நாக்பூரில் ”நம்பர் 10 தரம்பெட் எக்ஸ்டென்ஷனில்” என் சித்தி வீட்டில் வசித்தபோது அங்கு நாடக விழா இரண்டு நாட்களுக்கு நடந்தது. அதில் மூன்று நாடகங்களில் நான் நடித்திருந்தேன். ஒன்று “சபாக்களும் சங்கங்களும்” . எப்படி ”தென்னிந்திய நுண்கலைக் கழகம்” ஒவ்வொருவருடைய தலை கன த்தினால் கேரளா, கர்நாடகா, தெலுங்கு மற்றும் தமிழ் சங்கங்களாக உருவெடுத்தது என்பதை கிண்டலுடன் சொல்லும் நாடகம். அவர்கள் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் காரணமே, தமி எழுதப் படிக்க மற்றும் இயல்பாகவே நன்றாக உச்சரிப்பதும் தான். மீதி இரண்டு நாடகங்களும் நினைவிலில்லை. இந்த நாடகங்களில் குளறுபடியேதும் செய்யாமல் இருக்கும் பொருட்டு ” சௌந்தர்ய லஹரி” கிருஷ்ணணைச் சந்தித்தேன். அவர் ’3 அப்புறம் 60ஆம் நம்பர் ஸ்லோகத்தை தினம் 108 தடவை ஜபி. ஜாமாயச்சுடலாம்’ என்றார். ஜமாய்த்தேனோ இல்லையோ என்பது தெரியாது, ஒப்பேத்திவிட்டேன்.
இந்த அக்டோபரில் சென்னையிலிருந்த போது என் தாயாரிடம் காண்பிப்பதற்காக நான் கம்பனைப் பற்றி எழுதியிருந்தவைகளை கொண்டு சென்றிருந்தேன். சித்தி மகன் ”முரளி” ஸ்டேட் பாங்கில் டி ஜி எம் ஆக சென்னையிலிருந்தான். நான் ஹாங்காங் புறப்படும் நாளில் என்னைப் பார்பதற்காக வந்திருந்தான். என் மாமனார் மாமியாரும் வழியனுப்புவதற்காக வந்திருந்தனர். அப்போது முரளிக்கு அம்மா நான் எழுதியவைகளைக் காண்பித்தார். என் மாமனார் ’இவர் சித்தூர் வீட்டைப் பத்தியெல்லாம் எழுதியிருக்கிறார்.’ முரளி ’அவன் அப்பவே நாக்பூரைக் கலக்கினவன் சார். பெரிம்மா நீ படிச்சுட்டு சொல்லு. நான் எடுத்துண்டு போய் படிக்கிறேன்’.
நாடகம் எப்படியிருந்தது என தெரிந்து கொள்வதற்கும் இன்றிருப்பது போல் அன்று (1980) வீடியோவும் கிடையாது.. ஏதோ முப்பது வருடத்திற்கு முன் நடந்தது அவன் நினைவுக்கு வந்ததே நான் ரொம்ப சொதப்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
ஹாங்காங்கில் நாடக விழா ஆரம்பித்தது சுவாரஸ்யமான ஒரு விஷயம். 17 18 நடிக நடிகையர் பங்குபெறும் 2 ½ மணி நேர நாடகம் ஒன்று நடைபெற்றது. அதில் நாரயணமூர்த்தியும் பாட்டு வாத்தியாராக நடித்தார். நாரயணமூர்த்தி “இத்தனைபேரும் ஒரே இடத்துலே சேந்து ப்ராக்டிஸ் பண்றதெல்லாம் கஷ்டண்டோய். தனித் தனியா நாலு டீமா போடலாம். டிராமா காம்படீஷனா வெச்சுக்கலாம். பரிசுத் தொகையும் குடுக்கலாம்”. அப்படி ஆரம்பித்தது இங்கு நாடக விழா. எல்லா ஆண்டுமே நண்பன் ”ராம்” கதை, வசனம், இயக்கம் என மூன்று துறைகளையும் கவனித்துக் கொண்டு உற்சாகத்துடன் பங்கேற்பான். இம்முயற்சிகளில் அவனுக்கு பெரிதும் உறுதுணை அவன் அண்ணன் ”மணி”.
