற்றுவர். பத்து பதினைந்து தடவை சுற்றி முடித்தவுடன் வண்டி பயங்கர ஓலமிட்டு கொண்டு ஸ்டார்ட் ஆகும். டிரைவர் பக்கத்தில் கதவுக்கருகில் பெரிய வட்டக் கண்ணாடி, அருகே ஒரு டிரம்பட் போலிருக்கும் அழகிய ஹாரன்,  அதன் மேல் கருப்பு கலர் நிறத்தில் ரப்பர் ஹார்ன். வீட்டில் கார் ஷெட்டிலிருந்தால் அதை அமுக்கும் போது என்னவோ பாண்ட் வாத்தியக்காரனாக கற்பனை செய்து கொள்வதுண்டு.

அன்று இவ்வளவு கார்களும் பஸ்களும் கிடையாது. எனக்கு சாலை விதிகள் அப்போது தான் தெரிய ஆரம்பித்தன. அம்புலன்ஸுக்கும் RMS (இரயில் தபால் சேவை) வண்டிகளுக்கும், தீயணைப்பு வண்டிகளுக்கும் ஒதுங்கி வழி விட வேண்டும். பஸ்கள் காரை ஒவர் டேக் செய்யக்கூடாது. இருக்கும் ஒரு வழிப் பாதையில் செல்லும் மாட்டு வண்டிக்காரன் மண் பாதையில் இறங்கி வழிவிட வேண்டும்.

இவர் எல்லா சினிமா படங்களையும் மறுபடி மறுபடி பார்ப்பவர். நல்ல சாப்பாட்டு பிரியர். காரசாராமான உணவில் அதீத ஆசை அவருக்கு. என் அம்மா தலைச்சன் என்பதாலும் என் அக்காவை மணந்த ரங்கா மாமாவைக் கடைக் குட்டி என்பதாலும் ரொம்ப பிடிக்கும். பெரிய மாமா வெட்டர்னரி டாகடர். அவருடைய   திருமணம் காதல் திருமணம். பெரியவர்களின் சம்மதத்துடன் நடந்தது. என் அம்மாவின் மாமா மகன் நாரயணண் அந்த தாத்தாவிடம்தான் நான்கு வயதிலிருந்து வளர்ந்தார். படிக்கவைத்ததும் அவர் தான். என் பெரிய அக்கா, நாக்பூர் சுந்தரி சித்தியின் மகன் முரளி அந்த தாத்தாவிடம்தான் சிறு வயதில் வளர்ந்தார்கள். கோடை விடுமுறைக்கு கட்டாயம் வரும் மாமாவின் மகள் வயிற்று பேத்திகள், இல்லை கிராமத்தில் இருந்து வரும் மணியக்காரர் இல்லை வேலைப் பார்ப்பவர்கள் என்று வீட்டில் யாரவது இருந்து கொண்டேயிருப்பார்கள்.

ஜெயா பாட்டியோ ஒன்பது கஜம் புடவையை கிராமத்து ஸ்டைலில் கட்டியிருப்பார். எழுத படிக்கத் தெரியாது. அதே போல் மடி என்றோ ஆச்சாரம் என்றோ அதிகம் படுத்த மாட்டார். அவர் சுவாமி பூஜை செய்தோ சுலோகம் சொல்லியோ நான் பார்த்தேயில்லை.

சித்தூர் தாத்தாவும் பாட்டியும் பார்த்த மொத்தப் படங்களின் எண்ணிக்கையுமே பத்துக்கு மேலிருக்காது. வெளியூர் பயணங்களும் கூட ரொம்பக் குறைவு. அப்பா தான் இருக்கும் ஒவ்வொரு ஊருக்கும் தாத்தாப் பாட்டியை போய் அழைத்துக் கொண்டு வருவார். ஒரு மாதம் இருப்பார்கள். அது கூட அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பி வருவதற்கு ஆயிரம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அப்படி போய் எந்த ஊரையும் பார்க்க வேண்டியதில்லை என்பதால் அவர்கள் அவ்வளவாக வெளியூர்களுக்கு சென்றதில்லை. இதற்கு ஒரே விதி விலக்கு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பது. என் இரண்டு சித்தப்பாக்கள் மருத்துவம் படித்து அரசு ஹாஸ்பத்திரி மற்றும் மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்ததும் பெரும்பாலும் திருப்பதியில் தான். யார் திருப்பது போனாலும் தாத்தா இல்லை பாட்டிக் கட்டாயம் போவார்கள். அப்போதெல்லாம் திருமலையில் நிறைய குரங்குகள் இருக்கும். சட்டென்று முகத்திலிருந்து மூக்குக் கண்ணாடியை பறித்துக் கொண்டு ஓடிவிடும். அதற்கப்பும் ஒருவன் தேடி வந்து ஒரு ரூபாய் அல்லது 2 ரூ கொடுத்தால் குரங்கிடமிருந்து வாங்கி கொடுப்பான். அப்பா ஒரு தடவை கண்ணாடியைத் பறிகொடுதிருக்கின்றார்.

