Friday, November 25, 2011

வெள்ளம்

சிறு வயதுமுதல் காதில் பிரச்சினையிருந்ததால் நீச்சல் கற்றுக் கொள்ள வாய்ப்பேயில்லை. சிறிய அண்ணன் மட்டும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் நீச்சல் கற்றுக் கொண்டான். அவனுடன் போகும் போது, கிணற்றில் இறங்கி அவர்கள் நீச்சல் பயில, மேலே உட்கார்ந்திருக்கும் நான் யாரையாவது நீச்சல் நல்லாத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டால் அவனுக்கு நீச்சல் தெரியுமான்னு கேக்கறியே .......அவன் காவேரி ஆளுடா என்பான்.  பிறகு ஆறு ஒடுமிடத்தில் பெண்களும் கூட, மிகத் திறமையாக நீந்துவதைப் பார்த்திருக்கின்றேன்.


நான் வேலூரில் சிறியவனாக இருந்த போது பாலாற்றில் தண்ணீர் போயே பார்த்ததில்லை, வெள்ளத்தை எங்கே பார்ப்பது? திருவண்ணாமலையில் ஆறு பார்க்கவேண்டும் என்றால் சாத்தனூர் அணைக்குத்தான் செல்ல வேண்டும். கடலூரில் நாங்கள் இருந்த போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. சாத்தனூர் அணை திறக்கபட்டதாக அப்பாவிற்கு செய்தி வந்தது. அப்பாவும் “சரியாக இன்னும் எட்டு மணி நேரத்தில் (விடியற்காலை 3 மணி அளவில்) வெள்ளம் கடலூருக்கு வந்துவிடும்என்றார். தென் பெண்ணைக் கரையோரம் வசித்த நண்பனிடம் சொன்னதற்கு நாங்க பார்க்காத வெள்ளமா? என்றான். தென் பெண்ணையும், கெடில நதியும் கரைபுரண்டு வந்து வீடுகளையும் மாடுகளையும் அடித்துச் சென்றது. நணபனைத் தேடி போன போது பள்ளிக்கூடத்தில் அவ்னுடைய குடும்பம் தங்கியிருந்தது. வீட்டிலுள்ள் அனைத்தையும் வெள்ளம் கொண்டுப் போய்விட்டது அவனுடைய புத்தகங்களையும் சேர்த்து. அனைத்தையும் இழந்து அவன் நின்றபோது  பயம் ஒன்று தான் மனதிலிருந்தது.

சித்தூரில் தாத்தா மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் வந்தது. அப்பா வெள்ளப் பெருக்கை பார்வையிட்டு வந்ததும், விழுப்புரத்திலிருந்து கண் திறக்காமல் கொட்டும் அக்டோபர் மாத மழையில் கிளம்பினோம். வீட்டின் (ரங்கநாதன் தெரு) கோடியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சூரக்காய் உடைத்துவிட்டு NH 45 இல் திரும்பும்போது, எதிரில் வந்த லாரி சற்றே உரசியதால் பயணம் செயத காரின் ஒரு headlight பணால். ஏம்பா தூங்கலியா? என்ற அப்பாவின் கேள்விக்கு டிராவல்ஸ் ஓட்டுனர் “இபோதாங்க வந்தேன். ரெண்டு நாளா தூக்கமில்லாம வண்டி ஓட்டி வந்தேன்.. அவனை டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கச் சொல்லி வேலூர் வரைக்கும் நானே ஓட்டறேன். நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்க. அப்புறம நீ ஓட்டுவியாம். திருவண்ணாமலைலே ஹெட் லைட்டை மாத்திக்கலாம் அப்பா ஓட்ட, ஒரே ஒரு விளக்குடன் பயணம் தொடர்ந்தது.


வழியில் ஒரு தரைப் பாலத்தில்,  கார் டயரளவிற்கும் மேல் வெள்ளம் போய் கொண்டிருந்தது. பெரிய அண்ணா உயரம் கம்மி. தம்பிக்கோ வயதும் குறைவு. நல்ல உயரம் என்றால் அது என் இரண்டாவது அண்ணனும் நானும். நீங்க ரெண்டு பேரும் கையைக் கெட்டியாகப் பிடிச்சுண்டு, வெள்ளப் போக்கிற்கு எதிர்புறமாக போங்க. அணைத்தாற் போல் நான் காரை ஓட்டி வருகிறேன். ஒண்ணும் ஆகாது. நான் இருக்கேன் அப்பா சொன்னதும், வேலையின் நிமித்தம் எத்தனையோ வெள்ளத்தைப் பார்த்திருக்கார் என்ற நம்பிக்கையிருந்தாலும், பயத்துடன்  பாலத்தைக் கடந்தோம். சித்தூர் போவதற்கு முன்பே கடுமையான ஜுரம், இருவருக்கும்.

