Friday, November 9, 2012

காத்தாடி

தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் காத்தாடி சீஸன் ஆரம்பிக்கும். சகோதரர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக விளையாடக் கூடிய ஒரு விளையாட்டாக அது இருந்தது. அதுவரையில் மாலைகளில் விளையாடி வந்த பம்பரம், கோலி(பேந்தா), முது குறி மற்றும் ஐஸ்பாய் விளையாட்டுக்கு மூட்டைக் கட்டி விட்டு காத்தாடியில் அதி தீவிரமாக இறங்குவோம். இரண்டாவது அன்ணனுக்குத் தான் இது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம். பெரியண்ணன் காத்தாடிக்கு சூத்திரம் போடுவதில் கில்லாடி. காத்தாடியையும் நாங்களே வீட்டில் தயாரிப்போம்.
 
திக்கான கலர் பேப்பர்கள் மற்றும் மூங்கில்கள் சிறியதும் பெரியதுமாக வாங்கி வந்து, வளைக்க வேண்டிய மூங்கிலை தண்ணிரில் முதல் நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். காத்தாடிகளில் பல வகை என்றாலும் எனக்கு தெரிந்தது வால் காத்தாடி இன்னொன்று பாணா காத்தாடி. பாணா காத்தாடி விடுவது ரொம்பக் கஷ்டம்,. பாலன்ஸ் பண்ணுவதும் கடினம். “சர்ரென்று” கீழேயிறங்விடும். சூத்திரம் சரியில்லை என்றால் பக்கவாட்டில் சரிந்துவிடும் அதற்கென்று சில சமயம்  பேலண்ஸ் பண்ணுவதற்கு சிறு காகிதத்தை சரியா  ஒரு பக்கம் ஒட்ட வேண்டும். வால் காத்தாடியில் இவ்வளவு சிரமம் இல்லை.
 
சரியான நூலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சங்கிலி நூல், ட்வையின் போன்றவை சில. ட்வையின் கொஞ்சம் கெட்டியாகவிருக்கும்,. சங்கிலி நூல் ஸ்டராங்காக அதே சமயம் மெலிதாகவும் இருக்கும். வால் காத்தாடிக்கு ட்வைன் நூலும் பாணா காத்தாடிக்கு சங்கிலி(மார்க்) நூலும் உபயோகிப்போம்(மெலிதாக அதேசமயம் வலிமையானதாகவும் இருக்கும். இதில் நம்பரெல்லாம் வேறு உண்டு). அப்பாவிடம் சொல்லி எலெக்டிரிக் ஒயர் வரும் உருளையை வாங்கி வைத்துக் கொள்வோம். ஒரு மூங்கிலை நடுவில் வைத்துக் கொண்டால் எங்களின் ஸ்பிண்டில் ரெடி. நூலை வாங்கி அழகாக சுத்தி புது நூலை சேர்க்கும் போது பயர் சர்வீஸ்காரர் ஒருவர் சொல்லிக் கொடுத்தபடி முடிச்சுப் போடுவோம். அப்போதுதான் நூல் கழலாமல் இருக்கும்.
 
இது எல்லாவற்றையும் விட முக்கியமாது நூலுக்கு மாஞ்சா போடுவது. அதற்கான சாதனங்கள் வஜ்ஜிரம், பசை, முட்டை, கரித் துண்டு, போட்டுக் காய்ச்சவேண்டும். இதையெல்லாம் விட முக்கியமானது பாட்டில் துண்டுகள். இதை நைசாக பொடியாக்கிக் கொண்டு கை அறுபடாமல் இந்த மிக்சரில் கலக்க வேண்டும். இது நடந்து கொண்டிருக்கும் போதே மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நூலை கட்டி முடித்து, கை அறுபடாமல் இருக்க ஒரு பழைய துணியை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமா இந்த மிக்ஸரை எடுத்து ஒரே சீராக தடவ வேண்டும். தற்கு பிறகு சுலபமான வழி ஒன்றைக் கண்டுகொண்டோம். காத்தாடிக்கு வால் வைததுவிட்டு அது பறக்கும் போது நூலில் மாஞ்சாவை சேர்த்துவிடுவது. கண்ணுக்குக் தெரியாத தூரம் வரைக்கும் போகும் காத்தாடி இறங்கும் போது, மாஞ்சா நூலும் ரெடியாகிவிடும்.
 