இரண்டு தாத்தா மற்றும் அப்பாவிற்கு இருக்கும் ஒரு ஒற்றுமை மதியமோ இரவோ படுக்க போகுமுன் சிறுவர்களை கால் அமுக்க சொல்வது. எல்லோரும் காலேஜ் போகும் வரையில் கட்டாயம் செய்திருக்கின்றோம். சித்தூர் தாத்தாவிற்கு எக்சீமா. காலில் சைபால் தேயக்க வேண்டும். சிகப்பு கலர் வட்ட டப்பாவில் வெள்ளைக் கலரில் அந்த களிம்பு. கையை சோப்பு போட்டு கழுவினாலும் ஏதோ வாசனை வருவது போலவேயிருக்கும். இதைத் தவிர அவர்கள் வேறு ஏதாவது சௌகரியத்தை அனுபவித்தார்களா, வாழ்ந்தார்களா என்றால்,  இல்லை. ஆனால் சந்தோமான, மகிழ்வான, நிறைவான வாழக்கை வாழந்தார்கள். அதுவும் தன்னிடம் என்ன இருக்கின்றதோ, அதை மகிழ்வுடன் பகிர்ந்தளித்து வாழ்ந்தார்கள். வர்களின் ஒரே லட்சியம் தன்னைவிட அடுத்த தலைமுறை ஒரு படி மேலே போகவேண்டும் என்பது மட்டும் தான். அதற்கு ஒரே வழி கல்விதான் என்பது அவர்களின் உறுதியான நம்பிக்கை. அவர்கள் இல்லறத்தில் கூட துறவியாகவே இருந்தார்கள்.

தசரதனுக்கு முகம் பார்க்கும் போது காதோரம் நரை முடி ஒன்று தோன்றியதாகவும் அதன் பொருட்டு அவன் சிந்தனையில் மூழ்கி மந்திர ஆலோசனை நடத்தி இராமனுக்கு முடி சூட்டவேண்டும் எனும் முடிவுக்கு வந்தான் என்பதா ஒரு பாடலும் அதற்கு மிக அழகாக ஒரு காரணத்தையும் பின்வரும் பாடலில் கூறுகின்றார் எழுதிய புலவர். இந்த இரண்டு பாடலையும் வை மு கோ புத்தகத்திலேயே பதிப்பித்திருக்கின்றார்; கோவை கம்பன் கழகமோ இவற்றை மிகைப் பாடல்களாக கருதுகின்றது. 
தீங்கு இழை இராவணன்      செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது      ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை      படிமக் கண்ணாடி
ஆங்கு அதில் கண்டனன் -      அவனி காவலன்.
அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அந்த காலத்தில் ஓய்வெடுக்கும் வயது 55. இக்காலம் போலில்லாமல் அன்று குழந்தைகளும் அதிகம், குடும்ப பொறுப்புகளும் அதிகம்; ஆனால் வருவாயோ மிகக் குறைவு. ஒய்வூதிய வயதை எட்டியவர்களுக்கு வீடு வாசல் இல்லாமல் கல்யாமாகாத பெண்களோ, படிக்கும் குழந்தைகளோ இருந்துவிட்டால் ரொம்பவே சிரமம்தான். அதனாலே அவர்கள் ஆண் வாரிசை தன் சுமையை ஏற்று கொள்வதற்காக விரும்பினார்கள். எத்தனையோ பேருக்கு ஒய்வூதிய வயது நெருங்க நெருங்க ஹார்ட அட்டாக்கே வந்திருக்கின்றது. பையன்களை நம்பி வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற பயம் காராமாகவே மருமகள் கொடுமையும் அரங்கேறியது. தன் மருமகள், மகனை பிரித்து தனிக்குடித்தனம் அழைத்து சென்று விடுவாளோ என்ற பயமும் தொடர்ந்து அவர்களுக்கு இருந்தது. அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் ஓய்வூதியம் தான்.