ராமின் ”கல்கி 2000” எனும் நாடகத்தில் எனக்கு தமிழ் வெறி பிடித்த கல்வியமைச்சராக சிறு வேடம் ஒன்று குடுத்தான். அந்த வருடம் முதல் பரிசை நாங்கள் வென்றோம். அதன் பிறகு ஐ ஓ பி வங்கி ”சம்பத்குமார்” அவர்களின் நாடகத்தில் வீரப்பன் வேடம். அதற்கான என் ஒரே ஒரு தகுதி அடர்த்தியான மீசை.
அதற்கு அடுத்த வருடம் நான் இயக்கிய சுஜாதாவின் ”மாறுதல்” எனும் நாடகம். நண்பர்கள் முரளி நாரயணன், கே ஜி ஸ்ரீனிவாசஸ், கவிதா குமார் மற்றும் நான் பங்கேற்று நடித்தோம். வசனம் சுஜாதா என்பது நல்ல பக்கபலம். ஒத்திகைகளுகாக கவிதா வரமுடியாத சமயமெல்லாம். கே ஜி ஸே அந்த பாத்திரத்தின் வசனங்களையும் நடிப்பான். எல்லா ஒத்திகைகளுமே வீட்டிலேதான். நேரமாகிவிட்டால், வீட்டில் என்ன இருக்கின்றதோ அதையே சாப்பிட்டோம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் என ஒரு மாதம் முன்புதான் ஒத்திகைகள் ஆரம்பிக்கும். கே ஜி ஸும், முரளியும் முதல் தடவை ஒத்திகைக்கு வருமுன்பே எல்லா வசன்ஙகளையும் மனப்பாடம் செய்துவிடுவர். அது எப்படி இரண்டு நாட்களில் அதை செய்கின்றனர் என்பது எனக்கு அவர்கள் மேலுள்ள மதிப்பை அதிகமாக்கியது. எனக்கு இதிலெல்லாம் ஆலோசனை மற்றும் அறிவுரை கூறி வழிநடத்தியவர் மு.ராமநாதன்.
அந்த வருடம் இங்கு இந்திய தூதரக அதிகாரி திரு எம். ஸ்ரீதரன் மற்றும் அவர்கள் மனைவி வைதேஹி இருவர் மட்டுமே நடித்த ”இயந்திர துடைப்பான்” எனும் நாடகத்தை போட்டியில் பங்கேற்காமல் நடத்தினர். அரங்கத்திற்குள் நுழையுமுன்னே அந்த நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழுலும் ”சிறு அறிமுகம்” வினியோகிக்கப்பட்டது. சு. ரா என்கின்ற சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய நாடகம் ஒரு சாமியாரைப் பற்றியது. போட்டியில் பங்கேறாகாததால் அவர்களுடைய நாடகம் கடைசியாக நடந்தது. . அவர்களிருவரையும் முதன் முதலாகப் பார்த்தது அப்போதுதான். அவர்கள் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு நாங்கள் மேக்கப் (முரளி வயசான வேடத்தில் நடித்தான் என்பதால் தேங்காய் எண்ணையில் பவுடரைக் குழைத்து தலை சீவுவதுதான்) போட்டுக் கொண்டிருக்கும் போதே, பிஸ்கட் மற்றும் தண்ணிரும் கொடுத்து “ஆல் தெ பெஸ்ட்” சொல்லி எங்களை உற்சாகப் படுத்தினர். நாங்கள் தண்ணிர் கூட கொண்டுவரவில்லை. நாடகம் நடந்த சமயம் மைக் வேலை செய்யவில்லை என்பது கூட உணராமல் “ அப்பாடா. முடிச்சுட்டோம்” எனத் திரை மூடிய பின் உள்ளே போகும்போது “உங்களுடைய டிரிட்மெண்ட் வித்தியாசமாக இருந்தது” என்றார்கள்.
அரங்கத்தில் வந்தமர்ந்த போது மூன்றாவது நாடகம்தான் நடந்து கொண்டிருந்தது. அப்போது இன்னொரு முறை நாடகத்தின் அறிமுகத்தைப் படித்தேன். சாமியாரைப் பற்றி நாடகம்.
