Friday, November 16, 2012

சூழ்ச்சி

எனக்கு 4 அல்லது ஐந்து வயதாயிருக்கும் போது என் அப்பாவும் அம்மாவும் தெலுங்கில் பேசிக் கொண்டால், அன்று இரவு இரண்டாம் காட்சிக்கு சினிமாவிற்கு போவதற்கு அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர் என்பது எனக்கு புரிய ஆரம்பித்து. சாயங்காலம் முதற் கொன்டு அம்மாவை விட்டு நகராமல் அவர்களுடன் நிறைய இரவு காட்சிக்கு சென்றிருக்கின்றேன். அப்போதெல்லாம் தெருவில் மாட்டு வண்டியில் இரண்டு பக்கமும் சினிமாவின் போஸ்டரை ஒட்டிக் கொண்டு கூம்பு ஸ்பிக்கரில் கத்த குரலில் ஒருவன் வரவிருக்கும் படத்தைப் பற்றி முன்னோட்டத்துடன் விளம்பரம் செய்து கொண்டு, மீதியை ”வெள்ளித்திரையில் காண்க” என்று அழைப்பைவிடுத்து,  சில வேளைகளில் சினிமா பாடல்களை கிராமபோன் ரிக்கார்டரில் போட்டு கொண்டும் செல்வார்கள். சிறுவர்களாகிய நாங்கள் பின்னாடியே துரத்தி கொண்டு போய் பச்சை இல்லை ரோஸ் கலர் பேப்பரில் போடப்பட்டிருக்கும் கதை சுருக்கத்தையும் நடிக/நடிகைகளின் படத்தையும் பார்த்து எழுத்துக் கூட்டி படித்து எங்கள் தமிழறிவை வளர்த்துக் கொண்டோம். ஊரிலிருந்து என் சித்தி வந்து, ஏதேனும் புது படம் வந்திருந்து, நான் பார்க்காமலிருந்தால் “ சுலோச்சி! புடவை கட்டிக்கோ. சினிமாவிற்கு போகணும்என்று மற்றவர்கள் தூங்கிய பிறகு சொல்லி, அம்மா அப்பாவிற்கு போகும் எண்ணம் இல்லையென்றாலும் சித்தி நான் சொன்னதை நம்பி புடவைக் கட்டிக் கொண்டு வந்து நிற்பதைப் பார்த்த பிறகு கிளம்பி சினிமாவிற்கு சென்றிருக்கின்றோம். இப்போதும் என் நினைவில் மறக்காமல் இருப்பது வேலூர் தாஜ் தியேட்டரில் பார்த்த “இருவர் உள்ளம்”.

அம்மா மதியம் தூங்கப் போகும் சமையத்தில் நச்சரித்தால் தன் தூக்கம் போய்விடும் என்ற பயம் காரணமாகவும். வீட்டிலிருந்தால் ரச்சை இன்னும் அதிகமாகிவிடும் என்பதாலும், நாங்கள் ஒழிந்தால் தான் தான் நிம்மதியாக தூங்கமுடியும் என்பதாலும், கோடை விடுமுறைகளில் நானும் என்னுடைய இரண்டாது சகோதரனும் பார்க்காத திரைப் படங்களே இல்லை. இரண்டு மணி ஆட்டதிற்கு 1.30 மணிக்கு காசு வாங்கி கொண்டு ஓடி ஓடி சென்று சினிமா பார்த்திருக்கின்றோம்.