அரசாங்க ஊழியர்களுக்கு இருக்கும் இந்த  விதிமுறைகள் அரசாங்கத்தை நடத்தும் முதலாளிகளான அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. அப்படியிருந்திருந்தால்: இந்நேரம் ஸ்டாலின் மூன்று முறை முதல்வராகவிருந்து விட்டு ஓய்வெடுத்திருப்பார். கருணாநிதிக்கு நரை மூப்பு வந்த போதிலும் பதவியைவிடத் தெரியவில்லை.

தசரதன் பிரதம மந்திரியும் குல குருவுமான வசிட்னையும் ஏனைய அமைச்சர்களையும்  ஆலோசனைக்கு அழைக்கின்றான். அவர்களும் வருகின்றனர். அமைச்சர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவி

குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,
பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார் ;
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் ;
சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார். என்கின்றான். தொன்மையான மரபையும், கலையறிவின் தொகுதிகளையும், நல்ல கேள்வியறிவும் உள்ள அமைச்சர்கள் அதனால் விளைந்த பயனையும் பெற்றவர்கள். சினத்திற்கு காரணமான அகந்தையை வேறோடு களைந்தவர்கள். தமக்கு வரும் நலன்கள் அனைத்தும் கெடுவதாகவிருந்தாலும் நடுவு நிலை தவறாமல் அருமையான தருமத்தையே செய்பவர்கள். .

 தம்உயிர்க்கு இறுதி எண்ணார் ;       தலைமகன் வெகுண்ட போதும்,
வெம்மையைத் தாங்கி, நீதி      விடாதுநின்று, உரைக்கும் வீரர் ;
செம்மையின் திறம்பல் செல்லாத்      தேற்றத்தார் ; தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ;       ஒருமையே மொழியும் நீரார்.
அரசன் வெண்டு சினம் கொள்வான் என்ற போதிலும் தன் உயிரே கூட போகும் என்றாலும் அவனின் கோபத்தை தாங்கி கொண்டு, தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் நீதியை எடுத்துச் சொல்லும் துணிவு உள்ளவர்கள். முக்காலத்தையும் உணரும் ஆற்றலுள்ள இவர்கள் நன்னெறியிலிருந்து வழுவாதவர்கள் மற்றும் உண்மையை மட்டுமே பேசுபவர்கள் .

மேற்கு வங்க தற்போதைய முதல்வர் மமதா(தை) பானர்ஜி. புருத்திச் சேலை ஹவாய் செருப்பு என்று எளிமையின் சொருபமாக காட்சியளிக்கும் இவர்,  அகங்காரத்திலும் அராஜகத்திலும் மரபுகளை காற்றில் பறக்கவிட்டு தான் என்ன நினைக்கின்றாறோ அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்பதில், நம் தமிழக முதல்வர் ஜெயலாலிதாவை கட்டாயம் தோற்கடிக்ககூடியவராகவே இருக்கின்றார். இவர் தான் வகித்து வந்த இரயில்வே மந்திரி வியை தன் கட்சியை சேர்ந்த திரு. திரிவேதி என்பவருக்கு அளித்தார். அவரும் இரயில்வே பட்ஜெட்டில் பத்து ஆண்டுகளாக ஏற்றபடாமலிருந்த பயணக் கட்டித்தை இரயில்வேயின் நலம் கருதி உயர்த்தினார். இதற்கு பொது மக்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆட்சேபமும் வரதாபோது, தன் சுயநலம், தான் ஏழைப் பங்காளன் என காட்டிக் கொள்ளக்  கருதி, அவரை மந்திரி பதவியைலிருந்து இறக்கி முகுல்ராய் எனபவரை நியமித்து கட்ட உயர்வை விலக்கிக் கொண்டார், சகிப்புத் தன்மை என்பது துளியும் இல்லாத மம்தா பானர்ஜி. இவர்களை போன்றவர்கள் தான் இந்த நாட்டின் மாநிலத்தை ஆள்பவர்கள்!!!