காத்தாடியில் ஒருவர் பறக்கவிடுவதற்கு உதவ வேண்டும். ஒருவர் நூல் விடுவதற்கு வேண்டும். எப்பவாவது என் கைக்கு வந்தால் சர்ரென்று இழுத்து காத்தாடி என் தலைக்கு மேல் வருவதற்கும், வானத்தில் சர்க்கிள் அடிக்கவும்  கற்றுக் கொள்வேன். டீல் போடுவது என்பது 20/20 ஐ விட சுவாரஸ்யமானது. பறந்து கொண்டிருக்கும் காத்தாடிக்கு மேலே அல்லது பக்கதிலே பறந்து கொண்டேயிருக்கும் போதே எதிர்பார்க்காத சமயத்தில் சர்ரென்று மேலோ அல்லது கீழோ பாய்ந்து எதிரியின் காத்தாடியின் நூலுடன் சேர்த்துவிட வேண்டும். டீல் போட்டவுடன் நூலை வேகமாக விட வேண்டும். அப்போதுதான் ஒரே இடத்தில் உராயந்து நூல் அறுபடாமல் இருக்கும். அடுத்தவனின் காத்தாடி அறுந்து அது ஆடி ஆடி விழுவதைப் பார்ப்பது அகாயத்திலிருந்து தரையிரங்கும் விமானத்திப் போலிருக்கும். நாங்கள் எல்லாம் சத்தமாக  கத்திக் கொண்டு டான்ஸ் ஆடுவோம்.  அறுந்த காத்தாடிகளை பொறுத்த மட்டில் யார் கைக்குக் கிடைத்ததோ அவர்களுக்கு அது சொந்தம். அந்த நூலைப் பார்த்து அடுத்த தடவை மாஞ்சாவில் ஏதேனும் ஒரு புதிய பொருள் சேர்க்கப்படும்.
 
விழுப்புரத்தில் நான் இளநிலை பட்டபடிப்பு இரசாயத்தில் படிக்கும் போது, திருவண்ணாமலையில் என்னுடன் பள்ளியில் படித்த ”மூர்த்தி காபி ஒர்கஸ்” வீட்டு இரட்டையர்கள் வணிகவியல் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் என் நண்பர்களிடம் ”இருவரும் என்னுடன் டேனிஷ் மிஷன் பள்ளியில் படித்தவரகள்,. ஒருத்தன் பேரு ரகுராமன் இன்னொருத்தன் ராஜாராமன்” என்றேன். ஆனாலும் அவர்களிருவரும் என்னைத் தெரியாதது போலவே நடந்து கொண்டனர். இத்தனைக்கும் நான் கல்லூரி மாவர் பேரவையின் வைஸ் பிரஸிடன்ட். என் நண்பன் ரகுபதி பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவர்களிடம் போய் ”பிரசாத் உங்கப்பள்ளியில் தான் படிச்சானாம். திருவண்ணாமலை விட்டுட்டு ஏன் இங்க படிக்க வந்தாங்கன்னு தெரியல ஒரு நாள் கேக்கணும். னோ என்னைத் தெரியாத மாதிரியே நடந்துக்குறானுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.நீங்க உண்மையிலேயே டேனிஷ் மிஷன் பள்ளியில் படிச்சீங்களா? அவனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான். அவர்கள் இருவரும் “அவனை நல்லாவேத் தெரியும். திருவண்ணாமலைலே இருக்கும் போது இவனும் இவங்க அண்ணன் கணேசனும் சேர்ந்து எங்களுடைய காத்தாடிய டீல் போட்டு வேணும்மே அறுப்பானுங்க. எத்தனை கோலி பம்பரம் ஒடைச்சிருக்காங்க தெரியுமா? அதனாலதான் அவனை பார்த்தாலே யாருன்னு தெரியாத மாதிரி நடந்துக்குறோம். அவனோட பேசறதுக்கு இஷ்டமில்லை” என பதில் சொல்லி அனுப்பினார்கள். இந்த மாதிரி அல்ப சின்ன விஷயங்களை அதுவும் எப்பவோ பள்ளி பருவத்துல நடந்ததை இவ்வளவு வருஷம் கழிச்சி ஞாபகம் வச்சிருப்பாங்களா. என்று எண்ணி “ சரியான அல்ப கொட்டாங்கூச்சிங்க! ஆள்தான் வளர்ந்திருக்காங்க குதிராட்டாமா. புத்தி வளரலை” என்று ரகுபதியிடம் கூறி விட்டு படிப்பு முடியும் வரை அவர்களை சட்டை செய்யாமாலிருந்துவிட்டேன்.   
 
செல்வி ஜெயலலிதா எம் ஜியாரல் அரசியலுக்கு வரவழைக்கப் பட்டவர். ஆயினும் எம்ஜியாருக்கு அவரிடத்தில் நம்பிக்கையில்லை. அதனால் போயஸ் கார்டனிலேயே தங்கி வேவு பார்ப்பதர்க்காக எம் ஜி யாரால், நடராஜன் உதவியினால் அனுப்பப்பட்டவர்தான் சசிகலா. சசிகலா முதலில் ஜெயலலிதா கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சிகளை காணொலியாக மாற்றி அதை அவரிடத்தில் கொடுத்து வந்தார். இது நாளடைவில் பிரிக்க முடியாத நட்பாக மாறியது. கணவனையும் உதறிவிட்டு அம்மாவுடனேயே இருக்கும் வரையில் அது போனது. ஒரு காலத்திற்கு பிறகு யாருமே சசிகலா என்று கூட கூப்பிட முடியாதபடிக்கு ”சின்ன மேடம்” ஆனார்.
 
