Friday, March 16, 2012

மாற்றல்

அப்பாவின் நண்பர்கள் சிலர், குழந்தைகள் படிப்பிற்காக,  குடும்பத்தை மெட்ராஸில் விட்டு விட்டு, அவர்கள் மட்டும் ஊர் ஊராகச் சென்றனர். தனியாக வசிப்பு சமையல்.  அப்பாவிடம் கேட்டால் “ எனக்கு வர சம்பளத்திலே என்னால இரண்டு குடும்பத்தை பராமரிக்க முடியாது. அதுவுமில்லாம பொண்டாட்டி, பசங்களைவிட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டேன்எனத் தெளிவாகக் கூறுவார். அம்மாவைக் கேட்டாலோ அப்பாவிற்கு ஒரு காபி போட்டுக்கத் துப்பு இருக்கா? இவரை எப்படி தனியா விட்டுட்டு இருப்பது. போயும் போயும் மெட்ராஸ்லே ? என் அத்தைகள் இருவர் சென்னையில் இருந்தனர். பெரிய மாமாவும் சென்னையில் கீழ்பாக்கம் கார்டன் காலனியில்தான் இருந்தார். அம்மாவிற்குச் சென்னை என்பது காஸ்ட்லியான இடம் தனக்குக் கட்டுபடியாகாது என்ற அபிப்ராயம்.

பெரிய மன்னி, என் மனைவி இவர்கள் பிறந்தது முதல் ஒரே ஊரிலே, ஒரே வீட்டிலே, எல் கே ஜி யிலிருந்து பள்ளிப் படிப்பு முடியும் வரையில் ஒரே ஸ்கூலிலேயே படித்தவர்கள். ஒரே தெருவில் இருந்தவர்களுடன்  ஒரே பேட்ச்சில் கல்லூரியில் சேர்ந்து முடித்தவர்கள். இதைக் குறித்து ரொம்பவே சுய தம்பட்டம் அடிப்பவர்களும் கூட. “அது எப்படிதான் வீடு மாறுவீங்களோ? அதே தலையணை, போர்வை இல்லாமல் எப்படி தூங்குவது? என்று கேள்விகள் வேறு.

நான் ஒண்ணாவதிலிருந்து எஸ் எஸ் ல் சி வரையில் இருந்தது ஆறு ஊர்களில். புது ஊரில் போய் செட்டில் ஆகி, பிள்ளை பிடிப்பவன் போல் நண்பர்களைப் பிடிப்பதற்கே குறைந்தது ஆறேழு மாசமாகும். அவர்களை என் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடிக்க வேண்டும். இது எல்லாமே நடந்து விட்டால், உடனேயே மாற்றல் வந்துவிடும். மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் அடுத்த ஊரில் மீண்டும் பிள்ளைபிடிக்கும் முயற்சி ஆரம்பம். எனக்கு ஒரேயொரு அதிர்ஷ்டம். ஒன்பாதவது காலாண்டுக்குப் பிறகு எஸ் எஸ் எல் சி  பரிட்சை எழுதுகின்ற வரைக்கும் ஒரே ஊர், கடலூர். அப்பாவிற்கு மெட்ராசிலிருந்து மண்டபம் (பனிஷ்மெண்ட் ஏரியா. சமீபத்திய உதாரணம். ஜாபர் சேட்) மாற்றலாகிய போதும், பிரோமோஷன் கொடுத்துவிட்டு ரிவர்ஷன் வந்து விடுமுறையிலிருந்த போதும், அண்ணன்கள் இருவரும் பல மாதங்கள் ஸ்கூல் போகமலேயே இருந்திருக்கின்றனர் சித்தூர் தாத்தாவின் வீட்டில்.