பிரதமமந்திரியான மன்மோஹன் சிங் விலைவாசியிலிருந்து தண்ணீர் வரை எல்லாவற்றைப் பற்றியும் கவலை தெரிவித்துக் கொண்டு, ஊழலில் ஈடுபட்ட அத்தனை அமைச்சர்களையும் நல்லவர், வல்லவர் எந்த தவறுமே நக்கவில்லை என்று தன்னை ஆட்டுவிக்கும் சூத்திரதாரியான சோனியா காந்திக்காக சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். முதுகெலும்பில்லாத  எல்லா ஊழல்களையும் பார்த்து சகித்துக் கொண்டு கண்ணிருந்தும் திருதிராஷட்ரனாய் ஒரு பிரதமமந்திரி.     
 வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர்,
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே,
வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால்,
ஐ-யிரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்.
அரசன் மந்திரிமார்களிடம் உங்களின் மாட்சியால் அறுபதினாயிரம் ஆண்டுகள் இவ்வுலகத்தை சூர்யகுல வேந்தர்களின் ஆசியோடும். உங்கள் மகிமையாலும் ஆட்சிபுரிந்தேன் என தன் நன்றியை அவர்களுக்குத் தெரிவித்து  

இறந்திலன் செருக் களத்து      இராமன் தாதை ; தான்,
அறம்தலை நிரம்ப, மூப்பு      அடைந்த பின்னரும்,
துறந்திலன்என்பது ஓர் சொல்      உண்டானபின்,
பிறந்திலென் என்பதின்      பிறிது உண்டாகுமோ?
அரசனுக்கு போர் முனையில் இறப்பது சிறப்பு என்றாலும் அது வாய்க்காமல் போனால் மூப்பு வந்து எல்லவாற்றையும் துறந்து வீடு பேறு அடைய வேண்டும். பல ஆண்டு காலம் வாரிசு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு இராமன் பிறந்தும். அவன் அரசு பதவிஏற்பற்கு உரிய பருவம் வந்தும்,  எனக்கு வயதான பின்பும்,  நான் அரசபதவியை துறக்காமல் இருந்தால் எனக்கு பழி நேர்ந்திடும்” என்றான் தசரதன்.
ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி, இப்
பேதைமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் ;
யாது நும் கருத்து?’ என, இனைய கூறினான்.
அது மட்டுமின்று இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. நான் பிறப்பை நீக்குவதற்காக, எல்லாவற்றையும் துறந்து தவமியற்ற வேண்டும். இது குறித்து உங்கள் கருத்துக்களை கூறுவீர்களாக என தசரதன் வினவினான்.

திரண்ட தோளினன்      இப்படிச் செப்பலும், சிந்தை
புரண்டு மீதிடப்      பொங்கிய உவகையர், ஆங்கே
வெருண்டு, மன்னவன்      பிரிவு எனும் விம்முறு நிலையால்,
இரண்டு கன்றினுக்கு      இரங்கும் ஓர் ஆ என இருந்தார்.
அரசன் இவ்வாறு இராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற சொல்லிய நற்செய்தியால், மந்திரிம்மார் குழுமம் மனதில் மகிழ்ச்சி பொங்க, அதே சமயம் மன்னவன் பிரிந்துவிடுவானே என்ற வருத்தத்திலும் ஒரே சமயத்தில் இரண்டு கன்றை பெற்ற பசு போல யாருக்கு இரக்கப்படுவது எனத் தெரியாமல் தவித்தனர். 

 மண்ணினும் நல்லள் ;       மலர்மகள், கலைமகள், கலை ஊர்
பெண்ணினும் நல்லள் ;       பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன் ;       கற்றவர் கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும்,      உயிரினும், அவனையே உவப்பார்.

இராமனுக்கு பட்டாபிஷேகம் என்று கேள்விபட்ட வசிட்டன் “ ஒருவன் நல்லாட்சி தரவேண்டுமென்றால் அவனுடைய மனைவி நல்லவளா  இருக்க வேண்டும். சீதை இம்மண்ணுகில் இருக்கும் பெண்கள் அனைவரிலும் நல்லவள்: அதே போல் இராமனும் எல்லோரும் மேலாக கருதும் ண்ணிலும் நல்லவன். கற்றவர் கல்லாதவர் என்றில்லாமல் உவிலும் நீரிலும் கூட அனைவரும் அவனையே உவப்பார்கள் இதை நீ தாராளமாக செய்யலாம் என்று கூறினான். இவனோ குல குரு; அது மட்டுமில்லாமல் தன் வார்த்தைகள் யாரை இன்புறுத்துகின்றது அல்லது யாரைத் துன்புறுத்துகின்றது என்பதைப் பற்றி கவலைப் படாதவன்.