கடந்த வருடத்தில் ஜெயலலிதா வென்ற சில மாதங்களுக்கு எல்லாம் சசிகலாவை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றினார். சசிகலாவின் சொந்த்காரர்கள்ற்றும் கணவர் நடராஜன் மீதும் தொடர்ந்து வழக்குகள் கைதுகள் போன்றவை அரங்கேறின. கட்சிக்காரர்கள் மொட்டையடித்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சில அமைச்சர்கள் கூட சசிகலா என்ற பேரைசுதந்திரமாக உச்சரிக்கத் தொடங்கினர். தமிழருவி மணியன் கூட இது நிரந்திர பிரிவு என்றுதான் கருதினார்.
 
நானும் என் நண்பன் மணியும் இது தற்காலிக நாடகமே என்றும் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக நடத்தப்படும் நாடகம் என்றே நினைத்தோம். ஆனாலும்  உள்ளூற இது உண்மையாகவிருந்தால் தமிழகம் உருப்படுமே என்ற ஆதங்கம் இருந்தது நிஜம். ஆனால் தமிழக மக்களை அடிமுட்டாள்கள் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்தவர்கள் மூன்று மாத பிரிவுக்குப் பிறகு ஒன்று சேர்ந்தனர். ஒரு பெரிய நடிகை, அதுவும் ஒரு அறிவாளியாக அறியப்பட்டவர், மிகுந்த மன உறுதி கொண்டவர் என்று எல்லாம் புகழப்படும் ஜெயலலிதா ஒரு ஏவலுக்கு வந்த ஒருவருடன் உடனபிறவா சகோதரியாக் உறவு கொண்டு, அவர் ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஏன் ஆட வேண்டும்? எல்லாம் நம் தலைவிதி.
 
இராமயணம் மஹாபாரதம் எப்போதோ பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த காவியம் என்றாலும் இன்றும் இதே கதை தொடர்ந்து நடக்கின்து என்பதுதான் உண்மை. கைகேயிக்கு மந்திரை எப்படியோ, அப்படி ஜெயலலிதாவிற்கு சசிகலா.
 
தசரதன் இராமனுக்கு மூடி சூட்டுவதற்கு நாள் குறிக்க ஜோதிடத்தில் வல்லுனர்களுடன் ஆலோசிக்க புகுந்தபின் நான்கு பெண்கள் இராமன் பேரில் கொண்ட காதலால் கால்கள் தரையில் நிற்காமால் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் பார்த்தவர்களுக்கு வணக்கம் சொல்லி கொண்டும் ஒட்டமாக ஓடிச் சென்று கௌசல்யையிம் கூறினர்.
ஆடுகின்றனர்; பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர்; பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர்; சொல்லுவது ஒர்கிலர்;
மாடு சென்றனர்; - மங்கையர் நால்வரே.
கௌசல்யை மகனுக்கு பட்டாபிஷேகம் என்பதினால் மகிழ்தாலும் அரசன் தவம் மேற்கொள்வானே என்று வருந்தியவள் இன்னொரு அரசியினான சுமத்திரையுடன் அவரகளுடைய குல தெய்வத்தின் கோவிலுக்குச் சென்று வணங்கி கோதானமும் செய்தாள்.
 
ஜோதிடர்கள் முடி சூட்டுவதற்கு நாளையே நல்ல நாள் என்று சொல்ல தசரதன் வசிட்டனை அழைத்து பட்டாபிஷேகத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யவும் இராமனுக்கு ராஜ்ஜிய பரிபாலனம் பற்றி உபதேசிக்கவும் வேண்டினான். அவனும் மகிழ்ச்சியுடன் இராமனுடைய இல்லதிற்கு விரைந்து சென்று அரசன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பவாறாஉபதேசித்தான். கம்பன் இவ்விடங்களில்  வள்ளுவன்  குறளில் கூறியதை மிக அழகாக எடுத்தாள்வான்.
 
வான்மீகத்தில்நாள் பார்த்ததே வசிட்டன் என்றே வருகின்றது. ஆனால் கம்ப இராமயணத்தில் ஜோதிடர்கள் நாள் பார்த்துக் குறித் பின் தான் வசிட்டனுக்கு தெரிவருகின்றது என்று மாற்றம் செய்துவிடுகின்றான். ஏனேனில் குறிப்பிட்ட நாளில் பட்டாபிஷேகம் நடை பெறவில்லை. அது மட்டுமின்றி வசிட்டன் முக்காலும் உணர்ந்தவன். அவனுக்குத் தெரியும், இராவாண வதம் நடை பெற வேண்டுமென்றால், இராமன் கானகம் புக வேண்டும்.  அவனே நாள் பார்த்தான் என்றால் அங்கு conflict of interest வருகின்றது என்ற காரணத்தினால் போலும், கம்பன் மாற்றிவிடுகின்றான். கல்கியின் பொன்னியின் செல்வனில் ஐந்தாம் பாகத்தில் அருள்மொழிவர்மன் மூடி சூட்டுவதற்கு நாள் பார்த்த ஜோதிடர் இராமர் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்துக் கொடுத்த பரம்பரையில் வந்தவர் என்று குந்தவை குறிப்பிடுவதாக ஒரு வசனம் வரும். அருள்மொழிவர்மனும் குறித்த நாளில் பட்டம் சூடாமல் தன் சிறிய தந்தைக்கு பட்டம் சூட்டிவிடுவான்.
 