சுழித்துக் கொண்டு ஓடும் ஆற்றை முதல் முறையாக பார்த்தது ஹரித்வாரில். இரவு பத்து மணிக்குப் போய் சேர்ந்ததும் அங்கிருந்த மடாதிபதி “ போய் கங்கையில் ஸ்நானம் பண்ணிண்டு வாங்கோ. அதுக்குள்ளெ சாப்பாடு ரெடியாய்டும். துணைக்கு வந்த டெல்லி யூ என் ஐ கேன்டீன் நடத்துனரான நாரயணஸ்வாமி அய்யர் அவர்களின் மகன் முரளியும் வேறு வழியின்றி, மற்றொரு அக்டோபர் மாத இரவில் கங்கையின் படித்துரையில் மூழ்கிணோம். சில நொடிகளில் அந்தக் குளிர்ச்சி ஒத்துக் கொண்டு, நன்றாக அனுபவித்து நீராடீனேன். படித்துறையில் உட்கார்ந்து பார்க்கும் போது கங்கையின் அகலமும், சுழிப்பும், வேகமும், தண்ணீரில் விழும் வெளிச்சம் ஆற்றின் போக்கிற்கேற்ப நர்த்தனமாடிக் கொண்டே சென்றது. பெண் பார்த்து, இரு குடும்பத்தினரும் சரி என்று சொல்லி, நிச்சயதார்த்தமும் ந்டந்த பிறகு, கல்யாணத்திற்கு இடைப்பட்ட நாட்களில் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றிய மனைவியின் முகத்தைப்போல, பார்த்துக் கொண்டே வாழ்நாளைக் கழித்துவிடத் தோன்றியது.   

ஒரு கதையை, அழகான திரைக்கதையாக மாற்றி, இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்,  தேர்ந்த நடிக நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் திரையில் தோற்றுவிப்பதைப் போல, கம்பனும் ஒவ்வொரு காண்டத்தையும் பல படலங்களாகப் பிரித்து அவனுக்குள்ள மரபு மற்றும் இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் மிக அரிய சித்திரத்தை வார்த்தைகளின் கட்டால் நம் கண் முன்னே உருவாக்குகின்றான்.
இராமாயணத்திற்கு கம்பன், வால்மீகி வழியிலேயே ஆறு காண்டங்களாகப் பிரித்து அதற்கு அவன் இட்டப் பெயர்களையேயிடுகின்றான். வால்மீகி இராமாயணத்தில் பாலகாண்டம் வால்மீகியால் எழுதப் பட்டதா எனும் சந்தேகம் இன்றளவும் உண்டு என்கின்றார் அ. ச. ஞா. ஆனால் அந்த சந்தேகம் கம்பனில் இல்லையென்றாலும், ஏராளமான இடைச் செருகல்களும் பாட மற்றும் பிரதி  பேதங்களும் இருக்கின்றன.

இக்காண்டம் ஆற்றுப்படலம் தொடங்கி பரசுராம படலம் ஈராக 23 படலங்களைக் கொண்டது என்கிறது கோவைக் கம்பன் கழகம். ஆயினும் படலங்களின் எண்ணிக்கையிலும் பெயர்களிலும், ஏன் பாடல்களின் எண்ணிக்கையிலுமே வை மு கோ மாறுபடுகின்றார். அவரே கூறுவது போல் அவர் எத்தனை பிரிதிகளைப் பார்த்து எது சரி? எது தவறு? எது கம்பனுடையது? எது மிகைப்பாடல்? என கடினமாக ஆராய்ச்சியில் உழைப்பை செலவிட்டதாலேயே உருவானது பிரசித்திப் பெற்றது இவ்வுரை. இது கம்பன் பாடியதில்லை என சகட்டு மேனிக்கு, மிகைப் பாடல்கள் என தள்ளுவதும் காலத்தின் கோலம் என்கின்றார் அவர்.

சங்க இலக்கியத்தில் மூழ்கி நீராடியக் கம்பன், நாட்டையும் மக்களையும் தனித்தனியே வர்ணிக்க வேண்டுமென்று புதுமையை முதன் முதலில் புகுத்துகின்றான். ஒரு நாட்டின் வளம் அதன் மண்ணைச் சார்ந்திருந்தாலும், அந்த வளம் கூட மக்களின் மனவளத்தினால்தான் என்பதை உணர்ந்த கம்பன் ஆற்றுப் படலத்தில்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

குற்றத்தை மிகுதியாகச் செய்கின்ற ஐந்து பொறிகளாகிய அம்புகளும், மணியாரங்கள் ஒலிக்கின்ற மார்பகங்களையுடைய பெண்களின் கண்களாகிய  போர்த்தொழில் வெல்ல வல்ல அம்புகளும், ஒழுக்க நெறிக்கு அப்பால் செல்லாத கோசல நாடு என்று, மக்கள் ஐம்பொறிகளையும் வென்று அறநெறி வழியில் நடப்பதால்தான் நாடு சிறப்புற்றது என்ற கருத்தை முதல் பாடலிலேயே சொல்கின்றான்.