சித்தூரிலிருந்து 100 மைல் சுற்று வட்டாரத்திற்குள், அப்பா எங்கும் எதைப் பற்றியும் எங்கள் படிப்பையும் சேர்த்து, கவலைப் படாமல் கிளம்பிவிடுவார். பொதுப் பணித் துறையில் நேர்மைக்குக் கிடைத்தப் பரிசு மாற்றல்தான். பல வருடங்களுக்குப் பிறகு எம்ஜிஆர் ஆட்சியின் போது அவருடைய வெள்ள நிவாரணம் மற்றும் வரட்சிக்காலப் பணிகளுக்காக அப்பாவிற்குத் தங்க மெடல் கிடைத்தது. அப்போது அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் “இதை வச்சு என்னையா கிழிக்கப் போற? பொழைக்கத் தெரியாது ஆளூய்யா நீ. கொஞசம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தேன்னா மெட்றாஸ் அண்ணநகர்லே நாலுவீடு வாங்கியிருக்கலாம்”   

கடலூரில் நான் படித்த செயிண்ட் ஜோசப் ஸ்கூலில் ஹாஸ்டல் வசதி உண்டு. ஹாஸ்டலில் இருப்பவர்கள் எல்லாம் சுதந்திரமாக இருப்பவர்களாகவும் தங்கள் காரியத்தைத் தாங்களே செய்து கொள்வதில் வல்லவராகவும் இருப்பதாக எனக்குள் நம்பிக்கொண்டிருந்தேன். பெரிய அண்ணன், சிதம்பரத்தில் ஹாஸ்டலில் தங்கித்தான் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தான். கல்லூரி படிப்பு ஹாஸ்டலில் தான் என தீர்மானித்தும் வைத்திருந்தேன்.

மார்க்‌ஷீட் வாங்குவதற்காக பஸ்ஸில் திருத்தணியிலிருந்து திருவண்ணாமலை வழியாக கடலூர் பயணித்தேன். நண்பன் ரங்கநாதனின் வீட்டில் தங்கினேன். அவன் அப்பா ஹைவேஸ் இஞ்சினியர். அப்போதுதான் அவர்கள் கடலூரில் வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் செய்திருந்தனர். அன்றிரவு ரமேஷ் தியேட்டரில் ராஜ ராஜ சோழன்படம் பார்த்துவிட்டு, இரவு டீக்கடையில் டீ குடித்துவிட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதைப் பற்றிய கனவுடன் வீடு திரும்பினோம்.

சென்னைக்கு அண்ணனுடன் போகும் போது தி நகரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு போவதற்குள் 9 ஆம் நம்பர் பஸ்ஸிலிருந்து ஸ்டர்லிங் ரோடைக் காண்பித்து, இந்த ரோடு கடைசியில் தான் லயோலா காலேஜ். விவேகானந்தா காலேஜ் மயிலாப்பூர்ல இருக்கு. நாளை இரண்டிற்கும் அப்ளை பண்ணணும். அவன் அஹமதாபாத்தில் உள்ள ஐ ஐ ம் மில் படிப்பதற்கான நேர்முகத் தேர்விற்காகவும் வந்திருந்தான். அத்தை வீடு போய் சேர்ந்தவுடன் சித்தப்பா “நான் ஏற்கெனவே ஏ எம் ஜெயின்லே பர்ஸ்ட் குரூப் சொல்லி ரிசர்வ் செய்து விட்டேன்நான் லயோலா என சொல்லும் போதே “லயோலா காலேஜ் நம்ம குடும்பத்துக்கு ஆகிவராத காலேஜ் என்றார்.  ஏன் ஆகிவராது என்றதற்கு சித்தூர் தாத்தாதான் சொன்னா நீ வேண்ணா சித்தூர் தாத்தாவைக் கேட்டுக் கொள்’.  இனி இந்த பிறப்பில் லயோலாவும் இல்லை, இன்னொரு சித்தப்பா படித்த விவேகானந்தாவும் இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்தேன். சரி ஹாஸ்டலிலாவது இருக்கலாம் என்ற நினைப்பிலிருக்கும் போது அடுத்த நாள் சித்தப்பா சீனண்ணா கிட்டே பேசிட்டேன் இந்த வீட்டில்தான் தங்க போற.  ஹாஸ்டல் வேற தண்ட செலவு என் சுதந்திரக் கனவு முழுமையாகத் தகர்ந்தது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும். வேறு வழியேயில்லை என்பதினால் அமைதி காத்தேன். 