வசிட்டன் இராமனை அழைத்துக் கொண்டு அவர்கள் குலதெய்வமான திருமால் கோவிலடைந்து இராமனை புனித நீராட்டி, தர்ப்பைப் புல் பரப்பி அதில் விரதம் மேற் கொள்ள வழி செய்தான்.
 
தன் நகரத்தை அலங்கரிக்க ஆணையிட, அதை கேட்ட மக்கள்
மங்கையர் குறங்கு என வகுத்த, வாழைகள்
அங்கு - அவர் கழுத்து எனக் கமுகம் ஆர்ந்தன;
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன;
கொங்கையை நிகர்த்தன, கனக கும்பமே.
மக்கள் வாழை, கமுகு நிறைத்து முத்து மாலைகளைத் தொங்கவிட்டு பூர்ணகும்பங்கள் வைத்து நகரை அலங்கரித்தனர். பெண்களைப் பற்றியே உவமைகளையே அனைத்திற்கும் கூறியது நயம். வாழை திரட்சிக்கும் கமுகு வரைக்கும் மென்மைக்கும், தாமம் வெண்மைக்கும், கும்பம் வடிவமைப்புக்கும் ஒளிக்கும் உவமையாகின. மரபுவழி உவமைகள் உவமேயங்களாக வந்துள்ளது. (குறங்கு – தொடை)
 
மக்கள் இவ்வண்ணம் நகரைங்கரித்துக் கொண்டிருக்க
அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.
கூனி செய்த சூழ்ச்சியால் இராமன் காடு சென்று இராவண வதம்நடைபெற இருத்தலின், ‘இராவணன் இழைத்த தீமை போல்என்று கூனியைக் கூறினார்.  இராவணன் -அழுகிறவன் என்பது பொருள். கைலாய மலையைத் தூக்கியபோது கை அடியில் அகப்பட்டுக் கொண்டு கதறினான்.ஆதலின் இறைவன் இராவணன் என்று பெயர் கொடுத்தான் என்பர்.  இராவண வதநோக்கமாகத் தேவர்கள்அவளை அனுப்பினர். ஆதலின், அத்தேவ ரகசியத்தை உட்கொண்டு கூனி தோன்றினாள் என்பாரும்உளர். இப்பாடலை மிகைப் பாடலாக கோவை கழகத்தினர் கருதவில்லை. ஆனால் தீங்கு இழை இராவணன்   செய்த தீமைதான்இப்பாடலை மிகைப் பாடலாக கருதுகின்றனர். தாடகை வீழ்ச்சியைக் கூட கவி இராவணன் வீழ்வதற்கு காணம் காட்டுகின்றார் கவி. கதையின் நோக்கம் இராவண வதம்.
 
எல்லோராவிலிருக்கும் இந்து குகைக் கோவில்களில்  பலவிடங்களில் இராவாணன் கைலயங்கிரியை தூக்குவதாக உள்ளது. முட்டிப் போட்டு மடித்து மலையை தூக்குவதாக இருக்கும் சிற்பத்தில் மேலே தேவ கணங்கள், பூத கணங்கள், அம்மையப்பன், விநாயகன் என்று அனைவருமேயிருப்பர். சிவனிடம் ஒரு கள்ளத்தனமான சிரிப்பும், அம்மையிடம் அபரிதமான கருணையும் வெளிப்படும் வகையில் இந்த சிற்பத்தை சிற்பி அமைத்திருப்பான். இராவணனின் கை மாட்டிக் கொள்வது போலவும் சிற்பம் உண்டு.
 
தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் - வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்
இராமன் சிறுவனாய் இருந்தபொழுது கையிற் சிறு வில்லும் மண்ணுருண்டை கோத்த அம்பும் கொண்டு குளத்தருகே விளையாடி வருகையில், இக்கூனி, குடங்கொண்டு நீர்மொண்டு மகளிருடனே கலந்து வரும்போது, தன் அரண்மனைத் தாதிதானே என்ற சொந்தத்தால்,  மண்ணுருண்டையை வில்லிற்கோத்து இவள்மேல் அடித்தான். இவள்
கைநெகிழ்ந்து  குடம் வீழ, மற்ற மகளிர் பரிகசிக்க, இவள் கடுங்கோபம் உற்று இராமனைத் துன்புறுத்தச் சமயம் நோக்கி இருந்தாள் என்பதோர் கதை,இக்கதை வான்மீகத்தில்இல்லை; கம்பரும் விரிவாகக் கூறவில்லை;  ஆயினும் கூனகம் புகத் தெறித்த கொற்றவில்லி”.“கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டு அரங்க வோட்டி  உள் மகிழ்ந்தநாதன்”, “கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் (திவ்யப். 780, 799, 2947) என்னும்ஆழ்வார்கள் அருளிச் செயலால் விரிவாக அறியப்படுகிறது. தொண்டை - கொவ்வைக் கனியைக் குறித்தது.. ஆழ்வார் ஒருவர் பாடலில் கடைசி சொல்லாக ”கோவிந்தா” என்று கூறுகின்றார். இராமர் சாதாரணமாக விஷமங்களோ லீலைகளோ செய்தில்லை. அதையே தினம் தோறும் தொழிலாக செய்து கொண்டிருப்பவன் கண்ணன் மட்டும் தான். அது மட்டுமின்றி இராமர் “மரியாதைக்குறிய உயர்ந்த புருஷோத்தமர்” கூனியின் மேல் வில் விட்டது மட்டுமே இராமர் செய்த ஒரே லீலை. ஆனாலும் ஆழ்வருக்கு ராமன்  குறை கூற விரும்பவில்லை.அதனால் பழியைத் தூக்கி “ கோவிந்தா” என்று கண்ணன் மீது போட்டுவிடுகின்றார். சுக்ரீவனுக்கு இராமன் இந்திகழ்ச்சியை சொல்லும்
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யேல் மற்று இந்
நெறி இகழ்ந்து யான் ஒரு தீமை செய்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குளவு தோளாய்
வெற்றியின் எய்தி நொய்தின் வெந்துயர்க்கடலில் வீழ்ந்தேன்.
(
அரசியற்படலம் 12)
“எவரையும் சிறியவராகக் கருதாதே . நான் சிறு வயதில் கூனியின் மேல் விட்ட மண் அம்புகள் அவள் நெஞ்சிலே பாய்ந்து, பகை வளர்த்து நான் காட்டிற்கு அனுப்பபடுவதற்கும் காரணமாயிற்று” என்று சுக்ரீவனுக்கு இராமர் கூறுகின்றார்.
 
படுத்திருந்த கைகேயை அவள் கால் தீண்டி எழுப்புகிறாள். தீண்டுதல் என்ற சொல் பாம்பு விடத்துடன் தீண்டியது என்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இந்தச் சொல்லைத் தேர்ந்துக் கம்பர் இங்குப்பயன்படுத்துகிறார். தீண்டினாள் காலக்கோள் ஆனாள் என்பது கம்பரின் அடியாகும். அதாவது காலக்கோள் ஆன இராகு என்ற பாம்பினைப்போல் கூனி கைகேயைத் தீண்டினாளாம். தீண்டலும் உணர்ந்த கற்பினள் கைகேயி. அவள் மாற்றார் கை தன்மீது பட்டுவிட்டால் அதனை உணர்ந்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிற இயல்பினை உடையவள்.  முழுதும் உறக்கம் கலையாமல் இருக்கின்றாள் கைகேயி.  
 அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள்போல்,
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்,
உணங்குவாய் அல்லை; நீ உறங்குவாய்என்றாள்.
சந்திரனை இராகு பிடிப்பது போல் உன்னை துயர் சூழும் வேளையில் ஒன்றும்ம் அறியாமல் உணராமல் நீ உறங்கி கொண்டிருக்கின்றாயே என்று மந்திரை கைகேயியைப் பார்த்து கேட்டாள்.
 
எங்கள் வீட்டீல் அந்தி மாலை வேளையில் படுத்துத் தூங்கக் கூடாது என்பது கட்டாய விதி. உடம்பு சரியில்லாமல் படுத்திருந்தாலும் சாயங்காலம் முகம் கழுவி வீபூதி அணிய வேண்டும். அதே போல் வாசல் விளக்குப் போட்ட உடனேயே வீட்டிற்கு வந்து கை கால் முகம் கழுவி வீபூதி அணிந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும்; 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் சாப்பிடக்கூடாது, அது ராட்சன் சாப்பிடற நேரம் . அதே போல் இரவு பத்தரை மணி தாண்டிச் சாப்பிடுவதற்கும் தடா. இங்கோ எல்லோருமே மாலை ஆறு மணிக்கு இரவு சாப்பாட்டு முடித்து விட்டு மறுபடியும் இரவுப் பதினொன்றுக்குச் சாப்பிடுகின்றனர். இராட்சர்களா என்று சொல்லத் தெரியவில்லை என்றாலும் குரங்கிலிருந்து, பாம்பு தேள் எல்லாவாற்றையும் சாப்பிடுகின்றனர்.  
 
பராவ அரும் புதல்வரைப் பயக்க, யாவரும்
உராவ அருந் துயரை விட்டு, உறுதி காண்பரால்;
விராவ அரும் புவிக்கு எலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?’ என்றாள்
இராமனை மகனாக பெற்ற எனக்கு என்ன குறை வரமுடியும் என்கின்றாள் கைகேயி.
 