இமயமலையில் மழை பெய்வதை பொன்மயமான அம்மலையை வானவர் தங்கள் உலகிற்குக் கொண்டு செல்லவேண்டி இடைவிடாது வெள்ளித் தாரைகளை உருக்கி போட்டது மாதிரியும், உவந்து உள்ளது அனைத்தும் தரும் மேலானவர்களைப் போலும் மேகம் பொழிந்தது என அற்புதமாகக் கற்பித்து

புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி. வான்.
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்.
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின். வழங்கின-மேகமே. என்று கூறுவ்து நயக்கத் தக்கது..

மலையிருந்து இறங்கும் சரயு நதியின் வெள்ளம், தம்மிடம் வரும் காமுகரின் தலை முதல் கால் வரை சிறிது காலம் மட்டும், உள்ளன்பின்றி அவர்களின் செல்வத்தைக் கவரும் வரை தழுவிடும் விலை மகளிரைப் போல, மலையின் உச்சி, நடு மற்றும் அடிவாரத்தில் சிறிது தங்கி அங்குள்ள எலலாப் பொருளையும் வாரியிழுத்துக் கொண்டு வெள்ளம் போவதைக் கூறுவது:

தலையும் ஆகமும் தாளும் தழீஇ. அதன்
நிலை நிலாது. இறை நின்றது போலவே.
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.

பலவிடங்களில் விலை மகளிரை உவமையாக்குகின்றான் கவி.       

வினைப்பயன் காரணமாகவே மனித வாழ்வில்  மாற்றம் வருவது இயற்கையெனும் கணியன் பூன்குன்றானாரின்  கருத்திற்கேற்ப
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி.   மருதத்தை முல்லை ஆக்கி.
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு அரு மருதம் ஆக்கி.
எல்லையில் பொருள்கள் எல்லாம்    இடை தடுமாறும் நீரால்.
செல்லுறு கதியின் செல்லும்வினை    என. சென்றது அன்றே.

வேறுபாடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட்டல்லால்
மறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா. என்ற தாயுமானவரின் பாடலின் சமய கொள்கையை ஒத்து

கல்லிடைப் பிறந்து. போந்து  கடலிடைக் கலந்த நீத்தம்.
எல்லைஇல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள்ஈதுஎன்னத்
தொல்லையில் ஒன்றேஆகி. துறைதொறும். பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும்   பொருளும்போல். பரந்து அன்றே. 

எல்லாவுர்களிடத்தும் உள்ளே இருப்பது பரமாத்வின் அதே ஒளிதான், துளிதான் எனப்படுவதாக
போது அவிழ் பொய்கைதோறும். புது மணல் - தடங்கள்தோறும்.
மாதவி வேலிப் பூக வனம்தொறும். வயல்கள்தோறும்.
ஓதிய உடம்புதோறும் உயிர்  என. உலாயது அன்றே.

சரயுவின் வெள்ளத்தை  குடிகாரர்களுக்கும், வணிகருக்கும், வாரங்களுக்கும், யானைக்கும் என்று பலவிதமாக வர்ணித்த கவி அடுத்தப் படலமான நாட்டுப் படலத்தில் மிக அற்புதமாக நாடு, என்றால் அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போல் ஒரு நாட்டைப் படைக்கின்றான். 
                             
                                                                                 தொடரும்

1 comment:

  1. Anbulla Prasad,
    Chennai vellam possibly has influenced you to post the topic titled as vellam.
    One another post of splendour and spontaineity.
    The fact the the beauty of the running river is worth seeing for ever and linking it to the days of happiness that accrue to an individual before marriage and after Nitchayam is a classy example, and at the same time down to earth too.
    But of late(despite my being a lover of rains and used to witness with awe and wonder, the gushing waters form torrential rains, Chennai roads and the casualities reported time and again due to poor infrastructure, has dampened my enthusiasm a lot.
    A post script for this.
    In atemple in KANCHIPURAM recently all vedics joined for Punaruththaranam while rains played spoilt sport.All present were asked to sing the song from Thiruappavai.AAZHI MAZHAI KANNA" and after chanting it for 10 times , the rains have stopped.One of the old men assembled therein told the audience that this song is sung, when there is a drought to bring rains, and to stop rains when there is adanger of floods.
    Belief can really do wonders!!

    ReplyDelete