நான் சித்தப்பாவின் வீட்டில் தங்கி மீனம்பாக்கம் ஏம் ஜெயினில் படித்தேன்.  தாம்பரத்தில் வசித்து வந்த இன்னொரு அத்தையின் இரண்டு மகன்களும் அப்போது அதே கல்லூரியில் படித்தனர். அவர்கள் எல்லாம் காண் டீ னில் சாப்பிடுவார்கள். எனக்கு(வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போன தயிர் சாதம்தான். புத்தகம் மற்றும் நோட்டுகளுக்கு கட்டாயம் பிரவுன் பேப்பர் அட்டைப் போட்டு லேபிளில் பேர் எழுதி வைக்க வேண்டும் என்பது என் சித்தப்பாவின் கட்டளைகளில் ஒன்று. தயிர் சாதம் எவ்வளவுதான் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி எடுத்து சென்றாலும் ஒழுகி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பிரவுன் பேப்பர் கத்திரிக் கோல் சகிதம் ஞாயிற்று கிழமை பொழுதுகள் கழிந்தன.



சித்தப்பா வசித்தது பெரிய அத்தையின் வீட்டு மாடியில். அத்தையின் வீடு பெரிய பங்களா. ஐந்து கிரவுண்டில வீடு. அவுட் ஹவுஸ், இரண்டு கார் கராஜ் என, வாணி மஹாலுக்கு எதிர்ப்புறம், குப்புசாமி ஸ்ட்ரீட்டில் 7ம் நம்பர் வீடு. அத்திம்பேரை நான் பார்த்த ஞாபகமேயில்லை. அத்தைக்கு மொத்தம் 10 பசங்கள். இரு பெண்கள் மற்றவர் எல்லாம் ஆண்கள். நிறைய மாமரம் இருக்கும். எல்லாம் ஊறுகாய் போடத்தான் ஆகும். பெங்களூரா மரம் ஒன்று கூட இல்லை. அந்த காலத்திலேயே அத்திம்பேர் டாக்டர். பாண்டி பஜாரில் கிளினிக்கல் லாப் வைத்திருந்தவர். பத்துக் குழந்தைகள் பிறந்தவுடன் அகாலமரணம். அதற்கப்புறம் விட்டை எல்லாம் ரீ மாடல் பண்ணி அத்தைக்கு வாடகை வருமானம் வரும்படி செய்தார் தாத்தா. அத்தைவீட்டு காரஜில் யாராவது சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்கள் குடியிருப்பார்கள். ஸ்ரீகாந்த், நான் போன போது கீதா. அத்தைவீட்டிற்கு நாலு வீடு தள்ளி டிகே பட்டம்மாள் வீடு. நாடக நடிகர் ஏ ஆர் எஸ்ஸும் அதே தெருவில் வசித்தனர். எதிர் புறம் இருக்கும்  கமலாம்பாள் தெருவில் நடிகர் பாலையா வீடு.   

எவ்வளவு யோசித்தாலும் எனக்கு மாற்றல் இல்லாமல் ஒரே ஊரில், ஒரே வீட்டில்  வசிப்பது சீக்கிரமே சலிப்படைய வைக்கும் என்றே தோன்றுகின்றது. புதுப் புது ஊரில் புதிய மனிதர்கள், புதிய கடைத்தெருக்கள், புதிய கோவில்கள், புதிய நண்பர்கள், ஏன் பேசுகின்ற மொழியேக் கூட புதிதாக இருக்கும். புதிய மனிதர்களைப் பார்த்து, பழகி பேசுவதற்கும் இந்த மாற்றல்கள் என்னைத் தயார் படுத்தின. எல்லோரிடமும் தயங்காமல், சங்கோஜமில்லாமல் பழகுவதற்கும் அதுவே காரணம்.  புதியவை எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வெகு விசேஷமாக உள்ளவை மட்டுமே நம் சிந்தையையும் மனதையும் கட்டி நிறுத்தி விடுகின்றன.