தீபாவளி பண்டிகைக்காக அப்பாவின் ஆபிஸிலிருப்பவர்களுக்கும் தெருவில் வசிப்பவர்களுக்கும் கொடுப்பதற்காக அம்மா மிக்ஸர், லட்டு, பாதுஷா, முள்ளு முறுக்கு, தேன்குழல் போன்ற பட்சனங்களை ஒருவராத்திற்கு முன்பிருந்தே மதியமெல்லாம் தூங்காமல் செய்து வைப்பார்கள். வீட்டிலிருக்கும் வலை அலமாரியில் பூட்டு பூட்டி தான் எடுத்து வைத்திருப்பார்கள். ஒரு தரம் அம்மா அதன் சாவியை எங்கோ வைத்து விட ண்ணா பின்னை வைத்து திறந்ததை நன்றாகக் கவனித்த நான், அடுத்த நாள் மதியம் எல்லோரும் தூங்கிய பிறகு சத்தமில்லாமல் பின்னை வைத்து அந்த பூட்டை திறந்து ஒன்றிற்கு இரண்டாக பாதுஷாவையும் லட்டையும் எடுத்த போது கரெக்டாக அம்மா பின்னால் நின்றாள். ஒண்ணு எடுத்துக்கோ இவ்வளவு சாப்பிட்டா அப்புறம் கழிஞ்சுண்டுதான் கிடக்கணும் என்றாள். அதற்கு பிறகு எனக்கு என்னவோ இனிப்புகளின் பேரிலோ இல்லை சிறுதிண்டிகளின் பேரிலோ அவ்வளவாக நாட்டமில்லாமல் போய்விட்டது. ஸ்வீட்டே சாப்பிடுவது இல்லை என்றாலும் பாட்டியிடமிருந்து அம்மாவிற்கும், அம்மாவிடமிருந்து எனக்கும் டயபாடீஸ் மட்டும் மறக்காமல் வந்துவிட்டது.

பத்துஎனும் பத்மாவதி அத்தை தாம்பரத்தில் வசித்து வந்தார். இந்த அத்தையும் என் அம்மாவும் சம வயது. அப்பாவைவிட இரண்டு மூன்று வயதுதான் குறைவு. கல்யாணத்திற்கு முன்பு வரை அம்மாவையும் அப்பாவையும், பேர் சொல்லிதான் அழைத்து வந்தார். கல்யாணத்திற்கு பின், அத்தையின் கணவர் பெயரும் என் அப்பாவின் பெயரும், அத்தையின் மாமியாரின் பெயரும் என் அமாவின் பெயரும் ஒன்றே என்ற காரணத்தால் அம்மாவை மன்னி என்றும் அப்பாவைசீனண்ணாஅழைக்க வேண்டிய கட்டாயம் வந்தது. 
அத்தையின் மகன் தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜில் பி.எஸ்.சி கணிதத்தில் மூன்றாம் வருடம் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இவனுக்கு இயற்பியல்  துணை சப்ஜெக்ட். சென்னையிலிருந்த எம் டியில் படிக்கவேண்டும் என்பது இவன் ஆசை. அப்போது பேரறிஞர் அண்ணா யூனிவர்சிட்டியின்(PAUT) கீழ் எம் டி இயங்கி வந்தது, என் ஒன்று விட்ட சித்தப்பா எம் டி யில் கணிதப் பேராசாரியராக பணி புரிந்து வந்தார். யூனிவர்சிட்டியின் துணைவேந்தர் திரு. சிவலிங்கம் என்பவர். இவர் பொதுப் பணித் துறையில் சீப் இஞ்சினீயராக (CE-General) ஆக இருந்தவர். அப்பாவிற்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. எதற்கும் அவரிடம் ஒரு சிபாரிசு சொல்ல வேண்டும் என அத்தை ஆசைப்பட அப்பா தாம்பரம் போய் அத்தை வீட்டில் சாப்பிட்டுவிட்டு மருமகனின் அப்ளிகேஷன் மற்றும் மார்க் லிஸ்ட் எல்லாம் வாங்கி கொண்டு தி நகரில் இருந்த இன்னொரு அத்தையின் வீட்டிற்கு சென்று அடுத்த நாள் அந்த சகோதரரையும் அழைத்துக் கொண்டு திரு. சிவலிங்கத்தைப் பார்பதற்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தார். அத்தையும், அண்ணாவும் சொல்லிவிடுவான். நல்ல மார்க்கும் வந்திருக்கின்றது. எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