” இயந்திரத் துடைப்பான்” நான் சாமியார்களைப் பற்றி வைத்திருந்த அனைத்து பிம்பங்களையும் உடைத்து சாதாரண மனிதனை முன்னிறுத்தியது. நான் பார்த்த ”சாமியரெல்லாம் காவி துணி அணிந்திருக்க இவரோ சிவாஜி கணேசன் மாதிரி, நைட் கவுன்ல தானே இருந்தார்” என சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீதரன் அவர்கள் கண்ணிற்கு கீழே சிகப்பில் கோடுகள் வரைந்திருந்தார். ஒரு காட்சியில் அவர் குரலுடைந்து பேசும் போது அவர் கண்களில் கண்ணீர். நாடகம் முடிந்ததும் அவர்கள் மேடையில் அவையோருக்கு “curtain call” எனும் முறைப்படி வணக்கம் தெரிவித்தனர். அதுதான் நான் முதல் தடவையாக நேரடியாகப் பார்த்த “கர்டன் கால்”.
ஏன், அதன் பேரே கூட எனக்கு அப்புறம் தான் தெரிந்தது. பிறகு தான் எங்களுக்குத் தெரிந்தது வைதேஹியும் ஸ்ரீதரனும் தங்கள் ”ஐக்யா” குழுவின் மூலம் நவீன தமிழ்நாடகங்களின் மிகப்பெரிய பங்களிப்பாளர்கள் என்பது. வைதேஹியுடன் நெருங்கிய நண்பரைப் போல் பேசி பழகிவிட முடியும். ஆனால் அது என்னவோ தெரியவில்லை, ஸ்ரீதரன் எனும் ஆசிரியரிடத்தில் நன் மதிப்பெண் வாங்க வேண்டும் எனும் நிலையிலுள்ள மாணவனைப் போல் தான் இருந்தேன்.
முரளி நாரயணனுக்கு நடிப்பில் முதல் பரிசு. அதை கொண்டாடுவதற்காக நாஙகள் அடுத்த நாள் ( ஞாயிற்றுக் கிழமை) ஓட்டலுக்குச் சென்றோம். உண்மையில் பரிசுக்குறியவர்களையும் அழைப்பது என்று நாரயண்மூர்த்தியிடமிருந்து வைதேஹியின் தொலை பேசி எண் வாங்கி, அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு குடும்பத்துடன் உணவருந்த வருமாறு அவர்களை அழைத்தேன். அவர்களும் வந்தனர்.
அதன் பிறகு அவர் இயக்கத்தில் “நிரபராதிகளின் காலம்” எனும் நாடகம். கேஜிஸ், முரளிநாரயணன், அலமேலு இராமநாதன், எம் ஆர். ஸ்ரீனிவாசன், ராஜி ஸ்ரீனிவாசன், கார்த்திக் ஹரிஹரன், காதர், பிரகாஷ் நாகராஜ், வைதேஹி மற்றும் நான் நடித்திருந்தோம். ஒத்திகைகள் எல்லாம் முதல் முறையாக வீட்டிலில்லாமல் அர்பன் கவுன்சில் டான்ஸ் அரங்குகளில் நடந்தன. முதல் முறையாக நாடகத்தின் அனைத்து கூறுகளையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை வைதேஹி மற்றும் ஸ்ரீதரன் அளித்து, சொல்லியும் கொடுத்தனர். டீம் பில்டிங்கிறகாக விளையாட்டுகள், அனைவரும் சேர்ந்து ஸ்கிரிப்ட் வாசிப்பது, பாத்திரங்களின் தன்மை, வயது, குணம், மொழி முதலியவற்றை அலசுவது, நாடகத்தைப் பல கூறுகளாக பிரித்துக் கொள்வது, ஓவ்வொரு கூறுக்கும் ஒரு ஆக்ஷன், வசனத்தில் எந்த இடத்தில் அழுத்தம் கொடுப்பது, அது ஏன் அவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் விளக்கினர். அரங்க பதிவுகளை கவணிக்க ஒருத்தர், வசன உச்சரிப்புகளை கவனிக்க ஒருத்தர், ஒத்திகைகளை கவனிப்பதற்கு ஒருவர், அரங்க பொருட்களுக்கு ஒருத்தர், ஆடை அணிகலன்களுக்கென ஒருவர் என்று எங்களிடையே பகிர்ந்தளித்து, கராறாக இருப்பது போல் தெரியாது ஆனால் மிகவுமே கராறாகயிருந்தார்.