முனிவனுடன் வரும் இராமலக்‌ஷ்மணர்கள் மிதிலை நகரையடையும் முன் கொடிகளைப் பார்க்கின்றனர். தூராத்தே ஆடி அசையும் அக்கொடிகள் இராமனை உன்னை விட்டுப் பிரிந்த மஹாலக்‌ஷ்மி இங்குதான் உள்ளாள். சீக்கிரம் ஓடி வருவாயாக என்று அழைப்பது போலிருந்தது என்று கம்பன் தன் குறிப்பைக் கொடிகளின் மேலேற்றி
மை அறு மலரின் நீங்கி.    யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்என்று.    செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்    கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ஒல்லை வாஎன்று    அழைப்பது போன்றது அம்மா!
மை- குற்றம்
ஒல்லை வா – விரைந்து வா.
தாமரைமலருக்குக் குற்றம் – மலர்ந்து பின் குவிதலும் வாட்டமடைதலும்.. மலரினீங்கி வந்து செய்யவள் இருந்தாள் “ மிதிலாநகரம் திருமகளுக்கு செந்தாமரையினும் சிறந்த வாசஸ்தலமாகும் என்பதை உணர்த்தினார். அத்தகைய தகுதி நல்வினையினாலன்றி கூடாதாதலின் “ யான் செய் மாதவத்தின் வந்துஎனக் கூறினார். மேலும் கொடிகள் அசைவதை ஸ்ரீராமபிரான் வரம்பில் பேரழிகியான சீதாபிராட்டியை மணமுடிப்பதற்கு வருகின்றான் என்று வானுலகிலுள்ள தேவலோகப் பெண்கள் நாட்டியமாடுவது போலிருந்தன எனறும்  கூறுகின்றார் கவி.

அப்போதுதான் கருணாநிதி மாணவர்களுக்காக மாதம் 15 ரூ பஸ் பாஸ் ஆரம்பித்த
நேரம். கீழ் வீட்டில் குரு நானக் கல்லூரியில் மற்றும் நியூ காலேஜில் படிக்கும் அத்தை மகன்கள் ஏற்கெனவே வாங்கி விட்டனர். அவர்களிடம் கேட்ட போது நீ அமெரிக்கன் லைப்ரரி போணும்னு சொல்லு. அப்பதான் குமார் மாமா ஒத்துப்பா. எனக்குச்  சித்தப்பா. அவர்களுக்கு மாமா. நான் போய் பஸ் பாஸ் வாங்கணும்னு கேட்ட போது “வாணி மஹால்லேந்து மாம்பலம் ஸ்டேஷனுக்கு பத்து பைசா. ஒரு நாளைக்கு இருபது பைசா. ஒருவாரத்துக்கு ஒரு ரூபா. மாசத்துக்கு நாலு ரூபாதான். சனி ஞாயிறு ரெண்டு நாளும் நீ ஜெமினிக்கு போய்ட்டு வந்தாக் கூட மாசத்துக்கு ஐந்து ரூபாய்க்கு மேல் செலவு இல்ல. பதினைந்து ரூபா ரொம்ப வேஸ்ட் என்றார். நான் ஒருவன்தான் அப்போது பஸ் பாஸ் இல்லதவனாயிருந்தவன்.