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்,
சூழ்ந்த தீவினை நிகர் கூனி சொல்லுவாள்,
வீழ்ந்தது நின் நலம்; திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசலை, மதியினால்என்றாள்.
இராமன்பால் அன்பு பெருகிய கைகேயி கூறவும்அவள் மனத்தைத் திரிக்கக் கூனிகோசலைவாழ்ந்தனள்என்று பெண்ணுக்குப் பெண் பொறாமைப்படும் உலகியல்பு பற்றித் தூண்டினாள். சூழ்ந்ததீவினை கைகேயியைச் சுற்றின பாவம் என்றதனால் அது  தன் பயனைச் செய்தே தீரும் என்றாராம்.இனி வாழ்வாள்என எதிர்காலத்தால் கூற வேண்டுவதை வாழ்ந்தனள்என இறந்த காலத்தாற் கூறியது தெளிவுபற்றி  வந்த கால வழுவமைதி. கோசலை தன் திறமையால் தயரதனிடம்  இதனைச் சாதித்துக் கொண்டாள் என்பதுபடக் கூறிக் கைகேயியைத் தூண்டினாளாம்.   
 
அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை,
மன்னவர் மன்னனேல் கணவன், மைந்தனேல்
பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன்; பார்தனில்
என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு?’ என்றாள் .
கோசலையின் நாயகனோ சக்கரவர்த்திமகனோ புகழுடைய பரதன்; இதற்கு மேல் அவளுக்கு வரக்கடவதாகிய வாழ்வு என்ன? ஏற்கெனவே மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டுதானே உள்ளாள்என்று கைகேயி கூறினாள். முன்பு இராமனைப் பயந்த எற்குஎன்று இராமனைத் தன்னோடு இணைத்துக் கூறிக் கொண்டது போலவே, வளர்த்தமை  பற்றிப் பரதனைக் கோசலை மகன் என்று கூறிப் பாராட்டினாள். இனி இதனைக் கைகேயிமேற்றாகவே உரைப்பாரும் உளர்.  ‘என் நாயகன் சக்கரவர்த்திஎன் மகன் பரதன் என்றால் கோசலைக்கு என்னைக் காட்டிலும் என்ன புதுவாழ்வு வந்துவிடப் போகிறது’  என்றாள் என்பதாக விளக்குவர். முன்னர் இராமனைத் தன் மகன் என்று கூறியுள்ளாள் என்பதை நோக்க அப்பொருள் சிறவாது இச்செய்யுளிலும்என்னின் மேல் அவட்கு எய்தும் வாழ்வுஎன்னாது, 'இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு' என்று கூறியதும் அப்பொருளுக்கு நேராக உதவாமை காண்க.
மாற்றம் அஃது உரைசெய, மங்கை உள்ளமும்
ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்;
வேற்றுமை உற்றிலள், வீரன் தாதை புக்கு
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே கொலாம்?    இராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற சொல்லைக் கேட்ட கைகேயி கோசலைப் போலவே மகிழ்ந்து கூனிக்கு முத்து மாலை பரிசளித்தாள். கோசலை எவ்வாறு அறிந்தாளோ அவ்வாறே கைகேயி நினைத்தாள் என்பதாகும். காரணம் இருவர்க்கும் நாயகன் தயரதன் என்பதனால் எப்பொழுதும் கைகேயியின் மனத்தில் தயரதன் இணங்கிவீற்றிருத்தலின் தயரதன் மனமே கைகேயி மனமாயினது அன்றி வேறில்லை யாதலின்எனக் கூறினும் பொருந்தும். ஆற்றல் என்பது பெருமைமூவகையாற்றல்களுள் பெருமையும் ஒன்று.  மூவகை ஆற்றலாவன -அறிவுஆண்மை, பெருமை என்பன. . கூனி பொன்மாலையை நிலத்தில் எறிந்தாள் ;  அது தாக்கி நிலம்பள்ளம் ஆயிற்று.
 
சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன்,
அவந்தனாய், வெறு நிலத்து இருக்கல் ஆன போது,
உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது ?’ என்றாள்.    ‘இராமனும் சீதையும் சிங்காதனத்தில் வீற்றிருக்கையில் அவர்கள் பாதத்தின் கீழ் வெறுந்தரையில் பரதன் இருப்பானே! இதற்கா மகிழ்ச்சி அடைகிறாய்நீ மகிழ்ச்சி அடையும்படி உனக்குஉண்டான நன்மைதான் என்ன?’ என்று  மந்தரை கைகேயியை வினவினாள். தனக்கு வருகின்ற தொல்லையைமேற்பாட்டில் கூறியபிறகு. இங்குப் பரதனுக்கு வருகின்ற  துன்பத்தைக் கூறினாள். அவத்தன்- அவந்தன் - வீணானவன் - ஒன்றுக்கும் பயனின்றிப் போனவன்.          
 
பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை, பண்டு
ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால்,
தேக்கு உயர் கல் அதர், கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்.
பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பியது,  “ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற் காணியவிழைவதோர் கருத்தன்ஆதலால் .......கேகயம் புக..போதி”  என்றனன்’ (1309.)என முன்னர் வந்துள்ளது.  கேகய தேசத்தரசனான பரதனது மாமன் யுதாசித்து அழைக்கப் பரதனைத் தயரதன் அனுப்பினான்.  யுதாசித்து அழைப்பின் பேரில்தான் அனுப்பினானேயன்றித் தானாக அனுப்பவில்லை தயரதன். ஆயினும் அச்செயலைத் தன்கருத்திற் கேற்ப வளைத்துக்கொண்ட மந்தரை  ‘இராமனுக்கு முடிசூட்டப் பரதன் தடையாக இருப்பானோ என்று கருதியே தயரதன் பரதனைக் கேகயத்திற்கு விரைவாக  அனுப்பிவைத்தான்’ என்று கூறினாள். பரதன்பால் பிரிவு
காட்டினாள் போன்று பேசிய மந்தரை கோசலை  வாழ்ந்தனள்’ என்றாற்
போல, தயரதனும்  திட்டமிட்டே இராமனுக்கு  முடிசூடும் செயலை நடத்தத்
தொடங்கினான்என்றும் கூறிகைகேயியின் மனத்தில் மாசு ஏற்றினாள்.
கல் அதர் -  வெகுதூரத்தில் அனுப்பினான்விரைவாக அனுப்பினான் என்றெல்லாம் சொற்களை அடுக்கிப் பெய்து மந்தரையின் சொற் சாதுரியத்தைக் கம்பர் காட்டிய அருமை அறிந்து இன்புறத் தக்கது
 
அரசர் இல் பிறந்து, பின் அரசர் இல் வளர்ந்து,
அரசர் இல் புகுந்து, பேர் அரசி ஆன நீ
கரை செயற்கு அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்;
உரை செயக் கேட்கிலை; உணர்தியோ?’ என்றாள்.
நீ அரச குலத்த்தில் பிறந்து வளர்ந்து மணந்து பேரரசி யாகிய நீ அருந்துயரத்தில் இருக்கின்றாய் அதை உனரவிலையே என்கின்றாள். எல்லா அரசகுலத்திலும் அரண்மனை சூழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். அரகுலத்தில் பிறந்தும் கைகேயி அறியாமலிருக்கின்ராளே என்று மந்தரி சீற்றத்துடன் கூறினாள்.
 
வெயில் முறைக் குலக் கதிரவன்      முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும்      உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை      மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால்,      என் சொனாய்? - தீயோய்!
மூத்தமகன்அரசுரிமை பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் அவ்வுரிமையை உடையமரபு மனுமுதல் மரபுஎன்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும்பரதன்இலக்குவன்சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் செய்தியே என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும்சொல் ஆதலின், ‘கேகய குலத்து உரிமையைஎன்று பொருள்கூறிகைகேயி தான் பிறந்த குலத்தைச்சுட்டினாள் எனலும் ஆம். யான் பிறந்த கேகய குலத்துக்கு, புகுந்த மனுமுதன் மரபுக்கும்  குற்றம் அடைய என்ன வார்த்தை சொன்னாய்?’ என்று கூனியைக் கடிந்தாள் எனலாம். பெண்டிர்புக்க குலத்தையும்,பிறந்த குலத்தையும்  ஒக்க நினையும் வழக்கம் உண்டு என்பதை. புக்க வழிக்கும் போந்த வழிக்கும், புகை வெந்தீஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ?”  என்ற  (5224) பாடற் பகுதியிலும் காணலாம்.  முதற்பொருளோடு  “பலாவம் பொழிலின் ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்கலாவம் புனைந்த களிமயில்மூத்தது எனக் கருதஎன்ற  பின்னுள்ளோர் பாடல் (தணிகைப்.  களவு.  244) பொருந்துவதாகும். புலை - கீழ்மை. புல் என்பது அற்பம் என்றாகும். ஆதலின் அற்பத் தன்மை. எனவே கீழ்மை என்றாயிற்று.மந்தரை கூறியது அரச குலத்து முறைமைக்கு மாறுபடாமல் பொருந்துமேல் ஏற்றுக்கொள்ளலாம் என்பது போலச்சற்றே கைகேயியின் மனத்தில் மெல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளதையும் அறியலாம்.   மயில்முறைக் குலத்து உரிமையாவது - மயிலின் குஞ்சுகளுள்  முதற் பார்ப்புக்கே தோகையின் பீலி பொன்னிறம் பெறும். அதன் வழிப்பார்ப்புகளுக்கு அவ்வாறாகாது. அக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் என்பது கச்சியப்ப முனிவரின் பாடல் பொருள். பாடல் வரிகள் இவை:
 பலவாம் பொழிலின் ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்
கலவாம் புனைந்த களிமயில் மூத்ததெனக் கருதச்…’
பீலி பொன்னிறம் வாய்க்கப் பெற்ற மயில் ஆடத் தொடங்கிய பின்னால்தான் ஏனைய மயில்கள் ஆடத் துவங்கும் என்ற குறிப்பினையும் முனிவர் தருகிறார். இதை குறித்து டோண்டு ராகவன் தன் வலைப் பூவில் நாமக்கல் கவிஞரைப் பற்றி குறித்து எழுதிய சுட்டி  http://dondu.blogspot.hk/2010/03/blog-post_3615.html
 