சுமந்திரன் நிலை அவ்வாறில்லை. அவன் மந்திரிகளில் மூத்தவன்; அவன் தசரதனின் நண்பனும் அவனுடையத் தேர்பாகனும் கூட. இவ்வளவு வருடங்கள் ஒன்றாக இருந்தவர்கள், அவன் மற்ற மந்திரிகளின் முகக்குறிப்பைப் பார்த்து “அரசே இராமனுக்கு பட்டாபிஷேகம் எனும் மகிழ்ச்சியை நீ எங்களைத் துறப்பேன் எனும் செய்தி மறக்கடித்துவிட்டது” என்றான். தினம் தினம் பார்த்ததனால்.தசரதனுக்கோ தனக்கோ வயதாகி கொண்டிருக்கின்றது என்பதையும் அவன் உணரவில்லை. ஒரு வேளை இராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதை மிகவும் வரவேற்கிறோம் என்றால் தசரதன்” இவ்வளவு வருடம் என் உப்பைத் தின்று உடம்பு கொழுத்தவர்கள் சட்டென்று என் மகனேயானாலும் இராமன் பக்கம் சாய்ந்துவிட்டார்களே” என்ற எண்ணக்கூடும் என்ற ஐயமும் அவன் மனதில் இருக்கலாம்.   தசரதன் தன் மகன் மீதிருக்கும் அன்பினால் இராமனுக்கு இராஜ்ஜியத்தையளிக்க முன்வரலாம். ஆனால் அதையே மற்றவர்கள் செய்ய நினைத்தால் தசரதன் சந்தோஷப்படுவானா என்ற எண்ணமும் சுமந்திரன் மனதில் ஓடியிருக்கவேண்டும். ஒரு சிறு பாத்திரம்தான் என்றாலும் கம்பன் அந்த பாத்திரத்தை மிகநேர்த்தியாக, அற்புதமாக, தர்க்கரீதியாகப்  படைக்கின்றான்.

மு கருணாநிதியும் அன்பழகனும் ஏனோ சட்டென்று என் மனதில் ஊசலாடினர். மு,.க என்றைக்காவது பொதுக் குழுவைக் கூட்டி ஸ்டாலினுக்கு கட்சிப் பதவியையும் ஆட்சிப்பொறுப்பையும் அளிப்போம் என்று தெரியாத்தனமாக கூறினால், அனபழகன் உட்பட அனைவரும் ”சாகும் வரை நீதான் இவ்விரு பொறுப்புகளிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் எங்களால் சுருட்டமுடிந்ததை சுருட்டமுடியும் என்றுதான் கூறுவார்களேயன்றி வேறு விதமாக கூறுவார்கள் என்று நினைக்கவும் முடியுமா?


சுமந்திரன் மீதி மந்திரிகள் தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதக் குறிப்பையறிந்து மிகவும் சாமர்த்தியமாக
‘ “உறத் தகும் அரசு இராமற்குஎன்று உவக்கின்ற மனத்தைத்
துறத்தி நீஎனும் சொல் சுடும் ;  நின் குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று ;
அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ?
”அரசனே இராமனுக்கு பட்டாபிஷேகம் என்று இனிய செய்தியை நீ எங்களைத் துறத்தல் என்ற சொல் போக்கடித்துவிட்டது. உன்குலத்து முன்னோர்கள் தவறாமல் செய்த ஒன்றை நீயும் மேற்கொள்ளும் போது அதனை நாங்கள் தடுத்தல் வழக்கும் அன்று. அறமான செயல்களைத் தடுப்பதைக் காட்டிலும் கொடிய செயல் ஒன்று உண்டோ?” எனச் சொல்லிவிட்டு முதலில் மகனுக்கு முடிசூட்டிவிட்டுப் பிறகு துறவு மேற்கொள்வதைப் பார்ப்போம்” என்று தன் நண்பனுக்கு இரங்கிக் கூறினான் சுமந்திரன்.   