அவர் ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காண்பித்ததை இன்றும் எண்ணிப் பார்த்தால் அது எப்படி ஒருவர் எல்லாத் துறைகளிலும் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்க முடியும் என்பது தான் அன்றும் இன்றும் மனதில் எழும் கேள்வி. அதுவும் நாடகத்தில் பிரஃபஸாராக வருபவர் தன் வாய்க்குள் துப்பாக்கி விட்டு சுட்டுக் கொண்டு செத்து போகவேண்டும். இறந்த பிறகு அந்த பிணம் எப்படி கீழே விழும் எனபதை விஞ்ஞான பூர்வமாக விளக்கி நடித்தும் காண்பித்தார். எப்படி விழும் என்பதை அவர் முதல் தடவை பண்ணிய போது தடாலென்ற சத்தம் உண்மையில் அவர் கால் தடுக்கி கீழே விழுந்தவர் போல தான் இருந்தது. இதையே மூன்று முறை அன்று செய்தார். அடுத்த நாள் வைதேஹியிடம் கேட்டபோது “ எவ்வளவோ பிராக்டிஸ் இருக்கு இருந்தாலும் சில சமயம் வலிக்கத்தான் செய்யும்” என்றார். அதே போல இந்த நாடகத்தில் சண்டைக் காட்சிகள் வேறு. ஒவ்வொரு நடிகருக்கும் தனியே படி Chistling Session ( வேண்டியதை மெருகேற்றி வேண்டாதவற்றை விலக்குவதற்கான டைரக்டரும் அந்த ஒரு நடிகரும் பங்கேறகும் ஒத்திகை). நாடகத்திற்கு ஒரு வாரம் முன், அரங்கத்தில் ஒத்திகை. ஸ்ரீதரன் அன்று லைட்டிங்பண்ணிக் கொண்டிருந்தார். அப்போதுதான் முதல் முறையாக ஸ்பாட் லைட், ஃபென்னெல இவற்றின் பேரைக் கேள்விப்பட்டேன். ஸ்பாட் லைட்டின் ஃபோகஸை எவ்வாறு நமக்கு ஏற்ற வகையில் விழும்படி செய்வது என்பதைத் தெரிந்து கொண்டேன். இந்த நாடகதில் நேரடி இசை. ஜெயராம் தான் மிக அற்புதமாக செய்தார். இந்த நாடகத்திலும் முதல் நாளிலேயே அனைவரின் வசனங்களையுமே மனப்பாடம் செய்து என் வயத்தெரிச்சலை முரளி நாரயணனும் கேஜிஸும் கொட்டிக் கொண்டனர்.
நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே சமயம் தான் இலக்கிய வட்டமும் ஆரம்பித்தது. தொடர்ந்து கூட்டங்களுக்கு வந்து அவர்களுடைய சிறந்த பேச்சால், சினிமா ரசனை அறிவால், அவர்கள் கூறிய விஷயங்களால் என்னில் மாறுதல் ஏற்பட்டது.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல் நிச்சயம். அப்படியிருந்த போதும் அத்தனை அலுவல்களுக்கிடையேயும் இவ்வளவு விஷயங்களை அவ்விருவர் இங்கு செய்தது என் நல்ல நேரம் தவிர வேறொன்றுமில்லை. என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்திற்கு என்னை உள்ளாக்கியது அவர்களுடன் பழகியது. கெமிஸ்ட்ரியில் கூறப்படும் “ கிரியா ஊக்கி” என்பதற்கு அவர்களிருவரும் தான் சரியான எடுத்துக் காட்டு. சினிமாவிலிருந்து படிக்கும் புத்தகம் வரை சராசரிக்கும் கீழே எங்கோ இருந்த என்னை கைக் கொடுத்துத் மேலே தூக்கிவிட்டனர்.
மாறுதல் வருவதற்கு வருடங்களும் ஆகலாம், விநாடியிலும் அது வரலாம். கன்னி மாடத்தில் பார்த்த சீதைக்கும் இராமனுக்கும் வந்ததைப் போல். அது வரையில் கவலையில்லாமல் இருந்த இருவர் உள்ளத்திலும் பார்த்த அந்த விநாடியே காதல் தோன்றி இருவரும் ஒருயிர் ஈருடல் ஆயினர்.