திநகரிலிருந்து சித்தப்பாவுடன் கிளம்பி கிண்டி போய் திரு. சிவலிங்கத்தைப் பார்ப்பதற்கு அவர் அறை வாசலில் இவர்கள் காத்திருக்கும் போது சித்தப்பா  அவருடைய சொந்த சகோதரியின் மகனுக்கும்(இவன் என் அத்தை மகனை விட குறைவாகவே மதிப்பெண் வாங்கியிருந்தான்) சிபாரிசு செய்ய சொல்ல அப்பாவால் மறுக்க முடியவில்லை. அதற்குள் உள்ளிருந்து அழைப்பு வர அப்பா அவரிடம் இரண்டு பேருக்கும் சிபாரிசு செய்துவிட்டு வந்தார்.
கடைசியில் என் அத்தையின் பையனுக்கு சீட் கிடைக்கவில்லை.  சித்தப்பாவின் சகோதரி மகனுக்கு கடைசி நிமிட செயலால் சீட் கிடைத்துவிட்டது, என் அத்தை ரொம்ப வருடங்களுக்குசீனண்ணாக்கு புத்தியில்லை.அது எப்படி ரெண்டு பேருக்கு சிபாரிசு பண்ணலாம். என் புத்தியை செருப்பால அடிக்கணும். தாம்பரத்திலேந்து நேர கிண்டிக்கு போயிருக்கணும்; தி நகர் அனுப்பினது பெரிம்மா பேரனுக்கு சாதாகமாயிடுத்து.  சீன்ண்ணா சூது வாது தெரியதாவன்என்று புலம்பிக் கொண்டேயிருப்பாள். சமீபத்தில் அந்த பையனின் மகளுக்கு எம் டி யில் சீட் கிடைத்தவுடன் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டுச் சென்றார்கள். அன்றுதான் அத்தைக்கு கொஞ்சமேனும் ஆறுதல் கிடைத்திருக்கும்.

திரு மு க அவர்களுக்கும் தசரதனைப் போல் அதிகாரப்பூர்வமாக மூன்று மனைவியர். இவருக்கும் குடும்பத்தினர் மீது மட்டுமே பாசம். ஒரு பிள்ளைக்கு முடி சூட்டலாம் என்றால் மற்ற இருவர் நேரிடையாக எதிர்கின்றனர். அன்பு மகளைப் பெற்ற துணைவி, அக்காலத்திலேயே இவருக்கு “கருணாநிதி விஞ்ஞானபூர்வமாக ஊழல் புரிபவர்” என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்தவர். சத்தியநாரயண ரெட்டி(இவர்தான் முதன் முதலில் போடப்பட்ட வீராணம் கால்வாய் திட்டதின் முதன்மை காண்ட்ராக்டர்) தொடங்கி இன்று 2ஜி ஊழல் வழக்கில் சாதிக்பாட்சா வரை தூக்கில் தொங்கியதற்கு தொங்கவிடப் பட்டதிற்கான காரணத்தை அந்த ஆண்டவந்தான் (அரசாள்பவன் தான்) சொல்லமுடியும். அதீத தன் மக்கள் பாசத்தால்தான், இவருடைய மகள் கைது செய்யப்பட்டு, இவர் தள்ளாடும் வயதில் வீல் சேருடன் திஹார் வசாலில் நின்றார். இவருக்கு தசரதனை போன்ற மிகச் சிறந்த குணங்கள் உண்டா என்றால் கட்டாயம் இல்லை. இவர்களுடைய ஒற்றுமை இந்த அளவில் மட்டுமே.  
 

மூத்தவற்கு உரித்து அரசு எனும்      முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளையன் அன்றோ      கடல்வண்ணன்?
ஏத்து நீள் முடி புனைவதற்கு      இசைந்தனன் என்றால்,
மீத் தரும் செல்வம் பரதனை      விலக்குமாறு எவனோ?     தயரதன், இராமன், பரதன் என்ற  மூவருள் வயது முதிர்ந்த தயரதன் இருக்கும்பொழுது இராமன்அரசாளலாம் என்றால்வயதில் மூத்த இராமன் இருக்கும்பொழுது பரதன் ஏன் அரசாளக் கூடாது  என்பது கூனியின் வாதம்.

கைகேயி முறைமையன்றுஎன்பதனையே கூறி மந்தரையைக் கடிந்தாள்.
ஆதலின்,அதனை முதலில் தன் பேச்சால் மறுத்துக் கூறி, இதில் முறைமை
இருக்கிறது என்பதைக் காட்டிக் கைகேயியை முழுமையாக மனமாற்றம் செய்ய
முற்பட்டாள். மூத்தவன்என்பது மூத்த பிள்ளை. அண்ணன் என்னும் பொருள் உடையது. அதுபற்றியே மூத்தவனுக்குப் பட்டம் என்னும் முறைமை நிகழ்கிறது - அவ்வாறுகாணுங்கால் எவ்வாற்றானும் பரதனை அது பற்றாது. ஆனால், மந்தரை தன் சொற் சாதுர்யத்தால்  மூத்தவன் என்பதற்கு வயதில் முதிர்ந்தவன் என்று பொருள் கொண்டு நிறுவிக் கைகேயியை  வளைத்தாள்.