தசரதன் சுமந்தரனை நோக்கி இராமனைழைத்து வரவேண்டும் என்று கூற அவனும் சென்று இராமனை அழைத்து கொண்டு மந்திரிசபை நடக்கும் இடத்துக்கு வந்தான்.
ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து,      அன்புற நோக்கி,
பூண்ட போர் மழு உடையவன்      பெரும் புகழ் குறுக
நீண்ட தோள் ஐய !       நிற் பயந்தெடுத்த யான், நின்னை
வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது’      என, விளம்பும்.
வந்த இரானைத் தழுவிக் கொண்ட தசரதன் அவனிடம் உன்னை பெற்றெடுத்த நான் உன்னை வேண்டி நீ தரவேண்டியது ஒன்று உண்டு என பலவிதமாக எடுத்துக் கூறி

ஒருத்தலைப் பரத்து      ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி
எருத்தின், ஈங்கு நின்று,      இயல்வரக் குழைந்து, இடர்உழக்கும்
வருத்தம் நீங்கி, அவ்      வரம்பு அறு திருவினை மருவும்
அருந்தி உண்டு, எனக்கு ; ஐய !       ஈது அருளிடவேண்டும்.
ஒரு பக்கம் சுமக்க முடியாத பாரம் மறுபக்கம் நொண்டிக்காலும் பெற்ற மாடு என்ன துயர் படுமோ அதனை தான் படுவதாக கூறும் தசரதன் இராமனை இராஜ்ஜிய பாரம் ஏற்று தன் வருத்தத்தை தீர்க்கவேண்டும் என்றான் தசரதன்.

தாதை, அப் பரிசு உரைசெய,     தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;     ‘கடன் இதுஎன்று உணர்ந்தும்,
யாது கொற்றவன் ஏவியது     அது செயல் அன்றோ,
நீதி எற்கு?’ என நினைந்தும்,     அப் பணி தலைநின்றான்.
தந்தை அவ்வாறு சொல்லக் கேட்ட இராமன் மகிழ்ந்து ஆடவுமில்லை. இகழச்சியாகவும் எண்ணவில்லை.. இது என்னுடைய கடமை என்று உணர்ந்தான். உரிமை என்று கருதவில்லை. அரசனின் ஆணை,தை நிறைவேற்றுவதே முறை என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்து.இரமன் புறப்பட்ட பிறகு தசரதன் வேந்தர்களுக்கு முடிசூட்டுதல் பற்றிக் குறிப்பிட்டு அவர்களை அயோத்தி வரும்படி ஓலையனுப்பி வசிட்டனிடம் முடி சூடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யும் படி கூறிவிட்டு அங்கிருந்த மன்னவர்களிடம் இராமன் முடி சூட்டிக் கொள்ள போகிறான் என்று கூறவும் அவர்களும் மகிழந்தனர். ஜோதிடத்தில் வல்லவர்களை அழைத்துக் கொண்டு அவர்களுடன் அமைதி வேண்டி தனியிடத்திற்குப் போனான்.

ஒலையை இரண்டு முக்கியமான நபர்களுக்கு அனுப்பவில்லை. ஒன்று இராமனின் மாமனார் ஜனகன். மற்றொன்று தன்னுடைய மாமனாரும் கைகேயியின் தகப்பனுமான கேகேய அரசனுக்கு. அது மட்டுமின்றி பரதன் சத்ருக்கனனுடன் அங்கிருக்கின்றான். எந்நாளில் பட்டாபிஷேகம் என்பதும் ஒலையனுப்பும் போது தெரியாது.

முடியாட்சியிருக்கும் போதும்,  அரசாள்வது தன் உரிமை என்று உணர்ந்த போதும், இராமன் இது அரசன் கட்டளை என்று அது தன் கடன் என்றுதான் நினைக்கின்றானேத் தவிர அதை உரிமையாக கோரவில்லை. அஞ்சா நெஞ்சன் அழகிரி எமெர்ஜென்ஸியின் போது எங்கேயிருந்தார் என்பது கருணாநிதுக்கே கூடத் தெரியாது. ஆனாலும், ஸ்டாலினை விட தனக்கு தகுதியிருப்பதாக நினைத்துக் கொண்டு இவர் போடும் ஆட்டம், என்ன கொடுமை சார் இது.????
                                                                                                                                                                             தொடரும்

No comments:

Post a Comment