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்?-நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும். மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே! தன் கண்களுக்கு யானைப் பாகன் மறைந்த கணமே மதம் பிடித்த யானை தன்னை அடக்குகின்ற அங்குசத்தை நிமிரச் செய்து அதைத் தள்ளிவிட்டுத் தான் விரும்பின வழியே செல்லுதல்போலத் தான் விரும்பும் தலைவனான இராமன் மறைந்து சென்ற அளவிலே சீதையின் மனம் தன்னை அடக்கி வைக்கும் நிறை என்னும் குணத்தை நீக்கித் தான் விரும்பியவழிச் சென்றது என்றார். சிந்தை. நிறை. மெய்ந்நலன்களாகிய பெண்மைக் குணங்கள் யாவும் சிதைந்து ஒழிந்தன.

கால் உறு நெடு கண்வழி புகுந்த காதல் நோய்
பால் உறு பிரை என எங்கும் பரந்தது. பாலுறையவைக்கும் சிறுதுளி மோர் துளி பாலிலே முதலில் ஓரிடத்தில் சேர்ந்து, உடனே அப்பால் முழுவதையும் மாற்றுவதைப் போல் சீதையின் உடம்பு முழுவதும் காம நோய் பரவியது. தினம் தோறும் வாழ்வில் பயன்படுத்தப்படும் ஒரு விஷயத்தை அற்புதமாக கவி சீதையின் கண்வழி நுழைந்த காதல் அவள் உடல்முழுவதும் பரவி காமத்தீயை உண்டாக்குவதற்கு உவமையாகக் கூறிவிடுகின்றார்.
நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;ஊமரின். மனத்திடை உன்னி. விம்முவாள்;காமனும். ஒரு சரம் கருத்தின் எய்தனன்-வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே. மிகுந்து வரும் காம நோயால் வருந்தும் சீதை நோயைப் பற்றி ஒருவரிடமும் சொல்ல மாட்டாதவளாய் ஊமைகள் போல் மனத்திடத்திலேயே நினைத்து கலங்குவாள்; அப்போது மன்மதனும் எரிகிற நெருப்பிலே விறகைப் போட்டாற் போல தன் முதற்கணையை ஏவினான். மன்மதன் தன் ஐங்கணைகளுள் நினைப்பை மிகுவிப்புதும் முதற்கணையுமாகிய தாமரைமலரை எய்தனனென்பார், “ ஒருசரங் கருத்தினெய்தனன்” என்றார். இதனை ”நினைக்கு மரவிந்தம்” என்றும் கூறுவர்.
வைதேகி நெருப்பிலே போடப்பட்ட பூங்கொடி போல வாடிநின்றாள். அதனைக் கண்ட தோழிமார்கள் சீதையைக் கொண்டுபோய் பரிகாரம் செய்ய மலர் மஞசத்தில் சேர்த்தனர். காமவேதனையை ஆற்றமாட்டாது சீதையின் கண்களிலிருந்து கண்ணீர் மார்பிலே உதிர்ந்தன. கொல்லனது உலைக் களத்திலே எழுகிற புகை போல் வெளிப்பட்ட அவள் நெட்டுயிர்ப்பினால் அது உடனே ஆவியாகி மறைந்தது.
படுக்கையில் பரப்பிய மணமுள்ள மலர்கள், அவளுக்கு மென்மை செய்யாமல் கூர்மையாகித் உடம்பில் தைத்தன; அவளது உடம்பின் காமத் தீயால் பொரிந்து போன கலவைச் சந்தனங்கள் சிந்தியது தீப்பொறிகள் போல் இருந்தது.. உதிர்ந்தன- (அவளது உடம்பில் பற்றி) எரிகிற காமத் தீயானது சுடுவதால் - அணிகலன்களில் உள்ள-நூல்கள் அறுபட்டு நீங்கின (படுக்கையில் பரப்பட்ட) தளிர்கள் கரிந்தன - கரிந்து போயின.
‘நெருக்கி உள் புகுந்து. அரு நிறையும் பெண்மையும்
உருக்கி. என் உயிரொடு உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே!
உருக்கி. என் உயிரொடு உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே!