அறன் நிரம்பிய அருளுடை அருந் தவர்க்கேனும்,
பெறல் அருந் திருப் பெற்றபின், சிந்தனை பிறிது ஆம்;
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும், மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர், இடையறா இன்னல்.

கோசலை முதலியோர் இன்றைக்கு உங்களிம் நட்பாக இருப்பதுபோல் அரச பதவி பெற்றபிறகும் இருப்பார்கள் என்று கருதாதே, கருவியால் நேரே கொல்லாவிடினும்,  மனத்தால் துன்பத்தைச் செய்வர்; அது பொறாமல் நீங்களாகவே இறந்துவிடுவீர்கள். செல்வம் பெற்றபின் சிந்தை வேறாவது முனிவர்க்கும் உள்ளது என்றால், சாமானியர்களாகி இவர்கள் அதற்கு எம்மாத்திரம்? - என்பது கூனியின் வாதம், “என் சிறுவர் அறந் திறம்பலர்” “இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ” (1452, 1453) என்று கைகேயி கூறியதை அனுசரித்து, ‘இப்போது அப்படி நீ நினைக்கலாம், அரசன் ஆன
பிறகு எப்படியோஎன்று மறுத்து தன் கருத்தை வலியுறுத்தினாள். முன்னிரண்டு வரிகளின் செய்தியைப் பின்னிரண்டு வரிகள் பாதுகாத்து நிற்கின்றன.

தூண்டும் இன்னலும், வறுமையும்,      தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு,      இரு நிதி, அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதியோ?      விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ?      எங்ஙனம் வாழ்தி?    ‘புகழேசிறந்தது என்றாள் (1472) கைகேயி; அதனை இப்போது எடுத்துக்கொண்டு நீ புகழும்பெற  இயலாது என்று சாடுகிறாள் கூனிபுகழ்,கொடுப்பதனால் வருவதுஉரைப்பார் உரைப்பவை எல்லாம்இரப்பார்க் கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்” (குறள் 232) அன்றோ? எனவே, உன்னிடம் வந்துஇரந்தவர்களுக்கு நீ எவ்வாறு கொடுப்பாய்? என்று கேட்டாள்.. ராமன் அரசன்; கோசலை அவன் தாய்;உலகம் அவருடைமை; உனக்கு ஏது பொருள்?  என்று கைகேயி மனத்தைக் கலக்கினாள். இரப்போர்க்கு ஈய  முடியாத வழி இறந்துபடிதலே தக்கது ஆம் ஆதலின், ‘மறுத்தியோ மாண்டு போதியோஎன்றாளாம். சாதலின்இன்னாத தில்லை இனிததூஉம்  ஈதல் இயையாக் கடை

சிந்தை என் செயத் திகைத்தனை?      இனி, சில நாளில்,
தம்தம் இன்மையும், எளிமையும்,      நிற்கொண்டு தவிர்க்க,
உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற      உன் குலத்து உள்ளோர்,
வந்து காண்பது உன் மாற்றவள்      செல்வமோ? மதியாய்!
உன்னை வந்து பார்பதற்குக் கூட உன் புகுந்த வீட்டிலிருந்து ஒருவரையும் நீ உரிமையோடு அழைக்கக் கூட முடியாது என்றாள் மந்தரை.