கடலூர் நண்பன் ரங்கநாதன், திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் ஸ்கூலில் படித்த நண்பர்கள் ரமேஷ் பாபு, அருணாச்சலமும் லயோலா கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தனர். அவள் ஒரு தொடர் கதை அப்போது ரிலீஸ் ஆகியிருந்தது. நான் நண்பர்களுடன் போகலாம் என்று முடிவு செய்துவிட்டு சித்தியிடம் நான் சினிமா போகப் போகிறேன் அவள் ஒரு தொடர்கதை என்றேன். சித்தப்பாவிடம் பர்மிஷன் வாங்கிண்டு  வேணா போய்ட்டு வா என்றார். அவர்கள் வீட்டில் வசிப்பதற்கு முன்பு வரை அவளை(ரை )ப் பேர் சொல்லித்தான் அழைத்து வந்தேன். சித்தப்பா அப்படி அழைப்பது தப்பு என்று சொல்லவும், கஷ்டப்பட்டு சித்தி என்றழைக்க ஆரம்பித்தேன். நான் எதிர் பார்க்காத காரணத்தால் நான் அந்த சினிமா பார்க்கமுடியாமல் போனது. சித்தப்பாவிடம் சினிமா போவதைப் பற்றி சொன்னதும் எந்தப் படம் என்றார். சொன்னேன். அது அடல்ட்ஸ் ஒன்லியாச்சே. அதெல்லாம் நீ பார்க்கக்கூடாது என்றார். நான் எட்டாவது படிக்கும் போதே அப்பாவுடன் ஆராதனா படம் பார்திருக்கிறேன் என்றதையும் மீறி எனக்குத் தடா. 

முதலில் வரவேற்பது போலிருந்த சென்னை என்னை போ போ என்று சொல்வது போலிருந்தது. அடுத்த வருடமே பட்டப்படிப்பிற்காக விழுப்புரத்திற்கு அப்பாவிடம் திரும்பினேன்.

இவர்கள் நகரினுள் நுழைந்து காணும் பல காட்சிகளை விவரிக்கின்றார்.
மிதிலை நகரின் மதில்கள் பொன்னாலானது. அதன் அழகை வர்ணிக்க கவி சீதையின் அழகையே அதற்குக் காரணமாக்கி
ஆதரித்து. அமுதில் கோல் தோய்த்து.    ‘அவயமம் அமைக்கும் தன்மை
யாது?’ எனத் திகைக்கும் அல்லால்.    மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே.   திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும்    பொன் மதில். மிதிலை புக்கார்.
உலகத்தார் யாவரது அழகையும் வரையறுத்து உணர்ந்தும், ஆண் பெண் மக்களின் மனதை, தன் வடிவத்திலிருந்தே ஐங்கனைக்(what is this word?) கொண்டு மூவுலகையும் தன் வசப் படுத்தும் மன்மதன், வரம்பில் பேரழகியான சீதையின் வடிவத்தைத் தானே சித்திரம் அமைக்க வண்ணப் பொருள் அமிழ்தமேயென்று தீர்மானித்து அமிர்தத்தில் எழுதுகோலை தோய்த்தெடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினாலும் அவளது அழகை எவ்வகை எழுதுவது எனத் திகைப்பானேயல்லாது அச்சீதையின் அவயங்களுளொன்றைக் கூட சரிவர எழுத முடியாது என அவளது கட்டழகை வர்ணித்தார். ஜனகன் வேள்விக்காக உழுத பொழுது கலப்பை உழுபடைச்சாலில் அகப்பட்டவளாதலால், சீதையென்ற திரு நாமம். ஸீதா- உழுபடைச் சால். மதிலை தாண்டி அவர்கள் மிதிலை நகரினுள் புகுந்தனர்.

அவர்கள் வில் கலை நுதலினாரும்.    மைந் தரும். வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட    நெடுந் தெருஅதனில் போனார்.  கிடந்த- கீழே விழுந்து கிடக்கின்ற பெரும் குவியலான ஆபரணங்களை விரும்பியெடுக்கும் வறியர் வேறு ஒருவர் இல்லாமையால் – கிடந்த எனும் இச்சொல்லின் மூலம் அங்குள்ளார்களின் செல்வ மிகுதியைச் சுட்டிக் காட்டுகின்றார்.