இராமனது அழகிலே மயங்கிய சீதை இவன் மன்மதனோ என
ஐயுற்றாள். பின் கையில் கரும்பு வில் இல்லாமல் மூங்கில் வில்லையே
வைத்திருந்ததால் இவன் காமன் இல்லை என்று தெளிந்தாள். தோள் புணர் புண்ணியத்தணு என்றதனால், “ அவனுடைய தோளைப் புணர்வதற்கு மூங்கில் வில் நோற்றுள்ளது போல் நான் நோற்றிலனே! அத்தோளை புணர்தல் முன்னைய நல்வினை இருந்தாலொழியக் கூடாதன்றோ!” என்று கருதியமைத் தோன்றும்.

பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?
‘கண்வழி நுழையும் ஓர் கள்வன்’ - விசித்திரமான கள்ளன். அம் மைந்தனை நான் கண்டவுடனே ‘என்னுடைய நலன். நாண். உணர்வு என்ற இவற்றை இழந்தேன். ஆகையால். அம் மைந்தன் கண்டார் கண்வழியே புகுந்து கரந்து செல்ல வல்லவன்’ என்கிறாள் சீதை எண்வழி: எண்ணுமிடத்து;எண் வழியுணர்வு- எண்ணத்தின் வழியே செல்கின்ற அறிவு. “கள்வன் கொல யானரியேன் கரியானொருகாளாஇ” என்கின்றார் பெரியாழ்வார்.” கள்வன்” என்று அன்பிற்கு உரிய ஸ்ரீராமனைப் பழித்தது, தன்னை வருந்தவிட்ட வெறுப்பினாலாம். ”நடந்தடி வருந்தப் போனவன்” நடப்பதனால் அடிவருந்துமே!” என்று அப்பிரானிடத்து தனக்கு உண்டான இரக்கத்தைக் குறிப்பிடுகின்றாள்.
‘அவனை முதலில் தேவனோ என்று ஐயப்பட்டவள் கண்ணிமைத்தலால் அந்த ஐயம் நீங்கினாள். பின் கைவில்லும். மார்பின் நூலும் கண்டமையால் ‘அரசகுமாரனே அவன்’ என்று தெளிந்தாள்.
அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ.
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என.
நல் நெடுங் கரங்களை நடுக்கி. ஓடிப்போய்-முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான். சீதையின் காமத் தீ இயற்கை வெப்பமுள்ள கதிரவனையும் சுடும் வல்லமை பெற்றதாயிற்று. வெப்பம் முதலானவற்றால்
துன்பப்படுகின்றவர்க்கு கைகள் நடுங்குதல் இயல்பு. சூரியன் மறைந்து காதல் வேட்கையை மிக வளர்ப்பதாகிய அந்திப் பொழுதும் வந்தது.

நான் எழுதுவதை முதலில் படித்துப் பார்த்து வாசிப்பு தன்மை எப்படியிருக்கின்றது என இரு நண்பர்களிடம் கேட்பது வழக்கம். அப்போது ஒருவர் நான் காமம் என்று எழுதியதை காதல் என்று எழுதிவிடலாம், பங்காலத்தில் இரண்டும் ஒரே பொருளாகவிருந்தாலும் இப்போது காமம் என்பது ஒரு விதமான பெர்வர்ஷனோடுதான் பார்ப்பார்கள் என்றார். எனக்கு சரியென்று பட்டாலும் திரு நெல்லைக் கண்ணனையும் ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாம் என்று அவருக்கு மின்னஞ்சலில் இந்த கேள்வியை அனுப்பியிருந்தேன்.
திரு நெல்லை கண்ணன்
”காமம் என்பது காதல் தான்.பின்னால் வந்த சிலர் அதனை ஒரு கெட்ட வார்த்தை போல் எண்ண வைத்து விட்டனர். வள்ளுவப் பேராசான்
தாமின்புறுவது பிறர் இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் என்கின்றார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்கிறது தமிழ்
”காமம் இல்லையேல் உயிர்க் குலம் ஏது நீங்கள் இல்லை நான் இல்லை யாரும் இல்லை. எதுவெல்லாம் உண்மையோ அதையெல்லாம் மன நோயாளிகள் சிலர் அசிங்கம் என்று சொல்லிப் போய் விட்டனர். கண்ணதாசன் நவராத்திரிப் படப் பாடலிலே ஒரு வரி எழுதுவார் பாவம் எனறால் ஒரு ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா பயணம் போகும் பாதையில் திராட்சைக் கொடியை வளர்ப்பானா எங்கே இல்லை எதனிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார் என்று. கம்பன் எழுதுவது மனித வாழ்வை. சீதை உடல் படும் பாடு உண்மையின் அடிப்படை. நலமுடன் வாழ்க.உங்கள் நண்பர் இந்தக் காலத்து இளைஞர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காக அதனைக் காதல் என்று எழுதி கொச்சைப் படுத்தி விடாதீர்கள் இவர்களுக்கு எதுமே சரியாகச் சொல்லித் தரப் படவில்லை. நாம் நாமாகவே இருப்போம்.” என்று எழுதினார். அதற்கேற்ப இங்கு காமம் காதல் என்ற பொருளிலேயே உரையில் உள்ளதுபடி எழுதப்பட்டுள்ளது.