காதல் உன் பெருங் கணவனை அஞ்சி,       அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத்      தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தைக்கு      வாழ்வு இனி உண்டோ?
பேதை! உன்துணை யார் உளர்      பழிபடப் பிறந்தார்?
புகழ் இல்லாமற் போனாலும் போகட்டும் என்றால், பழியல்லவா
உண்டாகும் போல் உள்ளதேஎன்றாள் கூனி, தசரதனுக்குக் கட்டுப்பட்டு
னகன் சும்மா இருக்கிறான்; எதிர்காலத்தில் இராமன்அரசனானால் னகன்
சும்மா இருக்க மாட்டான். அவனுக்கு ஏற்கெனவே உன்= தந்தையிடம் பகை உண்டு. அதுவுமில்லாமல் உன் தந்தைக்கு வேறு பகைகளும் உண்டு. இராமன் உன் தந்தையின் உதவிக்கு வரமாட்டான் ஆகவே பரதனுக்கு நீ முடி சூட்ட வேண்டும். என்கின்றாள் மந்தரை. 
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.
சூழ்ச்சியின்என்பதற்கு மந்தரையின் சூழ்ச்சியினால் என்றும்பொருள் உரைப்பர். தேவர்கள் மாயையே கூனியாய் வந்தது  என்பது  ஒரு வழக்கு, இனி இராமன்பால்அளவுகடந்த பேரன்புடையவளும் தூயவளும் ஆகிய கைகேயித் தாய் கேவலம் கூனியால் மனமாற்றம் அடையக்கூடியஅளவுக்குச் சிறுமையுடைய சக்கரவர்த்தினியல்லள்; அவள் மனம் திரிவதற்கு அகக்காரணம் ஆகத் தேவர் மாயையும் அவர் பெற்ற வரமும், முனிவர்களது (இராவணாதிகள் அழிய வேண்டும்  என்று இயற்றிய)அருந் தவமுமே இருந்தன. அதனாலேயே மனமாற்றம் அடைந்தாள் என்றார். இவ்வுரைஎன்றது,‘மூத்தவர்க்குரித்து  அரசு’ (1475)  என்பது தொடங்கி, ‘கெடுத்தொழிந்தனை’ (1482) என்பதுவரை உள்ள எட்டுச் செய்யுள்களில் உள்ள அத்தனையையும் குறிப்பிடும். பெண்களுக்கே விடலாற்றாத
பிறந்தவீட்டுப் பாசம் கூனியால் பெரிதும் எடுத்துப் பேசப்பட்டது. முறைமை அன்றுஎன்ற கைகேயிக்குமுறைமை உண்டுஎனக் கூனி விளங்கினாள்.  காரிய காரணங்களோடு இயைத்துக் கூனி தன் கருத்தைக் கைகேயி ஏற்குமாற செய்தாளாம்.  இமையோர் வரம் என்றதுபாற்கடலிற் கண்வளரும் பரந்தாமனிடம்இந்திராதி தேவர்கள் வேண்டியதும், அப்பரமன் வளை மதில் அயோத்தியில் வருதும் தாரணிஎன்றும், “தசரதன் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்நிசரத கணைகளால் நீறு செய்ய யாம், கசரத துரகமாக்கடல்கொள் காவலன்தசரதன் மதலையாய்  வருதும் தாரணிஎன்றும்உலைவுறும் அமரருக் குரைத்தவார்த்தையை. (200, 201) ‘தூய சிந்தையும் திரிந்ததுஉம்மை சிறப்பும்மை. திரியாத மனமும்என அதன் உயர்வு சிறப்பினை விளக்கி நின்றது.           

மந்தரை கைகேயி சொல்லும் ஒவ்வொரு வாதத்திற்கும் தன்னுடைய வாதத் திறமையால் பதில் சொல்வதைப் பார்க்கும் போது இந்த தள்ளாத வயதிலும் தமிழ் ஆளுமையால் வார்த்தை சிலம்பும் விளையாடும் மு வை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆட்சியில் இருக்கும் போது ஒரு மாதிரியும் ஆட்சியில் இல்லாத போது தலை கீழாக மாற்றி பேசுவதும் இவருக்கு கை வந்த கலை. ஈழத்தில் போர் உச்சிலிருக்கும் போது தீடீரென்று அரை நாள் உண்ணாவிரத நாடகம் நடித்தவர், தற்சமயம் தனி ஈழம் வேண்டி டெசோ மாநாடு நடைபெறும் என்று அறிவித்து விட்டு இப்போது ஈழத்தமிழர் உரிமை மாநாடு தான் நடக்கும்,  தனி ஈழம் பற்றிப் பேச்சே கிடையாது என நழுவுவதும் இவர் சூழ்ச்சியில் வித்தகர் எனத் தெரிவிக்கும்.  அமைச்சர் பூங்கோதையும் தரகர் நீரா ராடியாவும் பேசிய ஆடியோ டேப் வெளியானவுடன் இவர் கூறியது” இரண்டு பெண்மணிகள் பேசி கொள்கின்றனர். அதைக் குறித்து உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை. நல்ல வேளை தன் மகள் மற்றும் துணைவி நீராராடியாவுடன் பேசியதுக் குறித்து இவர் தன் திருவாயை திறக்கவில்லை. குடும்பமே கூடி கும்மியடித்து வராலாற்றுச் சின்னங்களுக்கும் வாய்க்கரிசி போட்டுவிட்டு மலை முழுங்கி மஹா தேவன்களாக கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டதைப் பற்றி வெளி வரும் செய்திகள் குறித்து வாய் மூடி, செல்போனை “மன்மோஹன் சிங் மோடுக்கு”(Silence Mode) மாற்றியது போல் மௌனியாக மாறிவிட்டார்.