மாட நெடும் தெருவிலிருந்து யானைகளும் குதிரைகளும் மிகுதியாக நடமாடுவதால் கருநிற நதி உண்டாகிய வீதியிலும், கலவியில் வீசியெறியப்பெற்ற மாலைகளின் குவியல்கள் மலையாக இருக்கும் மணி நெடுந் தெருவிலும் சென்றார்கள்.

நெய் திரள் நரம்பின் தந்த    மழலையின் இயன்ற பாடல்.
தைவரு மகர வீணை    தண்ணுமை தழுவித் தூங்க.
கை வழி நயனம் செல்    கண் வழி மனமும் செல்ல.
ஐய நுண் இடையார் ஆடும்    ஆடக அரங்கு கண்டார்.

நெய் திரள் நரம்பின்- தேனொழுக்குபோல் திரண்ட வடிவமான யாழ் நரம்பினிசை போல்
தண்ணுமை – மத்தளத்தின் ஒலி

பாட்டுப்பாடிக் கொண்டே அபிநயத்துடனே ஆடுதல் செய்யுமிடத்துச் செய்யும் முறைமை நான்கு வகையிலாகும்: கையும் கருத்தும், மிடறும், சரீரமும் என. இவை நான்கினுள் “ கைவழி நயனம் செல்லஎன்றதனால் கருத்தின் தொழிலையும், “ மழலையின் இயன்ற பாடல்என்றதனால் மிடற்றின் தொழிலையும் ஆடும் என்றதனால் சரீரத்தின் தொழிலையும் கூறினார். யாழ்நரம்புக்குத் தேனொழுக்கு உவமை. நெய் தேன் எனப் பொருளாதலை :நெய்க் கண்ணிறா அல்என்ற கலித்தொகை பகுதியாலும் அறியலாம். நெய் திரள்என்பதற்குக் கறை பிடியாதிருத்தல் பொருட்டு நெய்பூசப்பட்டுள்ள யாழ் என்று பொருளுரைப்பாரும் உளர்.
நாடகசாலைக்குரிய கூத்தி (நடன மங்கை) முதலியோரின் அமைதிகளுள் தன்னுமை முதல்வன் இவர்களமைதி “தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித தூங்கஎன்றதனாலும் கூத்தியமைதி “ ஐய நுண்ணிடையார்என்றதாலும், அரங்கினமைதி “ஆகவரங்குஎன்றதனாலும் கூறப்பட்டன. “மனதின் வழிக் கண்செல்லஎன்பது “ கண்வழி மனம் செல்லஎன்றது பயிற்சி மிகுதியை விளக்கிற்று.  

வள் உகிர்த் தளிர்க் கை நோவ    மாடகம் பற்றி. வார்ந்த
கள் என நரம்பு வீக்கி.    கையொடு மனமும் கூட்டி.
வெள்ளிய முறுவல் தோன்ற   விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளிப் பாணித் தீம் தேன் செவி மடுத்து. இனிது சென்றார்.

கூர்மையான நகங்களியுடைய தளிர் போல மெல்லிய தமது செங்கைவிரல்கள் நோகும்படி:  வீணையின் முறிக்காணிகளைப் பிடித்துத் திருகி:  ஒழுகின்ற தேந்தாரி போன்ற அவ்யாழ் நரம்பை இறுக்கூட்டி, கையொடு மனமும் கூட்டி அந்நரம்புகளின்மேல் வருடச்செல்லுகின்ற கைவிரல்களின் குறிப்புடனே மனதையும் பதியவைத்து; வெண்ணிறமான தமது புன்சிரிப்பு வெளிப்பட,  புதிதாய் வந்தவர்க்கு இனிய உணவிடுதல்போலே கொடுத்த தெள்விளிபாணி  தெளிவான இசையோடு கூடிய பாட்டாகிற இனிப்புள்ள தேனை செவி மடுத்து மூவரும் இன்பமாகச் சென்றார்கள்.