மை வான் நிறத்து. மீன் எயிற்று. வாடை உயிர்ப்பின். வளர்செக்கர்ப்
பை வாய் அந்திப் பட அரவே! என்னை வளைத்துப் பகைத்தியால்
எய்வான் ஒருவன் கை ஓயான்; உயிரும் ஒன்றே; இனி இல்லை;உய்வான் உற. இப் பழி பூண. உன்னோடு எனக்குப் பகை உண்டா?
அச்சந்தருதலால் இருளை கருநிறமாகவும் பளபளத்தலால் விண்மீன்களை எயிறாக வும் (விஷப்பர்களாக), அனல் வீசுவதால் வாடையை உயிர்ப்பாகவும், தன்னை விழுங்குவது போலுதலால் செவ்வானத்தை வாயாகவும், கொல்ல வருவதால் மாலையை பாம்பாகவும் உருவகப்படுத்தினாள். ”மன்மதன் முன்னமே பிடித்து உயிர்கவர முயல்கிறான்; நீயும் வந்து தோன்றினாய்; எனது உயிர் ஒன்றேயாதலின், அவன் கருத்து கைகூடிவிட்டால், உனது முயற்சி விணாக முடியுமே! அன்றி, அவனிடத்தினின்று தப்பிப் பிழைக்க முயல்கின்ற எனது முயற்சி கைகூடுமாயின், அப்போது நலிவதற்காக இங்ஙனம் நீ செய்வதாயிருந்தால், வீண்பழியைக் கட்டிக்கொள்ளுமாறு உனக்கு என மேல் பகை மூள யாது காரணம்? ஒன்றுமில்லையே; ஆதலின் நீ இப்போது அப்பாற்செல்” என்றாள் என்றும் ”அந்திபோதே எனக்கு உயிர் ஒன்றே; என்உயிரைக் கவர்ந்தாலன்றி மீள்வதில்லை என்று ஓயாது மன்மதன் அம்பு எய்கிறான்; அவ்வுயிரை அவன் கொண்டால் நான் பிழைத்திருக்க வேறு உயிரில்லை; ஆகவே, என் மீது பகை செலுத்தலால் உனக்கு என்ன பயனுண்டு? பயனின்றி வீணே வருத்துதற்கு என்னிடத்து முன்னமே பகையில்லையே; உண்டாயின் சொல்லுவாயென்றாள்” என்றும் பொருளுரைக்கலாம்.

‘வெளி நின்றவரோ போய் மறைந்தார்; விலக்க ஒருவர்தமைக் காணேன்;
‘’எளியன். பெண்’’ என்று இரங்காதே. எல்லியமாத்து இருளூடே.
ஒளி அம்பு எய்யும் மன்மதனார். உனக்குஇம் மாயம் உரைத்தாரோ?அளியென் செய்த தீவினையோ! அன்றில் ஆகி வந்தாயோ?
‘’எளியன். பெண்’’ என்று இரங்காதே. எல்லியமாத்து இருளூடே.
ஒளி அம்பு எய்யும் மன்மதனார். உனக்குஇம் மாயம் உரைத்தாரோ?அளியென் செய்த தீவினையோ! அன்றில் ஆகி வந்தாயோ?