அரக்கர் பாவமும்,      அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள்      தூ மொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ,      இன்று, இவ் உலகங்கள், இராமன்
பரக்கும் தொல் புகழ்      அமுதினைப் பருகுகின்றதுவே?
கைகேயியின் மனமாற்றம் நிகழவில்லையானால் இராமாயண காவியமே இல்லை.  இராமன் புகழை அனுபவிக்க உலகத்திற்கு வாய்ப்பு  இல்லையாம்.
கைகேயி  மனம் திரிந்ததும் நல்லதாயிற்று. இராமன் புகழை உலகம் உண்டு
பருகித் மகிழ்வடைய உதவி செய்தது  என்றார். புகழை அமுதென்றார்.
கேட்போர்க்குப் பிறவா நெறியாகிய பரமபதம் தந்து அருளுதலின், இங்கும்
அரக்கர் பாவமும் அல்லவர்  இயற்றிய அறமும் ஆகிய பெரிய
காரணங்களே உள் நின்று தூமொழி மடமானை இரக்கம் அற்றவளாகச்
செய்தது என்றது காண்க. கைகேயியால் அல்லவா சிறையிருந்தவள் ஏற்றம்
செப்பும்  ஸ்ரீராமகதை கிடைத்தது என்று  தீமையிலும் நன்மை தோன்றக்
கூறினார்.      

நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்      நளிர் மணி நகையாய்!
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்      தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம்      அவை இரண்டும்
கோடிஎன்றனள், உள்ளமும்      கோடிய கொடியாள்.     சம்பராகர யுத்தத்தில் தயரதனுக்குத் தேர்ச்சாரதியாக இருந்தவள் கைகேயி. அப்போது ஓர்அபாயத்தில் தயரதனை மீட்டதற்கு அவன் உவந்து அவளுக்கு இரு வரம் பெறுக எனக் கொடுத்தான். அவள்வேண்டும்போது பெறுவதாகச் சொல்லி அப்போது கொள்ளாது அவ்வரங்களை விட்டாள்; அவற்றை அவன்பால் இப்போது  கேட்டுப் பெறுக என்றாள் மந்தரை. அருளியஎன்றதனால் தயரதன் தானே உள்ள முவந்துதந்த வரங்கள், மறுக்க வொண்ணாதவை என்பது  போதரும். உள்ளமும்என்ற உம்மை எச்சவும்மைஉடலேயன்றி எனலின் இறந்தது  தழீஇய எச்சவும்மையாம். விளையாட்டுப் போல் வெற்றி பெறுபவன் என்பதனை ஆடல் வென்றியான் என்றார் - போர்த் தொழில் எளிது என்பது தோன்ற. இனி ஆடல்- போர்த் தொழிலில். வென்றியான் - வெற்றிசூடுபவன் எனவும் உரைக்கலாம்

இரு வரத்தினில், ஒன்றினால்      அரசு கொண்டு, இராமன்
பெரு வனத்திடை ஏழ் இரு      பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி, ஒன்றினால்;      செழு நிலம் எல்லாம்.
ஒருவழிப்படும் உன் மகற்கு;      உபாயம் ஈதுஎன்றாள்.

உரைத்த கூனியை உவந்தனள்,      உயிர் உறத் தழுவி,
நிரைத்த மா மணி ஆரமும்      நிதியமும் நீட்டி,
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு      மகற்கு ஈந்தாய்;
தரைக்கு நாயகன் தாய் இனி நீ      எனத் தணியா.
கூனியைப் கைகேயி நீ பரதனுக்கு தாயாவாய் என்று வாழ்த்தி பொன்னும் மணியும் கொடுத்து

நன்று சொல்லினை; நம்பியை      நளிர் முடி சூட்டல்,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்      இவ் இரண்டும்
அன்றது ஆம் எனில், அரசன் முன்      ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான்;      போதி நீ என்றாள்.
கவலைப் படாதே எடுத்தக் காரியத்தில் வெற்றி பெறுவேன். அல்து உயிர்துறப்பேன். நீ போய் வருவாயாக என்று அவளை அனுப்பி வைத்தாள்.