இத்தகைய இனிய கீதத்தைக் கேட்டதனால் உண்டாகிற ஆனந்தத்தால் வழிநடந்து செல்லும் இளைப்புத் தீர மூவரும் இனிது சென்றனர். வீணை வாசிப்போர்க்கு அவ்வாசிப்பினையால் இயல்பாக உண்டாகும் மனமகிழ்ச்சியைக் காட்டும் இனிய பார்வையையும் புன்னகையையும், விருந்தினரை இனிது நோக்கிப் புன்முறுவல் புரிந்து உபசரிக்கும் செயலாக அமைத்துக் கொண்டார். மாடகம்பற்றி நரம்பு மீட்டுதலால் கைக்கு நோவுண்டாகிறதெனெ மகளிரது மிக்க மென்மைத் தன்மையைத் தெரிவித்தார். மாடகம் என்பது நால் விரலளவான பாலிகை வடிவாய் நரம்பை மீட்கும் கருவி. கையோடு மனமும் கூட்டி என்றது கீதத்தில் ஒழியப் பிறிதொன்றில் மனம் வையாமல் மனோவேகமாகக் கையை விசைபடச் செலுத்துவதைக் கூறியவாறு. “வெள்ளிய முறுவல் தோன்ற என்றதனால் அதிக சிரமில்லாமல் அரிய கீதங்களையும் உல்லாசமாக எளிதில் பாடவல்ல தன்மை உணர்த்தப்பட்டது. புன்சிரிப்புச் செய்யும் காலத்துப் பற்களின் வெள்ளொளி சிறிது வெளித் தோன்றுமாதலால் “ வெள்ளிய முறுவல் தோன்ற என்றார். செவிமடுத்தல் – வாயால் உண்ணல் போலக் காதால் கேட்டு மகிழ்தல்.

வாளரம் பொருத வேலும்.    மன்மதன் சிலையும். வண்டின்
கேளொடு கிடந்த நீலச்    சுருளும். செங் கிடையும். கொண்டு. நீள் இருங் களங்கம் நீக்கி.    நிரை மணி மாட நெற்றிச்
சாளரம்தோறும் தோன்றும்    சந்திர உதயம் கண்டார்.

தெருவில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக உப்பரிகைமேல் சாளரங்கள் தோறும் நிற்கின்ற மகளிரது முகங்களின் தோற்றத்தைக் கண்டமை கூறும். வானத்தில் காண்பதனாகிய சந்திரன் ஒன்றே ஒன்றுதான். அதுவும் பகலில் ஒளிமழுங்கியது; களங்கமுள்ளது; இவர்கள் வீதிவழியே செல்லும்போது பகலிலும் ஒளிமழுங்காது களங்கமற்றுப் பல சந்திரர்கள் ,மாளிகைச் சாளரந்தோறும் உதித்ததை வியப்புடனே கண்டவாறு சென்றனர் என்றார்.

அவர்கள் நகரினுள்ளே ஊஞ்சலில் ஆடும் மகளிரையும், பல வகையான பொருட்களை விற்கும் அங்காடித் தெருக்களையும், யானைகள் போரிடுவதையும், குதிரைகள் மண்டலகதியிலே சுழன்றாடும் காட்சியையும், மதுபானம் செய்து ஊட்டிய மாதர்களையும், இளைய மகளிர் பந்தாடும் காட்சியினையும், இளைஞர் வட்டாடுமிடத்தினையும், பெண்கள் நீர்நிலைகளில் நீராடும் காட்சிதனையும், மகளிர் பூக்கொய்து விளையாடும் சோலைகளையும் பார்த்துக் கொண்டே சென்றனர்.  

மேற்கூறிய கவிகளில் எல்லாம் “ கண்டார் சென்றார்  தெருவினிலே பல இனிமையான விஷயங்களைக் கண்டும், கேட்டும் சென்றவர் ஓரிடத்தில் மட்டும் நின்றார்என்கின்றார்.                                                    
 

No comments:

Post a Comment