அன்றில் எப்போதும் ஆணும் பெண்ணுங் கூடியே நிற்கும்; கணநேரம் ஒன்றையொன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தை பொறுக்கமுடியாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்று தரம் கத்தி கூவி அதன் பின்பும் தன் துனையைக் கூடாவிட்டால் உடனே இறந்துவிடும் இது வடமொழியில் கிரெளஞ்சமெனவும், தமிழில் குருகெனவும்படும். அன்றில் பறவை துணையைப் பிரிந்து வருந்தி அந்நலிவால் கூவுகிற குரலோசை தலைவரைப் பிரிந்து வருந்துகிற மகளிர்க்கு அவ்வருத்தத்தை வளர்ப்பதாக கூறுவது கவிமரபு. விலக்க – நீகூவுவது என் வருத்தத்தை கூட்டுவதற்கு என்றும் உரைக்கலாம்; என் கண்ணெதிரில் காணப்பட்டவர் மறைந்து போகாதிருப்பின் உன் குரல் எனக்கு துன்பம் பயவாதென்பது கருத்து. இனி, விலக்க ஒருவர் தமைக் காணேன் என்பதற்கு – எனக்கு உணடான காமநோயை நீக்குவதற்கு ஒருவரையும் காணவில்லையே என்று உரைத்தலும் உண்டு. அப்போது தாதியர் தம் அருகிலிருந்தும் அவர்கள் தன் குறிப்பை அறிந்து அதனை நிறைவேற்ற மாட்டமையின் இங்ஙனம் கூறியது. துன்பம் செய்யும் அன்றிலொன்றே அவள் கண்முன் பட்டும் அத்துன்பத்தை ஒழிக்க கூடிவரெவரும் எதிர்படாமையால் கூறியதுமாம்.
இவ்வாறு காமநோயினால் பீடிக்கபட்ட பிராட்டியார் வேதனைப் பட்டுக் கொண்டிருக்க நிலவும் உதிதித்து.
வடு இல் இன் அமுதத்தொடும். வந்தனை.
பிடியின் மென்நடைப் பெண்ணொடு; என்றால். எனைச்
சுடுதியோ? - கடல் தோன்றிய திங்களே! ‘சந்திரனே! நீ எல்லோரையும் கொல்லும் தன்மையை இயற்கையாகப் பெற்றாய் இல்லை;ஏனெனில் கடலினின்று தோன்றியவன் ஆதலால் இயல்பாகவே குளிர்ச்சி பொருந்தியவன்; அமுதத்தோடு பிறந்தவனாதலால் பெண்ணிடம் அன்பு வைக்கத் தக்கவன். அவ்வாறு இருக்க நீ பெண்ணாகிய என்னை வருத்துவது
முறையோ’ என்கிறாள் சீதை.

நிலவைப் பார்த்து சீதை கூறுவதைப் போலவே கண்ணதாசன் “ அத்திக்காய் காய் ஆலங்காய் வென்னிலவே” எனும் பாடலில் “ இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ” என்று பாடுவதாய் வரும். இங்கோ சீதை நீ பிறவியில் குளிர்ச்சிஉடையவன். கடலினில் அமுத்தோடு வந்தவன். அமிழத்தைதை ஒத்தபெண்கள் பால் இயற்கையில் அன்பு வைக்கத்தக்கவன் என்று ஆண்பாலாகத்தான் காட்டுகின்றார். என் தாத்தாவோ சந்திரனை பெண்பாலாக்கி, என் இரண்டாவது சித்தியை (சித்தப்பா தன் அக்கா மகளையேத் திருமணம் செய்தவர்” ) ”நான் மட்டும் பெரிய மனசு வச்சு என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்லேன்னா நீ காட்டுல காயற நிலாவாத்தான் இருந்திருப்பே” என்று தமாஷுக்காக கூறுவார். அதற்கு ”காட்டுல காயற நிலா எவ்வளவோ மேல், ரோடுல பட்டபகல்ல காயற சூரியனைவிட” என்று பதிலளிப்பாள் சித்தி..
இவ்வளவு வேதனைபடும் இவளுடைய நிலை எவ்வளவோ மேல். இவ்வளவு தாதி மார், சொந்த ஊர். இராமனுடைய நிலையைச் சற்றே சிந்தித்தால் வேறு ஒரு ஊரில், அதுவும் தம்பியுடனும் முற்றும் துறந்த, மிக சிறந்த தவத்தையுடைய அதே வேளையில் சட்டென்று கோபப்படக்கூடிய முனிவனுடன் இருக்கின்றவனால் என்ன செய்ய முடியும்? அதுவும் அப்பெண்ணைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. அவன் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். கனவு கான்பது.
No comments:
Post a Comment