மனமாற்றம் நடந்து விட்டது. கூனியின் வேலை கனகச்சிதமாக முடிந்துவிட்டது. இனி கைகேயி வேடமிட்டு நாடகம் நடத்த வேண்டியதுதான். அழகாவும், மென்மையானவளாக இருக்கும் அவள் விஷத்தைக் கக்கும் நாகப் பாம்பாக மாறவேண்டும்.

என் மாமனார் அடிக்கடி கூறும் விஷயம் “ அவ அம்மா நல்லா வளர்த்திருக்கா” என்பது. அதற்கு அவர் சொல்லும் காரணம்” பொதுவாக பெண்கள் வேலைக்கு போகாமல் இருக்கும் வீடுகளில், குழந்தைகள் பெரும்பாலும் நேரம் செலவழிப்பது அம்மாவுடன். அப்பா ஆபீஸ் என்று காலை போனால் இரவு வருபவர் தன் குழந்தைகளுடன் நேரம் செலவிடமுடிவதில்லை. ஆகவே அம்மாதான் குழந்தைகளின் ரோல் மாடல்”.

தசரதன் வசிட்டனிடம் துயருற்று உருகும் வேளையில்
வன் மாயக் கைகேசி, வாக்கால், என்தன் உயிரை
முன் மாய்விப்பத் துணிந்தா ளேனும், கூனி மொழியால்,
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி,
என் மா மகனை, “கான் ஏகுஎன்றாள்; என்றாள்என்றான். ”கூனி மொழியாள்” என இல்லாமல் “எறும்பின் கதையால்” என்பதான ஒரு பாட பேதம் இருக்கின்றது என்கின்றார் வை. மு,. கோ. “கைகேயிற்கு அவள் அம்மாவின் குணம் அப்படியே வந்திருக்கின்றது. இவளும் அவள் அம்மாவை போலத்தானே இருப்பாள்” என்பது போலாகும் அந்த கதை கீழே.

கேகேய மன்னனுக்கு எறும்புகளின் பாஷை தெரியும் ஒரு நாள் அவன் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் போது எறும்புகள் தங்களுக்குள் பேசி கொள்வதை பார்த்து சிரித்துவிட்டான். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த கைகேயின் தாயார் தன்னை பார்த்துதான் சிரித்தான் என்று எண்ணி, சிரித்தற்கான காரணத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று கூறினாள். அதற்கு அரசன் தனக்கு எறும்புகளின் பாஷை தெரியும் என்றும், அதனால் அவை பேசியதைக் கேட்டு சிரித்தேன் என்றான். அதை வெளியே சொன்னால் தன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்றும் கூறினான்..அப்போதும் விடாமல் கணவன் இறந்தாலும் பரவாயில்லை, அவன் அதை சொல்ல வேண்டும் என்று நச்சரிக்க அவன் அவளை துரத்திவிட்டான். அதே போல் ராமனை பிரிந்தால் நான் இறப்பேன் என்பது திண்ணம் என்றாலும் இவள் அதையே கேட்கிறாள் என்றான். தசரதன்.

இராமன்  அவதாரமாகவே இருந்தாலும் அவனுக்கு இருக்கும் அத்தனை நல்ல குணங்களுக்கும் வளர்த்தவளான கைகேயின் பங்கு இல்லாமல் இருக்குமா? அதானால்தான் இவளுக்கு இராமனைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கின்றது. அவன் இவளே  சொன்னாலும் கூட நிறைவேற்றுவன் என்று. இவளுக்கு பரதனைப் பற்றித் தெரியுவில்லை. அதனால்தான் அரசாளும் உரிமையை அவன் பெற்றுக் கொள்வானா என்பது பற்றி யோசிக்கவில்லை. தசரதனுக்கு தன் குழந்தைகளின் குணத்தைப் பற்றி ஒன்றுமேத் தெரியவில்லை.
                                                                                                                                                                             தொடரும்

 

 

 

 

  

No comments:

Post a Comment