எனக்கு நல்லையும் அல்லை நீ; என் மகன் பரதன் -
தனக்கு நல்லையும் அல்லை; அத்  தருமமே நோக்கின்,
உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட,
மனக்கு நல்லன சொல்லினை - மதி இலா மனத்தோய்!
மந்தரை சொல்லியபடி  நடந்தால் பழிபாவங்களுக்கு இடனாதலின் எனக்கும், என் மகன்பரதனுக்கும் நன்மையன்றுஎன்றாளாம். அன்றி, அரச தருமத்தை ஆராயின் இது ஒரு சதிவேலை என எண்ணப்படுதலின் மந்தரைக்கே தீதாய் முடியும் என்றும் கூறினாள் கைகேயி. புத்தி பூர்வமாக இல்லாவிடினும் இத்தகைய மாறுபாடான செயல்கள் விதிவழியாகவே நிகழும் ஆதலின் ஊழ் வினை தூண்டஎன்ற சொன்னாள். மனக்கு- மனத்துக்கு அத்துக் கெட்டது. இதனாதல் முன்பு, “இராமனைப் பயந்த எற்கிடருண்டோ” (1453) என்றுகூறிய கைகேயி, “என்மகன் பரதன்என்று பரதனைத் தன் மகன் என்று கட்டுகிற அளவுக்கு மந்தரையின்போதனையால் மனமாற்றம் அடைந்திருக்கிறாள் என்பது புனலாகும்.      
 
பிறந்து இறந்து போய்ப் பெறுவதும்,  இழப்பதும், புகழே;
நிறம் திறம்பினும், நியாயமே திறம்பினும், நெறியின்
திறம் திறம்பினம், செய் தவம் திறம்பினும், செயிர் தீர்
மறம் திறம்பினும், வரன்முறை திறம்புதல் வழக்கோ? எதை இழந்தாலும் புகழை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாரம்பரிய முறை தவறிநடந்தால் புகழுக்குக் கேடு உண்டாகும்.  ஆதலால் வழக்கன்று என்றாள்.   வரன்முறை  திறம்பாமைபரதன் அரசு ஏற்பதில் நியாயப்படுத்தப்பட்டால் மற்றவை திறம் புதலைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன் என்ற அளவில் கைகேயியின் மன மாற்றம்நமக்கு இங்கே புலனாகும். இதுவே கூனியின் முதல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.  செய்தவம் மேற்கதி, வீடுபேறுகளைக்  ட்டுவிப்பது   இம்மைப் புகழை நோக்க அவற்றைக் கைவிடினும் விடலாம்என்ற கைகேயியின் மனமாற்றம் இங்கே சிந்தித்தற்குரியதாகும். 
 
போதி, என் எதிர்நின்று; நின் புன்பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனென்; புறம் சிலர் அறியின்,
நீதி அல்லவும், நெறி முறை அல்லவும்,  நினைந்தாய்
ஆதி; ஆதலின், அறிவு இலி! அடங்குதிஎன்றாள்.   நீ என் தோழியாதலால்  உன் நாவைத் துண்டிக்காமல் விட்டேன். இத்தகைய பேச்சுவெளியார் காதில் விழுந்தால் நீ அரசருக்கெதிராகச் சதி தீட்டியதாக அறிந்து அரச தண்டனை கிடைக்கும்.அதனால் வாயை மூடு என்றாள் கைகேயி. அற்பத்தனமாகப் பேசியபடியால் நாக்கைப் புன்பொறி என்றாள். 
 
நல்லவர்களும் கூட மனம் திரிந்து தெரிந்தோ தெரியாமலோ பிறர்க்குத் தீமை புரிந்துவிடுகின்றனர். இராம கதை நடக்க கைகேயி கட்டாயம் மனம் மாறவேண்டும். இரு வரங்களைப் பெற வேண்டும். இராமன் கானகம் செல்லவேண்டும். ஆழீசூழ் உலகம் உள்ளளவும் பழி சுமக்க வேண்டும்.  சோ ராமாசுவாமி நல்லவராவும் நேர்மையானவராகவும் இருந்தாலும் அவரால் ஜெயலலிதாவையோ இல்லை கருணாநிதியின் மனதை சூழ்ச்சியாலோ இல்லை தன் வாதத் திறமையாலோ மாற்ற முடியுமா? அவர்கள் இருவருமே இவரை கறிவேப்பிலையாகத் தான் பயன் படுத்திக் கொள்வார்கள். ஆனாலும் சோவிற்கு ஒரு நப்பாசை. எப்படியாவது தமிழகம் உருப்பட்டால் சரி என்பதுதான் அது. அவரும் பல சூழ்ச்சிகளை திரைமறைவாகவும் நேராகவும் செய்கின்றார் என்றாலும் முழுப்பயனும் கிடைக்குமா என்றால், சத்தியமாக ஒரு சதவீதம் கூட தேறாது. கூடவிருந்தே சூழ்ச்சி செய்யும் சசிகலாவும், கருணாநிதியின் பல்கி பெருகிய குடும்பத்தினருடைய சூழ்ச்சியும்தான் நம் விதி. அதை அவரால் மாற்ற முடியுமோ?   
                                                                                                                                              தொடரும்

No comments:

Post a Comment